‘உண்மையுள்ள அடிமை’ சோதனையில் தேறுகிறது!
‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்கும் காலமாயிருக்கிறது.’—1 பேதுரு 4:17.
1. இயேசு தம்முடைய ‘அடிமையை’ சோதனையிட்டபோது எதைக் கண்டார்?
தம்முடைய “வீட்டாருக்கு” ஏற்ற வேளையிலே உணவளிப்பதற்காக பொ.ச. 33 பெந்தெகொஸ்தே தினத்தன்று இயேசு ஒரு ‘அடிமையை’ நியமித்தார். 1914-ல், ராஜாவாக இயேசு சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டதும் அந்த ‘அடிமையை’ சோதனையிடுவதற்கான நேரம் வந்தது. அந்த “அடிமை” வகுப்பை சேர்ந்த பெரும்பாலோர் ‘உண்மையுள்ளவர்களாயும் விவேகமுள்ளவர்களாயும்’ நடந்து கொண்டதை அவர் கண்டார். எனவே, தம்முடைய “ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும்” அந்த அடிமைக்குப் பொறுப்பளித்தார். (மத்தேயு 24:45-47; NW) ஆனால், உண்மையோடும் விவேகத்தோடும் நடந்துகொள்ளாத ஒரு பொல்லாத அடிமையும் இருந்தான்.
‘அந்தப் பொல்லாத அடிமை’
2, 3. ‘அந்தப் பொல்லாத அடிமை’ வகுப்பு எங்கிருந்து வந்தது, அது எப்படி வளர்ந்தது?
2 இயேசு, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யைப் பற்றி கலந்தாலோசித்தவுடனேயே பொல்லாத ஒரு அடிமையைப் பற்றி சொன்னார்: “அந்த ஊழியக்காரனோ [“அடிமையோ,” NW] பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன் வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.” (மத்தேயு 24:48-51) ‘அந்த அடிமையோ பொல்லாதவனாயிருந்தான்’ என்ற சொற்றொடரை கவனியுங்கள்; இச்சொற்றொடர் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைப் பற்றி இதற்கு முந்தின வசனத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளிடம் நம் கவனத்தை திருப்புகிறது. ஆம், அந்தப் ‘பொல்லாத அடிமை’ வகுப்பு உண்மையுள்ள அடிமை வகுப்பிலிருந்தே வந்தது.a எப்படி?
3 உண்மையுள்ள அடிமை வகுப்பை சேர்ந்த ஏராளமானோர், 1914-ம் வருடத்தில் பரலோகத்திற்கு சென்று மணவாளனை சந்திக்கும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்; ஆனால் அந்த வருடத்தில் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அந்தக் காரணத்தினாலும் வேறு சில காரணங்களாலும் அவர்களில் அநேகர் ஏமாற்றமடைந்தார்கள், சிலர் மனக்கசப்புற்றார்கள். இவர்களில் கொஞ்சம் பேர் தங்கள் முன்னாள் சகோதரர்களை வார்த்தைகளால் “அடிக்கத்” தொடங்கினார்கள்; ‘குடி வெறியரோடு,’ கிறிஸ்தவமண்டல மதப் பிரிவுகளோடு சேர்ந்தும் கொண்டார்கள்.—ஏசாயா 28:1-3; 32:6.
4. அந்தப் ‘பொல்லாத அடிமையை’ இயேசு என்ன செய்தார், அவர்களுடைய அதே மனப்பான்மையை வெளிக்காட்டுகிறவர்களின் முடிவென்ன?
4 காலப்போக்கில் இந்த முன்னாள் கிறிஸ்தவர்கள் ‘பொல்லாத அடிமை’ வகுப்பாராக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள்; அவர்களை இயேசு ‘கடினமாய் தண்டித்தார்.’ எப்படி? அவர்களை நிராகரித்தார், அதனால் பரலோகத்துக்கு செல்லும் சிலாக்கியத்தை அவர்கள் இழந்தார்கள். என்றாலும், உடனடியாக அவர்கள் அழிக்கப்படவில்லை. கிறிஸ்தவ சபைக்கு “புறம்பான இருளிலே” ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அழுகையையும் பற்கடிப்பையும் அவர்கள் முதலில் சகிக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 8:12) அந்த சமயம் தொடங்கி, அபிஷேகம் செய்யப்பட்ட வேறு சிலரும்கூட அதே போன்ற பொல்லாத மனப்பான்மையை வெளிக்காட்டியிருக்கிறார்கள், இதன் மூலம் தாங்கள்தான் அந்தப் ‘பொல்லாத அடிமை’ என்பதை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த சிலரும் அவர்களுடைய உண்மையற்ற தன்மையை பின்பற்றியிருக்கிறார்கள். (யோவான் 10:16) அத்தகைய கிறிஸ்துவின் எதிரிகள் அனைவரின் முடிவும் ஆவிக்குரிய ‘புறம்பான இருளே.’
5. அந்தப் ‘பொல்லாத அடிமையைப்’ போல் இல்லாமல், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் எப்படி பிரதிபலித்தார்கள்?
5 அந்தப் ‘பொல்லாத அடிமைக்கு’ வந்த அதே சோதனைகள்தான் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”க்கும் வந்தன என்றபோதிலும், இந்த உண்மை வகுப்பார் மனக்கசப்புறுவதற்கு பதிலாக, தங்கள் எண்ணங்களை சரிசெய்து கொண்டார்கள். (2 கொரிந்தியர் 13:11) யெகோவா மீதும் சகோதரர்கள் மீதும் அவர்களுக்கிருந்த அன்பு ஆழமானது. அதன் விளைவாக, அவர்கள் இந்தக் கொந்தளிப்புமிக்க ‘கடைசி நாட்களின்போது’ “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிரு”ந்து வந்திருக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 3:15; 2 தீமோத்தேயு 3:1.
விவேகமுள்ள கன்னிகைகளும், புத்தியில்லா கன்னிகைகளும்
6. (அ) தம்முடைய உண்மையுள்ள அடிமை வகுப்பாரின் விவேகத்தை விளக்க இயேசு என்ன உவமையை சொன்னார்? (ஆ) 1914-க்கு முன்னர், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்தியை அறிவித்தார்கள்?
6 ‘அந்தப் பொல்லாத அடிமையைப்’ பற்றி சொன்ன பிறகு, இயேசு வேறு இரண்டு உவமைகளை சொன்னார்; அபிஷேகம் செய்யப்பட்ட சிலர் மட்டும் ஏன் உண்மையாயும் விவேகமாயும் இருப்பார்களென்றும், மற்றவர்கள் ஏன் அப்படி இருக்க மாட்டார்களென்றும் காண்பிப்பதற்காக அந்த உவமைகளை சொன்னார்.b விவேகம் என்ற குணத்தை விளக்க பின்வரும் உவமையை சொன்னார்: “பரலோக ராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், [“விவேகமுள்ளவர்களும்,” NW] ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் [“விவேகமுள்ளவர்கள்,” NW] தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள்.” (மத்தேயு 25:1-4) இந்தப் பத்து கன்னிகைகள், 1914-க்கு முன்பிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை நமக்கு நினைப்பூட்டுகிறார்கள். மணவாளனான இயேசு கிறிஸ்து அந்தச் சமயத்தில்தான் வரப் போகிறாரென்று அவர்கள் கணக்கிட்டிருந்தார்கள். எனவே, “புறஜாதியாரின் காலம்” 1914-ல் முடிவடையப் போகிறதென்ற விஷயத்தை தைரியமாக பிரசங்கித்தவாறே, அவரை சந்திக்க ‘புறப்பட்டார்கள்.’—லூக்கா 21:24.
7. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்போது, ஏன் அடையாள அர்த்தத்தில் “தூங்கிவிட்டார்கள்”?
7 அவர்கள் சரியாகவே கணக்கிட்டிருந்தார்கள். ஆம், புறஜாதியாரின் காலம் 1914-ல் முடிவடைந்தது; கிறிஸ்து இயேசுவின் அதிகாரத்திலுள்ள கடவுளுடைய ராஜ்யம் அதன் ஆட்சியை தொடங்கியது. ஆனால் அது காணக்கூடாத பரலோகத்தில் செயல்பட்டது. பூமியில் குடியிருப்போருக்கு “ஐயோ” என்று முன்னறிவிக்கப்பட்டபடியே, மனிதவர்க்கம் பல இன்னல்களை அனுபவிக்க ஆரம்பித்தது. (வெளிப்படுத்துதல் 12:10, 12) சோதனையிடுவதற்கான காலம் அப்போது ஆரம்பமானது. காரியங்களை தெளிவாக புரிந்துகொள்ளாத அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், ‘மணவாளன் வரத் தாமதிக்கிறார்’ என்று நினைத்தார்கள். குழப்பமடைந்து போனதாலும், இவ்வுலகத்தின் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்ததாலும், ஒழுங்கமைக்கப்பட்ட தங்களுடைய பிரசங்க வேலையில் சற்று பின்தங்கிப் போனார்கள், அதை கிட்டத்தட்ட நிறுத்தியும் விட்டார்கள். அந்த உவமையில் சொல்லப்பட்ட கன்னிகைகளைப் போலவே, அவர்கள் ஆவிக்குரிய அர்த்தத்தில் “நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.” இயேசுவின் அப்போஸ்தலர்கள் மரித்த பிறகு, கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்ட உண்மையற்ற சிலர் செய்ததைப் போலவே அவர்கள் செய்தார்கள்.—மத்தேயு 25:5; வெளிப்படுத்துதல் 11:7, 8; 12:17.
8. “இதோ, மணவாளன் வருகிறார்” என்று ஏன் அறிவிக்கப்பட்டது, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்வதற்கான வேளை வந்தது?
8 பிற்பாடு, 1919-ல், எதிர்பாரா ஒன்று நிகழ்ந்தது. “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.” (மத்தேயு 25:6, 7) நம்பிக்கையற்றுக் கிடந்த ஒரு சமயத்தில், சுறுசுறுப்பாய் செயல்பட தயாராகும்படி ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது! 1918-ல், யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தை சோதனையிடுவதற்காகவும் அவருடைய சபையை சுத்திகரிப்பதற்காகவும் ‘உடன்படிக்கையின் தூதனான’ இயேசு வந்திருந்தார். (மல்கியா 3:1) இச்சமயத்தில்தான், அந்த ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களில் அவரை சந்திப்பதற்காக அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் புறப்பட்டுப் போக வேண்டியிருந்தது. அவர்கள் ஒளியை “பிரகாசி”ப்பதற்கான வேளை வந்தது.—ஏசாயா 60:1; பிலிப்பியர் 2:14-16.
9, 10. 1919-ல், கிறிஸ்தவர்களில் சிலர் ‘விவேகமுள்ளவர்களாகவும்,’ சிலர் ‘புத்தியில்லாதவர்களாகவும்’ இருந்தது ஏன்?
9 ஆனால், கொஞ்சம் பொறுங்கள். அந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள சில கன்னிகைகளுக்கு ஒரு சிக்கல் இருந்தது. இயேசு தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை [“விவேகமுள்ளவர்களை,” NW] நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள்.” (மத்தேயு 25:8) எண்ணெய் இல்லாமல் தீவட்டிகளால் ஒளியைத் தர முடியாது. ஆகவே, அந்த எண்ணெய் கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தையும், உண்மை வணக்கத்தாரை ஒளி ஏந்தி செல்வோராக ஆக்குகிற அவருடைய பரிசுத்த ஆவியையும் நமக்கு நினைப்பூட்டுகிறது. (சங்கீதம் 119:130; தானியேல் 5:14) 1919-க்கு முன், அபிஷேகம் செய்யப்பட்ட விவேகமுமுள்ள கிறிஸ்தவர்கள் தற்காலிகமாக சோர்வுற்றிருந்த போதிலும், தங்களுக்கான கடவுளுடைய சித்தம் என்ன என்பதை அறிவதற்கு ஊக்கமாக முயற்சி செய்திருந்தார்கள். எனவே, ஒளியை பிரகாசிக்கும்படியான கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது அவர்கள் தயாராக இருந்தார்கள்.—2 தீமோத்தேயு 4:2; எபிரெயர் 10:24, 25.
10 என்றாலும், அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு சிலர், மணவாளனோடு இருப்பதற்கு மனதார ஆசைப்பட்டாலும், தியாகங்களை செய்யவோ தனிப்பட்ட விதத்தில் ஊக்கமாக முயற்சி எடுக்கவோ தயாராக இருக்கவில்லை. ஆகவே, நற்செய்தியை சுறுசுறுப்பாக பிரசங்கிப்பதற்கான நேரம் வந்தபோது, அவர்கள் அதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை. (மத்தேயு 24:14) அவர்கள் ஆயத்தமாக இல்லாததோடு அவர்களது வைராக்கியமான தோழர்களின் உற்சாகத்தையும் குறைக்க முயன்றார்கள்; இது அவர்களிடமிருந்து கொஞ்சம் எண்ணெய்யை கேட்பது போல இருந்தது. இயேசுவின் அந்த உவமையில், விவேகமுள்ள கன்னிகைகள் எப்படி பதிலளித்தார்கள்? “எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்போய், உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். (மத்தேயு 25:9) அதே விதமாக, 1919-லிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட உண்மை கிறிஸ்தவர்கள் ஒளி ஏந்திச் செல்ல தங்களுக்கிருந்த திறமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட மறுத்து விட்டார்கள். இதன் காரணமாக, அவர்கள் சோதனையில் தேர்ச்சி பெற்றார்கள்.
11. புத்தியில்லா கன்னிகைகளுக்கு என்ன நேரிட்டது?
11 இயேசு தம் உவமையை பின்வருமாறு முடிக்கிறார்: “அப்படியே அவர்கள் [அந்தப் புத்தியில்லா கன்னிகைகள்] வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்ற கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்க வேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (மத்தேயு 25:10-12) ஆம், சிலர் மணவாளனுடைய வருகைக்கு தயாராக இருக்கவில்லை. இதன் காரணமாக, அவர்கள் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை, பரலோகத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பையும் இழந்தார்கள். எப்பேர்ப்பட்ட வருத்தகரமான முடிவு!
தாலந்துகளைப் பற்றிய உவமை
12. (அ) உண்மைத்தன்மையை விளக்க இயேசு என்ன உவமையைப் பயன்படுத்தினார்? (ஆ) “புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்” சென்ற மனுஷன் யார்?
12 விவேகத்தை விளக்கும் ஓர் உவமையை சொன்ன பிறகு, உண்மைத்தன்மையை விளக்கும் வேறொரு உவமையை இயேசு சொன்னார்: “பரலோக ராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை [“அடிமைகளை,” NW] அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்தது போல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.” (மத்தேயு 25:14, 15) உவமையில் சொல்லப்பட்ட அந்த மனுஷன் இயேசுவே; அவர் பொ.ச. 33-ம் ஆண்டில் பரலோகத்திற்குப் போனபோது ‘புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போனார்.’ ஆனால் அப்படி செல்வதற்கு முன், “தன் ஆஸ்திகளை” தம்முடைய உண்மையுள்ள சீஷர்கள் கையில் ஒப்படைத்தார். எவ்வாறு?
13. ஊழியத்திற்கான ஒரு பெரிய பிராந்தியத்தை இயேசு எவ்வாறு தயார்படுத்தினார், எவ்வாறு தம் ‘ஊழியக்காரர்’ வியாபாரம் செய்ய அதிகாரம் கொடுத்தார்?
13 இயேசு தம் பூமிக்குரிய ஊழியத்தின்போது, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இஸ்ரவேல் தேசமெங்கும் பிரசங்கித்தார்; இதன் மூலம் ஊழியத்திற்கான ஒரு பெரிய பிராந்தியத்தை தயார்படுத்த ஆரம்பித்தார். (மத்தேயு 9:35-38) “புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப்” போவதற்கு முன், தம்முடைய உண்மையுள்ள சீஷர்களிடம் அந்தப் பிராந்தியத்தை ஒப்படைத்துவிட்டு இவ்வாறு சொன்னார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:18-20) இப்படி சொன்னதன் மூலம், தாம் திரும்பி வரும் வரை தம்முடைய ‘ஊழியக்காரர்’ ‘அவரவருடைய திறமைக்குத்தக்கதாக’ வியாபாரம் செய்வதற்கான அதிகாரத்தை கொடுத்தார்.
14. எல்லாருமே ஒரே அளவில் வியாபாரம் செய்யும்படி ஏன் எதிர்பார்க்கப்படவில்லை?
14 “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக” என்ற சொற்றொடர், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஒரே விதமான சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் இருக்கவில்லை என்பதை குறிக்கிறது. பவுல், தீமோத்தேயு போன்ற சிலர், எந்தளவு முடிந்ததோ அந்தளவு முழுமையாக பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் ஈடுபட்டனர். மற்றவர்களோ அதிகமாக ஊழியத்தில் ஈடுபட முடியாதபடி கடினமான சூழ்நிலைகளில் இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு, சில கிறிஸ்தவர்கள் அடிமைகளாக, வியாதிப்பட்டவர்களாக, வயதானவர்களாக, அல்லது குடும்பப் பொறுப்பை சுமப்பவர்களாக இருந்தார்கள். உண்மைதான், சபையில் குறிப்பிட்ட சில ஊழிய சிலாக்கியங்கள் எல்லா சீஷர்களுக்குமே கொடுக்கப்படவில்லை. அபிஷேகம் செய்யப்பட்ட பெண்களும், அபிஷேகம் செய்யப்பட்ட சில ஆண்களும்கூட சபையில் போதிக்கிற நியமிப்பைப் பெறவில்லை. (1 கொரிந்தியர் 14:34; 1 தீமோத்தேயு 3:1; யாக்கோபு 3:1) என்றபோதிலும், ஆண்கள், பெண்கள் என கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் அனைவருமே வியாபாரத்தில் ஈடுபட வேண்டியிருந்தது; அதாவது, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டு கிறிஸ்தவ ஊழியத்திலும் ஈடுபட வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் நவீன நாளைய சீஷர்கள்கூட அதையே செய்கிறார்கள்.
சோதனையிடுவதற்கான நேரம் ஆரம்பமாகிறது!
15, 16. (அ) கணக்கு தீர்ப்பதற்கான காலம் எப்போது வந்தது? (ஆ) ‘வியாபாரம் பண்ண’ உண்மையுள்ளவர்களுக்கு என்ன வாய்ப்புகள் புதிதாக அளிக்கப்பட்டன?
15 அந்த உவமை இவ்வாறு தொடர்கிறது: “வெகு காலமான பின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பி வந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.” (மத்தேயு 25:19) 1914-ல் கிறிஸ்து இயேசு ராஜாவாக வந்தார்; பொ.ச. 33-லிருந்து அதைக் கணக்கிட்டால் நிச்சயம் அது வெகு காலம்தான். மூன்றரை வருடங்களுக்கு பிறகு, 1918-ல் கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்திற்கு வந்தார்; ‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவங்கும் காலமாயிருக்கிறது’ என்ற பேதுருவின் வார்த்தைகளை அச்சமயத்தில் அவர் நிறைவேற்றினார். (1 பேதுரு 4:17; மல்கியா 3:1) ஆம், கணக்கு தீர்க்கிற காலம் அப்போது வந்தது.
16 ஊழியக்காரர்களான இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள், ராஜாவின் ‘தாலந்துகளை’ என்ன செய்தார்கள்? பொ.ச. 33 முதற்கொண்டு 1914 வரைக்குமான அந்த காலப்பகுதியில், அநேகர் இயேசுவின் ‘வியாபாரத்திற்காக’ கடினமாய் உழைத்துக் கொண்டிருந்தார்கள். (மத்தேயு 25:16) முதல் உலகப் போரின்போதுகூட, அவர்கள் தங்களுடைய எஜமானுக்கு சேவை செய்ய அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆக, இந்த சமயத்தில் உண்மையுள்ளவர்களுக்கு ‘வியாபாரம் பண்ணுவதற்கு’ புதிதாக வாய்ப்புகளை கொடுப்பது பொருத்தமானதாக இருந்தது. இந்த ஒழுங்குமுறை முடிவடைவதற்கான காலம் வந்துவிட்டிருந்தது. உலகெங்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. ‘பூமியின் பயிரை’ அறுவடை செய்ய வேண்டியிருந்தது. (வெளிப்படுத்துதல் 14:6, 7, 14-16) அதுமட்டுமல்ல, கோதுமை வகுப்பை சேர்ந்த கடைசி அங்கத்தினர்களை கண்டுபிடிப்பதோடு, வேறே ஆடுகளை சேர்ந்த ‘திரள் கூட்டமான’ ஜனங்களையும் கூட்டி சேர்க்க வேண்டியிருந்தது.—வெளிப்படுத்துதல் 7:9; மத்தேயு 13:24-30.
17. அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி ‘தங்கள் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசித்தார்கள்’?
17 அறுவடைக் காலம் என்பது சந்தோஷமான ஒரு காலம். (சங்கீதம் 126:6) ஆகவே, 1919-ல், அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய உண்மையுள்ள சகோதரர்களிடம் அதிகப்படியான பொறுப்புகளை இயேசு ஒப்படைத்தபோது, ‘கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி’ என்று அவர் சொன்னது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. (மத்தேயு 25:21, 23) மேலும், கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக புதிதாக முடிசூட்டப்பட்ட எஜமான் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதை நம்மால் கற்பனைக்கூட செய்ய முடியாது. (சங்கீதம் 45:1, 2, 6, 7) உண்மையுள்ள அடிமை வகுப்பார் ராஜாவை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலமாகவும், பூமியிலுள்ள அவருடைய ஆஸ்திகளை அதிகரிப்பதன் மூலமாகவும் அவருடைய சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். (2 கொரிந்தியர் 5:20) அவர்களுடைய சந்தோஷம் ஏசாயா 61:10-ன் தீர்க்கதரிசன வார்த்தைகளில் வெளிப்படுகிறது: “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; . . . அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி”யிருக்கிறார்.
18. சோதனையில் ஏன் சிலர் தேர்ச்சி பெறவில்லை, அவர்களுக்கு என்ன ஆனது?
18 வருத்தகரமாக, சிலர் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை. பின்வருமாறு நாம் வாசிக்கிறோம்: “ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.” (மத்தேயு 25:24, 25) அதே விதமாக, அபிஷேகம் செய்யப்பட்ட சில கிறிஸ்தவர்கள் ‘வியாபாரத்தை’ செய்யவில்லை. அவர்கள் தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து 1914-க்கு முன்னர் மற்றவர்களிடம் உற்சாகமாக பகிர்ந்து கொள்ளவில்லை, 1919-லும் அவர்கள் அதை செய்ய விரும்பவில்லை. அவர்களுடைய அகம்பாவத்தைக் கண்டு இயேசு என்ன செய்தார்? அவர்களுக்குக் கொடுத்திருந்த எல்லா சிலாக்கியங்களையும் எடுத்துப் போட்டார். ‘அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருந்த புறம்பான இருளிலே அவர்களை தள்ளிப் போட்டார்.’—மத்தேயு 25:28, 30.
சோதனை தொடர்கிறது
19. எந்த விதத்தில் சோதனை நடவடிக்கை தொடர்கிறது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லாரும் என்ன செய்ய தீர்மானமாய் இருக்கிறார்கள்?
19 உண்மைதான், 1918-ல், இயேசு தம் சோதனையை ஆரம்பிக்கையில், முடிவு காலத்தின்போது கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட அடிமைகளாக ஆகவிருந்தவர்களில் பெரும்பாலோர் இன்னமும் யெகோவாவை சேவிக்க ஆரம்பிக்கவில்லை. அப்படியானால் அவர்கள் சோதனையிடப்படும் வாய்ப்பை தவறவிட்டு விட்டிருந்தார்களா? இல்லவே இல்லை. 1918/19-ல் நடைபெற்றது சோதனையிடுதலின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகத்தான் இருந்தது; அந்த வருடத்தில் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை ஒரு வகுப்பாராக தேர்ச்சி பெற்றார்கள். என்றாலும், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நிரந்தர முத்திரையைப் பெறும் வரைக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக சோதனையிடப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 7:1-3) இதை உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் தொடர்ந்து உண்மையோடு ‘வியாபாரம் பண்ணுகிறார்கள்.’ தங்கள் ஒளி பிரகாசிப்பதற்கு நிறைய எண்ணெய்யை கைவசம் வைத்துக்கொண்டு, எப்போதும் விவேகமுள்ளவர்களாய் இருக்க தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கடைசி வரை உண்மையோடு இருந்தால், பரலோக வாசஸ்தலத்திலே இயேசு தங்களை சேர்த்துக் கொள்வாரென அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—மத்தேயு 24:13; யோவான் 14:2-4; 1 கொரிந்தியர் 15:50, 51.
20. (அ) இன்றுள்ள வேறே ஆடுகள் என்ன செய்ய தீர்மானமாக இருக்கிறார்கள்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எதை நன்கு அறிந்திருக்கிறார்கள்?
20 வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டத்தார், அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுடைய சகோதரர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றியிருக்கிறார்கள். கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி அறிந்திருப்பது தங்கள் மீது பெரும் பொறுப்பை வைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். (எசேக்கியேல் 3:17-21) எனவே, அவர்கள்கூட யெகோவாவுடைய வார்த்தை, பரிசுத்த ஆவி ஆகியவற்றின் உதவியோடு, தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள் வாயிலாக தங்களிடம் அதிகளவில் எண்ணெய் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். அதோடு, பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் பங்கு கொள்வதன் மூலம் தங்களுடைய ஒளியை பிரகாசிக்க செய்கிறார்கள்; இவ்வாறு அபிஷேகம் செய்யப்பட்ட தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து ‘வியாபாரம் பண்ணுகிறார்கள்.’ என்றாலும், தங்களுடைய கைகளில் தாலந்துகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். பூமியிலுள்ள கர்த்தரின் ஆஸ்திகள் நிர்வகிக்கப்படும் விதத்திற்கு அவர்கள் கணக்கு காட்டியே தீர வேண்டும். எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள் தங்களது பொறுப்பை திரள் கூட்டத்தாரிடம் விட்டுவிட முடியாது. இதை மனதில் வைத்தவர்களாய், உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் ராஜாவின் வியாபாரத்தை பார்த்துக்கொள்வதில் தொடர்ந்து முன்நிற்கிறார்கள்; திரள் கூட்டத்தை சேர்ந்த பற்றுள்ள நபர்கள் தங்களுக்கு கொடுக்கும் ஆதரவுக்கு நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட தங்கள் சகோதரர்களுக்கு உள்ள பொறுப்புகளை உணர்ந்திருக்கும் திரள் கூட்டத்தார் அவர்களுடைய தலைமையின் கீழ் வேலை செய்வதை சிலாக்கியமாக கருதுகிறார்கள்.
21. அன்று, 1919-க்கு முன்பிருந்து இன்று வரையுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் என்ன அறிவுரை பொருந்துகிறது?
21 ஆகவே, இவ்விரண்டு உவமைகளும் 1919-ம் ஆண்டு வாக்கில் நடந்த நிகழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், அதன் நியமங்கள் இந்தக் கடைசி நாட்களில் வாழும் உண்மை கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே பொருந்தும். இவ்விதமாக, பத்து கன்னிகைகளைப் பற்றிய உவமையின் முடிவில் இயேசு கொடுத்த அறிவுரை, முக்கியமாக 1919-க்கு முன்பிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கே பொருந்தினாலும் அதன் நியமம் இன்றும்கூட ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்துகிறது. ஆகவே, அந்த “நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் அனைவரும் செவிசாய்ப்போமாக.—மத்தேயு 25:13.
[அடிக்குறிப்புகள்]
a அதைப் போலவே, அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பின், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்களிலிருந்தே “கொடிதான ஓநாய்” போன்றோர் வந்தார்கள்.—அப்போஸ்தலர் 20:29, 30.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட ‘சமாதானப் பிரபுவின்’ கீழ் உலகமெங்கும் பாதுகாப்பு என்ற ஆங்கில புத்தகத்தில், இயேசுவின் உவமையைப் பற்றிய கூடுதல் கலந்தாலோசிப்பை அதிகாரங்கள் 5, 6-ல் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• தம்முடைய சீஷர்களை இயேசு எப்போது சோதனையிட்டார், அவர் எதைக் கண்டார்?
• ‘அந்தப் பொல்லாத அடிமையின்’ மனப்பான்மையை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலர் ஏன் வளர்த்துக் கொண்டார்கள்?
• ஆவிக்குரிய விதத்தில் விவேகமுள்ளவர்களாக இருப்பதை நாம் எப்படி காண்பிக்கலாம்?
• இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள சகோதரர்களைப் போல நாமும் எப்படி தொடர்ந்து ‘வியாபாரம் பண்ணலாம்’?
[பக்கம் 16-ன் பெட்டி]
இயேசு வருவது எப்போது?
மத்தேயு 24, 25 அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் ‘வருகையைப்’ பற்றிய விஷயம் வெவ்வேறு அர்த்தங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லர்த்தமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவர் ‘வருவதை’ இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, மனிதவர்க்கத்திடமோ தம்மை பின்பற்றுவோரிடமோ தம் கவனத்தை திருப்புகிற அர்த்தத்தில்—பெரும்பாலும் நியாயந்தீர்ப்பதற்காக தம் கவனத்தை திருப்புகிற அர்த்தத்தில்—அவர் ‘வருகிறார்.’ எனவே, 1914-ல் தம்முடைய பிரசன்னத்தை துவக்க முடிசூட்டப்பட்ட ராஜாவாக அவர் ‘வந்தார்.’ (மத்தேயு 16:28; 17:1; அப்போஸ்தலர் 1:11) 1918-ல், உடன்படிக்கையின் தூதனாக அவர் ‘வந்தார்.’ யெகோவாவை சேவிப்பதாக உரிமைபாராட்டிக் கொண்டிருந்தவர்களை அப்போது நியாயந்தீர்க்க ஆரம்பித்தார். (மல்கியா 3:1-3; 1 பேதுரு 4:17) அர்மகெதோனில், யெகோவாவின் எதிரிகளை தண்டிப்பதற்காக அவர் ‘வருவார்.’—வெளிப்படுத்துதல் 19:11-16.
மத்தேயு 24:29-44-லும், 25:31-46-லும் பல முறை குறிப்பிடப்பட்டுள்ள வருகை, ‘மகா உபத்திரவத்தின்போது’ சம்பவிக்கப்போகிறது. (வெளிப்படுத்துதல் 7:14) மறுபட்சத்தில், மத்தேயு 24:45-லிருந்து 25:30 வரைக்குமுள்ள வசனங்களில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ள வருகை, சீஷர்கள் என உரிமைபாராட்டியவர்களை 1918 முதற்கொண்டு நியாயந்தீர்க்க வருவதோடு சம்பந்தப்பட்டது. ஆனால், உண்மையுள்ள அடிமைக்கு பலனளிப்பது, புத்தியில்லா கன்னிகைகளுக்கு தீர்ப்பளிப்பது, எஜமானின் தாலந்தை ஒளித்து வைத்த சோம்பேறி ஊழியக்காரனை நியாயந்தீர்ப்பது ஆகியவை மகா உபத்திரவத்தின்போது இயேசு ‘வருகையில்’ சம்பவிக்கும் என சொல்வது பொருத்தமாக இருக்காது. அப்படி சொல்வது, அபிஷேகம் செய்யப்பட்ட அநேகர் அச்சமயத்தில் உண்மையற்றவர்களாக காணப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு பதிலாக மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அர்த்தமாகிவிடும். வெளிப்படுத்துதல் 7:3-லுள்ள வசனம், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்குள்ளேயே கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட அடிமைகள் எல்லாரும் நிரந்தர ‘முத்திரையைப்’ பெறுவார்கள் என்றே குறிப்பிட்டுக் காட்டுகிறது.
[பக்கம் 14-ன் படம்]
1919-ல், அந்தப் ‘பொல்லாத அடிமை’ எந்த ஆசீர்வாதத்தையும் பெறவில்லை
[பக்கம் 15-ன் படம்]
மணவாளன் வந்தபோது விவேகமுள்ள கன்னிகைகள் தயாராக இருந்தார்கள்
[பக்கம் 17-ன் படம்]
உண்மையுள்ள ஊழியக்காரர்கள் ‘வியாபாரத்தில்’ ஈடுபட்டு வந்தார்கள்
சோம்பேறியான அடிமையோ அவ்வாறு ஈடுபடவில்லை
[பக்கம் 18-ன் படங்கள்]
அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் ‘திரள் கூட்டத்தாரும்’ தங்கள் ஒளியை தொடர்ந்து பிரகாசித்து வருகிறார்கள்