வாய்முறையான பாரம்பரியங்களின் மூலம் நீதி ஏற்படாது
“வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 5:20.
1, 2. இயேசு தம் மலைப்பிரசங்கத்தை கொடுப்பதற்கு முன்பு என்ன நடந்தது?
இயேசு அந்த இரவை ஒரு மலையின் மீது கழித்திருந்தார். மேலே வானத்தில் விண்மீன்கள் பரவிக் கிடந்தன. இரவில் நடமாடும் சிறிய மிருகங்கள் புதர்களில் சரசரப்பொலி எழுப்பின. கிழக்குப் பக்கத்தில் கலிலேயக் கடலின் தண்ணீர்கள் அமைதியாக கரையில் மோதின. ஆனால் தம்மைச் சுற்றியிருக்கும் இந்த அமைதியான மென்னயமான அழகின் பேரில் இயேசு அதிக கவனம் செலுத்தியிருக்க முடியாது. அவர் அந்த இரவை தம் பரலோக தகப்பனாகிய யெகோவாவிடம் ஜெபிப்பதில் செலவழித்திருக்கிறார். அவருக்கு தம் தகப்பனின் வழிநடத்துதல் தேவையாயிருந்தது. வரப்போகும் நாள் தீர்மானத்துக்குரிய நாள்.
2 கிழக்கில் வானம் ஒளிபெறுகிறது. மென்மையான கலகலப்புடன் பறவைகள் திரிய ஆரம்பிக்கின்றன. காட்டுப் பூக்கள் காற்றில் மெல்ல அசைகின்றன. சூரியனின் முதல் கதிர்கள் அடிவானத்தின் மேல் சிதறிய போது, இயேசு தம் சீஷர்களை அவரிடத்தில் அழைத்து, அவர்கள் நடுவிலிருந்து 12 பேரை தம் அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுத்தார். பின்பு, அவர்கள் அனைவரோடும் கூட மலைப்பக்கமாக இறங்க ஆரம்பித்தார். கலிலேயா, தீரு சீதோன், யூதேயா, எருசலேம் ஆகிய இடங்களிலிருந்து திரளான ஜனக்கூட்டத்தார் ஏற்கெனவே வந்துகொண்டிருப்பது தெரிகிறது. அவர்கள் தங்கள் வியாதிகள் குணப்படும்படி வந்தனர். அநேகர் இயேசுவை தொட்டு குணமடைந்த போது யெகோவாவிடமிருந்து வந்த வல்லமை அவரிலிருந்து வெளியே சென்றது. அவர்களுடைய கலக்கமுற்ற ஆத்துமாக்களுக்கு குணமாக்கும் களிம்பைப் போல் இருந்த அவருடைய வார்த்தைகளை கேட்பதற்கும்கூட அவர்கள் வந்திருந்தனர்.—மத்தேயு 4:25; லூக்கா 6:12–19.
3. இயேசு பேச ஆரம்பித்த போது சீஷர்களும் ஜனக்கூட்டத்தாரும் ஏன் ஆவலாய் இருந்தனர்?
3 அவர்களுடைய அதிக முறைப்படியான கற்பிக்கும் கூட்டத்தொடர்வுகளில் ரபீக்கள் கீழே அமர்வது பழக்கமாயிருந்தது. பொ.ச. 31-ன் இந்தக் குறிப்பிட்ட இளவேனிற் கால காலையில் அதை தான் இயேசு செய்தார். மலையின் உயரத்தில் ஒரு சமமான இடத்தில் அமர்ந்தார். அவருடைய சீஷர்களும், ஜனக்கூட்டத்தாரும் இதை பார்த்த போது, ஏதோவொரு விசேஷமான காரியம் தொடங்கப் போகிறது என்பதை உணர்ந்தனர். ஆகையால் அவர்கள் ஆர்வத்தோடு அவரைச் சுற்றி கூடிவந்தனர். அவர் பேச ஆரம்பித்த போது, அவருடைய வார்த்தைகளுக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்; சிறிது நேரத்துக்குப் பின்பு அவர் முடித்த போது, தாங்கள் கேட்ட காரியங்களால் அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏன் என்று நாம் காண்போம்.—மத்தேயு 7:28.
இரண்டுவிதமான நீதி
4. (எ) என்ன இரண்டு விதமான நீதி விவாதத்தில் இருந்தது? (பி) வாய்மொழியான பாரம்பரியங்களின் நோக்கம் என்னவாக இருந்தது? அது நிறைவேறினதா?
4 மத்தேயு 5:1–7:29, லூக்கா 6:17–49 ஆகிய இரண்டு இடங்களிலும் அறிக்கை செய்யப்பட்டிருக்கும் தம்முடைய மலைப்பிரசங்கத்தில், இரண்டு வகுப்பாரை இயேசு தெளிவாக வேறுபடுத்திக் காட்டினார்: வேதபாரகரும் பரிசேயர்களும், அவர்கள் ஒடுக்கிய சாதாரண ஜனங்களும். அவர் இரண்டு விதமான நீதியைப் பற்றி பேசினார், பரிசேயர்களின் மாய்மாலமான நீதி, கடவுளின் மெய்யான நீதி. (மத்தேயு 5:6, 20) பரிசேய சுய நீதி, வாய்மொழியான பாரம்பரியங்களில் வேர்கொண்டிருந்தது. கிரேக்க கலாச்சாரத்தின் (ஹெலனிஸம்) ஊடுருவலிலிருந்து இதைப் பாதுகாக்க “நியாயப்பிரமாண சட்டத்தைச் சுற்றி ஒரு வேலியாக” பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் இவைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவைகள் நியாயப்பிரமாணத்தின் ஒரு பாகமாக நோக்கப்படலாயின. உண்மையில், எழுதப்பட்டிருந்த நியாயப்பிரமாணத்தைவிட வாய்மொழியான பாரம்பரியங்களை வேதபாரகர் அதிக மதிப்புள்ளதாக கருதினர். மிஷ்னா இவ்வாறு சொல்கிறது: “எழுதப்பட்டிருந்த நியாயப்பிரமாண வார்த்தைகளை கடைப்பிடிப்பதைவிட வேதபாரகரின் வார்த்தைகளை [அவர்களுடைய வாய்மொழியான பாரம்பரியங்களை] கடைப்பிடிப்பதற்கு அதிகமான கண்டிப்பு இருக்கிறது.” ஆகையால், “நியாயப்பிரமாணத்தைச் சுற்றி ஒரு வேலியாக” இருந்து அதை பாதுகாப்பதற்கு பதிலாக, அவர்களுடைய பாரம்பரியங்கள் நியாயப்பிரமாணத்தை வலிமையற்று போகச் செய்து அதை வீணானதாக ஆக்கியது. இயேசு அதை இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது.”—மாற்கு 7:5–9; மத்தேயு 15:1–9.
5. (எ) இயேசு சொல்வதைக் கேட்க வந்த பொது ஜனங்களின் நிலைமை என்னவாக இருந்தது? அவர்கள் வேதபாரகராலும் பரிசேயர்களாலும் எவ்வாறு நோக்கப்பட்டனர்? (பி) தொழிலாளிகளுக்கு அவ்வளவு பாரமான சுமையாக வாய்மொழியான பாரம்பரியங்களை எது ஆக்கியது?
5 இயேசு சொல்வதைக் கேட்பதற்கு திரளாக சென்ற பொது மக்கள் ஆவிக்குரிய விதத்தில் வலுவற்று, “மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்தனர். (மத்தேயு 9:36) அகந்தையான இறுமாப்புடன் வேதபாரகரும் பரிசேயர்களும் அவர்களை வெறுத்து ஒதுக்கினர், ‘அம்ஹரெட்ஸ்’ (நிலத்தின் ஜனங்கள்) என்று அவர்களை அழைத்தனர், அறியாத சபிக்கப்பட்ட பாவிகள் என்று அவர்களை இழிவாக கருதினர். வாய்மொழியான பாரம்பரியங்களை கடைப்பிடிக்காததினால் உயிர்த்தெழுதலுக்கு தகுதியற்றவர்கள் என்றும் கூறினர். இயேசுவின் காலத்துக்குள் அந்தப் பாரம்பரியங்கள் மிகப்பெரியதாக ஆகிவிட்டன. அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் சமய சடங்குகள் பெரும் சுமையாக இருந்தன—தொழிலாளியான எவனும் அவைகளை கடைப்பிடிக்க முடியவில்லை. ‘சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின் மேல் சுமத்துகிறார்கள்’ என்று இயேசு அந்தப் பாரம்பரியங்களை பற்றி வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தது ஆச்சரியமாயில்லை.—மத்தேயு 23:4; யோவான் 7:45–49.
6. இயேசுவின் ஆரம்பகால அறிவிப்புகளைப் பற்றி அதிர்ச்சியடைவதற்கு என்ன இருந்தது? அவைகள் அவருடைய சீஷர்களுக்கும் வேதபாரகருக்கும் பரிசேயர்களுக்கும் என்ன மாற்றத்தைக் குறிப்பிட்டன?
6 ஆகையால் இயேசு மலைப்பக்கமாக உட்கார்ந்த போது, அவருடைய சீஷர்களும், ஆவிக்குரிய விதத்தில் பட்டினியாய் இருந்த ஜனக்கூட்டத்தாரும் அவர் சொல்வதைக் கேட்பதற்கு நெருங்கி வந்தனர். இவர்கள் அவருடைய ஆரம்ப அறிவிப்புகளை அதிர்ச்சியூட்டத்தக்கதாக கண்டிருப்பர். ‘தரித்திரர்கள் சந்தோஷமுள்ளவர்கள், பசியாயிருக்கிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், அழுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், பகைக்கப்படுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.’ ஆனால் ஏழையாக இருக்கும் போதும், பசியாக இருக்கும் போதும், அழும் போதும், பகைக்கப்படும் போதும் யார் சந்தோஷமாக இருக்க முடியும்? செல்வந்தர்கள், நன்றாக போஷிக்கப்பட்டிருப்பவர்கள், சிரிப்பவர்கள், புகழப்படுபவர்கள் ஆகியோர் மீது இன்னல்கள் அறிவிக்கப்படுகின்றன. (லூக்கா 6:20–26) எல்லா வழக்கமான மதிப்பீடுகளையும் வெகு சில வார்த்தைகளில் இயேசு தலைக்கீழாக்கினார். பின்பு இயேசு சொல்லிய வார்த்தைகளுக்கு இசைவாக அது நிலைநிற்கைகளில் திடீர்மாற்றமாக இருந்தது. “தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—லூக்கா 18:9–14.
7. இயேசுவுக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஆவிக்குரிய பிரகாரமாய் பட்டினியாய் இருந்த ஜனங்கள் மீது இயேசுவின் ஆரம்ப வார்த்தைகள் என்ன பாதிப்பை கொண்டிருந்திருக்கும்?
7 சுய திருப்தியோடு இருந்த வேதபாரகர் மற்றும் பரிசேயர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தக் குறிப்பிட்ட காலையில் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தவர்கள் தங்கள் விசனமான ஆவிக்குரிய நிலையை அறிந்திருந்தனர். அவருடைய ஆரம்ப வார்த்தைகள் அவர்களை நம்பிக்கையால் நிரப்பியிருக்க வேண்டும்: “தங்கள் ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” அவர் கூடுதலாக பின்வரும் வார்த்தைகளை கூறிய போது அவர்களுடைய உற்சாகம் எவ்வளவு அதிகரித்திருக்கும்: “நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்”! (மத்தேயு 5:3, 6; யோவான் 6:35; வெளிப்படுத்துதல் 7:16, 17, NW) ஆம் நீதியினால் நிரப்பப்படுவர், ஆனால் பரிசேயர் எண்ணியிருந்த நீதியினால் அல்ல.
“மனுஷர் முன்பாக நீதிமான்களாக” இருப்பது போதாது
8. வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் நீதியை விட அவர்களுடைய நீதி எவ்வாறு மிகுந்திருக்கக்கூடும் என்று சிலர் ஏன் எண்ணலாம்? என்றபோதிலும் அது ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்?
8 “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:17–20; மாற்கு 2:23-28; 3:1-6; 7:1-13 பார்க்கவும்.) சிலர் இவ்வாறு நினைத்திருக்கக்கூடும்: ‘பரிசேயர்களைவிட அதிக நீதிமான்களாகவா? அவர்கள் உபவாசித்து, ஜெபம் செய்து, தசம பாகமும், தானமும் செய்கின்றனர். நம்முடைய நீதி எவ்வாறு அவர்களுடையதைக் காட்டிலும் அதிகமாயிருக்க முடியும்?’ ஆனால் அது நிச்சயமாய் மிகுந்திருக்க வேண்டும். பரிசேயர்கள் ஒருவேளை மனிதர்களால் அதிக உயர்வாக மதிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கடவுளால் அல்ல. மற்றொரு சமயம் இயேசு இவ்வாறு பரிசேயர்களிடம் சொன்னார்: “நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.”—லூக்கா 16:15.
9–11. (எ) கடவுளுக்கு முன்பு ஒரு நீதியான நிலைநிற்கையை அவர்கள் பெற்றுக் கொள்வர் என்று வேதபாரகரும் பரிசேயர்களும் சிந்தித்த ஒரு வழி என்ன? (பி) என்ன இரண்டாவது வழியின் மூலம் அவர்கள் நீதியை அடைய எதிர்பார்த்தனர்? (சி) அவர்கள் நம்பியிருந்த அந்த மூன்றாவது வழி என்ன? இது தோல்வியடையும் என்பதாக முன்னதாகவே தீர்ப்புகூறும் வகையில் அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொன்னான்?
9 நீதியைப் பெறுவதற்கு ரபீக்கள் தங்கள் சொந்த சட்டங்களை உருவாக்கினர். அதில் ஒன்று ஆபிரகாமின் வம்சத்தில் வருவதில் இருந்த மதிப்பு: “எங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் சீஷர்கள் இந்த உலகத்தை சந்தோஷத்தோடு அனுபவிக்கின்றனர், வரப்போகும் உலகத்தை சுதந்தரித்துக் கொள்வர்.” (மிஷ்னா) ஒருவேளை இந்தப் பாரம்பரியத்தை எதிர்ப்பதற்கு யோவான் ஸ்நானன் தன்னிடம் வந்த பரிசேயர்களை இவ்வாறு எச்சரித்தான்: “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். [அது போதும் என்பது போல்] ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்.”—மத்தேயு 3:7–9; யோவான் 8:33, 39-ஐயும் பாருங்கள்.
10 நீதியைப் பெறுவதற்கு இரண்டாவது வழி தானதர்மங்களைச் செய்வதன் மூலம் என்று அவர்கள் கூறினர். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் போது கடவுள் பற்றுள்ள யூதர்களால் எழுதப்பட்ட இரண்டு தள்ளுபடி புத்தகங்கள் அந்தப் பாரம்பரிய எண்ணத்தை பிரதிபலிக்கின்றன. டோபிட்-ல் உள்ள ஒரு கூற்று இவ்வாறு சொல்கிறது: “தானதர்மங்கள் செய்வது மரணத்திலிருந்து ஒருவரை பாதுகாக்கிறது, எல்லா பாவத்தையும் நிவிர்த்தி செய்கிறது.” (12:9, தி நியு அமெரிக்கன் பைபிள்) சிராக்கின் புத்தகம் (தள்ளுபடியாகம புத்தகத்தில் ஒன்று) இவ்வாறு ஒத்துக் கொள்கிறது: “தண்ணீர் எரிநெருப்பை தணிக்கிறது, தானதர்மங்கள் பாவங்களுக்கு ஈடுசெய்கிறது.”—3:29, NAB.
11 அவர்கள் மூன்றாவது வழியாக நியாயப்பிரமாண கிரியைகள் மூலம் நீதியை நாடிச் சென்றனர். ஒரு மனிதனின் செயல்கள் நல்லவையாக பெரும்பாலும் இருந்தால் அவன் பாதுகாக்கப்படுவான் என்று வாய்மொழியான பாரம்பரியங்கள் கற்பித்தன. அவை நன்மையானாலும் தீமையானாலும் “மிதமிஞ்சி செய்யப்படும் செயல்களின் பேரில்தான் நியாயத்தீர்ப்பு செய்யப்படும்.” (மிஷ்னா) சாதகமான நியாயத்தீர்ப்பை பெற “பாவங்களை மறைக்கும் நல்ல தகுதிகளை அடைவதே” அவர்களுடைய நோக்கமாயிருந்தது. ஒரு மனிதனின் நல்ல செயல்கள் அவனுடைய கெட்ட செயல்களைக் காட்டிலும் ஒன்று அதிகமாக இருந்தாலும், அவன் பாதுகாக்கப்படுவான்—அவர்களுடைய சிறுசிறு செயல்களையும் கணக்கில் வைத்து கடவுள் நியாயந்தீர்த்தது போல! (மத்தேயு 23:23, 24) சரியான நோக்குநிலையை அளிப்பவராய் பவுல் இவ்வாறு எழுதினார்: “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.” (ரோமர் 3:20) நிச்சயமாகவே, கிறிஸ்தவ நீதி வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் நீதியைவிட மிகுந்திருக்க வேண்டும்!
“உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்”
12. (எ) இயேசு எபிரெய வேதாகமத்து மேற்கோள்களை அறிமுகப்படுத்தும் அவருடைய சாதாரணமான முறையிலிருந்து, தம்முடைய மலைப்பிரசங்கத்தில் என்ன மாற்றத்தை செய்தார்? ஏன்? (பி) ஆறாவது முறையாக “உரைக்கப்பட்டது” என்ற சொற்றொடரின் உபயோகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 இதற்கு முன்பு எபிரெய வேதாகமத்திலிருந்து இயேசு மேற்கோளாக எடுத்துக் காட்டிய போது, “எழுதியிருக்கிறதே” என்று அவர் சொன்னார். (மத்தேயு 4:4, 7, 10) ஆனால் மலைப்பிரசங்கத்தில் ஆறு முறைகள், எபிரெய வேதாகமத்திலிருந்து எடுத்த கூற்றுகளைப் போல் தோன்றய “உரைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளை அவர் அறிமுகப்படுத்தினார். (மத்தேயு 5:21, 27, 31, 33, 38, 43) ஏன்? ஏனென்றால் கடவுளுடைய கட்டளைக்கு முரணாக பரிசேய பாரம்பரியங்களின் வெளிச்சத்தில் விளக்கப்பட்ட வேத வசனங்களை அவர் குறிப்பிட்டு பேசினார். (உபாகமம் 4:2; மத்தேயு 15:3) இந்தத் தொடர்ச்சிகளில் இயேசுவின் ஆறாவதும் கடைசியுமான மேற்கோளில் இது வெளிப்படையாக காண்பிக்கப்படுகிறது: “உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.” ஆனால் மோசேயின் நியாயப்பிரமாண சட்டம் “சத்துருவைப் பகைப்பாயாக” என்று சொல்லவில்லை. வேதபாரகரும் பரிசேயர்களும் அதை சொன்னார்கள். உங்கள் அயலானை நேசியுங்கள் என்ற சட்டத்திற்கு அவர்களுடைய விளக்கம்—உங்களுடைய யூத அயலானை மட்டும் நேசியுங்கள், மற்றவர்களை அல்ல என்பதாக இருந்தது.
13. கொலைக்கு வழிநடத்தக்கூடிய நடத்தையின் ஆரம்பத்துக்கு எதிராக இயேசு எவ்வாறு எச்சரிக்கிறார்?
13 இந்தத் தொடர்ச்சியான ஆறு கூற்றுகளின் முதல் கூற்றை இப்போது சிந்தியுங்கள். இயேசு இவ்வாறு அறிவித்தார்: “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலை செய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.” (மத்தேயு 5:21, 22) இருதயத்தில் இருக்கும் கோபம் பழிதூற்றிப் பேசுவதற்கு வழிநடத்தக்கூடும், அங்கிருந்து கண்டனம் தெரிவிக்கும் நியாயத்தீர்ப்புகளுக்கும், இறுதியில் கொலை செய்யும் செயலுக்கே அது வழிநடத்தக்கூடும். இருதயத்தில் வளர்க்கப்படும் நீடித்த கோபம் சாவுக்கேதுவானதாய் இருக்கக்கூடும்: “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்.”—1 யோவான் 3:15.
14. விபசாரத்திற்கு வழிநடத்தக்கூடிய பாதையில் நடக்க ஆரம்பிக்க வேண்டாம் என்று இயேசு நமக்கு எவ்வாறு புத்திமதி கொடுக்கிறார்?
14 இயேசு அடுத்து இவ்வாறு சொன்னார்: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:27, 28) நீங்கள் விபசாரம் செய்யப் போவதில்லை இல்லையா? அப்படியானால் அதைக் குறித்து அந்த வழியில் சிந்திக்கவும்கூட ஆரம்பிக்காதீர்கள். அப்படிப்பட்ட காரியங்களுக்கு ஊற்றுமூலமாயிருக்கும் உங்கள் இருதயத்தை காத்துக் கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 4:23; மத்தேயு 15:18, 19) யாக்கோபு 1:14, 15 இவ்வாறு எச்சரிக்கிறது: “அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும்.” ஜனங்கள் சில சமயங்களில் இவ்வாறு சொல்லலாம்: ‘நீங்கள் செய்து முடிக்க முடியாமலிருப்பதை ஆரம்பிக்காதீர்கள்.’ ஆனால் இந்த விஷயத்தில் நாம் இவ்வாறு சொல்ல வேண்டும்: ‘நீங்கள் நிறுத்த முடியாததை ஆரம்பிக்காதீர்கள்.’ சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று பயமுறுத்தப்பட்ட போதிலும் உண்மையுள்ளவர்களாக இருந்த சிலர் பின்னர் பால் சம்பந்தமான ஒழுக்கக்கேட்டின் வஞ்சகக் கவர்ச்சிக்கு இரையாகியிருக்கின்றனர்.
15. விவாகரத்தைப் பற்றிய இயேசுவின் நிலைநிற்கை யூதர்களின் வாய்மொழியான பாரம்பரியங்களில் சொல்லப்பட்டதிலிருந்து எவ்வாறு முற்றிலும் வித்தியாசமானதாய் இருந்தது?
15 இப்போது நாம் இயேசுவின் மூன்றாவது கூற்றுக்கு வருகிறோம். அவர் சொன்னார்: “தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற் சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ் செய்ய பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை [பால் சம்பந்தமான ஒழுக்கக்கேட்டை தவிர மற்ற காரணங்களுக்காக விவாகரத்து செய்யப்பட்டவளை] விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.” (மத்தேயு 5:31, 32) சில யூதர்கள் தங்கள் மனைவிகளை நம்பிக்கைத் துரோகமாய் நடத்தினர், அற்பமான காரியங்களின் அடிப்படையில் அவர்களை விவாகரத்து செய்தனர். (மல்கியா 2:13–16; மத்தேயு 19:3–9) “மனைவி ஓர் உணவுவகையை கெடுத்து விட்டாலோ” அல்லது “அவளைக் காட்டிலும் அழகான மற்றொருத்தியை அவன் கண்டாலோ” ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு வாய்மொழியான பாரம்பரியங்கள் அனுமதித்தன.—மிஷ்னா.
16 இதே ரீதியில் இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம் பண்ண வேண்டாம்.” இதற்குள்ளாக யூதர்கள் ஆணையிடுவதை தவறாகப் பயன்படுத்தி கொண்டிருந்தனர். அற்ப விஷயங்களுக்கெல்லாம் அவற்றை நிறைவேற்றாமலே அநேகர் ஆணையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இயேசு சொன்னார்: “சத்தியம் பண்ணவேண்டாம் . . . உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்.” அவருடைய கட்டளை எளிமையானதாக இருந்தது: உங்களுடைய வார்த்தைக்கு உத்தரவாதமளிப்பதற்கு ஓர் ஆணையிட வேண்டிய தேவை இல்லாதபடி எல்லா சமயங்களிலும் உண்மை பேசுங்கள். ஆணையிடுவதை அதிமுக்கியமான விஷயங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள்.—மத்தேயு 5:33–37; 23:16–22-ஐ ஒப்பிடுக.
17. “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்பதைவிட என்ன மேலான வழியை இயேசு கற்பித்தார்?
17 இயேசு அடுத்து சொன்னார்: “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.” (மத்தேயு 5:38–42) காயப்படுத்தும் நோக்கோடு கொடுக்கப்படும் அடியைப் பற்றி அல்ல, மாறாக இழிவுபடுத்துவதற்காக கையின் பின்புறத்தால் கன்னத்தில் அறைவதைக் குறித்து இயேசு இங்கு குறிப்பிடுகிறார். உங்களை அவமதித்தவர்களை அவமதிப்பதன் மூலம் உங்களை தாழ்த்திக்கொள்ளதீர்கள். தீமைக்குத் தீமை செய்ய மறுங்கள். மாறாக, அதற்கு பதிலாக திரும்பவும் நன்மை செய்யுங்கள். இவ்வாறு “தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்.”—ரோமர் 12:17–21.
18. (எ) உங்களுடைய அயலானை நேசிப்பதைப் பற்றிய கட்டளையை யூதர்கள் எவ்வாறு மாற்றியமைத்தனர்? ஆனால் இயேசு இதை எவ்வாறு எதிர்த்தார்? (பி) “அயலான்” என்பதன் பொருத்தத்தை மட்டுப்படுத்த விரும்பிய ஒரு நியாயசாஸ்திரிக்கு இயேசுவின் பதில் என்னவாக இருந்தது?
18 ஆறாவதும் கடைசியுமான உதாரணத்தில் ரபீக்களின் பாரம்பரியத்தின் மூலம் மோசேயின் நியாயப்பிரமாணம் எவ்வாறு பெலவீனப்படுத்தப்பட்டது என்பதை இயேசு தெளிவாக காண்பித்தார்: “உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.” (மத்தேயு 5:43, 44) எழுதப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணம் அன்பின் பேரில் எந்த வரையறைகளையும் வைக்கவில்லை: “உன்னில் நீ அன்பு கூருவது போல் பிறனிலும் அன்புகூருவாயாக.” (லேவியராகமம் 19:18) பரிசேயர்கள் தாங்கள் இந்தக் கட்டளையிலிருந்து பின்வாங்கி அதை தப்பித்துக் கொள்வதற்கு “அயலான்” என்ற பதத்தை பாரம்பரியங்களை கடைப்பிடித்தவர்களுக்கு மட்டும் பொருத்தினார்கள். இதனால் தான் அதற்குப் பின்பு இயேசு ஒரு நியாயசாஸ்திரிக்கு ‘உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக’ என்ற கட்டளையை ஞாபகப்படுத்தினபோது, அந்த மனிதன் “எனக்குப் பிறன் யார்?” என்று கேட்டான். நல்ல சமாரியன் உவமையைக் கொண்டு இயேசு பதிலளித்தார்—நீ யாருக்கெல்லாம் தேவையோ அவர்களுக்கெல்லாம் உன்னை அயலானாக ஆக்கிக்கொள்.—லூக்கா 10:25–37.
19. துன்மார்க்கரிடமாக யெகோவாவின் என்ன செயலை நாம் பின்பற்றவேண்டும் என்று இயேசு பரிந்துரை செய்தார்?
19 தம் பிரசங்கத்தை தொடர்ந்தவாறு இயேசு இவ்வாறு அறிவித்தார்: ‘கடவுள் துன்மார்க்கரிடம் அன்பு காண்பித்தார். அவர்கள் மேல் சூரியனை பிரகாசிக்கவும் மழையை பொழியவும் செய்தார். உங்களை நேசிக்கிறவர்களையே நேசிப்பதில் ஒன்றுமில்லை. துன்மார்க்கரும் அதை செய்கின்றனர். அதில் வெகுமதிக்கான காரணம் ஒன்றுமில்லை. கடவுளுடைய குமாரர்கள் என்று உங்களை நிரூபியுங்கள். அவரைப் பின்பற்றுங்கள். உங்களை எல்லாருக்கும் அயலானாக ஆக்கிக் கொள்ளுங்கள், உங்கள் அயலானை நேசியுங்கள். இவ்வாறு, “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” (மத்தேயு 5:45–48) வாழ்வதற்கு என்னே ஒரு சவாலாயிருக்கும் தராதரம்! வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் நீதி எவ்வளவு குறைவுள்ளதாய் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது!
20. மோசேயின் நியாயப்பிரமாணத்தை ஒருபுறம் தள்ளி வைப்பதற்கு பதிலாக, இயேசு அதனுடைய வலிமையை எவ்வாறு அகலப்படுத்தி, ஆழப்படுத்தி அதை ஓர் உயர்வான நிலையில் வைத்தார்?
20 ஆகையால் இயேசு நியாயப்பிரமாணத்தின் பாகங்களை குறிப்பிடுகையில், “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சொன்னபோது மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவர் ஒருபுறம் வைத்துவிட்டு, அதற்கு மாறாக வேறொன்றை அவர் வைக்கவில்லை. அதற்குப் பின் இருக்கும் ஆவியை காண்பிப்பதன் மூலம் அவர் அதன் சக்தியை ஆழப்படுத்தினார், அகலப்படுத்தினார். சகோதரத்துவத்தின் மேம்பட்ட பிரமாணம், தொடர்ந்திருக்கும் பகையை கொலை குற்றமாகத் தீர்க்கிறது. தூய்மையின் மேம்பட்ட பிரமாணம், தொடர்ந்திருக்கும் காமஇச்சைகளை விபசாரம் என தீர்க்கிறது. விவாகத்தின் மேம்பட்ட பிரமாணம், அற்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்வதை விபசார மறுமணங்களுக்கு நடத்தும் வழியாக ஒதுக்குகிறது. உண்மையின் மேம்பட்ட பிரமாணம், வாய்பாடு போல் ஒப்பிக்கப்படும் ஆணைகளை அவசியமற்றதாக காட்டுகிறது. சாந்தத்தின் மேம்பட்ட பிரமாணம், பதிலுக்கு பதில் செய்வதை நிராகரிக்கிறது. அன்பின் மேம்பட்ட பிரமாணம், வரையறையற்ற தெய்வீக அன்பை தேவைப்படுத்துகிறது.
21. ரபீக்களின் சுய–நீதியைப் பற்றி இயேசுவின் அறிவுரைகள் எதை வெளிக்காட்டிற்று?
21 அதுவரை கேட்கப்படாத இத்தகைய போதனைகள், அவைகளை முதன் முறையாக கேட்டவர்களின் செவிகளில் விழுந்தபோது எத்தகைய மாபெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும்! ரபீக்களின் பாரம்பரியங்களை சேவித்து வருவதன் மூலம் கிடைத்த மாய்மாலமான சுயநீதி எவ்வளவு உபயோகமற்றது என இவை காட்டின! ஆனால் இயேசு தம் மலைப்பிரசங்கத்தை தொடர்கையில், தேவ நீதியின் பேரில் பசியும் தாகமும் கொண்டவர்கள் அதை எப்படி அடைவது என திட்டவட்டமாக தெரிந்து கொள்ளவிருந்தனர். இதை அடுத்த கட்டுரை விளக்கும். (w90 10/1)
விமர்சனக் கேள்விகள்
◻ யூதர்கள் ஏன் தங்கள் வாய்மொழியான பாரம்பரியங்களை உருவாக்கினர்?
◻ வேதபாரகர், பரிசேயர்கள், பொது ஜனங்கள் ஆகியோரின் சம்பந்தமாக இயேசு என்ன திடீர் மாற்றத்தை செய்தார்?
◻ வேதபாரகரும் பரிசேயர்களும் கடவுளோடு ஒரு நீதியான நிலைநிற்கையை பெறுவதற்கு எவ்வாறு எதிர்பார்த்தனர்?
◻ விபசாரத்தையும் வேசித்தனத்தையும் தவிர்ப்பதற்கு இயேசு காண்பித்த வழி என்ன?
◻ மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு பின்னால் இருக்கும் ஆவியை காண்பிப்பதன் மூலம் என்ன உயர்ந்த தராதரங்களை இயேசு நிலைநாட்டினார்?
16. என்ன யூத பழக்கம் சத்தியம் பண்ணுவதை அர்த்தமற்றதாக ஆக்கியது? என்ன நிலைநிற்கையை இயேசு கொண்டிருந்தார்?