யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயம்
“இத்தகைய பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார், . . . பரிசுத்த ஸ்தலத்தின் மற்றும் மனிதன் அல்ல, யெகோவா ஸ்தாபித்த உண்மையான கூடாரத்தின் ஒரு பொது ஊழியர்.”—எபிரெயர் 8:1, 2, NW.
1. பாவிகளான மனிதவர்க்கத்துக்கு அன்புள்ள என்ன ஏற்பாட்டை கடவுள் செய்தார்?
யெகோவா தேவன், மனிதவர்க்கத்தின்மீதான தம்முடைய மிகுந்த அன்பினால், உலத்தின் பாவங்களை நீக்குவதற்கு ஒரு பலியை அருளினார். (யோவான் 1:29; 3:16) தம்முடைய முதற்பேறான குமாரனின் உயிரை, பரலோகத்திலிருந்து, மரியாள் என்ற பெயர்கொண்ட யூதக் கன்னியின் கர்ப்பத்துக்குள் மாற்றுவது இதற்குத் தேவைப்பட்டது. அவள் கர்ப்பந்தரிக்கும் பிள்ளை “பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்,” என்று யெகோவாவின் தூதன் மரியாளுக்குத் தெளிவாக விளக்கிக் கூறினார். (லூக்கா 1:34, 35) மரியாளுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்த யோசேப்புக்கு, இயேசுவின் அற்புதமான கர்ப்பந்தரிப்பு இயல்பைப் பற்றி சொல்லப்பட்டது, மேலும் இவரே “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றும் அறிந்துகொண்டார்.—மத்தேயு 1:20, 21.
2. இயேசு ஏறக்குறைய 30 வயதாக இருந்தபோது என்ன செய்தார், ஏன்?
2 இயேசு பெரியவராக வளர்ந்தபோது, தம்முடைய அற்புதமான பிறப்பைப் பற்றிய இந்த உண்மைகள் சிலவற்றைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். பூமியில் அவர் செய்வதற்கு உயிரைக் காக்கும் ஒரு வேலையை அவருடைய பரம பிதா வைத்திருந்தார் என்று அவர் அறிந்திருந்தார். ஆகையால், ஏறக்குறைய 30 வயதான முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதராக, இயேசு, கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய யோவானிடம் யோர்தான் நதியில் முழுக்காட்டப்படும்படி வந்தார்.—மாற்கு 1:9; லூக்கா 3:23.
3. (அ) “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை,” என்ற வார்த்தைகளால் இயேசு கருதினது என்ன? (ஆ) தம்முடைய சீஷராகும்படி விரும்பும் யாவருக்கும் என்ன சிறந்த முன்மாதிரியை இயேசு வைத்தார்?
3 தாம் முழுக்காட்டப்பட்ட அந்தச் சமயத்தில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தார். (லூக்கா 3:21) பின்னால் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டுக் காட்டினபடி, அவர் தம்முடைய வாழ்க்கையின் இந்தச் சமயத்திலிருந்து சங்கீதம் 40:6-8-ல் சொல்லப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றினதாகத் தெரிகிறது: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.” (எபிரெயர் 10:5) எருசலேமின் ஆலயத்தில் மிருக பலிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டுவருவதை கடவுள் “விரும்பவில்லை” என்று தாம் தெரிந்திருந்தாரென இயேசு காட்டினார். அவற்றிற்குப் பதிலாக, பலியாகச் செலுத்தப்படுவதற்கு, இயேசுவாகிய தமக்கு ஒரு பரிபூரண மனித சரீரத்தை கடவுள் ஆயத்தம் செய்தார் என்பதை அவர் உணர்ந்தார். மிருக பலிகள் செலுத்தப்படுவதற்குரிய மேலுமான எந்தத் தேவையையும் இது நீக்கிவிடும். கடவுளுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிவதற்கான தம்முடைய இருதயப்பூர்வ ஆவலைத் தெரிவிப்பவராய், இயேசு தொடர்ந்து இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது.” (எபிரெயர் 10:7) பிற்காலங்களில் தம்முடைய சீஷர்களாகப்போகிற எல்லாருக்கும் அந்நாளில் இயேசு, எத்தகைய தைரியமும் தன்னலமற்ற தன்மையுமுள்ள தேவபக்திக்குரிய சிறந்த முன்மாதிரியை வைத்தார்!—மாற்கு 8:34.
4. இயேசு தம்மை முன்வந்து அளித்ததற்கு, கடவுள் தம் அங்கீகாரத்தை எவ்வாறு காட்டினார்?
4 இயேசுவின் முழுக்காட்டுதல் சமய ஜெபத்துக்குக் கடவுள் தம் அங்கீகாரத்தைக் காட்டினாரா? இயேசு தெரிந்துகொண்ட அப்போஸ்தலரில் ஒருவர் நமக்கு பதில் அளிக்கட்டும்: “முழுக்காட்டப்பட்ட பின்பு இயேசு நீரிலிருந்து உடனடியாக வெளிவந்தார்; இதோ! வானங்கள் அவருக்குத் திறக்கப்பட்டன, கடவுளுடைய ஆவி ஒரு புறாவைப்போல் தம்மீது இறங்கிவருவதை அவர் கண்டார். மேலும், இதோ! வானங்களிலிருந்து ஒரு குரல் இதைச் சொன்னது: ‘இவர் என் குமாரன், மிகவும் நேசமானவர், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்.’”—மத்தேயு 3:16, 17, NW; லூக்கா 3:21, 22.
5. சொல்லர்த்தமான ஆலய பலிபீடம் எதைச் சித்தரித்துக் காட்டுவதாக இருந்தது?
5 பலிக்காக இயேசுவின் சரீரம் அளிக்கப்பட்டதைக் கடவுள் ஏற்றுக்கொண்டதானது, ஆவிக்குரிய கருத்தில், எருசலேமின் ஆலயத்தில் இருந்ததைப் பார்க்கிலும் பெரிய ஒரு பலிபீடம் முன்னிலைக்கு வரலாயிற்று என்று பொருள்பட்டது. மிருகங்கள் பலியாக அளிக்கப்பட்ட சொல்லர்த்தமான பலிபீடமானது, ஆவிக்குரிய அந்தப் பலிபீடத்துக்கு முன்நிழலாக இருந்தது. அது உண்மையில், இயேசுவின் மனித உயிரை, பலியாக ஏற்பதற்கான கடவுளுடைய “சித்தம்” அல்லது ஏற்பாடாக இருந்தது. (எபிரெயர் 10:10) அதனிமித்தமே அப்போஸ்தலன் பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு எழுத முடிந்தது: “நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் [அல்லது, ஆலயத்தில்] ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.” (எபிரெயர் 13:10) வேறு வார்த்தைகளில், உண்மையானக் கிறிஸ்தவர்கள், மேம்பட்ட ஒரு பாவநிவாரண பலியிலிருந்து பயனடைகிறார்கள், யூத ஆசாரியர்கள் பெரும்பான்மையர் அதை ஏற்காது தள்ளிவிட்டனர்.
6. (அ) இயேசுவின் முழுக்காட்டுதலின்போது எது முன்னிலைக்கு வரலாயிற்று? (ஆ) மேசியா, அல்லது கிறிஸ்து என்ற பட்டப்பெயரின் அர்த்தம் என்ன?
6 இயேசுவை பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்ததானது, இயேசு பிரதான ஆசாரியராகச் சேவிப்பவராய், கடவுள், தம்முடைய ஆவிக்குரிய ஆலய ஏற்பாடு முழுவதையும் இப்போது கொண்டுவந்துவிட்டார் என்று பொருள்பட்டது. (அப்போஸ்தலர் 10:38; எபிரெயர் 5:5) இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தின் ஆண்டு, ‘திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷம்’ என்பதாக நுட்பமாய்க் குறிப்பிடுவதற்கு சீஷனாகிய லூக்கா தேவாவியால் ஏவப்பட்டார். (லூக்கா 3:1-3) அது பொ.ச. 29-ம் ஆண்டுக்கு ஒத்துள்ளது—எருசலேம் மதில்கள் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கு அரசன் அர்தசஷ்டா கட்டளை கொடுத்த சமயத்திலிருந்து சரியாக 69 வார ஆண்டுகள், அல்லது 483 ஆண்டுகள் ஆகியிருந்தன. (நெகேமியா 2:1, 5-8) தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், முன்னறிவிக்கப்பட்ட அந்த ஆண்டில் “பிரபுவாகிய மேசியா” தோன்றுவார். (தானியேல் 9:25) யூதர்கள் பலர் இதைப் பற்றி உணர்வுடையோராக இருந்தனரென்று தெரிகிறது. மேசியா, அல்லது கிறிஸ்து தோன்றுவதைக் குறித்து “ஜனங்கள் எதிர்பார்த்திருக்கவே” என்று லூக்கா அறிவிக்கிறார். எபிரெய மற்றும் கிரேக்கச் சொற்களிலிருந்து வரும் இந்தப் பட்டப்பெயர்கள் “அபிஷேகஞ்செய்யப்பட்டவர்” என்ற அதே அர்த்தத்தை உடையவையாக இருக்கின்றன.—லூக்கா 3:15.
7. (அ) ‘மகா பரிசுத்தமானதை’ கடவுள் எப்போது அபிஷேகம் செய்தார், இதன் அர்த்தமென்ன? (ஆ) இயேசுவின் முழுக்காட்டுதலின்போது வேறு என்ன நடந்தது?
7 இயேசு முழுக்காட்டப்பட்ட சமயத்தில், கடவுளுடைய பரலோக இருப்பிடம், பெரிய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில் ‘மகா பரிசுத்தமானதாக’ அபிஷேகம் செய்யப்பட்டது அல்லது தனியாகப் பிரித்து வைக்கப்பட்டது. (தானியேல் 9:24, தி.மொ.) ‘மனிதன் அல்ல, யெகோவா அமைத்த உண்மையான கூடாரம் [அல்லது, ஆலயம்],’ செயல்பாட்டிற்குள் வரலாயிற்று. (எபிரெயர் 8:2, NW) மேலும், தண்ணீராலும் பரிசுத்த ஆவியாலும் தாம் முழுக்காட்டப்பட்டதன்மூலம். மனிதராகிய இயேசு கிறிஸ்து, கடவுளுடைய ஆவிக்குரிய குமாரனாக மறுபடியும் பிறந்தார். (யோவான் 3:3-ஐ ஒப்பிடுக.) உரிய காலத்தில் கடவுள் தம்முடைய குமாரனை பரலோக வாழ்க்கைக்குத் திரும்ப அழைத்துக்கொள்வார், அங்கே அவர் தம்முடைய பிதாவின் வலது பாரிசத்தில், “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” அரசராகவும் ஆசாரியராகவும் “நித்திய” காலத்துக்கும் சேவிப்பார் என்று இது பொருள்பட்டது.—எபிரெயர் 6:20; சங்கீதம் 110:1, 4.
பரலோக மகா பரிசுத்த ஸ்தலம்
8. பரலோகத்தில் கடவுளுடைய சிங்காசனம் என்ன புதிய அம்சங்களை இப்போது ஏற்றிருந்தது?
8 இயேசு முழுக்காட்டப்பட்ட நாளில், கடவுளுடைய பரலோக சிங்காசனம் புதிய அம்சங்களை ஏற்றது. உலகத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்ய பரிபூரண மனித பலி ஒன்றை கடவுள் குறிப்பிட்டதானது, மனிதனின் பாவத்தன்மைக்கு நேர்மாறாக கடவுளுடைய பரிசுத்தத்தை அழுத்திக் காட்டியது. கடவுள் தாம் சமாதானப்படுத்தப்பட, அல்லது நட்பிணக்கம் செய்யப்பட மனமுள்ளவராக இப்போது காட்டினதிலும் கடவுளுடைய இரக்கம் முனைப்பாக விளங்கச் செய்யப்பட்டது. இவ்வாறு பரலோகத்தில் கடவுளுடைய சிங்காசனம், ஆலயத்தின் மிக உட்புற அறை போலாகியது. அங்கே பிரதான ஆசாரியர் ஆண்டுக்கு ஒரு தடவை, அடையாள அர்த்தமுள்ள ஒரு முறையில், பாவநிவாரணம் செய்வதற்கு மிருக இரத்தத்தோடு பிரவேசித்தார்.
9. (அ) பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையிலிருந்த அந்தத் திரை எதைச் சித்தரித்துக் காட்டினது? (ஆ) இயேசு எவ்வாறு கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின் திரைக்கு அப்பால் பிரவேசித்தார்?
9 பரிசுத்த ஸ்தலத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பிரித்த திரையானது இயேசுவின் மாம்ச உடலைச் சித்தரித்துக் காட்டினது. (எபிரெயர் 10:19, 20) அதுவே, இயேசு பூமியில் மனிதராக இருந்தபோது, தம்முடைய பிதாவின் சமுகத்துக்குள் பிரவேசிப்பதிலிருந்து அவரைத் தடுத்து வைத்தத் தடையாக இருந்தது. (1 கொரிந்தியர் 15:50) இயேசு மரணமடைந்த சமயத்தில், “தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.” (மத்தேயு 27:51) இது, பரலோகத்துக்குள் இயேசு பிரவேசிப்பதைத் தடுத்து வைத்த அந்தத் தடை இப்போது நீக்கப்பட்டதென்று செயல்படுத்திக் காட்டும் முறையில் குறிப்பிட்டது. மூன்று நாட்களுக்குப் பின், யெகோவா தேவன் முதன்மையான ஓர் அற்புதத்தை நடப்பித்தார். இயேசுவை மரித்தோரிலிருந்தது அவர் எழுப்பினார். மாம்சத்தையும் இரத்தத்தையும் கொண்ட சாகுந்தன்மையுள்ள மனிதராக அல்ல, உயிருடன் ‘என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற’ மகிமையான ஆவி சிருஷ்டியாக அவரை எழுப்பினார். (எபிரெயர் 7:24) நாற்பது நாட்களுக்குப் பின், இயேசு பரலோகத்துக்கு எழும்பிச் சென்று, “நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி,” உண்மையான ‘மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள்’ பிரவேசித்தார்.—எபிரெயர் 9:24.
10. (அ) இயேசு தம்முடைய பலியின் விலைமதிப்பை தம்முடைய பரலோகப் பிதாவுக்குச் செலுத்தின பின்பு என்ன நடந்தது? (ஆ) பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டது கிறிஸ்துவின் சீஷர்களுக்கு எதைக் குறித்தது?
10 உலகத்தின் பாவங்களுக்கான நிவாரணமாக இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தினுடைய விலைமதிப்பை கடவுள் ஏற்றுக்கொண்டாரா? நிச்சயமாகவே, அவர் ஏற்றுக்கொண்டார். இதற்கான நிரூபணம், இயேசு உயிர்த்தெழுந்து சரியாக 50 நாட்களானப் பின்பு, பெந்தெகொஸ்தே பண்டிகை நாளில் வந்தது. எருசலேமில் ஒன்றாகக் கூடியிருந்த இயேசுவின் 120 சீஷர்கள்மீது கடவுளுடைய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. (அப்போஸ்தலர் 2:1, 4, 33) தங்கள் பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவைப்போல், கடவுளுடைய பெரிய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டின்கீழ், “ஆவிக்குரிய பலிகளைச் செலுத்தும்படி பரிசுத்த ஆசாரியக் கூட்டமாக” சேவிப்பதற்கு அவர்கள் இப்போது அபிஷேகம் செய்யப்பட்டார்கள். (1 பேதுரு 2:5, தி.மொ.) மேலுமாக, அபிஷேகம் செய்யப்பட்ட இவர்கள் ஒரு புதிய ஜனமாக, கடவுளுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலான ‘பரிசுத்த ஜனமாக’ அமைந்தனர். அதுமுதற்கொண்டு, இஸ்ரவேலைப் பற்றிய நற்காரியங்களின் எல்லா தீர்க்கதரிசனங்களும், எரேமியா 31:31-ல் பதிவுசெய்யப்பட்ட “புது உடன்படிக்கை” வாக்கு போன்றவை யாவும், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையாகிய, உண்மையான ‘தேவனுடைய இஸ்ரவேலுக்கே’ பொருந்தும்.—1 பேதுரு 2:9; கலாத்தியர் 6:16.
கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின்
மற்ற அம்சங்கள்
11, 12. (அ) இயேசுவின் காரியத்தில், அந்த ஆசாரியரின் பிரகாரம் எதைச் சித்தரித்துக் காட்டினது, அவரைப் பின்பற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் காரியத்தில் அது என்னவாக உள்ளது? (ஆ) அந்தத் தண்ணீர் தொட்டி எதைச் சித்தரித்துக் காட்டுகிறது, அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது?
11 மகா பரிசுத்த ஸ்தலமானது, கடவுள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ‘பரலோகத்தைத்தானே’ படமாகக் குறித்தபோதிலும், கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின் மற்ற அம்சங்கள் யாவும் பூமியிலுள்ள காரியங்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. (எபிரெயர் 9:24) எருசலேமிலிருந்த ஆலயத்தில், ஆசாரியருக்குரிய உட்புற பிரகாரம் ஒன்று இருந்தது, அதில், பலிபீடம் ஒன்றும் பெரிய தண்ணீர் தொட்டி ஒன்றும் அடங்கியிருந்தன. பரிசுத்த சேவையை நிறைவேற்றுவதற்கு முன்பாகத் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள ஆசாரியர்கள் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தினர். கடவுளுடைய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில் இந்தக் காரியங்கள் எவற்றை சித்தரித்துக் காட்டுகின்றன?
12 ஆசாரியருக்குரிய அந்த உட்பிரகாரம், இயேசு கிறிஸ்துவின் காரியத்தில், கடவுளுடைய பரிபூரண மனிதக் குமாரனாக அவருடைய பாவமற்ற நிலையை சித்தரித்துக் காட்டினது. கிறிஸ்துவைப் பின்பற்றுவோரான அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், இயேசுவின் பலியில் விசுவாசம் காட்டுவதன்மூலம், நீதியுள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆகையால், பாவமில்லாதவர்கள் என்பதுபோல் கடவுள் அவர்களை நியாயமாய்க் கையாளலாம். (ரோமர் 5:1; 8:1, 33) ஆகவே, இந்தப் பிரகாரம், பரிசுத்த ஆசாரியத்துவத்தின் தனி உறுப்பினர், கடவுளுக்கு முன்பாக அனுபவித்து மகிழும் நீதியுள்ளதாக கருதப்படும் மனித நிலையையும் சித்தரித்துக் காட்டுகிறது. அதே சமயத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இன்னும் அபூரணராக இருக்கின்றனர், பாவம் செய்துவிடக்கூடிய நிலையில் உள்ளனர். பிரகாரத்திலிருந்த தண்ணீர் தொட்டி, கடவுளுடைய வார்த்தையை சித்தரித்துக் காட்டுகிறது. பரிசுத்த ஆசாரியத்துவத்தைப் படிப்படியாகச் சுத்திகரிப்பதற்கு, பிரதான ஆசாரியர் இதைப் பயன்படுத்துகிறார். இந்தச் சுத்திகரிப்பு வழிமுறைக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துவதன்மூலம், கடவுளுக்கு நற்புகழைக் கொண்டுவருவதும் புறம்பேயுள்ளவர்களை அவருடைய தூய்மையான வணக்கத்துக்குக் கவர்ந்திழுப்பதுமான சிறப்பு வாய்ந்த தோற்றத்தை அவர்கள் அடைந்துள்ளனர்.—எபேசியர் 5:25, 26; மல்கியா 3:1-3-ஐ ஒப்பிடுக.
பரிசுத்த ஸ்தலம்
13, 14. (அ) ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலம், இயேசுவின் காரியத்திலும் அவரைப் பின்பற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் காரியத்திலும் எதைச் சித்தரித்துக் காட்டுகிறது? (ஆ) பொன் குத்துவிளக்கு எதைச் சித்தரித்துக் காட்டுகிறது?
13 ஆலயத்தின் முதல் அறையானது, பிரகாரத்தைப் பார்க்கிலும் உயர்ந்த ஒரு நிலைமைக்கு படக்குறிப்பாக உள்ளது. பரிபூரண மனிதராகிய இயேசு கிறிஸ்துவின் காரியத்தில் அது, அவர் ஆவிக்குரிய குமாரனாகப் பரலோக வாழ்க்கைக்குத் திரும்பும்படி உறுதிசெய்த அவருடைய மறுபிறப்பைப் படமாகக் குறிக்கிறது. அவரைப் பின்பற்றுவோரான அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களும், கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் கொண்டுள்ள தங்கள் விசுவாசத்தின் ஆதாரத்தின்பேரில் நீதிமான்களாகத் தீர்க்கப்பட்ட பின்பு, கடவுளுடைய ஆவி இந்தத் தனிப்பட்ட முறையில் செயல்படுவதை அனுபவிக்கின்றனர். (ரோமர் 8:14-17) “ஜலத்தினாலும் [அதாவது, தங்கள் முழுக்காட்டுதலினாலும்] ஆவியினாலும்” அவர்கள் கடவுளுடைய ஆவிக்குரிய குமாரராக ‘மறுபடியும் பிறக்கிறார்கள்.’ இத்தகையோராக, மரணம் வரையில் உண்மையுள்ளவர்களாய் அவர்கள் நிலைத்திருந்தால், கடவுளுடைய ஆவி குமாரராக, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.—யோவான் 3:5, 7; வெளிப்படுத்துதல் 2:10.
14 பூமிக்குரிய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்துக்குள் சேவித்த ஆசாரியர்கள், வெளியிலிருந்த வணக்கத்தாருக்குக் காணப்படாதவர்களாக இருந்தனர். அவ்வாறே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ஒரு நிலைமையை அனுபவிக்கின்றனர். அது, பரதீஸ் பூமியில் என்றுமாக வாழும் நம்பிக்கையுடையோரான, கடவுளுடைய வணக்கத்தாரின் பெரும்பான்மையரால் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை அல்லது முழுமையாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை. ஆசரிப்புக் கூடாரத்தின் அந்தப் பொன் குத்துவிளக்கு, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் அறிவொளியூட்டப்பட்ட நிலையைப் படமாகக் குறிப்பிடுகிறது. குத்துவிளக்குகளிலிருந்த எண்ணெய்யைப் போல் கடவுளுடைய பரிசுத்த ஆவி செயல்படுவது, பைபிளின்பேரில் விளக்கத்தை அளிக்கிறது. இதன் பலனாகக் கிறிஸ்தவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்பவற்றை அவர்கள் தங்களுக்குத்தாங்களே வைத்துக்கொள்கிறதில்லை. மாறாக, பின்வருமாறு சொன்ன இயேசுவுக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; . . . மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”—மத்தேயு 5:14, 16.
15. சமுகத்தப்பங்கள் வைக்கப்பட்ட மேசையின் மீதிருந்த அப்பத்தினால் எது சித்தரித்துக் காட்டப்படுகிறது?
15 அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், இந்த அறிவொளி பெற்ற நிலைமையில் நிலைத்திருப்பதற்கு, சமுகத்தப்பங்கள் வைக்கப்பட்ட மேசையின் மீதிருந்த அப்பத்தினால் சித்தரித்துக் காட்டினதை உணவாகத் தவறாமல் உட்கொண்டு வரவேண்டும். அவர்களுடைய ஆவிக்குரிய உணவின் முதற்படியான ஊற்றுமூலம் கடவுளுடைய வார்த்தையாகும், அதை தினந்தோறும் வாசித்து, அதன்பேரில் தியானிக்க அவர்கள் பெருமுயற்சி செய்கிறார்கள். மேலும் இயேசு, தம்முடைய ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாக ‘ஏற்ற வேளையில் உணவை’ அவர்களுக்கு அளிப்பாரெனவும் வாக்குக் கொடுத்தார். (மத்தேயு 24:45, NW) குறிப்பிட்ட எந்தக் காலத்திலாயினும் பூமியிலிருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் முழு தொகுதியே இந்த “அடிமை.” பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தின்பேரில் தகவலைப் பிரசுரிக்கவும், தற்கால அன்றாட வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதன்பேரில் சமயத்துக்குகந்த வழிநடத்துதலைக் கொடுக்கவும், அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்த ‘அடிமையை’ கிறிஸ்து பயன்படுத்தியிருக்கிறார். ஆகையால், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், அத்தகைய ஆவிக்குரிய உணவு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் மதித்துணர்வோடு உட்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஆதரித்து வருவதானது, கடவுளுடைய வார்த்தையைத் தங்கள் மனதிலும் இருதயத்திலும் ஏற்றுவருவதைப் பார்க்கிலும் அதிகமானதன்பேரில் சார்ந்திருக்கிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என் போஜனம்.” (யோவான் 4:34, தி.மொ.) அவ்வாறே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தைச் செய்வதற்குத் தினந்தோறும் தங்களை ஈடுபடுத்துவதன்மூலம் மனத்திருப்தியை அனுபவிக்கின்றனர்.
16. தூபபீடத்தில் செய்யப்பட்ட சேவை எதைச் சித்தரித்துக் காட்டுகிறது?
16 பரிசுத்த ஸ்தலத்தில் இருந்த தூபபீடத்தின்மீது, காலையிலும் மாலையிலும் ஓர் ஆசாரியர் கடவுளுக்குத் தூபவர்க்கம் செலுத்தினார். அதே சமயத்தில், ஆசாரியரல்லாத வணக்கத்தார் அவருடைய ஆலயத்தின் வெளிப் பிரகாரங்களில் நிற்கையில் கடவுளிடம் ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். (லூக்கா 1:8-10) “தூபவர்க்கம் பரிசுத்தவான்களின் ஜெபங்களைக் குறிக்கிறது,” என்று பைபிள் விளக்குகிறது. (வெளிப்படுத்துதல் 5:8, NW) “என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், . . . இருக்கக்கடவது,” என்று சங்கீதக்காரன் தாவீது எழுதினார். (சங்கீதம் 141:2) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும்கூட, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் ஜெபத்தில் யெகோவாவை அணுகுவதற்குரிய தங்கள் சிலாக்கியத்தை உயர்வாக மதிக்கின்றனர். இருதயத்திலிருந்து பொங்கி வெளிப்படும் ஊக்கமான ஜெபங்கள் நறுமணமுள்ள தூபவர்க்கத்தைப்போல் இருக்கின்றன. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், மற்றவர்களுக்குக் கற்பிக்க தங்கள் உதடுகளைப் பயன்படுத்தி, மற்ற வழிகளிலும் கடவுளைத் துதிக்கின்றனர். இக்கட்டுகளுக்கெதிரில் அவர்கள் சகித்து நிலைத்திருப்பதும், சோதனையின்கீழ் அவர்கள் உத்தமத்தைக் காப்பதும் முக்கியமாய் கடவுளுக்குப் பிரியமாக உள்ளன.—1 பேதுரு 2:20, 21.
17. பாவநிவாரண நாளில் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியரின் முதல் பிரவேசிப்பு அளித்த தீர்க்கதரிசன சித்தரிப்பின் நிறைவேற்றத்தில் என்ன உட்பட்டிருந்தது?
17 பாவநிவாரண நாளில், இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, எரியும் தணல்கள் அடங்கிய பொன் தூபகலசத்தில் தூபவர்க்கத்தை எரிக்க வேண்டும். பாவநிவாரண பலிகளின் இரத்தத்தை அவர் உள்ளே கொண்டுவருவதற்கு முன்பாக இது செய்யப்பட வேண்டும். இந்தத் தீர்க்கதரிசன சித்தரிப்பின் நிறைவேற்றத்தில், மனிதராகிய இயேசு, நம்முடைய பாவங்களுக்காக நிலையான ஒரே பலியாகத் தம்முடைய உயிரைச் செலுத்துவதற்கு முன்பாக, யெகோவா தேவனிடம் பூரண உத்தமத்தைக் காத்தார். இவ்வாறு, சாத்தான் தன்மீது என்ன நெருக்கடியைக் கொண்டுவந்தாலும் ஒரு பரிபூரண மனிதன் கடவுளிடமாகத் தன் உத்தமத்தைக் காக்க முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டினார். (நீதிமொழிகள் 27:11) பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டபோது, இயேசு ஜெபத்தைப் பயன்படுத்தி, “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்”டார். (எபிரெயர் 5:7) இவ்வாறு அவர், யெகோவாவை நீதியுள்ள மற்றும் நியாயப்படியான சர்வலோகப் பேரரசராக மகிமைப்படுத்தினார். கடவுள் இயேசுவை மரித்தோரிலிருந்து அழியாமைக்குரிய பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பினதன்மூலம் அவருக்குப் பலனளித்தார். இந்த உயர்ந்த ஸ்தானத்தில் இயேசு, தாம் பூமிக்கு வந்ததன் இரண்டாவது காரணத்துக்கு, அதாவது, மனந்திரும்பின பாவிகளான மனிதரைக் கடவுளிடம் ஒப்புரவாகும்படி செய்வதற்குக் கவனத்தைச் செலுத்துகிறார்.—எபிரெயர் 4:14-16.
கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின்
மேலும் பெரிதான மகிமை
18. எவ்வாறு யெகோவா தம்முடைய ஆவிக்குரிய ஆலயத்துக்கு முதன்மையான மகிமையைக் கொண்டுவந்திருக்கிறார்?
18 “முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும்,” என்று யெகோவா முன்னறிவித்தார். (ஆகாய் 2:9) இயேசுவை அழியாமையுடைய அரசராகவும் பிரதான ஆசாரியராகவும் உயிர்த்தெழுப்பினதன்மூலம், யெகோவா தம்முடைய ஆவிக்குரிய ஆலயத்துக்கு முதன்மையான மகிமையைக் கொண்டுவந்தார். இயேசு இப்போது, ‘தமக்குக் கீழ்ப்படிகிற யாவருக்கும் நித்திய இரட்சிப்பை’ கொண்டுவரும் நிலையில் இருக்கிறார். (எபிரெயர் 5:9) பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று பரிசுத்த ஆவியைப் பெற்ற அந்த 120 சீஷர்கள் அத்தகைய கீழ்ப்படிதலைக் காட்டுவதற்கு முதல்வராக இருந்தார்கள். இஸ்ரவேலின் இந்த ஆவிக்குரிய குமாரர்கள் முடிவில் 1,44,000 எண்ணிக்கையானோராக இருப்பரென வெளிப்படுத்துதல் புத்தகம் முன்னறிவித்தது. (வெளிப்படுத்துதல் 7:4) இவர்களில் பலர் தாங்கள் மரித்தபோது, அரச அதிகாரத்தில் இயேசுவின் வந்திருத்தலின் காலத்துக்காகக் காத்துக்கொண்டு, மனிதவர்க்க பொதுப் பிரேதக்குழியில் உணர்வற்றவர்களாகக் கிடக்க வேண்டியிருந்தது. தானியேல் 4:10-17, 20-27-ல் அடங்கியுள்ள தீர்க்கதரிசன காலக்கணக்கானது, 1914-ஐ இயேசு தம்முடைய சத்துருக்களின் மத்தியில் ஆளத்தொடங்குவதற்கான காலமாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. (சங்கீதம் 110:2) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, அந்த ஆண்டுக்காக ஆவலாய்க் காத்திருந்தனர். 1914-ல் இயேசு நிச்சயமாகவே, அரசராக சிங்காசனத்தில் ஏற்றப்பட்டார் என்று முதல் உலகப் போரும் அதைத் தொடர்ந்து மனிதவர்க்கத்தின்மீது வந்த ஆபத்துக்களும் நிரூபணம் அளித்தன. (மத்தேயு 24:3, 7, 8) அதன்பின் சீக்கிரத்திலேயே, “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்”காலம் வந்துவிட்டதனால், இயேசு, “நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்று, மரணத்தில் நித்திரையடைந்திருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட தம்முடைய சீஷருக்கு கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றுவார்.—1 பேதுரு 4:17; யோவான் 14:3.
19. எவ்வாறு 1,44,000 உறுப்பினரில் மீதிபேர் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கத்தக்கவராவர்?
19 இந்தப் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் 1,44,000 உறுப்பினர் எல்லாரும் முடிவாக முத்திரையிடப்பட்டு தங்கள் பரலோக வீட்டுக்குச் சேர்க்கப்படுவது இன்னும் முடிவாகவில்லை. அவர்களில் மீந்துள்ள மீதிபேர், தங்கள் மாம்ச உடல்களான ‘திரையால்,’ அல்லது தடையால் கடவுளுடைய பரிசுத்த சமுகத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்களாக, பரிசுத்த ஸ்தலத்தால் சித்தரிக்கப்பட்ட நிலையில் பூமியின்மீது இன்னும் வாழ்கின்றனர். இவர்கள் உண்மையுள்ளவர்களாக மரிக்கையில், ஏற்கெனவே பரலோகத்தில் இருக்கும் 1,44,000 பேரைச் சேர்ந்தவர்களோடு கூடிக்கொள்ளும்படி, அழியாமையுடைய ஆவி சிருஷ்டிகளாக உடனடியாக உயிர்த்தெழுப்பப்படுகின்றனர்.—1 கொரிந்தியர் 15:51-53.
20. இந்தப் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் மீதிபேர் என்ன மிக முக்கியமான வேலையை இச்சமயத்தில் நடப்பித்துக் கொண்டிருக்கின்றனர், அதன் பலன்கள் யாவை?
20 இத்தனை பல ஆசாரியர்கள், பரலோகத்தில் மகா பிரதான ஆசாரியரோடுகூட சேவிப்பதால், கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயம் கூடுதலான மகிமையைப் பெற்றிருக்கிறது. இதற்கிடையில், இந்தப் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் மீதிபேர் பூமியில் பயனுள்ள வேலையை நடப்பித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய பிரசங்கிப்பின்மூலம், கடவுள், ஆகாய் 2:7-ல் முன்னறிவித்தபடி, தம்முடைய நியாயத்தீர்ப்பின் அறிவிப்புகளைக் கொண்டு ‘சகல ஜாதியாரையும் அசையப்பண்ணுகிறார்.’ அதே சமயத்தில், ‘சகல ஜாதியாரின் அருமையானவைகளாக’ விவரிக்கப்பட்ட லட்சக்கணக்கான வணக்கத்தார் யெகோவாவினுடைய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களுக்குள் கூட்டமாகக் கூடிவருகின்றனர். வணக்கத்துக்கான கடவுளுடைய ஏற்பாட்டுக்குள் இவர்கள் எவ்வாறு அமைகின்றனர், அவருடைய பெரிய ஆவிக்குரிய ஆலயத்துக்கு என்ன எதிர்கால மகிமையை நாம் எதிர்பார்க்கலாம்? இந்தக் கேள்விகள் அடுத்தக் கட்டுரையில் ஆராயப்படும்.
மறுபார்வைக்குரிய கேள்விகள்
◻ பொ.ச. 29-ல் இயேசு என்ன முதன்மையான முன்மாதிரியை வைத்தார்?
◻ பொ.ச. 29-ல் என்ன ஏற்பாடு செயல்பட தொடங்கினது?
◻ பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் எவற்றைச் சித்தரித்துக் காட்டுகின்றன?
◻ பெரிய ஆவிக்குரிய ஆலயம் எவ்வாறு மகிமைப்படுத்தப்பட்டது?
[பக்கம் 17-ன் படம்]
பொ.ச. 29-ல் இயேசு பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்டபோது, கடவுளுடைய பெரிய ஆவிக்குரிய ஆலயம் செயல்படத் தொடங்கினது