ஞானஸ்நானம்—எந்தெந்தப் பெயர்களில்?
“புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.” —மத். 28:19.
1, 2. (அ) கி.பி. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று எருசலேமில் என்ன நடந்தது? (ஆ) அங்கு கூடிவந்திருந்தவர்களில் ஏராளமானோர் ஏன் ஞானஸ்நானம் பெற்றார்கள்?
வருடம் கி.பி. 33. பெந்தெகொஸ்தே தினம். முக்கியமான ஒரு பண்டிகை நடந்துகொண்டிருந்தது; எருசலேம் களைகட்டியிருந்தது; ஜன சந்தடி நிறைந்து அமர்க்களமாகக் காட்சியளித்தது. அந்தப் பண்டிகைக்காக ஏராளமானோர் வந்திருந்தார்கள். அப்போது விநோதமான ஒரு சம்பவம் நடந்தது; அதன்பின்பு, அப்போஸ்தலன் பேதுரு ஊக்கமூட்டும் சொற்பொழிவைக் கொடுத்தார்; அது பலருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றியது. யூதர்கள், யூத மதத்திற்கு மாறியவர்கள் எனச் சுமார் 3,000 பேர் அவருடைய சொற்பொழிவைக் கேட்டு மனம்நெகிழ்ந்து, மனந்திரும்பி, தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையின் அங்கத்தினராய் ஆனார்கள். (அப். 2:41) எருசலேமில் இருந்த குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் அத்தனை பேர் ஞானஸ்நானம் பெற்றது அந்நகரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!
2 அத்தனை பேர் அன்று ஞானஸ்நானம் பெறுவதற்குக் காரணம் என்ன? அன்று காலை, இயேசுவின் சீடர்கள் சுமார் 120 பேர் ஒரு வீட்டின் மாடி அறையில் இருந்தார்கள், அப்போது, ‘பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் திடீரென்று வானத்திலிருந்து உண்டானது.’ அவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டார்கள். அதன்பின், பயபக்தியுள்ள ஆண்களும் பெண்களும் அங்கு கூட்டமாகக் கூடிவந்து, அந்தச் சீடர்கள் “வேற்று மொழிகளில்” பேசுவதைக் கேட்டுத் திகைத்துப்போனார்கள். இயேசுவின் மரணத்தைப் பற்றி பேதுரு சொன்ன வலிமையான விஷயங்கள் அவர்களுடைய “உள்ளத்தைத் துளைத்தன.” அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது. அதனால்தான், “மனந்திரும்புங்கள், . . . ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறுங்கள், அப்போது கடவுளுடைய சக்தியை அன்பளிப்பாகப் பெறுவீர்கள்” என்று பேதுரு அவர்களிடம் சொன்னார்.—அப். 2:1-4, 36-38.
3. பெந்தெகொஸ்தே தினத்தன்று, யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் என்ன செய்ய வேண்டியிருந்தது?
3 பேதுருவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் மதப் பின்னணியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஏற்கெனவே யெகோவாவைத் தங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அவருடைய சக்தியைப் பற்றி, அதாவது படைப்பின்போதும் அதன் பின்னரும் அவர் பயன்படுத்திய சக்தியைப் பற்றி, எபிரெய வேதாகமத்திலிருந்து அறிந்திருந்தார்கள். (ஆதி. 1:2; நியா. 14:5, 6; 1 சா. 10:6; சங். 33:6) ஆனால், அவர்கள் இன்னுமொரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது; மீட்புக்கான கடவுளுடைய வழியை, அதாவது மேசியாவாகிய இயேசுவை, பற்றித் தெரிந்துகொண்டு, அவரை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்தான், ‘இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதன்’ அவசியத்தை பேதுரு அவர்களிடம் வலியுறுத்தினார். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு சில நாட்களுக்கு முன்பு பேதுருவிடமும் மற்ற சீடர்களிடமும் இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: “பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் [மக்களுக்கு] ஞானஸ்நானம் கொடுங்கள்.” (மத். 28:19, 20) முதல் நூற்றாண்டில் அந்த வார்த்தைகள் ஆழ்ந்த அர்த்தமுடையதாக இருந்தன, இன்றும் அவ்வாறே இருக்கின்றன. எப்படி?
பரலோகத் தகப்பனின் பெயரில்
4. யூதர்களோடு வைத்திருந்த பந்தத்தில் யெகோவா என்ன மாற்றத்தைச் செய்தார்?
4 ஏற்கெனவே நாம் பார்த்தபடி, பேதுருவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் யெகோவாவை வழிபட்டு, அவரோடு ஒரு பந்தத்தை அனுபவித்து வந்திருந்தார்கள். அவர் கொடுத்த திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்; இதற்காகவே பல்வேறு இடங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தார்கள். (அப். 2:5-11) என்றாலும், யூதர்களோடு வைத்திருந்த பந்தத்தில் கடவுள் அப்போது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்தார். தம்முடைய விசேஷ தேசமாக இருந்துவந்த அவர்களை நிராகரித்தார்; அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர்கள் இனி திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. (மத். 21:43; கொலோ. 2:14) எனவே, யெகோவாவோடு உள்ள பந்தம் தொடர வேண்டுமானால், அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?
5, 6. முதல் நூற்றாண்டு யூதர்களும், யூத மதத்திற்கு மாறியவர்களும் கடவுளோடு ஒரு பந்தத்தை அனுபவிக்க என்ன செய்தார்கள்?
5 படைப்பாளராகிய யெகோவாவிடம் அவர்கள் நெருங்கி வரவேண்டியிருந்தது. (அப். 4:24) பேதுருவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், யெகோவா எந்தளவு கருணையுள்ள தகப்பன் என்பதை முன்னொருபோதும் இல்லாதளவுக்குத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். அவர்களை மீட்பதற்காக மேசியாவை அவர் அனுப்பி வைத்தார்; அதோடு, மேசியாவின் மரணத்திற்குக் காரணமாக இருந்த அவர்களை மன்னிக்கவும் தயாராக இருந்தார். அவர்களிடம் பேதுரு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் கழுமரத்தில் கொன்ற இந்த இயேசுவையே எஜமானராகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார் என்பதை இஸ்ரவேல் வீட்டாரான நீங்கள் அனைவரும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.” யெகோவாவுடன் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள விரும்பியவர்களுக்காக அவர் செய்திருந்ததை நினைத்து அவர்கள் இன்னும் அதிக நன்றியுள்ளவர்களானார்கள்.—அப்போஸ்தலர் 2:30-36-ஐ வாசியுங்கள்.
6 சொல்லப்போனால், இயேசுவின் மூலம் யெகோவா மீட்பளிப்பார் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவரோடு ஒரு பந்தத்தை அனுபவிக்க முடியும் என்பதை யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் புரிந்துகொண்டார்கள். அதனால்தான், தெரிந்தோ தெரியாமலோ இயேசுவின் கொலைக்கு உடந்தையாக இருந்தது உள்ளிட்ட அநேக பாவங்களிலிருந்து மனந்திரும்பினார்கள். அதுமட்டுமல்ல, அடுத்துவந்த நாட்களில் “அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு அவர்கள் முழு கவனம் செலுத்தி வந்தார்கள்.” (அப். 2:42) ‘கடவுளுடைய அளவற்ற கருணையின் சிம்மாசனத்தைத் தயக்கமில்லாமல் அணுக’ விரும்பினார்கள், அவர்களால் அணுகவும் முடிந்தது.—எபி. 4:16.
7. கடவுளைப் பற்றிய தங்கள் எண்ணத்தை இன்று அநேகர் எவ்வாறு மாற்றிக்கொண்டு, பரலோகத் தகப்பனின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள்?
7 இன்று, பல்வேறு பின்னணியைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் யெகோவாவைப் பற்றிய சத்தியங்களை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள். (ஏசா. 2:2, 3) அவர்களில் சிலர், நாத்திகர்களாக, இயற்கை மதவாதிகளாகa இருந்தார்கள்; ஆனால், ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்றும், அவரோடு அர்த்தமுள்ள ஒரு பந்தத்தை அனுபவிக்க முடியும் என்றும் பிற்பாடு புரிந்துகொண்டார்கள். இன்னும் சிலர், திரித்துவக் கடவுட்களையோ பல்வேறு உருவச் சிலைகளையோ வணங்கிவந்திருந்தார்கள். ஆனால், யெகோவா ஒருவரே சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதைக் கற்றுக்கொண்டு, தங்கள் ஜெபத்தில் அவருடைய பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இது இயேசு சொன்ன கட்டளைக்கு இசைவாக இருக்கிறது; ஆம், தம்முடைய சீடர்கள் பரலோகத் தகப்பனின் பெயரில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருந்தார்.
8. ஆதாமிடமிருந்து வந்த பாவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள், பரலோகத் தகப்பனைப் பற்றி என்ன தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது?
8 ஆதாமிடமிருந்தே பாவத்தைப் பெற்றிருக்கிறோம் என்ற விஷயத்தை அவர்கள் கற்றுக்கொண்டார்கள். (ரோ. 5:12) அது அவர்களுக்கு ஒரு புதிய கருத்தாக இருந்தபோதிலும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இப்படிப்பட்டவர்களை ஒரு நோயாளிக்கு, அதாவது தனக்கு ஒரு நோய் இருக்கிறதென்றே தெரியாத ஒரு நோயாளிக்கு ஒப்பிடலாம். அவருக்கு எப்போதாவது கொஞ்சம் வலி வந்திருக்கலாம், அல்லது அதுபோன்ற சில அறிகுறிகள் இருந்திருக்கலாம். என்றாலும், மருத்துவப் பரிசோதனை செய்துபார்க்காததால், தன் உடல்நிலை நன்றாய் இருப்பதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். ஆனால், உண்மை அதுவல்ல. (1 கொரிந்தியர் 4:2-ஐ ஒப்பிடுங்கள்.) அவருக்கு என்ன நோய் இருக்கிறதென மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தால், அவர் என்ன செய்ய வேண்டும்? நம்பகமான, தரமான சிகிச்சை முறையை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே ஞானமானது, அல்லவா? அவ்வாறே, ஆதாமிடமிருந்து வந்த பாவத்தைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொண்டபோது அநேகர் பைபிளின் “மருத்துவப் பரிசோதனையை” ஏற்றுக்கொண்டார்கள், அதற்கான “சிகிச்சையை” கடவுள் அளிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, பரலோகத் தகப்பனிடமிருந்து விலகியிருக்கிற எல்லாருமே மிகச் சிறந்த “சிகிச்சை நிபுணரான” அவரிடம் வந்தால்தான் குணமடைய முடியும்.—எபே. 4:17-19.
9. யெகோவாவோடு நாம் ஒரு பந்தத்தை அனுபவிப்பதற்காக அவர் என்ன செய்தார்?
9 நீங்கள் ஏற்கெனவே யெகோவாவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால், யெகோவாவோடு ஒரு பந்தத்தை அனுபவிப்பது எவ்வளவு அருமையான விஷயம் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்கள் தகப்பனாகிய யெகோவா எவ்வளவு அன்பானவர் என்பதும் புரிந்திருக்கும். (ரோமர் 5:8-ஐ வாசியுங்கள்.) ஆதாம் ஏவாள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்தபோதிலும், அவர்களுடைய சந்ததியில் வந்த நாம் ஒவ்வொருவருமே அவரோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிப்பதற்கான முதற்படியை அவர் எடுத்தார். அதற்காக, தம்முடைய அன்பு மகன் பாடுகள் பட்டு, துடிதுடித்துச் சாவதை வேதனையோடு சகித்தார். இதை அறிவது, கடவுளுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவும், அன்பினால் தூண்டப்பட்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் நம்மை உந்துவிக்கிறது. நீங்கள் இன்னும் உங்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெறவில்லை என்றால், அப்படிச் செய்வதே ஞானமானது, அல்லவா?
அவருடைய மகனின் பெயரில்
10, 11. (அ) இயேசுவுக்கு நீங்கள் எந்தளவு நன்றிக்கடன்பட்டிருக்கிறீர்கள்? (ஆ) இயேசு தம் உயிரை மீட்புப் பலியாகக் கொடுத்ததைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?
10 என்றாலும், எருசலேமில் கூடிவந்திருந்த மக்களிடம் பேதுரு என்ன சொன்னார் என்பதை மீண்டும் யோசித்துப் பாருங்கள். இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்; “மகனின் பெயரில்” ஞானஸ்நானம் பெறுவதோடு இது நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஏன் அன்று முக்கியமானதாக இருந்தது? ஏன் இன்று முக்கியமானதாக இருக்கிறது? ஏனென்றால், இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருடைய பெயரில் ஞானஸ்நானம் பெறுவதென்பது, படைப்பாளரோடு நமக்குள்ள பந்தத்தில் அவர் வகிக்கும் பங்கை ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. யூதர்களிடமிருந்து திருச்சட்டத்தின் சாபத்தை நீக்குவதற்காக இயேசு கழுமரத்தில் சாக வேண்டியிருந்தது; என்றாலும், அதைவிடப் பெரிய நன்மைக்காகவும் அவர் சாக வேண்டியிருந்தது. (கலா. 3:13) ஆம், முழு மனிதகுலத்திற்கும் மீட்புப் பலியைக் கொடுப்பதற்காகச் சாக வேண்டியிருந்தது. (எபே. 2:15, 16; கொலோ. 1:20; 1 யோ. 2:1, 2) அதற்காக அவர் அநியாயமாய் நடத்தப்பட்டார், சபித்துப் பேசப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், கடைசியில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவருடைய மீட்புப் பலிக்காக நீங்கள் எந்தளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்? டைட்டானிக் கப்பல், 1912-ஆம் ஆண்டு பனிப்பாறை ஒன்றில் மோதி மூழ்கிப்போனது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் பயணம் செய்த 12 வயது சிறுவனாக உங்களைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிலிருந்து தப்புவதற்காக ஓர் உயிர்காப்புப் படகில் குதிக்க நீங்கள் முயலுகிறீர்கள், ஆனால் அதில் சுத்தமாக இடமில்லை. அந்தச் சமயத்தில், படகிலிருந்த ஒரு நபர், உங்களுக்கு இடம் தருவதற்காக, தன்னுடைய மனைவிக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு, மூழ்கிக்கொண்டிருந்த கப்பலுக்கே திரும்பிவிடுகிறார். நீங்கள் எப்படி உணருவீர்கள்? நிச்சயமாகவே அந்த நபருக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்! இந்தச் சம்பவம் ஒரு சிறுவனுடைய வாழ்க்கையில் நடந்தபோது அவனும் அப்படித்தான் உணர்ந்தான்.b என்றாலும், அந்த நபர் செய்த தியாகத்தைவிடப் பெரிய தியாகத்தை இயேசு செய்திருக்கிறார். தம்முடைய உயிரைத் தியாகம் செய்து, நீங்கள் என்றென்றும் வாழ வழிசெய்திருக்கிறார்.
11 கடவுளுடைய மகன் உங்களுக்காகச் செய்திருக்கிற தியாகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? (2 கொரிந்தியர் 5:14,15-ஐ வாசியுங்கள்.) மிகுந்த நன்றியுள்ளவர்களாகவே உணர்ந்திருப்பீர்கள். அதனால், கடவுளுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கவும், ‘இனி உங்களுக்காக வாழாமல் உங்களுக்கென்று இறந்து உயிர்த்தெழுந்தவருக்காகவே வாழவும்’ தூண்டப்பட்டிருப்பீர்கள். மகனின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதென்பது, இயேசு உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதையும், ‘வாழ்வின் அதிபதியாக’ அவரை ஏற்றுக்கொள்வதையும் அர்த்தப்படுத்துகிறது. (அப். 3:15; 5:31) படைப்பாளரோடு முன்பு உங்களுக்கு எந்தப் பந்தமும் இல்லாதிருந்தது, உண்மையான நம்பிக்கை இல்லாதிருந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பெற்றதன் மூலம், பரலோகத் தகப்பனோடு ஒரு பந்தத்தை இப்போது உங்களால் அனுபவிக்க முடிகிறது. (எபே. 2:12, 13) “ஒருகாலத்தில் உங்கள் மனம் பொல்லாத செயல்களையே நினைத்துக்கொண்டிருந்ததால் நீங்கள் கடவுளுக்கு அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தீர்கள்; இப்போதோ கடவுள் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் களங்கமற்றவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படி, மனித உடலில் இருந்தவருடைய [இயேசுவுடைய] மரணத்தின் மூலம் உங்களைத் தம்முடன் சமரசமாக்கியிருக்கிறார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—கொலோ. 1:21, 22.
12, 13. (அ) கடவுளுடைய மகனின் பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருப்பதால், யாராவது உங்களைப் புண்படுத்தும்போது எப்படி நடந்துகொள்வீர்கள்? (ஆ) இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவராகிய நீங்கள் என்ன செய்யக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்?
12 கடவுளுடைய மகனின் பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், உங்களுக்குப் பாவ இயல்பு இருக்கிறது என்பதை நன்றாகவே புரிந்திருக்கிறீர்கள். இப்படிப் புரிந்திருப்பது அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு உதவும். உதாரணத்திற்கு, யாராவது உங்களைப் புண்படுத்திவிடுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்; அவரும் சரி நீங்களும் சரி, இருவருமே பாவிகள் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? உங்கள் இருவருக்குமே கடவுளுடைய மன்னிப்பு தேவை, நீங்கள் இருவருமே மன்னிக்கும் குணத்தைக் காண்பிக்க வேண்டும். (மாற். 11:25) இந்தக் குறிப்பை வலியுறுத்துவதற்காக இயேசு ஓர் உவமையைச் சொன்னார்: ஓர் அடிமை அவனுடைய ராஜாவிடம் பத்தாயிரம் தாலந்து (6 கோடி தினாரி) கடன் வாங்கியிருந்தான்; என்றாலும், ராஜா அந்தக் கடனை ரத்து செய்தார். ஆனால், அந்த அடிமை தன்னிடம் 100 தினாரி கடன்பட்டிருந்த சக அடிமையிடம் மிகவும் கறாராக நடந்துகொண்டான். இயேசு இந்த உவமையைச் சொன்னபின், ஒருவன் தன் சகோதரனை மன்னிக்காவிட்டால், அவனுடைய குற்றங்களை யெகோவா மன்னிக்க மாட்டார் என்றும் கூறினார். (மத். 18:23-35) ஆம், மகனின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதென்பது, இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துவதோடு, மன்னிக்கிற விஷயத்திலும் மற்ற விஷயங்களிலும் அவருடைய முன்மாதிரி, போதனைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கப் பெருமுயற்சி எடுப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.—1 பே. 2:21; 1 யோ. 2:6.
13 நீங்கள் அபூரணராக இருப்பதால், இயேசுவை முழுமையாகப் பின்பற்ற முடிவதில்லை. என்றாலும், கடவுளுக்கு உங்களை மனப்பூர்வமாக அர்ப்பணித்திருப்பதால்தான், முடிந்தளவு இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறீர்கள். இதற்காக, உங்களுடைய பழைய சுபாவத்தைக் களைந்துபோடவும், புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளவும் தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள். (எபேசியர் 4:20-24-ஐ வாசியுங்கள்.) அபிமானத்திற்குரிய ஒரு நண்பர் உங்களுக்கு இருந்தால், அவருடைய நற்பண்புகளிலிருந்தும் நல்ல முன்மாதிரியிலிருந்தும் கற்றுக்கொள்ளத்தானே ஆசைப்படுவீர்கள். அப்படியானால், நீங்கள் கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றவும் வேண்டும்.
14. பரலோக ராஜாவான இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
14 மகனின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் காட்டுவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. கடவுள் “எல்லாவற்றையும் அவருடைய [இயேசுவுடைய] காலடியில் கீழ்ப்படுத்தி, சபையின் நன்மைக்கென்று எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.” (எபே. 1:22) ஆகையால், யெகோவாவின் மக்களை வழிநடத்த இன்று இயேசு பயன்படுத்துகிற ஏற்பாட்டிற்கு நீங்கள் மதிப்புக் காட்ட வேண்டும். சபைகளில் கிறிஸ்து அபூரண மனிதர்களைப் பயன்படுத்துகிறார், குறிப்பாக நியமிக்கப்பட்ட மூப்பர்களைப் பயன்படுத்துகிறார். இத்தகைய சகோதரர்கள் “பரிசுத்தவான்களைச் சரிப்படுத்துவதற்கென்றும், . . . கிறிஸ்துவின் உடலைப் பலப்படுத்துவதற்கென்றும்” நியமிக்கப்படுகிறார்கள். (எபே. 4:11, 12) அபூரண மனிதர் ஒருவர் தவறு செய்தால், பரலோக அரசாங்கத்தின் ராஜாவாகிய இயேசு சரியான சமயத்தில், சரியான விதத்தில் அதைச் சரிசெய்வார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?
15. நீங்கள் ஞானஸ்நானம் பெறப்போகிறீர்கள் என்றால், ஞானஸ்நானம் பெற்ற பிறகு என்ன ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும்?
15 ஆனால், சிலர் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்காமலும், ஞானஸ்நானம் பெறாமலும் இருக்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவரென்றால், மகனை ஏற்றுக்கொள்வதுதான் நியாயமென்றும், உங்கள் நன்றியைக் காட்டுவதற்கான வழியென்றும் இப்போது புரிந்துகொண்டீர்களா? மகனின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றீர்களென்றால், அபரிமிதமான ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவீர்கள்.—யோவான் 10:9-11-ஐ வாசியுங்கள்.
கடவுளுடைய சக்தியின் பெயரில்
16, 17. கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதென்பது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
16 கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதென்பது எதை அர்த்தப்படுத்துகிறது? முன்பு குறிப்பிட்டபடி, பெந்தெகொஸ்தே தினத்தன்று பேதுருவின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்குக் கடவுளுடைய சக்தியைப் பற்றித் தெரிந்திருந்தது. சொல்லப்போனால், கடவுள் தம்முடைய சக்தியைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்பதற்கான அத்தாட்சியை அவர்கள் அப்போதுதான் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். ஆம், அநேகர் ‘கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு, . . . வேற்று மொழிகளில் பேசுவதைப் பார்த்திருந்தார்கள்’; இவர்களில் பேதுருவும் ஒருவராக இருந்தார். (அப். 2:4, 8) பொதுவாக, “பெயரில்” என்று சொல்லும்போது அது ஒரு நபருடைய பெயரை மட்டுமே குறிப்பதில்லை. உதாரணத்திற்கு, “சட்டத்தின் பெயரில்” இன்று பல காரியங்கள் செய்யப்படுகின்றன என்றாலும், சட்டம் என்பது ஒரு நபர் அல்ல. சட்டத்தின்படி அவை செய்யப்படுகின்றன. அவ்வாறே, கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறுகிற ஒருவர், கடவுளுடைய சக்தி ஒரு நபரல்ல என்பதைப் புரிந்திருக்கிறார். அதோடு, கடவுளுடைய நோக்கத்தில் அவரது சக்தி வகிக்கிற பங்கை ஏற்றுக்கொள்கிறார்.
17 கடவுளுடைய சக்தியைப் பற்றி பைபிள் படிப்பிலிருந்து நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். உதாரணத்திற்கு, வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டே எழுதப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டீர்கள். (2 தீ. 3:16) நீங்கள் ஆன்மீக ரீதியில் படிப்படியாக முன்னேற்றம் செய்தபோது, ‘பரலோகத் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு தம்முடைய சக்தியைக் கொடுப்பார்’ என்ற உண்மையை இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டீர்கள். (லூக். 11:13) உங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை ஒருவேளை உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் இன்னும் கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறவில்லையென்றால், பரலோகத் தகப்பன் தம்முடைய சக்தியைக் கொடுப்பார் என்ற இயேசுவின் வாக்குறுதி எவ்வளவு உண்மை என்பதை ஞானஸ்நானத்திற்குப் பிறகு அனுபவப்பூர்வமாகக் காண்பீர்கள். ஆம், மகத்தான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்!
18. கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவோருக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
18 இன்றும்கூட யெகோவா தம்முடைய சக்தியின் மூலம் கிறிஸ்தவ சபையை வழிநடத்துகிறார். அந்தச் சக்தி நம் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் உதவுகிறது. கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவதென்பது, நம்முடைய வாழ்க்கையில் அதன் பங்கை ஏற்றுக்கொள்வதையும், நன்றியுணர்வோடு அதன் வழிநடத்துதலுக்கு ஏற்ப நடப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. என்றாலும் சிலர், ‘என்னுடைய அர்ப்பணிப்புக்கு இசைவாக எப்படி வாழ்வது? அதில் கடவுளுடைய சக்தி எப்படி உட்பட்டுள்ளது?’ என்றெல்லாம் யோசிக்கலாம். இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a கடவுள் இருக்கிறார், ஆனால் தம்முடைய படைப்புகள்மீது அவருக்கு அக்கறையில்லை என்பது இயற்கை மதவாதிகளின் நம்பிக்கை.
b அக்டோபர் 22, 1981, ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 3-8-ஐக் காண்க.
நினைவிருக்கிறதா?
• பரலோகத் தகப்பனின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
• மகனின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
• பரலோகத் தகப்பனின் பெயரிலும், மகனின் பெயரிலும் ஞானஸ்நானம் பெறுவதன் அர்த்தத்தைப் புரிந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
• கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவது எதை அர்த்தப்படுத்துகிறது?
[பக்கம் 10-ன் படங்கள்]
கி.பி. 33-ஆம் ஆண்டு, பெந்தெகொஸ்தே தினத்தன்று, புதிய சீடர்கள் பரலோகத் தகப்பனோடு எப்படிப்பட்ட பந்தத்திற்குள் வந்தார்கள்?
[படத்திற்கான நன்றி]
By permission of the Israel Museum, Jerusalem