அதிகாரம் 126
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுகிறார்
மத்தேயு 26:69-75 மாற்கு 14:66-72 லூக்கா 22:54-62 யோவான் 18:15-18, 25-27
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார்
கெத்செமனே தோட்டத்தில் இயேசு கைது செய்யப்பட்டதும், அப்போஸ்தலர்கள் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள். ஆனால், “சீமோன் பேதுருவும் மற்றொரு சீஷரும்” திரும்பி வருகிறார்கள். அந்த ‘மற்றொரு சீஷர்’ ஒருவேளை அப்போஸ்தலனாகிய யோவானாக இருக்கலாம். (யோவான் 18:15; 19:35; 21:24) அன்னாவின் வீட்டுக்கு இயேசு கொண்டுபோகப்பட்ட சமயத்தில், இவர்களும் பின்னாலேயே போகிறார்கள். அங்கிருந்து தலைமைக் குருவான காய்பாவின் வீட்டுக்கு அவர் கொண்டுபோகப்பட்ட சமயத்தில், பேதுருவும் யோவானும் சற்று தூரத்தில் அவர் பின்னால் போகிறார்கள். தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் ஒருபக்கம்... தங்கள் எஜமானுக்கு என்ன ஆகுமோ என்ற கவலை ஒருபக்கம்... இந்த இரண்டுக்கும் நடுவே இவர்கள் தவியாய்த் தவிக்கிறார்கள்.
யோவான் தலைமைக் குருவுக்குத் தெரிந்தவர். அதனால், நேராக காய்பாவின் வீட்டு முற்றத்துக்குள் போகிறார். ஆனால், பேதுரு வாசல் பக்கத்திலேயே நிற்கிறார். யோவான் திரும்பி வந்து, வாசலில் காவல்காக்கிற வேலைக்காரப் பெண்ணிடம் பேசிய பிறகு, பேதுருவுக்கு உள்ளே போக அனுமதி கிடைக்கிறது.
அன்று ராத்திரி ஒரே குளிராக இருக்கிறது. அதனால், முற்றத்தில் இருக்கிறவர்கள் கரியைப் போட்டு தீ மூட்டியிருக்கிறார்கள். இயேசுவுக்கு “என்ன நடக்கப்போகிறது” என்று பார்ப்பதற்காக பேதுருவும் அவர்களோடு உட்கார்ந்து குளிர்காய்கிறார். (மத்தேயு 26:58) இப்போது நெருப்பு வெளிச்சத்தில், அந்த வேலைக்காரப் பெண் பேதுருவின் முகத்தை நன்றாகப் பார்க்கிறாள். உடனே, “நீயும் அந்த மனுஷனுடைய சீஷன்தானே?” என்று பேதுருவிடம் கேட்கிறாள். (யோவான் 18:17) மற்றவர்களும் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, அவர் இயேசுவுடன் இருந்தவர் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.—மத்தேயு 26:69, 71-73; மாற்கு 14:70.
பேதுருவுக்கு எரிச்சலாக இருக்கிறது. தன்னை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அவர் நினைக்கிறார். அதனால், வாசல் மண்டபத்துக்குப் போய் நின்றுகொள்கிறார். தான் இயேசுவுடன் இருந்ததையும் மறுக்கிறார். ஒரு கட்டத்தில், “எனக்கு அவரைத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குப் புரியவில்லை” என்றுகூட சொல்லிவிடுகிறார். (மாற்கு 14:67, 68) அதுமட்டுமல்ல, “தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன்மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி” சத்தியமும் செய்கிறார்.—மத்தேயு 26:74.
இதற்கிடையில், இயேசுவின் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை, காய்பாவின் வீட்டு முற்றத்துக்கு மேல் இருந்த பகுதியில் விசாரணை நடந்திருக்கலாம். சாட்சி சொல்வதற்காக அழைத்து வரப்பட்ட ஆட்கள், உள்ளே போவதையும் வருவதையும் பேதுருவும் மற்றவர்களும் பார்க்கிறார்கள்.
பேதுருவின் பேச்சே அவர் ஒரு கலிலேயர் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அவர் பொய் சொல்கிறார் என்பதை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதோடு, அந்தக் கூட்டத்தில் இருக்கிற ஒருவன் மல்குசின் சொந்தக்காரன். இந்த மல்குசின் காதைத்தான் பேதுரு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வெட்டியிருந்தார். அவன் பேதுருவைப் பார்த்து, “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று சொல்கிறான். அப்போதும் பேதுரு மறுக்கிறார். இயேசு சொன்னபடியே, பேதுரு மூன்றாவது தடவையாக மறுக்கும்போது, சேவல் கூவுகிறது.—யோவான் 13:38; 18:26, 27.
அந்தச் சமயத்தில், முற்றத்தைப் பார்த்தபடி இருக்கிற மேல்மாடத்தில் இயேசு இருந்திருக்கலாம். எஜமான் திரும்பி, பேதுருவைப் பார்க்கிறார். பேதுரு அப்படியே நொறுங்கிவிடுகிறார். ஒருசில மணிநேரங்களுக்கு முன்னால், மாடி அறையில் இயேசு சொன்னது பேதுருவின் ஞாபகத்துக்கு வருகிறது. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரிந்ததும் பேதுரு இடிந்துபோகிறார். அதனால் வெளியே போய்க் கதறி அழுகிறார்.—லூக்கா 22:61, 62.
இது எப்படி நடந்தது? தன்னுடைய ஆன்மீக பலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த பேதுரு... கடைசிவரை உண்மையோடு இருக்கப்போவதாக அடித்துச் சொன்ன பேதுரு... எப்படி தன் எஜமானைத் தெரியாது என்று சொன்னார்? இந்தச் சூழ்நிலையை பேதுரு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதிரிகள் பொய்களை ஜோடித்து, இயேசுவைப் பயங்கரமான குற்றவாளி போல நிற்க வைத்திருக்கிறார்கள். நிரபராதியான இயேசுவுக்கு பேதுரு இப்போது ஆதரவாக நின்றிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ‘முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகளை’ கற்பித்தவரையே பேதுரு தெரியாது என்று சொல்லிவிட்டார்.—யோவான் 6:68.
பேதுருவுக்கு ஏற்பட்ட இந்தப் பயங்கரமான அனுபவத்திலிருந்து நாம் எல்லாருமே பாடம் கற்றுக்கொள்ளலாம். எதிர்பாராத நேரத்தில் வருகிற சோதனைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கத் தயாராக இல்லாவிட்டால், விசுவாசமும் கடவுள்பக்தியும் உள்ள ஒருவர்கூட தடுமாறிவிடலாம். கடவுளுடைய ஊழியர்களான நம் எல்லாருக்குமே இது ஒரு எச்சரிக்கை!