வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பாவி என எல்லாராலும் அறியப்பட்ட பெண்ணிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று இயேசுவால் எப்படிச் சொல்ல முடிந்தது?—லூக். 7:37, 48.
சீமோன் என்ற பெயருடைய பரிசேயனின் வீட்டில் சாப்பிடுவதற்கு இயேசு உட்கார்ந்திருந்தார்; அப்போது, ஒரு பெண் அங்கு வந்து “அவருக்குக் கால்மாட்டில் பின்புறமாக உட்கார்ந்துகொண்டாள்.” அவள் அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்து கூந்தலினால் துடைத்தாள். பிறகு, அவருடைய பாதங்களை மென்மையாக முத்தமிட்டு வாசனைத் தைலத்தைப் பூசினாள். அந்தப் பெண் ‘அந்நகரத்தில் பாவியென அறியப்பட்டிருந்தாள்’ என சுவிசேஷ பதிவு சொல்கிறது. எல்லா அபூரண மனிதருமே பாவிகள்தான்; ஆனால், பாவி என எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரை அல்லது பேர்போன ஒரு பாவியைக் குறிப்பிடவே பொதுவாக பைபிள் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது. அந்தப் பெண் ஒரு விலைமகளாக இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட பெண்ணைப் பார்த்துதான் இயேசு, “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்றார். (லூக். 7:36-38, 48) அவர் அப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன? அவர் இன்னும் மீட்புப் பலியைக் கொடுத்திருக்கவில்லை. அப்படியிருக்க, அவளுடைய பாவங்களை அவரால் எப்படி மன்னிக்க முடிந்தது?
அந்தப் பெண் அவருடைய பாதங்களைக் கழுவி வாசனைத் தைலத்தைப் பூசிய பிறகு, அவரை விருந்துக்கு அழைத்த சீமோனிடம் ஒரு முக்கிய குறிப்பை விளக்க இயேசு ஓர் உதாரணத்தைச் சொன்னார், அதன் பிறகே அவளை மன்னித்தார். சீமோனிடம் அந்த உதாரணத்தை இயேசு விளக்குகையில், திரும்பச் செலுத்த முடியாத பெரிய கடனுக்கு பாவத்தை ஒப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு தினாரி வாங்கியிருந்தான், மற்றொருவன் ஐம்பது தினாரி வாங்கியிருந்தான். அவர்களால் கடனைத் தீர்க்க முடியாமல்போனபோது, அவர்கள் இருவரையுமே அவர் தாராளமாய் மன்னித்துவிட்டார். அப்படியானால், அவர்கள் இருவரில் யார் அவரிடம் அதிக அன்பு காட்டுவான்? என்று கேட்டார். அதற்கு சீமோன், ‘எவனுக்கு அதிகக் கடனைத் தாராளமாய் மன்னித்தாரோ அவனே என நினைக்கிறேன்’ என்றான். அவர், ‘சரியாகச் சொன்னாய்’ என்றார்.” (லூக். 7:41-43) நாம் எல்லாருமே கடவுளுக்குக் கீழ்ப்படிய கடன்பட்டிருக்கிறோம்; ஆகவே, நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்யும்போது அவருக்குக் கொடுக்க வேண்டிய கடனைச் செலுத்தாமல் போய்விடுகிறோம். இவ்வாறு கடனுக்கு மேல் கடன் குவிக்கிறோம். ஆனால் யெகோவா கடன்களை மன்னிக்க மனமுள்ள ஒருவரைப் போல இருக்கிறார். அதனால்தான், கடவுளிடம் இவ்வாறு ஜெபிக்கும்படி தம் சீடர்களை இயேசு ஊக்குவித்தார்: “எங்கள் கடனாளிகளை எந்தளவுக்கு மன்னித்திருக்கிறோமோ அந்தளவுக்கு எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்.” (மத். 6:12) பாவங்களைக் கடன்களுக்கு ஒப்பிட்டு லூக்கா 11:4 (அடிக்குறிப்பு) சொல்கிறது.
பூர்வ காலங்களில் எதன் அடிப்படையில் கடவுள் பாவங்களை மன்னித்தார்? அவருடைய பரிபூரண நீதியின்படி, பாவத்திற்குத் தண்டனை மரணமே. அதனால்தான், ஆதாம் தான் செய்த பாவத்திற்காக உயிரை இழக்க வேண்டியிருந்தது. என்றாலும், இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டத்தின்படி தவறு செய்த ஒருவர் மிருக பலி செலுத்தினால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும். அப்போஸ்தலன் பவுல் அதைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய அனைத்துமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன; இரத்தம் சிந்தப்படாவிட்டால், மன்னிப்பு இல்லை.” (எபி. 9:22) யூதர்களைப் பொறுத்தவரை, கடவுளிடமிருந்து வேறு எவ்விதத்திலும் மன்னிப்பைப் பெற முடியாது. ஆகவே, இயேசு அந்தப் பெண்ணிடம் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆட்களால் அதை ஏற்க முடியாமல் போனதில் எந்த ஆச்சரியமுமில்லை. இயேசுவுடன் சாப்பிடுவதற்கு உட்கார்ந்திருந்தவர்கள், “இவர் யார்? பாவங்களைக்கூட மன்னிக்கிறாரே!” என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். (லூக். 7:49) அப்படியானால், எதன் அடிப்படையில் பெரும் பாவியான அந்தப் பெண்ணின் பாவங்களை அவரால் மன்னிக்க முடிந்தது?
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு சொல்லப்பட்ட முதல் தீர்க்கதரிசனம், ஒரு ‘வித்துவை’ எழுப்பப் போவதை பற்றிய யெகோவாவின் நோக்கத்தைக் குறிப்பிட்டது; அந்த வித்துவின் குதிங்கால் சாத்தானாலும் அவனுடைய ‘வித்துவினாலும்’ நசுக்கப்படும். (ஆதி. 3:15) கடவுளுடைய எதிரிகளால் இயேசு கொலை செய்யப்பட்டபோது அவருடைய குதிங்கால் நசுக்கப்பட்டது. (கலா. 3:13, 16) கிறிஸ்து சிந்திய இரத்தம், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதகுலத்தை விடுவிக்கிற மீட்பு பலியாக இருக்கிறது. யெகோவா செய்ய நினைத்தவை நிறைவேறாதபடி எதுவும் அவரைத் தடுக்க முடியாது; அதனால், ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் சொல்லப்பட்ட உடனேயே, கடவுளுடைய பார்வையில் மீட்புத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டதுபோல் ஆகிவிட்டது. ஆகவே, தம்முடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்தவர்களை அவரால் மன்னிக்க முடிந்தது.
இயேசுவின் காலத்திற்கு முன் வாழ்ந்தவர்களில், அநேகரை யெகோவா நீதிமான்களாகக் கருதினார். ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ராகாப், யோபு ஆகியோர் அவர்களில் சிலர். அவர்கள் விசுவாசத்தோடு கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தார்கள். “ஆபிரகாம் யெகோவாமீது விசுவாசம் வைத்ததால் நீதிமானாக எண்ணப்பட்டார்” என சீடனாகிய யாக்கோபு எழுதினார். “அதேபோல், ராகாப் என்ற விலைமகளும் . . . அவளுடைய செயல்களினால் அல்லவா நீதியுள்ளவளாக அங்கீகரிக்கப்பட்டாள்?” என்று சீடனாகிய யாக்கோபு சொன்னார்.—யாக். 2:21-25.
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது அநேக மோசமான பாவங்களைச் செய்திருந்தார். ஆனாலும், உண்மைக் கடவுள்மீது அவருக்கு பலமான விசுவாசம் இருந்தது, அவர் பாவம் செய்தபோதெல்லாம் உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலைக் காட்டினார். அதுமட்டுமல்ல, பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனிதர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம் தம்மோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாகக் கடவுள் கொடுத்தார். முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைத் தாம் சகித்துக்கொண்டு மன்னித்தது நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார். இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் மனிதனை நீதிமானாக அறிவிப்பதன் மூலம் தாம் நீதியுள்ளவர் என்பதைத் தற்காலத்தில் நிரூபிப்பதற்காகவும் அவர் அப்படிச் செய்தார்.” (ரோ. 3:25, 26) ஆம், பிற்பாடு இயேசு கொடுக்கவிருந்த மீட்புப் பலியின் அடிப்படையில் தாவீதின் தவறுகளை யெகோவா மன்னித்தார்; தம்முடைய நீதியான சட்டங்களுக்கு உட்பட்டே அதைச் செய்தார்.
இயேசுவின் பாதத்தில் வாசனைத் தைலத்தைப் பூசிய பெண்ணின் விஷயத்திலும் இதுவே உண்மை. அவள், ஒழுக்கக்கேடாக வாழ்ந்திருந்த போதிலும் மனந்திரும்பியிருந்தாள். பாவத்திலிருந்து விடுதலை பெறுவது அவசியம் என்பதை அவள் உணர்ந்தாள்; யெகோவா அந்த விடுதலையை யார் மூலமாக அளித்தாரோ அந்த நபரை தான் உண்மையிலேயே மதிப்பதைச் செயலில் காட்டினாள். அந்தச் சமயத்தில் இயேசு மீட்பு விலையைச் செலுத்தியிராத போதிலும், அவர் செலுத்தப்போவது அந்தளவு நிச்சயம் என்பதால் அந்தப் பெண்ணைப் போன்றவர்கள் அப்பலியின் மதிப்பிலிருந்து ஏற்கெனவே நன்மையடைய முடிந்தது. அதனால்தான், “உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று இயேசு அவளிடம் சொன்னார்.
இயேசு பாவிகளை புறக்கணிக்கவில்லை என்பதை இப்பதிவு தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு அவர் நல்லதையே செய்தார். யெகோவாவும்கூட, தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்புவோரை மன்னிக்க மனமுள்ளவராய் இருக்கிறார். அபூரண மனிதராகிய நமக்கு இது எப்பேர்ப்பட்ட அருமையான, ஆறுதலான வாக்குறுதி!
[பக்கம் 7-ன் படம்]
அது அவர்களுக்கு நீதியாக எண்ணப்பட்டது