உண்மை கிறிஸ்தவர்கள் யார்?
“இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கற்றுக்கொண்ட விஷயங்களை போதனையிலும் நடத்தையிலும் பின்பற்றுவதே கிறிஸ்தவம் ஆகும்.” (ஒரு கிறிஸ்தவராக இருப்பதில், ஆங்கிலம்) இந்த வார்த்தைகளின் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டு இறையியலாளரான ஹான்ஸ் குயெங் என்பவர் அப்பட்டமான ஓர் உண்மையைத் தெரிவிக்கிறார்: நேர்மையுள்ளவர்கள் இயேசுவின் போதனைகளை நடைமுறையில் கடைப்பிடிக்கும் இடத்தில்தான் உண்மை கிறிஸ்தவம் இருக்கும்.
அப்படியானால், தனி நபர்களோ அமைப்புகளோ கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவின் போதனைகளை நடைமுறையில் கடைப்பிடிக்கவில்லை என்றால், அப்போது என்ன? அநேகர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள் என இயேசுதாமே முன்னறிவித்தார். “உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்று நிறைய பேர் சொல்வார்கள்; இவ்வாறு, தாங்கள் செய்திருந்த வெவ்வேறு காரியங்களை அவரிடம் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால், இயேசு அவர்களிடம் என்ன சொல்லுவார்? “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று சொல்லுவார்; அவர் கடுமையாக நியாயந்தீர்ப்பார் என்பதை இவ்வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன.—மத்தேயு 7:22, 23.
இயேசுவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்கிற ‘அக்கிரமச் செய்கைக்காரர்களுக்கு’ எப்பேர்ப்பட்ட கடும் எச்சரிக்கை! ஜனங்களை அக்கிரமச் செய்கைக்காரர்களாக ஒதுக்கித் தள்ளாமல், உண்மை கிறிஸ்தவர்களாக இயேசு கருத வேண்டுமானால், முக்கியமான இரண்டு நிபந்தனைகளை அவர்கள் பூர்த்திசெய்ய வேண்டும்; அவற்றை இப்போது நாம் கவனிக்கலாம்.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால்”
இயேசுவின் ஒரு நிபந்தனை இதுவே: ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.’—யோவான் 13:34, 35.
தம்மைப் பின்பற்றுபவர்கள் ஒருவர்மீது ஒருவரும், மற்ற அனைவர் மீதும் உண்மையான அன்பைக் காண்பிக்க வேண்டுமென இயேசு எதிர்பார்க்கிறார். இயேசு பூமியில் வாழ்ந்த காலம் முதற்கொண்டு நூற்றாண்டுகளாய் அநேக கிறிஸ்தவர்கள் தனிநபர்களாய் அந்த நிபந்தனையைப் பூர்த்திசெய்து வந்திருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக்கொள்கிற பெரும்பாலான மத அமைப்புகளைப் பற்றி என்ன? அவற்றின் சரித்திரத்தில் அன்பு மேலோங்கி இருந்திருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை. மாறாக, அப்பாவி மக்களின் இரத்தத்தைச் சிந்திய கணக்கில்லா போர்களிலும் சண்டைகளிலுமே அவை முன்னுக்கு நின்றிருக்கின்றன.—வெளிப்படுத்துதல் 18:24.
இன்றுவரை நிலைமை அதேதான். கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தேசங்கள், 20-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரு உலகப் போர்களின்போது ஜனங்களைக் கொன்று குவிப்பதில் முன்னணி வகித்தன. இன்னும் சமீப காலத்தில், கிறிஸ்தவர்களென சொல்லிக்கொண்ட சர்ச் அங்கத்தினர்கள் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களிலும், 1994-ம் வருடம் ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலை முயற்சிகளிலும் முன்னணி வகித்தார்கள். “இப்படி ஒருவருக்கெதிராக ஒருவர் இரத்த வெறிபிடித்து அலைந்தவர்கள், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள்” என எழுதுகிறார் முன்னாள் ஆங்கிலிக்கன் ஆர்ச்பிஷப் டெஸ்மன்ட் டுட்டு.
“என் உபதேசத்தில் நிலைத்திருந்தால்”
‘நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ என்ற இயேசுவின் வார்த்தைகள் உண்மை கிறிஸ்தவத்திற்கான இரண்டாவது நிபந்தனையைக் குறிப்பிடுகின்றன.—யோவான் 8:31, 32.
ஆக, தம்மைப் பின்பற்றுபவர்கள் தமது உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டுமென, அதாவது தமது போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென, இயேசு எதிர்பார்க்கிறார். ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்கிற மத போதகர்களோ “அதிகமதிகமாக கிரேக்க தத்துவங்களையே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்று இறையியலாளர் குயெங் கூறுகிறார். இயேசுவின் போதனைகளுக்குப் பதிலாக, ஆத்துமா அழியாமை, உத்தரிக்கும் ஸ்தலம், மரியாள் வழிபாடு, குருவர்க்கம் போன்ற ஏராளமான கருத்துகளை புறமதங்களிலிருந்தும் தத்துவஞானிகளிடமிருந்தும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 1:19-21; 3:18-20.
அதுமட்டுமல்ல, புரிந்துகொள்ள முடியாத திரித்துவக் கொள்கையையும் மத போதகர்கள் அறிமுகப்படுத்தினார்கள்; இதன் மூலம், இயேசு ஒருகாலும் உரிமைபாராட்டாத ஒரு ஸ்தானத்திற்கு அவரை உயர்த்தியிருக்கிறார்கள். மேலும், ஜனங்களுடைய கவனத்தை இயேசு எப்போதும் யார் பக்கம் திருப்பினாரோ அவரை வணங்காதபடி, அதாவது அவருடைய பிதாவாகிய யெகோவாவை வணங்காதபடி, ஜனங்களைத் திசைதிருப்பியிருக்கிறார்கள். (மத்தேயு 5:16; 6:9; யோவான் 14:28; 20:17) “கடவுள் என்று இயேசு குறிப்பிடும்போது, முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் வணங்கிய யாவே என்ற கடவுளைத்தான் அர்த்தப்படுத்துகிறார் . . . அவரைப் பொறுத்தவரையில், யாவே ஒருவர் மட்டுமே கடவுள்” என்று ஹான்ஸ் குயெங் எழுதுகிறார். இயேசுவின் கடவுளும் பிதாவுமானவர்தான் யாவே என்று, அதாவது யெகோவா என்று, இன்றைக்கு எத்தனை பேர் உடனடியாகச் சொல்வார்கள்?
அரசியல் விவகாரங்களில் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்ற இயேசுவின் கட்டளையை மதத் தலைவர்கள் முற்றிலும் நிராகரித்திருக்கிறார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் கலிலேயா மாகாணம், “இனப்பற்றின் மையமாக இருந்தது” எனக் குறிப்பிடுகிறார் டிரெவர் மாரோ என்ற எழுத்தாளர். தேசப்பற்றுமிக்க யூதர்கள் அநேகர் அரசியல் சுதந்திரத்தையும் மதச் சுதந்திரத்தையும் அடைவதற்காக ஆயுதச் சண்டைகளில் ஈடுபட்டார்கள். அத்தகைய சண்டைகளில் தம்முடைய சீஷர்கள் பங்குபெற வேண்டுமென இயேசு சொன்னாரா? இல்லை. அதற்கு மாறாக, ‘நீங்கள் உலகத்தாரல்ல’ என்றே அவர்களிடம் சொன்னார். (யோவான் 15:19; 17:14) ஆனால், சர்ச் தலைவர்களோ நடுநிலை வகிப்பதற்குப் பதிலாக, “போரையும் அரசியலையும் ஆதரித்த சர்ச் போதனைகளை” முன்னேற்றுவித்தார்கள்; அந்தப் போதனைகளை ஐரிஷ் எழுத்தாளரான ஹியூபர்ட் பட்லர் அப்படித்தான் விவரித்தார். “அரசியல் கலந்த கிறிஸ்தவம், கிட்டத்தட்ட எப்போதுமே போரை ஆதரிக்கும் கிறிஸ்தவமாகவும் இருக்கிறது; அரசியல்வாதிகளுக்கும் குருமாருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவில், சில அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக சர்ச் எப்போதுமே ராணுவப் படைகளை ஆசீர்வதிக்கிறது” என அவர் எழுதுகிறார்.
கள்ளப் போதகர்கள் இயேசுவை மறுதலிக்கிறார்கள்
உண்மை கிறிஸ்தவம் விசுவாசத்தைவிட்டு வழிவிலகிப்போகும் என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்திருந்தார். தான் மரித்த பிறகு, கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களிலிருந்து “கொடிதான ஓநாய்” போன்றவர்கள் எழும்பி, “சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று” அவர் முன்னறிவித்திருந்தார். (அப்போஸ்தலர் 20:29, 30) ‘தேவனை அறிந்திருக்கிறோமென்று அவர்கள் அறிக்கைபண்ணுவார்கள்,’ ஆனால் உண்மையில் தங்கள் ‘கிரியைகளினால் அவரை மறுதலிப்பார்கள்.’ (தீத்து 1:16) கள்ளப் போதகர்கள் ‘கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலிப்பார்கள்’ என அப்போஸ்தலன் பேதுருவும் எச்சரித்தார். மேலும், அவர்களுடைய கெட்ட நடத்தையைப் பார்த்து ஜனங்கள் ‘சத்தியமார்க்கத்தைத் தூஷிப்பார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டார். (2 பேதுரு 2:1, 2) இவ்விதத்தில் கிறிஸ்துவை மறுதலிப்பது, “விசுவாசதுரோகத்தின் மூலமும் கேடான போதனைகளைப் பரப்புவதன் மூலமும் பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பதற்கு” சமமாக உள்ளது என கிரேக்க அறிஞரான டபிள்யூ. ஈ. வைன் சொல்கிறார்.
இயேசுவின் சீஷர்கள் என சொல்லிக்கொள்ளும் ஜனங்கள் வேண்டுமென்றே அவருடைய ‘உபதேசத்தில் நிலைத்திருக்காமலும்,’ அவர் சொன்ன மற்ற காரியங்களைப் பின்பற்றாமலும் இருந்தால், இயேசு என்ன செய்வார்? அவர் இவ்வாறு எச்சரித்தார்: “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” (மத்தேயு 10:33) உத்தமமாக நடக்க உண்மையிலேயே விரும்பியும், ஏதோவொரு தவறைச்செய்துவிடுகிற நபர்களை அவர் மறுதலிப்பதில்லை. உதாரணத்திற்கு, மூன்று முறை இயேசுவை மறுதலித்த அப்போஸ்தலன் பேதுரு மனந்திரும்பியபோது மன்னிக்கப்பட்டார். (மத்தேயு 26:69-75) என்றாலும், ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்களாக இருக்கும் அமைப்புகளை அல்லது நபர்களை இயேசு மறுதலிக்கிறார்; கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல் அவர்கள் பாசாங்கு செய்கிறார்கள், ஆனால் வேண்டுமென்றேயும் விடாப்பிடியாகவும் அவருடைய போதனைகளை ஒதுக்கித்தள்ளுகிறார்கள். அத்தகைய கள்ளப் போதகர்களைப் பற்றி இயேசு பின்வருமாறு சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”—மத்தேயு 7:15-20.
அப்போஸ்தலர்களின் இறப்பும் விசுவாசதுரோகத்தின் பிறப்பும்
கள்ளக் கிறிஸ்தவர்கள் எப்போது கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள்? இயேசு மரித்த பின், வெகு சீக்கிரத்திலேயே மறுதலிக்கத் தொடங்கினார்கள். தமது ஊழியத்தின்போது தாம் விதைத்த உண்மை கிறிஸ்தவர்களாகிய ‘நல்ல விதைகளின்’ நடுவே, கள்ளக் கிறிஸ்தவர்களாகிய “களைகளை” பிசாசாகிய சாத்தான் மளமளவென நடத்தொடங்குவான் என இயேசுதாமே எச்சரித்தார். (மத்தேயு 13:24, 25, 37-39) கள்ளப் போதகர்கள் தனது நாளில் ஏற்கெனவே தீவிரமாய்ச் செயல்பட்டுக்கொண்டிருந்ததாக அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். அத்தகையோருக்கு ‘சத்தியத்தின்மேல்’ உண்மையான ‘அன்பு’ இல்லாதிருந்ததே இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களிலிருந்து அவர்கள் வழிவிலகிப்போனதற்கு அடிப்படைக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.—2 தெசலோனிக்கேயர் 2:10.
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் உயிரோடிருந்த காலம்வரைக்கும் அத்தகைய விசுவாசதுரோகத்திற்கு அவர்கள் தடையாக இருந்தார்கள். என்றாலும், அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு, அநேகரை வஞ்சிப்பதற்காக மதத் தலைவர்கள் “சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், . . . அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும்” வந்து, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கற்பித்த சத்தியங்களிலிருந்து அதிகமதிகமானோரை வழிவிலகச் செய்தார்கள். (2 தெசலோனிக்கேயர் 2:3, 6-12) அதன்பின் சீக்கிரத்திலேயே, முதல் கிறிஸ்தவ சபை “இயேசுவையும், ஏன் பவுலையும்கூட அதிர்ச்சியடைய வைக்கிற” மத அமைப்பாக மாறியது என ஆங்கில தத்துவஞானியான பர்ட்ரன்ட் ரஸல் எழுதுகிறார்.
மீண்டும் உண்மை கிறிஸ்தவம்
விஷயங்கள் தெளிவாக இருக்கின்றன. அப்போஸ்தலர்கள் மரித்த சமயம் தொடங்கி இன்றுவரையாக, கிறிஸ்தவம் என்ற பெயரில் நடப்பிக்கப்பட்டிருக்கிற பெரும்பாலான காரியங்களில் கிறிஸ்துவின் போதனைகள் பின்பற்றப்படவே இல்லை. ஆனால் அதற்காக “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற தம் வாக்கை இயேசு நிறைவேற்றத் தவறியிருக்கிறாரென்று அர்த்தமல்ல. (மத்தேயு 28:20) ‘இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவைத் தங்கள் போதனைகளிலும் நடத்தையிலும் பின்பற்றிய’ விசுவாசமிக்க நபர்கள், அவ்வார்த்தைகள் சொல்லப்பட்ட சமயத்திலிருந்தே நிச்சயம் இருந்துவந்திருக்கிறார்கள். அத்தகையோருக்கு ஆதரவளிக்கப்போவதாகத் தாம் அளித்த வாக்குறுதியை இயேசு கிறிஸ்து நிறைவேற்றியிருக்கிறார்; ஆம், உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளச்சின்னமான அன்பைக் காண்பிப்பதற்கும், இயேசு கற்பித்த சத்தியங்களுக்கிசைய முறைபிறழாமல் நடந்துகொள்வதற்கும் முயன்று வந்திருக்கிற அவர்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்.
அதுமட்டுமா, இந்தக் கடைசி நாட்களின்போது, தெளிவாக அடையாளம் காணப்படும் கிறிஸ்தவ சபையில் விசுவாசமிக்க சீஷர்களைக் கூட்டிச்சேர்க்கப்போவதாக இயேசு வாக்குறுதி அளித்தார்; அதுவே, அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காக அவர் பயன்படுத்தும் கிறிஸ்தவ சபையாகும். (மத்தேயு 24:14, 45-47) “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என ‘திரளான கூட்டமாகிய ஜனங்களை’ கூட்டிச்சேர்ப்பதற்கும், ‘ஒரே மேய்ப்பனின்’ கீழ் ‘ஒரே மந்தையாக’ அவர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் இப்பொழுதே அவர் அந்தச் சபையைப் பயன்படுத்தி வருகிறார்.—வெளிப்படுத்துதல் 7:9, 14-17; யோவான் 10:16; எபேசியர் 4:11-16.
ஆனால், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிறைய அமைப்புகள் கிறிஸ்துவின் பெயரைக் களங்கப்படுத்தி, கிறிஸ்தவ மதத்தின் நற்பெயரைக் கெடுத்துப்போட்டிருக்கின்றன; எனவே, அப்படிப்பட்ட எந்தவொரு அமைப்பையும் விட்டுவிலகுங்கள். இல்லையென்றால், அப்போஸ்தலன் யோவானிடம் இயேசு கிறிஸ்து சொன்னதுபோல், வெகு விரைவில் கடவுள் நியாயந்தீர்க்கும்போது அவற்றிற்கு வரப்போகும் ‘வாதைகள்’ உங்களுக்கும் வந்துவிடலாம். (வெளிப்படுத்துதல் 1:1; 18:4, 5) “கடைசி நாட்களில்” உண்மை வணக்கத்தார்—உண்மை கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிப்போர்—கடவுளுடைய கட்டளைகளுக்குச் செவிசாய்த்து, ‘அவருடைய பாதைகளில் நடப்பார்கள்’ என மீகா தீர்க்கதரிசி குறிப்பிட்டார்; அவர்களில் ஒருவராக இருப்பதை உங்கள் தீர்மானமாக ஆக்கிக்கொள்ளுங்கள். (மீகா 4:1-4) அப்படிப்பட்ட உண்மை வணக்கத்தாரை உங்களுக்கு அடையாளம்காட்ட இப்பத்திரிகையின் பிரசுரிப்பாளர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
[பக்கம் 5-ன் படங்கள்]
உண்மை கிறிஸ்தவர்கள் போர்களில் ஏன் பங்குகொள்ள மாட்டார்கள்?
[படங்களுக்கான நன்றி]
வீரர்கள், இடது: U.S. National Archives photo; நெருப்பைக் கக்கும் சாதனம், வலது: U.S. Army Photo
[பக்கம் 7-ன் படங்கள்]
‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருங்கள்’ என்பதும், ‘என் உபதேசத்தில் நிலைத்திருங்கள்’ என்பதும் உண்மை கிறிஸ்தவர்களுக்கு இயேசு விதித்த முக்கியமான நிபந்தனைகள்