கடவுள்மீது உங்கள் நம்பிக்கை எந்தளவு உறுதியாக இருக்கிறது?
‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை [தொடர்ந்து] . . . தேடுங்கள்.’—மத்தேயு 6:33.
1, 2. வேலை சம்பந்தமாக ஓர் இளைஞன் என்ன நடவடிக்கை எடுத்தான், ஏன்?
சபையில் அதிக உபயோகமுள்ளவனாக இருப்பதற்கு ஓர் இளைஞன் விரும்பினான். ஆனால் அவனுடைய வேலையோ தவறாமல் கூட்டங்களுக்குச் செல்வதற்குத் தடையாக இருந்தது. இந்தப் பிரச்சினையை அவன் எப்படித் தீர்த்தான்? தனது வாழ்க்கையை எளிமையாக்கினான், வேலையை ராஜினாமா செய்தான். சில காலம் கழித்து, கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடைஞ்சலாக இல்லாத வேறொரு வேலை அவனுக்குக் கிடைத்தது. முன்பைவிட இப்பொழுது அவனுக்குக் குறைந்த வருமானமே கிடைக்கிறது, ஆனாலும் அவன் தனது குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறான், சபைக்கும் அதிக ஆதரவாய் இருக்கிறான்.
2 அந்த இளைஞன் ஏன் இத்தகைய மாற்றங்களைச் செய்தான் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? அவனுடைய சூழ்நிலையில் நீங்கள் இருந்திருந்தால் அப்படிச் செய்திருப்பீர்களா? கிறிஸ்தவர்கள் அநேகர் அப்படிச் செய்திருப்பது பாராட்டுக்குரியது; “முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [தொடர்ந்து] தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்ற இயேசுவின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்திருப்பதை அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன. (மத்தேயு 6:33) பாதுகாப்புக்காக இந்த உலகத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைப்பதில்லை, மாறாக யெகோவாவின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.—நீதிமொழிகள் 3:23, 26.
3. கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவது நடைமுறையானதா என ஏன் சிலர் யோசிக்கலாம்?
3 நாம் வாழும் கடினமான காலங்களைப் பார்க்கையில், அந்த இளைஞன் எடுத்த தீர்மானம் ஞானமானதா என சிலர் யோசிக்கலாம். இன்று, மனிதகுலத்தில் ஒரு பாகத்தினர் கொடிய வறுமையில் வாடுகிறார்கள், மற்றவர்களோ இதுவரை யாருமே அனுபவித்திராத அளவுக்கு செல்வச் செழிப்பில் மிதக்கிறார்கள். ஏழை நாடுகளில் வசிக்கும் மக்கள் பெரும்பாலோர் தங்களுடைய வாழ்க்கையைச் சற்று செளகரியமாக்கும் எந்தவொரு வாய்ப்பையும் சட்டென பிடித்துக்கொள்கிறார்கள். மறுபட்சத்தில், பணக்கார நாடுகளில் வாழும் பலர், பொருளாதார சரிவுகள், வேலை வாய்ப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகிற முதலாளிகள் போன்ற அழுத்தங்கள் மத்தியிலும் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தைக் காத்துக்கொள்ள போராடுகிறார்கள். பிழைப்புக்காக இப்படியெல்லாம் போராட வேண்டியிருப்பதைப் பார்க்கையில், ‘ராஜ்யத்தை முதலாவது தேடுவது இன்றும்கூட நடைமுறையானதா?’ என சிலர் யோசிக்கலாம். இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிப்பதற்கு, இயேசுவின் செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
‘கவலைப்படுவதை நிறுத்துங்கள்’
4, 5. கடவுளுடைய மக்கள் அன்றாட வாழ்க்கைக்காக மிதமிஞ்சி கவலைப்படாதிருப்பது நியாயமானதே என்பதை இயேசு எவ்வாறு எடுத்துக்காட்டினார்?
4 இயேசு கலிலேயாவில் இருந்தபோது, பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த திரளான மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். (மத்தேயு 4:25) அவர்களில் அநேகர் செல்வந்தர்களாக இல்லை. பெரும்பாலோர் ஏழைகளாகவே இருந்தார்கள். என்றாலும், பொருட்செல்வத்தைச் சேர்த்து வைப்பதற்கு அல்ல, ஆனால் அதைவிட மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றை, அதாவது ஆன்மீகப் பொக்கிஷத்தை, சேர்த்து வைப்பதற்கே முதலிடம் கொடுக்கும்படி இயேசு அவர்களுக்கு அறிவுரை கூறினார். (மத்தேயு 6:19-21, 24) அவர் இவ்வாறு கூறினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் [“கவலைப்படுவதை நிறுத்துங்கள்,” NW] என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?”—மத்தேயு 6:25.
5 இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோருக்கு, அவருடைய வார்த்தைகள் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகத் தொனித்திருக்கலாம். கடினமாக வேலை செய்யாதிருந்தால் தங்களுடைய குடும்பத்தினர் கஷ்டப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். என்றாலும், பறவைகளைப் பற்றி இயேசு அவர்களுக்கு நினைப்பூட்டினார். அவை அந்தந்த நாளுக்காக பாடுபட வேண்டியிருக்கிறது, இருந்தாலும் அந்தப் பறவைகளை யெகோவா கவனித்துக்கொள்கிறார். காட்டுப்புஷ்பங்களை யெகோவா கவனித்துக்கொள்கிற விதத்தையும், சாலொமோனுடைய எல்லா மகிமையையும் விஞ்சுகிற அதன் அழகையும் இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். பறவைகளையும் புஷ்பங்களையும் யெகோவா கவனித்துக்கொள்கிறாரென்றால், இன்னும் எந்தளவு நம்மைக் கவனித்துக்கொள்வார்? (மத்தேயு 6:26-30) இயேசு கூறியபடி, நம் உயிரைக் காப்பதற்கு நாம் வாங்கும் உணவுப்பொருள்களைக் காட்டிலும், நம் உடலை மறைப்பதற்கு நாம் வாங்கும் உடையைக் காட்டிலும், நமது உயிரும் உடலும் மிகமிக முக்கியமானவை. வெறும் உணவுக்காகவும் உடைக்காகவும் நம்முடைய எல்லா முயற்சிகளையும் அர்ப்பணித்துவிட்டு யெகோவாவுக்குச் சேவை செய்ய அத்தியாவசியமான எதுவும் நம்மிடம் இல்லை என்றால், வாழ்க்கையின் நோக்கத்தையே தவறவிட்டவர்களாக இருப்போம்.—பிரசங்கி 12:13.
சமநிலையான கண்ணோட்டம்
6. (அ) கிறிஸ்தவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது? (ஆ) கிறிஸ்தவர்கள் யார்மீது முழு நம்பிக்கை வைக்கிறார்கள்?
6 ஆனால், குடும்பத்திற்குத் தேவையானவற்றை ஏதாவதொரு வழியில் கடவுள் தருவார் என்று எண்ணிக்கொண்டு வேலை செய்யாமல் வெறுமனே காத்திருக்கும்படி அந்த ஜனக்கூட்டத்தாரிடம் இயேசு சொல்லவில்லை. பறவைகளும்கூட தங்களுக்காகவும் தங்களுடைய குஞ்சுகளுக்காகவும் உணவு தேட வேண்டியிருக்கிறது. ஆகவே, சாப்பிட வேண்டுமானால் கிறிஸ்தவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. கிறிஸ்தவ வேலையாட்களும் அடிமைகளும் தங்களுடைய எஜமான்களுக்காகக் கடுமையாய் உழைக்க வேண்டியிருந்தது. (2 தெசலோனிக்கேயர் 3:10-12; 1 தீமோத்தேயு 5:8; 1 பேதுரு 2:18) அப்போஸ்தலன் பவுலும்கூட தனது தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக அநேக சமயங்களில் கூடாரம்பண்ணுகிற தொழிலை செய்தார். (அப்போஸ்தலர் 18:1-4; 1 தெசலோனிக்கேயர் 2:9) என்றாலும், வேலைதான் தங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் என அந்தக் கிறிஸ்தவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்தார்கள். அதன் விளைவாக, பிறர் அனுபவித்திராத மனசமாதானத்தை அனுபவித்தார்கள். சங்கீதக்காரன் இவ்வாறு கூறினார்: “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள்.”—சங்கீதம் 125:1.
7. யெகோவாமீது உறுதியான நம்பிக்கை வைக்காத ஒருவர் என்ன கருதக்கூடும்?
7 யெகோவாமீது உறுதியான நம்பிக்கை வைக்காதவர்கள் வேறு விதமாக நினைக்கக்கூடும். பொருட்செல்வமே பாதுகாப்பு தரும் என பெரும்பாலோர் கருதுகிறார்கள். அதனால்தான், பிள்ளைகள் தங்களுடைய இளமைப் பருவத்தில் பெரும்பாலான காலத்தை உயர் கல்விக்கு அர்ப்பணிப்பது நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலைக்கு அவர்களைத் தயார்படுத்துமென நினைத்து, பெற்றோர்கள் அவர்களை பெரிய படிப்பு படிக்க ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். வருத்தகரமாக, இப்படி அர்ப்பணிக்கப்படுகிற நேரமும் முயற்சியும் அதிக வேதனையையே அளித்திருக்கின்றன. ஆம், கிறிஸ்தவக் குடும்பங்களின் பிள்ளைகள் சிலர் பொருளாதார காரியங்கள்மீது நாட்டங்கொண்டு ஆன்மீகக் காரியங்கள்மீது கவனத்தை ஊன்றவைக்கத் தவறியிருக்கிறார்கள்.
8. கிறிஸ்தவர்கள் என்ன சமநிலையைக் காத்துக்கொள்கிறார்கள்?
8 முதல் நூற்றாண்டைப் போல், இயேசுவின் ஆலோசனை இன்றும் பொருந்துகிறது என்பதை ஞானமுள்ள கிறிஸ்தவர்கள் உணருகிறார்கள், அதனால் சமநிலையைக் காத்துக்கொள்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். வேதப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்காக வேலையில் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தாலும், அதிமுக்கியமான ஆன்மீக விஷயங்களை அவர்கள் ஒருபோதும் கவனியாமல் விட்டுவிடுவதில்லை.—பிரசங்கி 7:12.
‘ஒருபோதும் கவலைப்படாதீர்கள்’
9. யெகோவாமீது முழு நம்பிக்கை வைப்போருக்கு இயேசு எவ்வாறு உறுதி அளிக்கிறார்?
9 மலைப்பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களை இயேசு இவ்வாறு அறிவுறுத்தினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் [“ஊக்கமாய்,” NW] நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:31, 32) ஊக்கமூட்டும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்! யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்தால், அவர் எப்பொழுதும் நம்மை ஆதரிப்பார். என்றாலும், இயேசுவின் வார்த்தைகள் சிந்தையைத் தூண்டுவிப்பதாயும் இருக்கின்றன. பொருளாதார காரியங்களை “ஊக்கமாய்” நாடிச்சென்றால், நம்முடைய சிந்தை ‘அஞ்ஞானிகளுடைய,’ அதாவது உண்மை கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுடைய, சிந்தையைப் போல் இருக்கும் என்பதை அவை நமக்கு நினைப்பூட்டுகின்றன
10. இளைஞன் ஒருவன் ஆலோசனைக்காக இயேசுவிடம் வந்தபோது, அவன் அதிகமாய் நேசித்த காரியத்தை இயேசு எப்படி வெளிப்படுத்தினார்?
10 நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டுமென பெரும் செல்வந்தனான இளைஞன் ஒருவன் இயேசுவிடம் கேட்டான். அப்போது இன்னமும் அமலிலிருந்த நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை இயேசு அவனுக்கு நினைப்பூட்டினார். அதற்கு அந்த இளைஞன், “இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன”? என்று இயேசுவிடம் கேட்டான். இயேசுவின் பதிலைக் கேட்ட அநேகர், அது நடைமுறைக்கு ஒத்துவராது என நினைத்திருக்கலாம். அவர் சொன்னதாவது: “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா.” (மத்தேயு 19:16-21) தன்னிடமிருந்த செல்வத்தை இழக்க மனமில்லாமல் அந்த இளைஞன் கவலையுடன் திரும்பிச் சென்றான். யெகோவாவை அவன் நேசித்திருந்தாலும், தனது உடைமைகளையே இன்னும் அதிகமாக நேசித்தான்.
11, 12. (அ) செல்வத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் என்ன வார்த்தைகளை இயேசு கூறினார்? (ஆ) யெகோவாவுக்குச் சேவை செய்ய பொருளுடைமைகள் எப்படி ஒரு தடையாக இருக்கக்கூடும்?
11 அந்தச் சமயத்தில்தான் இயேசு எதிர்பாராத ஒன்றைச் சொன்னார்: ‘ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது, . . . ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்.’ (மத்தேயு 19:23, 24) செல்வந்தர் எவருமே ராஜ்யத்தைச் சுதந்தரிக்க முடியாதென இயேசு இங்கே அர்த்தப்படுத்தினாரா? இல்லை, ஏனென்றால் அவர் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “தேவனாலே எல்லாம் கூடும்.” (மத்தேயு 19:25, 26) சொல்லப்போனால், அந்தச் சமயத்தில் யெகோவாவின் உதவியால் செல்வந்தர் சிலர் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாக ஆகியிருந்தார்கள். (1 தீமோத்தேயு 6:17) என்றாலும், ஆச்சரியமூட்டும் அந்த வார்த்தைகளை நல்ல காரணத்தோடுதான் இயேசு கூறினார். அதை ஓர் எச்சரிக்கையாகக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
12 செல்வந்தனான அந்த இளைஞனைப் போல் ஒருவருக்குத் தனது உடைமைகள்மீது அதிக பற்று இருந்தால், யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்க அவை ஒரு தடையாக ஆகிவிடலாம். ஏற்கெனவே செல்வந்தராய் இருப்பவருடைய விஷயத்திலும் ‘ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்களுடைய’ விஷயத்திலும் இது உண்மையாக இருக்கலாம். (1 தீமோத்தேயு 6:9, 10) பொருளுடைமைகள்மீது ஒருவர் அதிக நம்பிக்கை வைத்தால், ‘ஆன்மீக தேவையைக் குறித்த உணர்வு’ அவரிடம் குறைந்துபோய்விடலாம். (மத்தேயு 5:3, NW) அதன் விளைவாக, யெகோவாவின் உதவி தனக்குத் தேவை என்ற உணர்வும் அவரிடம் குறைந்துபோய்விடலாம். (உபாகமம் 6:10-12) சபையார் தனக்கு விசேஷக் கவனிப்பு தர வேண்டுமென அவர் எதிர்பார்க்கத் தொடங்கிவிடக்கூடும். (யாக்கோபு 2:1-4) அதோடு, யெகோவாவுக்குச் சேவை செய்வதற்குப் பதிலாக தனது செல்வத்தை அனுபவிப்பதிலேயே அவர் பெரும்பாலான நேரத்தைக் கழித்துவிடக்கூடும்.
சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
13. லவோதிக்கேயா சபையாருக்கு இருந்த தவறான கண்ணோட்டம் என்ன?
13 பொருளுடைமைகளைப் பற்றி தவறான கண்ணோட்டம் வைத்திருந்த ஒரு தொகுதியினர் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த லவோதிக்கேயா சபையார் ஆவர். அவர்களிடம் இயேசு இவ்வாறு கூறினார்: ‘நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறாய்.’ லவோதிக்கேயா சபையினரை அத்தகைய பரிதபிக்கத்தக்க நிலைக்குக் கொண்டுவந்தது அவர்களுடைய செல்வம் அல்ல. ஆனால் யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக செல்வத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்ததே. அதன் விளைவாக, ஆன்மீக ரீதியில் அவர்கள் வெதுவெதுப்பாக இருந்தார்கள். சீக்கிரத்தில் இயேசு தமது வாயிலிருந்து ‘வாந்திபண்ணிப் போடும்’ நிலையில் அவர்கள் இருந்தார்கள்.—வெளிப்படுத்துதல் 3:14-17.
14. எபிரெய கிறிஸ்தவர்கள் பவுலின் பாராட்டைப் பெற ஏன் தகுதியானவர்களாய் இருந்தார்கள்?
14 மறுபட்சத்தில், துன்புறுத்தல் ஏற்பட்ட சமயத்தில் எபிரெய கிறிஸ்தவர்கள் காண்பித்த மனப்பான்மைக்காக பவுல் அவர்களைப் பாராட்டினார். அவர் இவ்வாறு கூறினார்: ‘கட்டப்பட்டிருப்பவர்களைக் குறித்து நீங்கள் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.’ (எபிரெயர் 10:34) அந்தக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய உடைமைகளை இழந்ததால் நிலைகுலைந்துவிடவில்லை. தொடர்ந்து சந்தோஷமாகவே இருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் தங்களுடைய விலையேறப்பெற்ற உடைமையை, அதாவது ‘மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரத்தை,’ உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார்கள். இயேசு கூறிய உவமையில் வரும் வியாபாரியைப் போல்—விலையேறப்பெற்ற ஒரேவொரு முத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்த அந்த வியாபாரியைப் போல்—என்ன தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தாலும், ராஜ்ய நம்பிக்கையில் தாங்கள் வைத்திருக்கும் பிடியைத் தளரவிடாமல் உறுதியாக இருந்தார்கள். (மத்தேயு 13:45, 46) எப்பேர்ப்பட்ட சிறந்த மனப்பான்மை!
15. லைபீரியாவைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் எப்படி ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுத்தாள்?
15 இன்றைக்கு அநேகர் இதுபோன்ற அருமையான மனப்பான்மையை வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக, லைபீரியாவைச் சேர்ந்த ஓர் இளம் கிறிஸ்தவப் பெண்ணுக்கு பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இத்தகைய வாய்ப்பு வளமான எதிர்காலத்திற்கு ஒரு வழியென அந்நாட்டில் கருதப்படுகிறது. என்றாலும், ஒரு பயனியராக, அதாவது முழுநேர ஊழியராக, இருந்த அவளுக்கு தற்காலிக விசேஷப் பயனியராகச் சேவை செய்ய அழைப்பு வந்தது. முதலாவது ராஜ்யத்தைத் தேடுவதையும் முழுநேர சேவையில் நிலைத்திருப்பதையுமே அவள் தேர்ந்தெடுத்தாள். பயனியர் சேவையை ஆரம்பித்த மூன்றே மாதங்களில் அவளுக்கு 21 பைபிள் படிப்புகள் கிடைத்தன. அந்த இளம் சகோதரியும் அவளைப் போன்ற ஆயிரமாயிரம் பேரும் பொருளாதார ஆதாயங்களைத் துறந்துவிட்டு முதலாவது ராஜ்யத்தைத் தேடுகிறார்கள். பொருளாசைமிக்க இவ்வுலகில் அவர்களால் எப்படித் தொடர்ந்து இத்தகைய மனப்பான்மையைக் காண்பிக்க முடிகிறது? ஏராளமான நல்ல பண்புகளை அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இப்பொழுது நாம் ஆராயலாம்.
16, 17. (அ) யெகோவாமீது நம்பிக்கை வைக்க வேண்டுமானால், ஏன் தன்னடக்கம் முக்கியம்? (ஆ) கடவுளுடைய வாக்குறுதிகளில் நாம் ஏன் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
16 தன்னடக்கம் காண்பித்தல்: பைபிள் இவ்வாறு கூறுகிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே.” (நீதிமொழிகள் 3:5-7) சிலசமயங்களில், உலகத்தாருடைய கண்ணோட்டத்தில் ஒரு வழி சிறந்ததாகத் தோன்றலாம். (எரேமியா 17:9) என்றாலும், உண்மையுள்ள கிறிஸ்தவர் ஒருவர் வழிநடத்துதலுக்காக யெகோவாவை நோக்கியிருக்கிறார். (சங்கீதம் 48:14) ‘தன் வழிகளிலெல்லாம்’—சபை விஷயங்களில், கல்வி அல்லது உலகப்பிரகாரமான வேலை விஷயங்களில், பொழுதுபோக்கு விஷயங்களில், அல்லது வேறெந்த விஷயங்களிலும்—தன்னடக்கத்துடன் யெகோவாவின் அறிவுரையை நாடுகிறார்.—சங்கீதம் 73:24.
17 யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தல்: பவுல் இவ்வாறு கூறினார்: “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) யெகோவா தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா என்பதைக் குறித்து நாம் சந்தேகப்பட்டால், ‘இந்த உலகத்தை முழுமையாக அனுபவிப்பது’ நமக்கு ஒருவேளை சரியானதாகத் தோன்றக்கூடும். (1 கொரிந்தியர் 7:31, NW) மறுபட்சத்தில், நம்முடைய நம்பிக்கை பலமாக இருந்தால், ராஜ்யத்தை முதலாவது தேடுவதற்கு நாம் திடத்தீர்மானமாய் இருப்போம். பலமான நம்பிக்கையை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? இருதயப்பூர்வமாக இடைவிடாமல் ஜெபிப்பதன் மூலமாயும் தவறாமல் தனிப்பட்ட படிப்பு படிப்பதன் மூலமாயும் யெகோவாவிடம் நெருங்கி வருவதன் மூலமாயும் வளர்த்துக்கொள்ளலாம். (சங்கீதம் 1:1-3; பிலிப்பியர் 4:6, 7; யாக்கோபு 4:8) தாவீது ராஜாவைப் போல், நாம் இவ்வாறு ஜெபிக்கலாம்: “நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். . . . உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”—சங்கீதம் 31:14, 19.
18, 19. (அ) சுறுசுறுப்பாய் இருப்பது யெகோவாமீது நமக்குள்ள நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துகிறது? (ஆ) ஒரு கிறிஸ்தவர் தியாகங்கள் செய்ய ஏன் மனமுள்ளவராக இருக்க வேண்டும்?
18 யெகோவாவின் சேவையை ஊக்கமாய் செய்தல்: யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதையும் ஊக்கமாய் செயல்படுவதையும் பவுல் இணைத்துப் பேசினார். ‘உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையை [அதாவது, சுறுசுறுப்பை] காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.’ (எபிரெயர் 6:12) யெகோவாவின் சேவையில் நாம் சுறுசுறுப்பாக இருந்தால், அவர் நம்மை ஆதரிப்பார். அந்த ஆதரவு நம்மோடு இருக்கும் ஒவ்வொரு சமயமும், அவர்மீது நம்முடைய நம்பிக்கை பலப்படுகிறது, நாம் “உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும்” ஆகிறோம். (1 கொரிந்தியர் 15:58) நம்முடைய விசுவாசம் புதுப்பிக்கப்படுகிறது, நம்முடைய நம்பிக்கையும் உறுதிப்படுகிறது.—எபேசியர் 3:16-19.
19 தியாகங்கள் செய்ய மனமுள்ளவர்களாய் இருத்தல்: இயேசுவைப் பின்பற்றுவதற்காக பவுல் நல்ல வேலை வாய்ப்பை தியாகம் செய்தார். பொருளாதார ரீதியில் அவருடைய வாழ்க்கை சிலசமயங்களில் கடினமாக இருந்தபோதிலும், அவர் சரியான தெரிவையே செய்தார். (1 கொரிந்தியர் 4:11-13) யெகோவா நமக்குச் சுகபோக வாழ்க்கை தருவதாக வாக்குக் கொடுப்பதில்லை, சிலசமயம் அவருடைய ஊழியர்கள் கஷ்டங்களைச் சகித்திருக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய வாழ்க்கையை எளிமையாக்குவதற்கும் தியாகங்கள் செய்வதற்கும் மனமுள்ளவர்களாய் இருப்பது யெகோவாவுக்குச் சேவை செய்ய எந்தளவு நாம் தீர்மானமாய் இருக்கிறோம் என்பதைக் காண்பிக்கிறது.—1 தீமோத்தேயு 6:6-8.
20. ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதற்குப் பொறுமை ஏன் அவசியம்?
20 பொறுமையாய் இருத்தல்: சீஷனாகிய யாக்கோபு சக கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்: “சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள்.” (யாக்கோபு 5:7) பரபரப்பான இந்த உலகத்தில், பொறுமையாக இருப்பது கஷ்டம்தான். எல்லாம் சட்டென்று நடக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். ஆனால் ‘விசுவாசத்தின் மூலமும் பொறுமையின் மூலமும் வாக்குறுதிகளைச் சுதந்தரிக்கிறவர்களைப்’ பின்பற்றும்படி பவுல் நம்மை அறிவுறுத்துகிறார். (எபிரெயர் 6:11) எனவே, யெகோவாவுக்காக காத்திருக்க மனமுள்ளவர்களாயிருங்கள். பரதீஸ் பூமியில் நித்திய வாழ்க்கைக்காக காத்திருப்பது நிச்சயம் தகுந்ததே!
21. (அ) ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுக்கும்போது நாம் எதைக் காட்டுகிறோம்? (ஆ) அடுத்தக் கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
21 ஆம், ராஜ்யத்தை முதலாவது தேடும்படி இயேசு கொடுத்த அறிவுரை நடைமுறையானதே. அப்படிச் செய்யும்போது, யெகோவாமீது உண்மையிலேயே நாம் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறோம்; ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் ஒரே வழியைத் தேர்ந்தெடுக்கிறோம். என்றாலும், ‘முதலாவது தேவனுடைய . . . நீதியை [தொடர்ந்து] தேடும்படியும்’ இயேசு நமக்கு அறிவுரை கூறினார். அவர் கொடுத்த அந்த ஊக்கமூட்டுதல் முக்கியமாக இன்றைக்கு ஏன் தேவை என்பதைப் பின்வரும் கட்டுரையில் பார்க்கலாம்.
உங்களால் விளக்க முடியுமா?
• பொருளாதார காரியங்கள் சம்பந்தமாக, என்ன சமநிலையை வைக்கும்படி இயேசு நம்மை ஊக்குவித்தார்?
• ஒட்டகம் மற்றும் ஊசியின் காது பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
• முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடுவதற்கு உதவும் கிறிஸ்தவப் பண்புகள் யாவை?
[பக்கம் 21-ன் படம்]
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அநேகர் ஏழைகள்
[பக்கம் 23-ன் படம்]
செல்வந்தனான அந்த இளைஞன், கடவுளைவிட தனது பொருளுடைமைகளையே அதிகம் நேசித்தான்
[பக்கம் 23-ன் படம்]
இயேசுவின் உவமையில் வரும் வியாபாரி விலையேறப்பெற்ற ஒரேவொரு முத்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார்
[பக்கம் 24-ன் படம்]
யெகோவாவின் சேவையில் நாம் சுறுசுறுப்பாக இருந்தால், அவர் நம்மை ஆதரிப்பார்