அதிகாரம் 48
நாசரேத் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை
மத்தேயு 9:27-34; 13:54-58 மாற்கு 6:1-6
கண் தெரியாதவர்களையும் பேச முடியாதவர்களையும் இயேசு குணமாக்குகிறார்
நாசரேத் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை
தெக்கப்போலி பகுதியிலிருந்து திரும்பிய பிறகு, இரத்தப்போக்கினால் கஷ்டப்பட்ட பெண்ணை இயேசு குணமாக்கினார்; யவீருவின் மகளை உயிரோடு எழுப்பினார். இப்படி அந்த நாள் முழுவதும் இயேசு பல வேலைகளைச் செய்திருக்கிறார். ஆனாலும், மக்கள் அவரிடம் வந்துகொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக, யவீருவின் வீட்டிலிருந்து இயேசு புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, கண் தெரியாத இரண்டு பேர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்று கத்திக்கொண்டே அவர் பின்னால் போகிறார்கள்.—மத்தேயு 9:27.
தாவீதின் சிம்மாசனத்துக்கு இயேசுதான் வாரிசு என்றும், அவர்தான் மேசியா என்றும் இந்த ஆட்கள் நம்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் இயேசுவைப் பார்த்து “தாவீதின் மகனே” என்று கூப்பிடுகிறார்கள். இயேசு அதைக் கண்டுகொள்ளாததுபோல் தெரிகிறது. ஒருவேளை, அவர்கள் விடாப்பிடியாக இருப்பார்களா என்று பார்ப்பதற்காக அவர் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் இயேசுவை விடுவதாக இல்லை. அவர் ஒரு வீட்டுக்குள் நுழைகிறார்; அந்த இரண்டு பேரும் அவர் பின்னாலேயே அந்த வீட்டுக்குள் போகிறார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் உங்களுக்குப் பார்வை கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “ஆமாம், எஜமானே” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள். அப்போது இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு நடக்கட்டும்” என்று சொல்கிறார்.—மத்தேயு 9:28, 29.
உடனே, அவர்களுக்குப் பார்வை கிடைக்கிறது! இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடமும் சொல்கிறார். ஆனால் பார்வை கிடைத்த சந்தோஷத்தில், அவர்கள் போய் இந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்கிறார்கள்.
அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டபோது, பேய் பிடித்ததால் ஊமையான ஒருவனை மக்கள் அவரிடம் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். இயேசு அந்தப் பேயை விரட்டியதும் அவன் பேச ஆரம்பிக்கிறான். எல்லாரும் ரொம்ப ஆச்சரியப்பட்டு, “இந்த மாதிரி ஒன்றை இஸ்ரவேலில் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை” என்று சொல்கிறார்கள். அங்கே பரிசேயர்களும் இருக்கிறார்கள். அற்புதம் நடந்ததை அவர்களால் மறுக்க முடிவதில்லை. அதனால், “பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்” என்ற குற்றச்சாட்டை மறுபடியும் அவர்மேல் சுமத்துகிறார்கள்.—மத்தேயு 9:33, 34.
சீக்கிரத்திலேயே, இயேசு தன் சீஷர்களோடு தன்னுடைய சொந்த ஊரான நாசரேத்துக்குப் போகிறார். ஒரு வருஷத்துக்கு முன்னால் அங்கிருந்த ஜெபக்கூடத்தில் அவர் கற்பித்தபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் முதலில் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், பிற்பாடு அவர் சொன்னதைக் கேட்டு கோபப்பட்டு அவரைக் கொலை செய்யப் பார்த்தார்கள். இப்போது, தன்னுடைய ஊர்க்காரர்களுக்கு உதவி செய்ய இயேசு மறுபடியும் முயற்சி செய்கிறார்.
ஓய்வுநாளில், அவர் திரும்பவும் ஜெபக்கூடத்துக்குப் போய் மக்களுக்குக் கற்பிக்கிறார். அப்போது அவர்கள் பிரமித்துப்போய், “இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது? இவனால் எப்படி இந்த அற்புதங்களைச் செய்ய முடிகிறது? இவன் தச்சனுடைய மகன்தானே? இவனுடைய அம்மா மரியாள்தானே? இவனுடைய சகோதரர்கள் யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ்தானே? இவனுடைய சகோதரிகளும் நம்முடைய ஊரில்தானே இருக்கிறார்கள்? அப்படியிருக்கும்போது, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?” என்று பேசிக்கொள்கிறார்கள்.—மத்தேயு 13:54-56.
இயேசு உள்ளூர்க்காரர்தானே என்று அந்த மக்கள் இளக்காரமாக நினைக்கிறார்கள். ‘நம் கண் முன்னால்தானே வளர்ந்தான், இவன் எப்படி மேசியாவாக இருக்க முடியும்?’ என்று யோசிக்கிறார்கள். இயேசுவுக்கு இருக்கிற ஞானமும், அவர் செய்கிற அற்புதங்களும் அவர்தான் மேசியா என்பதை நிரூபிக்கின்றன. ஆனாலும், அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இயேசுவின் சொந்தக்காரர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். இருந்தாலும், அவர்கள் இயேசுமேல் விசுவாசம் வைப்பதில்லை. அதனால் இயேசு அவர்களிடம், “ஒரு தீர்க்கதரிசிக்கு அவருடைய ஊரிலும் வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மதிப்புக் கிடைக்கிறது” என்கிறார்.—மத்தேயு 13:57.
அவர்கள் விசுவாசம் வைக்காததைப் பார்த்து இயேசு ஆச்சரியப்படுகிறார். அதனால், “சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து குணமாக்கியதோடு சரி, வேறெந்த அற்புதத்தையும் அவர் அங்கே செய்யவில்லை.”—மாற்கு 6:5, 6.