அதிகாரம் 137
பெந்தெகொஸ்தேக்கு முன் நூற்றுக்கணக்கானோர் பார்க்கிறார்கள்
மத்தேயு 28:16-20 லூக்கா 24:50-52 அப்போஸ்தலர் 1:1-12; 2:1-4
இயேசு நிறைய பேர் முன்னால் தோன்றுகிறார்
பரலோகத்துக்குப் போகிறார்
120 சீஷர்கள்மேல் கடவுளுடைய சக்தியைப் பொழிகிறார்
இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, தன்னுடைய 11 அப்போஸ்தலர்களையும் கலிலேயாவில் இருக்கிற ஒரு மலையில் சந்திக்க ஏற்பாடு செய்கிறார். இவர்களைத் தவிர, கிட்டத்தட்ட 500 சீஷர்களும் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. (மத்தேயு 28:17; 1 கொரிந்தியர் 15:6) இப்போது இயேசு சொல்கிற விஷயங்கள், அவர் உண்மையிலேயே உயிரோடு இருக்கிறார் என்று அவர்களை நம்ப வைக்கின்றன.
பரலோகத்திலும் பூமியிலும் தனக்கு எல்லா அதிகாரத்தையும் கடவுள் கொடுத்திருப்பதாக இயேசு சொல்கிறார். “அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று அவர்களை உற்சாகப்படுத்துகிறார். (மத்தேயு 28:18-20) உண்மைதான், இயேசு இப்போது உயிரோடு இருக்கிறார்; நல்ல செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் இப்போதும் ஆர்வமாக இருக்கிறார்.
சீஷர்களை உருவாக்குகிற பொறுப்பை, தன்னைப் பின்பற்றுகிற ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாருக்குமே இயேசு கொடுத்திருக்கிறார். அவர்கள் பிரசங்கிப்பதையும் கற்பிப்பதையும் தடுத்து நிறுத்த எதிரிகள் முயற்சி செய்யலாம். ஆனால், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று இயேசு அவர்களிடம் சொல்கிறார். அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு அவர் எப்படி உதவி செய்வார்? “இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று இயேசு அவர்களுக்கு உறுதியளிக்கிறார். பிரசங்க வேலையைச் செய்கிற எல்லாருக்கும் அற்புதங்களைச் செய்கிற சக்தி கிடைக்கும் என்று இயேசு சொல்லவில்லை. ஆனாலும், கடவுளுடைய சக்தியின் உதவி அவர்களுக்கு இருக்கும்.
உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, இயேசு ‘40 நாட்களுக்கு’ தன்னுடைய சீஷர்கள் முன்னால் தோன்றுகிறார். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு உடலில் அவர்களுக்குத் தோன்றி, “தான் உயிரோடு இருப்பதை நம்பகமான பல ஆதாரங்கள் மூலம்” அவர்களுக்குக் காட்டுகிறார். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி” அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்.—அப்போஸ்தலர் 1:3; 1 கொரிந்தியர் 15:7.
அப்போஸ்தலர்கள் கலிலேயாவில் இருக்கும்போதே, இயேசு அவர்களை எருசலேமுக்குப் போகச் சொல்லியிருக்கலாம். அவர்களை எருசலேம் நகரத்தில் சந்திக்கும்போது, “எருசலேமைவிட்டுப் போகாதீர்கள்; தகப்பனின் வாக்குறுதியைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், அந்த வாக்குறுதி நிறைவேறும்வரை காத்திருங்கள்” என்று கட்டளை கொடுக்கிறார். “யோவான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்; நீங்களோ இன்னும் சில நாட்களில் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்றும் சொல்கிறார்.—அப்போஸ்தலர் 1:4, 5.
பிற்பாடு, இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களை மறுபடியும் சந்திக்கிறார். ஒலிவ மலையின் கிழக்கு மலைச்சரிவில் இருக்கிற “பெத்தானியா வரைக்கும்” அவர்களைக் கூட்டிக்கொண்டு போகிறார். (லூக்கா 24:50) தான் போகப்போவதைப் பற்றி இயேசு ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும், ஏதோவொரு விதத்தில் அவருடைய அரசாங்கம் இந்தப் பூமியில் இருக்கும் என்று அவர்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.—லூக்கா 22:16, 18, 30; யோவான் 14:2, 3.
அதனால் அவர்கள் இயேசுவிடம், “எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “தகப்பனின் கட்டுப்பாட்டிலுள்ள காலங்களையோ வேளைகளையோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்று மட்டும் சொல்கிறார். பிறகு, அவர்கள் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி மறுபடியும் வலியுறுத்துகிறார். “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொல்கிறார்.—அப்போஸ்தலர் 1:6-8.
உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோடு அவருடைய அப்போஸ்தலர்கள் ஒலிவ மலையில் இருக்கும்போது, அவர் மேலே போக ஆரம்பிக்கிறார். சீக்கிரத்தில், ஒரு மேகம் அவரை மறைத்துவிடுகிறது. உயிரோடு எழுந்த பிறகு, இயேசு பல உடல்களில் தோன்றியிருக்கிறார். இந்தச் சமயத்தில் அவர் எந்த உடலில் அவர்களுக்குத் தோன்றினாரோ, அதை விட்டுவிட்டு பரலோகத்துக்குரிய உடலில் அவர் போகிறார். (1 கொரிந்தியர் 15:44, 50; 1 பேதுரு 3:18) உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ‘வெள்ளை உடை அணிந்திருக்கிற இரண்டு பேர்’ அவர்கள் பக்கத்தில் வந்து நிற்கிறார்கள். இவர்கள் மனித உருவில் வந்திருக்கிற தேவதூதர்கள். இவர்கள் அப்போஸ்தலர்களிடம், “கலிலேயர்களே, ஏன் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசு, எந்த விதத்தில் வானத்துக்குப் போவதைப் பார்த்தீர்களோ அந்த விதத்திலேயே வருவார்” என்று சொல்கிறார்கள்.—அப்போஸ்தலர் 1:10, 11.
எந்த ஆரவாரமும் இல்லாமல், இயேசு இந்தப் பூமியை விட்டுப் போனார். “அந்த விதத்திலேயே,” எந்த ஆரவாரமும் இல்லாமல் அவர் திரும்பி வருவார். அவரை உண்மையாகப் பின்பற்றியவர்கள் மட்டும்தான் அவர் போவதைப் பார்த்தார்கள். அதேபோல, அவர் ராஜாவாக வந்திருப்பதை அவருடைய உண்மையுள்ள சீஷர்கள் மட்டும்தான் புரிந்துகொள்வார்கள்.
அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிப் போகிறார்கள். அடுத்து வந்த நாட்களில், ‘இயேசுவின் சகோதரர்கள், அவருடைய அம்மா மரியாள்’ உட்பட மற்ற சீஷர்களோடு அவர்கள் கூடிவருகிறார்கள். (அப்போஸ்தலர் 1:14) இவர்கள் எல்லாரும் தொடர்ந்து ஜெபம் செய்கிறார்கள். யூதாஸ் இஸ்காரியோத்துக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க உதவி செய்யும்படியும் கடவுளிடம் கேட்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுத்தால்தான் அப்போஸ்தலர்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகவே இருக்கும். (மத்தேயு 19:28) இயேசுவின் செயல்களுக்கும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கும் சாட்சியாக இருக்கிற ஒரு சீஷரைத் தேர்ந்தெடுக்க அவர்கள் விரும்புகிறார்கள். கடவுளுடைய விருப்பம் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள குலுக்கல் போடுகிறார்கள். குலுக்கல் போடுவதைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் கடைசி பதிவு இதுதான். (சங்கீதம் 109:8; நீதிமொழிகள் 16:33) குலுக்கலில் மத்தியா தேர்ந்தெடுக்கப்படுகிறார். இயேசு பிரசங்கிக்க அனுப்பிய 70 பேரில் அவரும் ஒருவராக இருந்திருக்கலாம். இப்போது, ‘11 அப்போஸ்தலர்களோடு அவரும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்.’—அப்போஸ்தலர் 1:26.
இயேசு பரலோகத்துக்குப் போய் பத்து நாட்களுக்குப் பிறகு, கி.பி. 33-ஆம் வருஷத்தின் பெந்தெகொஸ்தே பண்டிகை நடக்கிறது. யூதர்களின் பண்டிகையான இந்த நாளில், 120 சீஷர்கள் எருசலேமில் இருக்கிற ஒரு மாடி அறையில் கூடியிருக்கிறார்கள். திடீரென்று, பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் அவர்கள் இருக்கிற வீடு முழுவதும் கேட்கிறது. நெருப்பு போன்ற நாவுகள் அங்கிருக்கிற ஒவ்வொருவர் மேலும் தெரிகின்றன. சீஷர்கள் எல்லாரும் வெவ்வேறு மொழிகளில் பேச ஆரம்பிக்கிறார்கள். இயேசு வாக்குக் கொடுத்தபடி, கடவுளுடைய சக்தி அவர்கள்மேல் பொழியப்பட்டிருக்கிறது!—யோவான் 14:26.