உண்மையுள்ள நிர்வாகியும் அதன் ஆளும் குழுவும்
“தன் வீட்டுப் பணியாளர்களுக்குப் போதுமான உணவை ஏற்ற வேளையில் அளித்து வருவதற்காக எஜமான் நியமிக்கப்போகிற உண்மையும் விவேகமும் உள்ள நிர்வாகி யார்?”—லூக். 12:42.
1, 2. கடைசி நாட்களுக்கான கூட்டு அடையாளத்தைப் பற்றி இயேசு சொன்னபோது என்ன முக்கிய கேள்வியைக் கேட்டார்?
கடைசி நாட்களுக்கான கூட்டு அடையாளத்தைப் பற்றி இயேசு சொன்னபோது, “ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?” என்ற கேள்வியைக் கேட்டார். பின்பு, அந்த அடிமை உண்மையுடன் நடந்துகொள்வார் என்பதால் எஜமானரின் உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள நியமிக்கப்படுவார் என்று சொன்னார்.—மத். 24:45-47.
2 பல மாதங்களுக்கு முன்பு, இதேபோன்ற ஒரு கேள்வியை இயேசு கேட்டிருந்தார். (லூக்கா 12:42-44-ஐ வாசியுங்கள்.) அக்கேள்வியில் அடிமையை “நிர்வாகி” என்றும் ‘வீட்டாரை’ ‘வீட்டுப் பணியாளர்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். நிர்வாகி என்பவர் வீட்டை மேற்பார்வை செய்பவர், வேலைக்காரர்களை நிர்வகிப்பவர். அதேசமயத்தில், நிர்வாகியும் ஒரு வேலைக்காரர்தான். இயேசு குறிப்பிட்ட அந்த அடிமை அல்லது நிர்வாகி யார்? அவர் எப்படி ‘ஏற்ற வேளையில் உணவை’ அளிக்கிறார்? ஆன்மீக உணவு யார் மூலமாக அளிக்கப்படுகிறதென நாம் அனைவருமே தெரிந்துகொள்வது அவசியம்.
3. (அ) இயேசு குறிப்பிட்ட ‘அடிமை’ யாரைக் குறிப்பதாகக் கிறிஸ்தவமண்டல உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்? (ஆ) “நிர்வாகி,” அல்லது “அடிமை” யார், ‘வீட்டுப் பணியாளர்கள்,’ அல்லது ‘வீட்டார்’ யார்?
3 இயேசு குறிப்பிட்ட அடிமை, சர்ச்சுகளில் பொறுப்புகள் வகிப்போரைக் குறிப்பதாகக் கிறிஸ்தவமண்டல உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால், அந்த உவமையில் வரும் ‘எஜமானராகிய’ இயேசு, கிறிஸ்தவமண்டலத்தின் எல்லாப் பிரிவுகளிலும் ஏராளமான அடிமைகள் இருப்பார்களெனச் சொல்லவில்லை. மாறாக, தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள ஒரேவொரு ‘அடிமையைத்தான்’ அல்லது ‘நிர்வாகியைத்தான்’ நியமிக்கப்போவதாகச் சொன்னார். ஆகவே, இந்தப் பத்திரிகை ஏற்கெனவே பலமுறை விளக்கியிருக்கிறபடி, அந்த நிர்வாகி பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அடங்கிய ‘சிறு மந்தையை’ ஒட்டுமொத்தமாக அல்லது ஒரு தொகுதியாகக் குறிக்க வேண்டும். லூக்கா எழுதிய பதிவின்படி, சிறு மந்தையைப் பற்றி இயேசு அப்போதுதான் சொல்லியிருந்தார். (லூக். 12:32) ‘வீட்டுப் பணியாளர்கள்,’ அல்லது ‘வீட்டார்,’ எனப்படுகிறவர்களும் இதே தொகுதியினர்தான், ஆனால் இந்தப் பட்டப்பெயர்கள் தனிப்பட்டவர்களாக அவர்கள் வகிக்கும் பங்கைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. அப்படியென்றால், ஏற்ற வேளையில் ஆன்மீக உணவளிப்பதில் இந்த அடிமை வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு அங்கத்தினருக்கும் பங்கு இருக்கிறதா? என்ற ஆர்வத்தைத் தூண்டும் கேள்வி எழும்புகிறது. இதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறதென நாம் கவனமாக ஆராய்ந்தால் பதிலைத் தெரிந்துகொள்வோம்.
யெகோவாவின் பூர்வகால ஊழியன்
4. பூர்வகால இஸ்ரவேல் தேசத்தாரை யெகோவா எப்படி அழைத்தார், அவர்கள் சம்பந்தமாக நாம் கவனிக்க வேண்டிய குறிப்பு என்ன?
4 யெகோவா தம் மக்களை, அதாவது பூர்வகால இஸ்ரவேல் தேசத்தாரை, ஒட்டுமொத்தமாக ஊழியன் என அழைத்தார். “நீங்கள் [பன்மை] என் சாட்சிகள் [பன்மை]” என்றும், “நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் [ஒருமை] நீங்களே” என்றும் அவர் சொன்னார். (ஏசா. 43:10, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, அந்தத் தேசத்தார் அனைவரும் ஊழியன் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். என்றாலும், கவனிக்க வேண்டிய குறிப்பு என்னவென்றால், அந்தத் தேசத்தாருக்குக் கற்பிக்கும் பொறுப்பு ஆலய குருமார்களுக்கும் குருமாரல்லாத லேவியர்களுக்கும் மட்டுமே இருந்தது.—2 நா. 35:3; மல். 2:7.
5. என்ன பெரிய மாற்றம் நிகழுமென இயேசு சொன்னார்?
5 அப்படியானால், இஸ்ரவேல் மக்களைத்தான் அடிமை என இயேசு குறிப்பிட்டாரா? இல்லை. ஏனென்றால், இயேசு தம் காலத்து யூதர்களிடம், “கடவுளுடைய அரசாங்கத்தில் இருக்கிற வாய்ப்பு உங்களிடமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகிற வேறு மக்களிடம் கொடுக்கப்படும்” என்று சொல்லியிருந்தார். (மத். 21:43) நிச்சயமாகவே, ஒரு மாற்றம் நிகழவிருந்தது. யெகோவா ஒரு புதிய தேசத்தை, அதாவது வேறு மக்களை, பயன்படுத்தவிருந்தார். என்றாலும், ஆன்மீக உணவளிக்கும் வேலையைப் பொறுத்ததில், இயேசுவின் உவமையில் வரும் அடிமை, கடவுளுடைய ‘ஊழியனான’ பூர்வகால இஸ்ரவேலின் மாதிரியைப் பின்பற்றுகிறது.
உண்மையுள்ள அடிமையின் ஆரம்பம்
6. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று எந்தப் புதிய தேசம் பிறந்தது, யார் அந்தத் தேசத்தின் அங்கத்தினர்களானார்கள்?
6 “கடவுளுடைய இஸ்ரவேலர்” என அழைக்கப்படும் அந்தப் புதிய தேசம் அடையாளப்பூர்வ இஸ்ரவேலரால் ஆனது. (கலா. 6:16; ரோ. 2:28, 29; 9:6) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று கடவுளுடைய சக்தி பொழியப்பட்டபோதுதான் அந்தப் புதிய தேசம் பிறந்தது. அதுமுதல், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் அந்தத் தேசத்தின் அங்கத்தினர்களானார்கள்; அந்தத் தேசம்தான் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவால் நியமிக்கப்பட்ட அடிமை வகுப்பாக ஆனது. அந்தத் தேசத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவருக்கும், நற்செய்தியைப் பிரசங்கித்து சீடர்களை உருவாக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. (மத். 28:19, 20) ஆனால், அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஏற்ற வேளையில் ஆன்மீக உணவளிப்பார்களா? பைபிளிலுள்ள வசனங்கள் இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளிக்கின்றன எனப் பார்க்கலாம்.
7. ஆரம்பத்தில் அப்போஸ்தலர்களின் முக்கிய வேலை எதுவாக இருந்தது, கூடுதலான என்ன பொறுப்பைப் பிற்பாடு அவர்கள் பெற்றார்கள்?
7 இயேசு தம்முடைய 12 அப்போஸ்தலர்களை நியமித்தபோது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதே அவர்களுடைய முக்கிய வேலையாக இருந்தது. (மாற்கு 3:13-15-ஐ வாசியுங்கள்.) இந்த வேலை, அப்போஸ்டலோஸ் என்ற கிரேக்க வார்த்தையின் [“அனுப்பப்பட்டவர்கள்” எனும் பொருளுடைய வினைச்சொல்லிலிருந்து வந்த கிரேக்க வார்த்தையின்] அடிப்படை அர்த்தத்திற்கு இசைவாக இருந்தது. என்றாலும் காலப்போக்கில், கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்படவிருந்த சமயத்தில், அப்போஸ்தலர்கள் கூடுதலாக ‘கண்காணிக்கும் பொறுப்பை’ பெற்றார்கள்.—அப். 1:20-26.
8, 9. (அ) இயேசுவின் 12 அப்போஸ்தலர்கள் எதை முக்கியமானதாகக் கருதினார்கள்? (ஆ) வேறு யாருக்கும் கூடுதலான பொறுப்புகள் தரப்பட்டதை ஆளும் குழு அங்கீகரித்தது?
8 அந்த 12 அப்போஸ்தலர்கள் எதை முக்கியமானதாகக் கருதினார்கள்? பெந்தெகொஸ்தே தினத்திற்குப்பின் நடந்த சம்பவங்கள் இதற்குப் பதிலளிக்கின்றன. விதவைகளுக்கு அன்றாட உணவு வழங்குவது சம்பந்தமாக வாக்குவாதம் எழும்பியபோது, அந்த 12 அப்போஸ்தலர்களும் மற்ற சீடர்களை ஒன்றுகூட்டி, “நாங்கள் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் வேலையை விட்டுவிட்டு உணவு வழங்கும் வேலையில் ஈடுபடுவது எங்களுக்குச் சரியாகத் தோன்றவில்லை” என்று சொன்னார்கள். (அப்போஸ்தலர் 6:1-6-ஐ வாசியுங்கள்.) பின்பு, உணவு வழங்கும் ‘அந்த அவசியமான வேலையை’ மேற்பார்வை செய்வதற்கு ஆன்மீகத் தகுதிபெற்ற வேறு சகோதரர்களை நியமித்தார்கள்; இதனால், ‘கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும்’ வேலையில் அப்போஸ்தலர்களால் முழு கவனம் செலுத்த முடிந்தது. இந்த ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதித்தார்; அதன் காரணமாக, “கடவுளுடைய வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது; எருசலேமில் சீடர்களின் எண்ணிக்கையும் அதிகமதிகமாகப் பெருகிக்கொண்டே வந்தது.” (அப். 6:7) ஆகவே, ஆன்மீக உணவளிக்கும் முக்கியப் பொறுப்பை அப்போஸ்தலர்களே பெற்றிருந்தார்கள்.—அப். 2:42.
9 காலப்போக்கில், மற்றவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட்டன. பவுலும் பர்னபாவும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் அந்தியோகியா சபையிலிருந்து மிஷனரிகளாக அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந்தப் பன்னிருவரைச் சேர்ந்தவர்களாக இல்லாதபோதிலும் அப்போஸ்தலர்களென அழைக்கப்பட்டார்கள். (அப். 13:1-3; 14:14; கலா. 1:19) எருசலேமிலிருந்த ஆளும் குழு அவர்களுடைய நியமிப்பை அங்கீகரித்தது. (கலா. 2:7-10) கொஞ்சக் காலத்திற்குள்ளாகவே, ஆன்மீக உணவு வழங்கும் வேலையில் பவுலுக்கு ஒரு பங்கு கிடைத்தது. அவர் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தன்னுடைய முதல் கடிதத்தை எழுதினார்.
10. முதல் நூற்றாண்டில், பரலோக நம்பிக்கைகொண்ட கிறிஸ்தவர்கள் அனைவருமே ஆன்மீக உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டார்களா? விளக்குங்கள்.
10 என்றாலும், பரலோக நம்பிக்கைகொண்ட கிறிஸ்தவர்கள் அனைவருமே பிரசங்க வேலையை மேற்பார்வை செய்வதிலும் ஆன்மீக உணவைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டார்களா? இல்லை. “எல்லாருமே அப்போஸ்தலர்களா? எல்லாருமே தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே அற்புதச் செயல்களைச் செய்கிறவர்களா? . . . இல்லையே” என்றார் அப்போஸ்தலன் பவுல். (1 கொ. 12:29, 30) பரலோக நம்பிக்கைகொண்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் பிரசங்க வேலையில் ஈடுபட்டபோதிலும், அவர்களில் வெகு சிலரே, எட்டு ஆண்களே, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 27 புத்தகங்களை எழுதப் பயன்படுத்தப்பட்டார்கள்.
நவீன காலங்களில் உண்மையுள்ள அடிமை
11. அடிமை வகுப்பார் என்ன ‘உடமைகளை’ கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்?
11 முடிவு காலத்தில்கூட உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பு ஒன்று பூமியில் இருக்குமென மத்தேயு 24:45-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிற இயேசுவின் வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் ‘பெண்ணின் சந்ததியில் மீந்திருக்கிறவர்கள்’ என வெளிப்படுத்துதல் 12:17 குறிப்பிடுகிறது. மீந்திருக்கிறவர்கள் ஒரு தொகுதியாக, பூமியிலுள்ள கிறிஸ்துவின் உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையுள்ள நிர்வாகியாகிய அவர்களிடம் ஒப்படைக்கப்படும் “உடமைகள்” நம் எஜமானரின் பூமிக்குரிய ஆஸ்திகளைக் குறிக்கின்றன; அவரது அரசாங்கத்தின் பூமிக்குரிய குடிமக்களும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருள் வளங்களும் அந்த ஆஸ்திகளில் அடங்கும்.
12, 13. ஒரு கிறிஸ்தவர் தனக்குப் பரலோக நம்பிக்கை இருக்கிறதா என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?
12 ஒரு கிறிஸ்தவர் தனக்குப் பரலோக நம்பிக்கை இருக்கிறதா என்றும் அடையாளப்பூர்வ இஸ்ரவேலர்களில் மீந்திருப்போரில் தானும் ஒருவரா என்றும் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கின்றன; தன்னைப் போலவே பரலோக நம்பிக்கை கொண்டிருந்தவர்களிடம் அவர் இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படுகிற அனைவரும் கடவுளுடைய மகன்களாக இருக்கிறார்கள். கடவுளுடைய சக்தி நம்மை அடிமைத்தனத்திற்கு உட்படுத்தி நம்மைப் பயப்படச் செய்வதில்லை; மாறாக, கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு வழிநடத்தி, அவரை ‘அபா,’ அதாவது ‘அப்பா!’ என்று அழைக்க வைக்கிறது. நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது. நாம் பிள்ளைகள் என்றால், வாரிசுகளாகவும் இருப்போம்: உண்மையில், கடவுளுடைய வாரிசுகளாக, கிறிஸ்துவின் சக வாரிசுகளாக இருப்போம்; கிறிஸ்துவோடு சேர்ந்து நாம் பாடுகளை அனுபவித்தால் அவரோடு சேர்ந்து மகிமையையும் பெறுவோம்.”—ரோ. 8:14-17.
13 ஆகவே, அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்டு, பரலோக ‘அழைப்பை’ பெறுகிறார்கள். (எபி. 3:1) அவர்கள் கடவுளிடமிருந்தே அந்த அழைப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் எவ்விதக் கேள்வியோ சந்தேகமோ பயமோ இல்லாமல் உடனடியாக அந்த அழைப்பை ஏற்று கடவுளுடைய மகன்களாக ஆகிறார்கள். (1 யோவான் 2:20, 21-ஐ வாசியுங்கள்.) ஆகவே, அவர்கள் அந்த நம்பிக்கையைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்வது கிடையாது; யெகோவாதான் தமது முத்திரையை அவர்கள்மீது பதிக்கிறார், அதாவது தமது சக்தியை அவர்களுக்கு அருளுகிறார்.—2 கொ. 1:21, 22; 1 பே. 1:3, 4.
சரியான கண்ணோட்டம்
14. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தாங்கள் பெற்றுள்ள அழைப்பை எப்படிக் கருத வேண்டும்?
14 பரலோகத்திற்குச் செல்லக் காத்திருக்கும் இந்தக் கிறிஸ்தவர்கள் தங்களை எப்படிக் கருத வேண்டும்? தங்களுக்கு அற்புதமான அழைப்பு கிடைத்திருப்பதை அவர்கள் அறிந்திருந்தாலும், அது வெறுமனே அழைப்புதான் என்பதை மனதில் வைக்க வேண்டும். பரலோக வாழ்வென்ற பரிசைப் பெற அவர்கள் மரணம்வரை உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க வேண்டும். பின்வருமாறு சொன்ன பவுலைப் போலவே அவர்கள் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும்: “சகோதரர்களே, அதைச் சொந்தமாக்கிக்கொண்டேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனால் ஒரு காரியத்தை நான் செய்கிறேன்: பின்னானவற்றை மறந்து, முன்னானவற்றை எட்டிப்பிடிக்க நாடி, கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் விடுக்கும் பரலோக அழைப்பாகிய பரிசைப் பெறுகிற லட்சியத்தோடு ஓடுகிறேன்.” (பிலி. 3:13, 14) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதியானவர்களாக . . . எப்போதும் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள’ வேண்டும்; அதுவும், “பயத்துடனும் நடுக்கத்துடனும்” அப்படி நடந்துகொள்ள வேண்டும்.—எபே. 4:1, 2; பிலி. 2:12; 1 தெ. 2:12.
15. நினைவு நாள் அனுசரிப்புச் சின்னங்களில் பங்குகொள்வோரை மற்ற கிறிஸ்தவர்கள் எப்படிக் கருத வேண்டும், பரலோக அழைப்பைப் பெற்றவர்கள் தங்களை எப்படிக் கருத வேண்டும்?
15 மறுபட்சத்தில், பரலோக நம்பிக்கை இருப்பதாகச் சொல்லி கிறிஸ்துவின் நினைவு நாள் அனுசரிப்புச் சின்னங்களில் பங்குகொள்ள ஆரம்பிக்கும் ஒருவரை மற்ற கிறிஸ்தவர்கள் எப்படிக் கருத வேண்டும்? அவரை நியாயந்தீர்க்கக் கூடாது. ஏனென்றால், அது அவருக்கும் யெகோவாவுக்கும் இடையிலான விஷயம். (ரோ. 14:12) அதேசமயம், பரலோக அழைப்பை உண்மையிலேயே பெற்றிருக்கிறவர்கள், தங்களுக்குத் தனி மதிப்புமரியாதையை எல்லாரும் கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்குப் பரலோக அழைப்பு கிடைத்திருக்கிறது என்பதற்காக, ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்த அனுபவமுள்ளவர்களையும்விட தங்களுக்கு விசேஷமான புரிந்துகொள்ளுதல் இருப்பதாக நினைப்பதில்லை. (வெளி. 7:9) தங்கள் தோழர்களாகிய ‘வேறே ஆடுகளைவிட’ தாங்கள் அதிகளவில் கடவுளுடைய சக்தியைப் பெற்றிருப்பதாகவும் நினைப்பதில்லை. (யோவா. 10:16) தங்களை விசேஷமானவர்களாக எல்லாரும் நடத்த வேண்டுமென எதிர்பார்ப்பதில்லை; தாங்கள் நினைவு நாள் அனுசரிப்புச் சின்னங்களில் பங்குகொள்கிற காரணத்துக்காக, சபையில் நியமிக்கப்பட்டிருக்கிற மூப்பர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதும் இல்லை.
16-18. (அ) பரலோக நம்பிக்கையுள்ள அனைவருமே புதிய ஆன்மீக சத்தியங்களை வழங்குவதில் ஈடுபடுகிறார்களா? உதாரணம் கொடுங்கள். (ஆ) ஆளும் குழு, பரலோக நம்பிக்கை பெற்றிருப்பதாகச் சொல்கிற அனைவருடைய ஆலோசனையையும் ஏன் கேட்க வேண்டியதில்லை?
16 உலகெங்கும் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு செயல்படுகிறார்களா? அதாவது, புதிய ஆன்மீக சத்தியங்களை வெளிப்படுத்துவதில் அவர்கள் எல்லாருமே ஏதோவொரு விதத்தில் பங்குகொள்கிறார்களா? இல்லை. கிறிஸ்துவின் வீட்டாருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அடிமை வகுப்பார் ஒரு தொகுதியாகப் பெற்றிருப்பது உண்மைதான்; ஆனால், அடிமை வகுப்பைச் சேர்ந்த எல்லா அங்கத்தினர்களும் ஒரேவித பொறுப்புகளையோ நியமிப்புகளையோ பெற்றிருப்பதில்லை. (1 கொரிந்தியர் 12:14-18-ஐ வாசியுங்கள்.) முன்பு குறிப்பிட்ட விதமாக, முதல் நூற்றாண்டில் அவர்கள் எல்லாருமே முக்கியமான வேலையாகிய பிரசங்க வேலையில் ஈடுபட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருசிலர்தான் பைபிளின் புத்தகங்களை எழுதுவதற்கும் கிறிஸ்தவச் சபையைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டார்கள்.
17 இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட நடவடிக்கையை ‘சபை’ எடுப்பதாக சில வசனங்கள் குறிப்பிடுகின்றன. (மத். 18:17) ஆனால் உண்மையில், சபையைப் பிரதிநிதித்துவம் செய்கிற மூப்பர்கள்தான் அந்த நடவடிக்கையை எடுக்கிறார்கள். அவர்கள் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்குமுன் சபையிலுள்ள அனைவருடைய அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை. அவர்கள் தேவராஜ்ய முறைப்படி தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைச் செய்கிறார்கள்; ஆம், அவர்கள் முழு சபையின் சார்பாகவும் செயல்படுகிறார்கள்.
18 அதேபோல், பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களில் வெகு சிலரே அடிமை வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிற பொறுப்பைப் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவாகச் செயல்படுகிறார்கள். இந்தச் சகோதரர்கள், ஊழிய வேலையையும் ஆன்மீக உணவு வழங்கும் வேலையையும் கண்காணிக்கிறார்கள். ஆனால், முதல் நூற்றாண்டைப் போலவே இப்போதும், ஆளும் குழு தீர்மானங்களை எடுப்பதற்குமுன் அடிமை வகுப்பின் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் ஆலோசனை கேட்பதில்லை. (அப்போஸ்தலர் 16:4, 5-ஐ வாசியுங்கள்.) என்றாலும், பரலோக நம்பிக்கையுள்ள சாட்சிகள் அனைவருமே இன்று நடக்கிற முக்கியமான அறுவடை வேலையில் முழுமூச்சாய் ஈடுபடுகிறார்கள். ஒரு தொகுதியாக, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பினர் ஒரே உடலைப் போல் செயல்படுகிறார்கள்; ஆனால் தனிப்பட்ட விதமாக, அதன் உறுப்பினர்கள் பலதரப்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள்.—1 கொ. 12:19-26.
19, 20. ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையையும்’ அதன் ஆளும் குழுவையும் குறித்ததில் திரள் கூட்டத்தார் எப்படிச் சரியான கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள்?
19 இந்த உண்மைகள், பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள திரள் கூட்டத்தாரை என்ன செய்யத் தூண்டுகின்றன? ராஜாவுடைய உடமைகளின் பாகமாக இருக்கிற அவர்கள், ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பிரதிநிதித்துவம் செய்கிற ஆளும் குழுவின் எல்லா ஏற்பாடுகளுடனும் சந்தோஷமாக ஒத்துழைக்கிறார்கள். ஆளும் குழுவின் வழிநடத்துதலோடு தயாரிக்கப்படும் ஆன்மீக உணவை திரள் கூட்டத்தார் உயர்வாக மதிக்கிறார்கள். அதேசமயத்தில், அந்த அடிமை வகுப்புக்கு அவர்கள் மதிப்புமரியாதை கொடுத்தாலும், அதன் உறுப்பினர்களெனச் சொல்லும் தனிப்பட்ட நபர்களை எவ்விதத்திலும் உயர்த்தாதபடி கவனமாக இருக்கிறார்கள். உண்மையிலேயே கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்படுகிற எந்தக் கிறிஸ்தவரும் தான் விசேஷமாக நடத்தப்பட வேண்டுமென எதிர்பார்ப்பதோ கேட்பதோ இல்லை.—அப். 10:25, 26; 14:14, 15.
20 நாம் அந்த ‘வீட்டாரில்’ மீந்திருப்போரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி, உண்மையுள்ள நிர்வாகியுடனும் அதன் ஆளும் குழுவுடனும் முழுமையாக ஒத்துழைக்கத் தீர்மானமாய் இருப்போமாக. நாம் ஒவ்வொருவரும், ‘விழிப்புடன் இருந்து’ முடிவுவரை உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்போமாக.—மத். 24:13, 42.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” யார், வீட்டார் யார்?
• ஒரு கிறிஸ்தவர் தனக்குப் பரலோக அழைப்பு இருக்கிறதா என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?
• புதிய ஆன்மீக உணவைத் தயாரிக்கும் முக்கிய பொறுப்பு யாருடையது?
• பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை எப்படிக் கருத வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
இன்று ஆளும் குழு, உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. முதல் நூற்றாண்டிலும் இதேபோன்ற ஓர் ஏற்பாடு இருந்தது