செய்வதா செய்யாமலிருப்பதா?
“பிறர் உனக்கு என்ன செய்யக் கூடாதென்று நினைக்கிறாயோ அதை நீ அவர்களுக்கு செய்யாதிரு.” இந்தத் தார்மீக பழமொழியை புகழ்மிக்க சீன ஆசிரியரும் தத்துவஞானியுமான கன்பூசியஸ் கூறியதாக சொல்லப்படுகிறது. இன்று, சுமார் 2,500 ஆண்டுகளுக்குப் பின்னும், மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் விலகியிருந்தாலே போதும், ஒருவன் தனது தார்மீக கடமையை செய்துவிட்டதாக அநேகர் நம்புகின்றனர்.
நெறிமுறை சம்பந்தமாக இந்தக் கன்பூசியக் கொள்கைக்கு ஓரளவு மதிப்பு இருக்கிறது என்பது உண்மையே. ஆனால், மறுபட்சத்தில், பைபிளோ மானிட நடத்தை மற்றும் உறவு சம்பந்தமாக மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. சக மனிதருக்கு விரோதமாக செய்யப்படும் தவறுகளைப் பற்றி மட்டும் சொல்லாமல், வேண்டுமென்றே அல்லது எதிர்பாராத விதமாக செய்யாமல் விட்டுவிடப்படும் தவறுகளைப் பற்றியும் பைபிள் கூறுகிறது. கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” (யாக்கோபு 4:17) பிறருக்கு எந்தத் தீமையும் செய்யக் கூடாது என்று மட்டுமே கிறிஸ்தவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்து இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12.
தங்களை எல்லாரும் எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறார்களோ அப்படியே எல்லா மனிதரும் பிறரை நடத்த வேண்டுமென கடவுள் ஆதியில் நோக்கம் கொண்டார். பிறருடைய நலனுக்கானவற்றை செய்வதில் அவர் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்திருப்பதை மனிதர்களைப் படைத்த விதத்தில் காணலாம்: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27) கடவுள் அன்புடன் மனிதருக்கு மனசாட்சியை கொடுத்திருக்கிறார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது; அந்த மனசாட்சியை சரியாக பயிற்றுவிக்கும்போது, தங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறார்களோ அப்படியே மற்றவர்களையும் நடத்துவதற்கு அது அவர்களுக்கு உதவுகிறது.
புத்திகெட்ட, சுயநலமான மக்கள் கையில் சிக்கி, இன்று அநேகர் நம்பிக்கையும் ஆதரவுமின்றி தவிக்கிறார்கள். பிறருக்கு கெட்ட செயல்களையும் தீமை விளைவிக்கும் காரியங்களையும் செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, பிறருக்கு நன்மையானதையும் பயனுள்ளதையும் செய்வதும்கூட மிக அவசியம் என்பது தெளிவாக இருக்கிறது. இதனால், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் மகத்தான நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களும் கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் மனப்பூர்வமாக உதவி அளிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கிறார்கள். பைபிளிலிருந்து நற்செய்தியை அக்கம்பக்கத்தாருக்கு அறிவிக்கச் செல்லும்போது, அன்பினால் தூண்டப்பட்டு அதை செய்கிறார்கள், மற்றவர்கள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறார்களோ அதையே மற்றவர்களுக்கு செய்கிறார்கள்.