பிறரிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—லூக். 6:31, பொது மொழிபெயர்ப்பு.
1, 2. (அ) மலைப்பிரசங்கம் என்பது என்ன? (ஆ) இந்தக் கட்டுரையிலும் இதற்கு அடுத்தக் கட்டுரையிலும் எதைக் குறித்து சிந்திக்கப் போகிறோம்?
இயேசு கிறிஸ்து மிகப் பெரிய போதகராய் இருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. அவரைக் கைதுசெய்வதற்கு மத விரோதிகள் சேவகர்களை அனுப்பியபோது அவர்கள் வெறுங்கையோடு திரும்பி வந்து, “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்று சொன்னார்கள். (யோவா. 7:32, 45, 46) இயேசுவின் பிரசித்திபெற்ற சொற்பொழிவுகளில் ஒன்றுதான் மலைப்பிரசங்கம். இதை, மத்தேயு சுவிசேஷத்தில் 5 முதல் 7 அதிகாரங்களில் காணலாம்; இதே தகவலை லூக்கா 6:20-49-லும் காணலாம்.a
2 இந்த மலைப்பிரசங்கத்தில் மணிக்கல்லாய் திகழும் குறிப்பே பொன் விதியென பொதுவாக அழைக்கப்படுகிறது. இது பிறரிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றி சொல்கிறது. “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:31, பொ.மொ.) அவர் மக்களுக்கு அநேக நல்ல காரியங்களைச் செய்தார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. வியாதிப்பட்டவர்களை சுகப்படுத்தினார், இறந்தவர்களைக்கூட உயிரோடு எழுப்பினார். என்றாலும், இயேசு சொன்ன நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்களே முக்கியமாய் ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். (லூக்கா 7:20-22-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சாட்சிகளாகிய நாமும் இதேபோல் ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிக்கும் வேலையில் சந்தோஷமாய் ஈடுபடுகிறோம். (மத். 24:14; 28:19, 20) இந்தப் பிரசங்க வேலையைக் குறித்தும் பிற விஷயங்களைக் குறித்தும் மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்னவற்றைப்பற்றி இந்தக் கட்டுரையிலும் இதற்கு அடுத்தக் கட்டுரையிலும் சிந்திக்கப் போகிறோம்; இந்த விஷயங்கள், பிறரிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்டுள்ளன.
சாந்தமாய் இருங்கள்
3. சாந்தகுணத்தை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
3 “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [அதாவது, சந்தோஷமுள்ளவர்கள்]; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:5) சாந்தகுணத்தை பலவீனம் என்பதாக பைபிள் குறிப்பிடுவதில்லை. இது மென்மையான குணம்; இத்தகைய குணத்தைக் காட்டும்படி கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். சக மனிதரிடம் பழகும்போது இந்தக் குணத்தை நாம் காட்டுகிறோம். உதாரணத்திற்கு, நாம் ‘ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்வதில்லை.’—ரோ. 12:17-19.
4. சாந்தகுணமுள்ளவர்கள் ஏன் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்?
4 சாந்தகுணமுள்ளவர்கள் ‘பூமியைச் சுதந்தரித்துக்கொள்ள’ போவதால் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ‘சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள’ இயேசு ‘சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.’ எனவே, பூமியை ஆட்சி செய்யும் கருத்தில் அவர் பிரதான சுதந்தரவாளியாய் இருக்கிறார். (மத். 11:29; எபி. 1:2; சங். 2:8) கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட ‘மனுஷகுமாரனோடு’ சேர்ந்து பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்வோர் இருப்பார்கள் என்று முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (தானி. 7:13, 14, 21, 22, 27) அபிஷேகம் செய்யப்பட்டவர்களாயும், சாந்தகுணமுள்ளவர்களாயும், ‘கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராயும்’ இருக்கிற 1,44,000 பேரும்கூட இயேசுவுடன் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள். (ரோ. 8:16, 17; வெளி. 14:1) அவர்களுடைய ஆட்சியின்போது சாந்தகுணமுள்ள மற்றவர்கள் இந்தப் பூமியில் நித்திய ஜீவனை ஆசீர்வாதமாய்ப் பெறுவார்கள்.—சங். 37:11.
5. கிறிஸ்துவைப் போல சாந்தகுணத்தைக் காட்டுவதால் நமக்கு என்ன பயன்?
5 ஒருவேளை நாம் கடுகடுவென பேசுபவராக இருந்தால் மற்றவர்களுடைய பொறுமையை சோதிப்பவர்களாய் இருப்போம்; அவர்களும் நம்மிடம் அண்டிவர யோசிப்பார்கள். ஆனால், கிறிஸ்துவைப் போல சாந்தகுணத்தைக் காட்டினால் சபையிலுள்ளவர்கள் நம்மைத் தேடி வருவார்கள், ஊக்கத்தைப் பெறுவார்கள். கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி நம்மில் பிறப்பிக்கிற கனியின் பாகம்தான் சாந்தம்; நாம், ‘ஆவியினாலே பிழைத்திருந்து [அதாவது, வாழ்ந்து], ஆவிக்கேற்றபடி நடந்தால்’ இந்தச் சாந்தகுணத்தைப் பெறுவோம். (கலாத்தியர் 5:22-25-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிற சாந்தகுணமுள்ளவர்களில் ஒருவராய் இருக்கவே நாம் விரும்புகிறோம்.
இரக்கமுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்களே!
6. ‘இரக்கமுள்ளவர்களிடம்’ என்னென்ன அருமையான பண்புகள் உள்ளன?
6 “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [அதாவது, சந்தோஷமுள்ளவர்கள்]; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்றும் இயேசு மலைப்பிரசங்கத்தில் சொன்னார். (மத். 5:7) “இரக்கமுள்ளவர்கள்” ஏழை எளியவர்களிடம் கருணை காட்டுவார்கள், அவர்களைப் புரிந்துகொண்டு நடப்பார்கள், பரிவு காட்டவும் செய்வார்கள். இயேசு துன்பப்படுகிறவர்களைக் கண்டு ‘மனதுருகியதால்’ அற்புதங்களைச் செய்து அவர்களுடைய துயரைத் துடைத்தார். (மத். 14:14; 20:34) எனவே, மற்றவர்களுடைய நிலையைப் புரிந்துகொள்வதும் அவர்களுக்காக மனதுருகுவதும், இரக்கமுள்ளவர்களாய் நடந்துகொள்ள நம்மைத் தூண்ட வேண்டும்.—யாக். 2:13.
7. மக்களைக் கண்டு இயேசு மனதுருகியதால் என்ன செய்தார்?
7 இயேசு ஓய்வெடுக்க செல்லும் வழியில் திரளான மக்கள் அவரிடம் வந்தபோது, ‘அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.’ அதனால், “அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” (மாற். 6:34) அதே போல, கடவுளுடைய ராஜ்யத்தையும் அவர் காட்டும் மிகுந்த இரக்கத்தையும் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும்போது நாமும் எவ்வளவாய் ஆனந்தம் அடைகிறோம்!
8. இரக்கமுள்ளவர்கள் ஏன் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்?
8 இரக்கமுள்ளவர்கள் ‘இரக்கம் பெறுவதால்’ சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். மற்றவர்களிடம் இரக்க குணத்தைக் காட்டும்போது பொதுவாக அவர்களும் நம்மிடம் இரக்கத்துடன் நடந்துகொள்கிறார்கள். (லூக். 6:38) மேலும், “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத். 6:14) இரக்கமுள்ளவர்கள் மட்டுமே தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பையும் கடவுளுடைய அங்கீகாரத்தையும் பெற முடியும்; இது அவர்களுக்குச் சந்தோஷத்தை அளிக்கிறது.
“சமாதானம் பண்ணுகிறவர்கள்” சந்தோஷமாய் இருக்கக் காரணம்
9. சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம்?
9 சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பதற்கான மற்றொரு காரணத்தை இயேசு குறிப்பிட்டார்; “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் [அதாவது, சந்தோஷமுள்ளவர்கள்]; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்று அவர் சொன்னார். (மத். 5:9) நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருந்தால், கோள் சொல்வது போன்ற எவ்வித பேச்சையும் பொறுத்துக்கொள்ளவோ அப்படிப் பேசுபவர்களுக்குத் துணைபோகவோ மாட்டோம்; அத்தகைய பேச்சு, ‘பிராண சிநேகிதரையும் பிரித்துவிடலாம்.’ (நீதி. 16:28) கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களுடனும் சரி மற்றவர்களுடனும் சரி, நம்முடைய சொல்லிலும் செயலிலும் சமாதானமாய் இருக்க முயற்சி செய்வோம். (எபி. 12:14) முக்கியமாய் யெகோவா தேவனுடன் சமாதானமுள்ளவர்களாய் இருக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்வோம்.—1 பேதுரு 3:10-12-ஐ வாசியுங்கள்.
10. “சமாதானம் பண்ணுகிறவர்கள்” ஏன் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்?
10 “சமாதானம் பண்ணுகிறவர்கள்” சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில், “அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்டு அவர்மீது விசுவாசம் வைப்பதால் ‘தேவனுடைய பிள்ளைகளாகும்படி . . . அதிகாரம்’ பெறுகிறார்கள். (யோவா. 1:12; 1 பே. 2:24) சமாதானமுள்ளவர்களாய் இருக்கிற இயேசுவின் ‘வேறே ஆடுகளை’ குறித்து என்ன சொல்லலாம்? பரலோகத்தில் தம்முடைய உடன் அரசர்களுடன் இயேசு ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்யும்போது இவர்களுக்கு ‘நித்திய பிதாவாக’ அவர் இருப்பார். (யோவா. 10:14, 16; ஏசா. 9:6; வெளி. 20:6) அவருடைய ஆயிர வருட ஆட்சியின் முடிவில் பூமியில் குடியிருக்கப் போகிற சமாதானம் பண்ணுகிறவர்கள், முழுமையான கருத்தில் கடவுளுடைய பிள்ளைகளாக இருப்பார்கள்.—1 கொ. 15:27, 28.
11. ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தின்படி’ செயல்பட்டால் பிறரிடம் எப்படி நடந்துகொள்வோம்?
11 ‘சமாதானத்தின் தேவனான’ யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வைத்திருக்க, அவருடைய குணங்களைப் பின்பற்ற வேண்டும்; நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பதும் அதில் உட்பட்டுள்ளது. (பிலி. 4:9) ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தின்படி’ செயல்பட மனமுள்ளவர்களாய் இருந்தால், நாம் பிறருடன் சமாதானமாய் நடந்துகொள்வோம். (யாக். 3:17) அப்போது, சமாதானம் பண்ணுகிறவர்களாய் நாம் சந்தோஷம் காண்போம்.
“உங்கள் வெளிச்சம் . . . பிரகாசிக்கக்கடவது”
12. (அ) சத்தியத்தின் வெளிச்சத்தைப்பற்றி இயேசு என்ன சொன்னார்? (ஆ) நம்முடைய வெளிச்சத்தை நாம் எப்படிப் பிரகாசிக்கச் செய்யலாம்?
12 கடவுளிடமிருந்து வரும் சத்தியத்தின் வெளிச்சத்தைப் பெற மக்களுக்கு உதவும்போது நம்மாலான மிகச் சிறந்ததை அவர்களுக்குச் செய்கிறோம். (சங். 43:3) “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். தங்களுடைய “நற்கிரியைகளை,” அதாவது நல்ல செயல்களை, மற்றவர்கள் பார்க்கும்படி தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டுமென அவர்களை ஊக்குவித்தார். மனிதர் “முன்பாக,” அதாவது மனிதகுலத்தின் நன்மைக்காக, தம் சீஷர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்போது சத்தியத்தின் வெளிச்சம் பிரகாசிக்கும் என இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 5:14-16-ஐ வாசியுங்கள்.) பிறருக்கு நன்மை செய்வதன் மூலமும், ‘உலகெங்கிலும்,’ அதாவது, “சகல ஜாதிகளுக்கும் [நாட்டவருக்கும்]” நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலமும் நம்முடைய வெளிச்சத்தை இன்று நாம் பிரகாசிக்கச் செய்கிறோம். (மத். 26:13; மாற். 13:10) இந்த வேலையில் பங்குகொள்வது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
13. மற்றவர்கள் நம்மிடம் எதைப் பார்க்கிறார்கள்?
13 “மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” என்று இயேசு சொன்னார். ஆம், மலையின் மேலுள்ள எந்தவொரு பட்டணத்தையும் எளிதில் பார்க்க முடியும். அதுபோல, ராஜ்ய பிரசங்கிப்பாளர்களாகிய நம்முடைய நற்செயல்களையும், அடக்கம், ஒழுக்கம் போன்ற பண்புகளையும் மற்றவர்கள் பார்க்கிறார்கள்.—தீத். 2:1-14.
14. (அ) முதல் நூற்றாண்டு விளக்கை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? (ஆ) சத்தியத்தின் வெளிச்சம் பிரகாசியாதபடி “மரக்காலால்” அதை மூடி வைக்காதிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
14 விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல் விளக்குத் தண்டின்மேல் வைப்பதைப்பற்றி இயேசு குறிப்பிட்டார். முதல் நூற்றாண்டில் களிமண்ணால் ஆன திரிவிளக்கே பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. ‘வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுப்பதற்காக’ இந்த விளக்கு பெரும்பாலும் மரத்தாலான அல்லது உலோகத்தாலான தண்டின் மீது வைக்கப்பட்டது. மக்கள் விளக்கைக் கொளுத்தி அதை ‘மரக்காலால் மூடிவைக்க’ மாட்டார்கள். இந்த மரக்கால் என்பது, ஒன்பது லிட்டர் கொள்ளளவுள்ள கலன் ஆகும். அடையாள அர்த்தமுள்ள மரக்காலால் சத்தியத்தின் வெளிச்சத்தை தம்முடைய சீஷர்கள் மறைத்து வைப்பதை இயேசு விரும்பவில்லை. எனவே, எதிர்ப்போ துன்புறுத்தலோ பைபிள் சத்தியத்தின் வெளிச்சம் பிரகாசிக்காதபடி தடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது; அதை நமக்குள்ளே பூட்டி வைக்கவும் கூடாது. மாறாக, நம்முடைய வெளிச்சத்தை நாம் பிரகாசிப்பவர்களாய் இருக்க வேண்டும்.
15. நம்முடைய “நற்கிரியைகளைக்” கண்டு சிலர் எப்படிப் பயன் அடைந்திருக்கிறார்கள்?
15 வெளிச்சம் தரும் விளக்கைப்பற்றி தம்முடைய சீஷர்களிடம் இயேசு குறிப்பிட்ட பிறகு, “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்று சொன்னார். நம்முடைய “நற்கிரியைகளைக்” கண்டு சிலர் கடவுளுடைய ஊழியர்களாகி அவரை ‘மகிமைப்படுத்துகிறார்கள்.’ ‘உலகத்திலே சுடர்களைப்போல [எப்போதும்] பிரகாசிப்பதற்கு’ இது எப்பேர்ப்பட்ட ஊக்கத்தை நமக்கு அளிக்கிறது!—பிலி. 2:14.
16. ‘உலகத்துக்கு வெளிச்சமாயிருப்பதற்கு,’ நாம் என்ன செய்ய வேண்டும்?
16 ‘உலகத்துக்கு வெளிச்சமாயிருப்பதற்கு,’ ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையில் பங்குகொள்ள வேண்டும். இது தவிர வேறொன்றையும் செய்ய வேண்டும். “வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் [அதாவது, வெளிச்சத்தின்] கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபே. 5:8, 9) கடவுளுடைய உயர்ந்த ஒழுக்கநெறிகளுக்கு இசைய நாம் எப்போதும் நடக்க வேண்டும். இந்த விஷயத்தில், அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு சொல்லும் அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.” (1 பே. 2:12) ஆனால், சக விசுவாசிகளுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
‘உங்கள் சகோதரரோடு சமரசமாகுங்கள்’
17-19. (அ) மத்தேயு 5:23, 24-ல் குறிப்பிடப்பட்டுள்ள “காணிக்கை” எதைக் குறிக்கிறது? (ஆ) ஒரு சகோதரனுடன் சமரசமாவது எந்தளவு முக்கியமானது, இதை இயேசு எப்படிக் காட்டினார்?
17 ஒரு சகோதரனிடம் கடும் கோபம் கொள்ளவோ அவரை வெறுக்கவோ கூடாதென மலைப்பிரசங்கத்தில் தம் சீஷர்களை இயேசு எச்சரித்தார். தங்களைப் புண்படுத்திய சகோதரனோடு சீக்கிரத்தில் அவர்கள் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. (மத்தேயு 5:21-25-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் அறிவுரைக்குச் சற்று கூர்ந்து கவனம் செலுத்துங்கள். நீங்கள் பலிபீடத்தில் காணிக்கையைச் செலுத்த செல்கிறீர்கள்; அப்போது, உங்கள்மீது உங்களுடைய சகோதரனுக்கு ஏதோ மனஸ்தாபம் இருப்பது நினைவுக்கு வருகிறது; இப்போது என்ன செய்வீர்கள்? பலிபீடத்தின் முன்பாக காணிக்கையை வைத்துவிட்டுப் போய் உங்கள் சகோதரனுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு திரும்பி வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்தலாம்.
18 யெகோவாவின் ஆலயத்தில் ஒருவர் செலுத்தும் பலி பெரும்பாலும் அந்தக் ‘காணிக்கையாய்’ இருந்தது. மிருக பலிகள் மிக முக்கியமானவையாய் இருந்தன; காரணம், இஸ்ரவேலர் தங்களுடைய வழிபாட்டில் இத்தகைய பலிகளைச் செலுத்தும்படி நியாயப்பிரமாணத்தில் கடவுள் கட்டளையிட்டிருந்தார். ஆனால், உங்கள்மீது உங்களுடைய சகோதரனுக்கு ஏதோ மனஸ்தாபம் இருந்தது நினைவுக்கு வந்திருந்தால், அதை சரிசெய்வதுதான் உங்கள் காணிக்கையைவிட மிக மிக முக்கியமானதாய் இருந்திருக்கும். “அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி [அதாவது, சமரசமாகி], பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என்று இயேசு சொன்னார். நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டுள்ள எதையும் செய்வதற்கு முன்பு, முதலாவது சகோதரனுடன் சமரசமாவது மிகவும் முக்கியமாக இருந்தது.
19 குறிப்பிட்ட சில பலிகளையும் பாவங்களையும் பற்றி மட்டுமே இயேசு இங்கு பேசவில்லை. ஆகவே, எந்தப் பலியைச் செலுத்துவதாக இருந்தாலும்சரி, தன்மீது தன்னுடைய சகோதரனுக்கு ஏதோ மனஸ்தாபம் இருப்பது ஒருவருடைய நினைவுக்கு வந்தால் அதைச் செலுத்துவதற்கு முன்பு அவர் சமரசமாக வேண்டியிருந்தது. ஓர் உயிருள்ள மிருகத்தை பலிசெலுத்துவதாக இருந்தால் அதை ஆலயத்தில் ஆசாரியருக்குரிய பிரகாரத்தில் தகனபலிக்குரிய “பலிபீடத்தின் முன்” வைத்துவிட்டு, முதலில் போய் அவருடன் சமரசமான பிறகு திரும்பி வந்து பலி செலுத்த வேண்டும்.
20. ஒரு சகோதரனுடன் நமக்கு மனஸ்தாபமிருந்தால் நாம் ஏன் சீக்கிரமாய் சமரசம் செய்துகொள்ள வேண்டும்?
20 கடவுளுடைய பார்வையில், நம்முடைய சகோதரருடன் உள்ள பந்தம் உண்மை வணக்கத்தின் முக்கிய பாகமாய் இருக்கிறது. சக மனிதருடன் முறையாக நடந்துகொள்ளாதவர்கள் செலுத்திய மிருக பலிகளை அவர் முக்கியமானதாய் கருதவில்லை. (மீ. 6:6-8) எனவேதான், ‘சீக்கிரமாய் . . . நல்மனம் பொருந்துங்கள்,’ அதாவது சமரசமாகுங்கள் என்று இயேசு தம் சீஷர்களை அறிவுறுத்தினார். (மத். 5:25) இதுபோன்ற கருத்தை பவுலும் தெரிவித்தார். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என்று அவர் எழுதினார். (எபே. 4:26, 27) நம்முடைய கோபம் ஒருவேளை நியாயமானதாக இருக்கலாம்; என்றாலும், கோபத்தை அப்படியே மனதில் வைக்காதிருப்பதற்கும் அதன்மூலம் பிசாசுக்கு நாமே இடங்கொடுக்காதிருப்பதற்கும் சீக்கிரமாய் சமரசம் செய்துகொள்ள வேண்டும்.—லூக். 17:3, 4.
எப்போதும் பிறரிடம் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளுங்கள்
21, 22. (அ) இதுவரை சிந்தித்த இயேசுவின் ஆலோசனைகளை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (ஆ) அடுத்தக் கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
21 மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்ன சில குறிப்புகளைச் சிந்தித்துப் பார்த்தது மற்றவர்களிடம் அன்போடும் மதிப்பு மரியாதையோடும் நடந்துகொள்ள நமக்கு நிச்சயம் உதவும். நாம் எல்லாரும் அபூரணராய் இருந்தாலும் இயேசுவின் ஆலோசனையைப் பின்பற்றலாம்; ஏனெனில், நம்மால் செய்ய முடியாததைச் செய்யும்படி அவரோ அவருடைய பரலோகத் தகப்பனோ நம்மிடம் கேட்பதில்லை. ஜெபத்தோடும், உள்ளப்பூர்வமான முயற்சியோடும், யெகோவாவின் ஆசீர்வாதத்தோடும், நாம் சாந்தகுணமுள்ளவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க முடியும். யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் சத்தியத்தின் வெளிச்சத்தை நம்மால் பிரகாசிக்க முடியும். மேலும், சச்சரவுகள் ஏற்படும்போது நம் சகோதரர்களுடன் சமரசம் செய்துகொள்ள முடியும்.
22 யெகோவா நம் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், பிறரிடம் முறையாக நடந்துகொள்வதும் அவசியம். (மாற். 12:31) அடுத்த கட்டுரையில், மலைப்பிரசங்கத்திலுள்ள வேறு சில குறிப்புகளைச் சிந்திக்கப் போகிறோம்; அவை, மற்றவர்களுக்கு எப்போதும் நல்லது செய்ய நமக்கு உதவும். இயேசுவின் பிரசித்திபெற்ற சொற்பொழிவிலிருந்து இதுவரை சிந்தித்த குறிப்புகளைத் தியானித்த பிறகு, “மற்றவர்களிடம் எந்தளவு நன்றாக நடந்துகொள்கிறேன்?” என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம்.
[அடிக்குறிப்பு]
a உங்களுடைய தனிப்பட்ட படிப்பில், இந்த முழுப் பகுதியையும் வாசித்த பிறகு, இந்தக் கட்டுரையையும் இதற்கு அடுத்தக் கட்டுரையையும் தயாரிப்பது அதிக பயனுள்ளதாய் இருக்கும்.
உங்கள் பதில்?
• சாந்தகுணமுள்ளவர்களாய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
• “இரக்கமுள்ளவர்கள்” ஏன் சந்தோஷமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்?
• நம்முடைய வெளிச்சத்தை எப்படிப் பிரகாசிக்கச் செய்யலாம்?
• நாம் ஏன் சீக்கிரமாய் ‘நம் சகோதரரோடு சமரசமாக’ வேண்டும்?
[பக்கம் 4-ன் படம்]
ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதே, நம்முடைய வெளிச்சத்தைப் பிரகாசிப்பதற்கு முக்கிய வழி
[பக்கம் 5-ன் படம்]
கிறிஸ்தவர்கள் நல்நடத்தைக்கு இலக்கணமாய்த் திகழ வேண்டும்
[பக்கம் 6-ன் படம்]
உங்கள் சகோதரருடன் சமரசமாவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்