பகுதி 9—நாம் “கடைசிநாட்களில்” இருப்பது நமக்கு எப்படித் தெரியும்
மனித ஆட்சியின் இந்தத் தற்போதைய ஒழுங்குக்கு விரோதமாக கடவுளுடைய ராஜ்யம் நடவடிக்கை எடுக்கப்போகிற அந்தச் சமயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைக் குறித்து நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்? எல்லா அக்கிரமத்துக்கும் துன்பத்துக்கும் கடவுள் முடிவைக்கொண்டுவரும் சமயத்துக்கு வெகு அருகாமையில் நாம் இருப்பதை நாம் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?
2 இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் அந்தக் காரியங்களை அறிந்துகொள்ள விரும்பினார்கள். அவர்கள் அவரிடம் ராஜ்ய வல்லமையில் அவருடைய வந்திருத்தலுக்கும் ‘காரிய ஒழுங்கின் முடிவு’க்கும் “அடையாளம்” என்னவாக இருக்கும் என்பதாகக் கேட்டார்கள். (மத்தேயு 24:3) மனிதவர்க்கம் “முடிவுகாலத்திற்குள்,” இந்தக் காரிய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களுக்குள்” பிரவேசித்துவிட்டிருக்கிறது என்பதைக் காண்பிக்க உலகை-அசைவிக்கும் சம்பவங்களையும் அதோடு சேரும் நிலைமைகளையும் விவரமாக குறிப்பிடுவதன் மூலம் இயேசு பதிலளித்தார். (தானியேல் 11:40; 2 தீமோத்தேயு 3:1) அந்தக் கூட்டு அடையாளத்தை இந்த நூற்றாண்டில் நாம் பார்த்திருக்கிறோமா? ஆம், நாம் அதிகமாக அதை பார்த்திருக்கிறோம்!
உலகப் போர்கள்
3 ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்,’ என்பதாக இயேசு முன்னுரைத்தார். (மத்தேயு 24:7) அதற்கு முன்பாக நடந்த எந்த ஒரு போரிலுமிருந்து வித்தியாசப்பட்ட ஒருவிதத்தில் 1914-ல் தேசங்களும் ராஜ்யங்களும் படைதிரண்டதைப் பார்த்த ஒரு போரில் உலகம் சிக்குண்டது. அந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் அந்தச் சமயத்தில் வரலாற்றாசிரியர்கள் அதை மகா யுத்தம் என்றழைத்தனர். வரலாற்றில் இதுவே முதல் உலக யுத்தமாக, இத்தகைய ஒரு யுத்தமாக இருந்தது. சுமார் 2 கோடி போர் வீரர்களும் படைத்துறைச் சாராதவர்களும் உயிரிழந்தனர், இது இதற்கு முன்நிகழ்ந்த எந்த ஒரு போரையும்விட மிகமிக அதிகமான எண்ணிக்கையாகும்.
4முதல் உலகப் போர் கடைசி நாட்களின் ஆரம்பத்தை குறித்தது. இதுவும் மற்ற சம்பவங்களும் “வேதனைகளுக்கு ஆரம்பம்” என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 24:8) சுமார் 5 கோடி போர் வீரர்களும் படைத்துறைச் சாராதவர்களும் உயிரிழந்த இரண்டாம் உலகப் போர் இன்னுமதிக கொடியதாக இருந்த காரணத்தால் அது உண்மையாக இருப்பது நிரூபிக்கப்பட்டது. இந்த 20-ம் நூற்றாண்டில், 10 கோடிக்கும் அதிகமானவர்கள் போர்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இதற்கு முந்திய 400 ஆண்டுகளை ஒன்றுசேர்த்தாலும் கொல்லப்பட்டவர்களைவிட நான்கு மடங்கு அதிகம்! மனித ஆட்சியைக் கண்டனம் செய்ய என்னே மிகப் பெரியதோர் காரணம்!
மற்ற அத்தாட்சிகள்
5 இயேசு கடைசி நாட்களில் சேர்ந்தேவரும் மற்ற அம்சங்களை உட்படுத்தினார்: “பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் [பெருவாரியாக பரவும் நோய்கள்] உண்டாகும்.” (லூக்கா 21:11) இது 1914 முதற்கொண்டு நான்றாய்ப் பொருந்துகிறது, ஏனென்றால் இப்படிப்பட்ட பேராபத்துக்களிலிருந்து வரும் வேதனை பெருவாரியாக பெருகியுள்ளது.
6 பெரிய பூமியதிர்ச்சிகள் வழக்கமாக நடைபெறுகிறவையாக, அநேக உயிர்களை பறித்துவிடுகின்றன. ஸ்பானிஷ் காய்ச்சல் மாத்திரமே முதல் உலகப் போரை தொடர்ந்து சுமார் 2 கோடி மக்களை கொன்றிருக்கிறது—ஒருசில மதிப்பீடுகள் 3 கோடி அல்லது அதற்கு அதிகமாயுமிருக்கிறது. எய்ட்ஸ் லட்சக்கணக்கான ஆட்களின் உயிர்களை பறித்துவிட்டிருக்கிறது. சமீப எதிர்காலத்தில் இன்னும் பல லட்சக்கணக்கானோரின் உயிர்களை பறித்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இருதய நோய்கள், புற்றுநோய், இன்னும் மற்ற நோய்களால் மடிகின்றனர். இன்னும் லட்சக்கணக்கானோர் பசியில் மெதுவாக மரித்துக்கொண்டிருக்கின்றனர். சந்தேகமின்றி ‘திருவெளிப்பாட்டின் குதிரைவீரர்கள்,’ தங்களுடைய போர்கள், பஞ்சங்கள் மற்றும் பெருவாரியாக பரவும் கொள்ளை நோய்களினால் 1914 முதற்கொண்டு மனித குடும்பத்தில் அதிகமான எண்ணிக்கையினரை அழித்துவிட்டிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 6:3-8.
7 இயேசு எல்லா நாடுகளிலும் அனுபவிக்கப்பட்டுவரும் குற்றச்செயலின் அதிகரிப்பையும்கூட முன்னறிவித்தார். அவர் சொன்னார்: “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.”—மத்தேயு 24:12.
8 மேலுமாக பைபிள் தீர்க்கதரிசனம் இன்று உலகம் முழுவதிலும் தெளிவாக காணப்படும் ஒழுக்கச் சீர்குலைவை முன்னறிவித்தது: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; . . . பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-13) அவை அனைத்தும் நம்முடைய கண்களின் முன்னாலேயே நிறைவேறி இருக்கின்றன.
மற்றொரு காரணக்கூறு
9 இந்த நூற்றாண்டில் துன்பத்தின் பேரளவான அதிகரிப்புக்கு மற்றொரு காரணக்கூறு பொறுப்புள்ளதாயிருக்கிறது. கடைசி நாட்கள் ஆரம்பமான 1914-ல் அதே சமயத்தில், மனிதவர்க்கத்தை இன்னுமதிகமான ஆபத்தில் வைத்த ஏதோஒன்று நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில், பைபிளின் கடைசி புத்தகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம் கூறும் வண்ணமாகவே: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் [பரலோக வல்லமையில் கிறிஸ்து] அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே [சாத்தான்] யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் [பேய்கள்] யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:7-9.
10 மனிதகுடும்பத்துக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன? தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” ஆம், சாத்தான் அவனுடைய ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்கிவிட்டது என்பதை அறிவான், ஆகவே அவனும் அவனுடைய உலகமும் வழியிலிருந்து விலக்கப்படுவதற்கு முன்பாக, மனிதர்களை கடவுளுக்கு விரோதமாக திருப்புவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12; 20:1-3) தங்கள் தெரிவுசெய்யும் சுயாதீனத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக அந்த ஆவி சிருஷ்டிகள் எத்தனை இழிவான நிலையில் இருக்கின்றன! விசேஷமாக 1914 முதற்கொண்டு அவற்றின் செல்வாக்கின் கீழ் பூமியின்மீது நிலைமைகள் எத்தனை மோசமாக இருந்துவருகிறது!
11 இயேசு நம்முடைய காலத்தைப்பற்றி இவ்வாறு முன்னுரைத்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; . . . பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—லூக்கா 21:25, 26.
மனித மற்றும் பேய்களின் ஆட்சியின் முடிவு சமீபமாயிருக்கிறது
12 கடவுள் இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையை அழிப்பதற்கு முன்பாக எத்தனை பைபிள் தீர்க்கதரிசனங்கள் இன்னும் நிறைவேற இருக்கின்றன? வெகு சிலவே! கடைசியானவற்றில் ஒன்று 1 தெசலோனிக்கேயர் 5:3-ல் உள்ளது. அது சொல்வதாவது: “சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.” (தி நியு இங்லீஷ் பைபிள்) இது “அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது” இந்த ஒழுங்குமுறையின் முடிவு ஆரம்பிக்கும் என்பதைக் காண்பிக்கிறது. உலகம் எதிர்பார்க்காதபோது, மனிதர்களுடைய கவனம் அவர்கள் எதிர்பார்த்த சமாதானம் மற்றும் பாதுகாப்பின்மீது இருக்கையில், சற்றேனும் எதிர்பாராத சமயத்தில் அழிவுவரும்.
13 சாத்தானுடைய செல்வாக்கின் கீழுள்ள இந்த உலகத்துக்கு நேரம் கடந்துபோய்கொண்டிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் அது தொந்தரவான ஒரு காலத்தில் அதன் முடிவுக்கு வரும். இதைக்குறித்து இயேசு சொன்னார்: “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.”—மத்தேயு 24:21.
14 “மிகுந்த உபத்திரவ”த்தின் உச்சக்கட்டம் கடவுளுடைய அர்மகெதோன் யுத்தமாக இருக்கும். அதுவே தானியேல் தீர்க்கதரிசி குறிப்பிட்ட கடவுள் “அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமா”க்கும் சமயமாக இருக்கிறது. இது கடவுளைச் சார்ந்திராத எல்லா தற்போதைய மனித ஆட்சிகளின் முடிவை அர்த்தப்படுத்தும். அதன்பின்னர் பரலோகத்திலிருந்து அவருடைய ராஜ்ய ஆட்சி எல்லா மனிதவிவகாரங்களின் மீதும் முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். மறுபடியுமாக ஆளும் அதிகாரம் ஒருபோதும், “வேறே ஜனத்துக்கு” விடப்படாது என்பதாக தானியேல் முன்னுரைத்தார்.—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 16:14-16.
15 அந்தச் சமயத்தில் எல்லா சாத்தானிய மற்றும் பிசாசு செல்வாக்கும்கூட இல்லாமற்போகும். அந்தக் கலகத்தனமான ஆவி சிருஷ்டிகள், “ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு” வழியிலிருந்து நீக்கப்பட்டுவிடும். (வெளிப்படுத்துதல் 12:9; 20:1-3) அவர்கள் மரணத்தீர்ப்பளிக்கப்பட்டு அழிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கீழ்த்தரமான செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது மனிதவர்க்கத்துக்கு என்னே ஒரு நிம்மதியாக இருக்கும்!
யார் தப்பிப்பிழைப்பார்? யார் மாட்டார்?
16 கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் இந்த உலகிற்கு எதிராக நிறைவேற்றப்படுகையில், யார் தப்பிப்பிழைப்பார்? யார் மாட்டார்? கடவுளுடைய ஆட்சியை விரும்புகிறவர்கள் பாதுகாக்கப்பட்டு தப்பிப்பிழைப்பார்கள் என்று பைபிள் காண்பிக்கிறது. கடவுளுடைய ஆட்சியை விரும்பாதவர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள், ஆனால் சாத்தானுடைய உலகத்தோடுகூட சேர்ந்து அழிக்கப்படுவார்கள்.
17 நீதிமொழிகள் 2:21, 22 சொல்கிறது: “செவ்வையானவர்கள் [கடவுளுடைய ஆட்சிக்குத் தங்களை கீழ்ப்படுத்துகிறவர்கள்] பூமியிலே வாசம்பண்ணுவர்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ [கடவுளுடைய ஆட்சிக்குத் தங்களை கீழ்ப்படுத்தாதவர்கள்] பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”
18 சங்கீதம் 37:10, 11-ம்கூட சொல்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” வசனம் 29 மேலுமாகச் சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”
19 பின்வருமாறு சொல்லும் சங்கீதம் 37:34-ன் புத்திமதியை நாம் இருதயத்தில் ஏற்கவேண்டும்: “நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.” வசனங்கள் 37 மற்றும் 38 சொல்வதாவது: “நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.”
20 கடவுள் உண்மையிலேயே அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதையும் அவர் சீக்கிரத்தில் எல்லா அக்கிரமத்துக்கும் துன்பத்துக்கும் ஒரு முடிவைக்கொண்டுவருவார் என்பதையும் தெரிந்துகொள்வது எத்தனை ஆறுதலளிப்பதாக, ஆம், எத்தனை எழுச்சியூட்டுவதாக இருக்கிறது! மகிமைப்பொருந்தின அந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் சொற்பக்கால தொலைவில்தானே இருப்பதை உணர்வது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக உள்ளது!
[கேள்விகள்]
1, 2. நாம் கடைசிநாட்களில் இருக்கிறோமா என்பதை நாம் எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?
3, 4. இந்த நூற்றாண்டின் போர்கள் எவ்விதமாக இயேசுவின் தீர்க்கதரிசனத்துக்குப் பொருந்துகிறது?
5-7. நாம் கடைசிநாட்களில் இருக்கிறோம் என்பதற்கு வேறு சில அத்தாட்சிகள் யாவை?
8. நம்முடைய காலத்துக்கு எவ்வாறு 2 தீமோத்தேயு அதிகாரம் 3-லுள்ள தீர்க்கதரிசனம் பொருந்துகிறது?
9. பூமியின் மீது கடைசி நாட்கள் துவங்கின அதே சமயத்தில் பரலோகத்தில் என்ன நிகழ்ந்தது?
10, 11. சாத்தானும் அவனுடைய பேய்களும் கீழே பூமிக்குத் தள்ளப்பட்டபோது மனிதவர்க்கம் எவ்விதமாக பாதிக்கப்பட்டது?
12. இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்னால் கடைசியாக நிறைவேற இருக்கும் தீர்க்கதரிசனங்களில் ஒன்று என்ன?
13, 14. என்ன தொந்தரவான காலத்தை இயேசு முன்னுரைத்தார், அது எவ்விதமாக முடிவடையும்?
15. சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் செல்வாக்குக்கு என்ன சம்பவிக்கும்?
16-18. இந்த ஒழுங்குமுறையின் முடிவை யார் தப்பிப்பிழைப்பார், யார் மாட்டார்?
19. என்ன புத்திமதியை நாம் இருதயத்தில் ஏற்கவேண்டும்?
20. நாம் வாழ்வதற்கு இவை கிளர்ச்சியூட்டும் காலங்கள் என்று நாம் ஏன் சொல்லலாம்?
[பக்கம் 20-ன் படம்]
பைபிள் கடைசி நாட்களின் “அடையாளத்தை” உண்டுபண்ணும் சம்பவங்களை முன்னறிவித்தது
[பக்கம் 22-ன் படம்]
விரைவில் அர்மகெதோனில் கடவுளுடைய ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள். கீழ்ப்படுத்துகிறவர்கள் நீதியுள்ள புதிய ஓர் உலகத்திற்குள் தப்பிப்பிழைப்பர்