‘உண்மையுள்ள அடிமையும்’ அதன் ஆளும் குழுவும்
“ஏற்றவேளையில் தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் (அடிமை, NW) யாவன்?”—மத்தேயு 24:45.
1. யெகோவா ஏன் அதிகாரத்தை ஒப்படைக்க மனமுள்ளவராயிருக்கிறார்? அவர் முக்கியமாக யாருக்கு அப்படிச் செய்திருக்கிறார்?
யெகோவா ஒழுங்கின் தேவனாய் இருக்கிறார். அவர் சரியான சட்டப்படியான அதிகாரம் அனைத்தின் ஊற்றுமூலம். தம்முடைய உண்மையுள்ள சிருஷ்டிகளின் உண்மைத்தன்மையில் நம்பிக்கை கொண்டவராய், யெகோவா அதிகாரத்தை ஒப்படைக்க மனமுள்ளவராயிருக்கிறார். மிகவும் உயர்ந்த அதிகாரத்தை அவர் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிடம் ஒப்படைத்திருக்கிறார். ஆம், தேவன் “எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, . . . அவரை எல்லாவற்றிற்கும் மேலானத் தலையாக்”கினார்.—எபேசியர் 1:22.
2. கிறிஸ்தவ சபையைப் பவுல் என்னவென்று அழைக்கிறான்? கிறிஸ்து யாரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கிறார்?
2 அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ சபையை “தேவனுடைய வீடு” என்று அழைப்பதுடன், யெகோவாவின் உண்மையுள்ள மகன் இயேசு கிறிஸ்து இந்த வீட்டின் மேல் அதிகாரமுடையவராய் அமர்த்தப்பட்டார் என்றும் கூறுகிறான். (1 தீமோத்தேயு 3:15; எபிரெயர் 3:6) கிறிஸ்துவும் தம்முடைய பங்கில், தேவனுடைய வீட்டின் அங்கத்தினருக்கு அதிகாரத்தை ஒப்படைக்கிறார். இதை நாம் மத்தேயு 24:45–47-லுள்ள இயேசுவின் வார்த்தைகளில் பார்க்கலாம். அவர் சொன்னார்: “ஏற்றவேளையில் தன் வேலைக்காரருக்குப் போஜனங் கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் (அடிமை, NW) யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (அடிமையே சந்தோஷமுள்ளவன், NW). தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
முதல் நூற்றாண்டு வீட்டு விசாரணைக்காரர்
3. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யாரைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது? தனிப்பட்ட நபர்களாக அவர்களுக்கு எந்தப் பதம் பொருந்துகிறது?
3 வேதவசனங்களை நாம் கவனமாகப் படித்தறிந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழும் ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட கடவுளுடைய வீட்டு அங்கத்தினர் கூட்டாக “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,” “உக்கிராணக்காரன்,” அல்லது “வீட்டு விசாரணைக்காரனை” உண்டுபண்ணுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். தனிப்பட்ட நபராக யெகோவாவின் வீட்டு அங்கத்தினர்கள் “வேலைக்காரர்” அல்லது “பணிவிடைக்காரர்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.—மத்தேயு 24:45; லூக்கா 12:42, ஒத்துவாக்கிய பைபிள் (Reference Bible, NW), அடிக்குறிப்பு.
4. தம்முடைய மரணத்துக்குச் சற்று முன்பு இயேசு என்ன கேள்வியை எழுப்பினார், மற்றும் தம்மை யாருக்கு ஒப்பிட்டுப் பேசினார்?
4 தம்முடைய மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பு, லூக்கா 12:42-ல் பதிவாகியுள்ள கேள்வியை இயேசு எழுப்பியிருந்தார்: “பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படி கொடுக்கும்படி எஜமான் அவர்கள் மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?” அதன் பிறகு, தம்முடைய மரணத்துக்கு ஒருசில நாட்களுக்கு முன், இயேசு, தம்முடைய அடிமைகளை அழைத்துத் தனது உடைமைகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தூர தேசத்துக்குப் பிரயாணம் செய்யும் ஒருவனுக்குத் தம்மை ஒப்பிட்டுப் பேசினார்.—மத்தேயு 25:14.
5. (எ) தம்முடைய உடைமைகளைப் பார்த்துக்கொள்ளும்படி இயேசு எப்பொழுது மற்றவர்களை நியமித்தார்? (பி) தம்முடைய கூட்டு வீட்டு விசாரணைக்காரரின் பாகமாக ஆகிறவர்களுக்கு, கிறிஸ்து, என்ன விரிவான வேலையை நியமித்தார்?
5 தம்முடைய உடைமைகளைப் பார்த்துக்கொள்ளும்படி இயேசு எப்பொழுது மற்றவர்களை நியமித்தார்? இது அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நடந்தது. மத்தேயு 28:19, 20-ல் காணப்படும் நன்கு அறியப்பட்ட அவருடைய வார்த்தைகளில், அவருடைய கூட்டு வீட்டு விசாரணைக்காரரின் பாகமாக ஆகிறவர்களுக்கு, கிறிஸ்து, கற்பிக்கும் மற்றும் சீஷராக்கும் ஒரு விரிவான வேலையைக் கொடுத்தார். தனிப்பட்டவர்களாய் அவர்கள் “பூமியின் கடைசிபரியந்தம்,” சாட்சி கொடுப்பதன் மூலம், இந்தப் பணிவிடைக்காரர், தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் போது இயேசு பயிரிட ஆரம்பித்த மிஷனரி ஊழியக் களத்தை விரிவாக்குபவர்களாய் இருப்பார்கள். (அப்போஸ்தலர் 1:8) இது அவர்கள் “கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதிகளாய்” நடப்பதை உட்படுத்தியது. “தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரராக,” அவர்கள் சீஷரை உண்டுபண்ணுகிறவர்களாகவும், அவர்களுக்கு ஆவிக்குரிய உணவைப் பகிர்ந்தளிப்பவர்களாகவும் இருப்பார்கள்.—2 கொரிந்தியர் 5:20; 1 கொரிந்தியர் 4:1, 2.
வீட்டாரின் ஆளும் குழு
6. முதல் நூற்றாண்டு உக்கிராணக்காரர் வகுப்பு எதைப் பகிர்ந்தளிப்பதற்கு தேவனுடைய ஆவியால் ஏவப்பட்டனர்?
6 ஒரு கூட்டாக ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்டக் கிறிஸ்தவர்கள் எஜமானின் உக்கிராணக்காரனாக, அல்லது வீட்டு விசாரணைக்காரனாக, ஏற்ற வேளையின் ஆவிக்குரிய ஆகாரத்தைத் தேவனுடைய வீட்டின் தனிப்பட்ட அங்கத்தினருக்குப் பகிர்ந்தளிப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். பொ.ச. 41-க்கும் 98-க்கும் இடையில், முதல்நூற்றாண்டு உக்கிராண வகுப்பினரின் அங்கத்தினர் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு தங்களுடைய சகோதரரின் நன்மைக்காக 5 சரித்திரப் பதிவுகளையும், 21 கடிதங்களையும், வெளிப்படுத்துதல் புத்தகத்தையும் எழுதினர். பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த எழுத்துக்கள் அந்த வேலைக்காரருக்கு, அதாவது தேவனுடைய வீட்டாரின் தனிப்பட்ட அங்கத்தினர்களுக்கு அருமையான ஆவிக்குரிய ஆகாரத்தைக் கொண்டிருக்கிறது.
7. என்ன நோக்கத்திற்காகக் கிறிஸ்து அடிமை வகுப்பிலிருந்து ஒரு சிறிய எண்ணிக்கையான ஆண்களைத் தெரிந்தெடுத்தார்?
7 அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவருமே கூட்டாக தேவனுடைய வீட்டாராக அமைந்திட, அந்த அடிமை வகுப்பிலிருந்து ஒரு சிறிய எண்ணிக்கையான ஆட்களை காணக்கூடிய ஆளும் குழுவாக சேவிப்பதற்காக கிறிஸ்து தெரிந்தெடுத்தார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. மத்தியா உட்பட 12 அப்போஸ்தலர்கள் முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் அஸ்திபாரமாக இருந்தனர் என்று சபையின் ஆரம்ப சரித்திரம் காட்டுகிறது. அப்போஸ்தலர் 1:20–26 இந்தக் குறிப்பைக் காட்டுகிறது. யூதாஸ்காரியோத்துக்குப் பதில் நியமிப்பு சம்பந்தமாக, அதில் “அவனுடைய கண்காணிப்பைக்” குறித்தும் “இந்த ஊழியத்திலும் அப்போஸ்தலப் பட்டத்திலும்” பங்குபெறுவது குறித்தும் பேசப்படுகிறது.
8. முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் உத்தரவாதங்கள் எதை உட்படுத்தியது?
8 அப்படிப்பட்ட கண்காணிப்பு ஊழிய ஸ்தானங்களுக்குத் தகுதியான ஆண்களை நியமிப்பதற்கும் ஊழியத்தை ஒழுங்கமைப்பதற்குமான அப்போஸ்தலரின் உத்தரவாதத்தை உட்படுத்தியது. ஆனால் அது இன்னும் அதிகத்தைக் குறித்தது. அது கற்பிப்பதையும் கோட்பாட்டுக் குறிப்புகளைத் தெளிவுபடுத்துவதையும் உட்படுத்தியது. யோவான் 16:13-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வாக்குறுதியை நிறைவேற்றுமளவில், “சத்திய ஆவி” கிறிஸ்தவ சபையைப் படிப்படியாக எல்லாச் சத்தியத்திலும் வழிநடத்துவதாயிருந்தது. ஆரம்பத்திலிருந்தே, வார்த்தையை ஏற்று முழுக்காட்டப்பட்டு, அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் தொடர்ந்து “அப்போஸ்தலருடைய போதகத்துக்கு” தங்களை அர்ப்பணித்தார்கள். உண்மையில், சொல்லர்த்தமான உணவைப் பகிர்ந்தளிக்கும் அவசியமான வேலைக்காக சிபாரிசு செய்யப்பட்ட ஏழு பேர் நியமிக்கப்பட்டதற்குக் காரணமே, “பன்னிருவரும்” ‘ஜெபம்பண்ணுவதிலும் தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்தில் இடைவிடாமல் தரித்திருப்பதற்காகும்.’—அப்போஸ்தலர் 2:42; 6:1–6.
9 முதலில் ஆளும் குழு இயேசுவின் அப்போஸ்தலராலான ஒன்றாய் மட்டுமே இருந்ததாய்த் தெரிகிறது. ஆனால் அது அவ்விதமாகவே இருக்குமா? பொ.ச. 44-ல் யோவானின் சகோதரனும் அப்போஸ்தலனுமாயிருந்த யாக்கோபு முதலாம் ஏரோது அகிரிப்பாவினால் கொலை செய்யப்பட்டான். (அப்போஸ்தலர் 12:1, 2) யூதாஸின் விஷயத்தில் இருந்ததுபோல, அவனுக்குப் பதிலாக எவரும் நியமிக்கப்பட எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஏன் அப்படிச் செய்யப்படவில்லை? சந்தேகமின்றி, யாக்கோபு உண்மையுள்ளவனாயும் 12 அப்போஸ்தலரில் இவன்தானே முதலில் மரித்தவனாயும் இருந்தான். மறுபட்சத்தில், யூதாஸ்காரியோத்து பிரிந்துபோன, பொல்லாத ஆளாக இருந்ததால் அவன் ஆவிக்குரிய இஸ்ரவேலின் அஸ்திபாரக் கற்களின் 12 என்ற எண்ணிக்கையை நிறைவு செய்ய வேண்டியதாயிருந்தது.—எபேசியர் 2:20; வெளிப்படுத்துதல் 21:14.
10. முதல் நூற்றாண்டு ஆளும் குழு எப்பொழுது, எப்படி விரிவாக்கப்பட்டது? கடவுளுடைய வீட்டாரை வழிநடத்துவதற்குக் கிறிஸ்து அதை எவ்வாறு பயன்படுத்தினார்?
10 முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் ஆரம்ப அங்கத்தினர் அப்போஸ்தலராயிருந்தனர். அவர்கள் இயேசுவோடுகூடவே இருந்து, அவருடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பார்த்தவர்கள். (அப்போஸ்தலர் 1:21, 22) ஆனால் இந்த நிலை மாற வேண்டியிருந்தது. காலம் செல்லச் செல்ல, மற்றக் கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய தகுதியை அடைந்து, எருசலேம் சபையில் மூப்பர்களாக நியமிக்கப்பட்டார்கள். பொ.ச. 49 போல், எருசலேமில் ஏற்கெனவே இருந்த அப்போஸ்தலர்கள் மட்டுமின்றி மற்ற பல மூப்பர்களும் ஆளும் குழுவின் பாகமாயிருக்குமளவுக்கு அது விரிவுபடுத்தப்பட்டது. (அப்போஸ்தலர் 15:2) எனவே ஆளும் குழுவின் அமைவு இப்படித்தான் என்பது குறிப்பிடப்படவில்லை, ஆனால் கடவுள் காரியங்களை வழிநடத்தினார் என்பது தெளிவாயிருக்கிறது, ஏனென்றால், தம்முடைய மக்களின் சூழ்நிலைக்கேற்ப அது மாற்றத்தைக் கண்டது. யூதரல்லாத கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளுதல் மற்றும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருத்தல் குறித்த முக்கியமான கோட்பாட்டு விஷயத்தைத் தீர்த்து வைப்பதற்கு சபையின் காரியங்களைச் செயல்படுத்துகிற தலைவராயிருக்கும் கிறிஸ்து, விரிவாக்கப்பட்ட இந்த ஆளும் குழுவைப் பயன்படுத்தினார். இந்த ஆளும் குழு தன் தீர்மானத்தை விளக்கும் ஒரு கடிதத்தை எழுதி, கடைப்பிடிக்கப்படுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது.—அப்போஸ்தலர் 15:23–29.
வீட்டு விசாரணைக்காரர் கணக்குகொடுப்பதற்கான ஒரு காலம்
11. ஆளும் குழுவின் உறுதியான வழிநடத்துதல் சகோதரர்களால் போற்றப்பட்டதா? இந்த ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதித்தார் என்று எது காட்டுகிறது?
11 தனிப்பட்டவர்களாகவும், சபையாகவும் ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் ஆளும் குழுவால் கொடுக்கப்பட்ட இந்த உறுதியான வழிநடத்துதலைப் போற்றினார்கள். ஆளும் குழுவால் அனுப்பப்பட்ட கடிதத்தைச் சிரியாவிலுள்ள அந்தியோகியா சபையினர் வாசித்தப் பிறகு கிடைத்த உற்சாகத்தால் மகிழ்ந்தனர். மற்ற சபைகளும் தகவலைப் பெற்று அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்த போது, அவர்கள் “விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.” (அப்போஸ்தலர் 16:5) தெளிவாகவே, கடவுள் இந்த ஏற்பாட்டை ஆசீர்வதித்தார்.—அப்போஸ்தலர் 15:30, 31.
12, 13. ராத்தல்கள் மற்றும் தாலந்துகள் பற்றிய தம்முடைய உவமையில் இயேசு என்ன சம்பவங்களை முன்னறிவித்தார்?
12 ஆனால் நாம் இந்தக் குறிப்பிடத்தக்க விஷயத்தின் மற்றொரு அம்சத்தைக் கவனிப்போம். ராத்தல்களைப் பற்றிய தம்முடைய உவமையில், இயேசு தூரதேசத்துக்குச் சென்று அங்கே ராஜ அதிகாரத்தைத் தனக்குப் பெற்று, பிறகு திரும்பிய ராஜ பரம்பரையைச் சேர்ந்த ஒரு மனிதனுக்குத் தம்மை ஒப்பிட்டுப் பேசினார். (லூக்கா 19:11, 12) பொ.ச. 33-ல் தம்முடைய உயிர்த்தெழுதலின் பலனாக, இயேசு கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்துக்கு உயர்த்தப்பட்டு அவருடைய சத்துருக்களைத் தனது பாதபடியாக்கிப் போடும்வரை அங்கே அமர்ந்திருக்க வேண்டியவரானார்.—அப்போஸ்தலர் 2:33–35.
13 அதற்கு இணையான ஓர் உவமையில், தாலந்துகளைப்பற்றிய உவமையில், வெகு காலமான பின்பு, எஜமான் தன் அடிமைகளிடத்தில் கணக்கைத் தீர்க்கும்படித் திரும்பி வந்ததாக இயேசு கூறினார். தங்களை உண்மையுள்ளவர்களாய் நிரூபித்த ஊழியக்காரர்களிடம் எஜமான் கூறினார்: “கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி.” ஆனால் உண்மையற்ற ஊழியக்காரனைப்பற்றி அவர் சொன்னதாவது: “இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்.”—மத்தேயு 25:21–23, 29, 30.
14. தம்முடைய ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியக்காரரிடம் இயேசு எதை எதிர்பார்த்தார்?
14 வெகுகாலத்திற்குப் பின்பு—ஏறக்குறைய 19 நூற்றாண்டுகளுக்குப் பின்பு—1914-ல் “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்” முடிவில் கிறிஸ்துவுக்கு அரச அதிகாரம் அளிக்கப்பட்டது. (லூக்கா 21:24) அதைத் தொடர்ந்து, அவர் ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாகிய தம்முடைய அடிமைகளிடம் ‘திரும்பிவந்து கணக்குத்தீர்த்தார்.’ (மத்தேயு 25:19) இயேசு அவர்களிடம் தனிப்பட்டவர்களாகவும் கூட்டாகவும் எதிர்பார்த்தது என்ன? முதல் நூற்றாண்டில் இருந்தது போன்று உக்கிராணக்காரன் பொறுப்பு தொடர்ந்தது. கிறிஸ்து தனிப்பட்டவர்களிடத்தில் தாலந்துகளை ஒப்படைத்தார்—“அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக ஒவ்வொருவனிடத்திலும்” ஒப்படைத்தார். ஆகவே இயேசு அதற்கேற்ற பலன்களை எதிர்பார்த்தார். (மத்தேயு 25:15) இந்த இடத்தில் 1 கொரிந்தியர் 4:2-ல் உள்ள விதிமுறை பொருந்துகிறது: “உக்கிரணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.” தாலந்துகளைப் பயன்படுத்துவது என்பது, கடவுளுக்காக உண்மையுள்ள “ஸ்தானாபதிகளாகச்” செயல்பட்டு, சீஷராக்கி, ஆவிக்குரிய சத்தியங்களைப் பகிர்ந்து அவர்களுக்கு அளிக்க வேண்டியதை அர்த்தப்படுத்தியது.—2 கொரிந்தியர் 5:20.
முடிவு காலம் நெருங்கியபோது அந்த “அடிமை”யும் அதன் ஆளும் குழுவும்
15. (எ) தம்முடைய வீட்டுக் கூட்டு விசாரணைக்காரரிடமிருந்து கிறிஸ்து எதிர்பார்த்தது என்ன? (பி) தம்முடைய வீட்டாரை ஆய்வு செய்ய வருவதற்கு முன்பு இந்த அடிமை வகுப்பு இதைச் செய்துகொண்டிருப்பதைக் கிறிஸ்து எதிர்பார்த்தார் என்பதை எது காட்டுகிறது?
15 அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் உண்மையுள்ள உக்கிராணக்காரனாய், தம்முடைய பணிவிடைக்காரர் தொகுதிக்கு “தகுதியான காலத்திலே படி கொடுக்கும்படி” இயேசு எதிர்பார்த்தார். (லூக்கா 12:42) லூக்கா 12:43-ன் (NW) பிரகாரம், கிறிஸ்து பின்வருமாறு சொன்னார்: “எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் மகிழ்ச்சியுள்ளவன்.” இது எதை அர்த்தப்படுத்துகிறதென்றால், தம்முடைய ஆவியால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழிக்காரருடன் கணக்கைத் தீர்க்கும்படி கிறிஸ்து வருவதற்குச் சில காலங்களுக்கு முன்னதாகவே அவர்கள் தேவனுடைய வீடாகிய கிறிஸ்தவ சபையின் அங்கத்தினருக்கு ஆவிக்குரிய உணவைப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கிறிஸ்து 1914-ல் ராஜ்ய வல்லமையுடன் வந்து 1918-ல் தேவனுடைய வீட்டை ஆய்வு செய்கையில் யார் அவ்விதம் செய்துகொண்டிருந்ததாகக் கண்டார்?—மல்கியா 3:1–4; லூக்கா 19:12; 1 பேதுரு 4:17.
16. 1918-ல் கிறிஸ்து தேவனுடைய வீட்டை ஆய்வுசெய்ய வந்தபோது, கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகள் ஏன் ஆவிக்குரிய ஆகாரத்தை ஏற்றவேளையில் கொடுக்காதிருந்ததைக் கண்டார்?
16 யெகோவாவின் வலது பாரிசத்தில் இயேசு காத்துக்கொண்டிருந்த நீண்ட காலப்பகுதி முடிவை அடைய இருக்கையில், 1914-க்கு முன்னான காலப்பகுதியிலுங்கூட யார் கிறிஸ்துவின் ஊழியக்காரருக்கு ஆவிக்குரிய உணவை அளித்துக் கொண்டிருந்தனர் என்பது படிப்படியாகத் தெளிவானது. அது கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளாயிருந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாகவே இல்லை. ஏனெனில், அவர்கள் அரசியலில் தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் குடியேற்ற நாட்டிற்குரிய மனமுவந்த ஏதுக்களாக, தங்களுடைய தேசப்பற்றை நிரூபிக்கும்படி ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையுடனிருந்து இவ்விதம் தேசபக்தியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். இது முதல் உலக யுத்தத்தில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கு அவர்கள் தங்களுடைய தீவிரமான ஆதரவைக் கொடுக்கையில் விரைவில் அவர்கள் மீது அதிக இரத்தப்பழியைக் கொண்டுவந்தது. ஆவிக்குரிய வகையில் நவீன காலத் தத்துவங்களால் அவர்களுடைய விசுவாசம் பலவீனமாக்கப்பட்டிருந்தது. அவர்களுள் பெரும்பாலான மதத்தலைவர்கள் வேதாகமத்தை நுட்பப்பிழைபார்ப்போரின் கண்களோடு ஆய்வதற்கும் பரிணாமக் கோட்பாட்டுக்கும் எளிதில் இரையானதால் ஓர் ஆவிக்குரிய ஆபத்தான நிலை வந்தது. கிறிஸ்தவ மண்டலத்தின் மதத்தலைவர்களிடமிருந்து எவ்வித ஆவிக்குரிய போஷாக்கும் எதிர்பார்ப்பதற்கில்லை!
17. இயேசு ஏன் சில அபிஷேகம்பண்ணப்பட்டக் கிறிஸ்தவர்களை நிராகரித்தார்? அவர்களுக்கு என்ன விளைவுகளுடன்?
17 அதுபோலவே, எஜமானின் தாலந்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகத் தங்களுடைய சொந்த இரட்சிப்பின் பேரிலேயே அதிகக் கவனம் செலுத்திய அபிஷேகம்பண்ணப்பட்டக் கிறிஸ்தவர்களிடமிருந்தும் போஷாக்கு மிகுந்த ஆவிக்குரிய உணவு ஏதும் வரவில்லை. அவர்கள் எஜமானின் உடைமைகளின் பேரில் கவனம் செலுத்தத் தகுதியற்றவர்களாய் “சோம்பலாகி” விட்டார்கள். எனவே அவர்கள் “புறம்பான இருளிலே” தள்ளப்பட்டார்கள். இன்னமும் அங்கேதானே கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் இருக்கின்றன.—மத்தேயு 25:24–30.
18. எஜமான் தமது வேலைக்காரருக்கு யார் ஏற்ற வேளையிலே போஜனங்கொடுத்து வருவதாகக் கண்டார்? இதை எது நிரூபிக்கிறது?
18 1918-ல் தமது ஊழியக்காரரை ஆய்வு செய்ய வருகையில், இயேசு கிறிஸ்துவாகிய எஜமான் தமது வேலைக்காரருக்கு யார் ஏற்ற வேளையிலே போஜனங்கொடுத்து வருவதாகக் கண்டார்? அந்தச் சமயத்தில் உண்மை மனதோடு சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு மீட்கும் கிரய பலியைப் பற்றியும், தெய்வீக நாமம், கிறிஸ்துவின் காணக்கூடாத வந்திருத்தல் மற்றும் 1914-ன் குறிப்பிடத்தக்க தன்மை இவற்றைப் பற்றிய சரியான புரிந்து கொள்ளுதலைக் கொடுத்துக் கொண்டிருந்தது யார்? திரித்துவம், மனித ஆத்துமா அழியாமை மற்றும் நரக அக்கினி போன்ற பொய்ப் போதகங்களை யார் வெளிக்கொணர்ந்தனர்? மேலும் பரிணாமம் மற்றும் ஆவிக்கொள்கை போன்றவற்றின் அபாயங்களைப் பற்றி யார் எச்சரித்திருந்தனர்? உண்மைகள் காட்டுவது யாதெனில், அது இப்பொது காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (The Watchtower Announcing Jehovah’s Kingdom) என்று அழைக்கப்படும் ஜயன்ஸ் உவாட்ச் டவர் அண்டு ஹெரல்டு ஆஃப் கிறைஸ்ட்ஸ் பிரசன்ஸ் (Zion’s Watch Tower and Herald of Christ’s Presence) என்று ஆங்கிலத்தில் வெளியான பத்திரிகையின் பிரசுரிப்பாளருடன் தொடர்புடைய அபிஷேகம்பண்ணப்பட்டக் கிறிஸ்தவர்களின் தொகுதியாக இருந்தது.
19. உண்மையுள்ள அடிமை வகுப்பு 1918-க்கு முன்பு தன்னை எப்படி வெளிப்படுத்தியது? அது ஆவிக்குரிய உணவை எதன் மூலம் பகிர்ந்தளித்து வந்தது? எப்பொழுது முதல்?
19 ஆங்கில காவற்கோபுரம் அதன் நவம்பர் 1, 1944 வெளியீட்டில் இப்படியாகக் கூறியது: “1878-ல் அதாவது 1918-ல் கர்த்தர் ஆலயத்திற்கு வருகைதருவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கிறிஸ்தவத்தை அப்பியாசிக்க வகை தேடிய ஒரு வகுப்பினர் இருந்தனர். இவர்கள் குருக்கள் மற்றும் மதத்தலைவர்கள் அடங்கிய நிறுவனங்களிலிருந்து வெளியேறிய புனிதமான உண்மைக் கிறிஸ்தவர்களாய் இருந்தனர். . . . அதைத் தொடர்ந்த வருடமாகிய ஜூலை 1879-ல் தேவன் கிறிஸ்துவின் மூலமாக அளித்த ‘ஏற்ற வேளையின் உணவாகிய’ சத்தியங்கள் புனிதமான பிள்ளைகளடங்கிய அவருடைய வீட்டார் அனைவருக்கும் ஒழுங்காகப் பகிர்ந்தளிக்கப்படும்படி இந்தப் பத்திரிகையாகிய காவற்கோபுரம் பிரசுரிக்கப்பட ஆரம்பித்தது.”
20. (எ) ஒரு நவீன நாளைய ஆளும் குழு எப்படி காட்சியில் தோன்றியது? (பி) ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர்? யாருடைய வழிநடத்துதலின்கீழ்?
20 நவீன நாளைய ஆளும் குழுவின் முன்னேற்றத்தைப் பற்றிய தகவலை அளிக்கையில், ஆங்கில காவற்கோபுரம் டிசம்பர் 15, 1971 வெளியீடு விளக்கியது: “ஐந்து வருடங்களுக்குப் பின்னர், [1884] ஜயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸையிட்டி, தேவனைத் தேடுவதிலும், அவருடைய வார்த்தையை விளங்கிக்கொள்வதிலும் உண்மை மனமுள்ள ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு ஆவிக்குரிய உணவை அளிக்கும்படியாக ஒரு ‘ஸ்தாபனமாக’ சேவை செய்யும்படி சேர்த்துக்கொள்ளப்பட்டது. . . . ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்டு, அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் பென்சில்வேனியாவில் தலைமைக் காரியாலயத்தைக் கொண்டிருந்த அந்தச் சங்கத்துடன் கூட்டுறவு வைத்துக்கொண்டனர். அவர்கள் இயக்குனர் குழுவில் இருந்தார்களோ, இல்லையோ, அவர்கள் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பினரின் விசேஷ வேலைக்காகத் தங்களையே அர்ப்பணம் செய்யும் நிலையில் தங்களை வைத்துக்கொண்டனர். அடிமை வகுப்பினரின் உணவளிக்கும் மற்றும் வழிநடத்தும் வேலையில் அவர்கள் உதவினர். இப்படியாக ஓர் ஆளும் குழு தோன்றியது. இது யெகோவாவின் காணக்கூடாத கிரியை நடப்பிக்கும் சக்தியாகிய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் இருந்தது என்பது தெளிவாயிருந்தது. மேலும் கிறிஸ்தவ சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின் கீழ் இருந்தது.”
21. (எ) ஆவிக்குரிய ஆகாரத்தை யார் பகிர்ந்தளித்துக்கொண்டிருப்பதை கிறிஸ்து கண்டார்? அவர்களுக்கு எப்படி பலனளித்தார்? (பி) உண்மையுள்ள அடிமைக்கும் அதன் ஆளும் குழுவுக்கும் என்ன காத்துக்கொண்டிருந்தது?
21 இவ்விதமாக 1918-ல் கிறிஸ்துவின் அடிமைகள் என்று தங்களை உரிமைபாராட்டியவர்களை அவர் ஆய்வு செய்தபோது, கிறிஸ்தவர்களடங்கிய ஒரு சர்வதேசத் தொகுதி சபையின் உள்ளேயும் வெளியே பிரசங்கிப்பு வேலையிலும் உபயோகிக்க பைபிள் சத்தியங்களைப் பிரசுரிப்பதைக் கண்டார். 1919-ல் அது கிறிஸ்து முன்னுரைத்தது போலவே ஆனது: “எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே மகிழ்ச்சியுள்ளவன். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:46, 47, NW) இந்த மெய்க் கிறிஸ்தவர்கள் தங்களுடைய எஜமானரின் சந்தோஷத்துக்குள் பிரவேசித்தனர். தங்களை “கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய்” காட்டினவர்களாக, அவர்கள் எஜமானால் “அநேகத்தின் மேல்” நியமிக்கப்பட்டனர். (மத்தேயு 25:21) அந்த உண்மையான அடிமையும் அதன் ஆளும்குழுவும் தங்கள் ஸ்தானத்தில் இருந்துகொண்டு இன்னும் விரிவான ஒரு வேலை நியமனத்திற்குத் தயாராக இருந்தனர். இது இவ்வாறு இருந்ததற்கு நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த அடிமையாலும் அதன் ஆளும் குழுவாலும் பக்திவைராக்கியத்துடன் செய்யப்படும் வேலையின் மூலம் உண்மைக் கிறிஸ்தவர்கள் அபரிமிதமாக நன்மை அடைந்துவருகின்றனர்! (w90 3/15)
நினைவில் கொண்டிருக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
◻ கடவுளுடைய வீட்டாரின் தலைவர் யார்? இவர் யாருக்கு அதிகாரத்தை ஒப்படைத்திருக்கிறார்?
◻ கூட்டாகச் செய்யப்படவேண்டிய என்ன வேலையை இயேசு அடிமை வகுப்புக்கு நியமித்திருக்கிறார்?
◻ அடிமை வகுப்பினுள் வேறு என்ன கூட்டுக் குழு இருந்தது? அதன் பிரத்தியேகக் கடமைகள் யாவை?
◻ கிறிஸ்து கடவுளுடைய வீட்டாரை ஆய்வு செய்ய வந்தபோது, அதன் அங்கத்தினருக்கு ஆவிக்குரிய உணவை அளித்துவந்தது யார்?
◻ ஒரு நவீன நாளைய ஆளும் குழு எவ்வாறு தோன்றியது?
9. ஆரம்பப் பகுதியிலிருந்த ஆளும் குழு எப்படி எண்ணிக்கையில் 11 அங்கத்தினராகக் குறைந்தது? ஆனால் அந்த எண்ணிக்கை ஏன் உடனடியாக 12-ஆக நிறைவுசெய்யப்படவில்லை?
[பக்கம் 10-ன் படம்]
முதல் நூற்றாண்டு “அடிமை” அப்போஸ்தலரும் எருசலேம் சபையின் மூப்பர்களும் அடங்கிய ஓர் ஆளும் குழுவைக் கொண்டிருந்தது