இயேசுவின் வார்த்தைகள் உங்கள் மனதைச் செதுக்கட்டும்
“தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்.”—யோவா. 3:34.
1, 2. மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் எதோடு ஒப்பிடலாம், அது ‘தேவனுடைய வார்த்தைகளையே’ அடிப்படையாகக் கொண்டிருந்தது என ஏன் சொல்லலாம்?
செதுக்கப்பட்ட மிகப் பெரிய வைரக்கற்களில் ஒன்றாகத் திகழ்வது 530 காரட் ‘ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா.’ இது விலையுயர்ந்த ரத்தினம் என்பது உண்மையே. ஆனால், இதைவிட விலைமதிப்புள்ள ஆன்மீக ரத்தினங்கள் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் உள்ளன. இதில் ஆச்சரியமில்லை, ஏனென்றால் யெகோவாவின் வார்த்தைகளையே இயேசு பேசினார். “தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்” என்று இயேசுவைக் குறித்து பைபிள் சொல்கிறது.—யோவா. 3:34-36.
2 மலைப்பிரசங்கத்தை அவர் அரை மணிநேரத்திற்குள்ளாகக் கொடுத்திருக்கலாம்; என்றாலும், அந்தப் பிரசங்கத்தில் எபிரெய வேதாகமத்தின் எட்டு புத்தகங்களிலிருந்து 21 மேற்கோள்களைக் காட்டினார். ஆகவே, அது ‘தேவனுடைய வார்த்தைகளையே’ அடிப்படையாகக் கொண்டிருந்தது. கடவுளுடைய அன்பு மகனின் தலைசிறந்த பிரசங்கத்தில் பொதிந்துள்ள பொன்மொழிகளில் சிலவற்றை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதை இப்போது சிந்திக்கலாம்.
‘முன்பு உன் சகோதரனோடு சமாதானமாகு’
3. கோபப்படுவதால் வரும் விளைவுகளைக் குறித்து சீஷர்களை எச்சரித்த பிறகு, இயேசு என்ன ஆலோசனையைக் கொடுத்தார்?
3 சந்தோஷமும் சமாதானமும் கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் சில; கிறிஸ்தவர்களாகிய நாம் அந்தச் சக்தியைப் பெற்றிருப்பதால் சந்தோஷமானவர்களாயும் சமாதானம்பண்ணுகிறவர்களாயும் இருக்கிறோம். (கலா. 5:22, 23) தம்முடைய சீஷர்கள் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்துவிட இயேசு விரும்பவில்லை; ஆகவே, கோபத்தை வளர்த்துக்கொண்டு போவது உயிருக்கே உலைவைத்துவிடும் என அவர்களை எச்சரித்தார். (மத்தேயு 5:21, 22-ஐ வாசியுங்கள்.) அடுத்ததாக, அவர் இவ்வாறு சொன்னார்: “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி [அதாவது, சமாதானமாகி], பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”—மத். 5:23, 24.
4, 5. (அ) மத்தேயு 5:23, 24-ல் “காணிக்கை” என்று இயேசு குறிப்பிட்டது எதை அர்த்தப்படுத்தியது? (ஆ) புண்பட்ட சகோதரரோடு சமாதானம்பண்ணுவது எந்தளவுக்கு முக்கியம்?
4 இயேசு குறிப்பிட்ட அந்த “காணிக்கை,” எருசலேம் ஆலயத்தில் செலுத்தப்பட்ட எல்லாவித காணிக்கைகளையும் பலிகளையும் அர்த்தப்படுத்தியது. உதாரணமாக, அக்காலத்தில் யெகோவாவை வழிபடுவதற்கு மக்கள் பயன்படுத்திய மிருக பலிகள் முக்கியமானவையாய் இருந்தன. என்றாலும், அவற்றைவிட முக்கியமான ஒன்றை இயேசு வலியுறுத்திக் காட்டினார்; அதாவது, கடவுளுக்குக் காணிக்கை கொடுப்பதற்கு முன்பு, புண்பட்ட சகோதரரோடு சமாதானம்பண்ணுவது மிக முக்கியம் என்பதை அவர் வலியுறுத்திக் காட்டினார்.
5 இயேசுவின் இந்த வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் மற்றவர்களோடு நடந்துகொள்ளும் விதம் யெகோவாவோடு நமக்குள்ள உறவைப் பெரிதும் பாதிக்கிறதென தெளிவாகக் கற்றுக்கொள்கிறோம். (1 யோ. 4:20) பூர்வ காலங்களில், சக மனிதரைச் சரியாக நடத்தாத ஒருவர் அளித்த காணிக்கைகள் கடவுளுடைய பார்வையில் மதிப்பற்றதாக இருந்தன.—மீகா 6:6-8-ஐ வாசியுங்கள்.
மனத்தாழ்மை அத்தியாவசியம்
6, 7. நம்மால் புண்பட்டுவிட்ட சகோதரரோடு மீண்டும் சமாதானமாவதற்கு மனத்தாழ்மை ஏன் அவசியம்?
6 புண்பட்ட சகோதரரோடு சமாதானம்பண்ணுவது நம் மனத்தாழ்மைக்கு ஒரு பரீட்சையாக இருக்கலாம். மனத்தாழ்மையுள்ளவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொண்டு சக விசுவாசிகளோடு வாதாடவோ சண்டைபோடவோ மாட்டார்கள். அப்படிச் செய்தால் கிறிஸ்தவர்களிடையே அமைதியும் சமாதானமும் குலைந்துவிடும். பூர்வ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களிடையே ஒருசமயம் அப்படிப்பட்ட சூழ்நிலைதான் உருவானது. அதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் சிந்தனையைத் தூண்டும் இந்தக் குறிப்பைச் சொன்னார்: “நாங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?”—1 கொ. 6:7.
7 நம் சகோதரரிடம் போய் நாம் செய்ததுதான் சரி என்றும் அவர் செய்தது தவறு என்றும் அவரை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டுமென இயேசு சொல்லவில்லை. அவருடன் மீண்டும் சமாதானமாவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். அவருடன் சமாதானம்பண்ணுவதற்கு, நாம் எப்படி உணருகிறோம் என்பதை அவரிடம் மனந்திறந்து சொல்ல வேண்டும். அவருடைய மனம் புண்பட்டிருக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவும் வேண்டும். அதோடு, நம் பக்கம் தவறு இருந்தால் மனத்தாழ்மையுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
“உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால்”
8. மத்தேயு 5:29, 30-ல் இயேசு சொன்னவற்றின் சாராம்சம் என்ன?
8 மலைப்பிரசங்கத்தில், ஒழுக்க சம்பந்தமாக இயேசு சிறந்த ஆலோசனை கொடுத்தார். நம்முடைய அபூரண உடலுறுப்புகள் நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, இவ்வாறு சொன்னார்: “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் [“கெஹென்னாவில்,” NW] தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் [“கெஹென்னாவில்,” NW] தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.”—மத். 5:29, 30
9. நம்முடைய “கண்” அல்லது “கை” நம்மை எப்படி ‘இடற’ வைக்கலாம்?
9 இங்கே “கண்” என இயேசு சொன்னது, ஒன்றின்மீது கவனத்தை ஊன்ற வைக்கும் ஆற்றலை அல்லது திறமையைக் குறிக்கிறது; “கை” என்பது நம் கைகளால் செய்கிற செயல்களைக் குறிக்கிறது. நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், இந்த உறுப்புகள் நம்மை ‘இடற’ வைத்து, ‘கடவுளோடு நடக்க’ முடியாதபடி செய்துவிடும். (ஆதி. 5:22, NW; 6:9, NW) யெகோவாவுக்குப் பிடிக்காத எதையாவது செய்வதற்கான தூண்டுதல் ஏற்பட்டால், ஒரு கருத்தில், நம் கண்ணைப் பிடுங்கிப்போட வேண்டும் அல்லது கையை வெட்டிப்போட வேண்டும்; அதாவது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10, 11. ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பதற்கு என்ன செய்வது உதவியாய் இருக்கும்?
10 ஒழுக்கக்கேடான காரியங்களையே உற்றுப் பார்க்காதபடி நம் கண்களுக்கு எப்படி ‘திரை’ போடலாம்? “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என்று தேவபயமுள்ள யோபு சொன்னார். (யோபு 31:1) மணமாகியிருந்த அவர், ஒழுக்க சம்பந்தமாகக் கடவுள் கொடுத்திருந்த கட்டளைகளை மீறக்கூடாது என்பதில் திடத்தீர்மானமாக இருந்தார். நாம் மணமானவரோ இல்லையோ அவருக்கிருந்த மனப்பான்மை நமக்கும் இருக்க வேண்டும். ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பதற்குக் கடவுளுடைய சக்தியால் நாம் வழிநடத்தப்பட வேண்டும்; அந்தச் சக்தி இச்சையடக்கத்தை வளர்த்துக்கொள்ள கடவுளை நேசிப்போரான நமக்கு உதவுகிறது.—கலா. 5:22-25.
11 ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பதற்கு நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது உதவியாய் இருக்கும்: ‘புத்தகங்களிலும் டிவியிலும் இன்டர்நெட்டிலும் மலிந்து கிடக்கிற ஆபாசத்தைப் பார்க்கத் துடிக்கும் ஆசையை எனக்குள் தூண்ட என் கண்களை அனுமதிக்கிறேனா?’ இயேசுவின் சீஷனாகிய யாக்கோபு சொன்ன இந்த வார்த்தைகளையும் நாம் ஞாபகத்தில் வைக்கலாம்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” (யாக். 1:14, 15) ஆகவே, கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிற எவரும், எதிர்பாலார் ஒருவரை ‘இச்சையோடு பார்த்துக்கொண்டிருந்தால்,’ தன் கண்களைப் பிடுங்கி எறிவதற்கு ஒப்பான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.—மத். 5:27, 28-ஐ வாசியுங்கள்.
12. ஒழுக்கக்கேடான ஆசைகளை எதிர்த்துப் போராட பவுலின் எந்த அறிவுரை நமக்கு உதவும்?
12 நம் கைகளைத் தவறாக உபயோகிப்பது யெகோவாவின் ஒழுக்க நெறிகளை மீறும்படி செய்யும் என்பதால் நாம் ஒழுக்க ரீதியில் சுத்தமாயிருக்க உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும். ஆகவே, “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்” என்ற பவுலின் அறிவுரைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். (கொலோ. 3:5) “அழித்துப்போடுங்கள்” என்ற வார்த்தை, ஒழுக்கக்கேடான ஆசைகளை எதிர்த்துப் போராட நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
13, 14. ஒழுக்கக்கேடான சிந்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பது ஏன் அவசியம்?
13 உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் தன் கையையோ காலையோ வெட்டியெடுக்க மருத்துவரை அனுமதிக்கலாம். அவ்வாறே, நாம் ஆன்மீக ரீதியில் உயிர் பிழைக்க, நம் கண்ணையோ கையையோ ‘எறிந்து போடுவது,’ அதாவது ஒழுக்கக்கேடான சிந்தைகளையும் செயல்களையும் அறவே தவிர்ப்பது அவசியம். கெஹென்னா என்ற நிரந்தர அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி, மன ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் சுத்தமாயிருப்பதாகும்.
14 நாம் பாவத்தையும் அபூரணத்தையும் சுதந்தரித்திருப்பதால், ஒழுக்க ரீதியில் சுத்தமாயிருக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” என்று பவுல் சொன்னார். (1 கொ. 9:27) ஆகவே, ஒழுக்க சம்பந்தமாக இயேசு கொடுத்த ஆலோசனையைக் கேட்டு நடக்க நாம் தீர்மானமாயிருப்போமாக; அவருடைய மீட்புப் பலிக்கு நன்றியில்லாத விதத்தில் ஒருபோதும் நடக்காதிருப்போமாக.—மத். 20:28; எபி. 6:4-6.
“கொடுங்கள்”
15, 16. (அ) கொடுப்பதில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்? (ஆ) லூக்கா 6:38-ல் இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
15 இயேசு சொன்ன வார்த்தைகளும் அவர் வைத்த தலைசிறந்த முன்மாதிரியும் தாராள குணத்தை வளர்க்க உதவுகின்றன. அபூரண மனிதர்களின் நன்மைக்காகப் பூமிக்கு வருவதன் மூலம் தாராள குணத்தை அவர் அதிகளவில் காட்டினார். (2 கொரிந்தியர் 8:9-ஐ வாசியுங்கள்.) பாவிகளுக்காகத் தம் உயிரைக் கொடுக்க அவர் தமது பரலோக மகிமையை மனப்பூர்வமாக விட்டுவிட்டு, மனிதராக வந்தார்; இதனால் அவர்களில் சிலர் பரலோகத்தில் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். (ரோ. 8:16, 17) தாராள குணத்தைக் காட்டும்படி இயேசு இவ்வாறு மனிதர்களை ஊக்கப்படுத்தினார்:
16 “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.” (லூக். 6:38) ‘மடியில் போடுவது’ அக்காலத்திலிருந்த ஒரு பழக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது; அன்று மக்கள், பெரிய அங்கியை அணிந்து அதன்மேல் இடைக்கச்சையைக் கட்டிக்கொண்டார்கள்; அந்த அங்கியில் இருந்த பை போன்ற மடிப்புக்குள் கடைக்காரர்கள் பொருட்களை அளந்து போட்டார்கள். நாம் மனதார மற்றவர்களுக்கு வாரி வழங்கும்போது நமக்கும் வாரி வழங்கப்படும், அதுவும் தேவை இருக்கும்போது வழங்கப்படும்.—பிர. 11:2.
17. கொடுப்பதில் யெகோவா எப்படி நமக்குத் தலைசிறந்த முன்மாதிரியாக இருக்கிறார், எவ்விதத்தில் கொடுப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தரும்?
17 உற்சாகத்தோடு கொடுக்கிறவர்கள்மீது யெகோவா பிரியமாயிருக்கிறார், அவர்களை ஆசீர்வதிக்கிறார். “தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை” தந்ததன் மூலம், கொடுப்பதில் யெகோவா நமக்குத் தலைசிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். (யோவா. 3:16) பவுல் இவ்வாறு எழுதினார்: “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொ. 9:6, 7) உண்மை வணக்கத்திற்காக நம் நேரத்தையும் சக்தியையும் பொருட்செல்வத்தையும் கொடுத்தால் நமக்குச் சந்தோஷமும் அளவில்லா ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது உறுதி.—நீதிமொழிகள் 19:17-ஐயும் லூக்கா 16:9-ஐயும் வாசியுங்கள்.
‘உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே’
18. எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் பரலோகத் தகப்பனிடமிருந்து நாம் எந்தப் ‘பலனையும்’ பெற மாட்டோம்?
18 “மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் [“நீதியான செயல்களை,” NW] செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.” (மத். 6:1) ‘நீதியான செயல்கள்’ என இயேசு குறிப்பிட்டபோது, கடவுளுடைய சித்தத்திற்கு இசைவான செயல்களையே அவர் அர்த்தப்படுத்தினார். அப்படிப்பட்ட நற்செயல்களை மக்களுக்கு முன்பாகச் செய்யவே கூடாதென்று அவர் அர்த்தப்படுத்தவில்லை; ஏனென்றால், ‘உங்கள் வெளிச்சம் மக்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்று அவர் தம் சீஷர்களிடம் சொல்லியிருந்தார். (மத். 5:14-16) ஆனால், ‘மனுஷர் கண்டு’ மெச்ச வேண்டும் என்பதற்காக அவற்றை நாம் செய்தால், மேடை நடிகர்களைப் போல் இருப்போம்; அதனால், நம் பரலோகத் தகப்பனிடமிருந்து எந்தப் ‘பலனையும்’ நாம் பெற மாட்டோம். நமக்கு அப்படிப்பட்ட உள்ளெண்ணம் இருந்தால், கடவுளோடு நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க மாட்டோம், அவருடைய அரசாங்கத்தில் நிரந்தர ஆசீர்வாதங்களைப் பெறவும் மாட்டோம்.
19, 20. (அ) ‘தர்மஞ்செய்யும்போது தாரை ஊதக்’ கூடாதென்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? (ஆ) வலதுகை செய்வதை இடதுகை அறியாதிருக்க வேண்டும் என்றால் என்ன?
19 நமக்குச் சரியான மனப்பான்மை இருந்தால் இயேசுவின் இந்த அறிவுரையைப் பின்பற்றுவோம்: “ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத். 6:2) ‘தர்மம்’ என்பது கஷ்டப்படுகிறவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடைகளைக் குறித்தன. (ஏசாயா 58:6, 7-ஐ வாசியுங்கள்.) ஏழைகளுக்கு உதவுவதற்கென்று ஒரு பொது நிதியை இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் வைத்திருந்தார்கள். (யோவா. 12:5-8; 13:29) தானதர்மம் செய்வதற்குமுன் நிஜமாகவே தாரை ஊதும் பழக்கம் அப்போது இல்லாததால், இயேசு உயர்வு நவிற்சி அணியை உபயோகப்படுத்தியிருப்பார் என்று தெரிகிறது; அதாவது, ‘தர்மம்’ செய்யும்போது ‘தாரை ஊதக்’ கூடாதென்று மிகைப்படுத்திச் சொல்லியிருப்பார் என்று தெரிகிறது. நாம் தானதர்மம் செய்யும்போது பரிசேயர்களைப் போல் விளம்பரப்படுத்தக் கூடாது. அவர்களை மாய்மாலக்காரர்களென இயேசு அழைத்தார்; ஏனென்றால், அவர்கள் தானதர்மம் செய்தபோது “ஆலயங்களிலும் வீதிகளிலும்” அதை விளம்பரப்படுத்தினார்கள். அந்த மாய்மாலக்காரர்கள் ‘தங்கள் பலனை அடைந்து தீர்ந்தார்கள்.’ மனிதர்களுடைய பாராட்டைப் பெற வேண்டுமென்றும், ஆலயத்தின் முன்பக்கத்தில் செல்வாக்குபெற்ற ரபீக்களுக்கு அருகே உட்கார வேண்டுமென்றும் அவர்கள் ஆசைப்பட்டார்கள்; ஆகவே, அதை மட்டுமே யெகோவாவிடமிருந்து பலனாகப் பெறவிருந்தார்கள், வேறொன்றையும் அல்ல. (மத். 23:6) ஆனால், கிறிஸ்துவின் சீஷர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டியிருந்தது? அவர்களுக்கும் நமக்கும் இயேசு இவ்வாறு சொன்னார்:
20 “நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.” (மத். 6:3, 4) பொதுவாக, நம்முடைய இரண்டு கைகளும் இணைந்தே எந்தவொரு வேலையையும் செய்யும். ஆகவே, வலதுகை செய்வதை இடதுகை அறியாதிருக்க வேண்டும் என்றால், இடதுகையும் வலதுகையும் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கிறதோ அந்தளவுக்கு நம்முடன் நெருக்கமாக இருக்கிறவர்களுக்குக்கூட நம்முடைய தானதர்மத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று அர்த்தம்.
21. ‘அந்தரங்கத்தில் பார்க்கிறவர்’ எவ்விதங்களில் பலனளிப்பார்?
21 நாம் செய்யும் ‘தர்மத்தை’ குறித்துப் பெருமையடிக்கவில்லை என்றால் அது அந்தரங்கமாய் இருக்கும். அப்போது “அந்தரங்கத்தில் பார்க்கிற” நம் பிதா நமக்குப் பலனளிப்பார். நம் பரலோகப் பிதா பரலோகத்தில் வசிப்பதாலும் மனிதர்களால் பார்க்க முடியாதவராக இருப்பதாலும், மனிதர்களைப் பொறுத்தவரை அவர் “அந்தரங்கத்தில்” இருக்கிறார். (யோவா. 1:18) ‘அந்தரங்கத்தில் பார்க்கிறவர்’ எவ்விதங்களில் பலனளிப்பார்? அவர் தம்மோடு நெருங்கிய உறவுக்குள் நம்மைக் கொண்டுவருவார், நம் பாவங்களை மன்னிப்பார், முடிவில்லா வாழ்வையும் அளிப்பார். (நீதி. 3:32; யோவா. 17:3; எபே. 1:7) மனிதரிடமிருந்து கிடைக்கும் புகழ்ச்சியைவிட அவை பன்மடங்கு உயர்ந்தவை, அல்லவா?
நெஞ்சார நேசிக்க வேண்டிய பொன்மொழிகள்
22, 23. இயேசுவின் வார்த்தைகளை நாம் ஏன் நெஞ்சார நேசிக்க வேண்டும்?
22 மலைப்பிரசங்கத்தில், பல கோணங்களில் ஜொலிக்கும் ஆன்மீக ரத்தினங்கள் எத்தனை, எத்தனை! கஷ்டங்கள் நிறைந்த இந்த உலகிலும்கூட சந்தோஷமாய் இருப்பதற்கு உதவும் பொன்மொழிகள் அதில் இருக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை. இயேசுவின் வார்த்தைகளை நெஞ்சார நேசித்து, நம் மனப்பான்மையையும் வாழ்க்கை முறையையும் அவற்றிற்கு ஏற்ப மாற்றினால் நாம் சந்தோஷமாய் இருப்போம்.
23 இயேசு கற்பித்தவற்றைக் “கேட்டு” அதன்படி ‘செய்கிற’ அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். (மத்தேயு 7:24, 25-ஐ வாசியுங்கள்.) ஆகவே, இயேசுவின் ஆலோசனையைப் பின்பற்ற நாம் தீர்மானமாய் இருப்போமாக. மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்ன இன்னும் பல விஷயங்களை அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• புண்பட்ட சகோதரரோடு சமாதானம்பண்ணுவது ஏன் முக்கியம்?
• நம் ‘வலது கண்’ நம்மை இடறச் செய்வதை எப்படித் தவிர்க்கலாம்?
• கொடுப்பதன் சம்பந்தமாக நம் மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்?
[பக்கம் 11-ன் படம்]
புண்பட்ட சக விசுவாசியோடு ‘சமாதானம்பண்ணுவது’ எவ்வளவு சிறந்தது!
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
உற்சாகமாய்க் கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்