வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இயேசு இப்போது அர்மகெதோனின் தேதியை அறிந்திருக்கிறாரா?
அவர் இப்போது அந்த தேதியை அறிந்திருக்கிறார் என்று நம்புவது நியாயமாய் இருப்பதாகத் தோன்றுகிறது.
அந்தக் கேள்வி ஏன் எழும்புகிறது என்றும்கூட சிலர் நினைக்கலாம். இது ஏனென்றால் மத்தேயு 24:36-ல் (தி.மொ.) காணப்படும் இயேசு கொடுத்த விளக்கத்தின் காரணமாக இருக்கக்கூடும்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனுங்கூட அறியார்.” “குமாரனுங்கூட அறியார்” என்ற சொற்றொடரை கவனியுங்கள்.
இந்த வசனம் அப்போஸ்தலரின் கேள்விக்கு இயேசு அளித்த பதிலின் பாகமாய் இருக்கிறது: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3) இப்பொழுது ‘அந்த அடையாளத்தை’ உண்டுபண்ணும் அத்தாட்சிகளைப் பற்றிய தம்முடைய புகழ்பெற்ற தீர்க்கதரிசனத்தில் போர்கள், உணவு பற்றாக்குறைகள், பூமியதிர்ச்சிகள், மெய்க்கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுதல், பூமியின்மீது அவருடைய பிரசன்னத்தைக் குறிக்கும் மற்ற காரியங்கள் ஆகியவற்றை அவர் முன்னறிவித்தார். இந்த அடையாளத்தின் மூலம் முடிவு சமீபமாயிருந்தது என்பதை அவரைப் பின்பற்றியவர்கள் கண்டுணர முடியும். அத்திமரம் துளிர்விடும்போது கோடைகாலம் சமீபமாயிற்று என்பதை அறிவீர்கள் என்று சொல்வதன் மூலம் காலவகையில் சமீபமாயிருப்பதைக் குறித்து அவர் விளக்கினார். அவர் கூடுதலாக சொன்னார்: “அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.”—மத்தேயு 24:33.
ஆனால் முடிவு எப்போது வரும் என்பதை இயேசு துல்லியமாக சொல்லவில்லை. மாறாக, மத்தேயு 24:36-ல் நாம் வாசித்தவிதமாக அவர் குறிப்பிட்டார். பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு அவ்வாறு வாசிக்கிறது, அநேக நவீன பைபிள்களும் அதுபோலவே வாசிக்கின்றன. இருப்பினும், சில பழைய மொழிபெயர்ப்புகளில் “குமாரனுங்கூட அறியார்” என்பது அடங்கியில்லை.
உதாரணமாக, கத்தோலிக்க டூவே மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: “ஆனால் அந்நாளோ நாழிகையோ ஒருவருக்கும் தெரியாது; தந்தைக்கு மட்டும் தெரியுமேயன்றி பரலோகத்திலுள்ள தூதர்களுக்கும் தெரியாது.” கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு இதுபோலவே வாசிக்கிறது. மாற்கு 13:32-ல் “குமாரனும் அறியார்” என்பது இருக்கையில் மத்தேயுவில் அது ஏன் நீக்கப்பட்டிருக்கிறது? ஏனென்றால் 17-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் தயாரிக்கப்பட்டபோது, மொழிபெயர்ப்பாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த மூலப்பிரதிகளில் அந்தச் சொற்றொடர் இருக்கவில்லை. ஆனால், அதற்கிடையில், அநேக பழைய கிரேக்க மூலப்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மத்தேயுவின் மூல உரையின் காலத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இந்த கிரேக்க மூலப்பிரதிகளில் மத்தேயு 24:36-ல் “குமாரனும் அறியார்” என்பது உள்ளது.
அக்கறைக்குரியவிதமாக, கத்தோலிக்க ஜெருசலம் பைபிள் இந்தச் சொற்றொடரை சேர்த்துக்கொள்கிறது, “ஒருவேளை இறைமையியல் காரணங்களுக்காக” லத்தீன் வல்கேட் அந்த சொற்றொடரை நீக்கிப்போட்டது என்று அதன் அடிக்குறிப்பு சொல்கிறது. அதற்காகவேதான்! திரித்துவத்தில் நம்பிக்கை வைத்திருந்த மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது நகல் எடுப்பவர்கள், கிறிஸ்துவின் தந்தை பெற்றிருந்த அறிவு இயேசுவுக்கு இல்லை என்பதைக் குறிப்பிடும் சொற்றொடரை நீக்கிவிடுவதற்கு தூண்டப்பட்டிருக்கலாம். ஒரு திரித்துவ கடவுளின் பாகங்களாக இயேசுவும் அவருடைய தந்தையும் இருந்திருந்தால், இயேசு எவ்வாறு ஒரு குறிப்பிட்ட உண்மையை அறியாமல் இருக்கமுடியும்?
அதேபோல், பி. எம். மெட்ஸ்கெர் என்பவர் கிரேக்க புதிய ஏற்பாட்டின் பேரில் மூலபாட விளக்கவுரையில் (ஆங்கிலம்) பின்வருமாறு சொல்கிறார்: “பிற்காலத்திய பைசன்டைன் உரை உட்பட, ‘குமாரனும் அறியார்’ என்ற வார்த்தைகள் மத்தேயுவின் மூலப்பிரதிகள் பெரும்பாலானவற்றில் இல்லாமல் இருக்கின்றன. மறுபட்சத்தில், அலெக்சாந்திரியன், வெஸ்ட்டர்ன், செசேரியன் போன்ற பலவகையான மூல உரைகளின் மிகச்சிறந்த பிரதிகளில் அச்சொற்றொடர் காணப்படுகிறது.” மாற்கு 13:32-ல் “இந்த வார்த்தைகள் கூட்டப்பட்டிருக்கின்றன என்று நினைத்துக்கொள்வதற்குப் பதிலாக, இவ்வார்த்தைகள் அளிக்கும் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினையின் காரணமாக நீக்கப்பட்டிருப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
அந்தப் பூர்வீக பிரதிகளை “சிறப்பாக பிரதிநிதித்துவம்” செய்தவை, முடிவின் நேரத்தைப் பற்றி படிப்படியாக அறிந்துகொள்வது என்ற அர்த்தத்தை ஆதரிக்கின்றன. தேவதூதர்கள் முடிவின் நேரத்தை அறியவில்லை; குமாரனும் அறியவில்லை; ஆனால் பிதா மட்டுமே அறிந்திருந்தார். இது மத்தேயு 20:23-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஒத்திருக்கிறது, ராஜ்யத்தில் முக்கியமான ஸ்தானங்களை அளிப்பதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்றும் பிதாவுக்கு இருக்கிறது என்றும் அதில் அவர் ஒப்புக்கொண்டார்.
எனவே, ‘உலகத்தின் முடிவுக்கான’ தேதியை அவர் பூமியில் இருக்கையில் அறிந்திருக்கவில்லை என்பதை இயேசுவின் சொந்த வார்த்தைகளே காண்பிக்கின்றன. ஆனால் அதற்குப் பிறகு அவர் அதை அறிந்திருக்கிறாரா?
இயேசு ஒரு வெள்ளைக்குதிரையின் மீது உட்கார்ந்திருப்பதையும் “ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பவராகவும்” புறப்படுவதையும் வெளிப்படுத்துதல் 6:2 விவரிக்கிறது. முதல் உலக யுத்தம் 1914-ல் ஆரம்பித்தது முதற்கொண்டு நாம் அனுபவித்து வந்திருக்கும் போர்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள் ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் குதிரை வீரர்கள் அடுத்து வருகின்றனர். கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு 1914-ல் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார் என்பதையும் துன்மார்க்கத்துக்கு எதிராக பூமியின் மீது வரப்போகும் யுத்தத்தில் முன்செல்பவராயிருப்பார் என்பதையும் யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். (வெளிப்படுத்துதல் 6:3-8; 19:11-16) கடவுளுடைய பெயரில் ஜெயிப்பதற்கு இயேசு இப்போது அதிகாரமளிக்கப்பட்டிருப்பதால், முடிவு எப்போது வரும், எப்போது ‘ஜெயித்து முடிப்பார்’ என்று பிதா அவருக்கு சொல்லியிருப்பார் என்பது நியாயமாய் இருப்பதாகத் தோன்றுகிறது.
பூமியிலிருக்கும் நமக்கு அந்தத் தேதி சொல்லப்படவில்லை, ஆகையால் இயேசுவின் வார்த்தைகள் இன்னும் நமக்கு பொருந்துகின்றன: “நீங்களும் விழித்திருங்கள் . . . அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருங்கள்; . . . நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.”—மாற்கு 13:33-37.