அதிகாரம் 109
தன்னை எதிர்க்கிறவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்
மத்தேயு 22:41–23:24 மாற்கு 12:35-40 லூக்கா 20:41-47
கிறிஸ்து யாருடைய மகன்?
தன்னை எதிர்க்கிறவர்களின் வெளிவேஷத்தை வெட்டவெளிச்சமாக்குகிறார்
இயேசுவுக்கு இருக்கிற நல்ல பெயரைக் கெடுக்க எதிரிகளால் முடியவில்லை, அவரைத் தந்திரமாகச் சிக்க வைத்து ரோமர்களிடம் பிடித்துக் கொடுக்கவும் முடியவில்லை. (லூக்கா 20:20) இப்போது நிசான் 11. இயேசு இன்னமும் ஆலயத்தில்தான் இருக்கிறார். தன்னை எதிர்க்கிறவர்களிடம் எதிர்க்கேள்வி கேட்டு, அவர்களை மடக்குகிறார். தான் உண்மையில் யார் என்பதையும் தெரியப்படுத்துகிறார். இயேசு அவர்களிடம், “நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்கிறார். (மத்தேயு 22:42) கிறிஸ்து, அதாவது மேசியா, தாவீதின் வம்சத்தில் வருவார் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதனால், அவர் தாவீதின் மகன் என்று அந்த ஆட்கள் சொல்கிறார்கள்.—மத்தேயு 9:27; 12:23; யோவான் 7:42.
அப்போது இயேசு, “அப்படியானால், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது அவரை எஜமான் என்று அழைத்தது எப்படி? ‘யெகோவா என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’ என தாவீது சொன்னாரே. தாவீதே அவரை எஜமான் என்று அழைத்திருப்பதால் அவர் எப்படி இவருடைய மகனாக இருக்க முடியும்?” என்று அவர்களிடம் கேட்கிறார்.—மத்தேயு 22:43-45.
பரிசேயர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். ஏனென்றால், தாவீதின் வம்சத்தில் வருகிற ஒரு மனிதர், ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுதலை செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சங்கீதம் 110:1, 2-ல் இருக்கிற தாவீதின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி, மேசியா ஒரு மனித ராஜாவைவிட மேலானவர் என்பதை இயேசு புரிய வைக்கிறார். மேசியா, தாவீதுக்கு எஜமானாக இருக்கிறார். கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்த பின்பு அவர் ஆட்சி செய்ய ஆரம்பிப்பார். இயேசுவை எதிர்க்கிறவர்கள் அவர் சொன்ன பதிலைக் கேட்டு வாயடைத்துப்போகிறார்கள்.
இயேசு சொல்வதை அவருடைய சீஷர்களும் இன்னும் பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர் இப்போது அவர்களிடம் வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் பற்றி எச்சரிக்கிறார். அவர்கள் ‘மோசேயின் இருக்கையில் உட்கார்ந்து’ திருச்சட்டத்தைக் கற்பிக்கிறார்கள். அதனால், “அவர்கள் உங்களுக்கு என்னவெல்லாம் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்யுங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்; ஏனென்றால், சொல்வதுபோல் அவர்கள் செய்வதில்லை” என்று இயேசு சொல்கிறார்.—மத்தேயு 23:2, 3.
அவர்கள் எப்படியெல்லாம் வெளிவேஷம் போடுகிறார்கள் என்பதற்கு இயேசு சில உதாரணங்களைச் சொல்கிறார். “தாங்கள் கட்டியிருக்கிற வேதாகமத் தாயத்துகளை அகலமாக்குகிறார்கள்” என்கிறார். யூதர்களில் சிலர், திருச்சட்ட வாசகங்களைக் கொண்ட சிறிய பெட்டிகளைத் தங்களுடைய நெற்றியிலோ கையிலோ கட்டுவது வழக்கம். ஆனால் பரிசேயர்கள், தாங்கள் திருச்சட்டத்தைப் பக்திவைராக்கியத்தோடு கடைப்பிடிப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காகச் சற்று பெரிய பெட்டிகளைக் கட்டிக்கொள்கிறார்கள். அதோடு, “தங்களுடைய அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள்.” இஸ்ரவேலர்கள் தங்களுடைய அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்களை வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. (எண்ணாகமம் 15:38-40) ஆனால், பரிசேயர்கள் நீளமான தொங்கல்களை வைத்துக்கொள்கிறார்கள். “மனுஷர்கள் பார்க்க வேண்டும்” என்பதற்காகத்தான் அவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.—மத்தேயு 23:5.
தன்னுடைய சீஷர்களுக்கும் பதவி ஆசை வந்துவிட வாய்ப்பிருக்கிறது என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர்களிடம், “நீங்கள் ரபீ என்று அழைக்கப்படாதீர்கள்; ஒரே ஒருவர்தான் உங்கள் போதகர்; நீங்கள் எல்லாரும் சகோதரர்கள். அதுமட்டுமல்ல, பூமியில் இருக்கிற யாரையும் தந்தை என்று அழைக்காதீர்கள், பரலோகத்தில் இருக்கிற ஒருவர்தான் உங்கள் தந்தை. தலைவர் என்றும் அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்” என்று ஆலோசனை கொடுக்கிறார். சீஷர்கள் தங்களை எப்படிக் கருத வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “உங்களில் யார் மிகவும் உயர்ந்தவராக இருக்கிறாரோ அவர் உங்களுக்குச் சேவை செய்கிறவராக இருக்க வேண்டும். தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்று சொல்கிறார்.—மத்தேயு 23:8-12.
வெளிவேஷம் போடுகிற வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் வரப்போகிற கேடுகளைப் பற்றி இயேசு அடுத்ததாகச் சொல்கிறார். “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! மனுஷர்கள் போக முடியாதபடி பரலோக அரசாங்கத்தின் கதவைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்களும் அதில் போவதில்லை, போக முயற்சி செய்கிறவர்களையும் போக விடுவதில்லை” என்று சொல்கிறார்.—மத்தேயு 23:13.
யெகோவாவின் பார்வையில் எது உண்மையிலேயே முக்கியம் என்பதைப் பற்றிப் பரிசேயர்கள் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அதற்காக இயேசு அவர்களைக் கண்டனம் செய்கிறார். அவர்கள் தங்கள் இஷ்டப்படி சட்டங்களைப் போட்டுக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, “ஒருவன் ஆலயத்தின் மேல் சத்தியம் செய்தால் ஒன்றுமில்லை, ஆனால் ஆலயத்தில் இருக்கிற தங்கத்தின் மேல் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறான்” என்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று தெரியாத குருடர்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் யெகோவாவை வணங்கவும், அவருடன் நெருங்கி வரவும் உதவுகிற இடம் ஆலயம்தான்; அதைவிட அதில் இருக்கிற தங்கத்துக்குப் பரிசேயர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ‘திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை விட்டுவிடுகிறார்கள்.’—மத்தேயு 23:16, 23; லூக்கா 11:42.
இயேசு இவர்களைப் பார்த்து, “குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டிவிட்டு, ஒட்டகத்தை விழுங்கிவிடுகிறீர்கள்!” என்று சொல்கிறார். (மத்தேயு 23:24) திருச்சட்டத்தின்படி கொசு ஒரு அசுத்தமான பூச்சி; அதனால், அவர்கள் திராட்சமதுவை வடிகட்டி, கொசுவை எடுத்துவிடுவார்கள். ஆனால், திருச்சட்டத்தில் இருக்கிற மிக முக்கியமான கட்டளைகளை அவர்கள் அலட்சியம் செய்வது, ஒட்டகத்தை விழுங்குவதுபோல் இருக்கிறது. கொசுவைவிட பல மடங்கு பெரிதாக இருக்கிற ஒட்டகமும் திருச்சட்டத்தின்படி அசுத்தமானதுதான்.—லேவியராகமம் 11:4, 21-24.