தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள் —முடிவு சமீபித்திருக்கிறது
“எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.”—1 பேதுரு 4:7.
1. (அ) ஒரு மதத்தலைவரும் அவரைப் பின்பற்றியவர்களும் என்ன ஏமாற்றத்தை அனுபவித்தனர்? (ஆ) ஒருசில எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால், என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?
“இன்றிரவின் கடைசி ஜெபத்தில் நான் கடவுளிடமிருந்து ஓர் அழைப்பைப் பெற்றேன். அவர், 1,16,000 ஆட்கள் பரலோகத்திற்கு ஏறிச்செல்வர் என்றும் 37 லட்ச மரணமடைந்த விசுவாசிகளின் கல்லறைகள் மேகத்திடமாகத் திறக்கப்படும் என்றும் சொன்னார்.” தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்ற நாளாக அவர்கள் கணக்கிட்டிருந்த அக்டோபர் 28, 1992 அன்று மாலை, வருங்கால நாட்களின் மிஷனின் தலைவர் அவ்வாறாகச் சொன்னார். எனினும், அக்டோபர் 29 வந்தபோது, ஒருவர்கூட பரலோகத்திற்கு ஏறி சென்றிருக்கவில்லை, மேலும் மரணமடைந்தவர்களின் எந்தக் கல்லறையும் திறக்கப்படவுமில்லை. ஒரு பரலோக பரவசத்தில் விரைவாக எடுத்துச் செல்லப்படுவதற்கு மாறாக, கொரியாவிலுள்ள அந்த இறுதித்தீர்ப்புநாள் விசுவாசிகள் வெறுமனே இன்னொரு நாளின் விடியலைக் கண்டனர். இறுதித்தீர்ப்புநாள் கெடுதேதிகள் வருவதும் போவதுமாக இருந்திருக்கின்றன, ஆனால் அந்நாளை அறிவிப்பவர்கள் தொடர்ந்து தளராது அறிவித்துக்கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் என்ன செய்யவேண்டும்? முடிவு விரைவாக அணுகிக்கொண்டிருக்கிறது என்று நம்புவதை அவர்கள் நிறுத்திவிட வேண்டுமா?
2 இதற்குப் பதிலளிப்பதற்கு, இயேசு அவருடைய சீஷர்களுடன் கொண்டிருந்த தனிப்பட்ட சம்பாஷணையை நாம் நினைவுக்குக் கொண்டுவருவோம். அங்கே, பிலிப்பு செசரியா மாவட்டத்தில், கலிலேயா கடலுக்கு வடகீழ்த்திசையில், கம்பீரமான எர்மோன் மலை நாடக பின்திரைபோல் அமைய, அவர் தாம் கொல்லப்படுவார் என்று நேரடியாகச் சொல்வதை அவர்கள் கேட்டனர். (மத்தேயு 16:21) இன்னும் ஆழ்ந்த சிந்தனைக்குரிய வார்த்தைகள் பின்தொடர இருந்தன. சீஷத்துவம் என்பது தொடர்ந்து ஒரு சுய-தியாக வாழ்க்கை வாழ்வதை அர்த்தப்படுத்துகிறது என்று அவர்களுக்கு விவரித்தபின், இயேசு எச்சரித்தார்: “மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.” (மத்தேயு 16:27) இயேசு ஓர் எதிர்கால வருகையைப்பற்றி பேசினார். எனினும் இந்தச் சமயத்தில், அவர் ஒரு நியாயாதிபதியாக இருப்பார். அந்தச் சமயத்தில், ஒருவர் தம்மை உண்மையுடன் பின்பற்றுகிறவராக அல்லது பின்பற்றாதவராக இருக்கிறாரா என்று அவர் காண்கிறதைச் சார்ந்தே எல்லாம் இருக்கிறது. ஒருவர் உலகப்பிரகாரமான ஆஸ்திகளில் எவ்வளவைக் கொண்டிருக்கிறார் அல்லது கொண்டிருக்கவில்லை என்பதன்பேரில் இல்லாமல், இயேசுவின் நியாயத்தீர்ப்பு நடத்தையின் அடிப்படையில் இருக்கும். இந்த உண்மையை அவருடைய சீஷர்கள் உறுதியாக மனதில் வைத்திருக்கவேண்டும். (மத்தேயு 16:25, 26) ஆகவே, அதன் நியாயத்தீர்ப்புடன் சேர்ந்த அவருடைய மகிமையான வருகையை எதிர்நோக்கி இருக்கும்படி இயேசு கிறிஸ்துதாமே அவருடைய சீஷர்களிடம் சொல்கிறார்.
3. அவருடைய எதிர்கால வருகையின் நிச்சயத்தை இயேசு எவ்வாறு விளக்கினார்?
3 அடுத்ததாக இயேசு சொல்வது, அவருடைய எதிர்கால வருகையின் நிச்சயத்தை விளங்கச்செய்கிறது. அதிகாரப்பூர்வமாக அவர் குறிப்பிடுகிறார்: “இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (மத்தேயு 16:28) ஆறு நாட்கள் கழித்து இந்த வார்த்தைகள் நிறைவேறுகின்றன. இயேசு மறுரூபமான மகத்தான காட்சி அவருடைய நெருங்கிய சீஷர்களுக்கு வியப்பூட்டியது. அவர்கள் இயேசுவின் முகம் சூரியனைப்போல் பிரகாசிப்பதையும் அவருடைய உடை மின்னும் வெண்மையாகவும் இருப்பதை நிஜமாகக் காண்கின்றனர். அந்த மறுரூபமாதல் கிறிஸ்துவின் மகிமைக்கும் ராஜ்யத்திற்கும் ஒரு முற்காட்சியாக இருந்தது. ராஜ்ய தீர்க்கதரிசனங்களின் என்னே ஒரு பலப்படுத்தும் உறுதியளிப்பு! சீஷர்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருப்பதற்கு என்னே ஒரு வல்லமையான தூண்டுவிப்பு!—2 பேதுரு 1:16-19.
நாம் தெளிந்த புத்தியுடன் இருப்பது ஏன் அவசரமானது
4. அவருடைய வருகையைக்குறித்து கிறிஸ்தவர்கள் ஏன் ஆவிக்குரியவிதத்தில் விழிப்புள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
4 ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குப்பின், இயேசு ஒலிவ மலையின்மேல் உட்கார்ந்துகொண்டு, மறுபடியும் தம்முடைய சீஷர்களுடன் ஒரு தனிப்பட்ட சம்பாஷணையைக் கொண்டிருந்தார். அவர்கள் எருசலேம் நகரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கையில், அவருடைய எதிர்கால வந்திருத்தலுக்கான அடையாளம் எப்படியிருக்கும் என்று விவரித்தப் பின்னர் எச்சரிக்கிறார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” அவரைப் பின்பற்றுபவர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டும், ஏனென்றால் அவருடைய வருகையின் சமயம் தெரியாது. அவர்கள் அதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.—மத்தேயு 24:42.
5. விழிப்புணர்ச்சிக்கான தேவையை எவ்வாறு விளக்கலாம்?
5 தம்முடைய வருகையின் மாதிரியில், கர்த்தர் ஒரு திருடனைப் போன்றிருக்கிறார். அவர் தொடர்ந்து சொல்கிறார்: “திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.” (மத்தேயு 24:43) ஒரு திருடன் தான் எப்போது வருவான் என்பதை வீட்டுக்காரரிடம் அறிவிப்பதில்லை; அவனுடைய முக்கியமான ஆயுதம் எதிர்பாராமல் வருவதே. ஆகவே, வீட்டுக்காரர் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். என்றாலும், உண்மையுள்ள கிறிஸ்தவனுக்கு, தளராத விழிப்புணர்வு ஏதாவது ஓர் அச்ச உணர்ச்சியின் காரணமாக அல்ல. மாறாக, அது சமாதானமான ஆயிரவருடத்தைக் கொண்டுவரும்படி, கிறிஸ்து மகிமையுடன் வரும் ஆவலான எதிர்பார்ப்பால் தூண்டப்பட்டதாகும்.
6. நாம் ஏன் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
6 எல்லா காவலின் மத்தியிலும், அவர் வருவதற்கான சரியான நாளை எவராலும் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாது. இயேசு சொல்கிறார்: “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” (மத்தேயு 24:44) எனவேதான் தெளிந்த புத்திக்கான தேவை இருக்கிறது. ஒரு கிறிஸ்தவன், ஒரு குறிப்பிட்ட நாளில் கிறிஸ்து வரமாட்டார் என்று நினைப்பதாக இருந்தால், ஒருவேளை அதுதானே அவர் வந்துவிடும் நாளாக இருக்கக்கூடும்! சந்தேகமின்றி, கடந்தகாலத்தில் நல்லெண்ணமுள்ள உண்மை கிறிஸ்தவர்கள் முடிவு எப்போது வரும் என்பதை முன்னறிவிக்க உண்மையான முயற்சி எடுத்திருக்கின்றனர். இருப்பினும், இயேசுவின் எச்சரிப்பு திரும்பவும் திரும்பவும் உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கிறது: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.”—மத்தேயு 24:36.
7. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருப்பதற்கு, நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும்?
7 ஆக, நாம் என்ன முடிவுக்கு வரலாம்? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருப்பதற்கு, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு சமீபத்தில் நிகழும் என்று எப்போதுமே நம்பிக்கொண்டு வாழவேண்டும்.
8. கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே கிறிஸ்தவர்களுக்கு ஓர் அடையாளக்குறியாக இருந்திருப்பது எது?
8 உலகப்பிரகாரமான சரித்திராசிரியர்களும் பைபிள் அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறபடி, எப்போதுமே இந்த மனநிலை கிறிஸ்தவர்களின் ஓர் அடையாளக்குறியாக இருந்திருக்கிறது. உதாரணமாக, மொழிபெயர்ப்பாளரின் புதிய ஏற்பாடு (The Translator’s New Testament) என்பதன் பதிப்பாசிரியர்கள், அவர்களுடைய சொல்லகராதியில், “நாள்” என்ற வார்த்தையின்கீழ் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்: “பு[திய] ஏ[ற்பாடு] காலங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், இந்த உலகம் தன்னுடைய எல்லா தீமை மற்றும் பொல்லாங்குடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இயேசு எல்லா மனிதவர்க்கத்தையும் நியாயந்தீர்க்க பூமிக்குத் திரும்பி, சமாதானத்துக்குரிய ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கி தம்முடைய கர்த்தத்துவத்தை முழு உலகின்மேலும் செலுத்தும் அந்த நாளை (அதாவது அந்தச் சமயத்தை) எதிர்பார்த்துக்கொண்டே வாழ்ந்தனர்.” என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “கிறிஸ்தவத்தின் தனித்தன்மை வாய்ந்த உலகளாவிய விஸ்தரிப்பு, சமீபத்தில் நிகழும் கிறிஸ்துவின் வருகைக்கான எதிர்பார்ப்பு என்ற உருவில் இருக்கும் முடிவு காலத்தைப்பற்றிய கிறிஸ்தவ எதிர்பார்ப்புடன் நேரடியான தொடர்புடையதாக இருக்கிறது. முடிவு காலத்தைப்பற்றிய கிறிஸ்தவ எதிர்பார்ப்பு, கடவுளுடைய ராஜ்யத்திற்கான வெறும் ஒரு செயலற்ற விருப்பமாக ஒருபோதும் இருக்கவில்லை.”
தெளிந்த புத்தியுடன் இருப்பது என்றால் என்ன
9. மேசியாவைக்குறித்த பேதுருவின் சில எதிர்பார்ப்புகள் தவறாக இருந்தபோதிலும், அவர் ஏன் நம்பிக்கை உள்ளவராக இருக்க முடிந்தது?
9 அப்போஸ்தலன் பேதுரு, இயேசு தம்முடைய நெருங்கிய சீஷர்களிடம் கொண்டிருந்த நெருக்கமான சம்பாஷணைகளுக்குச் சுமார் 30 வருடங்களுக்குப் பின்னும் முடிவு வரும்படி காத்திருந்ததில் சோர்ந்து போகவில்லை. அவர் மேலும் அவருடைய உடன் சீஷர்களின், மேசியாவைப்பற்றிய ஆரம்ப எதிர்பார்ப்புகள் தவறானதாக இருந்தபோதிலும், அந்த நம்பிக்கை நிறைவேறும் என்பதற்கு யெகோவாவின் அன்பும் வல்லமையும் உத்தரவாதமளித்தன என்பதில் அவர் தொடர்ந்து உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். (லூக்கா 19:11; 24:21; அப்போஸ்தலர் 1:6; 2 பேதுரு 3:9, 10) “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று,” என்று அவர் சொல்லுகையில், கிரேக்க வேத எழுத்துக்கள் முழுவதிலும் ஒரு குறிப்பை நிலையாகத் தென்பட செய்கிறார். பின்னர் தன்னுடைய உடன் கிறிஸ்தவர்களை உந்துவிக்கிறார்: “ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.”—1 பேதுரு 4:7.
10 “தெளிந்த புத்தி”யுடன் இருப்பது, ஓர் உலகப்பிரகாரமான நோக்குநிலையிலிருந்து அறிவுக்கூர்மையாக இருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. யெகோவா சொல்கிறார்: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்.” (1 கொரிந்தியர் 1:19) பேதுரு பயன்படுத்திய வார்த்தை “அறிவுத்தெளிவுடைய மனநிலை”யை அர்த்தப்படுத்தலாம். இந்த ஆவிக்குரிய அறிவுத்தெளிவுடைய நிலை நம்முடைய வணக்கத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே, மனதில் சமநிலையுடன் இருப்பதால், நாம் காரியங்களை யெகோவாவின் சித்தத்தோடுள்ள அவற்றிற்குரிய சரியான இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்; எந்தக் காரியங்கள் முக்கியமானவை, எவை முக்கியமற்றவை என்று புரிந்துகொள்கிறோம். (மத்தேயு 6:33, 34) முடிவு சமீபமாய் இருக்கிறபோதிலும், மனம்போன போக்கில் அமைந்த வாழ்க்கை பாணியால் நாம் கொண்டுச்செல்லப்பட மாட்டோம்; நாம் வாழும் காலப்பகுதியைக்குறித்து கவலையற்றவர்களாயும் இருக்கமாட்டோம். (மத்தேயு 24:37-39-ஐ ஒப்பிடவும்.) மாறாக, நாம் நம்முடைய எண்ணம், நோக்குநிலை, நடத்தையில் மிதமான மற்றும் சமநிலையான உணர்வினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம்; இது முதலில் கடவுளிடம் (“ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்”), பின்னர் நம்முடைய அயலாரிடம் (“ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்”) வெளிக்காட்டப்படுகிறது.—1 பேதுரு 4:7, 8.
11. (அ) “[நம்முடைய] மனதை உந்துவிக்கும் சக்தி புதுப்பிக்கப்”படுவது என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) ஒரு புதிய மன சக்தி, நாம் நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்கு எவ்வாறு நமக்கு உதவுகிறது?
11 தெளிந்த புத்தியுடன் இருப்பது, “[நம்முடைய] மனதை உந்துவிக்கும் சக்தியில் . . . புதுப்பிக்கப்”படுவதை உட்படுத்துகிறது. (எபேசியர் 4:23) ஏன் புதுப்பிக்கப்பட வேண்டும்? நாம் அபூரணத்தை சுதந்தரித்து, பாவமுள்ள சூழல்களில் வாழ்வதால் நம்முடைய மனம் ஆவிக்குரிய தன்மைக்கு எதிராக இருக்கும் ஒரு மனச்சாய்வால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. அந்தச் சக்தி நம்முடைய எண்ணங்களையும் மனச்சாய்வுகளையும் பொருள்சம்பந்தமான, தன்னலமான திசைக்குத் தொடர்ந்து தள்ளுகிறது. ஆகவே, ஒருவர் கிறிஸ்தவராகும்போது, மனமுவந்து சுய-தியாகத்தைச் செய்யும் ஒரு சரியான திசைக்கு, ஆவிக்குரிய திசைக்கு, அவருடைய எண்ணங்களைக் கொண்டுச்செல்லக்கூடிய ஒரு புதிய சக்தி, அல்லது மேலோங்கி நிற்கும் மனநிலை, தேவைப்படுகிறது. இவ்வாறு, உதாரணத்திற்கு, கல்வி, வாழ்க்கைத்தொழில், வேலை, சிற்றின்பம், பொழுதுபோக்கு, உடை பாணி, அல்லது எதுவாக இருந்தாலும், அவற்றில் ஒரு தெரிவைச் செய்யும்படி கேட்கப்பட்டால், அவருடைய முதல் மனச்சாய்வு, ஒரு மாம்சப்பிரகாரமான, தன்னல நோக்குநிலைக்கு மாறாக ஓர் ஆவிக்குரிய நோக்குநிலையிலிருந்து அந்தக் காரியத்தைக் கருதுவதாக இருக்கும். இந்தப் புதிய மனநிலை, தெளிந்த புத்தியுடனும் முடிவு சமீபமாய் இருக்கிறது என்ற விழிப்புணர்ச்சியுடனும் காரியங்களைத் தீர்மானிப்பதை எளிதாக்குகிறது.
12. நாம் எவ்வாறு ‘விசுவாசத்தில் ஆரோக்கியமாக’ நிலைத்திருக்க முடியும்?
12 தெளிந்த புத்தியுடன் இருப்பது, நாம் நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. நாம் எவ்வாறு ‘விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாய்’ இருக்க முடியும்? (தீத்து 2:2) நம்முடைய மனதை சரியான விதமான உணவால் நிரப்ப வேண்டும். (எரேமியா 3:15) கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செயல்பாட்டால் ஆதரிக்கப்பட்ட கடவுளுடைய சத்திய வார்த்தையாலாகிய உணவை ஒரேசீரான முறையில் உட்கொள்வது, நம்முடைய ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொள்ள நமக்கு உதவி செய்யும். ஆகையால், ஒழுங்கான தனிப்பட்ட படிப்பும், அதோடு வெளி ஊழியம், ஜெபம், மற்றும் கிறிஸ்தவ கூட்டுறவும் அத்தியாவசியமானது.
தெளிந்த புத்தி நம்மை எப்படிப் பாதுகாக்கிறது
13. மடத்தனமான தவறுகளைச் செய்வதிலிருந்து, தெளிந்த புத்தி நம்மை எப்படி பாதுகாக்கிறது?
13 நம்முடைய நித்திய ஜீவனையே இழக்கக்கூடிய அளவுக்கு ஒரு மடத்தனமான தவறை செய்வதிலிருந்து தெளிந்த புத்தி நம்மைப் பாதுகாக்கிறது. இது எவ்வாறு சாத்தியமாக இருக்கிறது? பவுல் அப்போஸ்தலன் “மனதின் பிரமாணத்”தைப்பற்றி பேசுகிறார். விசுவாசத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு, அந்த மனதின் பிரமாணம் அவர் சந்தோஷப்படக்கூடிய ஒன்றால், அதாவது “தேவனுடைய நியாயப்பிரமாணத்தால்” ஆட்கொள்ளப்படுகிறது. “பாவப்பிரமாணம்” மனதின் பிரமாணத்திற்கு விரோதமாக போரிடுகிறது என்பது உண்மைதான். என்றபோதிலும், யெகோவாவின் துணையோடு ஒரு கிறிஸ்தவன் வெற்றி பெற முடியும்.—ரோமர் 7:21-25.
14, 15. (அ) மனதைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த இரண்டு செல்வாக்குகள் போராடுகின்றன? (ஆ) எவ்வாறு நாம் மனதின் போராட்டத்தை வெல்லக்கூடும்?
14 சுயவிருப்பங்களில் கவனத்தைச் செலுத்தும் ஒரு வாழ்க்கைப்பாணியை உடைய பாவமுள்ள மாம்சத்தால் ஆட்கொள்ளப்பட்ட மனதிற்கும், யெகோவாவின் சேவையில் சுய-தியாக வாழ்க்கைக்குக் கவனத்தை செலுத்தும் கடவுளுடைய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனதிற்கும் ஒரு கூர்மையான வேறுபாட்டை பவுல் தொடர்ந்து காண்பிக்கிறார். ரோமர் 8:5-7-ல் பவுல் எழுதுகிறார்: “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.”
15 பின்னர் பவுல், 11-ம் வசனத்தில், பரிசுத்த ஆவியுடன் ஒத்துழைக்கும் மனது எப்படி அந்த போரை வெல்கிறது என்று விவரிக்கிறார்: “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
16. தெளிந்த புத்தி என்ன கவர்ச்சிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது?
16 ஆகவே, தெளிந்த புத்தியுடன் இருப்பதன்மூலம், இந்த உலகத்தின் எங்கும் வியாபித்திருக்கும் கவர்ச்சிகளால் நாம் வஞ்சிக்கப்படுவதில்லை; அவை எல்லா வகையான இன்பங்கள், பொருளாதார காரியங்கள், மற்றும் பாலின தவறான நடத்தைகளிலும் அளவிடமுடியாத சுயவிருப்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய தெளிந்த புத்தி “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று சொல்லி அதன் அழிவுக்கேதுவான விளைவுகளைத் தப்பித்துக்கொள்ள வைக்கின்றன. (1 கொரிந்தியர் 6:18) நம்முடைய தெளிந்த மனநிலை, ராஜ்ய அக்கறைகளை நாம் முதலில் வைப்பதற்கு நம்மை உந்துவிக்கும்; யெகோவாவிடம் நாம் கொண்டிருக்கும் உறவை பலவீனப்படுத்தும் ஓர் உலகப்பிரகாரமான வாழ்க்கைத்தொழிலால் நாம் கவர்ச்சியூட்டப்படும்போது, நம்முடைய சிந்தனையை அது காக்கும்.
17. பொருளாதார கடமைகளை எதிர்ப்பட்டபோது, ஒரு பயனியர் சகோதரி எவ்வாறு தெளிந்த புத்தியைக் காண்பித்தாள்?
17 உதாரணமாக, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு வெப்பமண்டல நாட்டில், ராஜ்ய அக்கறைகளை முதலாவதாகத் தன் மனதில் கொண்டிருந்த ஓர் இளம் சகோதரி இருக்கிறாள். அவள் முழு நேர ஊழியத்திற்காக அன்பை வளர்த்துக்கொண்டாள். அந்த நாட்டில் பெரும்பான்மையான வேலைகள் ஆறு அல்லது ஏழு நாட்கள் முழுநேர வேலையைத் தேவைப்படுத்துகின்றன. அவள் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றபின்பு, யெகோவாவின் சாட்சியாக இல்லாத அவளுடைய தந்தை, குடும்பத்திற்காக அதிக பணத்தை அவள் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பயனியர் செய்யவேண்டுமென்ற பலமான விருப்பம் இருந்த காரணத்தால், அவள் ஒரு பகுதிநேர வேலையைக் கண்டுபிடித்து, பயனியர் சேவையைத் துவங்கினாள். இது அவளுடைய தந்தையைக் கோபப்படுத்தியது; அவர் அவளுக்குச் சொந்தமான எல்லா பொருட்களையும் தெருவில் எறிந்துவிடப்போவதாக அச்சுறுத்தினார். சூதாடுவதன் காரணமாக, அவர் பேரளவாகக் கடன்பட்டிருந்தார்; அவருடைய கடன்களை மகள் அடைத்துவிடவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அவளுடைய தம்பி ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான்; ஆனால் கடன் காரணமாக அவனுடைய படிப்புக் கட்டணத்தைக் கட்டுவதற்குப் பணம் இல்லை. அவனுக்கு அவள் உதவி செய்தால், வேலை கிடைத்தபின் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதாக அவளுடைய தம்பி வாக்களித்தான். தம்பிக்கான அன்பிற்கும் பயனியர் சேவைக்கான அன்பிற்கும் மத்தியில் அவளுடைய இருதயம் தவித்துக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தைக்குறித்து கவனமாகச் சிந்தித்தப்பின், அவள் வேறு வேலையைத் தேடிக்கொண்டு, பயனியர் சேவையைத் தொடர்வதாகத் தீர்மானித்தாள். அவளுடைய ஜெபத்திற்குப் பதிலாக, ஒரு நல்ல வேலை கிடைத்தது; அதன்மூலம், அவளுடைய குடும்பத்திற்கும் தம்பிக்கும் பொருளாதார உதவி செய்யவதோடு மட்டுமல்லாமல், அவளுடைய முதல் அன்பாகிய பயனியர் சேவையைத் தொடரவும் முடிந்தது.
தெளிந்த புத்தியைக் காத்துக்கொள்ள யெகோவாவின் உதவியைத் தேடுங்கள்
18. (அ) ஏன் சில மக்கள் இருதயத்தில் சோர்வுற்றவர்களாக உணரக்கூடும்? (ஆ) இருதயத்தில் சோர்வுற்றவர்களுக்கு என்ன வசனங்கள் ஆறுதலளிக்கக்கூடும்?
18 கிறிஸ்துவைப் பின்பற்றும் சிலர் தெளிந்த புத்தியைக் காத்துக்கொள்வதைக் கடினமாக உணரக்கூடும். அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை நீடித்துக்கொண்டிருப்பதால் அவர்களுடைய பொறுமை குறைந்துகொண்டிருக்கக்கூடும். அதைக்குறித்து அவர்கள் இருதயத்தில் சோர்வாக உணரக்கூடும். இருந்தாலும், முடிவு வரும். யெகோவா அதை வாக்களிக்கிறார். (தீத்து 1:3) அதுபோலத்தான் அவருடைய வாக்களிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸும் வரும். யெகோவா அதை உறுதியளிக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:1-5) புதிய உலகம் நிச்சயமாக வரும்போது, தங்கள் தெளிந்த புத்தியைக் காத்துக்கொண்ட அனைவருக்கும் ஒரு “ஜீவவிருட்சம்” இருக்கும்.—நீதிமொழிகள் 13:12.
19. தெளிந்த புத்தியை எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்?
19 தெளிந்த புத்தியை நாம் எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்? யெகோவாவின் உதவியை நாடுங்கள். (சங்கீதம் 54:4) அவரோடு நெருங்கி இருங்கள். யெகோவா நம்முடைய நெருக்கத்தை விரும்புகிறார் என்பதில் நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்,” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதுகிறார். (யாக்கோபு 4:8) பவுல் சொல்கிறார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:4-7) இந்த அழிந்துபோகும் காரிய ஒழுங்குமுறையின் பாரங்கள் இனிமேலும் சுமப்பதற்கு மிகவும் கடினமாகத் தோன்றும்போது, அவற்றை யெகோவாவின்மேல் எறிந்துவிடுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார்.—சங்கீதம் 55:22.
20. ஒன்று தீமோத்தேயு 4:10-ன்படி நாம் என்ன வழியைத் தொடர வேண்டும்?
20 ஆம், முடிவு அருகாமையில் இருக்கிறது, ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள்! அது 1,900 வருடங்களுக்குமுன் நல்ல ஆலோசனையாக இருந்தது; இன்று அத்தியாவசியமான ஆலோசனையாக இருக்கிறது. யெகோவா நம்மை அவருடைய புதிய உலகிற்குள் வழிநடத்திச் செல்கையில் நம்முடைய தெளிவான மனதின் அறிவுத்திறன்களை அவரைத் துதிப்பதற்குத் தொடர்ந்து நாம் பயன்படுத்துவோமாக.—1 தீமோத்தேயு 4:10.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ தெளிந்த புத்தி என்றால் என்ன?
◻ தெளிந்த புத்தியுடன் இருப்பது ஏன் அவசரமானது?
◻ நம்முடைய மனதை உந்துவிக்கும் சக்தி எவ்வாறு புதுப்பிக்கப்படக்கூடும்?
◻ நம்முடைய மனங்களில் என்ன தொடர்ச்சியான போராட்டத்தைப் போராட வேண்டும்?
◻ தெளிந்த புத்தியை நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
2. எதிர்காலத்திலிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளைப்பற்றி அப்போஸ்தலர்களிடம் பேசியது யார், மேலும் என்ன சூழ்நிலைமைகளின்கீழ் அவர்கள் இதைப்பற்றிக் கற்றுக்கொண்டனர்?
10. (அ) தெளிந்த புத்தியுடன் இருப்பது என்றால் என்ன? (ஆ) கடவுளுடைய சித்தத்தின்படி காரியங்களை அவற்றிற்குரிய சரியான நோக்குநிலையில் வைத்துப்பார்ப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
ஜெபத்தில் கடவுளை நெருக்கமாக அணுகுதல் தெளிந்த புத்தியைக் காத்துக்கொள்ள நமக்கு உதவி செய்கிறது
[பக்கம் 17-ன் படம்]
தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருப்பதன்மூலம், நாம் இந்த உலகின் கவர்ச்சிகளால் வஞ்சிக்கப்பட மாட்டோம்