‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது’
‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது. அது விரைந்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.’—செப்பனியா 1:14, NW.
1, 2. (அ) கிறிஸ்தவர்கள் எந்த விசேஷ நாளுக்காக காத்திருக்கிறார்கள்? (ஆ) நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?
சந்தோஷப் பூரிப்பில் திளைத்திருக்கும் இளம்பெண் தன் மணநாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறாள். கருவுற்றிருக்கும் தாய் தன் மழலையின் முகம் காணும் நாளுக்காக ஆசையோடு காத்திருக்கிறாள். உழைத்துக் களைத்துப்போன நபர் தான் நீண்டகாலமாக எதிர்பார்த்திருக்கும் விடுமுறை நாட்கள் எப்போது வருமோ என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது, அது என்ன? இவர்கள் எல்லாரும் ஒரு விசேஷ நாளுக்காக காத்திருக்கிறார்கள், அதுவும் தங்கள் வாழ்க்கையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுடைய உணர்ச்சிகள் ஆழமானவை ஆனால், வித்தியாசமானவை. அவர்கள் எதிர்பார்த்திருக்கும் அந்த நாள் நிச்சயம் வரும். அது வருகையில் அதற்குத் தயாராயிருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
2 அதேபோல், இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களும் ஒரு விசேஷ நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதுதான் ‘யெகோவாவின்’ மகா “நாள்.” (ஏசாயா 13:9; யோவேல் 2:1; 2 பேதுரு 3:12) வரவிருக்கும் ‘யெகோவாவின் நாள்’ எதைக் குறிக்கிறது? அதன் வருகை மனிதகுலத்தை எவ்வாறு பாதிக்கும்? அதோடு, அதற்குத் தயாராயிருக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்? இக்கேள்விகளுக்கான பதில்களை இப்போதே தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், ‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது. அது விரைந்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறது’ என பைபிள் சொல்வது உண்மை என்பதை அத்தாட்சிகள் நிரூபிக்கின்றன.—செப்பனியா 1:14, NW.
‘யெகோவாவின் மகா நாள்’
3. ‘யெகோவாவின் மகா நாள்’ என்றால் என்ன?
3 ‘யெகோவாவின் மகா நாள்’ என்றால் என்ன? யெகோவா தம் எதிரிகளை நியாயந்தீர்த்து, தம் மகத்தான பெயரை மகிமைப்படுத்திய விசேஷ தருணங்களைக் குறிக்க ‘யெகோவாவின் நாள்’ என்ற பதம் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூதா மற்றும் எருசலேமைச் சேர்ந்த உண்மையற்ற ஜனங்களுக்கும், பாபிலோன் மற்றும் எகிப்தைச் சேர்ந்த கொடூரமான குடிமக்களுக்கும் எதிராக ‘யெகோவாவின் நாள்’ வந்தது; அப்போது யெகோவா அவர்களை நியாயந்தீர்த்தார். (ஏசாயா 2:1, 10-12; 13:1-6; எரேமியா 46:7-10) என்றாலும், ‘யெகோவாவின்’ மகாபெரிய ‘நாள்’ இனிமேல்தான் வரவிருக்கிறது. அந்த ‘நாளில்’ தம்முடைய பெயரை அவமதித்த அனைவரையும் யெகோவா நியாயந்தீர்ப்பார். இது பொய் மத உலகப் பேரரசான ‘மகா பாபிலோனின்’ அழிவுடன் ஆரம்பமாகும். சாத்தானுடைய உலகத்தின் மீதி பாகத்தை அர்மகெதோன் யுத்தத்தில் அழிப்பதுடன் அது முடிவடையும்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 17:5, 15-17; 19:11-21.
4. வெகு விரைவில் வரவிருக்கும் யெகோவாவின் நாளைக் கண்டு பெரும்பாலான மக்கள் ஏன் அஞ்ச வேண்டும்?
4 வெகு விரைவில் வரவிருக்கும் இந்நாளைக் கண்டு பெரும்பாலான மக்கள் அஞ்ச வேண்டும், அதை அவர்கள் உணர்ந்தாலும் சரி உணராவிட்டாலும் சரி. ஏன்? தீர்க்கதரிசியான செப்பனியா மூலம் யெகோவா பின்வருமாறு பதிலளிக்கிறார்: “அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.” ஆம், அது உண்மையிலேயே பயங்கரமான நாள்தான்! அந்தத் தீர்க்கதரிசி கூடுதலாக இவ்வாறு கூறுகிறார்: “மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், . . . நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்.”—செப்பனியா 1:15, 17.
5. லட்சக்கணக்கான மக்கள் ஏன் யெகோவாவின் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்?
5 என்றாலும், லட்சக்கணக்கான மக்கள் யெகோவாவின் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஏன்? ஏனெனில், அது நீதிமான்களுக்கு இரட்சிப்பையும் விடுதலையையும் கொண்டுவரும் காலம்; அந்த நாளில் யெகோவா மிக உயர்வாக போற்றப்படுவார், அவருடைய மகிமையான பெயர் பரிசுத்தமாக்கப்படும் என்பதையெல்லாம் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (யோவேல் 3:16, 17; செப்பனியா 3:12-17) யெகோவாவின் நாளைக் கண்டு மக்கள் அஞ்சுகிறார்களா அல்லது ஆவலோடு எதிர்பார்க்கிறார்களா என்பது, தங்கள் வாழ்க்கையை இப்போது அவர்கள் எப்படிச் செலவிடுகிறார்கள் என்பதையே சார்ந்திருக்கிறது. அந்நாள் வரவிருப்பதைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? அதற்குத் தயாராக இருக்கிறீர்களா? யெகோவாவின் நாள் வெகு சமீபத்தில் இருக்கிறது என்ற உண்மை, இப்போதே உங்கள் அன்றாட வாழ்க்கையின் மீது செல்வாக்கு செலுத்துகிறதா?
‘பரியாசக்காரர் வருவார்கள்’
6. ‘யெகோவாவின் நாளைப்’ பற்றி பெரும்பாலான ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள், இதைக் கண்டு உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் ஆச்சரியப்படுவதில்லை?
6 மிக அவசரமான காலக்கட்டத்தில் வாழ்ந்தாலும், பூமியிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் வரவிருக்கும் ‘யெகோவாவின் நாளைக்’ குறித்து கவலைப்படுவதேயில்லை. அது வெகு சமீபத்தில் இருக்கிறது என்று எச்சரிப்போரை அவர்கள் பரியாசம் செய்கிறார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் இதைக் கண்டு ஆச்சரியப்படுவதில்லை. அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த எச்சரிக்கையை அவர்கள் நினைவில் கொண்டிருக்கிறார்கள்: “முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.”—2 பேதுரு 3:3, 4.
7. அவசர உணர்வை தொடர்ந்து கொண்டிருக்க எது நமக்கு உதவும்?
7 இதுபோன்ற சந்தேகங்களுக்கு இடமளிக்காமல், அவசர உணர்வை தொடர்ந்து கொண்டிருக்க எது நமக்கு உதவும்? இக்கேள்விக்கு பேதுரு பதிலளிக்கிறார்: “பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன் [“தெளிவாக சிந்திக்கும் திறன்களை தூண்டி எழுப்புகிறேன்,” NW].” (2 பேதுரு 3:2) தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிப்புகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் ‘தெளிவாக சிந்திக்கும் நம் திறன்களை [நம்மால்] தூண்டி எழுப்ப’ முடியும். இந்த நினைப்பூட்டுதல்களை நாம் திரும்பத் திரும்ப கேட்டிருக்கலாம். இருந்தாலும், எப்போதையும்விட இப்போது இந்த எச்சரிப்புகளுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்துவது மிக முக்கியம்.—ஏசாயா 34:1-4; லூக்கா 21:34-36.
8. பைபிள் தரும் நினைப்பூட்டுதல்களை அநேகர் அசட்டை செய்வதேன்?
8 இந்த நினைப்பூட்டுதல்களை சிலர் அசட்டை செய்வது ஏன்? இதற்கும் பேதுரு பதிலளிக்கிறார்: ‘பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்’ [கவனிக்க “விரும்பாதிருக்கிறார்கள்,” NW]. (2 பேதுரு 3:5, 6) ஆம், யெகோவாவின் நாள் வருவதை சிலர் விரும்புவதில்லை. தங்களுடைய அன்றாட வாழ்க்கையை இடையூறின்றி தொடரவே அவர்கள் விரும்புகிறார்கள். தங்களுடைய சுயநலமான வாழ்க்கைமுறைக்காக யெகோவாவுக்கு கணக்கு கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. பேதுரு சொன்னவிதமாகவே, அவர்கள் “தங்கள் சுயஇச்சைகளின்படியே” வாழ்கிறார்கள்.
9. நோவா மற்றும் லோத்தின் நாட்களில் வாழ்ந்த மக்கள் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்டினார்கள்?
9 யெகோவா கடந்த காலத்தில் மனித விவகாரங்களில் தலையிட்டிருக்கிறார் என்பதை இந்தப் பரியாசக்காரர்கள் கவனிக்க ‘விரும்பாததால்’ அதை அசட்டை செய்கிறார்கள். யெகோவா தலையிட்ட இரண்டு சமயங்களைப்பற்றி இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலன் பேதுருவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை ‘நோவாவின் நாட்கள்’ மற்றும் ‘லோத்தினுடைய நாட்கள்.’ (லூக்கா 17:26-30; 2 பேதுரு 2:5-9) ஜலப்பிரளயத்திற்கு முன்னால், நோவா கொடுத்த எச்சரிக்கையை ஜனங்கள் கண்டுகொள்ளவேயில்லை. அதேபோல, சோதோம் கொமோராவின் அழிவிற்கு முன்னால், லோத்து “பரியாசம்பண்ணுகிறதாக” அவருடைய மருமகன்கள் கருதினார்கள்.—ஆதியாகமம் 19:14.
10. அசட்டை செய்வோர்மீது யெகோவா என்ன நடவடிக்கை எடுப்பார்?
10 இன்றும் நிலைமை அவ்வாறே இருக்கிறது. என்றாலும், அப்படி அசட்டை செய்வோர்மீது யெகோவா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைக் கவனியுங்கள்: “வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன். அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்க மாட்டார்கள்; அவர்கள் திராட்சத் தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.” (செப்பனியா 1:12, 13) மக்கள் தங்கள் “அன்றாட” காரியங்களிலேயே மூழ்கியிருந்தாலும், தங்களுடைய கடின உழைப்பால் எவ்வித நிரந்தர பலனையும் பெற மாட்டார்கள். ஏன்? ஏனெனில், யெகோவாவின் நாள் திடீரென வரும்; அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துபத்துகள் எதுவும் அவர்களைக் காப்பாற்றாது.—செப்பனியா 1:18.
“அதற்குக் காத்திரு”
11. எந்த எச்சரிக்கையை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்?
11 நம்மைச் சுற்றியிருக்கும் பொல்லாத உலகைப் போலின்றி, தீர்க்கதரிசியாகிய ஆபகூக் சொல்லியிருக்கும் எச்சரிப்பை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். அவர் இவ்வாறு கூறினார்: “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3) நம்முடைய அபூரண நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் அந்த நாள் தாமதிப்பதுபோல் தோன்றலாம்; ஆனாலும், யெகோவா தாமதிப்பதில்லை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவருடைய நாள் குறித்த சமயத்தில் வரும், அது மனிதர்கள் எதிர்பார்க்காத நேரமாக இருக்கும்.—மாற்கு 13:33; 2 பேதுரு 3:9, 10.
12. எதைக் குறித்து இயேசு எச்சரித்தார், இயேசுவை உண்மையுடன் பின்பற்றுகிறவர்கள் இவ்விஷயத்தில் எப்படி நடந்திருக்கிறார்கள்?
12 தம்மைப் பின்பற்றுபவர்களிலேயே சிலர் அவசர உணர்வை இழந்துவிடுவார்கள் என்று இயேசு எச்சரித்தார். ஆகவே, யெகோவாவின் நாளை எப்போதும் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களைக் குறித்து பின்வருமாறு முன்னறிவித்தார்: ‘அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன் வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டிப்பார்.’ (மத்தேயு 24:48-51) அதற்கு மாறாக, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் தங்கள் அவசர உணர்வை உண்மையோடு காத்துவந்திருக்கிறார்கள். அவர்கள் விழிப்போடு இருந்து, தாங்கள் தயாராக இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள். இயேசு அவர்களை பூமியிலுள்ள தம் “ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும்” நியமித்திருக்கிறார்.—மத்தேயு 24:42-47.
அவசர உணர்வு அவசியம்
13. அவசர உணர்வு அவசியம் என்பதை இயேசு எவ்வாறு வலியுறுத்தினார்?
13 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அவசர உணர்வு அவசியமாக இருந்தது. எருசலேம் “சேனைகளால் சூழப்பட்டிருப்பதை” கண்டபோது, அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. (லூக்கா 21:20, 21) அது நடந்தது பொ.ச. 66-ஆம் ஆண்டில். அச்சமயத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் அவசர உணர்வோடு செயல்பட வேண்டுமென்பதை இயேசு எவ்வாறு வலியுறுத்தினார் என்பதைக் கவனியுங்கள்: “வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்.” (மத்தேயு 24:17, 18) பொ.ச. 66-க்குப் பிறகு இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்தே எருசலேம் அழிக்கப்பட்டது என்று சரித்திர அத்தாட்சிகள் காட்டுகின்றன. அப்படியிருக்கையில், பொ.ச. 66-லேயே கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவின் வார்த்தைகளுக்கு அந்தளவு அவசரமாக கீழ்ப்படிய வேண்டியிருந்தது?
14, 15. எருசலேம், சேனைகளால் சூழப்பட்டிருப்பதை பார்த்தவுடனேயே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏன் செயல்பட வேண்டியிருந்தது?
14 ரோம படை பொ.ச. 70-ல்தான் எருசலேமை அழித்தது என்பது உண்மையே. இருந்தாலும், இடைப்பட்ட அந்த நான்கு ஆண்டுகள் எந்தப் பிரச்சினையுமின்றி இருந்தனவா? இல்லவே இல்லை! அந்த ஆண்டுகள் வன்முறையாலும், இரத்தக்களறியாலும் நிறைந்திருந்தன. அச்சமயத்தில் எருசலேமில் நிலவிய சூழ்நிலையைக் குறித்து ஒரு சரித்திராசிரியர் பின்வருமாறு கூறினார்: “பயங்கரமான, இரத்தக்கறை படிந்த உள்நாட்டு போரும், அதோடுகூட கொடூரமான செயல்களும் அரங்கேறின.” பாதுகாப்பைப் பலப்படுத்தவும், ஆயுதமேந்தவும், ராணுவத்தில் சேவை செய்யவும் இளைஞர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு தினசரி ராணுவ பயிற்சி கொடுக்கப்பட்டது. யூதர்களுடைய தீவிர நடவடிக்கைகளை ஆதரிக்காதவர்கள் தேசத்துரோகிகளாகக் கருதப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் அந்நகரத்தில் இன்னும் கொஞ்ச காலம் தங்கியிருந்திருந்தால், படுபயங்கரமான ஆபத்தில் சிக்கியிருப்பார்கள்.—மத்தேயு 26:52; மாற்கு 12:17.
15 எருசலேமில் மட்டுமல்ல, ‘யூதேயாவிலிருக்கிறவர்களும்’ அங்கிருந்து ஓடிவிட வேண்டுமென்று இயேசு கூறியதை நாம் கவனிக்க வேண்டும். அப்படி ஓடவேண்டியது அவசியமாக இருந்தது. ஏனெனில், எருசலேமிலிருந்து பின்வாங்கிய சில மாதங்களிலேயே ரோம படையினர் மறுபடியும் தங்கள் போர் நடவடிக்கைகளைத் துவக்கினர். முதலாவதாக, பொ.ச. 67-ல் கலிலேயாவை கைப்பற்றினர். அதற்கடுத்த ஆண்டில், யூதேயாவையும் திட்டமிட்டு கைப்பற்றினர். இதனால் கிராமப்புறத்திலிருந்த மக்கள் அனைவரும் கடுந்துன்பத்திற்கு ஆளானார்கள். எருசலேமிலிருந்து தப்பிப்பது எந்தவொரு யூதருக்கும் அதிகக் கடினமாக ஆனது. நகரத்தின் கதவுகள் பாதுகாக்கப்பட்டன. அங்கிருந்து தப்பிக்க முயலுபவர்கள் எவரும் யூதர்களை புறக்கணித்துவிட்டு ரோமர்கள் பக்கம் சேர்ந்துவிடுவோராகக் கருதப்பட்டனர்.
16. துன்ப காலத்தில் தப்பிக்க முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்க வேண்டியிருந்தது?
16 இவ்விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, அவசர உணர்வோடு செயல்படும்படி இயேசு ஏன் வலியுறுத்தினார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பொருளாதார காரியங்களால் திசைதிரும்பிவிடாமல், தியாகங்களைச் செய்ய கிறிஸ்தவர்கள் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டியிருந்தது. இயேசு கொடுத்த எச்சரிப்புக்கு கீழ்ப்படிவதற்காக “[தங்களுக்கு] உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிட” அவர்கள் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டியிருந்தது. (லூக்கா 14:33) உடனடியாகக் கீழ்ப்படிந்து, யோர்தானின் மறுபக்கத்திற்கு தப்பி ஓடியவர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள்.
நம்முடைய அவசர உணர்வை காத்துக்கொள்ளுதல்
17. நம்முடைய அவசர உணர்வை ஏன் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்?
17 முடிவு காலத்திற்கு மிக அருகில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. எப்போதையும்விட இப்போது நம் அவசர உணர்வை பலப்படுத்திக்கொள்வது அவசியம். சமாதானமான காலத்தில் ஒரு போர்வீரர் யுத்தத்தைக் குறித்து கவலைப்படவோ பயப்படவோ மாட்டார். என்றாலும், இதன் காரணமாக அவர் அசட்டையாக இருந்துவிட்டால், திடீரென போரிடும்படி அழைக்கப்படுகையில், அவர் அதற்கு தயாராக இருக்கமாட்டார். இதன் காரணமாக அவர் உயிரையே இழக்க நேரிடலாம். நாம் ஈடுபட்டிருக்கும் ஆன்மீகப் போரிலும்கூட இதுவே உண்மை. நம் அவசர உணர்வு குறைந்துகொண்டேபோக அனுமதித்தால், நமக்கு வரும் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தயாராக இருக்கமாட்டோம்; அதோடு, யெகோவாவுடைய நாள் வரும்போது நாம் திகைத்துப்போவோம். (லூக்கா 21:36; 1 தெசலோனிக்கேயர் 5:4) ஆகையால், ‘யெகோவாவை விட்டுப் பின்வாங்கியிருப்பவர்கள்’ அவரை மறுபடியும் தேடுவதற்கு இதுவே சரியான சமயம்.—செப்பனியா 1:3-6; 2 தெசலோனிக்கேயர் 1:8, 9.
18, 19. ‘யெகோவாவின் நாளை’ எப்போதும் மனதில் வைத்திருக்க எது நமக்கு உதவும்?
18 ‘தேவனுடைய நாளை’ எப்போதும் மனதில் வைத்திருக்கும்படி அப்போஸ்தலன் பேதுரு நமக்கு அறிவுறுத்தியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! இதை எவ்வாறு செய்யலாம்? ‘பரிசுத்த நடக்கையையும் தேவபக்தியையும்’ வெளிக்காட்டுகிற செயல்களில் ஈடுபடுவது ஒரு வழியாகும். (2 பேதுரு 3:11, 12) இவற்றில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது ‘யெகோவாவின் நாளை’ ஆவலோடு எதிர்பார்க்க நமக்கு உதவும். யெகோவாவின் நாள் வரும்வரையாக மீதமுள்ள நேரத்தை நம்மால் வேகப்படுத்த முடியாது. என்றாலும், அந்நாளுக்காக நாம் காத்திருக்கையில், நாம் கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டால் நேரம் அதிக வேகமாக கடந்து செல்வதுபோல் தோன்றும்.—1 கொரிந்தியர் 15:58.
19 கடவுளுடைய வார்த்தையை தியானித்து அதில் காணப்படும் நினைப்பூட்டுதல்களைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது கடவுளுடைய நாளுக்காக “ஆவலோடு காத்திருக்க (எதிர்பார்த்திருக்க, துரிதப்படுத்த)” உதவும். ஆம், அதை “தொடர்ந்து எதிர்பார்த்திருக்க” நமக்கு உதவும். (2 பேதுரு 3:12, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்; த நியு டெஸ்டமென்ட், பை வில்லியம் பார்க்லெ) இந்த நினைப்பூட்டுதல்களில், யெகோவாவின் நாள் வரவிருப்பதைப் பற்றி முன்னறிவிக்கும் எண்ணற்ற தீர்க்கதரிசனங்கள் மட்டுமின்றி, ‘யெகோவாவுக்காக காத்திருப்போர்மீது’ பொழியப்படவிருக்கும் அளவிலா ஆசீர்வாதங்களும் அடங்கியுள்ளன.—செப்பனியா 3:8.
20. எந்த அறிவுரையை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும்?
20 தீர்க்கதரிசியாகிய செப்பனியா மூலம் பின்வரும் அறிவுரை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது: “கர்த்தருடைய உக்கிர கோபம் உங்கள் மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள் மேல் வருமுன்னும், நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள். தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” இதை மனதில் வைத்து செயல்படுவதற்கு நம்மெல்லாருக்கும் இதுவே சரியான சமயம்.—செப்பனியா 2:1-3.
21. 2007-ல் கடவுளுடைய மக்கள் எதைச் செய்ய தீர்மானமாயிருப்பார்கள்?
21 ஆகவே, ‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது’ என்பதாக 2007-ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற வசனம் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! “அது விரைந்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறது” என்பதில் கடவுளுடைய மக்கள் நிச்சயமாயிருக்கிறார்கள். (செப்பனியா 1:14, NW) “அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3) ஆகவே, அந்நாளுக்காகக் காத்திருக்கையில், இந்தத் தீர்க்கதரிசனங்கள் வெகு விரைவில் நிறைவேற இருப்பதை உணர்ந்தவர்களாய் அவசர தன்மையை தொடர்ந்து காத்துக்கொள்வோமாக!
உங்களால் பதிலளிக்க முடியுமா?
• ‘யெகோவாவின் மகா நாள்’ என்றால் என்ன?
• அவசரமான காலத்தில் வாழ்கிறோம் என்பதை அநேகர் அசட்டை செய்வதேன்?
• முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏன் அவசர உணர்வோடு செயல்பட வேண்டியிருந்தது?
• நம்முடைய அவசர உணர்வை எவ்வாறு அதிகரித்துக்கொள்ளலாம்?
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
2007-ம் ஆண்டிற்கான வசனம்: ‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது.’—செப்பனியா 1:14, NW.
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
யெகோவா நடவடிக்கை எடுக்கையில் நோவாவின் நாட்களைப் போலவே, இப்போதும் பரியாசக்காரர்கள் அதிர்ச்சியடைவார்கள்
[பக்கம் 18-ன் படம்]
“எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை” பார்த்தபோது கிறிஸ்தவர்கள் உடனடியாக செயல்பட வேண்டியிருந்தது