பைபிளின் கருத்து
சரசமாடுவதில் என்ன தவறு?
“சரசமாடுவதை நாம் ஏன் தன்னல சூழ்ச்சியாகவோ ஏமாற்றுவேலையாகவோ கேடுகெட்டதாகவோ கருத வேண்டும்? அது அப்படியில்லை! அது ஒரு ஜாலியான விளையாட்டு! இரு சாராருக்குமே பலனளிக்கும் ஒரு விளையாட்டு, ஏனென்றால் அந்த இன்னொரு நபரை நீங்கள் சந்தோஷப்படுத்துகிறீர்கள்.”—சூசன் ராபின், சரசமாடுதல் ஸ்கூல் டைரக்டர், நியூ யார்க்.
பெரும்பாலான மக்கள் சரசமாடுவதை (flirting) இயல்பானது, தீங்கற்றது, மனித உறவுகளை ஏற்படுத்தவும் கட்டிக் காக்கவும் அவசியமானது என கருதுகின்றனர். மேற்கத்திய நாடுகளில், “சரசமாடும் கலையின்” முக்கிய அம்சங்களான சைகைகள், தோரணைகள், கடைக்கண் பார்வைகள், வைத்தக்கண் வாங்காமல் பார்க்கும் பார்வைகள் ஆகியவற்றை கற்றுக்கொடுப்பதற்கான பிரத்யேக பயிற்சிகளிலும், புத்தகங்களிலும், பத்திரிகை கட்டுரைகளிலும் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றன.
சரசமாடுதல் என்றால் என்ன? அவற்றுக்கு வித்தியாசப்பட்ட சொல் விளக்கங்களும், கருத்து விளக்கங்களும் உள்ளன. ஒரு டிக்ஷ்னரி அதை “அற்பத்தனமான மோகம் அல்லது காமத்தை தூண்டுகிற” நடத்தை என விளக்குகிறது. மற்றொரு டிக்ஷ்னரி சரசமாடுவதை “விளையாட்டான மனநிலையில் காமவுணர்வுடன்’ நடப்பது என விளக்குகிறது. எனவே, சரசமாடுகிற ஒருவர் திருமணம் செய்வதற்கான எந்தவொரு உள்நோக்கமுமின்றி காதலிப்பதைப் போன்று பாவனை செய்பவர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக தோன்றுகிறது. சரசமாடுதல் தீங்கற்றதாக கருதப்படலாமா? சரசமாடுதலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?a
சரசமாடுதலைப் பற்றி கடவுளுடைய வார்த்தை திட்டவட்டமாக குறிப்பிடவில்லையென்றாலும்கூட, கடவுள் அதை எவ்வாறு கருதுகிறார் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். எப்படி? அதற்கு பொருந்துகிற பைபிள் நியமங்களை ஆராய்வதன் மூலமே. இவ்விதமாக, “நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியும் பகுத்துணர்வு ஆற்றலை” நாம் வளர்த்துக் கொள்ளலாம். (எபிரெயர் 5:14) முதலாவதாக, திருமணமான நபர் மற்றொருவருடன் சரசமாடுவது சரிதானா என்பதை கலந்தாராய்வோம்.
திருமணமானவருக்கு
தம்பதிகள் தனிமையில் காமவுணர்வுடன் நடந்து கொள்வது இயல்பானதுதான். (ஆதியாகமம் 26:8-ஐ ஒப்பிடுக.) ஆனால் திருமண பந்தத்தில் இல்லாத நபர்களிடம் அத்தகைய உணர்ச்சியைக் காட்டுவது கடவுளுடைய நியமங்களுக்கு முரணாக இருக்கிறது. தம்பதிகள் மட்டுமே இத்தகைய நெருக்கமான நம்பிக்கைக்குரிய உறவை அனுபவிக்க வேண்டுமென யெகோவா நோக்கம் கொண்டிருந்தார். (ஆதியாகமம் 2:24; எபேசியர் 5:21-33) அவர் திருமணத்தை புனிதமான, நிரந்தர பிணைப்பாக கருதுகிறார். “தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்” என்று கடவுள் சொல்வதாக மல்கியா 2:16 காட்டுகிறது.b
திருமணமான நபர் மற்றொருவருடன் சரசம் செய்வது, திருமணத்தின்பேரில் கடவுள் கொண்டுள்ள நோக்கத்துடன் ஒத்திருக்கிறதா? இது விளையாட்டான விஷயமல்ல; ஏனென்றால், அது, கடவுள் ஆரம்பித்து வைத்த திருமண ஏற்பாட்டுக்கான புனிதத்தன்மையை அவமதிப்பதாய் இருக்கிறது. அதுவுமில்லாமல், கிறிஸ்தவ கணவன், “தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்தில் அன்புகூரக்கடவன்” என்றும் மனைவி, ‘புருஷனிடத்தில் ஆழ்ந்த மரியாதை கொண்டிருக்கவேண்டும்’ என்றும் எபேசியர் 5:33, (NW) கட்டளையிடுகிறது. சரசமாடி, பொறாமை உண்டாக்கினால் மணத்துணைவருக்கு அன்பையும் மரியாதையையும் காட்டுவதாக இருக்குமா?
சரசமாடுவது விபச்சாரத்துக்கு வழிநடத்தலாம் என்ற உண்மை அபாயத்தை சுட்டிக் காட்டுகிறது. யெகோவா வெளிப்படையாக கண்டனம் செய்கிற பாவச் செயலே இந்த விபச்சாரம். மேலும் அதை துரோகம் எனவும் விவரிக்கிறார். (யாத்திராகமம் 20:14; லேவியராகமம் 20:10; மல்கியா 2:14, 15; மாற்கு 10:17-19) சொல்லப்போனால், விபச்சாரம் என்ற துரோகச் செயலை யெகோவா அந்தளவு மோசமானதாக கருதுவதால், பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு விவாகரத்து செய்துகொள்ள அனுமதியளிக்கிறார். (மத்தேயு 5:32) ஆகவே, சரசமாடுதல் என்ற இந்த ஆபத்தான விளையாட்டை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாதே! சிறு பிள்ளை கையில் கூர்மையான கத்தியை வைத்து விளையாடுவதை அன்பான பெற்றோர் எப்படி ஏற்றுக்கொள்ள மாட்டாரோ அதை போலவே கடவுளும் இதை சிறிதுகூட ஏற்றுக்கொள்ள மாட்டார்.
விபச்சாரத்தை குறித்து பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும் ஆக்கினைக்குத் தப்பான்.” (நீதிமொழிகள் 6:27-29) இருந்தபோதிலும், சரசமாடுதலில் ஈடுபடுகிற திருமணமான நபர் விபச்சாரம் செய்யவில்லையென்றாலும்கூட, அதைக்காட்டிலும் அதிகமான ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்; அதாவது “மனதளவில் உறவு கொள்ளுவது” (emotional affair) என்று அழைக்கப்படுகிற ஒரு காரியத்தில் ஈடுபடுகிறார்.
மனதளவில் உறவு கொள்ளுதல்
சில ஆட்கள் தங்களுடைய திருமண துணையாக இல்லாதவரோடு நெருங்கிப் பழகுகின்றனர். உடலுறவில் ஈடுபடாவிட்டாலும்கூட, காதல் உணர்வுகளை வளர்த்துக்கொள்கின்றனர். இருந்தபோதிலும், இயேசு இவ்வாறு எச்சரிக்கிறார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28) மனதளவில் மட்டுமே இருக்கும் இந்த ஆசைக்கு இயேசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்?
இதற்கு ஒரு காரணம், ‘இருதயத்திலிருந்து . . . விபசாரம் . . . புறப்பட்டுவரும்’ என்பதே. (மத்தேயு 15:19) எனினும், அத்தகைய உறவு விபச்சாரம் செய்யுமளவுக்கு செல்லவில்லையென்றாலும்கூட அது தீங்குவிளைவிப்பதாகவே இருக்கிறது. எப்படி? இந்த விஷயத்தின் பேரில் வெளிவந்த ஒரு புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “உங்கள் மணத்துணைவரோடு நீங்கள் செலவழிக்கிறதைவிட அதிக நேரத்தையும் சக்தியையும் எடுத்துக்கொள்கிற எந்தவொரு செயலானாலும்சரி, உறவானாலும்சரி, அது துரோகத்தின் ஒரு வகையாக உள்ளது.” ஆம், மனதளவில் உறவு கொள்வது உங்கள் மணத்துணைவருக்கு கொடுக்கவேண்டிய நேரம், கவனம், பாசம் ஆகியவற்றை திருடிக்கொள்கிறது. நம்மை மற்றவர்கள் நடத்த விரும்புகிற விதமாக, நாமும் மற்றவர்களை நடத்தவேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. அப்படியென்றால் சரசமாடுவதில் ஈடுபடுகிற திருமணமான நபர் தனக்குத்தானே இவ்வாறு கேட்டுக் கொள்வது நல்லது: ‘என்னுடைய துணை இன்னொருவரோடு இவ்வாறு பழகினால் நான் எப்படி எடுத்துக் கொள்வேன்?’—நீதிமொழிகள் 5:15-23; மத்தேயு 7:12.
சரி, இத்தகைய முறையற்ற உணர்ச்சிப்பூர்வ பந்தத்துக்குள் விழுந்துவிட்டால், அவர் என்ன செய்யவேண்டும்? இத்தகைய ஒரு நபர் வண்டியோட்டிக் கொண்டே தூங்குகிற ஒரு டிரைவரைப்போல இருக்கிறார். தன்னுடைய திருமண வாழ்க்கையும், கடவுளோடுள்ள உறவும் சிதைந்து போவதற்கு முன்பாக அவர் விழித்துக்கொண்டு, திடமான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும். கண்ணைப் போன்று மதிப்புள்ளதாக இருந்தாலும்கூட, அதைப் பிடுங்கிப்போடு, அல்லது கையை வெட்டி எறிந்துவிடு என சொல்வதன்மூலம் கடவுளோடுள்ள நல்ல உறவை கெடுக்கிற எதுவானாலும் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை இயேசு விளக்குகிறார்.—மத்தேயு 5:29, 30.
சரசமாடுகிற அந்த நபரை அடிக்கடி சந்திப்பதையும், அங்கே போவதையும் குறைத்து கொள்வது ஞானமானதாக இருக்கும். அந்த நபருடன் தனியாக இருப்பதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். வேலை செய்யுமிடத்தில் என்றால், அவரிடம் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். அவசியமிருந்தால், அந்நபரோடு எல்லா தொடர்பையும் துண்டித்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதன்பிறகு, உங்களுடைய பார்வைகள், எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை ஆகியவற்றில் தன்னடக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். (ஆதியாகமம் 39:7-12; சங்கீதம் 19:14; நீதிமொழிகள் 4:23; 1 தெசலோனிக்கேயர் 4:4-6) மணமான யோபு, “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என்று சொன்னபோது மிகச்சிறந்த முன்மாதிரி வைத்தார்.—யோபு 31:1.
தெளிவாகவே, திருமணமான ஒருவர் சரசத்தில் ஈடுபடுவது ஆபத்தானதாகவும் கடவுளுடைய வார்த்தைக்கு விரோதமாகவும் இருக்கிறது. ஆனால் மணமாகாத இருவர் சரசமாடுவதைப் பற்றிய பைபிளின் நோக்குநிலை என்ன? அது இயல்பானதாக, தீங்கற்றதாக, எதிர்பாலாரோடு உறவை வலுப்படுத்த அவசியமானதாக கருதப்படவேண்டுமா? அதனால் உண்மையில் ஏதாவது தீங்கு ஏற்படுமா?
திருமணமாகாதவர்களைப் பற்றியென்ன?
திருமணத்துக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இருவர், தங்களுக்குள் காதலுணர்வை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர்கள் தப்பு செய்யக்கூடாது. (கலாத்தியர் 5:19-21) காதலுணர்வை காட்டும் ஆர்வம் திருமணம் நடப்பதற்கான சாத்தியம் மெல்லமெல்ல ஏற்பட்டு, அத்தகைய எண்ணத்துடன் பழகுகிற ஆரம்பக் கட்டங்களில் உண்டாகலாம். உள்நோக்கங்கள் சரியானதாக இருக்கையில் இதில் ஒன்றும் தவறில்லை. அத்தகைய செயல் உண்மையில் சரசமாடுவதும் இல்லை.
ஆனால் திருமணமாகாத இரண்டு நபர்கள் வெறும் விளையாட்டுக்காக காதல் உணர்வை வெளிப்படுத்தினால் அப்போது என்ன? அவர்கள் திருமணமாகாதவர்களாக இருப்பதால், அது தீங்கற்றதாக தோன்றலாம். இருப்பினும், உணர்ச்சிப்பூர்வமான கேடுகள் ஏற்படுவதை சிந்தித்துப் பாருங்கள். அந்த மற்ற நபர் அதை வெறும் சரசமாக கருதாமல், நிஜ காதலாக கருதினால், அது தாங்கமுடியாத வேதனையையும் மனத்துயரையும் கொண்டுவரும். நீதிமொழிகள் 13:12-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மை: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்.” இரண்டு பேர் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருப்பதாகவும், அவர்களுக்குள் எந்தவித தவறான எண்ணம் இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் அவர்களுக்குள்ளேயே மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னொருவருக்கு தெரியுமா என்ன? பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”—எரேமியா 17:9; பிலிப்பியர் 2:4-ஐ ஒப்பிடுக.
வேசித்தனத்துக்கான அபாயத்தையும்கூட சிந்தித்துப் பாருங்கள்; அதன் விளைவுகள் நோயாகவோ முறைகேடான கர்ப்பமாகவோ இருக்கலாம். வேசித்தனம் கடவுளுடைய வார்த்தையில் கண்டனம் செய்யப்படுகிறது; அதை வேண்டுமென்றே செய்பவர்கள் கடவுளுடைய தயவை இழந்து போவார்கள். கிறிஸ்தவர்கள் கெட்ட ஆசையை எதிர்த்துப் போராடுவதற்கு “விபசாரம் ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற” தங்கள் ‘அவயவங்களை அழித்துப்போடவேண்டு’மென்றும் வேசித்தனத்துக்கு வழிநடத்துகிற ‘மோக இச்சைக்குட்படாதிருக்க’ வேண்டுமென்றும் அப்போஸ்தலன் பவுல் ஞானமாக எச்சரித்தார். (கொலோசெயர் 3:5; 1 தெசலோனிக்கேயர் 4:3-5) கெட்ட ஆசையை உண்டுபண்ணுகிற வேசித்தனம் “பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது” என்று எபேசியர் 5:3-ல் அவர் நமக்கு அறிவுரை கூறுகிறார். சரசம் இந்த அறிவுரைக்கு இசைவாக இல்லை. பாலினத்தைப் பற்றிய கேடு விளைவிக்கிற உரையாடல்களையும்கூட கடவுள் கண்டனம் செய்கிறார்.
சரசம் செய்தல் உடன் மனிதர்களிடம் குரூரமாக நடப்பதாகவும் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தவரான யெகோவாவை அவமதிப்பதாகவும் இருக்கலாம் என பைபிள் நியமங்கள் காட்டுகின்றன. முறையற்ற சரசத்தைப் பற்றிய பைபிளின் கருத்து நிச்சயமாகவே அன்பாகவும் நியாயமாகவும் இருக்கிறது; அது மக்களை தீங்கிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, கடவுளை நேசிப்பவர்கள் பொருத்தமற்ற சரசத்திலிருந்து விலகியிருந்து, எதிர்பாலாரை எல்லாவித கற்போடும் மரியாதையோடும் நடத்துவார்கள்.—1 தீமோத்தேயு 2:9, 10; 5:1, 2.
[படத்திற்கான நன்றி]
a காமவுணர்ச்சியை தூண்டுகிற எந்த உள்நோக்கமும் இல்லாமல் சிநேகபான்மையாக அல்லது கலகலப்பாக இருப்பதுடன் சரசமாடுவதை குழப்பிக் கொள்ளக்கூடாது.
b “என்ன விதமான விவாகரத்தை கடவுள் வெறுக்கிறார்?” என்ற 1994, பிப்ரவரி 8, ஆங்கில விழித்தெழு! இதழில் வெளிவந்த கட்டுரையைக் காண்க.
[பக்கம் 20-ன் படங்களுக்கான நன்றி]
© The Curtis Publishing Company