பாடம் 31
கடவுளுடைய அரசாங்கம்—அது என்ன?
பைபிளில் இருக்கும் முக்கியமான செய்தியே கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியதுதான். இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தித்தான் யெகோவா இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக மாற்றுவார். கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? அது இப்போதே ஆட்சி செய்துவருகிறது என்று எப்படிச் சொல்லலாம்? இதுவரைக்கும் அது என்ன சாதித்திருக்கிறது? எதிர்காலத்தில் என்ன சாதிக்கப்போகிறது? இதையெல்லாம் இந்தப் பாடத்திலும் அடுத்த இரண்டு பாடங்களிலும் தெரிந்துகொள்வோம்.
1. கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அதன் அரசர் யார்?
யெகோவா ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதுதான் கடவுளுடைய அரசாங்கம் அல்லது ராஜ்யம். அதன் அரசர் இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார். (மத்தேயு 4:17; யோவான் 18:36) பூமியில் இருக்கும் எல்லார் மீதும் “அவர் ராஜாவாக . . . என்றென்றும் ஆட்சி செய்வார்.”—லூக்கா 1:32, 33.
2. இயேசுவோடு சேர்ந்து யாரெல்லாம் ஆட்சி செய்வார்கள்?
இயேசுவோடு சேர்ந்து, ‘எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்த [நபர்கள்] . . . ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:9, 10) அவர்கள் எத்தனை பேர்? இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் அவருடைய சீஷர்களாக ஆகியிருப்பது உண்மைதான். ஆனால், 1,44,000 பேர் மட்டும்தான் பரலோகத்துக்குப் போய் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள். (வெளிப்படுத்துதல் 14:1-4-ஐ வாசியுங்கள்.) மற்றவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இந்தப் பூமியில் வாழ்வார்கள்.—சங்கீதம் 37:29.
3. கடவுளுடைய அரசாங்கம் எப்படி மனித அரசாங்கங்களைவிட சிறந்தது?
மனித ஆட்சியாளர்களில் சிலர் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தாலும், அதையெல்லாம் அவர்களால் செய்ய முடிவதில்லை. அவர்களுடைய ஆட்சியும் முடிந்துவிடுகிறது. அதன்பின், மக்கள்மேல் அன்பில்லாத சுயநலவாதிகளின் ஆட்சி வந்துவிடலாம். ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசுவின் ஆட்சி அப்படி மாறாது. ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கம் “ஒருபோதும் அழியாது.” (தானியேல் 2:44) அதுமட்டுமல்ல, இயேசு பூமி முழுவதையும் ஆட்சி செய்வார், யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டார். எல்லாரையும் அன்பாகவும் கரிசனையாகவும் நியாயமாகவும் நடத்துவார். அதேபோல் நடந்துகொள்ள மக்களுக்கும் சொல்லிக்கொடுப்பார்.—ஏசாயா 11:9-ஐ வாசியுங்கள்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
கடவுளுடைய அரசாங்கம் ஏன் மனித அரசாங்கங்களைவிட சிறந்தது என்று இப்போது பார்க்கலாம்.
4. உலகையே ஆளப்போகும் உயர்ந்த ஆட்சி
இதுவரைக்கும் வாழ்ந்த எந்த ஆட்சியாளரையும்விட இயேசு கிறிஸ்துவுக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது. மத்தேயு 28:18-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
வேறெந்த மனித ஆட்சியாளரையும்விட இயேசுவுக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?
மனிதர்களுடைய அரசாங்கம் அடிக்கடி மாறும். அதோடு, பூமியின் ஒரு பகுதியைத்தான் அது ஆட்சி செய்யும். ஆனால், கடவுளுடைய அரசாங்கம் அப்படியா? தானியேல் 7:14-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
கடவுளுடைய அரசாங்கம் “அழிக்கப்படாது” என்பது ஏன் ஒரு நல்ல விஷயம்?
அது இந்த முழு உலகத்தையும் ஆட்சி செய்யும் என்பது ஏன் ஒரு நல்ல விஷயம்?
5. மனித ஆட்சிக்கு முடிவு
மனித அரசாங்கங்களுக்குப் பதிலாக ஏன் கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
மனித ஆட்சியினால் என்ன நடந்திருக்கிறது?
பிரசங்கி 8:9-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மனிதர்களுடைய ஆட்சிக்குப் பதிலாகக் கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன்?
6. நம்மைப் புரிந்துகொள்ளும் அரசர்கள்
நம் அரசரான இயேசு ஒரு மனிதராக வாழ்ந்தவர். அதனால், “நம் பலவீனங்களைக் குறித்து [அவரால்] அனுதாபப்பட” முடியும். (எபிரெயர் 4:15) அவரோடு ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரையும் யெகோவா இந்தப் பூமியிலிருந்துதான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த ஆண்களும் பெண்களும் கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்கள், ‘எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்கள்.’—வெளிப்படுத்துதல் 5:9.
இயேசுவும் 1,44,000 பேரும் நம்மைப்போல் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் என்று தெரிந்துகொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறதா? ஏன்?
7. சிறந்த சட்டங்கள்
குடிமக்களுடைய நல்லதுக்கும் பாதுகாப்புக்கும்தான் அரசாங்கங்கள் சட்டங்களைப் போடுகின்றன. கடவுளுடைய அரசாங்கத்துக்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மனிதர்களுடைய சட்டங்களைவிட அவை மிகவும் சிறந்தவை. 1 கொரிந்தியர் 6:9-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
எல்லாருமே கடவுளுடைய சட்டங்கள்படி நடந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும்?a
தன் குடிமக்கள் தன்னுடைய சட்டங்கள்படி வாழ வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன்?
இதுவரை கடவுளுடைய சட்டங்கள்படி வாழாதவர்கள் இனி மாற முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?—வசனம் 11-ஐப் பாருங்கள்.
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கடவுளோட ராஜ்யம் நம்ம மனசுலதான் இருக்கு.”
நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
சுருக்கம்
கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்தில் இருக்கும் ஒரு அரசாங்கம். அது இந்தப் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும்.
ஞாபகம் வருகிறதா?
கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர்கள் யார்?
கடவுளுடைய அரசாங்கம் எப்படி மனித அரசாங்கங்களைவிட உயர்ந்ததாக இருக்கிறது?
யெகோவா தன்னுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்?
அலசிப் பாருங்கள்
கடவுளுடைய அரசாங்கம் எங்கே இருக்கும் என்பதைப் பற்றி இயேசு என்ன சொன்னார் என்று பாருங்கள்.
“கடவுளுடைய ராஜ்யம் உங்கள் இதயத்தில்தான் இருக்கிறதா?” (ஆன்லைன் கட்டுரை)
மனிதர்களுடைய ஆட்சியைவிடக் கடவுளுடைய ஆட்சிக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமென்று யெகோவாவின் சாட்சிகள் ஏன் நினைக்கிறார்கள்?
இயேசுவோடு ஆட்சி செய்வதற்காக யெகோவா தேர்ந்தெடுத்த 1,44,000 பேரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
நீதியான உலகத்தைக் கடவுளால்தான் கொண்டுவர முடியுமென்று சிறையில் இருந்த ஒரு பெண் ஏன் நம்புகிறாள் என்று படித்துப் பாருங்கள்.
“அநீதிக்கு எப்படி முடிவு வரும் என்று தெரிந்துகொண்டேன்” (ஆன்லைன் கட்டுரை)
a கடவுளுடைய சில சட்டங்களைப் பற்றி 3-ஆவது பகுதியில் படிப்போம்.