பிறரிடம் அன்பு காட்டாதது ஏன்?
லட்சக்கணக்கானோருக்கு தன்னம்பிக்கையில்லை; பயமும் கவலையும்தான் அவர்கள் சொத்து; தனிமை உணர்வே அவர்களுக்கு மேலிடுகிறது. “நான் தனியாகவே சாப்பிடுகிறேன்; எங்குப் போனாலும் தனியாகவே போகிறேன்; தனியாகவே தூங்குகிறேன்; எதுவும் பேச வேண்டுமென்றால் என்னிடமே பேசிக்கொள்கிறேன்” என ஒருவர் புலம்பினார். எவருக்கு உதவி தேவையோ அவர்களிடம் வலிய சென்று அன்புடன் உதவி செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஓய்வுபெற்ற ஒரு பெண் தொழில் நிர்வாகி இவ்வாறு குறிப்பிட்டார்: ‘ஒரு நாள் சாயங்காலம், எங்கள் மேல்வீட்டில் குடியிருந்த ஒரு விதவை என் வீட்டுக் கதவைத் தட்டி, தான் தனிமையாக உணருவதாய் என்னிடம் சொன்னார்கள். நானோ, எனக்கு அதிக வேலையிருந்ததாக பண்போடுதான் சொன்னேன், ஆனால் நேரடியாக சொல்லிவிட்டேன். என்னைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு போய்விட்டார்கள்.’
அந்தப் பெண் தொடர்ந்து சொன்னதாவது: ‘அப்படிப்பட்ட அறுவைகேஸை ஒருவழியாக சமாளித்து அனுப்பிவிட்டதை எண்ணி பெருமிதம் அடைந்தேன். அடுத்த நாள் சாயங்காலம், எங்கள் மேல்வீட்டில் வசித்த அந்த விதவையை எனக்குத் தெரியுமா என்று விசாரித்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போனில் தெரிவித்தார் ஒரு நண்பர். இன்னும் ஊகிக்கவில்லையா, என் கதவைத் தட்டிய பெண்மணியைப் பற்றித்தான் அவர் கேட்டார்.’ அதற்குப் பிறகு, தான் ஒரு “முக்கியமான பாடத்தை” கற்றுக்கொண்டதாக அந்தத் தொழில் நிர்வாகி சொன்னார்.
பாசம் காட்டப்படாத மழலைகள் மாய்ந்துவிடும் என்பது எவருக்கும் தெரிந்ததே. ஆனால் பெரியவர்களும்கூட பாசம் கிடைக்காத ஏக்கத்தில் இறந்துவிடலாம். ஒரு தற்கொலை குறிப்பில், “நேசத்திற்கு இனி தனிமையில்லை” என கவர்ச்சியான 15 வயது இளம்பெண் எழுதியிருந்தார்.
நம் நாளைய அவலம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, இனப் பகை பற்றிய அறிக்கை ஒன்றில் நியூஸ்வீக் பத்திரிகை இவ்வாறு கூறியது: “‘உங்கள் அயலாரை பகையுங்கள்’ என்பதே அந்த ஆண்டின் கோஷம் என்பதுபோல் தோன்றியது.” முன்னாள் யுகோஸ்லாவியாவுடன் இணைந்திருந்த பாஸ்னியா, ஹெர்ட்ஸகோவினா நாடுகளில் கலவரங்கள் நடந்தபோது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும்படியான நிலை ஏற்பட்டது; ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர். யாரால்? “எங்கள் அக்கம்பக்கத்தாரால். அவர்கள் எல்லாரும் எங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்தான்” என்று தன் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டிருந்த ஒரு பெண் புலம்பினாள்.
ரூகாண்டா என்ற கிராமத்தில் வசித்துவந்த 3,000 ஹூட்டு-டூட்ஸி இனத்தவரைப் பற்றி ஒரு பெண் இவ்விதம் கூறினார்: “நாங்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தோம்.” “இந்தக் கிராமத்தின் கதை ருவாண்டாவின் கதையேதான். அதாவது ஹூட்டு இனத்தவரும் டூட்ஸி இனத்தவரும் ஒன்றாக [குடி] இருந்தனர். பெண் எடுத்து, பெண் கொடுத்தனர். ஹூட்டு இனத்தவர் யாரென்றும் டூட்ஸி இனத்தவர் யாரென்றும் கவலையில்லாமல், அதைப் பற்றி தெரியாதளவுக்கும்கூட ஒன்றாய்க் கலந்திருந்தனர். பிறகு திடீரென்று நிலைமை மாறிவிட்டது.” “குத்து, வெட்டு என்று ஆரம்பித்துவிட்டன” என்று த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்தது.
அதைப் போலவே, இஸ்ரேல் நாட்டில் வாழும் யூதர்களும் அராபியர்களும் ஒன்றுசேர்ந்து வாழ்ந்துவருகின்றனர்; ஆனால் அவர்களில் பலர் ஒருவரையொருவர் பகைக்கின்றனர். 20-ம் நூற்றாண்டு முழுவதிலும், அதைப் போன்ற சூழ்நிலைகளே வட அயர்லாந்திலும், இந்தியா-பாகிஸ்தானிலும், மலேசியா-இந்தோனீஷியாவிலும், ஐக்கிய மாகாணங்களில் வாழும் வெவ்வேறு இனத்தவருக்கிடையிலும் இருந்து வந்திருக்கின்றன. சொல்லப்போனால், இன்று உலகம் முழுவதிலும் இதே நிலைதான் உள்ளது.
இன மற்றும் மத பகைமைக்கு உதாரணங்களை வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம். சரித்திரத்திலேயே முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இன்று அன்பு குறைந்திருக்கிறது.
யார் பொறுப்பாளி?
அன்பைப்போலவே, பகைமையும் ஊட்டி வளர்க்கப்படுகிறது. அதாவது, பிள்ளைகளுக்கு, “உற்றார் உறவினர்தம் பகைஞரே தம் பகைஞரென/ஆறோ ஏழோ எட்டோ வயது எய்தும் முன்னே/காலம் கடக்கும் முன்னரே கற்பிப்போமே” என பிரசித்தி பெற்ற ஒரு பாடலின் வரிகள் தெரிவிக்கின்றன. விசேஷமாக இன்று பகைக்கவே போதிக்கப்படுகிறது. குறிப்பாக சர்ச்சுகள் அயலாரை நேசிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை.
லா மாண்ட் என்ற பிரெஞ்சு செய்தித்தாள் இவ்வாறு கேட்டது: “புருண்டி, ருவாண்டா சண்டையில் கலந்துகொண்ட டூட்ஸி இனத்தவரும் ஹூட்டு இனத்தவரும் ஒரே சர்ச்சுகளில் கூடினர்; ஒரே கிறிஸ்தவ மிஷனரிகளே அவர்களுக்குப் போதித்தனர்; அப்படியிருக்க ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என யோசிக்காமல் இருக்கமுடியுமா?” நேஷனல் கேத்தலிக் ரிப்போர்ட்டர் செய்தித்தாளின்படி, ருவாண்டா “70% கத்தோலிக்க நாடு.”
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நாத்திக கம்யூனிஸத்திடம் தங்கள் கவனத்தைத் திருப்பின. ஏன்? 1960-ல் செக்கோஸ்லோவாகியாவைச் சேர்ந்த ப்ராக் நகரின் மத கல்வி நிறுவனம் ஒன்றின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்தவர்களாகிய நாம்தாமே கம்யூனிஸத்திற்கு பொறுப்பாளிகள். . . . இந்நாளைய கம்யூனிஸ்ட்டுகள் முன்னாளைய கிறிஸ்தவர்களே என்பதை மறந்துவிடாதீர்கள். நீதிபரரான கடவுளை அவர்கள் நம்பவில்லையெனில், அது யார் தவறு?”
முதல் உலகப் போரில் சர்ச்சுகள் என்ன செய்தன? பிரிட்டிஷ் பிரிகேடியர் ஜெனரல் ஃபிராங்க் க்ரோஷர் அந்தப் போரைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “நமது இரத்த தாகத்தின் தூண்டுகோலே கிறிஸ்தவ சர்ச்சுகள்தான்; அவற்றை நாம் தாராளமாக பயன்படுத்திக்கொண்டோம்.” பின்னர், இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்தது: “கடந்த காலங்களில் உள்ளூர் கத்தோலிக்க குருக்களாட்சிகள் தேசத்துப் போர்களை ஆதரித்திருக்கின்றன, படைகளை ஆசீர்வதித்து வெற்றிக்காக ஜெபித்திருக்கின்றன; அதே சமயத்தில் எதிர்ப்பக்கத்தில் இருந்த பிஷப்புகளும் தங்கள் வெற்றிக்காகவே வெளிப்படையாக ஜெபித்தனர்.”
ஆனால், இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு செயலிலும் அன்பைக் காணமுடிந்தது. மேலும் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.’ (1 தெசலோனிக்கேயர் 4:9) வான்கூவர் சன் செய்தித்தாளின் நிருபர் குறிப்பிட்டதாவது: “உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாய் இருக்கின்றனர். . . . அவர்கள் ஒருபோதும் ஒருவரையொருவர் வேண்டுமென்றே புண்படுத்துவதில்லை.”
இன்று நிலவும் அன்பு பற்றாக்குறைக்கு சர்ச்சுகளே முக்கிய காரணம் என்பது தெரிந்த விஷயம்தான். இந்தியா டுடே பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “மதம் என்கிற பெயரிலேயே பயங்கரமான அட்டூழியங்கள் நடக்கின்றன.” என்றாலும், இதயத்தைக் கல்லாக்கி மற்றவர்களை அசட்டை செய்வதில் நம் சந்ததி மட்டும் தனித்துத் தெரிவது ஏன் என்பதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது.
அன்புக்கு ஏன் பஞ்சம்?
நம்மைப் படைத்தவர் பதிலளிக்கிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிள், நாம் வாழ்ந்துவரும் காலத்தை ‘கடைசி நாட்கள்’ என்று அழைக்கிறது. இக்காலத்தில் ஜனங்கள் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருப்பார்கள் என பைபிள் தீர்க்கதரிசனம் கூறுகிறது. “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” என்று வேதாகமத்தில் அழைக்கப்படுகின்ற ‘கையாளுவதற்குக் கடினமான [இந்தக்] கொடிய காலத்தில்,’ “அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்று இயேசு கிறிஸ்து முன்கூட்டியே சொல்லிவிட்டார்.—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3, 12; NW.
நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்பதற்குப் பல அத்தாட்சிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இன்றைய அன்பற்ற நிலை. என்றாலும், தேவபக்தியற்ற ஜனங்கள் நிறைந்த இந்த உலகம் மறைந்து, அன்பால் ஆளப்படும் ஒரு நீதியான புதிய உலகம் சீக்கிரம் மலரும் என்பதைக் கேட்கையில் அது எத்தனை இன்பமாய் தொனிக்கிறது!—மத்தேயு 24:3-14; 2 பேதுரு 3:7, 13.
ஆனால், ஜனங்கள் எல்லாரும் அன்புடன் இருக்கப் போகிறார்கள்; ஒருவரோடு ஒருவர் சமாதானமாய் கூடி வாழக் கற்றுக்கொள்வார்கள். என்ன, இப்படியொரு மாற்றம் உண்மையிலேயே வரப்போகிறதா? நாம் எப்படி நம்ப முடியும்?