அந்த அடையாளம்—அதற்கு நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களா?
“அனைத்து தேசத்து மக்களும் செழிப்பு, நலம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கான வழி அணு ஆயுதங்களற்ற, வன்முறையில்லா ஓர் உலகத்தினிடமாக முன்னேறிச் செல்வதில் இருக்கிறது.”—சோவியத் தலைவர் மிக்கேல் கார்பஷாவ் எழுதிய பெரஸ்ட்ரோய்க்கா (Perestroika).
நியாயமாகவே, அப்படிப்பட்ட உலக நிலைமைகளை உண்டாக்கும் திறமை மனிதனுக்கு இருக்கிறதா என்பதை அநேகர் சந்தேகிக்கின்றனர். வேறொரு தலைவர் இயேசு கிறிஸ்து அதைவிட மேன்மையான மகத்துவம் மிகுந்த ஒன்றைக் குறித்து வாக்களித்தார்—மரணத்துக்கு வழிநடத்தும் காரியங்களுங்கூட மாற்றியமைக்கப்படும் ஒரு பரதீசான பூமியைக் குறித்து வாக்களித்தார். (மத்தேயு 5:5; லூக்கா 23:43; யோவான் 5:28, 29) உண்மைதான். அதை நிறைவேற்றுவதற்கான வழி தெய்வீகத் தலையிடுதலாகும். அப்படிப்பட்ட தலையிடுதல் “எப்பொழுது” இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளிப்பவராய் இயேசு பின்வருமாறு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.” முதலில், அடையாள அர்த்தத்தில் கழுகின் பார்வையுடைய கூர்மையாகக் கவனிக்கும் திறம் கொண்டவர்கள் மட்டுமே அதை உணருவார்கள். (லூக்கா 17:20, 37) ஏன் அப்படி?
நமக்கு ஏன் அந்த அடையாளம் தேவை
இயேசு கிறிஸ்து பரலோகத்துக்குச் சென்றது முதல் “சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவரு”மாயிருக்கிறார். (1 தீமோத்தேயு 6:16) எனவே, சொல்லர்த்தமான மனித கண்கள் மீண்டும் அவரை ஒருபோதும் காணாது. தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி நாளன்று இயேசு சொன்னார்: “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னை [ஒருபோதும், NW] காணாது.” (யோவான் 14:19) அவரை அடையாள அர்த்தத்தில்தானே காண முடியும்.—எபேசியர் 1:18; வெளிப்படுத்துதல் 1:7.
என்றபோதிலும், கடவுளுடைய ராஜ்யம் எப்பொழுது ஆளுகையை ஆரம்பிக்கும் என்பதைத் தம்முடைய சீஷர்கள் பகுத்துணர முடியும் என்று இயேசு சொன்னார். எப்படி? ஓர் அடையாளத்தின் மூலம். “நீர் வந்திருத்தலின் அடையாளம் என்னவாயிருக்கும்?” என்ற கேள்விக்குப் பதிலளிப்பவராய் இயேசு தம்முடைய எதிர்கால காணக்கூடாத ஆட்சிக்குக் காணக்கூடிய அத்தாட்சியைச் சித்தரித்தார்.—மத்தேயு 24:3.
எப்படிப்பட்ட ஆட்கள் அதிலிருந்து நன்மையடைவர்கள் என்பதைக் காண்பிக்கும் ஓர் எடுத்துக்காட்டும் அந்த அடையாளத்தில் உட்பட்டிருந்தது. “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்துகூடும்,” என்றார் இயேசு. (மத்தேயு 24:28) இந்தத் தற்போதைய ஒழுங்குமுறைக்கு வரும் முடிவைத் தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகிற்குள் பிரவேசிக்க விரும்புகிற அனைவரும் ‘வந்து கூடி’ கிறிஸ்துவின் கழுகுபோன்ற “தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடன்” ஆவிக்குரிய உணவை அனுபவித்து மகிழ வேண்டும்.—மத்தேயு 24:31, 45-47.
பொறுமையை இழந்துவிடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளுதல்
தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவுக்கான தேதியை எந்த மனிதரும் தீர்மானிக்க முடியாது. “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்” என்று இயேசு சொன்னார்.—மாற்கு 13:32, 33.
என்றபோதிலும், அந்த அடையாளம் அநேக மனித சந்ததியின் காலப்பகுதியில் தோன்றுவதாய் இருக்கக்கூடுமா? இல்லை. அந்த அடையாளம் குறிப்பிட்ட ஒரு சந்ததியில் தோன்றுவதாயிருக்கிறது. அந்த அடையாளத்தின் ஆரம்பத்தைப் பார்த்த அதே சந்ததி “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்”தில் உச்சக்கட்டத்தையும் காண்பர். இந்தக் காரியத்தைக் குறித்து இயேசு கொடுத்த உறுதியை மூன்று சரித்திராசிரியர்கள், அதாவது மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியவர்கள் பதிவு செய்தனர்.—மாற்கு 13:19, 30; மத்தேயு 24:13, 21, 22, 34; லூக்கா 21:28, 32.
என்றபோதிலும் பொறுமையை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. 1914-ல் முதல் உலக மகா யுத்தம் மூண்டது முதல் எழுபத்திநான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. மனிதன் நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது, இது மிக நீண்ட காலமாகத் தோன்றக்கூடும். ஆனால் முதல் உலக மகா யுத்தத்தைப் பார்த்த கழுகு பார்வைகொண்ட கிறிஸ்தவர்களில் சிலர் இன்னும் உயிரோடிருக்கின்றனர். அவர்களுடைய சந்ததி இன்னும் கடந்துபோகவில்லை.
இயேசு அடையாளத்தைக் கொடுத்தபோது, பொறுமையை இழந்துவிடும் அபாயத்தைக் குறித்து அவர் எச்சரித்தார். “என் ஆண்டவன் வர நாள் செல்லும்,” என்று தங்கள் இருதயத்தில் சொல்லிக்கொள்ளும் ஆட்களைக் குறித்து அவர் பேசினார். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் திருத்தப்படாவிட்டால் முட்டாள்தனமான செயல்களுக்கு வழிநடத்தக்கூடும் என்பதை இயேசு காட்டினார். (மத்தேயு 24:48-51) இதைக் குறித்து கிறிஸ்தவ அப்போஸ்தலர்கள் அதிகம் சொல்வதற்கு இருந்தார்கள்.
“பரியாசக்காரர்”
பைபிள் எழுத்தாளனாகிய யூதாவின் பிரகாரம் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் பின்வரும் எச்சரிக்கையைக் கொடுத்தனர்: “கடைசிக் காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்.”—யூதா 17, 18.
சுத்தமான ஒரு புதிய உலகில் வாழ்வதற்கான ஆசை “துன்மார்க்கமான இச்சைகளினால்” [“தேவபக்தியற்ற காரியங்களுக்கான ஆசைகளினால்”] எளிதில் மாற்றப்படக்கூடும். இது விசேஷமாக இன்று அதிக ஆபத்தான காரியம், ஏனென்றால் உலகின் பேச்சு மற்றும் தொடர்பு முறைகள் அதற்கு ஏதுவானதாயிருக்கின்றன. வன்முறை, ஆவியுலகத் தொடர்பு மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடு மனித சரித்திரத்தில் இந்தளவுக்கு ஒருபோதும் தாண்டவமாடியதில்லை. அவை பெரும்பாலும் இன்று வானொலி மற்றும் இசை நிகழ்ச்சிகளின் பொருளாக இருந்து வருகிறது, மற்றும் அவை ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளிலும், வீடியோக்கள், விளம்பரங்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளிலும் காணப்படுகிறது.
அந்த அடையாளம் அப்படிப்பட்ட தேவபக்தியின்மையின் முடிவைக் குறியிட்டு காண்பிக்கிறது. தேவபக்தியற்ற காரியங்களை இச்சிக்கும் சிலர் இயல்பாகவே அந்த அடையாளத்தைப் பரிகசிப்பார்கள். முன்னறிவிக்கப்பட்டிருக்கும் விதமாகவே அவர்கள் “சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே” என்று விவாதிக்கிறார்கள்.—2 பேதுரு 3:3, 4.
‘அன்பு தணிந்துபோகிறது’
அண்மையில் 75 வயது அமெரிக்க எழுத்தாசிரியர் பால் போல்ஸ் நியூஸ்வீக் பத்திரிகையால் பேட்டி காணப்பட்டார். “உலகத்தைக் குறித்த உங்கள் கருத்து என்ன?” என்ற கேள்விக்கு விடையளிப்பவராய் போல்ஸ் சொன்னார்: “ஒழுக்க உணர்வில் உலகம் சின்னாபின்னமாகிவிட்டிருக்கிறது. மக்கள் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவிதமாக எவருமே நேர்மையாக இல்லை. ஒரு மதிப்புக்குரிய மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பதற்கு ஒரு நெறிமுறை இருந்தது; நம்முடைய மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு விலைமதியா தன்மையாக இருந்தது. இப்பொழுதோ எவரும் அதைக்குறித்து [கவலைப்படுவதில்லை]. பணத்திற்கு அளவுகடந்த அழுத்தம் அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.”
இந்த நிலை பைபிள் முன்னறிவித்த விதமாகவே இருக்கிறது. இயேசு முன்னறிவித்தார்: “அக்கிரமம் மிகுதியாவதனால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:12; 2 தீமோத்தேயு 3:1-5) தன்னலமும் பேராசையும் அதிகரிக்க, கடவுள் பேரிலுள்ள அன்பு குறைகிறது. குற்றச்செயல்கள், பயங்கரவாதம், நேர்மையற்ற வியாபார பழக்கங்கள், பாலுறவு சார்ந்த ஒழுக்கக்கேடு மற்றும் போதை மருந்து துர்ப்பிரயோகம் போன்றவற்றில் அதிகமதிகமான மக்கள் ஈடுபடுவதன் மூலம் கடவுளுடைய சட்டங்களுக்கு பதிலாகத் தங்களுடைய சொந்த இச்சைகளையே முன்னதாக வைக்கின்றனர்.
அந்த அடையாளத்தின் நிறைவேற்றத்தைச் சிலர் கண்டுகொள்கின்றனர், ஆனால் தங்களைப் பிரியப்படுத்துவதிலேயே அவ்வளவாய் ஆழ்ந்துவிடுவதன் காரணத்தால், அதன்பேரில் செயல்பட தவறுகின்றனர். மறுபட்சத்தில், அடையாளத்துக்கு செவிகொடுத்தல் கடவுளுக்கும் அயலானுக்கும் தன்னலமற்ற அன்பு காட்டுவதில் தளராமல் இருப்பதை தேவைப்படுத்துகிறது.—மத்தேயு 24:13, 14.
“லவுகீக கவலைகள்”
தன்னல சிற்றின்பங்களைத் தவிர நியாயமான சரீர தேவைகளுங்கூட சிலரை அவ்வளவாய் ஆழ்ந்துவிடச் செய்வதால் அவர்கள் அந்த அடையாளத்தை அசட்டை செய்திடக்கூடும் என்றும் இயேசு எச்சரித்தார். அவர் சொன்னார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும், வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல் வரும்.”—லூக்கா 21:34, 35.
பைபிள் உண்மையில் மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கையைத்தான் ஊக்குவிக்கிறது. (எபேசியர் 5:24–6:4) ஒரு குடும்பத்தலைவன் தன்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவைகளை அளிப்பதற்காக ஏதோ ஒரு வகை வேலையில் அல்லது வியாபாரத்தில் உட்பட்டிருப்பதை பெரும்பாலும் தேவைப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 5:8) ஆகிலும், ஒருவரின் வாழ்க்கை வெறுமென தன் குடும்பம், வியாபாரம் மற்றும் பொருளுடைமைகள் ஆகியவற்றையே சுற்றி இருக்கும்படி அனுமதிப்பது கிட்ட பார்வையுள்ளவர்களாக இருப்பதை அர்த்தப்படுத்தும். இந்த ஆபத்தின் காரணத்தால், இயேசு இப்படியாக எச்சரித்தார்: “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. . . . மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.”—லூக்கா 17:26-30; மத்தேயு 24:36-39.
“ஏற்றுக்கொள்ளப்படுதலா” அல்லது “கைவிடப்படுதலா”?
நேரமாகிவிட்டது. விரைவில் காரியங்களைச் சீர்ப்படுத்துவதற்காகக் கடவுளுடைய ராஜ்யம் தலையிடும். அப்பொழுது ஒவ்வொரு நபரும் இரண்டில் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்படுவர். இயேசு விவரித்த விதமாக இது இருக்கும்: “அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.”—மத்தேயு 24:40, 41.
அந்த முக்கியமான நேரம் வரும்போது, உங்களுடைய நிலை என்னவாக இருக்கும்? நீங்கள் அழிவுக்காகக் கைவிடப்படுவீர்களா அல்லது தப்பிப் பிழைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்படுவீர்களா? நீங்கள் சரியான திசையில் வழிநடத்தப்படுவதற்கு மறுபடியும் இயேசு கொடுத்த உவமையைக் கவனியுங்கள்: “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்துகூடும்.”—லூக்கா 17:34-37; மத்தேயு 24:28.
இப்படியாக இயேசு வருவதுணரும் கூர்நோக்கும் ஐக்கியமாய்ச் செயல்படுதலும் அவசியப்படுவதை அறிவுறுத்துகிறவராயிருந்தார். தப்பிப்பிழைப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் தவறாமல் ஒன்றுகூடிவருகிறவர்களும் கடவுள் அளிக்கும் ஆவிக்குரிய போஷாக்கிலிருந்து நன்மை பெறுகிறவர்களுமாவர். அப்படிப்பட்ட ஆவிக்குரிய போஷிப்பு யெகோவாவின் சாட்சிகளின் 60,000 சபைகளில் ஒன்றுடன் நெருங்கிய கூட்டுறவு கொள்வதிலிருந்தும், நீங்கள் இப்பொழுது வாசிக்கும் பத்திரிகையைப் போன்ற பைபிள் சார்ந்த பிரசுரங்களைப் படிப்பதிலிருந்தும் வருகிறது என்பதை இலட்சக்கணக்கானோர் அனுபவித்திருக்கின்றனர்.
முப்பத்தைந்து இலட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் அந்த அடையாளத்தில் விசுவாசம் காண்பிக்கிறார்கள். தங்களுடைய அயலாருடன் “ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப்” பகிர்ந்துகொள்வதன் மூலம் அப்படிச் செய்கிறார்கள். (மத்தேயு 24:14) நீங்கள் அந்த நற்செய்திக்குச் சாதகமாகப் பிரதிபலிக்கிறீர்களா? அப்படியென்றால், ஒரு பூமிக்குரிய பரதீசுக்குள் தப்பிப்பிழைக்கும் வாக்குத்தத்தத்தை இருதயத்தில் கொள்ளலாம். (w88 10/15)
[பக்கம் 5-ன் படம்]
அந்த அடையாளத்தை அசட்டை செய்யும் அளவுக்கு அநேகர் சிற்றின்பங்களில் ஆழ்ந்துவிட்டிருக்கிறார்கள்
[பக்கம் 6-ன் படம்]
அந்த அடையாளத்துக்குக் கவனம் செலுத்துவது கடவுளுடைய வார்த்தையின்பேரில் போஷிப்பதற்கு ஒன்றுகூடி வருவதையும் உட்படுத்துகிறது