“பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் . . . ஓடுங்கள்”
‘பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நீங்கள் ஓடுங்கள்.’—1 கொ. 9:24.
1, 2. (அ) எபிரெய கிறிஸ்தவர்களை ஊக்குவிப்பதற்காக பவுல் எதைக் குறிப்பிட்டார்? (ஆ) பவுல் என்ன அறிவுரை வழங்கினார்?
எபிரெய கிறிஸ்தவர்களை ஊக்குவிப்பதற்காக அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில் வலிமைமிக்க ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டார். வாழ்வெனும் பந்தயத்தில் அவர்கள் மட்டும் தனியாக ஓடிக்கொண்டில்லை என்பதை நினைப்பூட்டினார். ஏற்கெனவே எல்லைக்கோட்டைத் தொட்ட ‘மேகம் போன்ற சாட்சிகள்’ அவர்களைச் சூழ்ந்திருப்பதாகச் சொன்னார். அந்தச் சாட்சிகளுடைய விசுவாசமிக்க செயல்களையும் கடின முயற்சிகளையும் அவர்கள் மனதில் தெளிவாகப் பதிய வைத்தால், பந்தயத்தில் தளராமல் ஓடி வெற்றிபெற முடியுமெனச் சொன்னார்.
2 சென்ற கட்டுரையில், அந்த ‘மேகம் போன்ற சாட்சிகளில்’ சிலருடைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தோம். அவர்கள் கடவுள்மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்ததால் கடைசிவரை உண்மையுடன் நிலைத்திருந்தார்கள்; ஆம், எல்லைக்கோட்டைத் தொட்டார்கள். அவர்களைப் போல் நாமும் எவ்வாறு எல்லைக்கோட்டைத் தொடலாம்? “நாமும்கூட பாரமான எல்லாவற்றையும், நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுவோமாக” என்று பவுல் அறிவுரை வழங்கினார்.—எபி. 12:1.
3. ஓட்டப் பந்தய வீரர்களைப் பற்றிக் குறிப்பிட்டபோது பவுல் சொல்லவந்த குறிப்பு என்ன?
3 அன்று மிகப் பிரபலமாக இருந்த ஓட்டப் பந்தயத்தைப் பற்றி பூர்வ கிறிஸ்தவத்தின் பின்னணிகள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “கிரேக்கர்கள் பயிற்சி செய்தபோதும் போட்டியிட்டபோதும் நிர்வாணமாக ஓடினார்கள்.”a அந்த ஓட்டப் பந்தய வீரர்கள் வேகமாய் ஓடுவதற்காகப் பாரமான எல்லாவற்றையும் களைந்துவிட்டார்கள். அது அநாகரீகமாய் நமக்குத் தோன்றலாம். ஆனால், பரிசை வெல்ல வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடுதான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். அப்படியென்றால், பவுல் சொல்லவந்த குறிப்பு என்ன? வாழ்வெனும் பந்தயத்தில் பரிசை வெல்வதற்குத் தடையாக உள்ள எல்லாவற்றையும் நாம் உதறித்தள்ள வேண்டும். அன்றும் சரி இன்றும் சரி, இது கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த அறிவுரை. வாழ்வெனும் பந்தயத்தில் பரிசை வெல்ல இடையூறாக இருக்கும் சில பாரங்கள் யாவை?
‘பாரமான எல்லாவற்றையும் உதறித்தள்ளுங்கள்’
4. நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எதில் மூழ்கிப்போயிருந்தார்கள்?
4 ‘பாரமான எல்லாவற்றையும் உதறித்தள்ளுங்கள்’ என பவுல் அறிவுரை வழங்கினார். நாம் முழு கவனத்தோடும் முழுமூச்சோடும் ஓடுவதற்குத் தடையாக உள்ள எல்லாமே பாரமானவைதான். அவற்றில் சில யாவை? இயேசு இதற்குப் பதிலளித்தார். “நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனிதகுமாரனின் நாட்களிலும் நடக்கும்” என்றார். (லூக். 17:26) நோவாவின் காலத்தைப் போலவே நம் காலத்திலும் இந்த உலகத்திற்கு ஒரு பேரழிவு வரும் என்பது உண்மைதான்; ஆனால், இயேசு முக்கியமாகச் சொல்லவந்த குறிப்பு என்ன? மக்கள் நோவாவின் காலத்தில் வாழ்ந்த விதமாகவே இன்றும் வாழ்வார்கள் என்பதுதான். (மத்தேயு 24:37-39-ஐ வாசியுங்கள்.) நோவாவின் காலத்தில் வாழ்ந்த பெரும்பாலோர் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ளவோ அவர் சொல்கிறபடி வாழவோ விரும்பவில்லை. அப்படியென்றால், வேறென்ன விஷயங்களில் அவர்கள் மூழ்கிப்போயிருந்தார்கள்? பெரிதாக ஒன்றும் இல்லை... சாப்பிடுவது, குடிப்பது, கல்யாணம் செய்வது போன்ற அன்றாடக் காரியங்களில்தான் மூழ்கிப்போயிருந்தார்கள்! ஆனால், கடவுளுடைய செய்திக்கு “அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை”; இதைத்தான் இயேசு சுட்டிக்காட்டினார்.
5. கிறிஸ்தவ ஓட்டத்தை நல்லபடியாக ஓடி முடிக்க எது நமக்கு உதவும்?
5 நோவாவையும் அவரது குடும்பத்தாரையும் போலவே நாமும் இன்று நிறையக் காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் வேண்டியிருக்கிறது. இதற்கே பெருமளவு நேரமும் சக்தியும் போய்விடுகிறது. அதுவும், பணக் கஷ்டம் ஏற்படும்போது தினசரி தேவைகளைக் குறித்த கவலைகள் எளிதில் நம்மைத் தொற்றிக்கொள்கின்றன. நமக்கு முக்கியமான கிறிஸ்தவப் பொறுப்புகள்கூட இருக்கின்றன. நாம் ஊழியத்திற்குப் போக வேண்டும், கூட்டங்களுக்குத் தயாரித்து அவற்றில் கலந்துகொள்ள வேண்டும், தனிப்பட்ட படிப்பிலும் குடும்ப வழிபாட்டிலும் ஈடுபட வேண்டும். அன்று நோவாவுக்கும் கடவுள் நிறையப் பொறுப்புகள் கொடுத்திருந்தார்; அதையெல்லாம் அவர் ‘அப்படியே செய்தார்.’ (ஆதி. 6:22) கிறிஸ்தவ ஓட்டப் பந்தயத்தை ஓடி முடிப்பதற்கு, பாரங்களைச் சுமக்காதிருப்பது அல்லது முடிந்தளவு குறைத்துக்கொள்வது மிக முக்கியம்.
6, 7. இயேசு சொன்ன எந்த வார்த்தைகளை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும்?
6 “பாரமான எல்லாவற்றையும்” உதறித்தள்ளும்படி பவுல் சொன்னதன் அர்த்தமென்ன? நம் பொறுப்புகள் எல்லாவற்றையும் நம்மால் உதறித்தள்ள முடியாதுதான். ஆனால், இதைப் பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் வையுங்கள்: “‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாமல் இருங்கள். இவற்றையெல்லாம் பெறுவதற்கு இந்த உலகத்தார்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார்.” (மத். 6:31, 32) ஆகவே, உணவு, உடை போன்ற சர்வசாதாரண விஷயங்கள்கூட நமக்குப் பாரமாகிவிடலாம்; ஆம், அவற்றிற்கு அளவுக்குமீறிய கவனம் செலுத்தினால் அவை நம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கு முட்டுக்கட்டை ஆகிவிடலாம்.
7 “இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார்” என இயேசு சொன்னதைக் கவனியுங்கள். நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவா நம் தேவைகளைக் கவனித்துக்கொள்வார் என்று இதிலிருந்து தெரிகிறது. “இவையெல்லாம்” எனச் சொல்லும்போது நாம் விரும்புகிற எல்லாமே நமக்குக் கிடைக்கும் என அர்த்தமாகாது. இருந்தாலும், நம்முடைய தேவைகளுக்காகக்கூட கவலைப்படக் கூடாதென இயேசு சொன்னார்; இல்லாவிட்டால் இவற்றிற்காக ‘அலைந்து திரிகிற’ ‘இந்த உலகத்தார்’ போல் நாம் ஆகிவிடுவோம். நம் தேவைகளுக்காக நாம் கவலைப்படுவது ஏன் ஆபத்தானது? இயேசு இவ்வாறு சொன்னார்: “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் உங்கள் இருதயம் பாரமடையாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; இல்லாவிட்டால், எதிர்பாராத வேளையில் அந்த நாள் திடீரென உங்கள்மீது கண்ணியைப் போல் வரும்.”—லூக். 21:34, 35.
8. ‘பாரமான எல்லாவற்றையும் உதறித்தள்ளுவது’ முக்கியமாக நம் காலத்தில் ஏன் அவசியம்?
8 நாம் எல்லைக்கோட்டை நெருங்கிவிட்டோம். இப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தேவையில்லாத பாரங்களால் நம் ஓட்டம் தடைபட்டால், அதைவிட சோகம் வேறு ஏதாவது இருக்குமா? ஆகவே, ‘தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனம் உள்ளவர்களுக்கே மிகுந்த ஆதாயம்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்ன அறிவுரையைக் கேட்டு நடப்பது உண்மையிலேயே புத்திசாலித்தனம். (1 தீ. 6:6) அவர் சொன்னபடி, போதுமென்ற மனதுடன் நாம் ஓடினால் பரிசை வெல்வது எளிது.
‘நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவம்’
9, 10. (அ) ‘நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவம்’ என்றால் என்ன? (ஆ) ஒரு கிறிஸ்தவரின் விசுவாசம் என்ன ஆகலாம்?
9 “பாரமான எல்லாவற்றையும்” மட்டுமின்றி, “நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவத்தையும்” உதறித்தள்ளும்படி பவுல் குறிப்பிட்டார். அது என்ன? “எளிதில் சுற்றி நெருக்குகிற” என்பதற்கான கிரேக்க வார்த்தை பைபிளில் இந்த ஒரே வசனத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி அறிஞர் ஆல்பர்ட் பார்ன்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘அன்றைய ஓட்டப் பந்தய வீரர்கள் தங்கள் கால்களில் சிக்கிக்கொள்ளும் துணிமணிகளை அறவே தவிர்த்தார்கள். அதேபோல் இன்று கிறிஸ்தவர்களும், ஓடுவதற்குத் தடையாக இருக்கும் எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.’ விசுவாசத்தைப் பலவீனப்படுத்தும் அல்லது குலைத்துப்போடும் எதுவும் தங்களைச் சுற்றி நெருக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக, ஒரு கிறிஸ்தவரின் விசுவாசம் எப்போது குலைந்துபோகும்?
10 ஒரு கிறிஸ்தவர் தன் விசுவாசத்தை ஒரே நாளில் இழந்துவிடுவதில்லை. அது மெதுமெதுவாக, அவரை அறியாமலேயே பலவீனமாக ஆரம்பிக்கலாம். கிறிஸ்தவர்கள் சிலர் விசுவாசத்தைவிட்டு ‘வழுவிப்போவதை’ பற்றியும், அவர்களது இருதயம் ‘விசுவாசமற்ற பொல்லாத இருதயமாக மாறிவிடுவதை’ பற்றியும் பவுல் தன் கடிதத்தில் எச்சரித்திருந்தார். (எபி. 2:1; 3:12) பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பவரின் கால்களில் துணிமணி சுற்றிக்கொண்டால் அவர் கண்டிப்பாகத் தடுக்கி விழுவார். அதனால், போட்டியாளர்கள் அப்படிப்பட்ட துணிமணிகளைத் தவிர்க்க வேண்டும். இவ்விஷயத்தில் சிலர் ஏன் மெத்தனமாக இருந்துவிடலாம்? அஜாக்கிரதை, மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை, அல்லது கவனச்சிதறல் இதற்குக் காரணமாக இருக்கலாம். பவுலின் அறிவுரையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11. எவை நம் விசுவாசத்தைக் குலைத்துப்போடலாம்?
11 ஒரு கிறிஸ்தவர் தன் விசுவாசத்தை இழந்துவிட்டால், அதற்கு அவருடைய செயல்களே காரணம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். ‘நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவத்தை’ பற்றி இன்னொரு அறிஞர் விளக்கினார். நம் சந்தர்ப்ப சூழ்நிலைகள், சகவாசங்கள், கெட்ட ஆசைகள் ஆகியவை மிகவும் சக்திபடைத்தவை என்பதால் நம் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தலாம் அல்லது ஒரேயடியாகக் குலைத்துப்போடலாம் என அவர் சொன்னார்.—மத். 13:3-9.
12. நாம் விசுவாசத்தை இழக்காதிருக்க என்ன எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டும்?
12 நாம் எதைப் பார்க்கிறோம், எதைக் கேட்கிறோம் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென அடிமை வகுப்பார் பல வருடங்களாக நினைப்பூட்டி வந்திருக்கிறார்கள்; ஏனென்றால், அவை நம் மனதையும் இருதயத்தையும் பாதிக்கின்றன. பண ஆசையிலும் பொருள் ஆசையிலும் சிக்கிக்கொள்ளும் ஆபத்தைப் பற்றியும் அவர்கள் நம்மை எச்சரித்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு உலகத்தின் வண்ணஜாலங்கள் நம்மைச் சுண்டியிழுக்கலாம் அல்லது விற்பனைக்கு வரும் புதுப் புதுப் பொருட்கள் நம் மனதைக் கொள்ளைகொள்ளலாம். இவ்விஷயத்தில் அடிமை வகுப்பார் நம்மை மட்டுக்குமீறி கட்டுப்படுத்துகிறார்கள் என நாம் நினைப்பது மிகவும் ஆபத்தானது; ‘அவர்களுடைய அறிவுரைகள் மற்றவர்களுக்குத்தான் பொருந்தும், நான் எந்த ஆபத்திலும் சிக்க மாட்டேன்’ என்று நினைப்பதும் ஆபத்தானது. சாத்தானுடைய உலகம் மிகத் தந்திரமாக நமக்கு வலைகளை விரிக்கிறது. அஜாக்கிரதை, மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை, கவனச்சிதறல் போன்றவற்றால் சிலர் அந்த வலைகளில் விழுந்திருக்கிறார்கள். நாமும் அந்த வலைகளில் சிக்கிக்கொண்டால் வாழ்வெனும் பரிசை இழந்துவிடுவோம்.—1 யோ. 2:15-17.
13. உலக சிந்தையைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
13 தினமும் உலகத்தார் தங்களுடைய லட்சியங்களையும், நெறிகளையும், சிந்தனைகளையும் நம்மீது திணிக்கப் பார்க்கிறார்கள். (எபேசியர் 2:1, 2-ஐ வாசியுங்கள்.) என்றாலும், நாம் உலக சிந்தையால் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. இந்த உலக சிந்தை நம்மைச் சூழ்ந்துள்ள “காற்றுபோல்” இருப்பதாக பவுல் குறிப்பிட்டார். ஆனால் அது ஒரு விஷக்காற்று. விஷக்காற்றைச் சுவாசிக்க நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்; அதுபோல், இந்த உலக மக்கள் சிந்திப்பதுபோல் நாம் சிந்திக்கக் கூடாது; அதைத் தவிர்க்க எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். கிறிஸ்தவப் பந்தயத்தில் தொடர்ந்து ஓட நமக்கு எது உதவும்? இயேசுவின் தலைசிறந்த உதாரணம் உதவும். அவர் கடைசிவரை ஓடி, எல்லைக்கோட்டைத் தொட்டார்; நாமும் அவரைப் பின்பற்றலாம். (எபி. 12:2) அப்போஸ்தலன் பவுலும்கூட நமக்கு நல்ல முன்மாதிரி. அவர் முடிவுவரை ஓடினார், தம்மைப் பின்பற்றும்படி தன் சகோதரர்களை ஊக்குவித்தார்.—1 கொ. 11:1; பிலி. 3:14.
‘பரிசைப் பெற்றுக்கொள்ளலாம்’—எப்படி?
14. ஓட்டத்தை ஓடி முடிப்பது பவுலுக்கு எந்தளவு முக்கியமாக இருந்தது?
14 ஓட்டத்தை ஓடி முடிப்பது பவுலுக்கு எந்தளவு முக்கியமாக இருந்தது? எபேசுவிலிருந்து வந்த மூப்பர்களிடம் கடைசியாகப் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானராகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதே எனக்கு முக்கியம்.” (அப். 20:24) ஆகவே, ஓட்டத்தை முடிக்க அவர் எல்லாவற்றையும், சொல்லப்போனால் தன் உயிரையும்கூட, தியாகம் செய்யத் தயாராக இருந்தார். ஓட்டத்தை முடிக்காவிட்டால் நற்செய்திக்காக அதுவரை தான் பட்ட பாடுகளெல்லாம் வீணாகிவிடும் என பவுல் நினைத்தார். அதேசமயத்தில், தன்னால் கட்டாயம் பரிசை வெல்ல முடியுமென்ற அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுடன் அவர் இருக்கவில்லை. (பிலிப்பியர் 3:12, 13-ஐ வாசியுங்கள்.) தன் வாழ்நாளின் முடிவில்தான் இவ்வாறு சொன்னார்: “சிறந்த போராட்டத்தை நான் போராடியிருக்கிறேன்; என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன், கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன்.”—2 தீ. 4:7.
15. என்ன செய்யும்படி சக கிறிஸ்தவர்களை பவுல் ஊக்கப்படுத்தினார்?
15 தன்னைப் போல் சக கிறிஸ்தவர்களும் தளர்ந்துபோகாமல் ஓட்டத்தை முடிக்க வேண்டுமென பவுல் மிகவும் ஆசைப்பட்டார். ஆகவே, மீட்புக்காகக் கடினமாய் உழைக்கும்படி பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினார். ‘வாழ்வளிக்கும் வார்த்தையை இறுகப் பற்றிக்கொள்ள’ வேண்டும் என அவர்களுக்குச் சொன்னார். அதோடு, “நான் வீணாய் உழைக்கவுமில்லை வீணாய்ப் பாடுபடவுமில்லை என்பதைக் குறித்துக் கிறிஸ்துவின் நாளில் மகிழ்ச்சி அடைவேன்” என்றார். (பிலி. 2:15, 16) அதேபோல், கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களைக்கூட இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நீங்களும் ஓடுங்கள்.”.—1 கொ. 9:24.
16. பரிசை நாம் ஏன் கண்முன் வைத்திருக்க வேண்டும்?
16 மாரத்தான் போன்ற நீண்டதூர ஓட்டப் பந்தயங்களில் எல்லைக்கோடு முதலில் கண்ணுக்குத் தெரியாது. என்றாலும், போட்டியாளர்கள் எப்போதுமே அந்த எல்லைக்கோட்டைக் கண்முன் வைத்து ஓடுவார்கள். எல்லைக்கோட்டை நெருங்க நெருங்க, அதைத் தொட்டுவிட வேண்டுமென்பதில் இன்னுமதிக உறுதியாக இருப்பார்கள். கிறிஸ்தவ ஓட்டத்தைப் பொறுத்ததிலும் அதுவே உண்மை. நாமும் நம் பரிசைக் கண்முன் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் திடத்தீர்மானத்தோடு ஓடி அதை அடைய முடியும்.
17. பரிசின்மீது கண்களை ஒருமுகப்படுத்த விசுவாசம் எவ்வாறு உதவும்?
17 “விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்; பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்” என்று பவுல் எழுதினார். (எபி. 11:1) ஆபிரகாமும் சாராளும் சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு ‘அந்நியர்களாகவும், தற்காலிகக் குடிகளாகவும்’ வாழ மனமுள்ளவர்களாக இருந்தார்கள். எதனால்? கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை அவர்கள் ‘தொலைவிலிருந்து கண்டதால்.’ அதுபோல் மோசே, ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களையும்,’ ‘எகிப்தின் பொக்கிஷங்களையும்’ ஒதுக்கித்தள்ளினார். அதைச் செய்வதற்குத் தேவையான விசுவாசமும் பலமும் அவருக்கு எப்படிக் கிடைத்தன? அவர் “தனக்குக் கிடைக்கவிருந்த பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தினார்.” (எபி. 11:8-13, 24-26) இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பவுல் எழுதியபோது, “விசுவாசத்தினால்தான்” என்று ஆரம்பித்தது பொருத்தமானது. ஆம், விசுவாசத்தினால்தான் சோதனைகளையும் கஷ்டங்களையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை; அதோடு, தங்களுக்காகக் கடவுள் செய்துவந்த, செய்யவிருந்த காரியங்களைக் கண்முன் வைத்தார்கள்.
18. “நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவத்தை” உதறித்தள்ள நாம் என்னென்ன செய்ய வேண்டும்?
18 எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள விசுவாசமிக்க ஊழியர்களைப் பற்றி நாம் ஆழ்ந்து சிந்தித்து அவர்களைப் பின்பற்ற வேண்டும்; அப்போது, நம் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும்; “நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவத்தையும்” உதறித்தள்ள முடியும். (எபி. 12:1) அதோடு, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிற சகோதர சகோதரிகளுடன் நாம் கூடிவர வேண்டும்; அப்போது, ‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்ப’ முடியும்.—எபி. 10:24.
19. நாம் தொடர்ந்து ஓடுவது இப்போது ஏன் முக்கியம்?
19 நாம் எல்லைக்கோட்டை நெருங்கிவிட்டோம். அது நம் கண்ணெதிரே தெரிகிறது. விசுவாசத்தினாலும் யெகோவாவின் உதவியினாலும், ‘நாமும்கூட பாரமான எல்லாவற்றையும், நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவத்தையும் உதறித்தள்ள’ முடியும். ஆம், நாமும்கூட யெகோவா தேவன் தரும் பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஓட முடியும்.
[அடிக்குறிப்பு]
a பூர்வ யூதர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியளித்தது. அதனால்தான், போட்டி விளையாட்டுகளுக்காக கிரீஸில் ஓர் அரங்கம் இருந்ததுபோல் எருசலேமிலும் இருக்க வேண்டுமென, விசுவாசதுரோகியாக மாறிய தலைமைக் குரு யாசோன் சொன்னபோது யூதர்கள் கொதித்தெழுந்தார்கள். தள்ளுபடி ஆகமமாகிய 2 மக்கபேயர் இதைப் பற்றிச் சொல்கிறது.—2 மக். 4:7-17.
நினைவிருக்கிறதா?
• “பாரமான எல்லாவற்றையும்” உதறித்தள்ள என்ன செய்ய வேண்டும்?
• எவை ஒரு கிறிஸ்தவரின் விசுவாசத்தைக் குலைத்துப்போடலாம்?
• நாம் ஏன் பரிசைக் கண்முன் வைத்திருக்க வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
‘நம்மை எளிதில் சுற்றி நெருக்குகிற பாவம்’ என்றால் என்ன, அது எவ்வாறு நம்மைச் சுற்றி நெருக்கும்?