விழித்திருப்பதற்கான ஒரு காலம்
“சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். . . . முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மாற்கு 13:10, 13.
1. நாம் ஏன் நிலைநின்று தைரியங்கொள்ள வேண்டும்?
நாம் நிலைநிற்க வேண்டும்—விசுவாசமற்ற மாறுபாடுள்ள ஒரு சந்ததியின் மத்தியில்! 1914 முதற்கொண்டு ஒரு ஜன சந்ததி, இயேசுவின் நாளில் இருந்ததைப்போலவே, சீரழிந்ததாகிவிட்டிருக்கிறது. இன்று இந்தச் சீரழிவு உலகமெங்கும் விரிவாகிய அளவில் உள்ளது. அப்போஸ்தலன் பவுலால் விவரிக்கப்பட்ட இந்தக் “கடைசி நாட்களில்,” ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்’ மனிதகுலத்தைத் தொல்லைப்படுத்துகின்றன. ‘பொல்லாதவர்களும் எத்தர்களும் மேன்மேலும் கேடுள்ளவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.’ சந்தேகமில்லாமல், ‘உலகமுழுவதும்’ பிசாசான சாத்தானாகிய ‘பொல்லாங்கனின் வல்லமைக்குள் கிடக்கிறது.’ அவன் இப்போது, இந்தப் பூமியைப் பாழாக்கும் தன் கடைசி முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் தைரியங்கொள்ளுங்கள்! நீதியை நேசிப்போர் யாவருக்கும் நிலையான துயர்த்தீர்ப்பைக் கொண்டுவரப்போகிற ‘பெரிதான உபத்திரவம்’ ஒன்று நெருங்கிக்கொண்டிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5, 13; 1 யோவான் 5:19; NW; வெளிப்படுத்துதல் 7:14, தி.மொ.
2. எவ்வாறு 1914-ல் தீர்க்கதரிசனம் நிறைவேறினது?
2 மகிழ்ச்சியுண்டாக, யெகோவா, மனிதகுலத்தின் கொடுங்கோன்மையான சத்துருக்களை நீக்குவதற்கு முன்னேற்பாடாக, பரலோகங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இப்போது சிங்காசனத்தில் அமர்த்தியிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:15) மேசியாவின் முதல் வருகையில் நடந்ததுபோல், இந்த நூற்றாண்டிலும், தானியேலால் எழுதப்பட்ட கவனிக்கத்தக்க ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைந்திருக்கிறது. பூமியின்மீது நேர்மை உரிமைப்படியான அரசதிகாரம், “ஏழு காலங்கள்” ஆகிய ஒரு காலப்பகுதிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததென்று தானியேல் 4:16, 17, 32-ல் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றின் பெரிய நிறைவேற்றத்தில், இந்த ஏழு காலங்கள், ஒவ்வொன்றும் 360 ‘நாட்கள்’ அடங்கிய பைபிள்பூர்வ ஆண்டுகளாக, அல்லது மொத்தம் 2,520 ஆண்டுகளாக இருக்கின்றன.a இவை, இஸ்ரவேலின் ராஜ்யத்தை பாபிலோன் மிதிக்கத் தொடங்கினபோதான, பொ.ச.மு. 607-லிருந்து ஆரம்பித்து, மனிதகுலத்தின் உரிமைப்படியான அரசராக இயேசு பரலோகத்தில் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ஆண்டாகிய, பொ.ச. 1914 வரையில் நீடிக்கின்றன. அப்போது ‘தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்’ முடிவடைந்தன. (லூக்கா 21:24, NW) ஆனால் உள்வந்த மேசியானிய ராஜ்யத்துக்குக் கீழடங்க தேசங்கள் மறுத்துவிட்டிருக்கின்றன.—சங்கீதம் 2:1-6, 10-12; 110:1, 2.
3, 4. (அ) முதல் நூற்றாண்டு சம்பவங்களை நம்முடைய கால சம்பவங்களோடு என்ன ஒப்பிடுதலைச் செய்யக்கூடும்? (ஆ) என்ன பொருத்தமான கேள்விகளைக் கேட்கலாம்?
3 70-வது வார ஆண்டுகள் (பொ.ச. 29-36) அணுகியபோதும், மறுபடியுமாக 1914-ம் ஆண்டு அருகில் நெருங்கியபோதும், கடவுள்பயமுள்ள ஜனங்கள் மேசியா வந்திருப்பதை எதிர்பார்த்தனர். அவர் நிச்சயமாகவே வந்திருந்தார்! எனினும், இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் தோன்றுவதன் பாங்கு, எதிர்பார்க்கப்பட்டதிலிருந்து வேறுபட்டது. மேலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒப்பீட்டு அடிப்படையில் சுருக்கமான ஒரு காலப்பகுதிக்குப் பின், பொல்லாத ஒரு “சந்ததி” கடவுளுடைய கட்டளையால் அழிவுக்குரிய ஆக்கினையை முடிவில் அனுபவிக்கிறது.—மத்தேயு 24:34.
4 இயேசுவைக் கொல்லும்படி கேட்ட அந்தப் பொல்லாத யூத சந்ததி எவ்வாறு அதன் முடிவை அடைந்ததென்று நம்முடைய முந்தின கட்டுரையில் கவனித்தோம். இப்போதும்கூட அவரை எதிர்த்து அசட்டை செய்கிற சீரழிந்த இந்த மனிதகுல சந்ததியைப் பற்றியதென்ன? விசுவாசமற்ற இந்தச் சந்ததியின்மீது ஆக்கினைத்தீர்ப்பு எப்போது நிறைவேற்றப்படும்?
‘தொடர்ந்து விழித்திருங்கள்’!
5. (அ) என்ன நல்ல காரணத்தினிமித்தமாக நாம் யெகோவாவின் “நாளையும் நாழிகையையும்” பற்றிய அந்த நேரத்தை அறிய வேண்டியதில்லை? (ஆ) மாற்கு சொல்லியிருக்கிறபடி என்ன தகுந்த அறிவுரையுடன் இயேசு தம்முடைய தீர்க்கதரிசனத்தை முடித்தார்?
5 ‘பெரிதான உபத்திரவத்தின்’ ஒரு காலத்துக்கு வழிநடத்தும் சம்பவங்களைத் தீர்க்கதரிசனம் உரைத்த பின்பு, இயேசு இவ்வாறு மேலும் கூறினார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.” (மத்தேயு 24:3-36; மாற்கு 13:3-32) நுட்பமாய்ச் சம்பவங்களின் சரியான நேரத்தை நாம் அறிவதற்கு அவசியமில்லை. அதைப்பார்க்கிலும், விழித்திருப்பதிலும், உறுதியான விசுவாசத்தை வளர்ப்பதிலும், யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருப்பதிலுமே நம்முடைய கவனம் ஒருமிக்க ஊன்றவைக்கப்பட்டிருக்க வேண்டும்—ஒரு தேதியைக் கணக்கிடுவதன்பேரில் அல்ல. இயேசு தம்முடைய பெரிய தீர்க்கதரிசனத்தை இவ்வாறு சொல்லி முடித்தார்: ‘தொடர்ந்து நோக்கிக்கொண்டிருங்கள், தொடர்ந்து விழித்திருங்கள், ஏனெனில் குறிக்கப்பட்ட காலம் எப்பொழுதென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். தொடர்ந்து விழித்திருங்கள். உங்களுக்கு நான் சொல்வதை எல்லாருக்கும் சொல்கிறேன், தொடர்ந்து விழித்திருங்கள்.’ (மாற்கு 13:33-37, NW) இன்றைய உலகத்தின் இருளில் ஆபத்து மறைந்திருக்கிறது. நாம் தொடர்ந்து விழித்திருக்க வேண்டும்!—ரோமர் 13:11-13.
6. (அ) எதில் நம்முடைய விசுவாசத்தை ஊன்றியிருக்கச் செய்ய வேண்டும்? (ஆ) நாம் எவ்வாறு ‘நம்முடைய நாட்களை எண்ணலாம்’? (இ) “சந்ததி” என்பதால் இயேசு அடிப்படையாக எதைக் குறிக்கிறார்?
6 பொல்லாத ஒரு ஒழுங்குமுறையின் இந்தக் கடைசி நாட்களைக் குறித்த, தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு நாம் கவனம் செலுத்தவேண்டியது மட்டுமல்லாமல், நம்முடைய விசுவாசத்தை முக்கியமாய்க் கிறிஸ்து இயேசுவின் விலைமதியா பலியின்பேரிலும் அதன்பேரில் ஆதாரங்கொண்ட கடவுளுடைய அற்புதமான வாக்குகளின்பேரிலும் உறுதியாய் ஊன்றியிருக்கச் செய்ய வேண்டும். (எபிரெயர் 6:17-19; 9:14; 1 பேதுரு 1:18, 19; 2 பேதுரு 1:16-19) இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைக் காண ஆவலுள்ளவர்களாக, யெகோவாவின் ஜனங்கள் சிலசமயங்களில் அந்தப் ‘பெரிதான உபத்திரவம்’ எப்போது தொடங்கும் என்பதைப்பற்றி ஊகிக்க முயற்சி செய்திருக்கின்றனர்; 1914 முதற்கொண்டு இருந்துவரும் ஒரு சந்ததியின் வாழ்க்கைகாலக் கணக்கிடுதல்களோடு இதை இணைக்கவும் செய்திருக்கின்றனர். எனினும், எத்தனை ஆண்டுகள் அல்லது நாட்கள் ஒரு சந்ததியை உண்டுபண்ணுகின்றன என்பதைப்பற்றி ஊகிப்பதால் அல்ல, யெகோவாவுக்கு மகிழ்ச்சியுள்ள துதியைக் கொண்டுவருவதில் எவ்வாறு நாம் ‘நம்முடைய நாட்களை எண்ணுவது’ என்பதைப்பற்றி சிந்திப்பதன்மூலமே ‘ஞான இருதயமுள்ளவர்களாக’ இருப்போம். (சங்கீதம் 90:12) காலத்தை அளக்க ஒரு விதியை உண்டுபண்ணுவதற்கு மாறாக, இயேசு பயன்படுத்தின பிரகாரமான “சந்ததி” என்ற இந்தச் சொல், தங்களை அடையாளம் காட்டும் பண்பியல்புகளைக்கொண்ட குறிப்பிட்ட ஒரு சரித்திரகாலப் பகுதியில் வாழும் அந்த ஜனங்களை முக்கியமாய்க் குறிக்கிறது.b
7. “1914-ன் சந்ததி” என்பதைப்பற்றி சரித்திரப் பேராசிரியர் ஒருவர் என்ன எழுதுகிறார், இது இயேசுவின் தீர்க்கதரிசனத்தோடு எவ்வாறு பொருந்துகிறது?
7 மேலுள்ளதற்கு இசைவாக, சரித்திரப் பேராசிரியர் ராபர்ட் வோல், 1914-ன் சந்ததி என்ற தனது ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “ஒரு சரித்திரப்பூர்வ சந்ததி அதன் காலவரிசை தேதிகளால் விளக்கப்படுகிறதில்லை . . . அது வரிசையான தேதிகளல்ல.” ஆனால் முதல் உலகப் போர், “சமாளிக்க முடியாத ஒரு கருத்தில் கடந்த காலத்திலிருந்து ஒரு பிளவை” உண்டுபண்ணினதென்று அவர் குறிப்பிட்டுக்காட்டி, இவ்வாறு மேலுமாகச் சொன்னார்: “அந்தப் போரினூடே வாழ்ந்து வெளிவந்தவர்களுக்கு, ஆகஸ்ட் 1914-ல் ஒரு உலகம் முடிந்து மற்றொன்று தொடங்கினதென்ற நம்பிக்கையைத் தங்கள் மனதிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது.” அது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! இது காரியத்தின் முக்கியக் குறிப்பில் கவனத்தை ஊன்றவைக்கிறது. 1914 முதற்கொண்டு இருந்துவரும் மனிதகுலத்தின் “இந்தச் சந்ததி” திகைக்க வைக்கும் மாற்றங்களை அனுபவித்திருக்கிறது. கோடிக்கணக்கானோரின் இரத்தத்தால் இந்தப் பூமி நனைவதை அது கண்டிருக்கிறது. போர், இன அழிவு, பயங்கரவாதம், குற்றச் செயல்கள், சட்டத்துக்கடங்காமை உலகமெங்கும் திடீரென்று எழும்பியுள்ளன. பஞ்சமும், நோயும், ஒழுக்கக்கேடும் நம்முடைய கோளத்தைத் தாக்கியுள்ளன. இயேசு இவ்வாறு தீர்க்கதரிசனமுரைத்தார்: “அப்படியே நீங்களும் [அவருடைய சீஷர்களும்] இவைகள் சம்பவிக்கிறதைக் காணும்போது, கடவுளின் ராஜ்யம் சமீபமென்று அறிந்துகொள்ளுங்கள். எல்லாம் சம்பவித்துத் தீரும்வரை இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 21:31, 32, தி.மொ.
8. தொடர்ந்து விழித்திருப்பதற்கான அவசியத்தை யெகோவாவின் தீர்க்கதரிசிகள் எவ்வாறு அறிவுறுத்துகின்றனர்?
8 ஆம், மேசியானிய ராஜ்யத்தின் முழுமையான வெற்றி அருகிலுள்ளது! அவ்வாறெனில், தேதிகளுக்காக நாடித்தேடுவதால் அல்லது ஒரு ‘சந்ததியின்’ சொல்லர்த்தமான வாழ்நாளை ஊகித்துக் கணக்கிட்டுக் கொண்டிருப்பதால் ஏதாவது நன்மை பயக்குமா? நிச்சயமாகவே இல்லை! ஆபகூக் 2:3 (தி.மொ.) தெளிவாகச் சொல்லுகிறது: “குறித்தகாலத்துக்கெனத் தரிசனம் இன்னும் காத்திருக்கிறது, அது ஆவலாய் முடிவை நோக்குகிறது, மோசம் போக்காது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு, அது தவறாமல் வரும், வராமற்போகாது.” கணக்குத் தீர்க்கும் யெகோவாவின் நாள் தீவிரமாய் நெருங்கிக் கொண்டிருக்கிறது.—எரேமியா 25:31-33; மல்கியா 4:1.
9. 1914 முதற்கொண்டு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் எவை, காலம் கொஞ்சமே இருக்கிறதென்று காட்டுகின்றன?
9 1914-ல் கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சி தொடங்கினபோது, சாத்தான் கீழே பூமிக்குத் தள்ளப்பட்டான். இது, “பூமிக்கும் . . . ஐயோ ஆபத்து! பிசாசு உங்களிடம் இறங்கிவிட்டான். தனக்குக் கொஞ்சக்காலந்தான் உண்டென்றறிந்து மிகுந்த கோபங்கொண்டான்,” என்பதைக் குறித்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:12, தி.மொ.) சாத்தான் ஆட்சிசெய்துவந்திருக்கிற ஆயிரக்கணக்கான ஆண்டுகளோடு ஒப்பிட அந்தக் காலம் உண்மையாகவே கொஞ்சமாக உள்ளது. அந்த ராஜ்யம் அருகிலுள்ளது, அவ்வாறே, இந்தப் பொல்லாதச் சந்ததியின்மீது ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான யெகோவாவின் நாளும் நாழிகையும் அருகிலுள்ளது!—நீதிமொழிகள் 3:25: 10:24, 25.
ஒழிந்துபோகிற “இந்தச் சந்ததி”
10. எவ்வாறு “இந்தச் சந்ததி” நோவாவின் நாளில் இருந்ததற்கு ஒப்பாயுள்ளது?
10 மத்தேயு 24:34, 35-ல் உள்ள இயேசுவின் கூற்றை நாம் மேலுமதிக உன்னிப்பாய் ஆராயலாம்: “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” பின்தொடர்ந்த இயேசுவின் வார்த்தைகள், ‘அந்த நாளையும் அந்த நாழிகையையும் ஒருவனும் அறியான்’ என்று காட்டுகின்றன. இந்தச் சந்ததியில் நம்மைச் சூழ்ந்துள்ள கண்ணிகளை நாம் தவிர்க்க வேண்டியதே அதைப் பார்க்கிலும் அதிக முக்கியமானதென்று அவர் காட்டுகிறார். ஆகவே, இயேசு மேலும் சொல்கிறார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் [“வந்திருக்கையிலும்,” NW] நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் [“வந்திருக்கையிலும்,” NW] நடக்கும்.” (மத்தேயு 24:36-39) இயேசு இங்கே, தம்முடைய நாளிலிருந்த சந்ததியை நோவாவின் நாளின் சந்ததியோடு ஒப்பிட்டார்.—ஆதியாகமம் 6:5, 9; NW அடிக்குறிப்பு.
11. மத்தேயுவும் லூக்காவும் அறிவித்ததன்படி, ‘சந்ததிகளைப்’ பற்றிய என்ன ஒப்பிடுதலை இயேசு செய்தார்?
11 இது, இயேசு இம்முறையில் ‘சந்ததிகளை’ ஒப்பிடுவதை அப்போஸ்தலர்கள் கேட்ட முதல் தடவையல்ல. ஏனெனில் சில நாட்களுக்கு முன்னால் அவர் தம்மைக் குறித்து இவ்வாறு கூறியிருந்தார்: “மனுஷகுமாரனும் . . . அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) (லூக்கா 17:24-26) இவ்வாறு, மத்தேயு 24-ம் அதிகாரமும் லூக்கா 17-ம் அதிகாரமும் ஒரே ஒப்பிடுதலைச் செய்கின்றன. நோவாவின் நாளில் ‘பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தவர்களும் ஜலப்பிரளயத்தில் அழிக்கப்பட்டவர்களுமான ‘மாம்சமான யாவருமே,’ “இந்தச் சந்ததி”யாக இருந்தனர். இயேசுவின் நாளில் விசுவாசதுரோக யூத ஜனம் இயேசுவை ஏற்காது தள்ளின “இந்தச் சந்ததி”யாக இருந்தது.—ஆதியாகமம் 6:11, 12; 7:1.
12, 13. (அ) இன்று ஒழிந்துபோக வேண்டிய “இந்தச் சந்ததி” எது? (ஆ) இப்போது யெகோவாவின் ஜனங்கள் இந்தக் “கோணலும் மாறுபாடுமான சந்ததி”யோடு எவ்வாறு சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்?
12 ஆகையால், இன்று, இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் கடைசி நிறைவேற்றத்தில், “இந்தச் சந்ததி”யானது, கிறிஸ்துவினுடைய வந்திருத்தலின் அடையாளத்தைக் காண்போரும் ஆனால் தங்கள் வழிகளைச் சரிப்படுத்திக்கொள்ளத் தவறுவோருமான பூமியின் ஜனங்களைக் குறிப்பதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்மாறாக, நாம் இயேசுவின் சீஷர்களாக, ‘இந்தச் சந்ததியின்’ வாழ்க்கைப்பாங்கில் உருப்படுத்தப்பட மறுக்கிறோம். உலகத்தில் இருக்கிறபோதிலும், நாம் அதன் பாகமாக இருக்கக்கூடாது, ஏனெனில் ‘குறிக்கப்பட்ட காலம் சமீபமாயிருக்கிறது.’ (வெளிப்படுத்துதல் 1:3, NW; யோவான் 17:16) அப்போஸ்தலன் பவுல் நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.”—பிலிப்பியர் 2:14-16; கொலோசெயர் 3:5-10; 1 யோவான் 2:15-17.
13 நாம் ‘சுடர்களைப்போலப் பிரகாசிப்பது,’ சுத்தமான கிறிஸ்தவ பண்பியல்பைக் காட்டுவதுமட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் இந்தத் தீர்க்கதரிசன ஊழியக் கட்டளையை நிறைவேற்றுவதையும் உட்படுத்துகிறது: “இராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14, NW) முடிவு எப்போது இருக்குமென்று மனிதர் ஒருவரும் சொல்ல முடியாது, ஆனால், கடவுளுக்குத் திருப்தியாக “பூமியின் கடைசிபரியந்தமும்” சாட்சி கொடுக்கப்பட்டாகிவிட்டால், பொல்லாத ஜனங்களின் ‘இந்தச் சந்ததியினுடைய’ முடிவு வருமென்று நாம் அறிந்திருக்கிறோம்.—அப்போஸ்தலர் 1:8.
‘அந்த நாளும் அந்த நாழிகையும்’
14. “காலங்களையும் வேளைகளையும்” பற்றி இயேசுவும் பவுலும் இருவருமே என்ன அறிவுரை கொடுத்தனர், நாம் எவ்வாறு பதில்செயல்பட வேண்டும்?
14 யெகோவா நோக்கம் கொண்டுள்ள அளவுக்கு பூகோள சாட்சிகொடுப்பது நிறைவேற்றப்பட்டிருக்கையில், அது, இந்த உலகத்தின் ஒழுங்குமுறையை ஒழிப்பதற்கான அவருடைய ‘அந்த நாளும் அந்த நாழிகையுமாக’ இருக்கும். அந்தத் தேதியை நாம் முன்னதாகவே அறிவதற்கு அவசியமில்லை. இவ்வாறு, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார்: “சகோதரரே, காலங்களையும் வேளைகளையும்பற்றி உங்களுக்கு எழுதுவது அவசியமில்லை. ஆகையால், இரவிலே திருடன் வருகிறவிதமாய் ஆண்டவரின் [“யெகோவாவின்,” NW] நாளும் வருமென்பது உங்களுக்குத் திட்டமாய்த்தெரியும். சமாதானம் சுகபத்திரமென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருவதுபோல அழிவு சடுதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிக்கொள்வதேயில்லை.” பவுலின் முக்கியக் குறிப்பைக் கவனியுங்கள்: ‘அவர்கள் சொல்லும்போது.’ ஆம், “சமாதானம் சுகபத்திரம்” என்ற பேச்சு இருக்கையில், சற்றேனும் எதிர்பாராதபோது, கடவுள் அளித்த ஆக்கினைத்தீர்ப்பு திடீரென்று நிறைவேற்றப்படும். பவுலின் அறிவுரை எவ்வளவு பொருத்தமாயுள்ளது: “ஆகையால், மற்றவர்கள்போல் நாமும் தூங்காமல் விழித்துக்கொண்டு தெளிவுள்ளவர்களாயிருக்கக் கடவோம்”!—1 தெசலோனிக்கேயர் 5:1-3, 6, தி.மொ.; வசனங்கள் 7-11-ஐயும் காண்க; அப்போஸ்தலர் 1:7.
15, 16. (அ) அர்மகெதோன், நாம் பெரும்பாலும் நம்பியிருந்ததைப் பார்க்கிலும் தூரமாயுள்ளதென்று நாம் ஏன் நினைக்கக்கூடாது? (ஆ) சமீப எதிர்காலத்தில் யெகோவாவின் உன்னத அரசதிகாரம் எவ்வாறு மகிமைப்படுத்தப்பட வேண்டும்?
15 “இந்தச் சந்ததி” என்பதன்பேரில் இந்தத் தற்போதைய கருத்து விளக்கமானது, அர்மகெதோன் நாம் நினைத்திருந்ததற்கும் இன்னும் தூரத்தில் உள்ளதென்று அர்த்தப்படுகிறதா? இல்லவேயில்லை! “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” நாம் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றாலும், யெகோவா தேவன் அதை எப்போதும் அறிந்திருக்கிறார், அவர் மாறுகிறதில்லை. (மல்கியா 3:6) சந்தேகமில்லாமல், இந்த உலகம் கடைசிமுடிவான அழிவை நோக்கி மேலும் மேலுமாக அமிழ்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து விழித்திருப்பதற்கான தேவை முன்னொருபோதும் இருந்ததைப் பார்க்கிலும் அதிக அவசரமாயுள்ளது. “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளை” யெகோவா நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார், கருத்தோடு ஏற்கும் அவசர உணர்வுடன் நாம் பதில்செயல்பட வேண்டும்.—வெளிப்படுத்துதல் 1:1; 11:18; 16:14, 16.
16 அந்தச் சமயம் நெருங்கிக்கொண்டிருக்கையில், விழித்திருங்கள், ஏனெனில் சாத்தானின் ஒழுங்குமுறை முழுவதன்மீதும் பெரும் இடுக்கணை யெகோவா கொண்டுவரும் ஆயத்த நிலையில் இருக்கிறார்! (எரேமியா 25:29-31) யெகோவா சொல்கிறார்: “நான் பல ஜாதியாரின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி அவர்கள் என்னை அறியும்படி செய்வேன்; நானே யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள்.” (எசேக்கியேல் 38:23, தி.மொ.) அந்தத் தீர்வுமுடிவான “யெகோவாவின் நாள்” (NW) நெருங்கி வந்துகொண்டிருக்கிறது!—யோவேல் 1:15; 2:1, 2; ஆமோஸ் 5:18-20; செப்பனியா 2:2, 3.
நீதியுள்ள “புதிய வானங்களும் புதிய பூமியும்”
17, 18. (அ) இயேசுவும் பேதுருவும் சொன்னபிரகாரம், “இந்தச் சந்ததி” எவ்வாறு ஒழிந்துபோகிறது? (ஆ) தேவபக்தியுள்ள நடத்தையையும் செயல்களையும் குறித்ததில் நாம் ஏன் தொடர்ந்து விழிப்புள்ளோராயிருக்க வேண்டும்?
17 ‘சம்பவிக்கவேண்டிய இவையெல்லாவற்றையும்’ குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” (மத்தேயு 24:34, 35) இயேசு அநேகமாக, ‘இந்தச் சந்ததியின்’—‘வானத்தையும் பூமியையும்’—ஆளுநரையும் ஆளப்படுவோரையும் மனதில் கொண்டிருந்திருக்கலாம். அப்போஸ்தலனாகிய பேதுரு, ‘அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிற,’ “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும்,” என்று குறிப்பிட்டதில், இவற்றைப்போன்ற சொற்களைப் பயன்படுத்தினார். அடுத்தபடியாக அவர் எவ்வாறு, “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாள் . . . திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது [அரசாங்க] வானங்கள் . . . அகன்றுபோம்,” அவற்றோடுகூட சீர்கெட்ட மனித சமுதாயம், அல்லது “பூமியும்,” அதன் பாவச் செயல்களோடுகூட அழிந்துபோம் என்பதை விவரிக்கிறார். பின்பு அந்த அப்போஸ்தலன், ‘யெகோவாவின் நாளின் வருகைக்காக [நாம்] ஆவலோடு காத்து [இருக்கையில்] மனதில் நெருங்க வைத்துக்கொண்டு, பரிசுத்த நடத்தைக்குரிய செயல்களையும் தேவபக்திக்குரிய செயல்களையும் உடையோராய்’ இருக்கும்படி நமக்கு அறிவுரை கூறுகிறார். ‘அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்!’ எது பின்தொடருகிறது? ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களுக்கும் புதிய பூமிக்கும்’ பேதுரு நம் கவனத்தைத் திருப்புகிறார்.—2 பேதுரு 3:7, 10; 2 பேதுரு 3:11-13, NW.c
18 “புதிய வானங்கள்” ஆகிய, கிறிஸ்து இயேசுவும் அவருடன் சேர்ந்த அரசர்களும் ஆளும் அந்த ராஜ்ய ஆட்சி, நீதியுள்ள “புதிய பூமி” மனிதகுல சமுதாயத்தின்மீது ஆசீர்வாதங்களைப் பொழியும். நீங்கள் அந்தச் சமுதாயத்தின் உறுப்பினராக இருக்கும்படி எதிர்பார்ப்பவரா? அப்படியானால், முன் வைக்கப்பட்டுள்ள அந்த மகத்தான எதிர்காலத்தின்பேரில் களிகூர உங்களுக்குக் காரணம் இருக்கிறது!—ஏசாயா 65:17-19; வெளிப்படுத்துதல் 21:1-5.
19. என்ன பெரிய சிலாக்கியத்தை நாம் இப்போது அனுபவித்து மகிழலாம்?
19 ஆம், மனிதகுலத்தின் நீதியுள்ள ஒரு “சந்ததி” இப்போதேயும் கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறது. இன்று, அபிஷேகம் செய்யப்பட்ட அந்த “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” சங்கீதம் 78:1, 4-ல் (NW) உள்ள வார்த்தைகளுக்கு இசைவாக தெய்வீக கல்வியை அறிவித்துவருகிறது: “என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள், என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். . . . யெகோவாவின் துதிகளையும் அவர் பலத்தையும் அவர் செய்த அதிசயங்களையும் பின்வரும் சந்ததியாருக்கு விவரிப்போம்.” (மத்தேயு 24:45-47, NW) இந்த ஆண்டின் ஏப்ரல் 14 அன்று, பூமியைச் சுற்றிலும் ஏறக்குறைய 230 நாடுகளில், 75,500-த்திற்கும் மேற்பட்ட சபைகளில், 1,20,00,000 ஆட்கள், கிறிஸ்துவின் மரண நினைவுகூருதலுக்கு வந்திருந்தனர். அவர்களுக்குள் நீங்களும் ஒருவராக இருந்தீர்களா? கிறிஸ்து இயேசுவில் உங்கள் விசுவாசம் நிலைத்திருக்கச் செய்து, ‘இரட்சிப்புக்காக யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுவீர்களாக.’—ரோமர் 10:10-13, NW.
20. ‘இனிவரும் காலம் குறுகினதாகையால்,’ நாம் எவ்வாறு தொடர்ந்து விழித்திருக்க வேண்டும், என்ன எதிர்பார்ப்பை மனதில் கொண்டு?
20 ‘இனிவரும் காலம் குறுகினது,’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஆகையால், மனிதகுலத்தின் ஒரு பொல்லாத சந்ததியால் கொண்டுவரப்படும் இக்கட்டுகளையும் பகைமைகளையும் நாம் சகித்து நிலைநின்று வருகையில், எப்போதும் தொடர்ந்து விழித்திருந்து, யெகோவாவின் ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருப்பதற்கு இதுவே காலம். (1 கொரிந்தியர் 7:29; மத்தேயு 10:22; 24:13, 14) ‘இந்தச் சந்ததியின்’ மீது வரவிருப்பதாக பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எல்லாக் காரியங்களையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு நாம் தொடர்ந்து விழித்திருப்போமாக. (லூக்கா 21:31-33) இவற்றிற்கெல்லாம் தப்புவதன்மூலமும் மனுஷகுமாரனுக்கு முன்பாகக் கடவுளுடைய அங்கீகாரத்துடன் நிற்பதன்மூலமும், கடைசியாக நாம் நித்திய ஜீவனின் பரிசைப் பெறக்கூடும்.
[அடிக்குறிப்புகள்]
a ‘ஏழு காலங்களின்’ பேரில் விவரமான தகவலைப் பெறுவதற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தின் பக்கங்கள் 127-39, 186-9-ஐக் காண்க.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த, வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 918-ஐக் காண்க.
c வரவிருக்கும் நம் உலக அரசாங்கம்—கடவுளுடைய ராஜ்யம், (ஆங்கிலம்) பக்கங்கள் 152-6-ம் 180-1-ம் காண்க, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
மறுபார்வைக்குரிய கேள்விகள்:
◻ தானியேல் 4:32-ன் நிறைவேற்றத்தைக் கவனித்திருப்பதால், நாம் இப்போது எவ்வாறு ‘தொடர்ந்து விழித்திருக்க’ வேண்டும்?
◻ மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷங்கள் ‘இந்தச் சந்ததியை’ எவ்வாறு அடையாளம் காட்டுகின்றன?
◻ ‘அந்த நாளுக்காகவும் நாழிகைக்காகவும்’ நாம் காத்திருக்கையில் எதைக் கூர்ந்து கவனிக்கிறோம், நாம் எவ்வாறு பதில்செயல்பட வேண்டும்?
◻ நீதியுள்ள ‘புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ எதிர்பார்ப்பது என்ன செய்யும்படி நம்மை ஊக்குவிக்க வேண்டும்?
[பக்கம் 17-ன் படங்கள்]
இந்த வன்முறையான, பொல்லாத சந்ததி ஒழிந்துபோகும்போது, துன்புறும் மனித சமுதாயம் நிவாரணம் அடையும்
[படத்திற்கான நன்றி]
Alexandra Boulat/Sipa Press
[படத்திற்கான நன்றி]
Left and below: Luc Delahaye/Sipa Press
[பக்கம் 18-ன் படம்]
மகிமையான “புதிய வானங்களும் புதிய பூமியும்” மனிதவர்க்கத்தின் எல்லா இனத்தவருக்கும் சமீபத்தில்தானே உள்ளன