“விழித்திருங்கள்”!
“நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.”—மாற்கு 13:37.
1, 2. (அ) தன் உடைமைகளைப் பாதுகாப்பதைக் குறித்து ஒரு மனிதன் என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டான்? (ஆ) ஒரு திருடனைப் பற்றி இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து விழித்திருப்பதைப் பற்றி நாம் கற்றுக்கொள்வது என்ன?
குவான் விலையுயர்ந்த பொருட்களை தன் வீட்டில் வைத்திருந்தார். அவற்றைத் தன் படுக்கையின் கீழ் வைத்திருந்தார். அதுதான் வீட்டில் மிகவும் பாதுகாப்பான இடம் என்பது அவர் எண்ணம். ஆனால் ஒரு நாள் அவரும் அவருடைய மனைவியும் தூங்கிக்கொண்டிருந்த சமயம் பார்த்து படுக்கை அறையினுள் ஒரு திருடன் நுழைந்தான். எங்கே பார்க்க வேண்டும் என்பது திருடனுக்கு நன்றாக தெரிந்திருந்தது. படுக்கையின்கீழ் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த பொருட்கள், படுக்கையின் பக்கத்தில் மேசையின் டிராயரில் இருந்த பணம் எல்லாவற்றையும் சுருட்டுவதில் தன் கைவரிசையைக் காட்டிவிட்டு அவன் மறைந்தான். பொழுது விடிந்தபோது குவானுக்கு திருடு போனது தெரிந்தது. அவர் கற்றுக்கொண்ட வேதனைமிக்க பாடத்தை இனி மறக்கவே மாட்டார்: தூங்கும் மனிதனால் தன் உடைமைகளைப் பாதுகாக்க முடியாது.
2 ஆவிக்குரிய கருத்திலும் இதுவே உண்மை. நாம் தூங்கிவிட்டால் நம்முடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பாதுகாக்க முடியாது. ஆகவே பவுல் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:6) விழித்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதற்கு திருடனைப் பற்றிய ஒரு உதாரணத்தை இயேசு சொன்னார். நியாயாதிபதியாக அவர் வரப்போகும் காலத்துக்கு முன் நடக்கவிருந்த சம்பவங்களை வர்ணித்துவிட்டு, அதற்குப்பின் இவ்வாறு எச்சரித்தார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” (மத்தேயு 24:42-44) ஒரு திருடன் முன்கூட்டியே சொல்லிவிட்டு வருவதில்லை. யாரும் அவனை எதிர்பார்க்காத சமயத்தில் திடுதிப்பென்று அவன் வருகிறான். அதே விதமாக, இயேசு சொன்னதுபோல், இந்தப் பொல்லாத உலகின் முடிவும் “நினையாத நாழிகையிலே” வரும்.
“விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்”
3. இயேசு எவ்வாறு ஒரு உவமையை பயன்படுத்தி விழித்திருப்பதன் முக்கியத்துவத்தைக் காட்டினார்?
3 லூக்கா சுவிசேஷ பதிவின்படி, கல்யாணத்திற்குச் சென்ற எஜமானர் திரும்பிவருவதற்காக காத்திருக்கும் அடிமைகளுக்கு கிறிஸ்தவர்களை இயேசு ஒப்பிட்டுப் பேசினார். அவர் வரும்போது விழித்திருந்து அவரை வரவேற்க தயாராயிருப்பதற்காக அவர்கள் கவனமாயிருக்க வேண்டும். அதைப் போலவே, “நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:40) பல ஆண்டுகளாக யெகோவாவை சேவித்துவந்திருக்கும் சிலர், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் சம்பந்தமாக அவசர உணர்வை இழந்துவிடக்கூடும். முடிவு வருவதற்கு இன்னும் வெகு காலம் செல்லும் என்ற முடிவுக்குக்கூட அவர்கள் வந்துவிடலாம். ஆனால் இப்படி ஒரு சிந்தனை வந்துவிட்டால், ஆன்மீக காரியங்களிலிருந்து நம் கவனத்தை அது திசை திருப்பிவிடும், பொருளாதார இலக்குகளிடமும் மற்ற கவனச்சிதறல்களிடமும் நம் மனம் ஈர்க்கப்படும், இது நம்மை ஆவிக்குரிய தூக்கத்தில் ஆழ்த்திவிடும்.—லூக்கா 8:14; 21:34, 35.
4. உறுதியான என்ன நம்பிக்கை விழித்திருப்பதற்கு நம்மை ஊக்குவிக்கும், இயேசு இதை எவ்வாறு காட்டினார்?
4 இயேசுவின் உவமையிலிருந்து நாம் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். தங்கள் எஜமான் வரும் நாழிகை அடிமைகளுக்கு தெரிந்திராவிட்டாலும், அது எந்த இரவில் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். எஜமானர் வேறொரு நாள் இரவு வருவார் என அவர்கள் நினைத்திருந்தால், அந்த இரவு முழுவதும் விழித்திருப்பது அவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும். ஆனால் எந்த இரவில் அவர் வருவார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது, அதுதானே விழித்திருக்க அவர்களுக்கு பலமான ஊக்குவிப்பாக இருந்தது. அதேவிதமாகவே, நாம் முடிவுகாலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன, ஆனால் முடிவின் நாளை அல்லது நாழிகையை மட்டும் அது நமக்குச் சொல்வதில்லை. (மத்தேயு 24:36) முடிவு வருகிறது என்ற நம்முடைய நம்பிக்கை நாம் விழித்திருக்க உதவி செய்கிறது, ஆனால் யெகோவாவின் நாள் உண்மையில் அருகில் இருப்பதை நாம் உறுதியாக நம்பினால், விழிப்பாயிருப்பதற்கு தூண்டுதல் இன்னுமதிகமாக இருக்கும்.—செப்பனியா 1:14.
5. “விழித்திருங்கள்” என்ற பவுலின் அறிவுரைக்கு நாம் எவ்வாறு செவிசாய்க்கலாம்?
5 கொரிந்தியர்களுக்கு எழுதும்போது பவுல் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்.” (1 கொரிந்தியர் 16:13) ஆம், விழித்திருப்பது கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது. நாம் எவ்வாறு விழித்திருக்கலாம்? கடவுளுடைய வார்த்தையின் ஆழமான அறிவை பெற்றுக்கொள்வதன் மூலம் விழித்திருக்கலாம். (2 தீமோத்தேயு 3:14, 15) ஆகவே, நல்ல படிப்பு பழக்கங்களைக் கடைப்பிடிப்பதும் தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வதும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த உதவுகின்றன. யெகோவாவின் நாளை மனதில் எப்போதும் வைத்திருப்பது நம்முடைய விசுவாசத்தின் முக்கிய அம்சம். ஆகவே, இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு அருகில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான வேதப்பூர்வ அத்தாட்சிகளை அவ்வப்போது மறுபார்வை செய்வது, வரப்போகும் அந்த முடிவைப் பற்றிய முக்கியமான சத்தியங்களை மறந்துவிடாதிருக்க நமக்கு உதவி செய்யும்.a பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடந்துவரும் உலக சம்பவங்களை கவனிப்பதும்கூட உதவியாக இருக்கும். ஜெர்மனியிலுள்ள ஒரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “போர்கள், நில நடுக்கங்கள், வன்முறை, தூய்மைக்கேடு போன்ற செய்திகளை நான் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் முடிவு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதை அதிகமதிகமாக உணருகிறேன்.”
6. காலம் செல்லச் செல்ல, ஆவிக்குரிய விழிப்புணர்வை இழந்துவிடும் நம் மனச்சாய்வை இயேசு எவ்வாறு உதாரணத்துடன் விளக்கினார்?
6 மாற்கு 13-ஆம் அதிகாரத்தில், விழித்திருக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு கூறிய அறிவுரையின் மற்றொரு பதிவை நாம் பார்க்கிறோம். இந்த அதிகாரத்தில், தூர தேசத்திலிருந்து தன் எஜமான் திரும்பிவருவதற்காக காத்துக்கொண்டிருக்கும் காவற்காரனுக்கு ஒப்பாக அவர்களுடைய நிலைமை இருப்பதாக இயேசு கூறுகிறார். அவனுடைய எஜமான் எப்போது திரும்பி வருவார் என்பது காவல் காக்கிறவனுக்கு தெரியாது. அவன் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. எஜமானர் நான்கு வித்தியாசமான காலக்கட்டங்களில் வரக்கூடும் என்று இயேசு இங்கே குறிப்பிடுகிறார். நான்காவது கட்டம் அதிகாலை சுமார் மூன்று மணி முதல் சூரிய உதயம் வரையாக இருக்கும். அந்தக் கடைசி கட்டத்தில் காவற்காரனுக்கு தூக்க கலக்கம் கட்டுப்படுத்த முடியாமல் வந்துவிடலாம். அசந்துபோன ஒரு எதிரியை திடீரென பிடிப்பதற்கு விடியலுக்கு முன்னான சமயமே மிகச் சிறந்தது என படைவீரர்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது. அதே விதமாகவே, இந்தக் கடைசி காலக்கட்டத்தில், நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஆவிக்குரிய கருத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, நாம் விழிப்பாயிருப்பதற்கு எக்காலத்தையும்விட அதிகமாக போராடித்தான் ஆக வேண்டும். (ரோமர் 13:11, 12) ஆகவே தம்முடைய உவமையில் திரும்பத் திரும்ப இயேசு இவ்வாறு ஊக்கப்படுத்துகிறார்: ‘எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருங்கள், . . . விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.’—மாற்கு 13:32-37.
7. என்ன உண்மையான ஆபத்து இருக்கிறது, இது சம்பந்தமாக பைபிளில் நாம் என்ன ஊக்கமூட்டுதலை அடிக்கடி வாசிக்கிறோம்?
7 ஊழியம் செய்தபோதும் உயிர்த்தெழுந்த பிறகும் இயேசு அநேக சமயங்களில் விழிப்பாயிருக்கும்படி ஊக்கப்படுத்தினார். சொல்லப்போனால், வேதாகமம் இந்த ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றி குறிப்பிடும் ஒவ்வொரு சமயமும் விழித்திருக்கும்படியான அல்லது ஆயத்தமாயிருக்கும்படியான எச்சரிப்பை நாம் காண்கிறோம்.b (லூக்கா 12:38, 40; வெளிப்படுத்துதல் 3:2; 16:14-16) ஆவிக்குரிய தூக்க கலக்கம் உண்மையில் ஒரு ஆபத்தென்பது தெளிவாக இருக்கிறது. நம்மெல்லாருக்கும் அந்த எச்சரிக்கைகள் தேவை!—1 கொரிந்தியர் 10:12; 1 தெசலோனிக்கேயர் 5:2, 6.
விழித்திருக்க முடியாத மூன்று அப்போஸ்தலர்கள்
8. கெத்செமனே தோட்டத்தில், விழித்திருக்கும்படி இயேசு கேட்டுக்கொண்டபோது அவரது மூன்று அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?
8 விழித்திருப்பதற்கு நல்ல நோக்கங்கள் மட்டுமே போதாது. இதை பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடைய உதாரணத்திலிருந்து புரிந்துகொள்கிறோம். இவர்கள் இயேசுவை உண்மையுடன் பின்பற்றியவர்கள், அவரிடம் மிகவும் பாசமாக இருந்த ஆன்மீக குணமுடைய ஆண்கள். ஆனாலும், பொ.ச. 33, நிசான் 14-ஆம் நாள் இரவில் அவர்கள் விழித்திருக்க தவறினார்கள். மேலறையில் பஸ்காவை ஆசரித்துவிட்டு இயேசுவோடு புறப்பட்ட இந்த மூன்று அப்போஸ்தலர்கள் அவரோடு கெத்செமனே தோட்டத்துக்கு சென்றார்கள். அங்கே இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள்.” (மத்தேயு 26:38) இயேசு மிகவும் ஊக்கமாக தம்முடைய பரலோக தந்தையிடம் ஜெபித்துவிட்டு மூன்று முறை தம் நண்பர்களிடம் வந்தார், மூன்று முறையும் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைத்தான் பார்த்தார்.—மத்தேயு 26:40, 43, 45, NW.
9. அப்போஸ்தலர்களின் தூக்கத்திற்கு எது ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்?
9 உண்மையுள்ள இந்த மனிதர்கள் அன்றிரவு ஏன் இயேசுவுக்கு இந்தளவு ஏமாற்றத்தை அளித்தார்கள்? உடல் களைப்பு ஒரு காரணமாகும். நள்ளிரவும் தாண்டிவிட்டது. ‘அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் அடைந்திருந்தன.” (மத்தேயு 26:43) ஆனாலும் இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.”—மத்தேயு 26:41.
10, 11. (அ) இயேசு களைப்பாயிருந்தபோதிலும், கெத்செமனே தோட்டத்தில் விழித்திருக்க எது உதவி செய்தது? (ஆ) மூன்று அப்போஸ்தலர்களிடம் விழித்திருக்கும்படி இயேசு கேட்டுக்கொண்டபோது அவர்கள் செய்த காரியத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
10 அதிக முக்கியத்துவமுள்ள அந்த இரவில் இயேசுவும்கூட களைப்பாகத்தான் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தூங்கிவிடுவதற்கு பதிலாக, சுதந்திரமாக கழிக்க முடிந்த அந்த கடைசி நிமிடங்களை ஊக்கமாக ஜெபிப்பதில் அவர் செலவழித்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவர் தம்முடைய சீஷர்களிடம் ஜெபிக்கும்படி ஊக்குவித்தார்: “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” என்றார். (லூக்கா 21:36; எபேசியர் 6:18) இயேசுவின் அறிவுரைகளின்படி நடந்து, ஜெபம் செய்யும் விஷயத்தில் அவருடைய சிறந்த மாதிரியைப் பின்பற்றினால், யெகோவாவிடம் நாம் செய்யும் இருதயப்பூர்வமான வேண்டுதல்கள், ஆவிக்குரிய விதத்தில் விழிப்பாயிருக்க நமக்கு உதவும்.
11 நிச்சயமாகவே இயேசு தாம் சீக்கிரத்தில் கைதுசெய்யப்பட்டு மரணத்தீர்ப்பு அளிக்கப்படுவார் என்பதை அறிந்திருந்தார், ஆனால் அவருடைய சீஷர்களுக்கோ அந்தச் சமயத்தில் அது தெரியாது. அவர் கழுமரத்தில் அறையப்படுகையில் அவருடைய சோதனைகள் வேதனையான உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும். இயேசு இந்தக் காரியங்களைக் குறித்து தம்முடைய அப்போஸ்தலர்களை எச்சரித்திருந்தார், ஆனால் அவர்களுக்கோ அவர் சொன்னது புரியவில்லை. ஆகவே, அவர் விழித்திருந்து ஜெபம் பண்ணுகையில் அவர்கள் தூங்கிப்போனார்கள். (மாற்கு 14:27-31; லூக்கா 22:15-18) அப்போஸ்தலர்களின் மாம்சத்தைப் போலவே நம்முடைய மாம்சமும் பலவீனமானதுதான், நாம் இன்னும் புரிந்துகொள்ளாத காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும்கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் காலத்தின் அவசரத்தன்மையை பகுத்துணரவில்லையென்றால், ஆவிக்குரிய கருத்தில் நாம் தூங்கிவிடுவோம். எச்சரிக்கையாயிருந்தால் மட்டுமே நம்மால் விழித்திருக்க முடியும்.
மூன்று முக்கிய குணங்கள்
12. நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருப்பதுடன் பவுல் இணைத்துப் பேசும் மூன்று முக்கிய குணங்கள் யாவை?
12 அவசர உணர்வை நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்? ஜெபத்தின் முக்கியத்துவம் பற்றியும் யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைத்திருப்பது பற்றியும் நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அதோடு, நாம் மூன்று முக்கிய குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:8) ஆவிக்குரிய விதமாக நம்மை விழிப்புள்ளவர்களாக வைத்துக்கொள்வதில் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய குணங்களின் பங்கு என்ன என்பதை நாம் சுருக்கமாக சிந்திப்போம்.
13. நாம் விழிப்பாயிருப்பதில் விசுவாசம் என்ன பங்கை வகிக்கிறது?
13 யெகோவா உண்மையில் இருக்கிறார், ‘அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ என்பதில் நமக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருக்க வேண்டும். (எபிரெயர் 11:6) முடிவைப் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் முதலாவதாக நிறைவேறியது, நம்முடைய நாளில் நடக்கப்போகும் பெரிய நிறைவேற்றத்தின் மீது நம் விசுவாசத்தை பலப்படுத்துகிறது. நம்முடைய விசுவாசம், “அது [தீர்க்கதரிசனம்] நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை” என்ற உறுதியுடன் யெகோவாவின் நாளுக்காக ஆவலாக காத்திருக்கும்படி செய்கிறது.—ஆபகூக் 2:3.
14. விழித்திருப்பதற்கு நம்பிக்கை எப்படி இன்றியமையாததாக உள்ளது?
14 நம்முடைய உறுதியான நம்பிக்கை, ‘ஆத்தும நங்கூரம்’ போலிருந்து கடவுளின் சில வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காக காத்திருக்க வேண்டியதாக இருந்தாலும் கஷ்டங்களை சகித்திருக்க நமக்கு உதவி செய்கிறது. (எபிரெயர் 6:18, 19) 70-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக முழுக்காட்டுதல் பெற்ற மார்கரெட் என்ற அபிஷேகம் பெற்ற சகோதரிக்கு இப்போது வயது 90-க்கும் மேலாகிறது. அவர் இவ்வாறு கூறுகிறார்: “1963-ல் என் கணவர் புற்றுநோயால் இறக்கவிருந்த சமயத்தில், முடிவு உடனடியாக வந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் முக்கியமாக என் அக்கறைகளைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன் என்பது இப்போது எனக்குப் புரிகிறது. இந்த வேலை எந்தளவுக்கு உலகம் முழுவதுமாக விரிவடையும் என்பதைப் பற்றி அந்தச் சமயத்தில் எங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்போதும்கூட, இன்னும் அநேக இடங்களில் இந்த வேலை இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. ஆகவே யெகோவா பொறுமையுடன் இருப்பதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.” அப்போஸ்தலன் பவுல் நமக்கு இந்த உறுதியை அளிக்கிறார்: ‘பொறுமை அங்கீகரிக்கப்பட்ட நிலையையும், அங்கீகரிக்கப்பட்ட நிலை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.’—ரோமர் 5:3-5, NW.
15. நீண்ட காலமாக நாம் காத்திருப்பது போல தோன்றினாலும், அன்பு நமக்கு எவ்வாறு தூண்டுதலாக இருக்கும்?
15 கிறிஸ்தவ அன்பு முதன்மையான ஒரு குணமாகும், ஏனென்றால் நாம் செய்யும் எல்லா காரியங்களுக்கும் முக்கிய தூண்டுதலாக இருப்பது இதுவே. யெகோவாவின் கால அட்டவணை எப்படியிருந்தாலும் நாம் அவரை நேசிப்பதால் அவரை சேவிக்கிறோம். ராஜ்ய நற்செய்தியை நாம் எவ்வளவு நீண்ட காலம் பிரசங்கிக்க வேண்டியிருந்தாலும், அதே வீடுகளுக்கு எத்தனை தடவை செல்ல வேண்டியிருந்தாலும், கடவுளுடைய சித்தமாய் இருக்கும்வரை ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்துக்கொண்டிருக்க அயலான் பேரிலுள்ள அன்பு நம்மைத் தூண்டுகிறது. பவுல் எழுதிய விதமாகவே, “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” (1 கொரிந்தியர் 13:13) அன்பு சகித்து நிலைத்திருக்கச் செய்கிறது, தொடர்ந்து விழித்திருக்க வைக்கிறது. அன்பு “சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:7, 8.
“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”
16. நம் கையை தளர்த்திக்கொள்வதற்கு மாறாக, என்ன மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
16 மிக முக்கியமான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் கடைசி நாட்களின் கடைசி கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உலக சம்பவங்கள் நமக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக் கொண்டே இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5) நம் கைகளை தளர்த்திக் கொள்வதற்கான சமயம் இதுவல்ல. மாறாக, ‘நமக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருக்க’ வேண்டிய சமயமாகும். (வெளிப்படுத்துதல் 3:11) “ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிரு”ந்து விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றை வளர்த்துக்கொள்வதன் மூலம், பரீட்சிக்கப்படும் நேரம் வரும்போது தயாராயிருப்பதை நாம் காட்டுவோம். (1 பேதுரு 4:7) கர்த்தருடைய வேலையில் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது. தேவபக்தியுள்ள செயல்களில் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது, நன்கு விழித்திருக்க நமக்கு உதவும்.—2 பேதுரு 3:11.
17. (அ) நம்முடைய நம்பிக்கைகள் அவ்வப்போது நிறைவேறாமல் போகையில் ஏன் சோர்ந்துவிடக்கூடாது? (பக்கம் 21-ல் உள்ள பெட்டியைக் காண்க.) (ஆ) யெகோவாவைப் போல் நாம் என்ன செய்யலாம், அப்படி செய்கிறவர்களுக்கு என்ன ஆசீர்வாதம் காத்திருக்கிறது?
17 “கர்த்தர் என் பங்கு . . . ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.” (புலம்பல் 3:24-26) நம்மில் சிலர் கொஞ்ச காலமாக மாத்திரமே காத்திருக்கிறோம். மற்றவர்கள் யெகோவாவின் இரட்சிப்பைக் காண்பதற்கு பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். ஆனால் நமக்கு முன்னாலிருக்கும் நித்திய காலத்தோடு ஒப்பிட, காத்திருக்கும் இந்தக் காலம் எவ்வளவு குறுகிய காலம்! (2 கொரிந்தியர் 4:16-18) யெகோவா குறித்திருக்கும் காலத்துக்காக காத்திருக்கும் இந்தச் சமயத்தில், முக்கியமான கிறிஸ்தவ குணங்களை நாம் வளர்த்துக்கொள்ளலாம்; யெகோவாவின் பொறுமையை பயன்படுத்திக்கொண்டு சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி மற்றவர்களுக்கும் நாம் உதவி செய்யலாம். அப்படியென்றால் நாம் அனைவருமே விழிப்பாயிருப்போமாக. யெகோவாவைப் போலவே பொறுமையாயிருப்போமாக. நமக்கு அவர் கொடுத்திருக்கும் நம்பிக்கைக்காக நன்றியோடிருப்போமாக. நாம் உண்மையுடன் விழிப்பாய் நிலைத்திருக்கும்போது, நித்திய ஜீவ நம்பிக்கையை உறுதியாக பற்றிக்கொள்வோமாக. அப்போது பின்வரும் இந்த தீர்க்கதரிசன வாக்குறுதிகள் நம்முடைய விஷயத்தில் உண்மையாயிருக்கும்: “நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.”—சங்கீதம் 37:34.
[அடிக்குறிப்புகள்]
a நாம் ‘கடைசி நாட்களில்’ இருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சியாக ஜனவரி 15, 2000 தேதியிட்ட காவற்கோபுரம் பிரதியில் பக்கங்கள் 12, 13-ல் வெளிவந்திருந்த ஆறு குறிப்புகளை மறுபார்வை செய்வது பயனுள்ளதாக இருக்கும்.—2 தீமோத்தேயு 3:1.
b “விழித்திரு” என்று மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வினைச்சொல்லின் நேரடி அர்த்தம் ‘தூக்கத்தை விரட்டு’ என்பதாக சொற்களஞ்சிய ஆசிரியர் வி. இ. வைன் விளக்குகிறார். அது “வெறுமனே விழித்திருப்பதை அல்ல, ஆனால் ஒரு காரியத்தில் குறியாயிருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருப்பதை குறிக்கிறது” என்றும் சொல்கிறார்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• இந்த ஒழுங்குமுறையின் முடிவு சமீபமாயிருக்கிறது என்ற நம்முடைய நம்பிக்கையை நாம் எவ்வாறு பலப்படுத்திக் கொள்ளலாம்?
• பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடைய உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
• ஆவிக்குரிய விதமாக ஜாக்கிரதையாய் இருப்பதற்கு என்ன மூன்று குணங்கள் நமக்கு உதவி செய்யும்?
• ‘நமக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருப்பதற்கு’ ஏன் இதுவே சமயம்?
[பக்கம் 21-ன் பெட்டி/படம்]
‘காத்திருக்கிறவன் பாக்கியவான்.’—தானியேல் 12:12
காவலாளி ஒருவன் தான் காவல்காக்கும் கட்டிடத்திற்குள் நுழைய ஒரு திருடன் திட்டமிட்டிருப்பதாக சந்தேகிப்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள். இரவு வரும்போது, திருடன் வரும் அரவம் ஏதாவது கேட்கிறதா என்று காவலாளி மிகவும் கூர்ந்து கேட்டுக்கொண்டிருப்பான். ஒவ்வொரு மணியும் கடந்துபோகையில் அவன் தன் காதை கூர்மையாக தீட்டிக்கொண்டு, கண்களில் விளக்கெண்ணெய் விட்டவனாய் பார்த்துக்கொண்டே இருப்பான். மரங்களின்மீது மோதும் பலத்தக் காற்றோ, பூனை எதையாவது தட்டிவிடும் சப்தமோ அவனை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்பதை புரிந்துகொள்வது சுலபம்.—லூக்கா 12:39, 40.
இதே போன்ற ஒன்று ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கும்’ எவருக்கும் சம்பவிக்கலாம். (1 கொரிந்தியர் 1:7) இயேசு உயிர்த்தெழுந்த உடனேயே ‘ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பார்’ என அப்போஸ்தலர்கள் நினைத்துக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 1:6) பல ஆண்டுகளுக்குப்பின், இயேசுவின் பிரசன்னம் எதிர்காலத்தில் சம்பவிக்க இருப்பதை தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்ட வேண்டியதாக இருந்தது. (2 தெசலோனிக்கேயர் 2:3, 8) ஆனாலும்கூட, யெகோவாவின் நாளைக் குறித்த அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போதிலும், இயேசுவைப் பின்பற்றின அந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் ஜீவனுக்குப் போகும் பாதையைவிட்டு விலகிப்போய்விடவில்லை.—மத்தேயு 7:13.
நம்முடைய நாளிலும், இந்தப் பொல்லாத உலகுக்கு முடிவு வருவது தாமதிப்பதைப் போல தோன்றுவதைக் குறித்து நாம் ஏமாற்றமடைந்து, அஜாக்கிரதையாய் இருந்துவிடக் கூடாது. விழிப்பாயிருக்கும் காவலாளிகூட போலி சப்தங்களால் ஏமாந்துவிடலாம், ஆனாலும் அவன் தொடர்ந்து விழிப்பாய் இருப்பது அவசியம்! அதுவே அவன் வேலை. இதுவே கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்.
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவின் நாள் அருகில் இருக்கிறது என்று உறுதியாக நீங்கள் நம்புகிறீர்களா?
[பக்கம் 19-ன் படங்கள்]
கூட்டங்கள், ஜெபம், நல்ல படிப்பு பழக்கங்கள் ஆகியவை விழிப்பாயிருக்க நமக்கு உதவி செய்கின்றன
[பக்கம் 22-ன் படம்]
மார்கரெட்டைப் போல நாம் பொறுமையோடு, எப்போதும் விழிப்பாயிருப்போமாக