முழு இருதயத்தோடு நீதியை நேசியுங்கள்
‘நீர் நீதியை விரும்புகிறீர்.’—சங். 45:7.
1. “நீதியின் பாதைகளில்” தொடர்ந்து நடக்க எது நமக்குக் கைகொடுக்கும்?
யெகோவா தமது வார்த்தையின் வாயிலாக... சக்தியின் வாயிலாக... தமது மக்களை “நீதியின் பாதைகளில்” அழைத்துச் செல்கிறார். (சங். 23:3) ஆனால், நாம் அபூரணராக இருப்பதால் நீதியின் பாதையிலிருந்து வழிவிலகி விடுகிறோம். சரியான பாதையில் செல்ல வேண்டுமானால் விடாமுயற்சி அவசியம். அந்தப் பாதையில் தொடர்ந்து வீறுநடை போட எது நமக்குக் கைகொடுக்கும்? இயேசுவைப் போல், நாம் நீதியை நேசிக்க வேண்டும்.—சங்கீதம் 45:7-ஐ வாசியுங்கள்.
2. ‘நீதியின் பாதைகள்’ என்பது என்ன?
2 ‘நீதியின் பாதைகள்’ என்பது என்ன? இந்தப் ‘பாதைகள்’ நம் வாழ்க்கைப் போக்கைக் குறிக்கின்றன. யெகோவாவின் நெறிகளே இதைத் தீர்மானிக்கின்றன. எபிரெய, கிரேக்க மொழிகளில், “நீதி” என்பது “நேர்மையை” குறிக்கிறது; ஒழுக்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது. யெகோவாவே ‘நீதியின் வாசஸ்தலமாய்’ இருக்கிறார்; அதனால், அவரை வழிபடுவோரும் தாங்கள் பின்பற்ற வேண்டிய செம்மையான பாதை எது என்பதைத் தீர்மானிக்க அவரையே நோக்கியிருப்பதில் அகமகிழ்கிறார்கள்.—எரே. 50:7.
3. கடவுளுடைய நீதியை நாம் எப்படி அதிகமாய்க் கற்றுக்கொள்ளலாம்?
3 கடவுளுடைய நீதியான நெறிகளுக்கு இசைவாக வாழ நாம் ஊக்கமாய் முயற்சி செய்தால்தான் அவரை முழுமையாய்ப் பிரியப்படுத்த முடியும். (உபா. 32:4) இதற்காக, முதலில் யெகோவா தேவனைப் பற்றி அவரது வார்த்தையாகிய பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளத் தீவிர முயற்சி எடுக்க வேண்டும். அவரைப் பற்றி எந்தளவு அறிந்துகொள்கிறோமோ... அவரிடம் அனுதினமும் எந்தளவு அண்டி வருகிறோமோ... அந்தளவு அவரது நீதியை நேசிப்போம். (யாக். 4:8) அதோடு, வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய கட்டத்தில், கடவுளுடைய சக்தியால் அருளப்பட்ட வார்த்தை தரும் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடவுளுடைய நீதியை நாடுங்கள்
4. கடவுளுடைய நீதியை நாடுவது என்றால் என்ன?
4 மத்தேயு 6:33-ஐ வாசியுங்கள். கடவுளுடைய நீதியை நாடுவது என்பது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்க நேரம் செலவிடுவதை மட்டுமே அர்த்தப்படுத்தாது. நம்முடைய பரிசுத்த சேவையை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம் நடத்தை அவரது உயர்ந்த நெறிகளுக்கு இசைய இருக்க வேண்டும். அப்படியானால், யெகோவாவின் நீதியை நாடுகிறவர்கள் எல்லாரும் என்ன செய்ய வேண்டும்? ‘கடவுளுடைய சித்தத்தின்படி, உண்மையான நீதிக்கும் பற்றுறுதிக்கும் இசைவாக உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள’ வேண்டும்.—எபே. 4:24.
5. நாம் ஊக்கமிழந்து போகையில் எது நமக்கு உதவும்?
5 கடவுளுடைய நீதியான நெறிகளின்படி வாழ நாம் கடினமாய் முயலும்போது, நம்முடைய குறைபாடுகளால் நாம் சிலசமயங்களில் ஊக்கமிழந்து விடக்கூடும். நம் ஊக்கத்தை உறிஞ்சிக்கொள்கிற இத்தகைய குறைபாடுகளை மேற்கொள்ளவும் நீதியை நேசிக்கவும் கடைப்பிடிக்கவும் எது உதவும்? (நீதி. 24:10) “உண்மை இருதயத்தோடும் விசுவாசத்தோடும்” நாம் யெகோவாவிடம் தவறாமல் ஜெபம் செய்ய வேண்டும். (எபி. 10:19-22) நாம் விண்ணுலக வாழ்வை எதிர்நோக்கி இருந்தாலும் சரி மண்ணுலக வாழ்வை எதிர்நோக்கி இருந்தாலும் சரி, இயேசு கிறிஸ்துவின் மீட்பு பலியிலும் மாபெரும் தலைமை குருவாக அவர் நமக்குச் செய்யும் சேவையிலும் விசுவாசம் வைக்கிறோம். (ரோ. 5:8; எபி. 4:14-16) அவர் சிந்திய இரத்தத்தின் பயனைப் பற்றி முதன்முதலில் வெளியிடப்பட்ட காவற்கோபுர இதழில் விளக்கிக் காட்டப்பட்டது. (1 யோ. 1:6, 7) அந்தக் கட்டுரை இவ்வாறு சொன்னது: “செக்கச்சிவேரென்ற ஒரு பொருளை சிகப்பு கண்ணாடி வழியாக வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கும்போது அந்தப் பொருள் வெண்மையாகத் தெரியும் என்பது உண்மை; அதுபோல, நம்முடைய பாவங்கள் செக்கச்சிவேரென்று இருந்தாலும் அவற்றைக் கடவுள் பார்க்கும் விதமாகப் பார்க்கும்போது, அதாவது கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் வழியாகப் பார்க்கும்போது, அவை வெண்மையாகத் தெரியும்.” (ஜூலை 1879, பக். 6, ஆங்கிலம்) யெகோவா தமது அருமை மைந்தனின் மீட்பு பலியினால் எப்பேர்ப்பட்ட அற்புதமான ஓர் ஏற்பாட்டை நமக்குச் செய்திருக்கிறார்!—ஏசா. 1:18.
உங்கள் ஆன்மீகக் கவசத்தைச் சரிபாருங்கள்
6. நம் ஆன்மீகக் கவசத்தைச் சரி பார்ப்பது ஏன் மிக மிக அவசியம்?
6 எல்லாச் சமயங்களிலும் “நீதியை மார்புக் கவசமாக அணிந்து” கொள்ள கொண்டும், ஏனென்றால் இது கடவுள் தரும் ஆன்மீகக் கவசத்தின் முக்கிய பாகமாகும். (எபே. 6:11, 14) நாம் அண்மையில் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்தவர்களாய் இருந்தாலும் சரி, பல ஆண்டுகளாக பரிசுத்த சேவை செய்து வருகிறவர்களாய் இருந்தாலும்சரி, நம்முடைய ஆன்மீகக் கவசத்தைத் தினமும் சரிபார்ப்பது மிக மிக அவசியம். ஏன்? ஏனென்றால், பிசாசும் அவனுடைய பேய்களும் பூமிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். (வெளி. 12:7-12) சாத்தான் கோபாவேசத்தில் இருக்கிறான், தனக்கு நேரம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்திருக்கிறான். அதனால், கடவுளுடைய மக்களைத் தீவிரமாகத் தாக்கி வருகிறான். அப்படியிருக்க, “நீதியை மார்புக் கவசமாக அணிந்து” கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா?
7. “நீதியை மார்புக் கவசமாக அணிந்து” கொள்வதன் அவசியத்தை உணர்ந்திருந்தால் நாம் எப்படி நடந்துகொள்ள முயலுவோம்?
7 மார்புக் கவசம் நம் இதயத்தைப் பாதுகாக்கிறது. அபூரணம் நம்மிடம் குடிகொண்டிருப்பதால், அடையாள அர்த்தமுள்ள நம் இதயம் திருக்குள்ளதாயும் கேடுள்ளதாயும் இருக்கிறது. (எரே. 17:9) தப்பு செய்யும் ஆசை நம் இதயத்தில் புதைந்திருப்பதால் அதைப் பயிற்றுவிக்க வேண்டும். (ஆதி. 8:21) “நீதியை மார்புக் கவசமாக அணிந்து” கொள்வதன் அவசியத்தை நாம் உணர்ந்திருந்தால், கடவுள் வெறுக்கிற பொழுதுபோக்குகளை அனுபவிப்பதற்காக அதைத் தற்காலிகமாய் கழற்றி வைக்க மாட்டோம்; தவறான செயல்களில் ஈடுபடுவது போல் கற்பனை செய்யவும் மாட்டோம். டிவி பார்ப்பதற்கே நம்முடைய பொன்னான நேரத்தை மணிக்கணக்காகச் செலவிட மாட்டோம். மாறாக, யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்யவே தொடர்ந்து பாடுபடுவோம். தவறான சிந்தையால்... செயலால்... எதேச்சையாகத் தடுக்கி விழுந்தாலும்கூட, யெகோவாவின் கரம்பற்றி நாம் மீண்டும் எழுந்து நிற்போம்.—நீதிமொழிகள் 24:16-ஐ வாசியுங்கள்.
8. ‘விசுவாசம் எனும் பெரிய கேடயம்’ நமக்கு ஏன் தேவை?
8 நம்முடைய ஆன்மீகக் கவசத்தில் ‘விசுவாசம் எனும் பெரிய கேடயமும்’ ஒன்று. ‘பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைத்துவிட’ இது நமக்கு உதவுகிறது. (எபே. 6:16) அதோடு, யெகோவா மீதுள்ள விசுவாசமும் இதயப்பூர்வமான அன்பும் நீதியைக் கடைப்பிடிக்க... முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் தொடர்ந்து நடக்க... உதவுகின்றன. நாம் எந்தளவு யெகோவாவை நேசிக்கிறோமோ அந்தளவு அவரது நீதியை மதிப்போம். ஆனால் நம் மனசாட்சியைப் பற்றியென்ன? நீதியை நேசிக்க அது எப்படி உதவுகிறது?
நல்மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்
9. நல்மனசாட்சியைக் காத்துக்கொள்வதால் நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
9 நாம் ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், “நல்மனசாட்சிக்காக” யெகோவாவிடம் வேண்டுதல் செய்தோம். (1 பே. 3:21) மீட்புவிலையில் நாம் விசுவாசம் வைப்பதால், இயேசுவின் இரத்தம் நம் பாவங்களைக் கழுவுகிறது; அதனால் கடவுளுடைய முன்னிலையில் சுத்தமானவர்களாய் இருக்கிறோம். ஆனால், கடவுள் முன் எப்போதும் சுத்தமாய் இருப்பதற்கு, நல்மனசாட்சியைக் காத்துக்கொள்ள வேண்டும். நம் மனசாட்சி நம்மை உறுத்தினால் அல்லது எச்சரித்தால், அது நன்றாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். யெகோவாவின் நீதியான வழிகளைப் பற்றி உணர்வில்லாத அளவுக்கு, நம் மனசாட்சி மரத்துப்போகவில்லை என்பதை அந்த நெருடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. (1 தீ. 4:2) நீதியை நேசிப்பவர்களுடைய விஷயத்தில் மனசாட்சி இன்னொரு விதத்திலும் செயல்படுகிறது.
10, 11. (அ) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் குரலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும் என்பதற்கு ஏதாவது உதாரணம் கொடுங்கள். (ஆ) நீதியை நேசிப்பதால் ஏன் அளவில்லா ஆனந்தம் அடையலாம்?
10 நாம் தவறு செய்யும்போது நம்முடைய மனசாட்சி குத்தலாம் அல்லது வதைக்கலாம். இளைஞன் ஒருவன் ‘நீதியின் பாதைகளிலிருந்து’ வழிவிலகிப் போனான். அவன் ஆபாசத்திற்கு அடிமையானான், மாரிஹூவானா புகைக்க ஆரம்பித்தான். கூட்டங்களுக்குப் போனபோது, குற்றவுணர்ச்சி அவனை வாட்டியது, வெளி ஊழியத்தில் கலந்துகொண்டபோது கபடநாடகம் ஆடுவது போல் உணர்ந்தான். அதனால், ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டான். “ஆனால், நான் செய்த தவறுக்கு என் மனசாட்சியே கணக்குக் கேட்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று அவன் சொன்னான். “கிட்டத்தட்ட நான்கு வருஷம் இப்படி முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்” என்றும் சொன்னான். பிறகு, மீண்டும் சத்தியத்தின் பக்கம் தன் மனதைத் திருப்பினான். தன் ஜெபத்தை யெகோவா கேட்க மாட்டார் என்று நினைத்தான்; இருந்தாலும் ஜெபம் செய்தான், கடவுளிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினான். பத்து நிமிடங்களுக்குள்ளாகவே, அவனுடைய அம்மா அவனிடம் வந்து, கூட்டங்களுக்கு வரச்சொல்லி உற்சாகப்படுத்தினார். அவன் ராஜ்ய மன்றத்திற்குப் போனான்; தனக்குப் படிப்பு நடத்தும்படி ஒரு மூப்பரிடம் கேட்டான். பிற்பாடு, ஞானஸ்நானம் பெற்றான், தனது உயிரைக் காப்பாற்றியதற்காக இப்போது யெகோவாவுக்கு நன்றியுடன் இருக்கிறான்.
11 சரியானதைச் செய்வதால் நாமும் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம், அல்லவா? நீதியை நேசித்து அதன்படியே நடக்கும்போது, நம் பரம தகப்பனுக்குப் பிரியமானதைச் செய்வதில் அதிக சந்தோஷம் காண்போம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! சுத்தமான மனசாட்சியோடு எப்போதும் நிம்மதியாய் இருக்கப்போகும் காலம் சீக்கிரம் வரும்; அப்போது எல்லாரும் கடவுளுடைய சாயலை அப்படியே பிரதிபலிப்பார்கள். ஆகவே, இதயத்தில் இப்போதே நீதியின்பால் நேசத்தை வளர்ப்போமாக, யெகோவாவின் இதயத்தை மகிழ்விப்போமாக.—நீதி. 23:15, 16.
12, 13. நம் மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிக்கலாம்?
12 மனசாட்சியைப் பயிற்றுவிக்க என்ன செய்யலாம்? பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் படிக்கும்போது, “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்” என்பதை நினைவில் வைப்பது முக்கியம். (நீதி. 15:28) வேலை தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் எழுந்தால் இந்த வசனம் நமக்கு எப்படிப் பயனளிக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு வேலை கடவுளுடைய வார்த்தைக்கு முரணானது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்போது, உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் கொடுக்கும் ஆலோசனைக்கு நம்மில் பெரும்பாலோர் உடனடியாகச் செவிசாய்ப்போம். ஆனால், அப்படித் தெளிவாகத் தெரியாதபோது பைபிள் நியமங்களை ஆராய்ந்து பார்த்து, ஜெபத்தோடு தீர்மானம் எடுக்க வேண்டும்.a இந்த விஷயத்தில், மற்றவர்களுடைய மனசாட்சியைப் புண்படுத்திவிடாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும். (1 கொ. 10:31-33) முக்கியமாக, கடவுளோடுள்ள உறவு சம்பந்தமான நியமங்களைக் குறித்து கவனமாய் இருக்க வேண்டும். யெகோவா நமக்கு நிஜமானவராக இருந்தால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இந்த வேலை யெகோவாவை விசனப்படுத்தி, அவருக்கு வேதனை அளிக்குமா?’—சங். 78:40, 41.
13 காவற்கோபுர படிப்புக்கோ சபை பைபிள் படிப்புக்கோ தயாரிக்கும்போது, கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பற்றி தியானிப்பதன் முக்கியத்துவத்தை நாம் மனதில் வைக்க வேண்டும். நாம் தயாரிக்கும்போது கேள்விகளுக்கான பதிலை அவசர அவசரமாகக் கோடிட்டுவிட்டு அடுத்தடுத்த பாராக்களுக்குத் தாவி விடுகிறோமா? இப்படிப் படித்தால், நீதியின் மீதுள்ள அன்பு வளராது அல்லது தவறு செய்யும்போது நம் மனசாட்சி உறுத்தாது. நாம் நீதியை நேசிக்க வேண்டுமென்றால், கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிக்க வேண்டும், படித்தவற்றை தியானிக்கவும் வேண்டும். முழு இருதயத்தோடு நீதியை நேசிப்பதற்கு வேறெந்த குறுக்குவழியும் இல்லை!
நீதியின் மீது பசிதாகம் கொள்ளுங்கள்
14. பரிசுத்த சேவையை நாம் என்ன மனநிலையோடு செய்ய வேண்டுமென யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் விரும்புகிறார்கள்?
14 நாம் சந்தோஷமாய் பரிசுத்த சேவை செய்ய வேண்டுமென யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் விரும்புகிறார்கள். நம் சந்தோஷத்திற்கு எது உதவும்? நீதியை நேசிப்பதே! மலைப்பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “நீதியின்மீது பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் திருப்தி செய்யப்படுவார்கள்.” (மத். 5:6) நீதியை நேசிப்பதில் ஆர்வம் காட்டுவோருக்கு இந்த வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன?
15, 16. ஆன்மீகப் பசிதாகம் எவ்விதங்களில் திருப்தி செய்யப்படும்?
15 நாம் வாழும் இந்த உலகம் பொல்லாதவனுடைய கைக்குள் இருக்கிறது. (1 யோ. 5:19) எந்த நாட்டுச் செய்தித்தாளைப் புரட்டிப் பார்த்தாலும் சரி, கொடூரமும் வன்முறையும் தலைவிரித்தாடுவதைப் பற்றிய செய்திகளைக் காணலாம். மனிதநேயமற்ற செயல்கள் நீதியுள்ள ஒருவரின் மனதை அலைக்கழிக்கின்றன. (பிர. 8:9) ஆனால், நீதியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களின் ஆன்மீகப் பசிதாகத்தை யெகோவாவால் மட்டுமே தீர்க்க முடியும் என்பதை அவரை நேசிக்கிற நாம் அறிந்திருக்கிறோம். தேவபக்தியற்றவர்கள் விரைவில் அழிக்கப்படுவார்கள்; நீதியை நேசிக்கிறவர்களோ நெறிகெட்டவர்களால்... அவர்களுடைய அக்கிரமச் செயல்களால்... உண்டாகும் வேதனையை அனுபவிக்க மாட்டார்கள். (2 பே. 2:7, 8) அப்போது எவ்வளவு நிம்மதி!
16 நீதியின் மீது பசிதாகம் உள்ளவர்கள் “திருப்தி செய்யப்படுவார்கள்” என்பதை யெகோவாவின் ஊழியர்களாயும் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாயும் இருக்கிற நாம் அறிந்திருக்கிறோம். “நீதி குடிகொண்டுள்ள” புதிய வானமும் புதிய பூமியும் வரும்போது அவர்கள் முழுமையாகத் திருப்தி அடைவார்கள். (2 பே. 3:13) ஆகவே, சாத்தானுடைய இந்த உலகத்தில் நடந்துவருகிற கொடுமையும் வன்முறையும் நீதியை நசுக்கிப் போட்டதால் நாம் மனந்தளர்ந்து விடவும் கூடாது, ஆச்சரியப்படவும் கூடாது. (பிர. 5:8) உன்னதரான யெகோவா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார், நீதியை நேசிப்போரை விரைவில் விடுவிப்பார்.
நீதியை நேசிப்பதால் நன்மைகள்
17. நீதியை நேசிப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் யாவை?
17 நீதியின் வழியில் நடப்பதால் வரும் மிகச் சிறந்த நன்மையை சங்கீதம் 146:8 சொல்கிறது. ‘நீதிமான்களை யெகோவா சிநேகிக்கிறார்’ என்று சங்கீதக்காரன் பாடினார். சற்று யோசித்துப் பாருங்கள்! நீதியை நேசிக்கிற நம்மை இந்த அண்டத்தின் பேரரசரே நேசிக்கிறார்! அதனால், அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய விஷயங்களுக்கு நாம் முதலிடம் கொடுக்கும்போது நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. (சங்கீதம் 37:25-ஐயும் நீதிமொழிகள் 10:3-ஐயும் வாசியுங்கள்.) சீக்கிரத்தில், இந்த முழு பூமியும் நீதியை நேசிப்போருக்குச் சொந்தமாகிவிடும். (நீதி. 13:22) கடவுளுடைய மக்கள் நீதியின்படி வாழ்ந்ததற்குக் கைமாறாக சொல்ல முடியாத சந்தோஷத்தை அடைவார்கள், எழில் கொஞ்சும் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். கடவுளுடைய நீதியை நேசிப்போர் இன்றும்கூட மனசமாதானத்தை வெகுமதியாகப் பெறுகிறார்கள்; இதனால், குடும்பத்திலும் சபையிலும் சுமூகமான உறவை அனுபவித்து மகிழ்கிறார்கள்.—பிலி. 4:6, 7.
18. யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கிற நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
18 யெகோவாவின் மகா நாளுக்காக காத்திருக்கிற நாம், அவருடைய நீதியைத் தொடர்ந்து தேட வேண்டும். (செப். 2:2, 3) அப்படியென்றால், யெகோவா தேவனின் நேர்மையான வழிகளை உள்ளப்பூர்வமாய் நேசிப்போமாக. அதற்காக, “நீதியை மார்புக் கவசமாக அணிந்து” நம் அடையாள அர்த்தமுள்ள இதயத்தைப் பாதுகாப்பது அவசியம். நல்மனசாட்சியைக் காத்துக்கொள்வதும் அவசியம்; அதுதான் நம்முடைய இதயத்தையும் கடவுளுடைய இதயத்தையும் குளிர்விக்கும்.—நீதி. 27:11.
19. நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும், அடுத்த கட்டுரையில் எதை ஆராய்வோம்?
19 “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” (2 நா. 16:9) தொல்லைமிகு இவ்வுலகில் வன்முறையும் அக்கிரமமும் தாண்டவமாடினாலும் சரியானதைச் செய்கிற நமக்கு இவை ஆறுதலளிக்கும் வார்த்தைகள், அல்லவா! நாம் நீதியான வழிகளில் நடப்பதைப் பார்த்து கடவுளைவிட்டு விலகியிருக்கிற மக்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், நாம் யெகோவாவின் நீதியைப் பின்பற்றும்போது அடையும் நன்மைகள் எத்தனை! எத்தனை!! (ஏசா. 48:17; 1 பே. 4:4) ஆகவே, முழு இருதயத்தோடு நீதியை நேசித்து நடப்பதில் எப்போதும் சந்தோஷம் காண தீர்மானமாய் இருப்போமாக. என்றாலும், நீதியை முழு இருதயத்தோடு நேசிப்பதற்கு அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும். இதன் அர்த்தமென்ன? அடுத்த கட்டுரையில் ஆராயலாம்.
[அடிக்குறிப்பு]
a வேலையைத் தேர்ந்தெடுப்பது பற்றிய பைபிள் நியமங்களுக்கு, காவற்கோபுரம் ஏப்ரல் 15, 1999, பக்கங்கள் 28-30-ஐக் காண்க.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• நீதியை நேசிப்பதற்கு மீட்புவிலையின் மதிப்பை உணர்வது ஏன் அவசியம்?
• “நீதியை மார்புக் கவசமாக அணிந்து” கொள்வது ஏன் முக்கியம்?
• நம் மனசாட்சியை எப்படிப் பயிற்றுவிக்கலாம்?
[பக்கம் 26-ன் படம்]
வேலை சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்க்க பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி உதவும்