படிப்புக் கட்டுரை 1
‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’
2020-க்கான வருடாந்தர வசனம்: புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, ஞானஸ்நானம் கொடுங்கள்.—மத். 28:19.
பாட்டு 139 உறுதியாய் நிற்க உதவும்!
இந்தக் கட்டுரையில்...a
1-2. இயேசுவின் கல்லறைக்குப் பக்கத்தில் இருந்த பெண்களிடம் தேவதூதர் என்ன சொன்னார், பிறகு இயேசு என்ன சொன்னார்?
நிசான் 16, கி.பி. 33! விடியற்காலை நேரம்!! பாரமான நெஞ்சத்தோடு சில பெண்கள் இயேசுவின் கல்லறைக்குப் போகிறார்கள். கிட்டத்தட்ட 36 மணிநேரங்களுக்கு முன்புதான் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் உடல் அங்கே அடக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த உடலின் மீது நறுமணப் பொருள்களையும் வாசனை எண்ணெய்களையும் தடவிவிடுவதற்காக அவர்கள் அங்கே போகிறார்கள். ஆனால், கல்லறை காலியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள்! அப்போது, தேவதூதர் அவர்களிடம் ஒரு தகவலைச் சொல்கிறார். ‘இயேசு உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார்’ என்றும், “உங்களுக்கு முன்பே அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்; அங்கே அவரைப் பார்ப்பீர்கள்” என்றும் சொல்கிறார்.—மத். 28:1-7; லூக். 23:56; 24:10.
2 அதைக் கேட்ட உடனே, அந்தப் பெண்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு முன் தோன்றி, “நீங்கள் என் சகோதரர்களிடம் போய், அவர்களை கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்” என்று சொல்கிறார். (மத். 28:10) தன்னுடைய சீஷர்களுக்கு மிக முக்கியமான அறிவுரைகளைக் கொடுக்க வேண்டும் என்று இயேசு நினைக்கிறார். உயிர்த்தெழுந்த பிறகு அவர் தன் சீஷர்களோடு நடத்தப்போகிற முதல் கூட்டம் அதுதான்!
யாருக்குக் கொடுத்த கட்டளை?
3-4. மத்தேயு 28:19, 20-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் கட்டளை அப்போஸ்தலர்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்பட்டதா? விளக்குங்கள். (அட்டைப் படம்)
3 மத்தேயு 28:16-20-ஐ வாசியுங்கள். இயேசு ஏற்பாடு செய்த அந்தக் கூட்டத்தில், முதல் நூற்றாண்டு முழுவதும் தன்னுடைய சீஷர்கள் செய்யவிருந்த ஒரு முக்கியமான வேலையைப் பற்றிச் சொன்னார். இன்று நாமும் அந்த வேலையைச் செய்கிறோம். “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று இயேசு சொன்னார்.
4 இந்தக் கட்டளையை 11 அப்போஸ்தலர்களுக்கு மட்டும் இயேசு கொடுக்கவில்லை. தன்னைப் பின்பற்றுபவர்கள் எல்லாருக்குமே கொடுத்தார். இதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லலாம்? கலிலேயாவில் இருந்த மலையில் இயேசு இந்தக் கட்டளையைக் கொடுத்தபோது, 11 அப்போஸ்தலர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் அங்கே இருந்தார்கள். அந்தப் பெண்களிடம் தேவதூதர் என்ன சொன்னார் என்று யோசித்துப்பாருங்கள். “[கலிலேயாவில்] அவரைப் பார்ப்பீர்கள்” என்று அவர் சொன்னார். அப்படியென்றால், அந்தக் கூட்டத்தில் அந்தப் பெண்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் நிறைய பேர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். எப்படிச் சொல்கிறோம்? “ஒரே நேரத்தில் 500-க்கும் அதிகமான சகோதரர்களுக்கு [இயேசு] தோன்றினார்” என்று அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு எழுதினார். (1 கொ. 15:6) அப்படியென்றால், அவர் எங்கே தோன்றினார்?
5. ஒன்று கொரிந்தியர் 15:6-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
5 மத்தேயு 28-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கூட்டத்தை மனதில் வைத்துதான் 1 கொரிந்தியர் 15:6-ல் பவுல் அப்படிச் சொல்லியிருப்பார் என்று நம்பலாம். அப்படி நம்புவதற்கு என்ன காரணம்? முதலாவது, இயேசுவின் சீஷர்களில் பெரும்பாலானவர்கள் கலிலேயர்களாக இருந்தார்கள். அதனால், அத்தனை சீஷர்களையும் ஒன்றாகச் சந்திப்பதற்கு கலிலேயாவில் இருந்த ஒரு மலைப் பகுதிதான் வசதியாக இருந்திருக்கும். எருசலேமில் இருந்த யாராவது ஒருவருடைய வீட்டில் அப்படிக் கூடிவந்திருக்க முடியாது. இரண்டாவதாக, இயேசு உயிர்த்தெழுந்த உடனேயே 11 அப்போஸ்தலர்களை எருசலேமில் இருந்த ஒரு வீட்டில் சந்தித்துவிட்டார். பிரசங்க வேலையைச் செய்து மற்றவர்களைச் சீஷர்களாக்குகிற பொறுப்பை அந்த 11 அப்போஸ்தலர்களிடம் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று இயேசு நினைத்திருந்தால், அதை எருசலேமிலேயே சொல்லியிருப்பார். இவர்களையும் அந்தப் பெண்களையும் மற்ற சீஷர்களையும் கலிலேயாவுக்கு வரச் சொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது.—லூக். 24:33, 36
6. மத்தேயு 28:20-ல் இருக்கிற கட்டளை இன்றும் பொருந்துகிறது என்று ஏன் சொல்கிறோம், இதற்கு நாம் எப்படிக் கீழ்ப்படிகிறோம்?
6 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே இயேசு அந்தப் பொறுப்பைக் கொடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம்? “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொல்லி தன்னுடைய அறிவுரைகளை இயேசு முடித்தார். (மத். 28:20) அவர் சொன்னதைப் போலவே இன்று சீஷராக்கும் வேலை மும்முரமாக நடந்துவருகிறது. ஒவ்வொரு வருஷமும் 3,00,000 பேர் யெகோவாவின் சாட்சிகளாக ஆகிறார்கள். அதாவது, இயேசுவின் சீஷராக ஆகிறார்கள். இது எவ்வளவு பெரிய விஷயம்!
7. இப்போது எதைப் பற்றிப் பார்ப்போம், ஏன்?
7 நம்மோடு பைபிள் படிக்கும் நிறைய பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள், ஆனால் சிலர் எடுப்பதில்லை. நம்மோடு பைபிள் படிப்பது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் ஞானஸ்நானம் எடுக்குமளவுக்கு முன்னேறுவதில்லை. நீங்கள் யாருக்காவது பைபிள் படிப்பு நடத்துகிறீர்களா? அப்படியென்றால், படித்த விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கும் அவர்களுக்கு உதவ நிச்சயம் ஆசைப்படுவீர்கள். யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் தொடர்ந்து முன்னேற்றங்களைச் செய்யவும் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று இந்தக் கட்டுரை விளக்கும். இப்போது இதைப் பற்றித் தெரிந்துகொள்வது ஏன் அவசியம்? ஏனென்றால், படிப்பைத் தொடருவதா இல்லையா என்று சிலசமயங்களில் நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள உதவுங்கள்
8. யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள நம்மோடு பைபிள் படிப்பவர்களுக்கு உதவுவது ஏன் சவாலாக இருக்கலாம்?
8 தன்மீது இருக்கிற பாசத்தால் மக்கள் தனக்குச் சேவை செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அதனால், நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்கள்மேல் யெகோவா ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார் என்பதையும், அவர்களை ரொம்ப நேசிக்கிறார் என்பதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். “அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு [யெகோவா] அப்பாவாக இருக்கிறார். விதவைகளுக்குப் பாதுகாவலராக இருக்கிறார்” என்பதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். (சங். 68:5) இதையெல்லாம் புரியவைப்பதுதான் நம் குறிக்கோள்! தங்கள்மேல் யெகோவா அக்கறை வைத்திருக்கிறார் என்பதை பைபிள் படிப்பவர் புரிந்துகொள்ளும்போது, மனம் நெகிழ்ந்து போவார்கள். பதிலுக்கு அவர்களும் யெகோவாவை நேசிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் சிலரால், யெகோவாவை ஓர் அன்பான அப்பாவாக நினைக்க முடிவதில்லை. ஏனென்றால், அவர்களைப் பெற்ற அப்பாவிடமிருந்து அன்பையும் அரவணைப்பையும் அவர்கள் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். (2 தீ. 3:1, 3) அதனால் அவர்களுக்குப் படிப்பு நடத்தும்போது, யெகோவாவின் தங்கமான குணங்களை முக்கியப்படுத்திக் காட்டுங்கள். அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நம் அன்பான அப்பா யெகோவா ஆசைப்படுகிறார் என்பதையும், அப்படிக் கிடைப்பதற்கு அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார் என்பதையும் புரியவையுங்கள். இதைத் தவிர வேறென்ன செய்யலாம்?
9-10. பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு நாம் எந்தெந்த புத்தகங்களைப் பயன்படுத்த வேண்டும், ஏன்?
9 “பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?” என்ற புத்தகத்தையும் “கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்” என்ற புத்தகத்தையும் பயன்படுத்துங்கள். மாணாக்கரின் மனதுக்குள் சத்தியத்தை விதைப்பதற்காகவே இவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, சொல்லித் தருகிறது புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கடவுளுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறதா? மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுள் எப்படி உணருகிறார்? நீங்கள் யெகோவாவுடைய நண்பராக முடியுமா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அதன் முதல் அதிகாரத்தில் இருக்கின்றன. கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்ற புத்தகத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? பைபிள் நியமங்களின்படி வாழும்போது, வாழ்க்கை எப்படி வளம் பெறும் என்பதையும், யெகோவாவோடு இருக்கிற பந்தம் எப்படிப் பலமாகும் என்பதையும் புரிந்துகொள்ள அந்தப் புத்தகம் உதவுகிறது. ஒருவேளை, இந்த இரண்டு புத்தகங்களைப் பயன்படுத்தி நீங்கள் நிறைய பேருக்கு பைபிள் படிப்புகளை நடத்தலாம். ஆனாலும், ஒவ்வொரு மாணாக்கருக்காகவும் தனித்தனியாகத் தயாரியுங்கள். அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதை மனதில் வைத்துத் தயாரியுங்கள்.
10 கற்பிப்பதற்கான கருவிகளில் இல்லாத ஒரு பிரசுரத்தில் விளக்கப்பட்டிருக்கும் விஷயத்தைத் தெரிந்துகொள்ள மாணாக்கர் விரும்பினால் என்ன செய்வது? அதைப் பற்றி அவரையே படித்துப் பார்க்கும்படி சொல்லலாம். இப்படிச் சொல்லும்போது, பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்தப்படும் புத்தகங்களிலிருந்து படிப்பைத் தொடருவது தடையாகாது.
11. படிப்பை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் ஏன் ஜெபம் செய்ய வேண்டும், இதன் அவசியத்தை மாணாக்கருக்கு எப்படிப் புரியவைக்கலாம்?
11 ஒவ்வொரு தடவை படிப்பை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் ஜெபம் செய்யுங்கள். படிப்பை ஆரம்பித்த சில வாரங்களிலேயே இதைச் செய்ய ஆரம்பித்துவிடுங்கள். கடவுளுடைய சக்தி இருந்தால்தான் நம்மால் பைபிளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை மாணாக்கருக்குத் தெரியப்படுத்துங்கள். ஜெபம் செய்வதற்கான அவசியத்தை உணரவைக்க, சில பிரஸ்தாபிகள் யாக்கோபு 1:5-ஐ பயன்படுத்துகிறார்கள். “உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்” என்று அது சொல்கிறது. “ஞானத்த கொடுங்கனு கடவுள்கிட்ட எப்படி கேட்குறது?” என்று மாணாக்கரிடம் கேட்கலாம். அப்போது, ஜெபம் செய்வதன் அவசியத்தை அவர்கள் உணரலாம்.
12. மனம்விட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யும்படி பைபிள் மாணாக்கரை உற்சாகப்படுத்த சங்கீதம் 139:2-4-ஐ எப்படிப் பயன்படுத்துவீர்கள்?
12 எப்படி ஜெபம் செய்வது என்று சொல்லிக்கொடுங்கள். மனதார ஜெபம் செய்தால் யெகோவா கண்டிப்பாகக் கேட்பார் என்பதைச் சொல்லுங்கள். தனியாக ஜெபம் செய்யும்போது, மனதில் இருக்கிற எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டலாம் என்பதை விளக்குங்கள். அதுவும், மற்றவர்களிடம் சொல்வதற்குத் தயங்குகிற விஷயங்களைக்கூட யெகோவாவிடம் தாராளமாகச் சொல்லலாம் என்பதை விளக்குங்கள். நம்முடைய ஆழ் மனதில் இருக்கிற எண்ணங்கள்கூட யெகோவாவுக்கு நன்றாகத் தெரியுமே! (சங்கீதம் 139: 2-4-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, கெட்ட எண்ணங்களும் தவறான பழக்கங்களும் தன்னை ஆட்டிப்படைப்பதாக மாணாக்கர் சொன்னால் என்ன செய்யலாம்? யெகோவாவிடம் உதவி கேட்கும்படி சொல்லலாம். உதாரணத்துக்கு, பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட பண்டிகையைக் கொண்டாடுவது அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கலாம். அதைக் கொண்டாடக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அதோடு சம்பந்தப்பட்ட சில விஷயங்களை அவர் விரும்பலாம். அதனால், இதைப் பற்றி ஜெபம் செய்யச் சொல்லுங்கள். அவர் என்ன நினைக்கிறார்... ஏன் அப்படி நினைக்கிறார்... என்பதையெல்லாம் ஜெபத்தில் கொட்டும்படி சொல்லுங்கள். யெகோவாவுக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் நேசிக்க உதவும்படி கெஞ்சிக் கேட்கச் சொல்லுங்கள்.—சங். 97:10.
13. (அ) பைபிள் மாணாக்கரை முடிந்தளவு சீக்கிரமாகவே கூட்டங்களுக்குக் கூப்பிடுவது ஏன் முக்கியம்? (ஆ) கூட்டங்களில் அவர் சௌகரியமாக உணர நாம் முன்கூட்டியே என்ன செய்யலாம்?
13 முடிந்தளவு சீக்கிரமாகவே கூட்டங்களுக்குக் கூப்பிடுங்கள். கூட்டங்களில் கேட்கிற, பார்க்கிற விஷயங்கள் பைபிள் மாணாக்கரின் மனதைத் தொடலாம். யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள அது அவருக்கு உதவும். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவைக் காட்டி, உங்களோடு கூட்டத்துக்கு வரும்படி பாசமாகக் கூப்பிடுங்கள். உங்களால் முடிந்தால், அவர்களைக் கூட்டிக்கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு தடவை படிப்பு நடத்தும்போதும் வெவ்வேறு சகோதர சகோதரிகளைக் கூட்டிக்கொண்டு போங்கள். இப்படிச் செய்யும்போது, சபையில் இருக்கும் மற்றவர்களோடு அவர்களால் நன்றாகப் பழக முடியும்; கூட்டங்களுக்கு வரும்போது அவர் சௌகரியமாக உணர்வார்.
முன்னேறுவதற்கு உதவுங்கள்
14. முன்னேற்றம் செய்ய பைபிள் மாணாக்கரை எது தூண்டும்?
14 பைபிள் மாணாக்கர் முன்னேற வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள். (எபே. 4:13) யெகோவாமீது இருக்கும் அன்பு வளர வளர அவர் முன்னேறுவார். எப்படி? ஒருவர் நம்மோடு பைபிளைப் படிக்க ஆரம்பிக்கும்போது, அந்தப் படிப்பால் தனக்கு என்ன பிரயோஜனம் என்றுதான் பெரும்பாலும் யோசிப்பார். ஆனால் யெகோவாமீது அன்பு வளர வளர, மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கலாம் என்று அவர் யோசிக்கலாம். சபையில் இருப்பவர்களுக்கு உதவ முடியுமா என்றும் அவர் யோசிக்கலாம். (மத். 22:37-39) பொருத்தமான சமயத்தில், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை ஆதரிப்பதற்கு நன்கொடை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லத் தயங்காதீர்கள்.
15. பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிள் மாணாக்கருக்கு எப்படி உதவலாம்?
15 பிரச்சினைகள் முளைக்கும்போது அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். இந்தச் சூழ்நிலையை யோசித்துப்பாருங்கள்: உங்களோடு பைபிள் படிப்பவர், ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆகிவிட்டார். இப்போது, சபையில் இருக்கிற ஒருவர் தன்னைப் புண்படுத்திவிட்டதாக உங்களிடம் சொல்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? யார்மேல் தவறு என்று சொல்வதற்குப் பதிலாக, அவருக்கு உதவுகிற பைபிள் ஆலோசனைகளைக் காட்டலாம். அதன் அடிப்படையில், புண்படுத்திய சகோதரரை அவர் மன்னிக்கலாம். இல்லையென்றால், ‘சகோதரனை ஆதாயப்படுத்திக்கொள்ளும்’ எண்ணத்தோடு அந்தச் சகோதரரிடம் போய் அவர் அன்பாகவும் கனிவாகவும் பேசலாம். (மத்தேயு 18:15-ஐ ஒப்பிடுங்கள்.) அப்படிப் பேசுவதற்கு எப்படித் தயாரிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். JW லைப்ரரி அப்ளிகேஷனையும் ஆராய்ச்சிக் கையேட்டையும் நம் வெப்சைட்டையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று கற்றுக்கொடுங்கள். மற்றவர்களோடு வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே அவர் கற்றுக்கொண்டால், ஞானஸ்நானம் எடுத்த பிறகும் மற்றவர்களோடு ஒத்துப்போவது அவருக்குச் சுலபமாக இருக்கும்.
16. பைபிள் படிப்புகளுக்கு மற்ற சகோதர சகோதரிகளைக் கூட்டிக்கொண்டு போவதால் என்ன நன்மை?
16 உங்கள் பைபிள் படிப்புகளுக்கு மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு போங்கள். உங்கள் சபையைச் சந்திக்க வருகிற வட்டாரக் கண்காணியையும் கூட்டிக்கொண்டு போங்கள். ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு மேலே சில காரணங்களைப் பார்த்தோம். அதோடு, இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, உங்களால் செய்ய முடியாத உதவியை மற்ற பிரஸ்தாபிகளால் செய்ய முடியலாம். இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைப் பாருங்கள்: உங்களோடு பைபிள் படிப்பவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதை விட்டுவிட அவர் கடினமாக உழைக்கிறார். ஆனால், நிறைய தடவை முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவந்திருக்கும் ஒரு பிரஸ்தாபியை உங்களோடு கூட்டிக்கொண்டுபோவது பிரயோஜனமாக இருக்கும். பைபிள் மாணாக்கருக்குத் தேவையான உதவியை அவரால் தர முடியும். அனுபவமுள்ள ஒரு சகோதரருக்கு முன்னால் படிப்பு நடத்துவது உங்களுக்குச் சங்கோஜமாக இருந்தால் என்ன செய்வது? அவரையே நடத்தச் சொல்லுங்கள். மற்றவர்களின் அனுபவத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் மாணாக்கருக்கு உதவுவதுதான் நம்முடைய குறிக்கோள்!
படிப்பை நிறுத்த வேண்டுமா?
17-18. படிப்பை நிறுத்துவதற்கு முன்பாக நாம் எதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும்?
17 உங்களோடு சேர்ந்து பைபிள் படிப்பவர் முன்னேற்றம் செய்யவில்லை என்றால், படிப்பை நிறுத்துவதைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கலாம். முடிவு எடுப்பதற்கு முன்பு, அவருக்கு எந்தளவு திறமைகள் இருக்கின்றன என்பதை யோசியுங்கள். சிலர் வேகமாக முன்னேறலாம், சிலர் மெதுவாக முன்னேறலாம். அதனால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அவரோட சூழ்நிலைக்கு தகுந்தபடி மாற்றங்கள செய்றாரா? கத்துக்கிட்ட விஷயங்கள கடைபிடிக்கிறாரா?’ (மத். 28:20) ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க கொஞ்சக் காலம் எடுக்கலாம். ஆனாலும், வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்களைச் செய்கிறாரா என்று பாருங்கள்.
18 உங்களோடு சேர்ந்து கொஞ்சக் காலமாக பைபிள் படிக்கும் ஒருவர், படிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை என்றால் என்ன செய்வது? உதாரணத்துக்கு, சொல்லித் தருகிறது புத்தகத்திலிருந்து படிப்பை முடித்துவிட்டீர்கள். கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் புத்தகத்திலிருந்தும் படிப்பை ஆரம்பித்திருப்பீர்கள். ஆனாலும் அவர் ஒரு கூட்டத்துக்குகூட வரவில்லை. ஏன், நினைவுநாள் நிகழ்ச்சிக்குகூட வரவில்லை. அதுமட்டுமல்ல, சின்னச் சின்ன காரணங்களுக்காக பைபிள் படிப்பைத் தள்ளிப்போட்டிருக்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில், அவரிடம் வெளிப்படையாகப் பேசுவது நல்லது.b
19. பைபிள் படிப்புக்கு முக்கியத்துவம் தராத ஒருவரிடம் நாம் என்ன கேட்கலாம், வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் யோசித்துப்பார்க்கலாம்?
19 ‘யெகோவாவின் சாட்சியா ஆகுறதுக்கு எது உங்களுக்கு தடையா இருக்கு?’ என்று அவரிடம் நீங்கள் கேட்கலாம். “பைபிள் படிக்குறது எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா நான் யெகோவாவின் சாட்சியா ஆகமாட்டேன்” என்று அவர் சொல்லலாம். இவ்வளவு நாள் உங்களோடு சேர்ந்து பைபிளைப் படித்திருந்தும் அவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்தால், அவருக்கு பைபிள் படிப்பு எடுப்பது பிரயோஜனமாக இருக்குமா? இப்போது இப்படி யோசித்துப்பாருங்கள்: அவருக்கு எது தடையாக இருக்கிறது என்பதை முதல் தடவையாக அவர் உங்களிடம் சொல்லலாம். ஒருவேளை, வீட்டுக்கு வீடு ஊழியத்துக்குப் போவது தனக்குக் கஷ்டமாக இருப்பதாக அவர் சொல்லலாம். இப்போது, அவருடைய பிரச்சினை உங்களுக்குப் புரிந்துவிட்டது. இனி அவருக்குத் தேவையான உதவியை உங்களால் செய்ய முடியும், இல்லையா?
20. பைபிள் படிப்பைத் தொடருவதா வேண்டாமா என்று முடிவு செய்வதற்கு அப்போஸ்தலர் 13:48 எப்படி உதவும்?
20 எசேக்கியேல் வாழ்ந்த காலத்திலிருந்த இஸ்ரவேலர்களைப் போல்தான் இன்று சில பைபிள் மாணாக்கர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது நமக்கு வருத்தமாக இருக்கிறது. அந்த இஸ்ரவேலர்களைப் பற்றி யெகோவா எசேக்கியேலிடம் இப்படிச் சொன்னார்: “இதோ! நரம்பிசைக் கருவியை இனிமையாக வாசித்து, அழகான குரலில் காதல் பாட்டுப் பாடுகிறவனைப் போல நீ அவர்களுக்குத் தெரிகிறாய். அவர்கள் நீ சொல்வதைக் காதால் கேட்பார்கள், ஆனால் யாரும் அதன்படி செய்ய மாட்டார்கள்.” (எசே. 33:32) பைபிள் படிப்பை நிறுத்துவதைப் பற்றி பைபிள் மாணாக்கரிடம் சொல்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், “கொஞ்சக் காலம்தான் மீதியிருக்கிறது” என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். (1 கொ. 7:29) முன்னேற்றமே செய்யாத ஒருவரிடம் தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்துவதைவிட, “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு” இருக்கிறவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.—அப்போஸ்தலர் 13:48-ஐ வாசியுங்கள்.
21. இந்த வருஷத்துக்கான வருடாந்தர வசனத்தைச் சொல்லுங்கள், என்ன செய்ய இது உதவும்?
21 கலிலேயாவில் இருந்த மலையில் இயேசு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சொன்ன சில வார்த்தைகள்தான் 2020-க்கான வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, ஞானஸ்நானம் கொடுங்கள் என்பதுதான் அந்த வார்த்தைகள். (மத். 28:19) சீஷராக்கும் வேலையை இன்னும் நன்றாகச் செய்ய இந்த வார்த்தைகள் நமக்கு உதவியாக இருக்கும்.
பாட்டு 96 தகுதியுள்ளோரைத் தேடுங்கள்
a மற்றவர்களை ‘சீஷர்களாக’ ஆக்கும்படி 2020-க்கான வருடாந்தர வசனம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. இயேசு கொடுத்த இந்தக் கட்டளைக்கு யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருமே கட்டுப்பட வேண்டும். நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக வேண்டும் என்றால், யெகோவாவின் மீது அன்பை வளர்த்துக்கொள்ள நாம் உதவ வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? படிப்பைத் தொடரலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்க எது நமக்கு உதவும்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
b பலன் தராத பைபிள் படிப்புகளை நிறுத்திவிடுங்கள் என்ற வீடியோவை JW பிராட்காஸ்டிங்கில் பாருங்கள்.