அதிகாரம் ஒன்பது
நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?
நம் காலத்தில் நடைபெறுகிற என்ன சம்பவங்கள் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டன?
“கடைசி நாட்களில்” ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது?
‘கடைசி நாட்களைப்’ பற்றி என்ன நல்ல காரியங்களை பைபிள் முன்னறிவிக்கிறது?
1. எதிர்காலத்தைப் பற்றி எதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்?
டிவியில் நியூஸ் ஏதாவது பார்த்துவிட்டு, ‘இந்த உலகத்திற்கு என்னதான் ஆகப்போகிறதோ’ என நினைத்து நீங்கள் கவலைப்பட்டதுண்டா? துயரச் சம்பவங்கள் எதிர்பாராமல் திடீரென்று நடைபெறுவதால் நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை எந்த மனிதனாலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. (யாக்கோபு 4:14) ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதென்று யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும். (ஏசாயா 46:10) நம்முடைய நாட்களில் நடக்கிற பயங்கரமான சம்பவங்களைப் பற்றி வெகு காலத்திற்கு முன்பே பைபிள் முன்னறிவித்தது; அதுமட்டுமல்ல, சீக்கிரத்தில் நிறைவேறப் போகிற அருமையான காரியங்களைப் பற்றியும் அது முன்னறிவித்தது.
2, 3. இயேசுவிடம் சீஷர்கள் என்ன கேள்வியைக் கேட்டார்கள், அதற்கு அவர் எப்படிப் பதிலளித்தார்?
2 எல்லாப் பொல்லாப்புக்கும் முடிவுகட்டி, இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றப் போகிற கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து பேசினார். (லூக்கா 4:43) அந்த ராஜ்யம் எப்போது வருமென்று தெரிந்துகொள்ள மக்கள் விரும்பினார்கள். சொல்லப்போனால், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் [அதாவது, சாத்தானுடைய உலகத்தின்] முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று இயேசுவின் சீஷர்கள்கூட அவரிடம் கேட்டார்கள். (மத்தேயு 24:3) சாத்தானுடைய இந்த உலகிற்கு எப்போது முடிவு வருமென்பது யெகோவா தேவனுக்கு மாத்திரமே துல்லியமாகத் தெரியுமென இயேசு பதிலளித்தார். (மாற்கு 13:32) என்றாலும், அந்த ராஜ்யம் மனிதகுலத்திற்கு மெய்யான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வருவதற்கு முன் பூமியில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அவர் முன்னறிவித்தார். அவர் முன்னறிவித்த காரியங்கள் இப்போது நடந்து வருகின்றன!
3 ‘சாத்தானுடைய உலகம் முடிவடையப்’ போகிற காலத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம், அதற்கான ஆதாரத்தை இப்போது சிந்திக்கப் போகிறோம்; அதற்கு முன், எந்த மனிதனும் பார்த்திருக்க முடியாத ஒரு யுத்தத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம். அந்த யுத்தம் பரலோகத்தில் நடைபெற்றது, அதன் விளைவு இன்று நம்மைப் பாதிக்கிறது.
பரலோகத்தில் ஒரு யுத்தம்
4, 5. (அ) இயேசு ராஜாவாக முடிசூட்டப்பட்டதுமே பரலோகத்தில் என்ன நடந்தது? (ஆ) வெளிப்படுத்துதல் 12:12-ன்படி, பரலோகத்தில் நடந்த யுத்தத்தின் விளைவு என்ன?
4 இயேசு கிறிஸ்து 1914-ம் ஆண்டு பரலோகத்தில் ராஜாவாக ஆனார் என முந்தின அதிகாரத்தில் கலந்தாலோசித்தோம். (தானியேல் 7:13, 14) ராஜ்ய அதிகாரத்தைப் பெற்றதுமே, இயேசு நடவடிக்கை எடுத்தார். ‘பரலோகத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [இயேசுவின் மற்றொரு பெயர்] அவரைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே [பிசாசாகிய சாத்தானோடே] யுத்தம் பண்ணினார்கள்’ என பைபிள் சொல்கிறது.a சாத்தானும் அவனுடைய பொல்லாத தூதர்களும், அதாவது பேய்களும் அந்த யுத்தத்தில் தோற்றுப்போயின; பிறகு அவை பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டன. சாத்தானும் அவனுடைய பேய்களும் அங்கிருந்து தள்ளப்பட்டதால் கடவுளுடைய உண்மையுள்ள ஆவி குமாரர்கள் மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். ஆனால், அதே மகிழ்ச்சி மனிதர்களுக்கு இருக்காது. ஏனெனில், ‘பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ [அதாவது துயரம்], பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்’ என்று பைபிள் முன்னறிவித்தது.—வெளிப்படுத்துதல் 12:7, 9, 12.
5 பரலோகத்தில் நடந்த யுத்தத்தின் விளைவு என்ன என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். சாத்தான் பயங்கர கோபத்தில், பூமியில் குடியிருப்போருக்குத் துயரங்களை உண்டாக்குவான். அந்தத் துயரமான காலப்பகுதியில்தான் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம். ஆனால், அது ஓரளவு குறுகிய காலப்பகுதியாகவே இருக்கும். ஆம், ‘கொஞ்சக் காலத்திற்கு’ மட்டுமே இருக்கும். இந்த விஷயம் சாத்தானுக்குக்கூட தெரியும். இந்தக் காலப்பகுதியைத்தான் பைபிள் ‘கடைசி நாட்கள்’ என்று குறிப்பிடுகிறது. (2 தீமோத்தேயு 3:1) சீக்கிரத்தில் சாத்தானுடைய ஆதிக்கத்தை இந்தப் பூமியிலிருந்து கடவுள் நீக்கிப் போடுவார் என்பதைக் குறித்து நாம் எவ்வளவாய் களிகூரலாம்! இன்று நடக்கும் சில காரியங்களைப் பற்றி பைபிள் முன்னறிவித்துள்ளது, இப்போது நாம் அதைக் கலந்தாராயலாம். இந்தக் காரியங்கள், நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதையும் யெகோவாவை நேசிப்பவர்களுக்குக் கடவுளுடைய ராஜ்யம் விரைவில் நித்திய நன்மைகளைக் கொண்டுவரும் என்பதையும் நிரூபிக்கின்றன. முதலாவதாக, நாம் வாழும் காலத்தைச் சுட்டிக்காட்ட இயேசு கொடுத்த அடையாளத்தின் நான்கு அம்சங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.
கடைசி நாட்களின் முக்கிய சம்பவங்கள்
6, 7. போர்களைப் பற்றியும் பஞ்சத்தைப் பற்றியும் இயேசு முன்னறிவித்தது இன்று எப்படி நிறைவேறி வருகிறது?
6 “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) கடந்த நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்கள் போர்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் சரித்திராசிரியர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “சரித்திரத்திலேயே மிக அதிகமாக இரத்த வெள்ளம் புரண்டோடிய நூற்றாண்டு 20-ம் நூற்றாண்டாகும். . . . அந்த நூற்றாண்டில், போர்கள் விடாமல் நடந்து கொண்டிருந்தன எனச் சொல்லலாம்; கொஞ்சக் காலத்திற்கு பெரிய போர்கள் நடக்காதிருந்த போதிலும், அவ்வப்போது ஏதோவொரு இடத்தில் அவை நடந்து கொண்டுதான் இருந்தன.” உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிட்யூட் இவ்வாறு அறிவிக்கிறது: “கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து 1899 வரை நடந்த எல்லாப் போர்களிலும் பலியானவர்களைவிட இந்த [20-ம்] நூற்றாண்டில் நடந்த போர்களில் மூன்று மடங்கு அதிகமான ஆட்கள் பலியானார்கள்.” 1914-லிருந்து நடந்த போர்களில் 10 கோடிக்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கிறார்கள். போரில் பிரியமான ஒருவர் மரித்தாலே அந்தச் சோகம் எப்படியிருக்குமென்று நமக்குத் தெரியும், அப்படியானால் லட்சக்கணக்கானோரின் மரணத்தால் அவர்களுடைய அன்பானவர்கள் பட்ட வேதனையையும் தவிப்பையும் என்னவென்று சொல்வது?
7 ‘பஞ்சங்கள் உண்டாகும்.’ (மத்தேயு 24:7) கடந்த 30 ஆண்டுகளில் உணவு உற்பத்தி பெருமளவு அதிகரித்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். என்றாலும், உணவுப் பற்றாக்குறை தொடர்ந்து காணப்படுகிறது; அதற்குக் காரணம் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு ஜனங்களிடம் போதுமான பணம் இல்லை அல்லது பயிர்செய்ய அவர்களுக்கு நிலம் இல்லை. வளரும் நாடுகளில், பல லட்சக்கணக்கான ஜனங்கள் கடுமையான பட்டினியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஐம்பது லட்சம் பிள்ளைகள் சாவதற்கு முக்கிய காரணம் ஊட்டக் குறைவுதான் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.
8, 9. பூமியதிர்ச்சியைப் பற்றியும் நோய்களைப் பற்றியும் இயேசு சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருப்பதை எது காண்பிக்கிறது?
8 ‘பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகள் உண்டாகும்.’ (லூக்கா 21:11) அமெரிக்க மண்ணியல் ஆராய்ச்சித் துறையின்படி, ஒரு வருடத்தில் சராசரியாக 19 பெரிய பூமியதிர்ச்சிகள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிடங்களைச் சேதப்படுத்தி, நிலத்தைப் பிளக்கும் அளவுக்கு அவை மிக வலிமை வாய்ந்தவையாக இருக்கும். சராசரியாகப் பார்த்தால், கட்டிடங்களைத் தரைமட்டமாக்கிப் போடுமளவுக்குப் பயங்கரமான பூமியதிர்ச்சிகள் ஆண்டுதோறும் நிகழ்ந்திருக்கின்றன. பூமியதிர்ச்சிகள் 1900-லிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைச் சூறையாடியிருப்பதாக கைவசமுள்ள பதிவுகள் காட்டுகின்றன. “தொழில்நுட்ப வளர்ச்சியால் சாவு எண்ணிக்கையைச் சிறிதளவே குறைக்க முடிந்திருக்கிறது” என ஒரு செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
9 ‘கொள்ளைநோய்கள் உண்டாகும்.’ (லூக்கா 21:11) மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டும்கூட, பழைய நோய்களும் புதிய நோய்களும் மனிதகுலத்தைச் சீரழிக்கின்றன. டிபி, மலேரியா, காலரா உட்பட 20 பெரிய பெரிய நோய்கள் சமீப பத்தாண்டுகளில் மிக அதிகமாகத் தாக்கியிருக்கின்றன; அவற்றில் சில நோய்களை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவது மிகவும் கடினமாகி வருகிறது. அத்துடன், குறைந்தது 30 புதிய நோய்கள் தலைதூக்கியிருக்கின்றன. சிலவற்றிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அத்தகைய நோய்களில் சில உயிரைக் குடிக்குமளவுக்கு ஆபத்தானவை.
கடைசி நாட்களில் வாழும் ஜனங்கள்
10. இரண்டு தீமோத்தேயு 3:1-5-ல் முன்னறிவிக்கப்பட்ட என்ன சுபாவங்களை இன்று ஜனங்களிடம் பார்க்கிறீர்கள்?
10 இப்படிச் சில முக்கிய உலக சம்பவங்களை விவரிப்பதோடு, கடைசி நாட்களில் மனிதர்களுடைய சுபாவம் மாறுபட்டதாக இருக்கும் எனவும் பைபிள் முன்னறிவிக்கிறது. 2 தீமோத்தேயு 3:1-5-ல், “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” எனச் சொல்லிவிட்டு, அந்நாட்களில் பொதுவாக எப்படிப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் விவரித்தார். அதன் ஒரு பகுதி பின்வருமாறு சொல்கிறது:
தற்பிரியர்கள்
பணப்பிரியர்கள்
தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்கள்
நன்றியில்லாதவர்கள்
சுபாவ அன்பில்லாதவர்கள்
இச்சையடக்கம் இல்லாதவர்கள்
கொடுமையுள்ளவர்கள்
தேவப்பிரியராக இல்லாமல் சுகபோகப்பிரியராக இருப்பவர்கள்
தேவபக்தியின் வேஷத்தைப் போட்டுக்கொண்டு ஏமாற்றுபவர்கள்
11. துன்மார்க்கருக்கு என்ன நேரிடப் போகிறதென சங்கீதம் 92:7 விவரிக்கிறது?
11 உங்கள் அக்கம்பக்கத்தில் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கிறார்களா? ஆம், அதில் சந்தேகமே இல்லை. எங்கு பார்த்தாலும் இத்தகைய கெட்ட சுபாவமுள்ளவர்கள் இருக்கிறார்கள். அப்படியானால் கடவுள் சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று நாம் தெரிந்துகொள்ளலாம், ஏனெனில் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “துன்மார்க்கர் புல்லைப் போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்து போவதற்கே ஏதுவாகும்.”—சங்கீதம் 92:7.
நல்ல காரியங்கள்!
12, 13. இந்த ‘முடிவு காலத்தின்போது’ ‘மெய் அறிவு’ எப்படிப் பெருகியிருக்கிறது?
12 பைபிள் முன்னறிவித்தபடியே, இந்தக் கடைசி நாட்களில் துயரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால், இந்தத் துயர்மிகு உலகில் யெகோவாவின் வணக்கத்தார் மத்தியில் நல்ல காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
13 ‘மெய் அறிவு பெருகிப்போகும்’ என பைபிள் புத்தகமான தானியேல் முன்னறிவித்தது. அது எப்போது நிகழவிருந்தது? ‘முடிவு காலத்திலே’ நிகழவிருந்தது. (தானியேல் 12:4) தமக்குச் சேவை செய்ய உள்ளப்பூர்வமாய் விரும்புகிறவர்களுக்கு, குறிப்பாக 1914 முதற்கொண்டு, பைபிளைப் பற்றி அதிகமதிகமாகப் புரிந்துகொள்ள யெகோவா உதவியிருக்கிறார். அதன் பலனாக அவருடைய பெயர், நோக்கம், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலி, இறந்தோரின் நிலை, உயிர்த்தெழுதல் ஆகியவற்றைப் பற்றிய அரும்பெரும் சத்தியங்களை அவர்கள் நன்கு புரிந்திருக்கிறார்கள். அதோடு, பிரயோஜனமான வாழ்க்கை வாழ்வது எப்படி, யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் வாழ்வது எப்படி என்பதையும்கூட அவருடைய வணக்கத்தார் கற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய ராஜ்யம் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்பதைப் பற்றியும் அது பூமியிலுள்ள நிலைமைகளை எப்படிச் சரிப்படுத்தப் போகிறது என்பதைப் பற்றியும் அவர்கள் தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். இவ்வாறு புரிந்துகொண்ட பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தக் கேள்வி, கடைசி நாட்களில் நிறைவேறி வருகிற மற்றொரு தீர்க்கதரிசனத்திற்கு நம் கவனத்தைத் திருப்புகிறது.
14. ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி இன்று எந்தளவுக்குப் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது, யார் அதைப் பிரசங்கிக்கிறார்கள்?
14 “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.” இந்தப் பொல்லாத உலகின் முடிவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில் இயேசு கிறிஸ்து இதைச் சொன்னார். (மத்தேயு 24:3, 14) 230-க்கும் அதிகமான நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட மொழிகளில் ராஜ்யத்தைப் பற்றிய சுவிசேஷம் பூமியெங்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது; அதாவது, ராஜ்யம் என்பது என்ன, அது என்ன செய்யும், அதன் ஆசீர்வாதங்களை நாம் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றிய சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய நற்செய்தியை ஊக்கமாகப் பிரசங்கித்து வருகிறார்கள். இவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வந்தவர்கள். (வெளிப்படுத்துதல் 7:9) பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். மெய்க் கிறிஸ்தவர்கள் ‘எல்லாராலும் பகைக்கப்படுவார்கள்’ என இயேசு சொல்லியிருந்த போதிலும், அந்தத் தீர்க்கதரிசனம் எவ்வளவு மகத்தான அளவில் நிறைவேறி வருகிறது!—லூக்கா 21:17.
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
15. (அ) நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா, ஏன்? (ஆ) “முடிவு” வரும்போது யெகோவாவை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும், கடவுளுடைய ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படிபவர்களுக்கு என்ன நடக்கும்?
15 இத்தனை அநேக தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேறி வருவதால், கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? ராஜ்யத்தின் நற்செய்தி யெகோவாவுக்குத் திருப்தியளிக்கும்வரை பிரசங்கிக்கப்பட்ட பிறகு, கண்டிப்பாக “முடிவு” வரும். (மத்தேயு 24:14) “முடிவு” என்பது பூமியிலிருந்து பொல்லாத காரியங்களைக் கடவுள் துடைத்தழிக்கப் போகிற ஒரு சமயமாகும். வேண்டுமென்றே தம்மை எதிர்ப்பவர்களை அழிப்பதற்காக இயேசுவையும் வல்லமைமிக்க தேவதூதர்களையும் யெகோவா பயன்படுத்துவார். (2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10) இனி சாத்தானாலும் அவனுடைய பேய்களாலும் தேசங்களை மோசம்போக்க முடியாது. அதன் பிறகு, கடவுளுடைய ராஜ்யம் அதன் நீதியுள்ள ஆட்சிக்குக் கீழ்ப்படிபவர்கள் மீது ஆசீர்வாதங்களைப் பொழியத் தொடங்கும்.—வெளிப்படுத்துதல் 20:1-3; 21:3-5.
16. நீங்கள் என்ன செய்வது ஞானமான செயலாகும்?
16 சாத்தானுடைய உலகிற்கு அழிவு நெருங்கி வருவதால், ‘நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியம். யெகோவாவைப் பற்றியும் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்களைப் பற்றியும் அதிகமதிகமாகக் கற்று வருவது ஞானமான செயலாகும். (யோவான் 17:3) பைபிளை ஆராய்ந்து படியுங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய விரும்புகிறவர்களோடு தவறாமல் கூட்டுறவு வைப்பதை உங்கள் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். (எபிரெயர் 10:24, 25) உலகெங்குமுள்ள ஜனங்களுக்கு யெகோவா தேவன் அருளுகிற அபரிமிதமான அறிவைப் பெற்று, வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்; அப்போது கடவுளுடைய கிருபையை அனுபவிப்பீர்கள்.—யாக்கோபு 4:8.
17. பொல்லாதவர்கள் அழிக்கப்படுகையில் பெரும்பாலோர் ஏன் அதிர்ச்சி அடைவார்கள்?
17 நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதற்கான அத்தாட்சியைப் பெரும்பாலான ஜனங்கள் அசட்டை செய்வார்கள் என இயேசு முன்னறிவித்தார். பொல்லாதவர்கள் மீது அழிவு திடீரென வரும், எதிர்பாரா வேளையில் வரும். இரவில் திருடன் வரும்போது எப்படி அதிர்ச்சி உண்டாகுமோ அதேபோல, அந்த அழிவு வரும்போது பெரும்பாலோருக்கு அதிர்ச்சி உண்டாகும். (1 தெசலோனிக்கேயர் 5:2) இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:37-39.
18. இயேசுவின் எந்த எச்சரிப்புக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
18 எனவே, தாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக [அதாவது, அங்கீகரிக்கப்பட்டவர்களாக] எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.” (லூக்கா 21:34-36) இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஞானமான செயலாகும். ஏன்? ஏனெனில், யெகோவா தேவனுடைய அங்கீகாரத்தையும் ‘மனுஷ குமாரனான’ இயேசு கிறிஸ்துவின் அங்கீகாரத்தையும் பெறுகிறவர்கள், இந்த சாத்தானிய உலகின் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்து, சீக்கிரத்தில் வரப்போகிற மகத்தான புதிய உலகில் என்றென்றும் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள்.—யோவான் 3:16; 2 பேதுரு 3:13.
a மிகாவேல் என்பது இயேசு கிறிஸ்துவின் மற்றொரு பெயர் என்பதற்கான விளக்கத்திற்கு, பக்கங்கள் 218-19-ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.