பைபிளின் கருத்து
நீங்கள் மற்றவர்களை புண்படுத்தினால் என்ன செய்வது
ஏதோவொன்று தவறாயிருக்கிறது. அது எப்படியோ உங்களுக்கு தெரியவருகிறது. உங்களுடைய கிறிஸ்தவ சகோதரர் வேண்டுமென்றே உங்களை தவிர்க்கிறார். எது அவரை சங்கடப்படுத்துகிறது என்பதை அவர் சொல்லவில்லை, ஆனால் அவர் அரிதாகவே ஹலோ சொல்கிறார்—அதுவும் நீங்கள் முதலில் அவரை வாழ்த்தும்போது மாத்திரம்தான்! தவறு என்ன என்பதை கண்டுபிடிக்க நீங்கள் அவரை அணுகவேண்டுமா?
‘அது அவருடைய பிரச்சினை,’ என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். ‘எனக்கு விரோதமாக அவருக்கு ஏதேனும் இருந்தால், அவர் என்னிடம் வந்து அதைக் குறித்து பேசவேண்டும்.’ உண்மையில், புண்படுத்தப்பட்ட நபர் தன்னுடைய சகோதரரோடு சமாதானத்தை ஏற்படுத்த முன்முயற்சி எடுக்கவேண்டுமென்று பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (மத்தேயு 18:15-17-ஐ ஒப்பிடுக.) ஆனால் புண்படுத்தியவரைப் பற்றியதென்ன? உத்தரவாதம், ஏதேனும் அவருக்கு இருந்தால், அது என்ன?
தம்முடைய மலைப்பிரசங்கத்தில், இயேசு சொன்னார்: “ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே சமாதானத்தை ஏற்படுத்தி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.” (மத்தேயு 5:23, 24, NW) இங்கே இயேசுவினுடைய வார்த்தைகள் புண்படுத்தியவரை குறிவைத்து பேசப்பட்டிருக்கின்றன என்பதை கவனியுங்கள். இந்த விஷயத்தைத் தீர்த்து வைப்பதில் அவருக்கு என்ன பொறுப்பிருக்கிறது? அதற்கு பதில் சொல்ல, இயேசுவினுடைய வார்த்தைகளை கவனித்துக் கேட்ட முதல்-நூற்றாண்டு யூதர்களுக்கு அது எதை அர்த்தப்படுத்தியது என்பதைக் குறித்து நாம் சிந்திப்போமாக.
‘பலிபீடத்தின் முன் உன் காணிக்கையைச் செலுத்த வருவது’
இயேசு இங்கே ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுக்கிறார்: ஒரு யூத வணக்கத்தான் வருடாந்தர பண்டிகை ஒன்றிற்காக எருசலேமுக்கு வந்திருக்கிறார். யெகோவாவிற்கு பலிசெலுத்துவதற்காக ஒரு காணிக்கையை—அநேகமாக ஒரு மிருகத்தை—அவர் வைத்திருக்கிறார்.a பலிசெலுத்துவது நிச்சயமாகவே ஒரு அர்த்தமற்ற சடங்கு அல்ல. யூத மதம்—பழக்கமும் நம்பிக்கையும் என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது: “கொழுத்த, மாசற்ற பலிகளைத் தேர்ந்தெடுப்பது, வல்லுனர்களால் அவை சோதிக்கப்படுவதைப் பார்ப்பது, கொழுந்துவிட்டெரிகிற பலிபீடத்திற்கு ஒருசில கோலளவுகளுக்குள்ளாக அவற்றுடன் சேர்ந்து நடப்பது, அவற்றை ஒப்படைப்பது, அவற்றின் தலையின்மேல் கைகளை வைப்பது, அசுத்தத்தை அல்லது குற்றத்தை அறிக்கை செய்வது, அல்லது மிருகத்தை ஒப்புக்கொடுப்பது, அதனுடைய தொண்டையை வெட்டுவது, அல்லது வெறுமனே அதை பிடித்துக்கொள்வது—இவை அந்தத் தருணத்தின் அர்த்தம்தரும் தன்மைக்கும் பயபக்தியூட்டும் தன்மைக்கும் உத்தரவாதமளித்தன. . . . இந்த முழு பணியையும் கடவுள் கட்டளையிட்டிருந்தார் என்று நம்பிய எவரும் . . . இதில் உணர்ச்சிப்பூர்வமாக ஈடுபடாமல் அதை செய்யமுடியாது.”
இவ்வாறாக, மத்தேயு 5:23, 24-ல் உள்ள இயேசுவினுடைய வார்த்தைகள், அந்த யூத வணக்கத்தானுக்கு அர்த்தமும் பயபக்தியும் நிறைந்த ஒரு நிலைக்கு, கேட்டுக்கொண்டிருப்போரை கொண்டு வருகின்றன. ஒரு பைபிள் கல்விமான் காட்சியை இவ்வாறு விளக்குகிறார்: “வணக்கத்தான் ஆலயத்தில் நுழைந்திருக்கிறார்; அதனுடைய பிரகாரங்களின் வரிசைகளான புறஜாதிகளின் பிரகாரம், பெண்களின் பிரகாரம், ஆண்களின் பிரகாரம் ஆகியவற்றைக் கடந்து சென்றிருக்கிறார். அதற்கும் அப்பால் பொதுமக்கள் நுழைய முடியாத ஆசாரியர்களின் பிரகாரம் இருந்தது. தடைகம்பி அருகில் வணக்கத்தான் நிற்கிறார், ஆசாரியரிடம் தன்னுடைய பலியை ஒப்படைக்க தயாராயிருக்கிறார்; அவருடைய கைகள் அறிக்கை செய்வதற்கு [மிருகத்தின் தலை மீது] வைக்கப்பட்டிருக்கிறது.”
அப்படிப்பட்ட ஒரு தருணத்தின்போது, தன்னுடைய சகோதரர் தனக்கு எதிராக மனஸ்தாபப்பட்டிருக்கிறார் என்பதை வணக்கத்தான் நினைவுகூருகிறார். ஒருவேளை தன்னுடைய சொந்த மனசாட்சி அவருக்கு இதைச் சொல்கிறது, அல்லது ஏதோவொரு புண்படுத்தப்பட்ட உணர்வு இருப்பதை தன்னுடைய சகோதரர் தன்மீது கொண்டிருக்கும் மனப்பான்மையிலிருந்து ஒருவேளை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் என்ன செய்யவேண்டும்?
“உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போ”
“அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போ,” என்று இயேசு விளக்கினார். ஏன்? அந்த சமயத்தில் யெகோவாவிற்கு பலிசெலுத்துவதைப் பார்க்கிலும் அதிமுக்கியமான ஒன்று ஏதாவது இருக்கக்கூடுமா? “முன்பு உன் சகோதரனோடே சமாதானத்தை ஏற்படுத்தி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து,” என்பதாக இயேசு கூடுதலாக விளக்கினார். ஆகவே வணக்கத்தான் தன்னுடைய பலியை உயிருடன் சர்வாங்க தகனபலி செலுத்தப்படும் பலிபீடத்தில் வைத்துவிட்டு புண்படுத்தப்பட்ட தன்னுடைய சகோதரரைத் தேடுவதற்காக சென்றுவிடுகிறார்.
அது ஒரு பண்டிகையாயிருப்பதால், புண்படுத்தப்பட்ட அந்தச் சகோதரர் எருசலேமுக்கு திரண்டுவந்திருக்கும் யாத்திரிகர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. குறுகலான தெருக்களுடனும் ஒன்றோடொன்று நெருக்கமாயிருக்கும் வீடுகளுடனும், எருசலேம் ஒரு கணிசமான ஜனத்தொகையைக் கொண்டிருக்கிறது. ஆனால் இது ஒரு பண்டிகை, ஆகவே நகரம் வருகையாளர்களால் முழுமையாக நிறைந்திருக்கிறது.b
ஒரே பட்டணத்திலுள்ள மக்கள் ஒன்றாக பயணம் செய்தும் கூடாரமமைத்து தங்கியிருந்தாலும், எவரையாவது கண்டுபிடிக்க ஜன நெருக்கம் நிறைந்த நகரத்திற்குள் நுழைவது சிறிது முயற்சியை எடுக்கும். உதாரணத்திற்கு, கூடாரப் பண்டிகையின்போது, நகரம் முழுவதுமாகவும் சாலையோரங்களிலும் எருசலேமைச் சுற்றியிருந்த தோட்டங்களிலும் வருகையாளர்கள் கூடாரங்களை அமைத்திருந்தனர். (லேவியராகமம் 23:34, 42, 43) இருந்தபோதிலும், அந்த யூத வணக்கத்தான் தன்னுடைய புண்படுத்தப்பட்ட சகோதரரை கண்டுபிடிக்கும் வரையாக அவரை தேடவேண்டும். பின்பு என்ன?
“உன் சகோதரனோடே சமாதானத்தை ஏற்படுத்து,” (NW) என்பதாக இயேசு சொல்கிறார். “சமாதானத்தை ஏற்படுத்து” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க பதம் “‘ஒரு மாறுதலை பாதிப்பது, பரிமாற்றம் செய்துகொள்வது,’ ஆகையால், ‘ஒப்புரவாகுவது’” என்று அர்த்தப்படுத்தும் ஒரு வினைச்சொல்லிலிருந்து (டையெல்லேஸோ) வருகிறது. புண்படுத்தப்பட்ட தன்னுடைய சகோதரரை கண்டுபிடிப்பதற்கு கணிசமான முயற்சியோடு சென்றிருக்கும் யூத வணக்கத்தான் அவரோடு சமாதானத்தை ஏற்படுத்த நாடுகிறார். பின்பு, இயேசு சொல்கிறார், வணக்கத்தான் ஆலயத்திற்கு திரும்பி தன் காணிக்கையை அளிக்கலாம், ஏனெனில் இப்போது கடவுள் அதை ஏற்றுக்கொள்வார்.
இவ்வாறாக, மத்தேயு 5:23, 24-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் ஒரு மிக முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது: ஒப்புரவு, அல்லது சமாதானம், பலிக்கு முன்பாக வருகிறது. உடன் வணக்கத்தாரை நாம் நடத்தும் முறையானது கடவுளோடு உள்ள நம்முடைய உறவின் மீது ஒரு நேரடியான பாதிப்பைக் கொண்டிருக்கிறது.—1 யோவான் 4:20.
நீங்கள் மற்றவர்களை புண்படுத்தினால் என்ன செய்வது
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கப்பட்டிருப்பதுபோல ஒரு உடன் வணக்கத்தாரை புண்படுத்தியிருப்பதாக உணரும் அந்தச் சூழ்நிலைமையில் உங்களை நீங்கள் கண்டால், அப்போது என்ன? நீங்கள் என்ன செய்யவேண்டும்?
இயேசுவினுடைய வார்த்தைகளை பொருத்துபவர்களாக, உங்களுடைய சகோதரரை அணுகுவதற்கு முன்முயற்சி எடுங்கள். என்ன குறிக்கோளுடன்? புண்படுத்தப்பட்டதாக நினைப்பதற்கு எந்த ஒரு காரணமுமில்லை என்பதை அவர் நம்பும்படி செய்வதா? நிச்சயமாகவே இல்லை! ஒரு சாதாரண தப்பபிப்பிராயத்தைக் காட்டிலும் அதிகமானதாக அந்தப் பிரச்சினை இருக்கலாம். “சமாதானத்தை ஏற்படுத்து,” என்பதாக இயேசு சொன்னார். முடிந்தால், அவருடைய இருதயத்திலிருந்து பகைமை உணர்ச்சியை நீக்கிப்போடுங்கள். (ரோமர் 14:19) அது வரையாக, அவருடைய புண்படுத்தப்பட்ட உணர்ச்சிகளை நீங்கள் மறுக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கலாம். ‘பரிகாரமாக நான் என்ன செய்யவேண்டும்?’ என்பதாக நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது. அடிக்கடி, உள்ளார்ந்த மன்னிப்புதானே தேவைப்படும் ஒரே காரியமாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், எனினும், தன்னுடைய உணர்ச்சிகளை சரிப்படுத்த புண்படுத்தப்பட்ட அந்த நபருக்கு சிறிது காலம் தேவைப்படலாம்.
எனினும், தொடர்ந்த முயற்சியின் மத்தியிலும் நீங்கள் ஒப்புரவை ஏற்படுத்த முடியவில்லையென்றால், அப்போது என்ன? ரோமர் 12:18 சொல்கிறது: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனஷரோடும் சமாதானமாயிருங்கள்.” இவ்வாறாக, நீங்கள் சமாதானத்தை ஏற்படுத்த உங்களையே பயன்படுத்தியிருந்தீர்களானால், உங்களுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்வதில் யெகோவா சந்தோஷப்படுவார் என்பதில் நீங்கள் நம்பிக்கையாயிருக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a பலிக்கான காணிக்கைகளை கொண்டுவருவதற்கான வழக்கமான காலம், பஸ்கா, பெந்தெகொஸ்து, கூடாரப் பண்டிகை ஆகிய அந்த மூன்று பண்டிகைகளின்போதாகும்.—உபாகமம் 16:16, 17.
b பண்டிகைகளுக்காக பூர்வீக எருசலேமுக்கு திரண்டு சென்ற யாத்திரிகர்களின் எண்ணிக்கையைக் குறித்த மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. கிட்டத்தட்ட முப்பது லட்சம் யூதர்கள் பஸ்காவிற்கு ஆஜராயிருந்ததாக முதல் நூற்றாண்டு யூத சரித்திர ஆசிரியர் ஜோசிஃபஸ் மதிப்பீடு செய்தார்.—தி ஜூயிஷ் வார், II, 280 (xiv, 3); VI, 425 (ix, 3).