இந்தக் கொடிய காலங்களில் ‘சுத்த இருதயத்தை’ காத்துக்கொள்ளுங்கள்
“சர்ச்சுகளில் இன்று ஒழுக்கச் சுத்தம் காணாமல்போய்விட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது.” இப்படிச் சொன்னவர் கத்தோலிக்கரான விட்டார்யோ மெஸ்ஸோரி. இவர் ஒரு பத்திரிகை நிருபர். இத்தாலியிலுள்ள சர்ச் குருமார்களின் சமீபத்திய பாலியல் குற்றங்களைப் பற்றி அவ்வாறு கருத்துத் தெரிவித்தார். அதுமட்டுமல்ல, “குருமார் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தாலும்கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. ஏனென்றால், இப்படிப்பட்ட குருமார்களில் 80 சதவீதத்தினர் ஓரினச்சேர்க்கையில், அதாவது பிற ஆண்களோடோ சிறுவர்களோடோ பாலுறவில் ஈடுபட்டிருந்தார்கள்” என்றும் அவர் சொன்னார்.—லா ஸ்டாம்ப்பா.
சந்தேகமே இல்லை, அதிகரித்துவரும் அக்கிரமங்கள் இந்தப் பொல்லாத உலகின் ‘கடைசி நாட்களுக்கான’ அடையாளமாக இருக்கின்றன! (2 தீ. 3:1-5) இதனால் ஏற்படுகிற ஒழுக்கச் சீர்குலைவு, பொதுமக்களை மட்டுமின்றி கடவுளுடைய பிரதிநிதிகளென உரிமைபாராட்டிக்கொள்கிற ஆட்களையும் கறைபடுத்தியிருக்கின்றன; செய்தி அறிக்கைகள் இதைக் காட்டுகின்றன. அவர்களுடைய கறைபடிந்த அசுத்த இருதயம் கீழ்த்தரமான காரியங்களைச் செய்யும்படி அவர்களைத் தூண்டுகிறது. (எபே. 2:2) அதனால்தான், “இருதயத்திலிருந்தே கெட்ட எண்ணம், கொலை, மணத்துணைக்குத் துரோகம், பாலியல் முறைகேடு, திருட்டு, பொய்சாட்சி, நிந்தனை ஆகிய எல்லாத் தீமைகளும் வெளிவருகின்றன” என இயேசு எச்சரித்தார். (மத். 15:19) என்றாலும், தமது ஊழியர்கள் “சுத்த இருதயத்தை” விரும்ப வேண்டுமென்பது கடவுளாகிய யெகோவாவின் சித்தம். (நீதி. 22:11) அப்படியானால், இந்தக் கொடிய காலங்களில் ஒரு கிறிஸ்தவர் எப்படிச் சுத்த இருதயத்தைக் காத்துக்கொள்ளலாம்?
‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய்’ இருப்பது என்றால் என்ன?
பைபிளில், ‘இருதயம்’ என்ற வார்த்தை பெரும்பாலும் அடையாள அர்த்தத்திலேயே குறிப்பிடப்படுகிறது. பைபிளில் இந்த வார்த்தை, “மனிதனின் உள்மனதை” அர்த்தப்படுத்துகிறது; “மனிதனுக்குள் கடவுள் முக்கியமாகப் பார்ப்பது இதைத்தான்; இங்குதான் கடவுளோடுள்ள பந்தம் வேர்பிடிக்கிறது; இதுவே ஒழுக்க நெறிகளைத் தீர்மானிக்கிறது” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை நம் இருதயம் படம்பிடித்துக் காட்டுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட புத்தகம் சிறப்பித்துக் காண்பிக்கிறபடி, இந்த இருதயத்தையே யெகோவா ஆராய்ந்தறிகிறார்; இந்த இருதயத்திற்காகவே தம் ஊழியர்களைப் பாராட்டுகிறார்.—1 பே. 3:4.
பைபிளில், ‘சுத்தமான,’ ‘மாசில்லாத’ என்ற வார்த்தைகள், உடல் ரீதியில் சுத்தமாக இருப்பதைக் குறிக்கிறது. அதோடு, ஒழுக்க ரீதியிலும் மத ரீதியிலும் தூய்மையாக இருப்பதையும்கூட, அதாவது கலப்படமில்லாமல், அழுக்கில்லாமல், கெட்டுப்போகாமல் இருப்பதையும்கூட, குறிக்கிறது. “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு மலைப்பிரசங்கத்தின்போது சொன்னார். உள்ளூர சுத்தமாக இருப்பவர்களையே அவர் அர்த்தப்படுத்தினார். (மத். 5:8) அப்படிப்பட்டவர்களுடைய விருப்பங்கள், ஆசாபாசங்கள், நோக்கங்கள் அனைத்தும் சுத்தமானவையாக இருக்கின்றன. அவர்கள் தங்களுடைய முழு இருதயத்தோடு, வெளிவேஷமில்லாமல் உள்ளப்பூர்வமாக யெகோவாவை நேசிக்கிறார்கள்; நன்றியுணர்வினால் தூண்டப்பட்டே அவ்வாறு நேசிக்கிறார்கள். (லூக். 10:27) இந்த அர்த்தத்தில் நீங்கள் சுத்தமானவர்களாக இருக்க விரும்புகிறீர்கள், அல்லவா?
‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாய்’ நிலைத்திருப்பது—ஒரு சவால்
யெகோவாவுடைய ஊழியர்கள், ‘கைகளில் சுத்தமுள்ளவர்களாக’ இருக்க வேண்டியது மட்டுமல்லாமல், ‘இருதயத்தில் மாசில்லாதவர்களாகவும்’ இருக்க வேண்டும். (சங். 24:3, 4) என்றாலும், அப்படி மாசில்லாதவர்களாக இருப்பது இன்று மேன்மேலும் சவாலாகிவருகிறது. யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்குச் சாத்தான் கடுமையாக முயற்சி செய்துவருகிறான். அவனுடைய பிடியிலுள்ள இந்த உலகமும், நம் சொந்த அபூரணமும்கூட யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிக்கப் பார்க்கின்றன. இவற்றையெல்லாம் நாம் எதிர்த்துநிற்க வேண்டுமானால், சுத்த இருதயமுள்ளவர்களாய் இருக்க விரும்புவதும், அவ்வாறு இருக்கத் திடத்தீர்மானமாய் இருப்பதும் மிகமிக முக்கியம். இப்படிச் செய்வது நம்மைப் பாதுகாப்பதோடு, கடவுளுடைய நண்பர்களாக நிலைத்திருக்கவும் உதவும். அப்படியானால், சுத்தமான இருதயத்தை நாம் எப்படிக் காத்துக்கொள்ளலாம்?
“சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிச் செல்வதன் காரணமாக உங்களில் எவருடைய இருதயமும் விசுவாசமற்ற பொல்லாத இருதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று எபிரெயர் 3:12 சொல்கிறது. நம்முடைய இருதயம், “விசுவாசமற்ற” இருதயமாக மாறிவிட்டால், ‘சுத்த இருதயமுள்ளவர்களாய்’ நிலைத்திருக்க முடியாது. கடவுள் மீதுள்ள நம் விசுவாசத்தைப் படிப்படியாகக் குலைப்பதற்குப் பிசாசாகிய சாத்தான் எவற்றையெல்லாம் பரப்பியிருக்கிறான்? பரிணாமக் கொள்கை, ஒழுக்கநெறிகளையும் மதக் கொள்கைகளையும் சுய இஷ்டப்படி வகுத்துக்கொள்ளும் சிந்தை, பரிசுத்த வேதாகமம் கடவுளுடைய சக்தியால் அருளப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகம் ஆகியவற்றைப் பரப்பியிருக்கிறான். விஷம் போன்ற இப்படிப்பட்ட சிந்தனைகளால் நாம் பாதிக்கப்பட்டுவிடாதபடி கவனமாய் இருக்க வேண்டும். (கொலோ. 2:8) சாத்தானுடைய இந்தத் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிற முக்கியத் தற்காப்பு ஆயுதங்கள் யாவை? அன்றாட பைபிள் வாசிப்பும், ஆழ்ந்த தியானமுமே! கடவுளுடைய வார்த்தையைப் பற்றித் திருத்தமான அறிவைப் பெற்றுவந்தோமானால், யெகோவாமீது நமக்குள்ள அன்பு ஆழமாகும், மக்களை அவர் கையாளுகிற விதத்தைக் குறித்த புரிந்துகொள்ளுதலும் அதிகரிக்கும். தவறான சிந்தனைகளை உதறித் தள்ளுவதற்கு மட்டுமல்ல, யெகோவாவோடு உள்ள பந்தத்தை வலுப்படுத்தி சுத்தமான இருதயத்தைக் காத்துக்கொள்வதற்கும்கூட அப்படிப்பட்ட புரிந்துகொள்ளுதலும் அன்பும் மிகமிக முக்கியம்.—1 தீ. 1:3-5.
உடலின் இச்சைகளால் தூண்டப்படும்போது...
நாம் ‘சுத்த இருதயத்தை’ காத்துக்கொள்ள முயலும்போது, மற்ற தாக்குதல்களையும் எதிர்ப்படலாம்; அதாவது, உடலின் இச்சைகளையும் பொருளாசையையும் எதிர்ப்படலாம். (1 யோ. 2:15, 16) பணம் சேர்க்கிற ஆசையும், பொருட்செல்வங்களைக் குவிக்கிற ஆசையும் ஒரு கிறிஸ்தவருடைய இருதயத்தை மாசுபடுத்தி, கடவுளுடைய சித்தத்திற்கு முரணாகச் செயல்படும்படி தூண்டிவிடலாம். கிறிஸ்தவர்களில் சிலர் பிறரை ஏமாற்றியிருக்கிறார்கள், வேலை பார்க்குமிடத்தில் மோசடி செய்திருக்கிறார்கள், பிறருடைய பணத்தையோ பொருள்களையோ திருடியிருக்கிறார்கள்.—1 தீ. 6:9, 10.
ஆனால், ‘சுத்த இருதயத்தையே’ விரும்புகிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்? யெகோவாவை விசனப்படுத்திவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயத்தை வளர்த்துக்கொள்வதன் மூலமும், நீதியை நேசிப்பதன் மூலமும், சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ளத் தீர்மானமாய் இருப்பதன் மூலமும் காட்டலாம். எப்போதும், “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க” இந்த விருப்பமே நம்மைத் தூண்டுகிறது. (எபி. 13:18) நாம் நேர்மையாக நடந்துகொண்டோமென்றால், மற்றவர்களுக்கு அது மிகச் சிறந்த சாட்சியாக அமையும். இத்தாலியில் உள்ள ஏமில்யோ என்ற யெகோவாவின் சாட்சி போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவர் ஒரு பர்ஸைக் கண்டெடுத்தார். அதில், 470 யூரோ (21,747 ரூபாய்) இருந்தது. அதைத் தன் மேற்பார்வையாளரிடம் கொடுத்தார்; சக பணியாளர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அந்த மேற்பார்வையாளர் உரிய நபரிடம் பிற்பாடு அதை ஒப்படைத்தார். ஏமில்யோவின் இந்தச் செயல், அவரது சக பணியாளர்கள் சிலருடைய உள்ளத்தைத் தொட்டது. பைபிளில் அவர்களுடைய ஆர்வம் அதிகரித்தது; பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள். இதன் காரணமாக, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் சத்தியத்திற்கு வந்தார்கள். ஆம், சுத்த இருதயத்தோடு நேர்மையாக நடந்துகொள்வது, யெகோவாவுக்குப் புகழ்சேர்க்க மற்றவர்களையும் நிச்சயமாகவே தூண்டலாம்.—தீத். 2:10.
ஒரு கிறிஸ்தவரின் சுத்த இருதயத்தைக் கறைபடுத்தக்கூடிய இன்னொன்று, பாலியல் பற்றிய தவறான, முறைகேடான கண்ணோட்டமாகும். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது, திருமணத்திற்கு முன்பே தவறான உறவுகொள்வது, மணத்துணை அல்லாத வேறொருவரோடு உறவுகொள்வது ஆகியவற்றை அநேகர் சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள்; இப்படிப்பட்ட கண்ணோட்டம் ஒரு கிறிஸ்தவருடைய இருதயத்தை மாசுபடுத்தலாம். பாலியல் ஒழுக்கக்கேட்டில் சிக்கிவிடுகிற ஒரு நபர், அதற்கு முன்பே இரட்டை வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, தன் பாவத்தை மூடிமறைத்து வந்திருக்கலாம். நிச்சயமாகவே அது, ‘சுத்த இருதயத்திற்கு’ அடையாளமல்ல.
காப்ரியீல் என்ற சகோதரர் 15 வயதில் ஞானஸ்நானம் பெற்றார்; உடனடியாக, பயனியர் சேவையை ஆரம்பித்தார். ஆனால், பிற்பாடு கெட்ட நண்பர்களோடு சேர்ந்து நைட் கிளப்புகளுக்குப் போக ஆரம்பித்தார். (சங். 26:4) இது, அவருடைய இரட்டை வாழ்க்கையின் ஆரம்பமாக இருந்தது. விளைவு? அவர் சபைநீக்கம் செய்யப்பட்டார். யெகோவாவிடமிருந்து பெற்ற இந்தக் கண்டிப்பு அவரை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் அசட்டை செய்திருந்த காரியங்களிலெல்லாம் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தினந்தோறும் பைபிளை வாசித்தேன், யெகோவா என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றேன்; பைபிள் பிரசுரங்களைக் கவனமாகப் படித்தேன். தனிப்பட்ட படிப்பு எவ்வளவு சந்தோஷமும் திருப்தியும் தருகிறது என்பதை உணர்ந்தேன். பைபிளை வாசிப்பதும் ஊக்கமாக ஜெபிப்பதும் எவ்வளவு தெம்பளிக்கிறது என்பதையும் உணர்ந்தேன்.” இப்படியெல்லாம் செய்தது, ஒழுக்கக்கேடான நடத்தைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், யெகோவாவோடு இருந்த பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் காப்ரியீலுக்கு உதவியது.
காப்ரியீல் இப்போது மீண்டும் ஒரு பயனியராகத் தன் மனைவியோடு சேர்ந்து சேவைசெய்து வருகிறார். பைபிளைப் படிப்பதும், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் அளிக்கிற பிரசுரங்களைப் படிப்பதும், ஒழுக்கக்கேட்டை உதறித்தள்ளி, சுத்த இருதயத்தைக் காத்துக்கொள்ள ஒரு நபருக்கு எந்தளவு உதவும் என்பதை காப்ரியீலின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.—மத். 24:45; சங். 143:10.
சோதனைகளின் மத்தியில் ‘சுத்த இருதயம்’
எதிரிகளிடமிருந்து வரும் பிரச்சினைகள், பணக் கஷ்டங்கள், தீராத நோய்கள் ஆகியவற்றால் கடவுளுடைய ஊழியர்கள் சிலர் துவண்டுபோயிருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களுடைய இருதயமும் துவண்டுபோயிருக்கிறது. இதுபோன்ற அனுபவம் தாவீது ராஜாவுக்கும் ஏற்பட்டது. அவர் இவ்வாறு சொன்னார்: “என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.” (சங். 143:4) அப்படிப்பட்ட தருணங்களைச் சமாளிக்க எது அவருக்கு உதவியது? கடவுள் தமது ஊழியர்களுக்கு உதவி செய்திருந்ததையும், தனக்கு ஏற்கெனவே பாதுகாப்பு அளித்திருந்ததையும் தாவீது நினைத்துப் பார்த்தார். யெகோவா தமது மாபெரும் பெயருக்கு மகிமை சேர்ப்பதற்காகச் செய்திருந்த எல்லாவற்றைக் குறித்தும் அவர் தியானித்தார். கடவுளுடைய செயல்களைப் பற்றியே ஆழ்ந்து யோசித்தார். (சங். 143:5) நாமும்கூட, நம் படைப்பாளரைப் பற்றியும், அவர் நமக்காக ஏற்கெனவே செய்திருப்பவற்றைப் பற்றியும், தற்போது செய்துவருகிறவற்றைப் பற்றியும் தியானித்தோமென்றால், சோதனைகளின் மத்தியில் சுத்த இருதயத்தைக் காத்துக்கொள்வோம்.
யாராவது நமக்குத் தீங்கிழைத்துவிட்டாலோ அல்லது தீங்கிழைத்துவிட்டதாக நாம் நினைத்தாலோ, நமக்குள் மனக்கசப்பு ஏற்படலாம். அதைப் பற்றியே சதா யோசித்துக்கொண்டு இருந்தோமென்றால், சக வணக்கத்தார்மீது வெறுப்பு ஏற்படலாம். அவர்களைக் கண்டாலே விலகி விலகிப் போகலாம்; யாரோடும் ஒட்டாமல் இருக்கலாம், மற்றவர்கள்மீது அக்கறையே காட்டாமல் இருக்கலாம். இப்படியெல்லாம் செய்வது, ‘சுத்த இருதயமுள்ளவர்களாய்’ இருக்க விரும்புவதற்கு அடையாளம் எனச் சொல்ல முடியுமா? ஆகவே, நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் எப்படிப் பழகுகிறோம், அவர்களோடு கருத்துவேறுபாடு ஏற்படும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்ற விஷயங்களும் ‘சுத்த இருதயமுள்ளவர்களாய்’ இருப்பதில் உட்படுகின்றன.
ஒழுக்க ரீதியில் தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிற இந்த உலகில், உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம் தனித்துத் தெரிகிறோம்; அதற்குக் காரணம், ‘சுத்த இருதயமுள்ளவர்களாய்’ இருப்பதுதான்! கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் வரும் மன சமாதானத்தை நாம் அனுபவிக்கிறோம்; இதனால், நம் வாழ்க்கை இனிமையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘சுத்த இருதயமுள்ளவர்களை’ நேசிக்கிற நம் படைப்பாளராகிய யெகோவாவோடு நெருக்கமான நட்பை அனுபவிக்கிறோம். (சங். 73:1) ‘சுத்த இருதயத்தை’ விரும்புகிறவர்களின் சார்பாக அவர் நடவடிக்கை எடுக்கையில் அவரை நாம் அடையாளப்பூர்வமாய்க் காண்போம்! ஆம், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் “கடவுளைக் காண்பார்கள்” என இயேசு கொடுத்த வாக்கின்படியே நாம் சந்தோஷமானவர்களாய் இருப்போம்!—மத். 5:8.