ராஜ்யத்தையும் கடவுளுடைய நீதியையும் தொடர்ந்து தேடுங்கள்
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33.
1, 2. வேதபாரகரும் பரிசேயர்களும் தங்களில்தாமே நல்லவையாக இருக்கும் செயல்களை என்னவாக மாற்றினர்? இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன எச்சரிப்பு கொடுத்தார்?
வேதபாரகரும் பரிசேயரும் தங்களுடைய சொந்த வழியில் நீதியை தேடினர், அது கடவுளுடைய வழியாக இல்லை. அது மட்டுமல்ல, அவர்கள் கிரியைகளை செய்த போது, அவைகள் நல்லவையாக இருந்த போதிலும், அவர்கள் மனிதர் காணும்படி அவைகளை மாய்மாலமான செயல்களாக மாற்றினர். அவர்கள் கடவுளை அல்ல, தங்கள் சொந்த போலித் தோற்றத்தையே சேவித்தனர். அப்படிப்பட்ட போலி நடிப்பைக் குறித்து இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார்: “மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.”—மத்தேயு 6:1.
2 ஏழைகளுக்கு கொடுப்பவர்களை யெகோவா போற்றுகிறார்—ஆனால் பரிசேயர்கள் கொடுத்தது போல கொடுப்பவர்களை அல்ல. அவர்களைப் பார்த்துப் பின்பற்றுவதற்கு எதிராக இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார்: “ஆகையால் நீ தர்மஞ்செய்யும் போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 6:2.
3. (எ) என்ன விதத்தில் வேதபாரகரும் பரிசேயர்களும் அவர்கள் கொடுத்ததற்காக முழு பலனை அடைந்துவிட்டிருந்தனர்? (பி) கொடுப்பதைப் பற்றியதில் இயேசுவின் நிலைநிற்கை எவ்வாறு வித்தியாசமானதாக இருந்தது?
3 ‘அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று’ என்ற கிரேக்க பதம் (a–peʼkho) வியாபார ரசீதுகளில் அடிக்கடி காணப்பட்டது. மலைப்பிரசங்கத்தில் அதனுடைய உபயோகம் “அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று” குறிப்பிடுகிறது, அதாவது, “அவர்கள் தங்கள் பலனுக்கான ரசீதில் கையொப்பமிட்டு விட்டனர்: ஏற்கெனவே ஒரு ரசீதைப் பெற்றுக்கொண்டுவிட்டாற் போல் அவர்கள் தங்கள் பலனை பெறுவதற்கான உரிமையை பெற்றுவிட்டனர்.” (W. E. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டின் விளக்க அகராதி) ஏழைகளுக்கான வெகுமதிகள் தெருக்களில் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டன. ஜெப ஆலயங்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. வணக்கத்தின் போது ரபீக்களுக்கு பக்கத்தில் இருக்கைகளைக் கொண்டிருப்பதன் மூலம் பெரிய தொகையை அளித்தவர்கள் விசேஷமாக மதிக்கப்பட்டனர். மனிதர்கள் காண வேண்டுமென்று அவர்கள் கொடுத்தனர். அவர்கள் அவ்விதமாக காணப்பட்டு, மனிதர்களால் மகிமைப்படுத்தப்பட்டனர்; ஆகையால், தங்களுடைய அளிப்பிற்கு பதிலாக கிடைத்த ரசீதில் “முழு பலனை அடைந்தாகிவிட்டது” என்று அவர்கள் முத்திரையிட்டுக் கொள்ளலாம். இயேசுவின் நிலைநிற்கை எவ்வளவு வித்தியாசமானதாக இருந்தது! “அந்தரங்கத்தில் கொடு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”—மத்தேயு 6:3, 4; நீதிமொழிகள் 19:17.
கடவுளைப் பிரியப்படுத்தும் ஜெபங்கள்
4. பரிசேயர்களின் ஜெபம் ஏன் இயேசுவை அந்த மனிதர்களை மாய்மாலக்காரர் என அழைக்கும்படி செய்தது?
4 யெகோவா அவரை நோக்கி செய்யப்படும் ஜெபங்களை போற்றுகிறார்—ஆனால் பரிசேயர்கள் ஜெபித்தது போல் அல்ல. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “அன்றியும் நீ ஜெபம்பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீடுகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 6:5) குறிப்பிட்ட நேரங்களில், அவர்கள் எங்கிருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒப்புவிப்பதற்கு பரிசேயர்கள் அநேக ஜெபங்களைக் கொண்டிருந்தனர். சட்டப்படி அவர்கள் அவைகளை தனிமையாக இருக்கும் போது சொல்ல வேண்டும். ஆனால், நடைமுறையில், ஜெபத்திற்கான நேரம் வந்தபோது நாலாபுறமும் செல்லும் ஆட்களால் கவனிக்கப்பட “வீதிகளின் சந்திப்புகளில்” தாங்கள் இருக்கும்படி அமைத்துக் கொண்டார்கள்.
5. (எ) என்ன கூடுதலான பழக்கங்கள் பரிசேயர்களின் ஜெபங்கள் கடவுளால் கேட்கப்படாதபடி ஆக்கியது? (பி) இயேசு தம் மாதிரி ஜெபத்தில் என்ன காரியங்களை முதலில் வைத்தார்? இன்று ஜனங்கள் அதோடு இணக்கமாக இருக்கிறார்களா?
5 பொய்யான பரிசுத்தத் தன்மையை வெளிக்காட்டும் வகையில் “பார்வைக்கு நீண்ட ஜெபம்” செய்வர். (லூக்கா 20:47) வாய்மொழியான பாரம்பரியம் ஒன்று இவ்வாறு சொன்னது: “பண்டைய கால கடவுள் பற்றுள்ள மனிதர்கள் டெஃபிலா [ஜெபம்] சொல்வதற்கு முன்பு ஒரு மணிநேரம் காத்திருப்பர்.” (மிஷ்னா) அதற்குள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கடவுள் பற்றைப் பார்த்து வியப்படைய முடியும்! அப்படிப்பட்ட ஜெபங்கள் அவர்களுடைய சொந்த தலைகளுக்கு மேல்கூட செல்லவில்லை. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாமலும், தனிமையாக இருக்கையில் ஜெபம் செய்யும்படியும் இயேசு கூறினார், அவர் அவர்களுக்கு ஓர் எளிய மாதிரி ஜெபத்தை கொடுத்தார். (மத்தேயு 6:6–8; யோவான் 14:6, 14; 1 பேதுரு 3:12) இயேசுவின் மாதிரி ஜெபம் முதலாவதான காரியங்களை முதலாவதாக வைத்தது: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் . . . செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9–13) வெகு சில ஜனங்களே இன்று கடவுளுடைய பெயரை அறிந்திருக்கின்றனர், அது பரிசுத்தப்பட வேண்டுகோள் மிகக் குறைவே. இவ்வாறு அவர்கள் அவரை ஒரு பெயரற்ற கடவுளாக ஆக்குகின்றனர். கடவுளுடைய ராஜ்யம் வருவதாக? அது ஏற்கெனவே இங்கிருக்கிறது, அவர்களுக்குள் இருக்கிறது என்று அநேகர் நினைக்கின்றனர். அவருடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் ஒருவேளை ஜெபிக்கலாம், ஆனால் அநேகர் தங்கள் சொந்த சித்தத்தையே செய்கின்றனர்.—நீதிமொழிகள் 14:12.
6. யூத உபவாசங்கள் அர்த்தமற்றது என்று இயேசு ஏன் கண்டனம் செய்தார்?
6 உபவாசம் செய்வதை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்—ஆனால் பரிசேயர்கள் அதை செய்த விதமாக அல்ல. வேதபாரகரும் பரிசேயர்களும் செய்த தானதர்மங்கள், ஜெபம் ஆகியவற்றை நிராகரித்தது போல, இயேசு அவர்களுடைய உபவாசத்தையும் அர்த்தமற்றதாக நிராகரித்தார்: “நீங்கள் உபவாசிக்கும் போது, மாயக்காரரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 6:16) உபவாசிக்கும் போது பரிசேயர்கள் தங்களை கழுவிக் கொள்ளவோ அல்லது அபிஷேகம் செய்து கொள்ளவோ கூடாது. ஆனால் தங்கள் தலைகள் மீது சாம்பலை பூசிக் கொள்ள வேண்டும் என்று அவர்களுடைய வாய்மொழியான பாரம்பரியங்கள் குறிப்பிடுகிறது. உபவாசம் செய்யாத போது யூதர்கள் ஒழுங்காக தங்களை கழுவிக்கொண்டு, உடலில் எண்ணெய் பூசி வந்தனர்.
7. (எ) உபவாசிக்கும் போது இயேசுவை பின்பற்றுபவர்கள் தங்களை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்? (பி) உபவாசத்தைக் குறித்து ஏசாயாவின் நாட்களில் யெகோவா எதை விரும்பினார்?
7 உபவாசத்தைக் குறித்து இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீயோ உபவாசிக்கும் போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.” (மத்தேயு 6:17, 18) ஏசாயாவின் நாட்களில் பின்வாங்கிச் சென்ற யூதர்கள் உபவாசம் செய்வதிலும், தங்களுடைய உடல்களை வேதனைப்படுத்தி, தங்கள் தலைகளை குனிந்து, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், பசியாயிருப்பவர்களுக்கு போஜனம் கொடுக்கவும், வீடு இல்லாதவர்களுக்கு இடம் அளிக்கவும், நிர்வாணமாய் இருந்தவர்களுக்கு உடை கொடுக்கவும் வேண்டுமென்று யெகோவா விரும்பினார்.—ஏசாயா 58:3–7.
பரலோக பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள்
8. பரிசேயர்களும் சதுசேயர்களும் கடவுளுடைய அங்கீகாரத்தை எவ்வாறு பெறுவது என்பதை கவனிக்கத் தவறும்படி செய்வித்தது என்ன? பவுலால் பின்னர் சொல்லப்பட்ட என்ன நியமத்தை அவர்கள் புறக்கணித்தனர்?
8 நீதியைத் தேடுவதில் வேதபாரகரும் பரிசேயர்களும் கடவுளுடைய அங்கீகாரத்தை எவ்வாறு பெறுவது என்பதை கவனியாமல், மனிதர்களின் புகழின் பேரில் கருத்தாயிருந்தனர். மனிதர்களுடைய பாரம்பரியத்தில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்களாய் எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையை அவர்கள் ஒருபுறம் வைத்துவிட்டனர். பரலோக பொக்கிஷத்துக்குப் பதிலாக அவர்கள் தங்கள் இருதயங்களை பூமிக்குரிய ஸ்தானத்தின் பேரில் வைத்தனர். அநேக வருடங்களுக்குப் பின்பு பரிசேயனாக இருந்து மாறிய கிறிஸ்தவன் எழுதிய ஓர் எளிமையான உண்மையை அவர்கள் புறக்கணித்து விட்டனர்: “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:23, 24.
9. பூமிக்குரிய பொக்கிஷங்களை என்ன அபாயங்கள் பயமுறுத்தலாம்? ஆனால் உண்மையான பொக்கிஷத்தை எது பாதுகாப்பானதாக வைக்கும்?
9 யெகோவா தம் பேரில் உங்களுக்கு இருக்கும் பக்தியில் அக்கறையுள்ளவராயிருக்கிறார், உங்கள் வங்கி கணக்கில் அல்ல. உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். உங்களுடைய பொக்கிஷத்தை துருவும் பூச்சியும் அழித்துவிட முடியுமா? மண் சுவர்கள் வழியே கள்ளர்கள் தோண்டி அதை திருட முடியுமா? அல்லது இந்த நவீன கால பொருளாதார நெருக்கடியில் பணவீக்கம் அதன் வாங்கும் திறனை குறைத்து விடுமா அல்லது பங்கு-சந்தை வீழ்ச்சி அதை அழித்து விடுமா? அதிகரித்துக் கொண்டே செல்லும் குற்றச் செயல் உங்கள் பொக்கிஷத்தை திருடி விடச் செய்யுமா? அது பரலோகத்தில் சேர்த்து வைக்கப்பட்டால் அப்படியாகாது. உங்களுடைய கண் உங்களுடைய முழு உடலையும் பிரகாசிக்கச் செய்யும் ஒரு விளக்கு—எளிமையானதாகவும், கடவுளுடைய ராஜ்யத்தின் பேரிலும் அவருடைய நீதியின் பேரிலும் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தால் அப்படியாகாது. செல்வங்கள் மறைந்து போகும் தன்மையுடையது. “ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற் போகும் பொருள் மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப் போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாய்ப் பறந்து போம்.” (நீதிமொழிகள் 23:4, 5) ஆகையால் செல்வத்தின் பேரில் ஏன் உறக்கத்தை இழக்க வேண்டும்? “செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.” (பிரசங்கி 5:12) இயேசுவின் எச்சரிப்பை நினைவுகூருங்கள்: “தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.”—மத்தேயு 6:19–24.
கவலையை மறைந்து போகச் செய்யும் விசுவாசம்
10. பொருள் உடைமைகளைக் காட்டிலும் உங்களுடைய விசுவாசத்தை கடவுள் பேரில் கொண்டிருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்? என்ன ஆலோசனையை இயேசு கொடுத்தார்?
10 உங்களுடைய விசுவாசம் தம் பேரில் இருக்கும்படியாக யெகோவா விரும்புகிறார், பொருள் உடைமைகளின் பேரில் அல்ல. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) ஆயிரக்கணக்கில் வங்கியில் இருக்கும் பணம் நோய்ப்பட்ட நுரையீரல்களை வேலை செய்ய வைப்பதற்கோ அல்லது சோர்வுற்ற இருதயத்தை இயக்குவிப்பதற்கோ முடியாது. “ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு தம் மலைப்பிரசங்கத்தில் தொடர்ந்து சொல்கிறார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?”—மத்தேயு 6:25.
11. இயேசு தம்முடைய அநேக உவமைகளை எங்கே கண்டார்? மலைப்பிரசங்கத்தில் இது எவ்வாறு காட்டப்படுகிறது?
11 உவமைகளைச் சொல்வதில் இயேசு கைத்தேர்ந்தவராக இருந்தார். அவர் பார்த்தவைகளில் எல்லாம் அவைகளைப் பற்றி சிந்தித்தார். ஒரு பெண் விளக்கை கொளுத்தி விளக்குத் தண்டின் மேல் வைப்பதைப் பார்த்து, அதை ஓர் உவமையாக மாற்றினார். ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பதை அவர் பார்த்தார்; அது ஓர் உவமையாக ஆனது. பிள்ளைகள் சந்தை வெளிகளில் விளையாடுவதை அவர் பார்த்தார்; அது ஓர் உவமையாக ஆனது. அதைப் போன்று தான் மலைபிரசங்கத்திலும். சரீரப்பிரகாரமான தேவைகளைப் பற்றிய கவலையைக் குறித்து அவர் பேசுகையில், பறவைகள் பறந்து திரிவதைப் பற்றியும், மலைப் பக்கங்களில் வில்லிப் பூக்கள் பரந்து கிடப்பதையும் பார்க்கையில் அவைகளிலிருந்து உவமைகளைச் சொன்னார். பறவைகள் விதைகளை விதைத்து அறுக்கின்றனவா? இல்லை. லில்லிப் பூக்கள் உழைத்து நூற்கின்றனவா? இல்லை. கடவுள் அவைகளை உண்டாக்கினார்; அவர் அவைகளை கவனித்துக் கொள்கிறார். நீங்களோ பறவைகளையும் லில்லிப் பூக்களையும் காட்டிலும் அதிக மதிப்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். (மத்தேயு 6:26, 28–30) அவர் அவருடைய குமாரனை உங்களுக்காக கொடுத்தார், அவைகளுக்காக அல்ல.—யோவான் 3:16.
12. (எ) பறவைகளையும் பூக்களையும் பற்றிய இயேசுவின் உவமைகள் இயேசுவின் சீஷர்கள் வேலை செய்ய வேண்டியதில்லை என்பதை அர்த்தப்படுத்துகிறதா? (பி) வேலையைப் பற்றியும் விசுவாசத்தைப் பற்றியும் என்ன குறிப்பை இயேசு சொன்னார்?
12 இயேசு இங்கு தம்மைப் பின்பற்றுபவர்கள் உணவுக்காகவும், தங்களை உடுத்திக் கொள்வதற்காகவும் வேலை செய்ய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை. (பிரசங்கி 2:24; எபேசியர் 4:28-ஐ பார்க்கவும்; 2 தெசலோனிக்கேயர் 3:10–12) அந்த இளவேனிற்கால காலையில், பறவைகள் உணவுக்காக கிண்டிக் கிளறிக் கொண்டும், காதல் செய்து கொண்டும், முட்டைகள் மீது உட்கார்ந்து கொண்டும் தங்கள் இளம் குஞ்சுகளுக்கு உணவூட்டிக் கொண்டும் இருந்தன. அவைகள் வேலை செய்து கொண்டிருந்தன. ஆனால் கவலையின்றி இருந்தன. பூக்களும்கூட தண்ணீர், சத்து ஆகியவற்றைத் தேடுவதற்காக தங்கள் வேர்களை மண்ணுக்குள் செலுத்திக் கொண்டும், சூரிய ஒளியை எட்டுவதற்கு தங்கள் இலைகளை நீட்டிக் கொண்டும் இருந்தன. மரிப்பதற்கு முன் அவைகள் முதிர்ச்சியடைந்து, மலர்ந்து தங்கள் விதைகளை விழச் செய்ய வேண்டியிருக்கிறது. அகைள் வேலை செய்து கொண்டிருந்தன, ஆனால் கவலையின்றி இருந்தன. கடவுள் பறவைகளையும் லில்லிப் பூக்களையும் பிழைப்பூட்டுகிறார். ‘அற்ப விசுவாசிகளே! தேவன் உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?’—மத்தேயு 6:30.
13. (எ) ஒருவருடைய வாழ்நாட்காலத்தை அதிகரிப்பதை பற்றி பேசுகையில் இயேசு பெளதிக அளவை உபயோகிப்பது ஏன் பொருத்தமானதாக இருந்தது? (பி) நீங்கள் எவ்வாறு உங்களுடைய வாழ்க்கையை முடிவற்ற ஆயிரக்கணக்கான மைல்கள் நீடிக்கலாம்?
13 ஆகையால் விசுவாசம் கொண்டிருங்கள். கவலைப்படாதிருங்கள். கவலை எதையும் மாற்றாது. “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என்று இயேசு கேட்டார். (மத்தேயு 6:27) ஆனால் இயேசு ஏன் பெளதிக அளவை, ஒரு முழத்தை, ஒரு வாழ்நாட்கால அளவுக்கு தொடர்புபடுத்தி பேசுகிறார்? மானிடர்களின் வாழ்நாட் காலத்தை ஒரு பயணத்துக்கு பைபிள் அடிக்கடி ஒப்பிடுகிறது; “பாவிகளுடைய வழி,” “நீதிமான்களுடைய பாதை,” ‘கேட்டுக்குப் போகிற விசாலமான வாசல்’ போன்ற சொற்றொடர்களை உபயோகிக்கிறது. (சங்கீதம் 1:1; நீதிமொழிகள் 4:18; மத்தேயு 7:13, 14) அன்றாடக தேவைகளைப் பற்றிய கவலை “ஒரு முழம்” என்று சொல்வதைப் போல ஒருவனுடைய வாழ்க்கையை சிறிதளவு கூட நீடிக்காது. ஆனால் உங்களுடைய வாழ்க்கையை முடிவற்ற ஆயிரக்கணக்கான மைல்கள் நீடிப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. “என்னத்தை உண்போம்?” அல்லது “என்னத்தைக் குடிப்போம்?” அல்லது “என்னத்தை உடுப்போம்?” என்று கவலைப்பட்டுக் கொண்டு சொல்வதன் மூலம் அல்ல. ஆனால் விசுவாசத்தைக் கொண்டிருப்பதன் மூலமும், இயேசு நம்மை செய்ய சொல்வதைச் செய்வதன் மூலமுமே: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:31–33.
கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் அடைதல்
14. (எ) மலைப்பிரசங்கத்தின் பொருள் என்ன? (பி) வேதபாரகரும் பரிசேயர்களும் என்ன தவறான வழியில் ராஜ்யத்தையும் நீதியையும் தேடினர்?
14 தம் மலைப்பிரசங்கத்தின் ஆரம்ப வாக்கியத்தில் ஆவிக்குரிய தேவையை உணர்பவர்களுக்கு பரலோக ராஜ்யம் உரியதாயிருக்கிறது என்று இயேசு சொன்னார். நீதிக்காக பசிதாகமுள்ளவர்கள் திருப்தியடைவார்கள் என்று நான்காவது வாக்கியத்தில் அவர் சொன்னார். இங்கு இயேசு ராஜ்யத்தையும், யெகோவாவின் நீதியையும் முதலிடத்தில் வைக்கிறார். அவைகள் மலைப்பிரசங்கத்தின் பொருள். எல்லா மனிதவர்க்கத்தின் தேவைகளுக்கும் அவைகள் தான் பதில். ஆனால் எதன் மூலம் கடவுளுடைய ராஜ்யமும், கடவுளுடைய நீதியும் அடைய முடிவதாகிறது? நாம் அவைகளை எவ்வாறு தொடர்ந்து நாடுவது? வேதபாரகரும் பரிசேயர்களும் செய்த விதமாக அல்ல. அவர்கள் ராஜ்யத்தையும், நீதியையும் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மூலம் நாடினர். வாய்மொழியான பாரம்பரியங்களும் அதில் சேர்ந்திருக்கிறது என்று அவர்கள் உரிமை பாராட்டினர். எழுதப்பட்ட நியாயப்பிரமாணமும் வாய்மொழியான பாரம்பரியங்களும் சீனாய் மலையில் மோசேக்கு கடவுளால் கொடுக்கப்பட்டது என்று அவர்கள் நம்பினர்.
15. (எ) யூதர்களின்படி, அவர்களுடைய வாய்மொழியான பாரம்பரியங்கள் எப்போது தோன்றின, அவைகளை அவர்கள் எவ்வாறு எழுதப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு மேலாக உயர்த்தினர்? (பி) இந்தப் பாரம்பரியங்கள் உண்மையில் எப்போது ஆரம்பித்தன? மோசேயின் நியாயப்பிரமாணத்தின் பேரில் என்ன பாதிப்போடு?
15 இதைக் குறித்து அவர்களுடைய பாரம்பரியம் இவ்வாறு சொன்னது: “மோசே நியாயப்பிரமாணத்தை [அடிக்குறிப்பு, “வாய்மொழியான பிரமாணத்தை”] சீனாயிலிருந்து பெற்றுக்கொண்டு அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார், அதை யோசுவா மூப்பர்களிடமும், மூப்பர்கள் தீர்க்கதரிசிகளிடமும், தீர்க்கதரிசிகள் பெரிய ஜெப ஆலயங்களில் இருக்கும் மனிதர்களிடமும் ஒப்படைத்தனர்.” காலப்போக்கில் அவர்களுடைய வாய்மொழியான சட்டம், எழுதப்பட்ட நியாயப்பிரமாண சட்டத்தைவிட மேலாக உயர்த்தப்பட்டது: “[எழுதப்பட்ட] சட்டத்தின் வார்த்தைகளை அவன் மீறினால் அவன் குற்றமுடையவனாக ஆகமாட்டான்,” ஆனால் “வேதபாரகரின் வார்த்தைகளோடு [வாய்மொழியான பாரம்பரியங்கள்] அதிகமாக அவன் கூட்டினால் அவன் குற்றமுள்ளவனாக ஆவான்.” (மிஷ்னா) அவர்களுடைய பாரம்பரியங்கள் சீனாயில் ஆரம்பமாகவில்லை. உண்மையில் கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவைகள் குவிய ஆரம்பித்தன. எழுதப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்தோடு அவர்கள் கூட்டினர், அதை குறைத்தனர், வெறுமையானதாகவும் ஆக்கினர்.—உபாகமம் 4:2; 12:32-ஐ ஒப்பிடுக.
16. கடவுளுடைய நீதி மனிதவர்க்கத்துக்கு எவ்வாறு வருகிறது?
16 கடவுளுடைய நீதி நியாயப்பிரமாணத்தின் வழியாக அல்ல, ஆனால் அதிலிருந்து வேறுபட்ட வழியில் வருகிறது. “இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது, இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே.” (ரோமர் 3:20–22) ஆகையால் கடவுளுடைய நீதி இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் வருகிறது—“அதைக் குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.” மேசியானிய தீர்க்கதரிசனங்கள் இயேசுவில் நிறைவேற்றமடைந்தன. அவர் நியாயப்பிரமாண சட்டத்தையும் நிறைவேற்றினார்; அவருடைய வாதனை கழுமரத்தின் மேல் ஆணியடிப்பதன் மூலம் அது வழியிலிருந்து எடுக்கப்பட்டது.—லூக்கா 24:25–27; 44–46; கொலோசெயர் 2:13, 14; எபிரெயர் 10:1.
17. அப்போஸ்தலனாகிய பவுலின்படி, யூதர்கள் எவ்வாறு கடவுளின் நீதியை அறிய தவறினர்?
17 எனவே, நீதியை தேடுவதில் யூதர்களின் தவறை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.” (ரோமர் 10:2–4) பவுல் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும்கூட இவ்வாறு எழுதினான்: “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்.”—2 கொரிந்தியர் 5:21.
18. “அறையப்பட்ட கிறிஸ்து” எவ்வாறு யூத பாரம்பரியவாதிகளாலும், கிரேக்க தத்துவஞானிகளாலும் “அழைக்கப்பட்டவர்”களாலும் கருதப்பட்டார்?
18 மரித்துக்கொண்டிருக்கும் மேசியாவை ஒன்றுமில்லாதவராக யூதர்கள் கருதினர். கிரேக்க தத்துவஞானிகள் அப்படிப்பட்ட ஒரு மேசியாவைப் பார்த்து மடத்தனம் என கேலி செய்தனர். அப்படியிருந்தாலும், அது பவுல் அறிவித்தபடி: “யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 1:22–25) கிறிஸ்து இயேசு கடவுளுடைய வல்லமை மற்றும் ஞானத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறார், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் நீதியையும் நித்திய ஜீவனையும் அடைய கடவுள் ஏற்படுத்திய வழியாகவும் இருக்கிறார். “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.”—அப்போஸ்தலர் 4:12.
19. பின்வரும் கட்டுரை எதைக் காண்பிக்கும்?
19 அழிவைத் தப்பி நாம் நித்திய ஜீவனை அடைய வேண்டுமென்றால், நாம் தொடர்ந்து கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும் என்று பின்வரும் கட்டுரை காண்பிக்கும். இதைச் செய்ய, இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பது மட்டுமல்லாமல், அவைகளின்படி நடக்கவும் வேண்டும். (w90 10/1)
விமர்சன கேள்விகள்
◻ யூத மதவாதிகள் தங்கள் தான தர்மங்கள், பரிசுகள், ஜெபங்கள், உபவாசங்கள் ஆகியவற்றை என்னவாக மாற்றினர்?
◻ உங்களுடைய பொக்கிஷத்தை சேமித்து வைப்பதற்கு பாதுகாப்பான இடம் எங்கே இருக்கிறது?
◻ நம்முடைய பொருளாதார தேவைகளின் பேரில் நாம் ஏன் கவலையைத் தவிர்க்க வேண்டும்?
◻ யூதர்கள் தங்கள் வாய்மொழியான பாரம்பரியங்களின் மூலத்தைக் குறித்து என்ன தவறாக உரிமைபாராட்டினார்கள்?
◻ கடவுளுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும் எதன் மூலம் வருகிறது?
[பக்கம் 16-ன் படம்]
பரிசேயர்கள் மனுஷரால் காணப்படும்படி வீதிகளின் சந்திகளில் நின்று ஜெபம் பண்ணுவதை விரும்பினார்கள்