மலையின்மேல் இருக்கிற பட்டணம்
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” என்று இயேசு பிரசித்திபெற்ற மலைப்பிரசங்கத்தில் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்.—மத்தேயு 5:14.
யூதேய, கலிலேய பட்டணங்கள் பல கீழே பள்ளத்தாக்குகளில் இல்லாமல் மலைகளின்மேல் அமைந்திருந்தன. முக்கியமாக பாதுகாப்பை முன்னிட்டே இந்தப் பட்டணங்கள் மலைகளின்மேல் கட்டப்பட்டிருந்தன. படையெடுத்து வருகிற சேனைகளைத் தவிர, கொள்ளை கும்பல்களும் இஸ்ரவேலரின் குடியிருப்புகளை சூறையாடி நாசப்படுத்தின. (2 இராஜாக்கள் 5:2; 24:2) நெஞ்சுரம் கொண்ட குடிமக்கள் மலையின்மேல் அடுத்தடுத்து நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளை சுலபமாக தற்காத்துக்கொள்ள முடிந்தது; ஆனால் கீழே தாழ்வான இடங்களிலுள்ள பட்டணங்களுக்கோ உயரமான பாதுகாப்பு சுவர்கள் அவசியமாக இருந்தன.
யூதர்களின் வீட்டுச் சுவர்கள் பெரும்பாலும் சுண்ணாம்பு வைத்துப் பூசப்பட்டிருந்தன. ஆகவே மலையின்மேல் அருகருகே அமைந்திருந்த வெள்ளையடிக்கப்பட்ட இந்த வீடுகள் மொத்தமும் பல மைல்களுக்கு அப்பாலிருந்தும் தெளிவாக தெரிந்தது. (அப்போஸ்தலர் 23:3) பலஸ்தீனாவில் பிரகாசமான சூரிய ஒளியில் மலையின் மேலிருந்த இந்தப் பட்டணங்கள், கலங்கரை விளக்கத்தைப்போல பிரகாசித்தன; இன்று மத்தியதரைக் கடல் பகுதிகளிலுள்ள பட்டணங்கள் எப்படி பிரகாசிக்கின்றனவோ அப்படித்தான் பிரகாசித்தன.
கலிலேய மற்றும் யூதேய நாட்டுப்புறங்களில் காணப்பட்ட இந்தக் கண்கவர் காட்சியை பயன்படுத்தி, ஓர் உண்மை கிறிஸ்தவனின் பங்கு என்ன என்பதை தமது சீஷர்களுக்கு இயேசு போதித்தார். “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” என்று அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 5:16) மனுஷர் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்கள் நற்கிரியைகளைச் செய்வதில்லை என்றாலும் அவர்கள் நன்னடத்தை கவனிக்கப்படாமல் போவதில்லை.—மத்தேயு 6:1.
யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடுகளின்போது அப்படிப்பட்ட நன்னடத்தை விசேஷமாக கவனிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டை குறிப்பிட்டு ஸ்பெய்ன் நாட்டு செய்தித்தாள் இவ்வாறு கூறியது: “மற்ற பிரிவுகளில் மத விஷயங்களில் மக்களுக்கு இருக்கும் அக்கறை குறைந்துகொண்டே வந்தாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் அப்படி இல்லை. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அதன் நடைமுறை பயனை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அதன்படி வாழ்கிறார்கள்.”
வடமேற்கு ஸ்பெய்னில் சாட்சிகள் வழக்கமாக தங்கள் மாநாடுகளை நடத்தும் ஒரு ஸ்டேடியத்தின் கேர்டேக்கர் டோமாஸ் என்பவர் கடவுளுடைய வார்த்தையின்படி நடக்கும் ஜனங்கள் மத்தியில் இருப்பதை பெரிதும் போற்றினார். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாவட்ட மாநாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வேலையிலிருந்து ஓய்வுபெறுவதை பல வாரங்களுக்கு தள்ளிப்போட்டார். மாநாடு முடிந்தபின், சிறுவர்கள் உட்பட, பலர் அவரிடம் வந்து கடந்த ஆண்டுகளில் அவர் கொடுத்த ஒத்துழைப்புக்காக நன்றி சொல்லிவிட்டு, அவர் ஓய்வுபெற்று அமைதியுடன் வாழ அவரை வாழ்த்தியபோது அவர் அழுதேவிட்டார். “உங்களோடு எனக்கு ஏற்பட்ட இந்தப் பழக்கம் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று” என்று அவர் கூறினார்.
மலையின்மேல் இருக்கும் பட்டணங்களின் பின்னணியில் வானம் இருப்பதால் அவை எடுப்பாக தெரிகின்றன; மேலும், அங்குள்ள வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதாலும் பார்ப்பவரின் கவனத்தை உடனடியாக ஈர்க்கின்றன. அதேவிதமாகவே உண்மை கிறிஸ்தவர்கள் நேர்மை, ஒழுக்கம், இரக்கம் ஆகிய விஷயங்களில் மிகவும் உயர்ந்த பைபிள் தராதரங்களைப் பின்பற்ற முயலுவதால் வித்தியாசமாக மிகவும் முனைப்பாய் தெரிகிறார்கள்.
அதோடுகூட, கிறிஸ்தவர்கள் பிரசங்கிப்பதன் மூலம் சத்தியத்தின் ஒளியை பிரகாசிக்கிறார்கள். அப்போஸ்தலன் பவுல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. . . . சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம் [பரிந்துரைக்கிறோம்].” (2 கொரிந்தியர் 4:1, 2) அவர்கள் பிரசங்கித்த இடங்களிலெல்லாம் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தபோதிலும், யெகோவா அவர்களுடைய ஊழியத்தை ஆசீர்வதித்தார். அதன் காரணமாகவே, சுமார் பொ.ச. 60-க்குள் நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது” என்று பவுலால் எழுத முடிந்தது.—கொலோசெயர் 1:23.
இன்று, யெகோவாவின் சாட்சிகளும்கூட இயேசு கட்டளையிட்ட விதமாகவே ‘மனுஷருக்கு முன்பாக அவர்களுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்க’ வேண்டிய பொறுப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். வாய் வார்த்தையின் மூலமாகவும் பிரசுரங்களின் மூலமாகவும் யெகோவாவின் சாட்சிகள் ராஜ்யத்தின் நற்செய்தியை உலகம் முழுவதிலும் 235 நாடுகளில் அறிவித்து வருகிறார்கள். பைபிள் சத்தியத்தின் ஒளி எத்தனை பேரை அடையமுடியுமோ அத்தனைப் பேரையும் அடைவதற்காக அவர்கள் பைபிள் பிரசுரங்களை சுமார் 370 மொழிகளில் அளித்து வருகிறார்கள்.—மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 14:6, 7.
பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டிருந்த அல்லது தடைசெய்யப்பட்டிருக்கும் பல தேசங்களிலிருந்து குடிபெயர்ந்து வரும் ஆட்களின் மொழிகளை சாட்சிகள் அரும்பாடுபட்டு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, வட அமெரிக்காவிலுள்ள பெரிய நகரங்கள் பலவற்றில் சீனாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் வந்து மக்கள் குடியேறியிருக்கிறார்கள். இந்தப் புதியவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக உள்ளூர் சாட்சிகள் சீன மொழியையும், ரஷ்ய மொழியையும் பிற மொழிகளையும் சிரமப்பட்டு கற்றிருக்கிறார்கள். சொல்லப்போனால், வேகமாக இந்த மொழிகளைக் கற்றுக்கொள்ள உதவும் பாடதிட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வயல்நிலங்கள் ‘அறுப்புக்கு விளைந்திருக்கிற’ போதே நற்செய்தி இன்னும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்கும்படியே இதெல்லாம் செய்யப்படுகிறது.—யோவான் 4:35.
ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்தார்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.” யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நடத்தையினாலும் தங்கள் ஊழியத்தினாலும் ‘யெகோவாவின் ஆலயமாகிய பர்வதத்துக்கு’ வருவதற்கு எல்லா இடங்களிலுமுள்ள ஆட்களுக்கு உதவிசெய்து வருகிறார்கள். இவர்கள் கடவுளுடைய வழிகளில் போதிக்கப்படுகின்றனர், அவருடைய பாதையில் நடப்பதற்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றனர். (ஏசாயா 2:2, 3) இதற்கு சந்தோஷமான பலனும் கிடைத்திருக்கிறது; இயேசு சுட்டிக்காட்டிய விதமாகவே அவர்கள் ஒன்றுசேர்ந்து யெகோவா தேவனை, அதாவது ‘பரலோகத்திலிருக்கிற பிதாவை மகிமைப்படுத்துகின்றனர்.’—மத்தேயு 5:16; 1 பேதுரு 2:12.