உங்களுக்குத் தெரியுமா?
இயேசுவோடு சேர்ந்து கழுவேற்றப்பட்டவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?
▪ பைபிள் இந்தக் குற்றவாளிகளை “கொள்ளைக்காரர்கள்” என்று குறிப்பிடுகிறது. (மத். 27:38; மாற். 15:27) குற்றவாளிகளை வேறுபடுத்திக் காட்ட வித்தியாசமான வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துவதாகச் சில பைபிள் அகராதிகள் சொல்கின்றன. மாட்டிக்கொள்ளாமல் ரகசியமாகச் செயல்பட்ட ஒரு திருடனைக் குறிக்க க்ளப்டிஸ் என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சீடர்களின் பணப்பெட்டியிலிருந்து ரகசியமாகத் திருடிய யூதாஸ் இஸ்காரியோத்துவைக் குறிப்பிட இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (யோவா. 12:6) மறுபட்சத்தில், லெஸ்டஸ் என்ற வார்த்தை கொள்ளையடிப்பதற்காக வன்முறையில் இறங்கும் ஒருவனைக் குறிக்க பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. புரட்சிக்காரனை, கலகக்காரனை, அல்லது கொரில்லா முறையில் தாக்குபவனைக் குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படலாம். இயேசுவோடு கழுவேற்றப்பட்டவர்கள் இந்த வகை குற்றவாளிகளே. சொல்லப்போனால் அவர்களில் ஒருவன்... “நம்முடைய செயல்களுக்கு ஏற்ற தண்டனையைத்தான் பெற்றிருக்கிறோம்” என்று சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. (லூக். 23:41) எனவே, அவர்கள் திருட்டு குற்றத்தை மட்டுமல்ல, வேறு பல குற்றங்களையும் செய்ததாகத் தெரிகிறது.
இந்த இரண்டு கொள்ளைக்காரர்களைப் போலவே பரபாஸும் லெஸ்டஸ் என்று அழைக்கப்படுகிறான். (யோவா. 18:40) லூக்கா 23:19-ன்படி, பரபாஸை ஒரு கொள்ளைக்காரன் என்று மட்டும் சொல்ல முடியாது. ஏனென்றால், “நகரிலே தேசத்துரோகச் செயல் ஒன்றில் ஈடுபட்டதற்காகவும் கொலை செய்ததற்காகவும் இந்த பரபாஸ் சிறையில் தள்ளப்பட்டிருந்தான்” என்று அந்த வசனம் சொல்கிறது.
எனவே, இயேசுவுடன் கழுவேற்றப்பட்ட அந்த இருவரும் கொள்ளைக்காரர்களாக மட்டுமல்ல, தேசத்துரோகிகளாக ஏன், கொலைகாரர்களாகவும் இருந்திருக்கலாம். உண்மை எதுவாக இருந்தாலும், ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து... கழுவேற்றப்பட வேண்டிய குற்றவாளிகளாகவே அவர்களைக் கருதினார். (w12-E 02/01)