பாடம் 20
சபை எப்படி செயல்படுகிறது?
யெகோவா குழப்பத்தை உண்டுபண்ணும் கடவுள் கிடையாது, அவர் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறவர். (1 கொரிந்தியர் 14:33, 40) அவரை வணங்குகிறவர்களும் அப்படித்தான் இருப்பார்கள். கிறிஸ்தவ சபையில் எப்படி எல்லாமே ஒரு ஒழுங்கோடு நடக்கிறது? அதற்கு நம் பங்கில் என்ன செய்யலாம்?
1. சபையின் தலைவர் யார்?
“கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறார்.” (எபேசியர் 5:23) உலகெங்கும் யெகோவாவின் மக்கள் செய்கிற வேலைகளை அவர் பரலோகத்திலிருந்து தலைமைதாங்கி நடத்துகிறார். ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை,’ அதாவது அனுபவமுள்ள சில மூப்பர்களை, இயேசு நியமித்திருக்கிறார்; அவர்களைத்தான் ஆளும் குழு என்று சொல்கிறோம். (மத்தேயு 24:45-47-ஐ வாசியுங்கள்.) முதல் நூற்றாண்டில் இருந்த அப்போஸ்தலர்களையும் மூப்பர்களையும் போலவே இவர்களும் உலகெங்கும் இருக்கிற சபைகளை வழிநடத்துகிறார்கள். (அப்போஸ்தலர் 15:2) ஆனால், இவர்கள் தலைவர்கள் கிடையாது. அதனால், சொந்தமாக எந்த முடிவும் எடுக்காமல், பைபிளைப் படித்து யெகோவாவின் உதவியோடுதான் முடிவுகளை எடுக்கிறார்கள். இயேசுவுடைய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.
2. மூப்பர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள்?
அனுபவமுள்ள ஆண்கள் சபையில் மூப்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் பைபிளிலிருந்து சொல்லித்தருகிறார்கள். சபையில் இருப்பவர்களுக்கு உதவிகளைச் செய்கிறார்கள், அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். மூப்பர்கள் சம்பளத்துக்காக சேவை செய்வதில்லை. “கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும், அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல் ஆர்வமாகவும்” சேவை செய்கிறார்கள். (1 பேதுரு 5:1, 2) உதவி ஊழியர்கள் மூப்பர்களுக்கு உதவுகிறார்கள். தகுதிகளை வளர்த்துக்கொள்ளும்போது அவர்களும் மூப்பர்களாகச் சேவை செய்வார்கள்.
ஆளும் குழு சில மூப்பர்களை வட்டாரக் கண்காணிகளாக நியமிக்கிறார்கள். இவர்கள் சபைகளைச் சந்தித்து, வழிநடத்துதலையும் உற்சாகத்தையும் தருகிறார்கள். அதோடு, தகுதி உள்ள ஆண்களை மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 3:1-10, 12; தீத்து 1:5-9.
3. சபையில் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது?
சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் ‘யெகோவாவின் பெயரைப் புகழ்கிறார்கள்.’ (சங்கீதம் 148:12, 13-ஐ வாசியுங்கள்) எப்படி? கூட்டங்களில் பேச்சுகள் கொடுப்பது, பதில் சொல்வது, பாடல்கள் பாடுவது போன்ற எல்லா விஷயங்களிலும் பங்கெடுக்கிறார்கள். அதோடு, முடிந்தளவுக்கு ஊழியமும் செய்கிறார்கள்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
இயேசு எப்படிப்பட்ட தலைவர்? மூப்பர்கள் எப்படி அவரைப் போல் நடந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள்? நாம் எப்படி இயேசுவுக்கும் மூப்பர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கலாம்? இப்போது பார்க்கலாம்.
4. இயேசு கரிசனை உள்ள தலைவர்
இயேசு நம் மனதுக்கு இதமான ஒரு அழைப்பைக் கொடுக்கிறார். மத்தேயு 11:28-30-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஒரு தலைவராக இயேசு நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று நினைக்கிறார்?
மூப்பர்கள் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்கிறார்கள்? வீடியோவைப் பாருங்கள்.
மூப்பர்கள் தங்கள் பொறுப்புகளை எப்படிச் செய்ய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது.
ஏசாயா 32:2-ஐயும் 1 பேதுரு 5:1-3-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இயேசுவைப் போலவே மூப்பர்களும் மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி தர முயற்சி எடுக்கிறார்கள். இதைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
வேறென்ன விதங்களில் மூப்பர்கள் இயேசுவைப் போல் நடந்துகொள்கிறார்கள்?
5. மூப்பர்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்
மூப்பர்கள் தங்களுடைய பொறுப்பை எப்படிச் செய்ய வேண்டுமென்று இயேசு நினைக்கிறார்? வீடியோவைப் பாருங்கள்.
சபையை வழிநடத்துகிறவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று இயேசு சொல்லியிருக்கிறார். மத்தேயு 23:8-12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பைபிள் சொல்கிறது? மதத் தலைவர்கள் இதுபோல் நடந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
A. மூப்பர்கள் யெகோவாவிடம் நெருங்கியிருப்பார்கள். அவர்களுடைய குடும்பமும் அப்படி இருப்பதற்கு உதவுவார்கள்
B. சபையில் இருக்கும் ஒவ்வொருவர்மீதும் மூப்பர்கள் அக்கறை காட்டுவார்கள்
C. மூப்பர்கள் தவறாமல் ஊழியம் செய்வார்கள்
D. மூப்பர்கள் சபையில் போதிப்பார்கள். சுத்தம் செய்கிற வேலையையும் மற்ற வேலைகளையும்கூட செய்வார்கள்
6. நாம் மூப்பர்களோடு ஒத்துழைப்பது முக்கியம்
மூப்பர்களோடு நாம் ஒத்துழைப்பது ஏன் முக்கியம் என்று பைபிள் சொல்கிறது. எபிரெயர் 13:17-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மூப்பர்களுக்குக் கீழ்ப்படியவும் அடிபணியவும் வேண்டுமென்று பைபிள் சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
லூக்கா 16:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
சின்னச் சின்ன விஷயங்களில்கூட மூப்பர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது ஏன் முக்கியம்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “சபையோட சேர்ந்துதான் கடவுள வணங்கணும்னு அவசியம் இல்ல.”
சபையோடு சேர்ந்து கடவுளை வணங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சுருக்கம்
இயேசுதான் சபையின் தலைவர். அவருடைய தலைமையின் கீழ் சேவை செய்கிற மூப்பர்களுக்கு நாம் சந்தோஷத்தோடு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். ஏனென்றால், அவர்கள் நமக்குப் புத்துணர்ச்சி தருகிறார்கள், நமக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
ஞாபகம் வருகிறதா?
சபையின் தலைவர் யார்?
மூப்பர்கள் எப்படி சபைக்கு உதவியாக இருக்கிறார்கள்?
யெகோவாவை வணங்கும் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது?
அலசிப் பாருங்கள்
ஆளும் குழுவும் மற்ற மூப்பர்களும் நம்மேல் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்று பாருங்கள்.
வட்டாரக் கண்காணிகள் செய்யும் வேலையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
சபையில் பெண்களுக்கு இருக்கும் முக்கியமான இடத்தைப் பற்றிப் படித்துப் பாருங்கள்.
“யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பெண் ஊழியர்கள் இருக்கிறார்களா?” (ஆன்லைன் கட்டுரை)
சபையில் இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கு மூப்பர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்று படித்துப் பாருங்கள்.
“கிறிஸ்தவ மூப்பர்கள் ‘நம் சந்தோஷத்திற்குச் சக வேலையாட்கள்’” (காவற்கோபுரம், ஜனவரி 15, 2013)