இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
ஜெபமும், கடவுள் பேரில் நம்பிக்கையும்
இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தைத் தொடருகிறார், அப்பொழுது தங்களைத் தேவபக்தியுடையவர்களாகக் காட்டிக்கொள்ளும் அவர்களுடைய மாய்மாலத் தோற்றத்தை அவர் கண்டனம் செய்கிறார். “நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் . . . செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” என்று கூறினார்.
“அன்றியும்,” என்று இயேசு தொடருகிறார், “நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்.” மாறாக, அவருடைய போதனை: “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு.” இயேசுவானவர்தாமே கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் வெளியரங்கமாக ஜெபித்தார், எனவே அவர் இவற்றைக் கண்டனம் செய்யவில்லை. கேட்பவர்களைக் கவர்ச்சித்து அவர்களுடைய போற்றுதலைப் பெறும் வகையில் செய்யப்படும் ஜெபங்களைத்தான் அவர் கண்டனம் செய்கிறார்.
இயேசு மேலுமாகக் கொடுக்கும் ஆலோசனை: “நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் [சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள், NW].” திரும்பச் சொல்லுவதுதானே தன்னில் தவறாக இருக்கிறது என்று இயேசு அர்த்தப்படுத்துகிறதில்லை. ஒருமுறை அவர்தாமே ஜெபம்பண்ணும்போது “அதே வார்த்தையைப்” பயன்படுத்தினார். ஆனால் ஜெபமாலைகளைப் பயன்படுத்தி மனப்பாடம் செய்யப்பட்ட வார்த்தைகளைத் “திரும்பத் திரும்ப” சொல்லுவதைத்தான் அவர் கண்டனம் செய்கிறார்.
தம்முடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஜெபம் செய்ய கற்றுக்கொள்ளும் வகையில், ஏழு விண்ணப்பங்களை உள்ளடக்கிய ஒரு மாதிரி ஜெபத்தை சொல்லுகிறார். முதல் மூன்று சரியாகவே கடவுளுடைய அரசுரிமைக்கும் அவருடைய நோக்கத்திற்கும் மதித்துணர்வைக் காண்பிப்பதாயிருக்கிறது. அவை கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்கும், அவருடைய ராஜ்யம் வருவதற்கும், அவருடைய சித்தம் செய்யப்படுவதற்கும் வேண்டுதலாயிருக்கின்றன. மற்ற நான்கும் தனிப்பட்ட வேண்டுதலாக இருக்கின்றன, அதாவது, அன்றாட உணவுக்கும், பாவ மன்னிப்புக்கும், ஒருவருடைய சகிப்புத்தன்மைக்கும் மிஞ்சி சோதிக்கப்படாமலிருப்பதற்கும், பொல்லாதவனிடமிருந்து மீட்கப்படுவதற்குமான விண்ணப்பங்களாகும்.
தொடர்ந்து பேசுபவராக, பொருள் சம்பந்தமான உடைமைகளின்பேரில் அளவுகடந்த முக்கியத்துவமளிப்பதாகிய கண்ணியைக் குறித்து பேசுகிறார். அவர் கூறுகிறார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.” அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் அழியக்கூடியவை மட்டுமல்ல, கடவுளுடைய பார்வையில் எவ்வித மதிப்பையும் பெற்றுத்தருவதாக இல்லை.
எனவேதான், “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்,” என்று இயேசு சொல்லுகிறார். கடவுளுடைய சேவையை உங்களுடைய வாழ்க்கையில் முதலாவது வைப்பதன் மூலம் இது செய்யப்படுகிறது. இவ்விதம் கடவுளுடன் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் நன்மதிப்பையும் அல்லது அதன் மகத்தான நற்பலன்களையும் எவராலும் எடுத்துப்போட முடியாது. இயேசு மேலுமாக கூறுகிறார்: “உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”
பொருளாசையாகிய கண்ணியைக் குறித்துத் தொடர்ந்து பேசுபவராய், இயேசு இந்த உவமையைச் சொல்லுகிறார்: “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.” சரியாக செயல்படும் கண் சரீரத்துக்கு இருண்ட இடத்தில் கொழுத்தி வைக்கப்பட்ட விளக்கு போல இருக்கிறது. ஆனால் சரியாக பார்ப்பதற்குக் கண் தெளிவாயிருக்க வேண்டும், அதாவது பார்வை ஒரு காரியத்தினிடமாக ஒருமுகப்படுத்தியதாயிருக்க வேண்டும். ஒருமுகப்படாத பார்வையுடைய கண் காரியங்களைத் தவறாகக் கணிக்கிறது, பொருள் சம்பந்தமான காரியங்களைக் கடவுளுடைய சேவைக்கு முன்னால் வைக்கச் செய்கிறது, இதன் விளைவாக “முழு சரீரமும்” இருளடைகிறது.
இந்தக் காரியத்தை இயேசு ஒரு பலமான உதாரணத்துடன் உச்சக்கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.”
இந்தப் புத்திமதியைக் கொடுத்த பின்பு, அவர்கள் கடவுளுடைய சேவையை முதலாவது வைப்பார்களானால், அவர்களுடைய பொருளாதார தேவைகளைக் குறித்து கவலைப்படவேண்டியதில்லை என்று தம்முடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உறுதியளிக்கிறார். “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்,” என்கிறார் அவர். “அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்.” பின்பு அவர் கேட்கும் கேள்வி: “அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”
அடுத்து, இயேசு, காட்டுப் புஷ்பங்களைக் குறிப்பிட்டு, “சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை,” என்றார். தொடர்ந்து கூறுகிறார்: “அற்ப விசுவாசிகளே! . . . காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?”
எனவே இயேசு இப்படியாக முடிக்கிறார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதீர்கள். . . . இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாதவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” மத்தேயு 6:1–34; 26:36–45.
◆ஜெபத்தின்பேரில் இயேசு என்ன போதனைகளைக் கொடுத்தார்?
◆பரலோக பொக்கிஷங்கள் ஏன் மேன்மையானவை? அவற்றை எப்படி அடையலாம்?
◆ஒருவர் பொருளாசையைத் தவிர்ப்பதற்கு என்ன உவமைகள் கொடுக்கப்பட்டன?
◆கவலைப்படவேண்டிய அவசியமில்லை என்று இயேசு ஏன் சொன்னார்? (w86 11⁄1)