எதிர்காலத்தை மனதில் வைத்து வாழுங்கள்
“நா ளையைக் குறித்துக் கவலைக் கொள்ளாதீர்கள். . . . நாளையக் கவலை நாளைக்கு.” கலிலேய மலைப்பகுதியில் இயேசு கிறிஸ்து ஆற்றிய புகழ் பெற்ற சொற்பொழிவில் அவர் உதிர்த்த வார்த்தைகளே இவை.—மத்தேயு 6:34, ஈஸி டு ரீட் வர்ஷன்.
“நாளைய கவலை நாளைக்கு” என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? நாளைய தினத்தைப்பற்றி யோசிக்காமல் இன்றைக்காக மட்டுமே நீங்கள் வாழ வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமா? இது, இயேசுவும் அவருடைய சீஷர்களும் நம்பிய காரியங்களுக்கு இசைவாக இருக்கிறதா?
“கவலைப்படாதிருங்கள்”
மத்தேயு 6:25-32-ல் இயேசு சொன்னவற்றை பைபிளைத் திறந்து நீங்களே வாசித்துப் பாருங்களேன். அதில் ஒரு பகுதி பின்வருமாறு: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். . . . ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; . . . கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு [“வாழ்நாளோடு,” NW] ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; . . . ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.”
தம்முடைய பேச்சின் இப்பகுதியை இரண்டு அறிவுரைகளுடன் இயேசு நிறைவு செய்கிறார். அதில் ஒன்று, “முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” இரண்டாவது அறிவுரை, “நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.”—மத்தேயு 6:33, 34.
உங்கள் தேவைகளை பிதா அறிந்திருக்கிறார்
அங்கிருந்த சீஷர்களிடமும் மற்ற விவசாயிகளிடமும் ‘விதைக்கவோ அறுக்கவோ களஞ்சியங்களில் சேர்த்துவைக்கவோ’ வேண்டாமென்று இயேசு சொல்லியிருப்பாரென நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது தங்களுக்குத் தேவையான உடைகளுக்காக ‘உழைக்கவோ, நூற்கவோ’ வேண்டாமென அவர் சொல்லியிருப்பாரா? (நீதிமொழிகள் 21:5; 24:30-34; பிரசங்கி 11:4) நிச்சயம் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார். அவர்கள் வேலை செய்யாதிருந்தால் உண்ணவோ உடுக்கவோ எதுவுமின்றி ‘அறுப்பின் சமயத்திலே பிச்சைகேட்கும்’ கதிக்கு ஆளாவார்கள்.—நீதிமொழிகள் 20:4.
கவலைப்படுவதைப்பற்றி என்ன சொல்லலாம்? தம்முடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கவலையை அறவே ஒழித்துவிட முடியுமென இயேசு அர்த்தப்படுத்தினாரா? அது நடைமுறைக்கு ஒத்துவராததாக இருந்திருக்கும். இயேசு தாமே கவலைப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட அந்த இரவில் மனவேதனையில் தவித்தார், கவலையில் உருகினார்.—லூக்கா 22:44.
அப்படியிருக்க, இயேசு ஓர் அடிப்படை உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும்சரி அளவுக்கு மீறி கவலைப்படுவதால் அதைச் சரிசெய்துவிடவே முடியாது. உதாரணமாக, இப்படிக் கவலைப்படுவதால் உங்களுடைய வாழ்நாளைக் கூட்ட முடியாது. ஆம், உங்களுடைய ‘வாழ்நாளோடு ஒரு முழத்தைக் கூட்ட முடியாது’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:27, NW) சொல்லப்போனால், சதா கவலைப்பட்டுக்கொண்டே இருப்பது உங்கள் ஆயுளையே குறைத்துவிடலாம்.
இயேசுவின் அறிவுரை நடைமுறைக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. நாம் கவலைப்படுகிற விஷயங்களில் பலவும் நிஜத்தில் நடக்காமலேயே போகலாம். இரண்டாம் உலகப் போரின் துயர்மிகுந்த காலத்தைக் குறித்ததில் பிரிட்டிஷ் மேதை வின்ஸ்டன் சர்ச்சில் இந்த உண்மையைப் புரிந்துகொண்டார். அச்சமயத்தில் தனக்கிருந்த சில கவலைகளைக் குறித்து அவர் இவ்வாறு எழுதினார்: “என்னுடைய கவலைகளையெல்லாம் நான் மனதுக்குள் அசைபோட்டபோது, மரணப்படுக்கையிலிருந்த ஒரு வயதான ஆளின் கதைதான் என் நினைவுக்கு வந்தது; தனக்கு ஏதேதோ பிரச்சினைகள் வருமென நினைத்து அவர் கவலைப்பட்டார். ஆனால் அவற்றில் பெரும்பாலான பிரச்சினைகள் தலைகாட்டவே இல்லை என்பதாக அவர் சொன்னார்.” உண்மையில், ஒவ்வொரு நாளுக்குரிய பிரச்சினைகளையும் அன்றன்று சமாளிப்பதே ஞானமானது; முக்கியமாக பிரச்சினைகளும் அழுத்தங்களும் நம்மை எளிதாக கவலையில் ஆழ்த்தும் என்பதால் இப்படிச் செய்வதே ஞானமானது.
‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்’
உண்மையில், தாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் சரீர மற்றும் உணர்ச்சிப்பூர்வ நலனைக் காட்டிலும் முக்கியமான ஒன்றை இயேசு மனதில் வைத்திருந்தார். வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றைப் பெறுவதைக் குறித்த கவலையும், சொத்துப்பத்தின்மீதும் இன்பங்களின்மீதும் உள்ள தீராத மோகமும் உத்தமமானவற்றிலிருந்து அதாவது மிக முக்கியமான காரியங்களிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிடலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். (பிலிப்பியர் 1:9) ‘வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றைப் பெறுவதைவிட மிக முக்கியமான காரியம் வேறெதுவாக இருக்க முடியும்?’ என நீங்கள் நினைக்கலாம். ஆம், கடவுளை வழிபடுவதோடு சம்பந்தப்பட்ட ஆன்மீக காரியங்களே அந்த முக்கியமான காரியம். ‘முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதே’ நம் வாழ்க்கையில் முதலிடம் பெற வேண்டிய காரியம் என்று இயேசு வலியுறுத்தினார்.—மத்தேயு 6:33.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த அநேகர் சொத்துபத்தைச் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள். செல்வத்தைக் குவிப்பதே அவர்களுடைய வாழ்க்கையில் தலையாய காரியமாக இருந்தது. என்றாலும் வித்தியாசமான மனப்பான்மையை வளர்க்கும்படி தம் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் இயேசு அறிவுறுத்தினார். அவர்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த மக்களாக இருந்ததால், ‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்வது’ அவர்கள்மேல் ‘விழுந்த கடமையாக’ இருந்தது.—பிரசங்கி 12:13.
இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் பொருட்செல்வத்தைப் பற்றி சதா யோசித்துக் கொண்டிருந்தால், அதாவது ‘உலகக் கவலையிலும் ஐசுவரியத்தின் மயக்கத்திலும்’ மூழ்கிப்போயிருந்தால் கடவுளைப்பற்றி யோசித்துப் பார்க்கவே அவர்களுக்கு நேரமில்லாமல் போயிருக்கும். (மத்தேயு 13:22) “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 6:9) தம்மைப் பின்பற்றியவர்களை இந்தக் ‘கண்ணியிலிருந்து’ காக்க இயேசு விரும்பினார்; எனவேதான், “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” என்று நினைவூட்டினார். ‘ஆகாயத்துப் பட்சிகளை’ கடவுள் கவனிப்பதைப் போலவே அவர்களையும் கவனித்துக்கொள்வார். (மத்தேயு 6:26, 32) ஆகவே, அவர்கள் கவலையில் மூழ்கிவிடுவதற்குப் பதிலாக, பொருளாதாரத் தேவைகளுக்காகத் தங்களால் முடிந்தளவு உழைக்க வேண்டியிருந்தது; பிறகு மற்ற காரியங்களை யெகோவாவின் கைகளில் நம்பிக்கையோடு விட்டுவிட வேண்டியிருந்தது.—பிலிப்பியர் 4:6, 7.
“நாளைய கவலை நாளைக்கு” என இயேசு சொன்னபோது, இன்றைய பிரச்சினைகளோடுகூட நாளைக்கு என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்றும் நினைத்து அநாவசியமாகக் கவலைப்படக் கூடாது என்றே அவர் அர்த்தப்படுத்தினார். அவர் சொன்னதை மற்றொரு பைபிள் மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது: “நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலை கொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்.”—மத்தேயு 6:34, கத்தோலிக்க பைபிள்.
“உம்முடைய ராஜ்யம் வருவதாக”
நாளைக்கு என்ன நடக்குமோ என நினைத்து அநாவசியமாக கவலைப்படுவதற்கும் நாளைய தினத்தைப் பற்றியே சிந்திக்காமல் இருப்பதற்கும் இடையே பெரும் வித்தியாசமிருக்கிறது. நாளைய தினத்தைப்பற்றி யோசிக்க வேண்டாம் என இயேசு தம் சீஷர்களிடம் ஒருபோதும் சொல்லவில்லை. மாறாக, எதிர்காலத்திற்காக அதிக ஆர்வத்தோடு காத்திருக்கும்படியே அறிவுறுத்தினார். தங்களுடைய தற்போதைய தேவைகளுக்காக, அதாவது அன்றாட உணவுக்காக அவர்கள் ஜெபிப்பது சரியானதே. ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கிற காரியங்களுக்காகவே அவர்கள் முதலில் ஜெபிக்க வேண்டும்; அதாவது கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காகவும் கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்காகவும் ஜெபிக்க வேண்டும்.—மத்தேயு 6:9-11.
நோவாவின் காலத்திலிருந்த மக்களைப் போல நாம் இருக்கக்கூடாது. ‘புசிப்பது குடிப்பது, பெண் கொள்வது பெண்கொடுப்பது’ ஆகிய காரியங்களில் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள்; அதனால், நடக்கவிருந்த காரியத்தைப்பற்றி அவர்கள் “உணராதிருந்தார்கள்”. அதன் விளைவு? ‘ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோனது.’ (மத்தேயு 24:36-42) எதிர்காலத்தை மனதில்வைத்து வாழ்வதன் அவசியத்தை நினைப்பூட்ட இந்த உண்மைச் சம்பவத்தை அப்போஸ்தலன் பேதுரு பயன்படுத்தினார். “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்” என்று அவர் எழுதினார்.—2 பேதுரு 3:5-7, 11, 12.
பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்தல்
ஆம், யெகோவாவின் நாளுக்காக நாம் ‘மிகுந்த ஆவலோடு காத்திருப்போமாக’. அவ்வாறு செய்வது நம் நேரம், சக்தி, திறமை, வளங்கள், ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ‘தேவ பக்தியை’ வெளிக்காட்டுகிற செயல்களைச் செய்வதற்கு கொஞ்சநேரமே இருக்குமளவுக்கு பொருட்செல்வங்களை பெறுவதிலேயே மூழ்கிப் போகக்கூடாது; அது வாழ்க்கையின் அத்தியாவசியக் காரியங்களாகவோ இன்ப நாட்டங்களாகவோ எதுவாக இருந்தாலும்சரி, அவற்றிலேயே நாம் மூழ்கிப் போகக்கூடாது. அன்றன்றுள்ள காரியங்களில் மட்டுமே கவனத்தை ஊன்ற வைக்கும்போது கைமேல் பலன் கிடைப்பதுபோல் தோன்றலாம்; ஆனாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும். இந்தப் பூமியில் அல்ல, ‘பரலோகத்திலே நமக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்பதுதான்’ அதிக ஞானமான காரியம் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 6:19, 20.
எதிர்காலத்திற்காக வானளாவிய திட்டங்களைத் தீட்டிய மனிதனைப் பற்றிய உவமையில் இயேசு இக்குறிப்பை வலியுறுத்தினார். அவன் கடவுளை மனதில் வைத்து திட்டம் தீட்டவில்லை; அவனுடைய திட்டங்கள் முழுக்கமுழுக்க சுயநலமானவையாக இருந்தன. அவனுடைய நிலம் அமோக விளைச்சலைத் தந்தது. அதனால், தன் களஞ்சியங்களை இடித்து அவற்றைப் பெரியதாகக் கட்டத் தீர்மானித்தான்; சாப்பிட்டு, குடித்து சொகுசாக வாழ்வதற்காக அப்படிச் செய்தான். அதில் என்ன தவறு இருந்தது? தன்னுடைய உழைப்பின் பலனை அனுபவிப்பதற்கு முன்பே அவன் இறந்துபோனான். அதுமட்டுமா, அவன் கடவுளுடன் பந்தத்தை வளர்க்கவில்லை. இயேசு பின்வருமாறு சொல்லி முடித்தார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.”—லூக்கா 12:15-21; நீதிமொழிகள் 19:21.
நீங்கள் என்ன செய்யலாம்?
இயேசு விவரித்த அந்த மனிதன் செய்த அதே தவறை நீங்களும் செய்யாதீர்கள். எதிர்காலத்திற்காக கடவுள் என்ன நோக்கம் வைத்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். கடவுள் தாம் செய்யவிருக்கும் காரியங்களைக் குறித்து மனிதருக்கு தெரிவிக்காமல் இருந்துவிடவில்லை. பண்டைய தீர்க்கதரிசியான ஆமோஸ் இவ்வாறு எழுதினார்: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” (ஆமோஸ் 3:7) யெகோவா தம் தீர்க்கதரிசிகள் வாயிலாகத் தெரிவித்திருக்கும் காரியங்களெல்லாம் அவருடைய ஏவுதலால் எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் உள்ளன.—2 தீமோத்தேயு 3:16, 17.
அவ்வாறு பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விஷயங்களில் ஒன்றே சீக்கிரத்தில் நடக்கவிருக்கிற விஷயம்: அது இதுவரை நடந்திராத அளவுக்கு பூமி முழுவதிலும் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தும். “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:21) இதை எந்த மனிதனாலும் தடுத்து நிறுத்தமுடியாது. சொல்லப்போனால், உண்மை வணக்கத்தார் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏன்? ஏனென்றால், இது பூமியிலிருந்து எல்லாத் தீமைகளையும் வேறோடு களைந்தெறியும்; அதோடு ‘புதிய வானமும் புதிய பூமியும்’ வருவதற்கு வழி திறக்கும்; அதாவது புதிய பரலோக அரசாங்கமும் புதிய மனித சமுதாயமும் வருவதற்கு வழிவகுக்கும். அந்தப் புதிய உலகில், ‘[மக்களின்] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமோ அலறுதலோ வருத்தமோகூட இராது.’—வெளிப்படுத்துதல் 21:1-4.
அப்படியானால், அந்த மாற்றங்களைக் குறித்து பைபிள் சொல்பவற்றை ஆராய்ந்து பார்க்க நேரம் ஒதுக்குவது நியாயமாகப் படவில்லையா? அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு உதவி தேவையா? உங்களுக்கு உதவும்படி யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள். அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள். எப்படியானாலும் சரி, இன்றைக்காக மட்டுமல்ல அருமையான எதிர்காலத்திற்காகவும் வாழ உறுதியாய் இருங்கள்.
[பக்கம் 7-ன் படங்கள்]
“கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்”