உண்மையும் விவேகமுமுள்ள ஓர் “அடிமை”
‘தன் வீட்டாரை கவனிக்கும்படி எஜமான் நியமித்த உண்மையும் விவேகமுமுள்ள அடிமை யார்?’ —மத்தேயு 24:45.
1, 2. இன்று நாம் ஆவிக்குரிய உணவை தொடர்ந்து பெறுவது ஏன் அதிமுக்கியமானது?
அன்று நிசான் 11, பொ.ச. 33-ம் ஆண்டு; அந்த செவ்வாய்க்கிழமை மதியவேளையில் இயேசுவின் சீஷர்கள் ஒரு கேள்வியை கேட்டார்கள்; இன்று நமக்கும்கூட அந்தக் கேள்வி ஆழமான அர்த்தம் நிறைந்ததாய் இருக்கிறது. “உம்முடைய வருகைக்கும், [“பிரசன்னத்திற்கும்,” NW] உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு இயேசு பதிலளிக்கையில் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனம் ஒன்றை உரைத்தார். போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், வியாதிகள் ஆகியவை சம்பவிக்கும் கொந்தளிப்பான ஒரு காலப்பகுதியைப் பற்றி அவர் அப்போது சொன்னார். ‘இவை வேதனைகளுக்கெல்லாம் ஆரம்பம்’ மட்டுமே என்றும் குறிப்பிட்டார். அப்படியானால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகப் போகிறது. நினைத்துப் பார்க்கவே எவ்வளவு அச்சமூட்டுகிறது!—மத்தேயு 24:3, 7, 8, 15-22; லூக்கா 21:10, 11.
2 இயேசு உரைத்த தீர்க்கதரிசனத்தின் பெரும்பாலான அம்சங்கள் 1914 முதற்கொண்டு நிறைவேறி வந்திருக்கின்றன. மனிதர்கள் சொல்ல முடியாதளவுக்கு ‘வேதனைகளை’ இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், உண்மை கிறிஸ்தவர்கள் பயப்படத் தேவையில்லை. ஊட்டமளிக்கும் ஆவிக்குரிய உணவை அளித்து அவர்களை காக்கப் போவதாக இயேசு வாக்குறுதி அளித்தார். ஆனால், இப்போது அவர் பரலோகத்தில் இருப்பதால், இங்கு பூமியிலுள்ள நாம் ஆவிக்குரிய உணவை பெற்றுக்கொள்ள என்ன ஏற்பாட்டை செய்திருக்கிறார்?
3. ‘ஏற்ற வேளையில் போஜனத்தை’ நாம் பெற்றுக்கொள்ள இயேசு என்ன ஏற்பாடுகளை செய்திருக்கிறார்?
3 அக்கேள்விக்கான பதிலை இயேசுதாமே குறிப்பிட்டார். அந்த முக்கிய தீர்க்கதரிசனத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு கேள்வியை கேட்டார்: “ஏற்ற வேளையிலே தன் வீட்டாருக்குப் போஜனம் கொடுத்து அவர்களை கவனிக்கும்படி எஜமான் நியமித்த உண்மையும் விவேகமுமுள்ள அடிமை யார்?” இப்படி கேட்ட பிறகு அவர் சொன்னார்: “எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே [“அடிமையே,” NW] பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:45-47) ஆம், ஆவிக்குரிய உணவை அளிப்பதற்கு ஓர் “அடிமை” நியமிக்கப்படுவான்; அந்த “அடிமை” உண்மையாகவும் இருப்பான், விவேகமாகவும் நடந்துகொள்வான். அந்த அடிமை ஒரு தனி மனிதனா? அல்லது அடுத்தடுத்து தங்கள் பொறுப்பை ஏற்ற நபர்களா? அல்லது வேறு ஏதோவொன்றா? உண்மையுள்ள அந்த அடிமை மிக அத்தியாவசியமான ஆவிக்குரிய உணவை அளிப்பதால், அந்த அடிமை யார் என்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்க நாம் ஆர்வமாக இருக்க வேண்டும்.
தனி நபரா அல்லது ஒரு தொகுதியா?
4. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஒரு தனி நபராக இருக்க முடியாதென்பது நமக்கு எப்படி தெரியும்?
4 “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஒரு தனி நபராக இருக்க முடியாது. ஏன்? ஏனென்றால், அந்த அடிமை முதல் நூற்றாண்டிலேயே ஆவிக்குரிய உணவை அளிக்க ஆரம்பித்திருந்தான், அதோடு இயேசுவின் வார்த்தைகளின்படி, 1914-ல் எஜமான் வரும்போதும் அந்த அடிமை அவ்வாறே உணவளித்துக் கொண்டிருப்பான். அப்படிப் பார்த்தால், ஒரு தனி நபர் சுமார் 1,900 வருடங்களுக்கு உண்மையோடு சேவை செய்துவர வேண்டும். ஆனால், மெத்தூசலாகூட அத்தனை வருடங்கள் உயிரோடு வாழவில்லை!—ஆதியாகமம் 5:27.
5. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” என்ற பதம் தனிப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் ஏன் பொருந்தாது என்பதை விளக்கவும்.
5 அப்படியென்றால், தனிப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” என்ற பதம் பொதுப்படையில் பொருந்துமா? எல்லா கிறிஸ்தவர்களுமே உண்மையுள்ளவர்களாகவும் விவேகமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது சரிதான், ஆனால் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யைப் பற்றி இயேசு சொன்னபோது, வேறு ஏதோவொன்றும் அவர் மனதில் இருந்தது. அது நமக்கு எப்படி தெரியும்? ஏனென்றால், “எஜமான் வரும்போது,” அந்த அடிமையை ‘தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும்’ விசாரணைக்காரனாக நியமிப்பார் என்றும் அவர் சொன்னார். ஆனால் தனிப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரையும் எப்படி எல்லா காரியங்கள் மீதும், அதாவது கர்த்தருடைய ஆஸ்திகள் “எல்லாவற்றின்” மீதும் நியமிக்க முடியும்? அது சாத்தியமே இல்லை!
6. இஸ்ரவேல் தேசம் எவ்வாறு கடவுளுடைய ‘ஊழியனாக,’ அல்லது ‘அடிமையாக’ சேவை செய்ய வேண்டியிருந்தது?
6 அப்படியானால், ஒரு கிறிஸ்தவ தொகுதியினரைத்தான் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” என இயேசு குறிப்பிட்டாரென்ற முடிவுக்கு வருவதே நியாயமானது. அவ்வாறு ஒரு தொகுதியினரை ஓர் அடிமையாக குறிப்பிட முடியுமா? ஆம், முடியும். கிறிஸ்து பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன், யெகோவா முழு இஸ்ரவேல் தேசத்தை “என் சாட்சிகள்” என்றும், ‘நான் தேர்ந்தெடுத்த என் ஊழியன்’ என்றும் குறிப்பிட்டார். (ஏசாயா 43:10, பொது மொழிபெயர்ப்பு) பொ.ச.மு. 1513-ல் மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டம் கொடுக்கப்பட்ட நாள் தொடங்கி, பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாள் வரைக்கும் வாழ்ந்த ஒவ்வொரு இஸ்ரவேலனும் இந்த ஊழிய வகுப்பின் பாகமாக இருந்தான். ஆனால், பெரும்பாலான இஸ்ரவேலர் தேச விவகாரங்களை நிர்வகிப்பதிலோ ஆவிக்குரிய உணவளிக்கும் திட்டத்தை ஒருங்கமைப்பதிலோ நேரடியாக பங்கு கொள்ளவில்லை. அந்த வேலைகளுக்காக யெகோவா ராஜாக்களையும் நியாயாதிபதிகளையும் தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் லேவியர்களையும் பயன்படுத்தினார். என்றபோதிலும், ஒரு தேசமாக இஸ்ரவேலர் யெகோவாவின் பேரரசுரிமையை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டியிருந்தது, அதோடு புறதேசத்தார் மத்தியில் அவருடைய புகழை பரப்ப வேண்டியிருந்தது. ஒவ்வொரு இஸ்ரவேலனும் யெகோவாவுக்கு சாட்சியாக இருக்க கடமைப்பட்டிருந்தான்.—உபாகமம் 26:19; ஏசாயா 43:21; மல்கியா 2:7; ரோமர் 3:1, 2.
ஓர் ‘ஊழியன்’ நீக்கப்படுகிறான்
7. பூர்வ இஸ்ரவேல் தேசம் ஏன் கடவுளுடைய ‘ஊழியனாக’ இருக்கும் தகுதியை இழந்தது?
7 பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்ரவேல் தேசம் கடவுளுடைய ‘ஊழியனாக’ இருந்ததால், அதுவே இயேசு குறிப்பிட்ட அந்த அடிமையாக இருந்ததா? இல்லை, ஏனென்றால் வருத்தகரமாய், பூர்வ இஸ்ரவேல் தேசம் உண்மையாகவும் நடந்துகொள்ளவில்லை, விவேகமாகவும் நடந்துகொள்ளவில்லை. அந்த தேசத்திடம் யெகோவா சொன்ன வார்த்தைகளை பவுல் மேற்கோள் காட்டி நிலைமையை சுருக்கமாக இவ்வாறு எடுத்துரைத்தார்: “தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.” (ரோமர் 2:24) ஆம், இயேசுவை நிராகரித்ததன் மூலம் கலகத்தனமிக்க இஸ்ரவேலின் நீண்ட கால சரித்திரம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது; அச்சமயத்தில்தான் யெகோவா அவர்களை நீக்கிப்போட்டார்.—மத்தேயு 21:42, 43.
8. இஸ்ரவேல் தேசத்துக்கு பதிலாக வேறொரு ‘ஊழியன்’ எப்போது நியமிக்கப்பட்டான், எந்த சூழலில்?
8 இஸ்ரவேல் தேசம் எனும் ‘ஊழியன்’ உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக, இனி ஒருபோதும் உண்மை வணக்கத்தாருக்கு ஆவிக்குரிய உணவு கிடைக்காதென்று அர்த்தமாகிவிடாது. பொ.ச. 33-ல், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு ஐம்பது நாட்களுக்கு பிறகு, எருசலேமிலிருந்த ஒரு மாடி அறையில் கூடியிருந்த ஏறக்குறைய 120 சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. அந்த நிமிடத்தில் புதிய தேசம் ஒன்று பிறந்தது. அதையொட்டி, அப்புதிய தேசத்தின் அங்கத்தினர்கள் எருசலேம் நகரத்தாரிடம் தைரியமாக “தேவனுடைய மகத்துவங்களை” அறிவிக்கத் தொடங்கினார்கள்; அப்போது அதன் பிறப்பை பற்றி எல்லாரும் தெரிந்துகொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:11) இவ்வாறு அந்த ஆவிக்குரிய புதிய தேசம், யெகோவாவின் மகிமையை புறதேசத்தாருக்கு அறிவிக்கிறதும், ஏற்ற வேளையில் ஆகாரத்தை கொடுக்கிறதுமான ‘ஊழியனாக’ ஆனது. (1 பேதுரு 2:9) பிற்பாடு அது ‘தேவனுடைய இஸ்ரவேல்’ என மிகப் பொருத்தமாகவே அழைக்கப்படலாயிற்று.—கலாத்தியர் 6:16.
9. (அ) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யார்? (ஆ) ‘வீட்டார்’ யார்?
9 ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ ஒவ்வொரு அங்கத்தினரும் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்டு, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாயும், பரலோக நம்பிக்கையுடையவர்களாயும் இருக்கிறார்கள். பொ.ச.மு. 1513 முதற்கொண்டு பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் வரை எந்தவொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் வாழ்ந்த ஒவ்வொரு இஸ்ரவேலனும் கிறிஸ்தவத்துக்கு முன்னான காலத்திலிருந்த ஊழிய வகுப்பின் பாகமாக இருந்தான்; அதைப் போலவே, பொ.ச. 33 தொடங்கி இன்று வரை எந்தவொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் வாழ்ந்திருக்கிற அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் தொகுதியை “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பு என்ற பதம் மொத்தமாக குறிக்கிறது. அப்படியானால், அடிமையிடமிருந்து ஆவிக்குரிய போஷாக்கை பெற்றுக்கொள்ளும் அந்த ‘வீட்டார்’ யார்? பொ.ச. முதல் நூற்றாண்டில், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பரலோக நம்பிக்கை இருந்தது. எனவே, அந்த வீட்டாரும்கூட அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையே குறித்தது, தொகுதியாக அல்ல, ஆனால் தனி நபர்களாக அவர்களைக் குறித்தது. அந்த அடிமை அளித்த ஆவிக்குரிய உணவு, சபையில் பொறுப்பான ஸ்தானங்களிலிருந்தவர்கள் உட்பட எல்லாருக்குமே தேவைப்பட்டது.—1 கொரிந்தியர் 12:12, 19-27; எபிரெயர் 5:11-13; 2 பேதுரு 3:15, 16.
“அவனவனுக்குத் தன் தன் வேலை”
10, 11. அடிமை வகுப்பின் எல்லா அங்கத்தினருக்கும் ஒரே மாதிரியான வேலை இல்லை என்பது நமக்கு எப்படி தெரியும்?
10 ஒரு வகுப்பாக ‘தேவனுடைய இஸ்ரவேல்’ உண்மையும் விவேகமுமுள்ள அடிமைக்கான வேலை நியமிப்பை பெற்றுள்ளது, ஆனாலும் அதன் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் தனிப்பட்ட வேறு பொறுப்புகளும் இருக்கின்றன. மாற்கு 13:34-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் இதை தெளிவுபடுத்துகின்றன. ‘ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம் போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல் காக்கிறவனுக்குக் கற்பிப்பான்’ என்று அவர் சொன்னார். ஆகவே அந்த அடிமை வகுப்பின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஒரு வேலை இருக்கிறது, அதாவது கிறிஸ்துவின் பூமிக்குரிய ஆஸ்திகளை அதிகரிக்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அங்கத்தினரும் தங்கள் திறமைக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப அந்த வேலையை செய்கிறார்கள்.—மத்தேயு 25:14, 15.
11 மேலுமாக, அப்போஸ்தலன் பேதுரு தம் காலத்திலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்து கொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்.’ (1 பேதுரு 4:10) எனவே, கடவுள் கொடுத்திருக்கும் ஈவுகளை பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொறுப்பு அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு இருக்கிறது. எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரே மாதிரியான திறமைகளும், நியமிப்புகளும், விசேஷ ஊழிய சிலாக்கியங்களும் இருக்காது என்பதையும் பேதுருவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. என்றாலும், இந்த அடிமை வகுப்பின் ஒவ்வொரு அங்கத்தினரும் இந்த ஆவிக்குரிய தேசத்தின் வளர்ச்சிக்காக ஏதோவொரு விதத்தில் பங்களிக்க முடியும். எப்படி?
12. ஆண்கள், பெண்கள் என அடிமை வகுப்பின் ஒவ்வொரு அங்கத்தினரும் அந்த அடிமையின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களித்தனர்?
12 முதலாவதாக, ஒவ்வொரு அங்கத்தினரும் யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருந்து ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பது அவசியமாக இருந்தது. (ஏசாயா 43:10-12; மத்தேயு 24:14) இயேசு பரலோகத்திற்குப் போவதற்கு சற்று முன்னர், ஆண்கள், பெண்கள் என தம்முடைய உண்மையுள்ள சீஷர்கள் அனைவருமே போதகர்களாக இருக்க வேண்டுமென்று கட்டளையிட்டார். ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என்று சொன்னார்.—மத்தேயு 28:19, 20.
13. அபிஷேகம் செய்யப்பட்ட எல்லாரும் என்ன சிலாக்கியத்தை அனுபவித்தார்கள்?
13 புதிய சீஷர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த அனைத்து காரியங்களையும் அவர்கள் கைக்கொள்ள கவனமாக கற்றுத்தர வேண்டியிருந்தது. நற்செய்திக்கு இசைய நடந்தவர்கள் காலப்போக்கில் மற்றவர்களுக்கு போதிக்கும் தகுதி பெற்றார்கள். பல தேசங்களில், அடிமை வகுப்பின் அங்கத்தினர்களாக ஆகவிருந்தவர்களுக்கு போஷாக்குள்ள ஆவிக்குரிய உணவு அளிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள் என அபிஷேகம் செய்யப்பட்ட எல்லா கிறிஸ்தவர்களுமே சீஷர்களை உண்டாக்கும் வேலையில் பங்கு கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:17, 18) அடிமை வகுப்பு தன் வேலையை முதன்முதல் ஆரம்பித்த நாள் தொடங்கி இந்த ஒழுங்குமுறை முடிவடையும் நாள் வரை இவ்வேலை தொடர்ந்து நடைபெற வேண்டியிருந்தது.
14. சபையில் போதிக்கும் சிலாக்கியம் யாருக்கு மட்டுமே இருந்தது, அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள பெண்கள் அதைக் குறித்து எப்படி உணர்ந்தார்கள்?
14 புதிதாக முழுக்காட்டப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அந்த அடிமையின் பாகமாக ஆனார்கள்; அவர்களுக்கு ஆரம்பத்தில் கற்பித்தது யாராக இருந்தபோதிலும், சபையில் மூப்பர்களாக சேவிக்க வேதப்பூர்வ தகுதி பெற்றவர்களிடமிருந்தும் அவர்கள் அறிவுரைகளை பெற்றுக் கொண்டார்கள். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:6-9) ஆக, இந்த மூப்பர்கள் அந்தத் தேசத்தின் வளர்ச்சிக்கு விசேஷமான விதத்தில் உதவும் சிலாக்கியம் பெற்றார்கள். சபையில், கிறிஸ்தவ ஆண்களுக்கு மட்டுமே போதிக்கும் வேலை கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள் கோபித்துக் கொள்ளவில்லை. (1 கொரிந்தியர் 14:34, 35) மாறாக, சபையிலிருந்த ஆண்களின் கடின உழைப்பிலிருந்து பயனடைவதில் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்; அதுமட்டுமல்ல, மகிழ்ச்சி தரும் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கிற சிலாக்கியத்தையும், மற்ற ஊழிய சிலாக்கியங்களையும் பெற்றிருப்பதற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாகவே இருந்தார்கள். இன்றுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட வைராக்கியமான சகோதரிகளும், சபை மூப்பர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதே போன்ற பணிவை வெளிக்காட்டுகிறார்கள்.
15. முதல் நூற்றாண்டில் ஆவிக்குரிய உணவு முக்கியமாக எந்த வழியில் கிடைத்தது, அதை முன்நின்று வழங்கியவர்கள் யார்?
15 முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலர்களிடமிருந்தும், முன்நின்று வழிநடத்திய மற்ற சீஷர்களிடமிருந்தும் வந்த கடிதங்கள் மூலமே முக்கியமான ஆவிக்குரிய உணவு கிடைத்தது. அவர்கள் எழுதிய கடிதங்கள்—குறிப்பாக, கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 27 புத்தகங்களில் காணப்படும் கடிதங்கள்—ஒவ்வொரு சபையாக அனுப்பப்பட்டன; அக்கடிதங்களை வைத்துத்தான் மூப்பர்கள் தங்கள் சபைகளில் போதித்தார்கள். இவ்விதமாக, அந்த அடிமையின் பிரதிநிதிகள் நல்மனமுள்ள கிறிஸ்தவர்களுக்கு போஷாக்குள்ள ஆவிக்குரிய உணவை உண்மையோடு வழங்கினார்கள். ஆம், முதல் நூற்றாண்டிலிருந்த அடிமை வகுப்பு தன் பொறுப்பை உண்மையோடு நிறைவேற்றியது.
“அடிமை”—19 நூற்றாண்டுகளுக்குப் பின்
16, 17. அடிமை வகுப்பு, 1914-க்கு முன்புவரை தன்னுடைய வேலையை உண்மையோடு செய்து வந்ததை எப்படி நிரூபித்தது?
16 இன்றைய நாளைப் பற்றியென்ன? 1914-ல், இயேசுவின் பிரசன்னம் ஆரம்பமானபோது, ஏற்ற வேளையிலே உண்மையோடு ஆகாரத்தை கொடுத்துவந்த அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு தொகுதியினரை அவர் கண்டாரா? ஆம், நிச்சயமாக. அந்தத் தொகுதியினர் வெளிக்காட்டிய அருமையான கனிகளை வைத்தே அவர்களை மிகத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (மத்தேயு 7:20) அதற்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் அது சரியானதென்றே நிரூபித்திருக்கின்றன.
17 இயேசுவின் பிரசன்னத்தின்போது, அடிமை வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள், சுமார் 5,000 பேர், பைபிள் சத்தியத்தை மும்முரமாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் குறைவாகவே இருந்தார்கள்; ஆனால் நற்செய்தியை பரப்புவதற்கு அடிமை வகுப்பு ஏராளமான புதிய முறைகளை திறம்பட கையாண்டது. (மத்தேயு 9:38) உதாரணத்திற்கு, பைபிள் தலைப்பிலான பிரசங்கங்களை ஏறத்தாழ 2,000 செய்தித்தாள்களில் பிரசுரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்வாறு, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியம் ஆயிரக்கணக்கான வாசகர்களை உடனடியாக சென்றெட்டியது. அதோடுகூட, கலர் ஸ்லைடுகளையும் இயங்கு படங்களையும் இணைத்து எட்டு மணிநேர நிகழ்ச்சி ஒன்று தயாரிக்கப்பட்டது. படைப்பு தொடங்கி கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியின் முடிவு வரையுள்ள பைபிள் விஷயங்கள் இப்புதிய நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு காட்டப்பட்டன; இதன் விளைவாக, பைபிளின் செய்தி மூன்று கண்டங்களிலிருந்த மொத்தம் 90 லட்சத்திற்கும் அதிகமானோரை சென்றெட்டியது. அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் மூலமும் நற்செய்தி பரப்பப்பட்டது. உதாரணமாக, 1914-ம் வருடத்தின்போது இந்தக் காவற்கோபுர பத்திரிகை சுமார் 50,000 பிரதிகள் அச்சிடப்பட்டது.
18. இயேசு தமது எல்லா ஆஸ்திகள் மீதும் தமது அடிமையை எப்போது நியமித்தார், ஏன்?
18 ஆம், எஜமான் வந்தபோது, தம்முடைய உண்மையுள்ள அடிமை தம் வீட்டாருக்கு ஏற்ற வேளையிலேயே சிரத்தையோடு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருந்ததை கண்டார், அதோடு அந்த அடிமை நற்செய்தியை பிரசங்கித்து வருவதையும் கண்டார். அந்த அடிமைக்கு பெரிய பெரிய பொறுப்புகள் இப்போது கொடுக்கப்படவிருந்தன. “தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என இயேசு சொன்னார். (மத்தேயு 24:47) 1919-ல் அந்த அடிமை வகுப்பார் சோதனைக் காலத்தை கடந்துவந்த பிறகு அவர்களுக்கு இயேசு அதிக பொறுப்பளித்தார். ஆனால், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் ஏன் பெரிய பெரிய பொறுப்புகளை பெற்றார்கள்? எஜமான் அதிகமான ஆஸ்திகளை பெற்றதே அதற்கு காரணம். ஆம், 1914-ல் இயேசுவுக்கு அரசதிகாரம் கொடுக்கப்பட்டது.
19. ‘திரள் கூட்டத்தாரின்’ ஆவிக்குரிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வரும் விதத்தை விளக்கவும்.
19 புதிதாக முடிசூட்டப்பட்ட எஜமான் தம் உண்மையுள்ள அடிமையிடம் ஒப்படைத்த அந்த ஆஸ்திகள் யாவை? இந்தப் பூமியிலுள்ள ஆவிக்குரிய அனைத்துமே அவருடைய ஆஸ்திகள்தான். உதாரணமாக, 1914-ல், கிறிஸ்து ராஜாவாக நியமிக்கப்பட்டு இருபது வருடங்கள் கழித்து, ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்த ‘திரள் கூட்டத்தார்’ யாரென்பது அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இவர்கள், ‘தேவனுடைய இஸ்ரவேலை’ சேர்ந்த அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்களைப் போலவே யெகோவாவை நேசித்து, அவருக்காக சேவை செய்ய விரும்பும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய நல்மனமுள்ள ஆண்களும் பெண்களும் ஆவர். இவர்கள், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யிடம் “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்” என்று சொல்வது போல் இருக்கிறது. (சகரியா 8:23) அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பெறும் அதே போஷாக்கான ஆவிக்குரிய உணவைத்தான் புதிதாக முழுக்காட்டப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களும் புசிக்கிறார்கள்; அன்றிலிருந்து இன்றுவரையாக இந்த இரு வகுப்பாரும் ஒரே ஆவிக்குரிய மேஜையிலிருந்தே புசிக்கிறார்கள். ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்தவர்களுக்கு இது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!
20. கர்த்தருடைய ஆஸ்திகளை பெருகச் செய்வதில் ‘திரள் கூட்டத்தார்’ என்ன பங்கை வகித்திருக்கிறார்கள்?
20 ‘திரள் கூட்டத்தின்’ அங்கத்தினர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட அடிமை வகுப்போடு சேர்ந்துகொண்டு சந்தோஷமாக நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பிரசங்க ஊழியத்தை தொடர்ந்து செய்கையில் எஜமானின் பூமிக்குரிய ஆஸ்திகள் அதிகமாயின, இதனால் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் பொறுப்புகளும் அதிகரித்தன. சத்தியத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியவர்களின் எண்ணிக்கை உயர உயர, பைபிள் பிரசுரங்களின் தேவையும் அதிகமானது, எனவே அச்சக வசதிகளை விஸ்தரிக்க வேண்டியதாயிற்று. ஒன்றன் பின் ஒன்றாக பல நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ‘பூமியின் கடைசிபரியந்தம்’ மிஷனரிகள் அனுப்பப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 1:8) 1914-ல் அபிஷேகம் செய்யப்பட்ட ஏறத்தாழ ஐயாயிரம் பேர் மட்டுமே கடவுளைத் துதிப்போராக இருந்தார்கள், ஆனால் இன்று கடவுளைத் துதிப்போரின் எண்ணிக்கை 60 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது; அவர்களில் பெரும்பான்மையினர் ‘திரள் கூட்டத்தை’ சேர்ந்தவர்கள். ஆம், 1914-ல் ராஜா முடிசூட்டப்பட்டதிலிருந்து உண்மையிலேயே அவருடைய ஆஸ்திகள் பல மடங்கு பெருகியிருக்கின்றன!
21. நம்முடைய அடுத்த கட்டுரையில் என்ன இரண்டு உவமைகளைப் பற்றி சிந்திப்போம்?
21 இவையனைத்தும், அடிமை வகுப்பு ‘உண்மையோடும் விவேகத்தோடும்’ நடந்து கொண்டிருப்பதைத்தான் காண்பிக்கின்றன. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யைப் பற்றி குறிப்பிட்டதற்குப் பிறகு அந்தப் பண்புகளை சிறப்பித்துக் காட்டும் இரண்டு உவமைகளை இயேசு சொன்னார்: ஒன்று, விவேகமுள்ள கன்னிகைகளையும் புத்தியில்லா கன்னிகைகளையும் பற்றியது, மற்றொன்று தாலந்துகளைப் பற்றியது. (மத்தேயு 25:1-30) அவற்றைத் தெரிந்துகொள்ள நம்முடைய ஆவல் தூண்டப்படுகிறது அல்லவா? அந்த உவமைகள் இன்று நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன? இந்தக் கேள்விக்கான விடையை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
• “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யார்?
• ‘வீட்டார்’ யார்?
• கர்த்தருடைய எல்லா ஆஸ்திகள் மீதும் உண்மையுள்ள அடிமை நியமிக்கப்பட்டது எப்போது, அந்தச் சமயத்தில் நியமிக்கப்பட்டதற்குக் காரணம் என்ன?
• சமீப பத்தாண்டுகளில் கர்த்தருடைய ஆஸ்திகளை அதிகரிக்க யார் உதவியிருக்கிறார்கள், எப்படி?
[பக்கம் 10-ன் படங்கள்]
முதல் நூற்றாண்டிலிருந்த அடிமை வகுப்பு தன்னுடைய வேலையை உண்மையோடு செய்தது