யெகோவாவுடைய ஆலயத்தின் பேரளவான மகிமை
“இந்த ஆலயத்திலே மகிமை நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.”—ஆகாய் 2:7, தி.மொ.
1. பரிசுத்த ஆவி எவ்வாறு விசுவாசத்தோடும் வேலையோடும் தொடர்புடையது?
வீட்டுக்கு வீடு பிரசங்கம் செய்துகொண்டிருக்கையில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தார்; அந்தப் பெண் சொன்னாள், ‘எங்களிடம் பரிசுத்த ஆவி இருக்கிறது, ஆனால் பிரசங்க வேலையை செய்பவர்கள் நீங்கள்தான்.’ பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பவர்கள், இயல்பாகவே, கடவுளுடைய வேலையைச் செய்வதற்குத் தூண்டுவிக்கப்படுவார்கள் என அவளிடம் சாதுரியமாக விளக்கப்பட்டது. யாக்கோபு 2:17 சொல்லுகிறது: “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னில்தானே செத்ததாயிருக்கும்.” யெகோவாவுடைய ஆவியின் உதவியால், அவருடைய சாட்சிகள் பலமான விசுவாசத்தை வளர்த்திருக்கிறார்கள்; மேலும் நீதியுள்ள காரியங்களைச் செய்வதற்கு—முக்கியமாக ‘ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தியை பூமியிலுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிப்பதற்கு’—அவர்களை ஏற்படுத்துவதன் மூலம் அவர் ‘தம்முடைய ஆலயத்தை மகிமை நிறையப்பண்ணியிருக்கிறார்.’ யெகோவா திருப்தியடையும் அளவுக்கு இந்த வேலை செய்யப்பட்டிருக்கும்போது, ‘அப்போது முடிவு வரும்.’—மத்தேயு 24:14.
2. (அ) யெகோவாவின் வேலையில் ஆழ்ந்து ஈடுபடுவது என்ன ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்? (ஆ) நமக்குத் தோன்றுகிற ‘தாமதத்தைப்’ பற்றி நாம் ஏன் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
2 இயேசுவினுடைய இந்த வார்த்தைகளிலிருந்தே, நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள ‘நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தை’ மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதன் பேரில் இன்று நம்முடைய வேலையை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறோம். (1 தீமோத்தேயு 1:11) நாம் எந்தளவுக்கு யெகோவாவின் சேவையில் சந்தோஷமாய் ஆழ்ந்துவிடுகிறோமோ அந்தளவுக்கு முடிவு வேகமாய் வருவதாக தோன்றும். ஆபகூக் 2:2, 3-ல் நாம் யெகோவாவின் வார்த்தைகளை வாசிக்கிறோம்: “நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” ஆம், “தரிசனம்” நிறைவேறும், அது “தாமதித்தாலும்” நிறைவேறும். இயேசுவுடைய ராஜ்ய ஆட்சியின் 83-வது ஆண்டில் நாம் இருப்பதால், இப்பொழுதே தாமதிக்கும் காலப்பகுதியில் நாம் இருக்கிறோம் என்று சிலர் உணரலாம். என்றபோதிலும், முடிவு இன்னும் வராததற்காக நாம் சந்தோஷப்பட வேண்டாமா? ஒருவேளை அற்புதகரமாகவே, 1990-களின் பத்தாண்டுகளின்போது, கிழக்கத்திய ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பாகங்கள், இன்னும் மற்ற தேசங்களில் பிரசங்க வேலையின் மீதிருந்த தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. நமக்குத் தோன்றுகிற அந்தத் ‘தாமதம்,’ சமீபத்தில் திறக்கப்பட்டிருக்கிற இந்தப் பிராந்தியங்களிலிருந்து அநேகமநேக ‘செம்மறியாடுகள்’ கூட்டிச் சேர்க்கப்படுவதற்கான காலத்தை அனுமதித்து வருகிறது.—யோவான் 10:16.
3. “இந்தச் சந்ததி” என்பதன் பேரிலான நம்முடைய திருத்தப்பட்ட புரிந்துகொள்ளுதல், கடவுளுடைய வேலையில் அவசரத்தன்மையுள்ளவர்களாய் இருக்கும்படி நம்மை ஏன் தூண்ட வேண்டும்?
3 “அது தாமதிப்பதில்லை,” என்பதாக அந்தத் தீர்க்கதரிசி சொல்லுகிறார். ‘இவைகளெல்லாம் சம்பவிக்கும்’ வரை இந்தத் தற்போதைய பொல்லாத சந்ததி ஒழிந்து போகாது என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:34) அவருடைய வார்த்தைகளைப் பற்றிய நம்முடைய திருத்தப்பட்ட புரிந்துகொள்ளுதல், நம்முடைய பிரசங்க வேலை அவ்வளவு அவசரமானதாய் இல்லை என்பதை அர்த்தப்படுத்துகிறதா?a இதற்கு எதிர்மாறானதே உண்மை என்பதை உண்மைகள் காண்பிக்கின்றன! முந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு நம்முடைய காலத்து சந்ததி துன்மார்க்கம் மற்றும் ஊழலான நிலைமைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 2:40-ஐ ஒப்பிடுக.) நம்முடைய வேலையில் நாம் அவசரத்தன்மையுடன் இருக்கவேண்டும். (2 தீமோத்தேயு 4:2, NW) அது திடீரென்று, சடுதியில், மறைவாக—திருடனைப்போல—வருமென்பதை மகா உபத்திரவ காலத்தைப் பற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களும் காண்பிக்கின்றன. (1 தெசலோனிக்கேயர் 5:1-4; வெளிப்படுத்துதல் 3:3; 16:15) “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” (மத்தேயு 24:44) தேவபக்தியற்ற இந்தச் சந்ததி அழிவின் விளிம்பை நெருங்குகையில், உலகப்பிரகாரமான கவனச்சிதறல்கள் என்ற ‘சேற்றிலே புரளுவதற்குச்’ செல்வதன் மூலம், நிச்சயமாகவே நம்முடைய அருமையான நித்திய ஜீவ நம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிட நாம் விரும்பமாட்டோம்!—2 பேதுரு 2:22; 3:10; லூக்கா 21:32-36.
4. ‘ஏற்ற வேளையிலே’ அதிக ‘உணவு’ வழங்குவதை எந்தச் சூழ்நிலைமை தேவைப்படுத்தியிருக்கிறது, இந்தத் தேவை எவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது?
4 இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, 1914-ல் மனிதவர்க்கம் ‘இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவுக்குள்’ நுழைகையில் ‘வேதனைக்கு ஆரம்பம்’ இருந்தது. துயரங்கள், பயங்கரமான திடீர் சம்பவங்கள், அநீதி ஆகியவை இந்நாள் வரைக்கும் பன்மடங்காகியிருக்கின்றன. (மத்தேயு 24:3-8, 12, NW) அதே சமயத்தில், தங்கள் எஜமானராகிய கிறிஸ்துவின் வீட்டாருக்கு ‘ஏற்ற வேளையிலே [ஆவிக்குரிய] உணவை’ அளிப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையும் விவேகமுள்ள அடிமை வகுப்பை யெகோவா நியமித்திருக்கிறார். (மத்தேயு 24:45-47, NW) தம்முடைய பரலோக சிங்காசனத்திலிருந்து, இந்த மேசியானிய ராஜா பூமி முழுவதிலும் மகத்தான ஆவிக்குரிய உணவளிப்பு திட்டத்தை வழிநடத்திவருகிறார்.
ஏராளமான ‘உணவு வழங்கீடுகள்’
5. அடிப்படை ‘உணவு’ என்ன கவனத்தைப் பெறுகிறது?
5 ‘உணவு வழங்கீட்டை’ தயார்செய்வதை சிந்தித்துப் பாருங்கள். (லூக்கா 12:42, NW) கிறிஸ்தவ உணவுவகைப் பட்டியலில் உள்ள அடிப்படை உணவு, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள். பைபிளை திறம்பட்ட விதத்தில் போதிப்பதற்கு, வாசிக்கத்தக்க, திருத்தமான மொழிபெயர்ப்பு ஒரு பிரதான தேவையாய் உள்ளது. பல ஆண்டுகளாக இந்தத் தேவை படிப்படியாக, முக்கியமாய் 1950-ல் கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது தொடங்கி பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. 1961-க்குள்ளாக முழு புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடியதாய் இருந்தது, அதன் பதிப்புகள் விரைவில் பிற முக்கிய மொழிகளிலும் தோன்றின. 1996 ஊழிய ஆண்டில் வெளியிடப்பட்ட 3 தொகுதிகள், 27 என்ற மொத்த எண்ணிக்கைக்கு கொண்டுவருகின்றன; அவற்றில் 14 முழு பைபிளாகும். பைபிள் மற்றும் பைபிள் உதவி புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்காக, 77 நாடுகளில் இப்பொழுது ஏறக்குறைய 1,174 ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் முழுநேரமாக மொழிபெயர்ப்பு வேலைசெய்துகொண்டு வருகிறார்கள்.
6. பைபிள் பிரசுரங்களுக்கான அதிக தேவையை சங்கம் எவ்வாறு பூர்த்திசெய்திருக்கிறது?
6 இந்த மொழிபெயர்ப்பாளர்களின் சேனையை உந்துவிக்கும் விதமாக, உவாட்ச் டவர் சொஸைட்டியின் 24 அச்சிடும் கிளை அலுவலகங்கள் எக்காலத்தையும்விட மிகப் பேரளவில் பிரசுரங்களைத் தயாரித்து வந்திருக்கின்றன. இதற்காக, கூடுதலான உயர்-வேக ரோட்டரி அச்சு இயந்திரங்கள் முக்கிய கிளை அலுவலகங்களில் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் உற்பத்தி மாதந்தோறும் வளர்ந்து, ஒன்றுசேர்ந்து மொத்தமாக 94,38,92,500 பிரதிகளைச் சென்றெட்டியிருக்கின்றன; இந்த ஆண்டிற்கான 13.4 சதவீத அதிகரிப்பு. ஐக்கிய மாகாணங்கள், பிரேஸில், பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் மட்டுமே அச்சிடப்பட்ட பைபிள் மற்றும் கெட்டி அட்டையுள்ள புத்தகங்களின் மொத்த உற்பத்தி 1995-லிருந்து 40 சதவீதம் அதிகரித்திருக்கிறது; 1996-ல் அதிகரிப்பு 7,67,60,098 பிரதிகளாகும். பிரசுர உற்பத்தியில் ஏற்பட்ட மொத்த அதிகரிப்புக்கு மற்ற கிளை அலுவலகங்களும் கணிசமான அளவில் பங்களித்திருக்கின்றன.
7. இப்பொழுது ஏசாயா 54:2 எவ்வாறு அதிக அவசரத்தன்மையை பெறுகிறது?
7 கிழக்கத்திய ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின்மீது போடப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதனால் 1990-களில் பேரளவான அதிகரிப்பு இருந்திருக்கிறது. இவ்விடங்களில் ஆவிக்குரிய உணவுக்கான பசி பேரளவில் உள்ளது. ஆகவே, பின்வரும் இந்த அழைப்பு எக்காலத்தையும்விட அதிக அவசரத்தன்மையுடன் தொனிக்கிறது: “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.”—ஏசாயா 54:2.
8. பணசம்பந்தமான ஆதரவை அளிப்பதற்கு தாராளமான என்ன பிரதிபலிப்பு உதவிவருகிறது?
8 எனவே, சொஸைட்டியின் 104 கிளை அலுவலகங்கள் பெரும்பாலானவற்றில் உள்ள வசதிகளை விரிவாக்குவது அவசியமாய் இருந்திருக்கிறது. புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிராந்தியங்களில் உள்ள கடுமையான பொருளாதார நிலைமைகளின் காரணமாக, இந்த விரிவாக்கத்திற்கான செலவின் பெரும்பாகம், அதிக செல்வச்செழிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் உலகளாவிய வேலைக்கான நன்கொடைகளால் சரிகட்டப்படுகிறது. சபைகளும் தனிநபர்களும் முழு இருதயத்துடன் பிரதிபலித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது; இதை அவர்கள் யாத்திராகமம் 35:21-ல் சொல்லப்பட்டுள்ள மனப்பான்மையின்படி செய்திருக்கிறார்கள்: ‘பின்பு தங்கள் இருதயத்தினால் ஏவப்பட்டவர்களும் தங்கள் ஆவியினால் மனப்பூர்வமாக்கப்பட்டவர்களுமாகிய அனைவரும் திரும்பிவந்து . . . யெகோவாவுக்கு காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.’ இந்தத் தாராளமான கொடுத்தலில் பங்குகொண்டிருந்திருக்கிற அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.—2 கொரிந்தியர் 9:11, தி.மொ.
9. ரோமர் 10:13, 18 எவ்வாறு இன்று நிறைவேற்றப்படுகிறது?
9 1996-ல் வெளியிடப்பட்ட உவாட்ச் டவர் சொஸைட்டி பிரசுரங்கள் உண்மையிலேயே பூமியின் கடைகோடி வரைக்கும் யெகோவாவின் நாமத்தையும் அவருடைய நோக்கங்களையும் மகிமைப்படுத்தியிருக்கின்றன. அப்போஸ்தலன் பவுல் முன்னுரைத்தபடியே அது உள்ளது. யோவேலின் தீர்க்கதரிசனத்தையும் 19-வது சங்கீதத்தையும் மேற்கோள் காண்பித்து, அவர் இவ்வாறு எழுதினார்: ‘யெகோவாவின் பெயரால் கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’ (NW) “இப்படியிருக்க அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.” (ரோமர் 10:13, 18) இவ்விதமாய் யெகோவா என்ற அருமையான பெயரை உயர்வாக போற்றித் துதிப்பதன் மூலம், அவருடைய ஜனங்கள் அவருடைய வணக்கத்திற்குரிய ஆலயத்தை மகிமையால் நிரப்புவதில் குறிப்பிடத்தக்க ஒரு பாகத்தை வகித்திருக்கிறார்கள். என்றபோதிலும், விசேஷமாக 1996-ல் எவ்வாறு இந்தப் பிரஸ்தாபப்படுத்துதல் செழித்தோங்கியிருக்கிறது? 18 முதல் 21 வரையான பக்கங்களிலுள்ள அட்டவணையை தயவுசெய்து ஆராய்ந்துபாருங்கள்.
உலகளாவ அறுவடை செய்தல்
10. பக்கங்கள் 18 முதல் 21 வரையிலுள்ள அட்டவணையில் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளபடி, யெகோவாவின் மக்களுடைய நடவடிக்கையில் என்ன குறிப்பிடத்தக்க அம்சங்களை நீங்கள் கவனிக்கிறீர்கள்?
10 லூக்கா 10:2-ல் உள்ள இயேசுவினுடைய பின்வரும் வார்த்தைகள் ஒருபோதும் இந்தளவுக்கு அதிக வலிமையை ஏற்படுத்தவில்லை: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” அந்த அழைப்புக்கு நீங்கள் பிரதிபலிக்கிறீர்களா? பூமி முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கானோர் பிரதிபலிக்கிறார்கள். 1996-ன்போது வெளி ஊழிய அறிக்கை செய்த 54,13,769 ராஜ்ய பிரஸ்தாபிகளுடைய புதிய உச்சநிலையால் இது நிரூபித்துக் காண்பிக்கப்படுகிறது. மேலும், 3,66,579 புதிய சகோதரர்களும் சகோதரிகளும் முழுக்காட்டப்பட்டார்கள். யெகோவாவின் வணக்கத்துக்குரிய ஆலயத்தை மகிமையால் நிரப்புவதில் இப்பொழுது பங்குகொள்கிற ‘சகல ஜாதியாரின் [இந்த] அருமையானவைகளை’ நாம் எவ்வளவாய் மதித்து போற்றுகிறோம்!—ஆகாய் 2:7, தி.மொ.
11. நாமனைவரும் பெருமகிழ்ச்சி கொள்வதற்கான காரணத்தை ஏன் கொண்டிருக்கிறோம்?
11 புதிதாக திறக்கப்பட்ட பிராந்தியங்களில் ஏற்பட்ட விரிவாக்கத்தைப் பற்றிய அறிக்கைகளும் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய வளர்ச்சியை இப்பொழுது அனுபவித்து மகிழ்கிறவர்களைப் பற்றி நாம் பொறாமைப்படுகிறோமா? அதற்கு மாறாக, நாம் அவர்களுடன் சேர்ந்து களிகூருகிறோம். எல்லா நாடுகளும் சிறிய ஆரம்பத்தையே கொண்டிருந்தன. ஆகாய் வாழ்ந்த அதே காலத்திலிருந்த தீர்க்கதரிசியாகிய சகரியா இவ்வாறு எழுதினார்: “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (சகரியா 4:10) சாட்சிகொடுக்கும் வேலை நன்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாடுகளில், இப்பொழுது இலட்சக்கணக்கான ராஜ்ய பிரஸ்தாபிகள் இருப்பதையும், பிராந்தியமானது அடிக்கடி, பல பெரிய நகரங்களில் ஒவ்வொரு வாரத்திலும்கூட, செய்துமுடிக்கப்படுவதைக் குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். முன்பு தடைசெய்யப்பட்டிருந்த பகுதிகளுக்கு இரட்சிப்புக்கான வாய்ப்பை இப்போது யெகோவா கொடுக்கையில், நம்முடைய கையை தளரவிடுவதற்கு நம்மிடம் காரணமிருக்கிறதா? இல்லவே இல்லை! “நிலம் உலகம்” என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 13:38) யூத காரிய ஒழுங்குமுறையின் முடிவில் பூர்வகால சீஷர்கள் முற்றுமுழுமையாக சாட்சிகொடுத்தது போலவே, தொடர்ந்து முற்றுமுழுமையான சாட்சி கொடுக்கப்பட வேண்டும்.—அப்போஸ்தலர் 2:40; 10:42; 20:24; 28:23; NW.
தொடர்ந்து முன்னேறிச் செல்லுதல்
12. “நேர்முகமாக” முன்னோக்கிச் செல்வதற்கு என்ன ஊக்குவிப்பை நாம் கொண்டிருக்கிறோம்? (‘பூமியின் கடையாந்திரத்திலிருந்து அறுவடை செய்தல்’ என்ற பெட்டியையும் காண்க.)
12 ஆம், யெகோவாவின் தேவதூத பரலோக இரதத்துடன் சேர்ந்து “நேர்முகமாய்” முன்னோக்கிச் செல்ல வேண்டும். (எசேக்கியேல் 1:12) பேதுருவினுடைய பின்வரும் வார்த்தைகளை நாம் மனதில் கொண்டிருக்கிறோம்: “கர்த்தர் [“யெகோவா,” NW] தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9) பொருளாதார ரீதியில் வறுமையிலிருக்கும் நாடுகளிலுள்ள நம் சகோதரர்களுடைய முன்மாதிரியான வைராக்கியம் நம்மைத் தூண்டுவதாக. அர்மகெதோன் தீவிரித்து வருவதில் தோன்றுகிற எந்தவொரு தாமதமும், இத்தகைய நாடுகளிலும் அதோடு நன்கு வேலைசெய்யப்பட்ட பிராந்தியங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கானோர் கூட்டிச்சேர்க்கப்படுவதற்கு அனுமதித்து வருகிறது. இதைக்குறித்து தவறாக முடிவுசெய்துவிடாதீர்கள்: “யெகோவாவின் மகத்தான நாள் சமீபம், அது மிகவும் விரைந்து கிட்டிச்சேருகிறது.” (செபனியா 1:14, தி.மொ.) முற்றுமுழுமையாக இறுதியான சாட்சிகொடுப்பதில் நம்முடைய பங்கிலும் விரைந்து செயல்படுதல் வேண்டும்!
13, 14. (அ) 1996-ல் விநியோகிக்கப்பட்ட பிரசுரங்களைக் குறித்து என்ன சொல்லப்படலாம்? (ஆ) ஒவ்வொரு ஆண்டும் என்ன விசேஷ திட்டங்களை சபைகள் போடலாம், அதில் ஒரு பங்கை வகிப்பதற்கு நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?
13 ஊழிய அட்டவணையில் இந்த விவரங்கள் காணப்படாதபோதிலும், கடந்த ஆண்டில் பைபிள்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை விநியோகிப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்திருக்கிறது. உதாரணமாக, உலகளாவிய பத்திரிகை அளிப்புகள் 19 சதவீத அதிகரிப்பை காண்பித்தன, மொத்தமாக 54,36,67,923 பிரதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய பத்திரிகைகள் பல்வகைப்பட்ட பிரசங்கிப்பிற்கு—தெருக்களில், பூங்காக்களில், பேருந்து நிலையங்களில், வியாபார பகுதிகளில் பிரசங்கிப்பதற்கு—துணைபுரிகின்றன. சில பிராந்தியங்கள் அடிக்கடி செய்துமுடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நம்முடைய பத்திரிகைகளின் தரத்தை கண்டு அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மற்றவர்களும்கூட கவரப்பட்டிருக்கிறார்கள், மேலும் பைபிள் படிப்புகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
14 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், சபைகள் பொதுவாக விசேஷ பத்திரிகை ஊழியத்தை ஏற்பாடு செய்து, வீட்டுக்கு வீடும் பொது இடங்களிலும் ஒருநாள் முழுக்க செய்யப்படும் ஊழியத்தை வைத்திருக்கின்றன. ஏப்ரல் 1997-ல் உங்களுடைய சபை இதில் பங்குகொள்ளுமா? உங்களுக்காக பிரத்யேகமான ஏப்ரல் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் தயார்செய்யப்பட்டுள்ளன, உலகமுழுவதும் ஒரேசமயத்தில் அளிக்கப்படும் இப்படிப்பட்ட அளிப்பு நிச்சயமாகவே கவரத்தக்கதாய் இருக்கும்! சைப்ரஸ் தீவில், சபைகள், “ராஜ்ய செய்தியைக்கொண்டு முடிந்தளவு அனைவரையும் சென்றெட்டுங்கள்” என்ற தங்களுடைய சுலோகத்தைப் பயன்படுத்தி, ஒழுங்கமைக்கப்பட்ட பத்திரிகை ஊழியத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும்கூட மீண்டும் சென்று சந்தித்தார்கள்; இதன்மூலம் அந்த ஆண்டில் உச்சநிலையாக 2,75,359 பத்திரிகைகளை அளித்திருக்கிறார்கள், 54 சதவீத அதிகரிப்பு.
ஆகாயின் இறுதியான செய்திகள்
15. (அ) ஆகாயின் மூலமாக யெகோவா ஏன் மேலுமான செய்திகளை அனுப்பினார்? (ஆ) என்ன பாடத்தை ஆகாயின் மூன்றாவது செய்தி நமக்கு தெரியப்படுத்த வேண்டும்?
15 ஆகாய் தன்னுடைய இரண்டாவது செய்தியை தெரிவித்து 63 நாட்களுக்குப் பிறகு, நாம் இன்று நன்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய மூன்றாவது செய்தியுடன் யெகோவா ஆகாயை அனுப்பினார். யூதர்கள் அந்தச் சமயத்தில் ஆலயத்தின் அஸ்திவாரத்தைப் போட்டுக்கொண்டிருப்பது போல் ஆகாய் பேசினார், உண்மையில் அவர்கள் அதை 17 ஆண்டுகளுக்கு முன்பே போட்டிருந்தார்கள். மறுபடியும் ஒரு சுத்திகரிப்பை செய்வதை யெகோவா பொருத்தமானதாய் கண்டார். ஆசாரியர்களும் மக்களும் ஏனோதானோவென்று இருந்தார்கள்; ஆகவே, யெகோவாவின் பார்வையில் அவர்கள் அசுத்தமாய் இருந்தார்கள். இன்று யெகோவாவின் மக்களில் சிலர், உலகத்தின் மனம்போன, பொருள் சம்பந்தமான வழிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதிலும்கூட தங்களுடைய கைகளைத் தளரவிட்டிருக்கக்கூடுமா? யெகோவாவின் பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவதன் பேரில் ‘இந்நாள் முதல்’ நாமனைவரும் நம்முடைய இருதயத்தை ஒருமுகப்படுத்துவது அவசரமானதாய் இருக்கிறது, “நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்,” என்ற அவருடைய வாக்குறுதியில் நம்பிக்கையாய் இருங்கள்.—ஆகாய் 2:10-19; எபிரெயர் 6:11, 12.
16. என்ன ‘அசைவித்தல்’ அருகாமையில் நடைபெறவிருக்கிறது, மேலும் என்ன விளைவடையும்?
16 அதே நாளில், “சேனைகளின் யெகோவா”வுடைய வார்த்தை நான்காவதும் கடைசியுமான தடவை ஆகாய்க்கு வந்தது. ‘வானத்தையும் பூமியையும் [அவர்] அசையப்பண்ணுவதில்’ என்ன உட்பட்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தி சொன்னதாவது: “ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, புறஜாதியார் ராஜ்யங்களின் பலத்தை அழித்து இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளும் அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் ஒருவர் பட்டயத்தால் ஒருவர் விழுவார்கள்.” (ஆகாய் 2:6, 21, 22, தி.மொ.) இவ்விதமாய், அர்மகெதோனில் யெகோவா இந்தப் பூமியை முழுமையாக சுத்திகரிக்கையில் அந்த ‘அசையப்பண்ணுதல்’ அதன் உச்சநிலையை அடையும். அதற்குள் ‘சகல ஜாதிகளிலும் அருமையானவைகளும்,’ அந்தப் புதிய உலகிற்கான மனித சமுதாயத்தினர் அடங்கிய ஒரு தொகுதியை உண்டுபண்ணுவதற்கு உள்ளே வந்திருக்கும். களிகூருவதற்கும் யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துவதற்கும் என்னே காரணங்கள்!—ஆகாய் 2:7, தி.மொ; வெளிப்படுத்துதல் 19:6, 7; 21:1-4.
17. இயேசு எவ்வாறு ‘முத்திரை மோதிரமாக’ ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்?
17 ஆகாய் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை முடிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்: “செருபாபேல் . . . உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன், நான் உன்னையே தெரிந்தெடுத்தேன், இது சேனைகளுடைய யெகோவாவின் திருவாக்கு.” (ஆகாய் 2:23, தி.மொ.) கிறிஸ்து இயேசுவே இப்பொழுது யெகோவாவின் மாதிரிப்படிவ மேசியானிய ராஜாவாகவும் பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார், பூமிக்குரிய எருசலேமில் ஆளுநராகிய செருபாபேலும் பிரதான ஆசாரியராகிய யோசுவாவும் வகித்த பதவிகளை ஒன்றுசேர்த்து பரலோகங்களில் வகிக்கிறார். யெகோவாவின் வலதுகரத்தில் உள்ள அரசாங்க முத்திரை மோதிரத்தைப் போல, ‘தேவனுடைய [அநேக] வாக்குத்தத்தங்களை’ மெய்மையாக்குவதில் யெகோவாவின் கருவியாக இயேசுவே “ஆம்” என்பவராக ஆகியிருக்கிறார். (2 கொரிந்தியர் 1:20; எபேசியர் 3:10, 11; வெளிப்படுத்துதல் 19:10) பைபிளின் முழு தீர்க்கதரிசன செய்தியும், கிறிஸ்துவை ராஜாவாகவும் ஆசாரிய மீட்கும்பொருளை அளிப்பவராகவும் ஏற்பாடுசெய்த யெகோவாவின் ஏற்பாட்டின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.—யோவான் 18:37; 1 பேதுரு 1:18, 19.
18. “யெகோவாவின் சேனைகளுடைய [முடிவான] திருவாக்கு” எவ்வாறு புத்துணர்ச்சியூட்டும் நிறைவேற்றமடையும்?
18 உண்மையிலேயே நம்முடைய இந்த நாளில், பிரகாசத்துடன் ஒளிவீசும் யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தில் மிகப் பெரிய மகிமை காணப்படுகிறது! சாத்தானுடைய ஒழுங்குமுறை அனைத்தையும் யெகோவா துடைத்தழித்த பிறகு, சீக்கிரத்திலேயே, ஆகாய் 2:9 (தி.மொ.) இன்னும் சந்தோஷகரமான நிறைவேற்றத்தை அடையும்: “இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன். இது சேனைகளுடைய யெகோவாவின் திருவாக்கு.” சமாதானம் இறுதியில்!—முடிவில்லா, சர்வலோக சமாதானம், யெகோவாவின் ‘முத்திரை மோதிரமாகிய’ இயேசு கிறிஸ்துவால், “சமாதான பிரபு”வால் உத்தரவாதமளிக்கப்படுகிறது, அவரைக் குறித்து இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது: “அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.” (ஏசாயா 9:6, 7, தி.மொ.) எல்லா நித்தியத்துக்குமாக யெகோவாவின் வணக்கத்துக்குரிய ஆலயத்தின் மகிமையானது அவருடைய சர்வலோக அரசதிகாரத்தின் சமாதான ஆட்சிப்பரப்பு முழுவதும் பிரதிபலிக்கப்படும். நாம் எப்பொழுதும் அந்த ஆலயத்தில் தங்கியிருப்போமாக!—சங்கீதம் 27:4; 65:4; 84:10.
[அடிக்குறிப்புகள்]
a நவம்பர் 1, 1995 காவற்கோபுரம் இதழிலுள்ள, “ஒரு ‘பொல்லாத சந்ததியிலிருந்து’ காப்பாற்றப்படுதல்” மற்றும் “விழித்திருப்பதற்கான ஒரு காலம்” போன்ற கட்டுரைகளைக் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
◻ இன்று, எவ்வாறு யெகோவாவுடைய ஆலயம் ‘மகிமையால் நிரப்பப்படுகிறது?’
◻ நற்செய்தியைப் பிரசங்கிப்பது ஏன் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அதிக அவசரத்தன்மையுடையதாய் இருக்கிறது?
◻ அவசரத்தன்மையுடன் பிரசங்கிப்பதற்கான என்ன ஊக்குவிப்பை 1996 ஊழிய ஆண்டு அறிக்கை கொடுக்கிறது?
◻ கிறிஸ்து எவ்வாறு யெகோவாவின் ‘முத்திரை மோதிரமாக’ சேவித்துவருகிறார்?
[பக்கம் 15-ன் பெட்டி]
“பூமியின் கடையாந்திரத்திலிருந்து” அறுவடை செய்தல்
ஏசாயா 43:6-ல், யெகோவாவின் கட்டளையை நாம் வாசிக்கிறோம்: “வைத்திராதே . . . , தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்திரத்திலிருந்து என் குமாரத்திகளையும் . . . கொண்டுவா.” இந்த வேதவசனம் இன்று கிழக்கத்திய ஐரோப்பாவில் தனிச்சிறப்பு வாய்ந்த முறையில் நிறைவேற்றம் அடைந்திருக்கிறது. உதாரணமாக, முன்பு கம்யூனிஸ நாடாக இருந்த மால்டோவா நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஜனத்தொகையில் பாதிப்பேர் இப்பொழுது சாட்சிகளாக இருக்கும் கிராமங்கள் அங்கு இருக்கின்றன. அவர்கள் பிரசங்கிப்பதற்காக பிராந்தியங்களைத் தேடி நெடுந்தொலைவுகள் பயணம் செய்யவேண்டும், ஆனால் அந்த முயற்சியை அவர்கள் செய்கிறார்கள்! இந்தச் சபைகளிலுள்ள அநேக பிரஸ்தாபிகள், 1950-களின் ஆரம்பத்தில் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட பெற்றோர்களுடைய பிள்ளைகள் ஆவர். இப்பொழுது அவர்களுடைய குடும்பங்கள் அறுவடை வேலையை முன்நின்று வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. 12,565 பிரஸ்தாபிகளில், 1,917 பேர் கடந்த வருடத்தில் முழுக்காட்டப்பட்டார்கள். ஒவ்வொரு சபையிலும் ஏறக்குறைய 150 பிரஸ்தாபிகளைக்கொண்ட 43 சபைகள் இருக்கின்றன, மேலும் புதிய ஊழிய ஆண்டில் வட்டாரங்கள் நான்கிலிருந்து எட்டுக்கு அதிகரித்திருக்கின்றன.
அல்பேனியாவில் ஏற்பட்ட அதிகரிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். அங்கு இருக்கும் உண்மைப்பற்றுள்ள சொற்பளவான சாட்சிகள், சர்வாதிகாரத்திலேயே மிகவும் கொடூரமான சர்வாதிகாரத்தை சுமார் 50 வருடங்களாக சகித்தார்கள். அவர்களில் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இது இயேசுவின் பின்வரும் வாக்குறுதியை மனதுக்குக் கொண்டுவருகிறது: “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; . . . நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.” (வெளிப்படுத்துதல் 2:10; இவற்றையும் காண்க: யோவான் 5:28, 29; 11:24, 25.) இப்பொழுது அல்பேனியாவில் நாம் என்ன பார்க்கிறோம்? உண்மையிலேயே ஏசாயா 60:22-ல் காணப்படும் யெகோவாவின் வாக்குறுதியைப் பற்றிய மனதைக் கவரும் நிறைவேற்றம்: “சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான்”! 1990-ல், அல்பேனியாவில் ஒரேவொரு பிரஸ்தாபியே ஊழியத்தை அறிக்கை செய்தார். இருப்பினும், இத்தாலியிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் வந்த அதிகமான ‘வேலையாட்கள்’ இயேசுவின் அழைப்புக்கு பதிலளித்தார்கள்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடு[ங்கள்].” (மத்தேயு 28:19; லூக்கா 10:2) 1996-ல் நடைபெற்ற இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பின் சமயத்திற்குள்ளாக, 773 பிரஸ்தாபிகள் ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருந்தார்கள், இவர்கள் 6,523 ஆட்களை நினைவு ஆசரிப்புக்குக் கூட்டிச்சேர்த்தார்கள், பிரஸ்தாபிகளுடைய எண்ணிக்கையைவிட எட்டு மடங்குக்கும் அதிகம்! தனித் தொகுதிகளிலிருந்தும் ஆஜரானவர்களின் வியக்கத்தக்க எண்ணிக்கை அறிக்கை செய்யப்பட்டது. உள்ளூர் பிரஸ்தாபிகள் எவரும் இல்லாதபோதிலும், கூக்கஸ் மற்றும் டீவ்யாகே நகரங்களில் முறையே 192 மற்றும் 230 ஆட்கள் ஆஜரானார்கள். ஒரேவொரு பிரஸ்தாபியைக் கொண்ட குரூயாவில் 212 பேர் ஆஜரானார்கள். கார்ச்சாவிலுள்ள 30 பிரஸ்தாபிகள், 300-க்கும் மேலானோருக்காக வாடகை கட்டடத்தை எடுத்தார்கள். இவ்வளவு பேர் ஆடிட்டோரியத்திற்குள் நிறைந்த பிறகு, இனிமேலும் இடமில்லாததால் மற்றொரு 200 பேரை அனுப்ப வேண்டியதாயிருந்தது. உண்மையிலேயே அறுவடைக்கு தயாராயிருக்கும் நிலம்!
ருமேனியாவிலிருந்து இந்த அறிக்கை வருகிறது: “நாங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு ஆளை சந்தித்தோம்; தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரெனவும் ஒரு சிறிய பட்டணத்தில் வசித்துவந்ததாகவும் அவர் சொன்னார்; எங்களுக்குத் தெரிந்தவரை அங்கு எந்த சாட்சிகளும் இல்லை. அவரும் அவரைத் தவிர மற்ற 15 ஆட்களும் அநேக ஆண்டுகளாக வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டங்கள் நடத்திவந்ததாகவும் வீட்டுக்கு வீடு பிரசங்கம் செய்ததாகவும் அவர் எங்களிடம் சொன்னார். அடுத்த நாளில் நாங்கள் அந்தப் பட்டணத்திற்குச் சென்றோம். 15 ஆண்களும், பெண்கள், பிள்ளைகளும் எங்களுக்காக இரண்டு அறைகளில் காத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் 20 புத்தகங்களையும் தற்போதைய பத்திரிகைகளில் 20 பத்திரிகைகளையும் பெற்றுக்கொண்டார்கள். எவ்வாறு பைபிள் படிப்புகள் நடத்துவதென்று நாங்கள் அவர்களுக்குக் காண்பித்தோம். நாங்கள் ஒன்றுசேர்ந்து பாடினோம், அவர்களுடைய மிகவும் அவசரமான கேள்விகளுக்கு விடையும் அளித்தோம். அந்தத் தொகுதியிலுள்ள வழிநடத்தும் ஒருவர் சொன்னார்: ‘ஒருசில நாட்களுக்கு முன்பு, எங்களுக்கு ஒரு மேய்ப்பனை அனுப்பியருளும் என்று நான் கண்ணீரோடு யெகோவாவிடம் ஜெபித்தேன், இப்பொழுது என்னுடைய ஜெபத்திற்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது.’ நாங்கள் அதிகமதிகமாய் மகிழ்ச்சியடைந்தோம், நாங்கள் கிளம்புகையில், கடைசியில் தகப்பனை கண்டுபிடித்த ஒரு அனாதையைப் போல, அவர் சொன்னார்: ‘தயவுசெய்து எங்களை மறந்துவிடாதீர்கள். மீண்டும் எங்களை வந்து பாருங்கள்!’ நாங்கள் போய் பார்த்தோம், இப்பொழுது அந்தப் பட்டணத்தில் ஏழு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அநேக புதிய பிராந்தியங்களில், பைபிள் பிரசுரங்களினால் அற்புதகரமான முறையில் வேலை ஆரம்பமாயிருக்கிறது, அது மிகவும் போற்றப்படுகிறது, இந்த வேலை தெய்வீக ஊற்றுமூலத்தையுடையது என்பதை இது காண்பிக்கிறது.”
[பக்கம் 18 முதல் 21-ன் வரைப்படம்]
உலகளாவிய யெகோவாவின் சாட்சி கடவுளுடைய 1997 ஊழிய அறிக்கை
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
[பக்கம் 16,17-ன் படம்]
‘சகல ஜாதிகளின் அருமையானவைகள்’ கடற்தீவுகள் (1), தென் அமெரிக்கா (2), ஆப்பிரிக்கா (3), ஆசியா (4), வட அமெரிக்கா (5), ஐரோப்பா (6) போன்ற இடங்களில் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள்