ஜெபக்கூடம் இயேசுவும் சீடர்களும் பிரசங்கித்த இடம்
‘அவர் கலிலேயா முழுவதும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்.’—மத்தேயு 4:23.
இயேசு ஜெபக்கூடத்திற்கு சென்றதைப் பற்றி சுவிசேஷப் பதிவுகளில் நாம் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம். அவர் வளர்ந்த ஊரான நாசரேத்திலும் சரி, அவர் அதிகமாய் ஊழியம் செய்த நகரமான கப்பர்நகூமிலும் சரி, விறுவிறுப்பான மூன்றரை வருட ஊழியக் காலத்தில் அவர் சுற்றிய பட்டணங்களிலும் கிராமங்களிலும் சரி, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் இயேசு அடிக்கடி ஜெபக்கூடத்திற்கே சென்றார். சொல்லப்போனால் இயேசுவே தம் ஊழிய காலத்தைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நான் . . . யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதுமே கற்பித்தேன்.”—யோவான் 18:20.
அதேபோல் இயேசுவின் அப்போஸ்தலர்களும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் யூத ஜெபக்கூடங்களில் மக்களுக்குக் கற்பித்தார்கள். சரி, யூதர்கள் ஜெபக்கூடத்திற்குச் சென்று வழிபடும் பழக்கம் எப்போதுமுதல் ஆரம்பமானது? இயேசுவின் காலத்தில் அந்த வழிபாட்டு தலங்கள் பார்ப்பதற்கு எப்படி இருந்தன? பார்க்கலாம் வாருங்கள்.
யூத வாழ்க்கையின் அச்சாணி கடவுளுடைய ஆலயத்தில் நடக்கும் பண்டிகைகளில் கலந்துகொள்வதற்காக யூத ஆண்கள் வருடத்தில் மூன்று முறை எருசலேமுக்குச் செல்வார்கள். ஆனால், தினசரி வழிபாட்டிற்கு, உள்ளூரில் இருந்த ஜெபக்கூடங்களுக்குச் சென்றார்கள். அவர்கள் பாலஸ்தீனாவில் வசித்தாலும் சரி, அதற்கு வெளியே இருந்த யூத குடியிருப்புகள் ஒன்றில் வசித்தாலும் சரி, அந்தந்த இடங்களிலிருந்த ஜெபக்கூடங்களுக்குச் சென்றார்கள்.
ஜெபக்கூடங்கள் எப்போது ஆரம்பிக்கப்பட்டன? யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட சமயத்தில் (கி.மு. 607-537), அதாவது யெகோவாவின் ஆலயம் பாழாய்க்கிடந்த சமயத்தில், ஆரம்பிக்கப்பட்டதாக சிலர் நம்புகிறார்கள். அல்லது, யூதர்கள் தாயகம் திரும்பிய கொஞ்ச காலத்தில், திருச்சட்டத்தை அதிகமாகத் தெரிந்துகொள்ளவும் ஆழமாக புரிந்துகொள்ளவும் எஸ்றா என்ற ஆலய குரு மக்களை உற்சாகப்படுத்திய சமயத்தில், ஜெபக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.—எஸ்றா 7:10; 8:1-8; 10:3.
ஆரம்பத்தில், “ஜெபக்கூடம்” என்ற வார்த்தையின் அர்த்தம் “கூட்டம்” அல்லது “சபை” என்பதாகும். எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பான செப்டுவஜன்டில் இந்த அர்த்தத்தில்தான் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இவ்வார்த்தை மக்கள் வழிபடுவதற்காகக் கூடிவந்த கட்டிடத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. முதல் நூற்றாண்டில், இயேசு சென்ற ஒவ்வொரு ஊரிலும் ஜெபக்கூடம் இருந்தது; நகரங்களில் நிறைய இருந்தன; எருசலேமிலோ எக்கச்சக்கமாக இருந்தன. இவை பார்க்க எப்படி இருந்தன?
வழிபாட்டிற்கு எளிமையான இடம் பொதுவாக ஜெபக்கூடத்தை யூதர்கள் மேடான இடத்திலேயே கட்டினார்கள்; அதன் வாயிற்கதவு (1) எருசலேமை நோக்கியிருக்கும் விதத்தில் கட்டினார்கள். ஆனால், இப்படிக் கட்டுவது எப்போதுமே சாத்தியமாக இல்லாததால் அதை வசதிக்கேற்ப கட்டினார்கள்.
ஜெபக்கூடம் பொதுவாக மிக எளிமையாக இருந்தது, அதில் அத்தியாவசிய பொருட்களே இருந்தன. அதில் மிக முக்கியமாக இடம் வகித்தது ஒரு பெரிய பெட்டி (2), அதாவது ஒரு பெட்டகம்; யூத மக்கள் பொக்கிஷமாய் கருதிய பரிசுத்த வேதாகம சுருள்கள் அதில் இருந்தன. கூட்டம் நடக்கும்போது அந்தப் பெட்டியை எடுத்துவந்து மன்றத்தில் வைப்பார்கள், கூட்டம் முடிந்ததும் பத்திரமாய் அதை மீண்டும் ஓர் அறையில் வைத்துவிடுவார்கள் (3).
இந்தப் பெட்டிக்கு அருகில், சபையாரைப் பார்த்தவாறு முன்பக்க இருக்கைகள் இருந்தன (4). ஜெபக்கூடத்தை தலைமை தாங்கி நடத்துபவர்களுக்காகவும் சிறப்பு விருந்தினர்களுக்காகவும் இவை ஒதுக்கப்பட்டிருந்தன. (மத்தேயு 23:5, 6) மன்றத்தின் நடுவிலிருந்து சற்று தள்ளி மேடை இருந்தது; ஒரு ‘ஸ்டேன்டும்’ பேச்சாளர் அமர்வதற்காக ஒரு இருக்கையும் அங்கே இருந்தன (5). மேடையைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன (6).
பொதுவாக, ஜெபக்கூடங்களை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை அந்தந்த சபையாரே கவனித்துக்கொண்டனர். ஏழைகள், பணக்காரர்கள் என எல்லாரும் மனமுவந்து அளித்த நன்கொடைகள் கட்டிடத்தைப் பழுதுபார்க்கவும் பராமரிக்கவும் உதவின. சரி, ஜெபக்கூடத்தில் என்னென்ன ஆராதனைகள் நடத்தப்பட்டன?
ஜெபக்கூடத்தில் வழிபாடு வழிபாட்டில் பாட்டு, ஜெபம், வேத வசனங்களை வாசித்தல், போதனைகள், பிரசங்கங்கள் ஆகியவை அடங்கும். முதலில் ஷீமா என்ற ஜெபத்தை சொல்வார்கள். இது சபையார் தங்களுடைய விசுவாசத்தை அறிக்கை செய்வதற்கு சமம். ஷீமா என்ற வார்த்தை அவர்கள் மனப்பாடமாக சொல்லும் முதல் வசனத்தின் முதல் வார்த்தையிலிருந்து வந்தது. அந்த ஜெபம் இப்படித் தொடங்கியது: “கேள் [ஷீமா]: யெகோவாவே நமது கடவுள், யெகோவா ஒருவரே.”—உபாகமம் 6:4, திருத்திய மொழிபெயர்ப்பு.
அதன் பிறகு, தோராவிலிருந்து (மோசே எழுதின பைபிளின் முதல் ஐந்து புத்தகங்கள்) வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. (அப்போஸ்தலர் 15:21) பின்பு, தீர்க்கதரிசிகள் (ஹஃப்தராக்கள்) எழுதினவற்றிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டன; அவற்றை நடைமுறையில் பொறுத்துவது எப்படி என்றும் சொல்லப்பட்டன. சில சமயம் சிறப்பு பேச்சாளர்கள் இந்த பகுதியை கையாண்டார்கள்; உதாரணமாக, லூக்கா 4:16-21-ல் வாசிக்கிறபடி, இயேசுவும் சிறப்பு பேச்சாளராக தீர்க்கதரிசன பதிவிலிருந்து வாசித்தார்.
ஆனால், அன்று இயேசுவிடம் கொடுக்கப்பட்ட சுருள் நம்மிடம் இருக்கிற பைபிளைப் போல் வசனங்களாகவும் அதிகாரங்களாகவும் பிரிக்கப்படவில்லை. எனவே, அவர் வாசிக்க வேண்டிய பகுதியைக் கண்டுபிடிப்பதற்காக சுருளின் இடது பக்கத்திலிருந்து பிரிக்க பிரிக்க வலது பக்கத்தில் சுருட்டிக்கொண்டே வருவதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது அல்லவா? வாசித்து முடித்ததும் பழையபடி அது ஆரம்ப நிலைக்கு சுருட்டி வைக்கப்பட்டது.
பெரும்பாலும் இந்தச் சுருள்கள் மூல எபிரெய மொழியில் இருந்தன, அவை அரமேயிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. கிரேக்க மொழி பேசும் சபைகளில் செப்டுவஜன்ட் பயன்படுத்தப்பட்டது.
வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஜெபக்கூடம் யூதர் வாழ்க்கையில் ஜெபக்கூடம் அந்தளவு முக்கிய பங்கு வகித்ததால் அதை ஒட்டியிருந்த கட்டிடங்கள் அல்லது ஜெபக்கூட வளாகத்திற்குள் இருந்த கட்டிடங்கள் பல வேலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. சில சமயம் அங்கு நீதிமன்ற வழக்குகள் நடத்தப்பட்டன, சமூக கூட்டங்கள் நடத்தப்பட்டன; சில சமயம் மாநாடுகள் நடத்தப்பட்டன, அதோடு இணைந்த சாப்பாட்டு அறைகளில் உணவும் பரிமாறப்பட்டன. சில சமயம் பயணிகள் தங்குவதற்கான அறை வசதிகளும் அந்த வளாகத்தில் இருந்தன.
கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் ஜெபக்கூடத்தோடு பள்ளிக்கூடமும் இருந்தது, பெரும்பாலும் ஜெபக்கூடம் அமைந்திருந்த கட்டிடத்திலேயே அது இருந்தது. ஓர் அறை முழுவதும் மாணவர்கள் அமர்ந்திருக்க மெழுகு பலகையில் ஆசிரியர் எழுதும் பெரிய பெரிய எழுத்துக்களை அந்தப் பிள்ளைகள் சத்தமாக வாசிப்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அன்றிருந்த யூதர்கள் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருந்ததற்கும் பாமரர்களும்கூட வேதவசனங்களைத் தெரிந்து வைத்திருந்ததற்கும் இதுபோன்ற பள்ளிகள்தான் காரணம்.
என்றாலும், வழிபாட்டிற்குத் தவறாமல் கூடிவருவதற்காகவே ஜெபக்கூடங்கள் பயன்படுத்தப்பட்டன. எனவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நடத்திய கூட்டங்களுக்கும் ஜெபக்கூடத்தில் யூதர்கள் நடத்திய கூட்டங்களுக்கும் அதிக ஒற்றுமை இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஜெபம், பாடல்கள், கடவுளுடைய வார்த்தையைச் சத்தமாக வாசித்து கலந்தாலோசிப்பது ஆகியவற்றின் மூலம் யெகோவாவை வழிபடுவதுதான் அன்று கிறிஸ்தவ கூட்டங்களின் நோக்கமாக இருந்தது. இது தவிர இன்னும் பல ஒற்றுமைகளும் இருந்தன. இந்த இரண்டு விதமான வழிபாட்டு தலங்களையும் பராமரிப்பதற்கு ஆன செலவுகளை மனமுவந்து கொடுக்கப்பட்ட நன்கொடைகள் ஈடுசெய்தன; அதோடு, கடவுளுடைய வார்த்தையை வாசித்து அதிலிருந்து கலந்தாலோசிப்பது குருமார் வர்க்கத்திற்கு மட்டுமே ஒதுக்கப்படவில்லை; இந்த இரண்டிலுமே கூட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தும் பொறுப்பை முதிர்ச்சியுள்ள ஆண்கள் நிறைவேற்றினார்கள்.
இயேசுவும் முதல் நூற்றாண்டு சீடர்களும் விட்டுச் சென்ற மாதிரியை இன்று யெகோவாவின் சாட்சிகளும் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள். அன்று ஜெபக்கூடத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கும் இன்று சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் நடக்கும் கூட்டங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. மிக முக்கியமாக சத்தியத்தை நேசிப்பவர்கள் எப்போதும் எந்த நோக்கத்திற்காகக் கூடிவந்தார்களோ அந்த நோக்கத்திற்காக, ஆம், ‘கடவுளிடம் நெருங்கி வருவதற்காக,’ சாட்சிகளும் ஒன்றுகூடிவருகிறார்கள்.—யாக்கோபு 4:8. (w10-E 04/01)
[பக்கம் 16, 17-ன் படம்]
திரும்பக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் முதல் நூற்றாண்டு காம்லா ஜெபக்கூடத்தை அடிப்படையாகக் கொண்டது
[பக்கம் 18-ன் படம்]
ஜெபக்கூடத்திலிருந்த பள்ளிகளில் 6 முதல் 13 வயதிற்கு உட்பட்ட ஆண் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரப்பட்டது