பாடம் 16
பூமியில் இயேசு என்ன செய்தார்?
இயேசு என்று சொன்னாலே சிலருக்கு ஒரு கைக்குழந்தைதான் ஞாபகத்துக்கு வருகிறது. சிலருக்கு அவர் இறந்த விதம் ஞாபகத்துக்கு வருகிறது. இன்னும் சிலர் அவர் ஒரு தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். ஆனால், பூமியில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர் உண்மையிலேயே யார் என்று தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பாடத்தில், இயேசு செய்த சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம். அதைத் தெரிந்துகொள்வது உங்களுக்கு எப்படி உதவி செய்யும் என்றும் பார்க்கலாம்.
1. இயேசு செய்த முக்கியமான வேலை என்ன?
‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதுதான்’ இயேசு செய்த முக்கியமான வேலை. (லூக்கா 4:43-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கம் நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் என்பதுதான் அவர் சொன்ன நல்ல செய்தி.a இந்த அருமையான செய்தியை மக்களுக்கு சொல்வதற்காக மூன்றரை வருஷங்கள் இயேசு கடுமையாக உழைத்தார்.—மத்தேயு 9:35.
2. இயேசு ஏன் அற்புதங்களைச் செய்தார்?
‘இயேசுவின் மூலம் கடவுள் . . . [நிறைய] வல்லமையான செயல்களையும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 2:22) கடவுளுடைய சக்தியின் உதவியோடு இயேசு புயல்காற்றை நிறுத்தினார், ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுத்தார், நோயாளிகளைக் குணப்படுத்தினார், இறந்தவர்களைக்கூடத் திரும்பவும் உயிரோடு கொண்டுவந்தார். (மத்தேயு 8:23-27; 14:15-21; மாற்கு 6:56; லூக்கா 7:11-17) இயேசு செய்த அற்புதங்கள், கடவுள்தான் அவரை அனுப்பினார் என்பதையும், எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டின.
3. இயேசுவின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
இயேசு எல்லா சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். (யோவான் 8:29-ஐ வாசியுங்கள்.) எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தபோதும், கடைசி மூச்சுவரைக்கும் யெகோவா சொன்னபடிதான் நடந்தார். கஷ்டமான சூழ்நிலைகளில்கூட மனிதர்களால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். இப்படி, “அவருடைய அடிச்சுவடுகளை [நாம்] நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக [நமக்கு] ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.”—1 பேதுரு 2:21.
ஆராய்ந்து பார்க்கலாம்!
இயேசு எப்படி நல்ல செய்தியை மக்களுக்குச் சொன்னார் என்றும், எப்படி அற்புதங்களைச் செய்தார் என்றும் இப்போது பார்க்கலாம்.
4. நல்ல செய்தியைச் சொன்னார்
இயேசு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மண்ணிலும் புழுதியிலும் நடந்தேபோய் நல்ல செய்தியை எல்லாருக்கும் சொன்னார். லூக்கா 8:1-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
தன்னைத் தேடிவந்தவர்களிடம் மட்டும்தான் இயேசு நல்ல செய்தியைச் சொன்னாரா?
நல்ல செய்தியைச் சொல்வதற்கு இயேசு என்ன முயற்சி எடுத்தார்?
மேசியா நல்ல செய்தியைச் சொல்வார் என்று கடவுள் முன்கூட்டியே சொல்லியிருந்தார். ஏசாயா 61:1, 2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இயேசு எப்படி இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்?
இன்று மக்களுக்கு இந்த நல்ல செய்தி தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
5. நல்ல நல்ல பாடங்களைக் கற்றுத்தந்தார்
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொன்னது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பாடங்களையும் இயேசு கற்றுத்தந்தார். சில உதாரணங்களை, ஒரு மலைமேல் அவர் கொடுத்த புகழ்பெற்ற பேச்சில் பார்க்கலாம். மத்தேயு 6:14, 34-ஐயும் 7:12-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இந்த வசனங்களில் இயேசு என்ன அறிவுரைகளைக் கொடுத்தார்?
அந்த அறிவுரைகள் இன்றும் உதவும் என்று நினைக்கிறீர்களா?
6. அற்புதங்களைச் செய்தார்
நிறைய அற்புதங்களைச் செய்ய இயேசுவுக்கு யெகோவா சக்தி கொடுத்தார். அதற்கு ஒரு உதாரணத்தைத் தெரிந்துகொள்ள மாற்கு 5:25-34-ஐப் படியுங்கள் அல்லது வீடியோவைப் பாருங்கள். பிறகு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
உடம்பு சரியில்லாத பெண்ணுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
இந்த அற்புதத்தில் உங்கள் மனதைத் தொட்ட விஷயம் எது?
யோவான் 5:36-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இயேசு செய்த அற்புதங்கள் எந்த உண்மைக்கு ‘சாட்சி கொடுத்தன’ அதாவது எதை நிரூபித்துக் காட்டின?
உங்களுக்குத் தெரியுமா?
இயேசுவைப் பற்றிய தகவல்கள் முக்கியமாக பைபிளிலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்கு புத்தகங்களில் இருக்கின்றன. இவற்றை சுவிசேஷங்கள் என்று சொல்கிறோம். ஒவ்வொரு சுவிசேஷ எழுத்தாளரும் இயேசுவைப் பற்றி மற்ற சுவிசேஷ எழுத்தாளர்கள் எழுதாத சில விவரங்களை எழுதியிருக்கிறார்கள். சுவிசேஷங்களைப் படிக்கும்போது இயேசுவின் வாழ்க்கை நம் மனதில் படம்போல் ஓடும்.
மத்தேயு
முதல் சுவிசேஷத்தை எழுதினார். இயேசு சொல்லித்தந்த நிறைய விஷயங்களை, முக்கியமாகக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சொல்லித்தந்த விஷயங்களை எழுதினார்.
மாற்கு
எழுதிய சுவிசேஷம்தான் இருப்பதிலேயே சின்னது. அது ரொம்ப விறுவிறுப்பான ஒரு பதிவு.
லூக்கா
எழுதிய சுவிசேஷம், ஜெபத்தை இயேசு எவ்வளவு முக்கியமாக நினைத்தார், பெண்களை எப்படி நடத்தினார் என்றெல்லாம் விசேஷமாகச் சொல்கிறது.
யோவான்
எழுதிய சுவிசேஷம், இயேசு எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள உதவுகிறது. இயேசு தன் நெருங்கிய நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொன்ன நிறைய விஷயங்களை அது சொல்கிறது.
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “இயேசு ஒரு நல்ல மனுஷர், அவ்வளவுதான்.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சுருக்கம்
இயேசு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார், அற்புதங்களைச் செய்தார், எல்லா சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.
ஞாபகம் வருகிறதா?
பூமியில் என்ன முக்கியமான வேலையை இயேசு செய்தார்?
இயேசு செய்த அற்புதங்கள் எதை நிரூபித்துக் காட்டுகின்றன?
இயேசு என்ன நல்ல நல்ல பாடங்களைச் சொல்லிக்கொடுத்தார்?
அலசிப் பாருங்கள்
இயேசு எந்த விஷயத்தைப் பற்றி அதிகமாகப் பேசினார்?
“கடவுளுடைய அரசாங்கம்—இயேசுவுக்கு ஏன் முக்கியமாக இருந்தது?” (ஆன்லைன் கட்டுரை)
இயேசு செய்த அற்புதங்கள் உண்மையிலேயே நடந்தன. இதை நாம் ஏன் நம்பலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“இயேசுவின் அற்புதங்கள்—நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?” (காவற்கோபுரம், ஜூலை 15, 2004)
இயேசு தன்னலம் இல்லாமல் அன்பு காட்டிய விதம் ஒருவரின் சுபாவத்தை எப்படி மாற்றியது என்று படித்துப் பாருங்கள்.
இயேசுவின் ஊழியத்தில் நடந்த சம்பவங்களைக் காலவரிசைப்படி தெரிந்துகொள்ளுங்கள்.
a கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய விவரங்களைப் பாடங்கள் 31-33-ல் பார்ப்போம்.