யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்
“யெகோவா, யெகோவா, இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள்.”—யாத். 34:6.
1. மோசேக்கு யெகோவா தன்னை எப்படி வெளிப்படுத்தினார்? அது ஏன் குறிப்பிடத்தக்கது?
ஒரு சமயம், யெகோவா தன்னுடைய பெயரையும் தன்னுடைய குணங்களில் சிலவற்றையும் சொல்லி, மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தினார். யெகோவா நினைத்திருந்தால், தன்னுடைய வல்லமையை அல்லது ஞானத்தை அப்போது வலியுறுத்திக் காட்டியிருக்க முடியும்; ஆனால், தன்னுடைய இரக்கத்தையும் கரிசனையையும் பற்றித்தான் அவர் முதலில் சொன்னார். (யாத்திராகமம் 34:5-7-ஐ வாசியுங்கள்.) யெகோவா தனக்கு ஆதரவாக இருப்பாரா என்று மோசே தெரிந்துகொள்ள வேண்டியிருந்ததால் யெகோவா அந்தக் குணங்களை வலியுறுத்தினார்; இப்படி, தன்னுடைய ஊழியர்களுக்கு உண்மையிலேயே உதவ விரும்புவதைக் காட்டினார். (யாத். 33:13) யெகோவா நம்மேல் ரொம்பவே அக்கறையாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? இந்தக் கட்டுரையில், கரிசனை என்ற குணத்தைப் பற்றிப் பார்ப்போம். கரிசனை என்பது, மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து அனுதாபப்படுவதையும் அவர்களுக்கு உதவ விரும்புவதையும் குறிக்கிறது.
2, 3. (அ) கரிசனை காட்டும் குணம் மனிதர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) கரிசனையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
2 யெகோவா கரிசனையான கடவுள். மனிதர்கள் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், மனிதர்கள் இயல்பாகவே மற்றவர்கள்மேல் அக்கறை காட்டுகிறார்கள்; யெகோவாவைப் பற்றித் தெரியாதவர்கள்கூட அடிக்கடி கரிசனை காட்டுகிறார்கள். (ஆதி. 1:27) கரிசனை காட்டிய நிறைய பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. ஒரு சமயம், இரண்டு பெண்கள் ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு சாலொமோனிடம் வந்தார்கள்; அவர்களில் யார் அந்தக் குழந்தையின் உண்மையான அம்மா என்று சாலொமோன் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அதற்காக அந்தக் குழந்தையை இரண்டாக வெட்டும்படி சாலொமோன் கட்டளை கொடுத்தார். குழந்தையின் மேல் இருந்த கரிசனையால் துடிதுடித்துப்போன அதன் உண்மையான அம்மா, அதை இன்னொரு பெண்ணுக்கே கொடுத்துவிடும்படி ராஜாவிடம் கெஞ்சினார். (1 ரா. 3:23-27) இப்போது, இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம். பார்வோனின் மகள் எப்படிக் கரிசனை காட்டினாள் என்று கவனிக்கலாம். குழந்தையாக இருந்த மோசேயை அவள் பார்த்தபோது, அது எபிரெயர்களின் குழந்தை என்று புரிந்துகொண்டாள். நியாயப்படி அவள் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டியிருந்தது. ஆனாலும், ‘அவளுக்குப் பரிதாபமாக இருந்ததால்’ அந்தக் குழந்தையைத் தன்னுடைய சொந்த மகனாகவே வளர்க்க முடிவு செய்தாள்.—யாத். 2:5, 6.
3 கரிசனையைப் பற்றி நாம் ஏன் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்? ஏனென்றால், நாம் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (எபே. 5:1) கரிசனையைக் காட்டும் திறனோடு நாம் படைக்கப்பட்டிருந்தாலும், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் சுயநலமாக நடந்துகொள்ளும் எண்ணம் நமக்கு அடிக்கடி வருகிறது. அதனால், மற்றவர்களுக்கு உதவுவதா அல்லது நம்மைப் பற்றி மட்டுமே யோசிப்பதா என்று முடிவெடுப்பது, சில சமயங்களில் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படியென்றால், மற்றவர்கள்மேல் அதிக அக்கறை காட்ட எது நமக்கு உதவும்? முதலில், யெகோவாவும் மற்றவர்களும் எப்படிக் கரிசனை காட்டியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். பிறகு, யெகோவாவைப் போல் நாம் எப்படிக் கரிசனை காட்டலாம் என்றும், அதனால் நமக்கு என்ன நன்மை என்றும் பார்க்கலாம்.
யெகோவா—கரிசனை காட்டுவதில் பரிபூரண முன்மாதிரி!
4. (அ) தேவதூதர்களை யெகோவா ஏன் சோதோமுக்கு அனுப்பினார்? (ஆ) லோத்துவின் குடும்பத்துக்கு நடந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
4 யெகோவா எப்படியெல்லாம் கரிசனை காட்டியிருக்கிறார் என்பதற்கு பைபிளில் நிறைய பதிவுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, லோத்துவின் விஷயத்தில் யெகோவா என்ன செய்தார் என்று யோசித்துப் பாருங்கள். லோத்து நீதிமானாக இருந்தார்; அதனால், சோதோம் கொமோராவில் இருந்த ஒழுக்கங்கெட்ட மக்களைப் பார்த்து ‘மிகவும் வேதனைப்பட்டார்.’ அந்த மக்களுக்குக் கடவுள்பக்தியே இல்லாததால் அவர்கள் சாக வேண்டுமென்று யெகோவா முடிவு செய்தார். (2 பே. 2:7, 8) சோதோம் கொமோரா அழிக்கப்படும் என்றும், லோத்து அங்கிருந்து தப்பித்துப்போக வேண்டும் என்றும் சொல்வதற்காக யெகோவா தேவதூதர்களை லோத்துவிடம் அனுப்பினார். “லோத்து தயங்கிக்கொண்டே இருந்தார். ஆனாலும், யெகோவா அவர்மேல் கரிசனை காட்டியதால் அந்த மனிதர்கள் [அதாவது, தேவதூதர்கள்] அவருடைய கையையும், அவருடைய மனைவியின் கையையும், இரண்டு மகள்களுடைய கையையும் பிடித்து நகரத்துக்கு வெளியில் கொண்டுவந்து விட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 19:16) லோத்துவின் சூழ்நிலையை யெகோவா புரிந்துகொண்டார். அதே போல, நாம் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தாலும் யெகோவா அதைப் புரிந்துகொள்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—ஏசா. 63:7-9; யாக். 5:11, அடிக்குறிப்பு; 2 பே. 2:9.
5. கரிசனை காட்டுவதற்குக் கடவுளுடைய வார்த்தை நமக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கிறது?
5 கரிசனை காட்ட யெகோவா தன்னுடைய மக்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். இஸ்ரவேல் தேசத்துக்கு அவர் கொடுத்த ஒரு சட்டத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒருவர் இன்னொருவருக்குக் கடன் கொடுத்தால், கடன் வாங்கியவருடைய சால்வையை அவர் அடமானமாக எடுத்துக்கொள்ளலாம். (யாத்திராகமம் 22:26, 27-ஐ வாசியுங்கள்.) ஆனால், சூரியன் மறைவதற்குள் அந்தச் சால்வையை அவர் திருப்பித் தந்துவிட வேண்டும். அப்போதுதான் கடன் வாங்கியவரால் ராத்திரியில் அதைப் போர்த்திக்கொள்ள முடியும். கரிசனை இல்லாத ஒருவர் சால்வையைத் திருப்பித் தர விரும்பியிருக்க மாட்டார். ஆனால், மற்றவர்கள்மேல் கரிசனை காட்ட வேண்டும் என்றுதான் யெகோவா தன்னுடைய மக்களுக்குக் கட்டளை கொடுத்தார். இந்தக் கட்டளைக்கு அடிப்படையாக இருக்கும் நியமத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? சக கிறிஸ்தவர்களுடைய தேவைகளை நாம் ஒருபோதும் கண்டும்காணாமல் இருக்கக் கூடாது! கஷ்டத்தில் இருக்கிற ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ நம்மால் உதவ முடியும் என்றால், அப்படிச் செய்யத் தயங்கக் கூடாது.—கொலோ. 3:12; யாக். 2:15, 16; 1 யோவான் 3:17-ஐ வாசியுங்கள்.
6. பாவம் செய்த இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கரிசனை காட்டியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 இஸ்ரவேலர்கள் தனக்கு எதிராகப் பாவம் செய்தபோதிலும் யெகோவா அவர்கள்மேல் கரிசனை காட்டினார். அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார்.” (2 நா. 36:15) இன்னும் யெகோவாவைப் பற்றித் தெரியாத மக்கள்மேல் நாமும் அவரைப் போலவே கரிசனை காட்ட வேண்டும். ஏனென்றால், அவர்களும் மனம் திருந்தி அவருடைய நண்பராக ஆகலாம். வரப்போகும் தண்டனைத் தீர்ப்பு நாளில் ஒருவர்கூட அழிந்துபோகக் கூடாது என்று யெகோவா விரும்புகிறார். (2 பே. 3:9) அதனால் இன்னும் காலம் இருக்கும்போதே, முடிந்தவரை எல்லாரிடமும் எச்சரிப்புச் செய்தியைச் சொல்ல நாம் ஆசைப்படுகிறோம். அதோடு, கடவுள் காட்டுகிற கரிசனையிலிருந்து நன்மையடைய முடிந்தவரை எல்லாருக்கும் உதவி செய்ய ஆசைப்படுகிறோம்.
7, 8. தங்களுக்கு யெகோவா கரிசனை காட்டினார் என்று ஒரு குடும்பத்தார் ஏன் நம்பினார்கள்?
7 இன்று யெகோவாவின் ஊழியர்களில் நிறைய பேர், யெகோவா தங்கள்மேல் கரிசனை காட்டுவதை அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, 1990-களில் போஸ்னியாவில் நடந்த சம்பவத்தைக் கவனியுங்கள். அங்கே, வெவ்வேறு இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்தார்கள். அந்த இடத்தில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் 12 வயது பையன் இருந்தான். அவனுடைய பெயர் மிலன் என்று வைத்துக்கொள்வோம். மிலனும் அவனுடைய சகோதரனும் அவனுடைய அப்பா அம்மாவும் மற்ற சாட்சிகளும், ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள செர்பியாவுக்கு பஸ்சில் போய்க்கொண்டிருந்தார்கள். அந்த மாநாட்டில் ஞானஸ்நானம் எடுக்க மிலனுடைய அப்பா அம்மா முடிவு செய்திருந்தார்கள். ஆனால், எல்லையில் இருந்த ராணுவ வீரர்கள், மிலனுடைய குடும்பத்தார் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் அவர்களை பஸ்சிலிருந்து கீழே இறங்கச் சொன்னார்கள். பஸ்சில் இருந்த மற்ற சகோதரர்களை அங்கிருந்து போவதற்கு விட்டுவிட்டார்கள். இரண்டு நாட்கள்வரை மிலனுடைய குடும்பத்தை அந்த ராணுவ வீரர்கள் விடவே இல்லை. கடைசியில், பொறுப்பில் இருந்த அதிகாரி தன்னுடைய மேலதிகாரியிடம், ‘அவங்கள என்ன செய்றது?’ என்று கேட்டார். “அவங்கள இழுத்துட்டுப்போய் சுட்டுத் தள்ளுங்க!” என்று அந்த மேலதிகாரி சொன்னது, அங்கு நின்றுகொண்டிருந்த அந்தக் குடும்பத்தாரின் காதில் விழுந்தது.
8 அந்த ராணுவ வீரர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, முன்பின் தெரியாத இரண்டு பேர் அந்தக் குடும்பத்தாரிடம் வந்தார்கள். தாங்களும் யெகோவாவின் சாட்சிகள்தான் என்றும், நடந்ததை பஸ்சில் இருந்த சாட்சிகள் தங்களுக்குச் சொன்னார்கள் என்றும் அந்தக் குடும்பத்தாரிடம் முணுமுணுத்தார்கள். பிறகு, எல்லையைத் தாண்டிப் போவதற்காக மிலனையும் மிலனின் சகோதரனையும் காரில் ஏறும்படி சொன்னார்கள். ஏனென்றால், சின்னப் பிள்ளைகளுடைய பதிவுகளை ராணுவ வீரர்கள் சோதனை செய்யவில்லை. பின்பு, அந்தப் பிள்ளைகளுடைய அப்பா அம்மாவிடம், பின்புறமாகப் போய் எல்லைக்கு மறுபக்கத்தில் நிற்கும்படி சொன்னார்கள். மிலன் ரொம்பவே பயந்துபோய் இருந்ததால் அழுவதா சிரிப்பதா என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவனுடைய அப்பா அம்மா, “நாங்க நடந்துபோறத பார்த்துட்டு அவங்க சும்மா இருந்துடுவாங்கன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டார்கள். இருந்தாலும், அவர்கள் அந்த இடத்தைவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த ராணுவ வீரர்களின் கண் எதிரிலேயே அவர்கள் நடந்துபோயும் அந்த வீரர்கள் அதை உணரவே இல்லை! மிலனும் அவனுடைய சகோதரனும் அவர்களுடைய அப்பா அம்மாவும் எல்லைக்கு மறுபக்கத்தில் சந்தித்துக்கொண்டார்கள். பிறகு, ஒன்றாக மாநாட்டுக்குப் போனார்கள். அவர்கள் செய்த ஜெபத்துக்கு யெகோவாதான் பதில் கொடுத்தார் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். யெகோவா தன்னுடைய ஊழியர்களை எல்லா சமயத்திலும் இதேபோல் அற்புதமாகக் காப்பாற்றுவதில்லை என்பதை பைபிளிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். (அப். 7:58-60) ஆனால் இவர்களுடைய விஷயத்தில், மிலன் இப்படிச் சொன்னான்: “எங்கள காப்பாத்துறதுக்காக யெகோவா தேவதூதர்கள பயன்படுத்தி ராணுவ வீரர்களோட கண்ணை குருடாக்கின மாதிரி இருந்துச்சு.”—சங். 97:10.
9. தன் பின்னால் வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது இயேசு எப்படி உணர்ந்தார்? (ஆரம்பப் படம்)
9 கரிசனை காட்டும் விஷயத்தில் இயேசு அருமையான முன்மாதிரி! மக்கள் ‘மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்ததால்’ அவருடைய மனம் உருகியது. அப்போது அவர் என்ன செய்தார்? “அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.” (மத். 9:36; மாற்கு 6:34-ஐ வாசியுங்கள்.) ஆனால், பரிசேயர்கள் கரிசனை இல்லாமல் நடந்துகொண்டார்கள், மக்களுக்கு உதவ அவர்கள் விரும்பவில்லை. (மத். 12:9-14; 23:4; யோவா. 7:49) இயேசுவைப் போல் நீங்களும் மக்களுக்கு உதவவும், யெகோவாவைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் மனதார ஆசைப்படுகிறீர்களா?
10, 11. எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கரிசனை காட்ட வேண்டுமா? விளக்குங்கள்.
10 எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கரிசனை காட்ட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. உதாரணத்துக்கு, அமலேக்கியர்களின் ராஜாவும் கடவுளுடைய மக்களின் எதிரியுமான ஆகாகைக் கொல்லாமல் விட்டபோது, அவனுக்குக் கரிசனை காட்டியதாக சவுல் ராஜா நினைத்திருக்கலாம். அமலேக்கியர்களின் சில மிருகங்களைக்கூட அவர் கொல்லாமல் விட்டுவிட்டார். ஆனால், எல்லா அமலேக்கியர்களையும் அவர்களுடைய எல்லா மிருகங்களையும் கொல்லும்படி யெகோவா சவுலிடம் சொல்லியிருந்தார். சவுல் கீழ்ப்படியாததால் அவர் ராஜாவாக இல்லாதபடி யெகோவா அவரை ஒதுக்கித்தள்ளினார். (1 சா. 15:3, 9, 15) யெகோவா நியாயமான நீதிபதி! மக்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்று அவரால் பார்க்க முடியும். அதனால், எப்போது கரிசனை காட்டக் கூடாது என்று அவருக்குத் தெரியும். (புல. 2:17; எசே. 5:11) சீக்கிரத்தில், தனக்குக் கீழ்ப்படியாத எல்லாரையும் அவர் தண்டிக்கப்போகிறார். (2 தெ. 1:6-10) கெட்டவர்களுக்கு அவர் கரிசனை காட்டுவதற்கான சமயமாக அது இருக்காது. அவர்களை அழிப்பதன் மூலம் நீதியான மக்களுக்கு அவர் கரிசனை காட்டி, அவர்களைக் காப்பாற்றுவார்.
11 மற்றவர்கள் வாழ வேண்டுமா சாக வேண்டுமா என்று முடிவு செய்வது நம்முடைய வேலை அல்ல. ஆனால், அவர்களுக்கு உதவி செய்ய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் இப்போதே செய்ய வேண்டும். என்னென்ன நடைமுறையான வழிகளில் நாம் மற்றவர்களுக்குக் கரிசனை காட்டலாம்? சில ஆலோசனைகளை இப்போது பார்க்கலாம்.
நாம் எப்படிக் கரிசனை காட்டலாம்
12. மற்றவர்களுக்கு நீங்கள் எப்படிக் கரிசனை காட்டலாம்?
12 தினசரி வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவுங்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் சகோதரர்களிடமும் கிறிஸ்தவர்கள் கரிசனை காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (யோவா. 13:34, 35; 1 பே. 3:8) கரிசனை என்ற வார்த்தையின் ஒரு அர்த்தம், “கஷ்டப்படுகிறவர்களோடு சேர்ந்து கஷ்டப்படுவது.” கரிசனை காட்டும் ஒருவர், கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவ முயற்சி செய்கிறார். அதனால், மற்றவர்களுக்கு உதவ நாம் சந்தர்ப்பத்தைத் தேட வேண்டும். ஒருவேளை, ஏதாவது வீட்டு வேலையைச் செய்து கொடுக்கலாம் அல்லது அவர்களுக்காக வெளியே போய் ஏதாவது வாங்கி வரலாம்.—மத். 7:12.
13. இயற்கைப் பேரழிவுகளுக்குப் பிறகு கடவுளுடைய மக்கள் என்ன செய்கிறார்கள்?
13 நிவாரண வேலையில் உதவுங்கள். பேரழிவினால் மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, அவர்களுக்குக் கரிசனை காட்ட நாம் தூண்டப்படுகிறோம். அதுபோன்ற சமயங்களில் யெகோவாவின் மக்கள் மற்றவர்களுக்கு உதவுவது எல்லாருக்குமே தெரிந்த விஷயம்! (1 பே. 2:17) உதாரணத்துக்கு, ஜப்பானைச் சேர்ந்த ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். 2011-ல், இவர் வாழ்ந்துவந்த பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் சின்னாபின்னமானது. சேதமடைந்த வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் பழுதுபார்ப்பதற்காக, ஜப்பானின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் வாலன்டியர்கள் வந்தார்கள். அவர்களைப் பார்த்தது ரொம்ப உற்சாகமாகவும் ஆறுதலாகவும் இருந்ததாக அவர் சொன்னார். “யெகோவா அக்கறையா இருக்காருங்கறத இந்த அனுபவத்துல இருந்து நான் புரிஞ்சிக்கிட்டேன். சகோதர சகோதரிகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் அக்கறையா இருக்காங்க. உலகம் முழுசும் இருக்குற நிறைய சகோதர சகோதரிகள் எங்களுக்காக ஜெபம் பண்றாங்க” என்று அவர் சொன்னார்.
14. நோயாலும் முதுமையாலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
14 நோயால் கஷ்டப்படுகிறவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உதவுங்கள். நோயாலும் முதுமையாலும் மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது அவர்கள்மேல் நமக்குக் கரிசனை வருகிறது. இந்தப் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதைப் பார்க்க நாம் ஏங்குவதால், கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென்று ஜெபம் செய்கிறோம். அதே சமயத்தில், நோயாலும் முதுமையாலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஒரு எழுத்தாளர், அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய அம்மாவுக்கு ஒருநாள் என்ன நடந்ததென்று எழுதினார். அவருடைய அம்மா தன்னுடைய உடைகளை அசுத்தப்படுத்திக்கொண்டார். சுத்தம் செய்ய அவர் முயற்சி செய்துகொண்டிருந்தபோது காலிங் பெல் அடித்தது. தவறாமல் அவரைப் பார்க்க வருகிற இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அங்கே வந்திருந்தார்கள். தாங்கள் உதவி செய்யலாமா என்று அவர்கள் கேட்டபோது, “உங்ககிட்ட உதவி கேக்கவே கூச்சமா இருக்கு, ஆனா நீங்க உதவி செஞ்சா நல்லா இருக்கும்” என்று சொன்னார். உடனே அந்த சகோதரிகள் அவருக்கு உதவி செய்தார்கள். பிறகு, அவருக்கு டீ போட்டுக் கொடுத்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்த உதவிக்கு அந்தப் பெண்ணுடைய மகன், (அதாவது, அந்த எழுத்தாளர்) ரொம்ப நன்றியோடு இருந்தார். சாட்சிகள் “என்ன பிரசங்கிக்குறாங்களோ அதன்படி செய்றாங்க” என்று சொன்னார். கரிசனை என்ற குணம், நோயாலும் முதுமையாலும் கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் முடிந்தளவு உதவி செய்ய உங்களைத் தூண்டுகிறதா?—பிலி. 2:3, 4.
15. ஊழியம் செய்வதன் மூலம் நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவுகிறோம்?
15 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுங்கள். கடவுளைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதுதான் மக்களுக்கு உதவுவதற்கான சிறந்த வழி! அவர்களுக்கு உதவுவதற்கான இன்னொரு வழி, யெகோவாவின் தராதரங்களுக்குக் கீழ்ப்படிவதால் அவர்களுக்குத்தான் நன்மை என்பதை உணர வைப்பது! (ஏசா. 48:17, 18) அதனால், ஊழியத்தில் இன்னும் அதிகமாக உங்களால் ஈடுபட முடியுமா? யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும் மற்றவர்களுக்குக் கரிசனை காட்டுவதற்கும் அதுதான் அருமையான வழி.—1 தீ. 2:3, 4.
கரிசனை காட்டுவதால் உங்களுக்கும் நன்மை!
16. கரிசனை காட்டுவதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
16 கரிசனை காட்டும்போது, நம்முடைய ஆரோக்கியமும் மற்றவர்களோடு நமக்கு இருக்கும் பந்தமும் நன்றாக இருக்கும் என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும்போது உங்களுக்கு இன்னும் அதிக சந்தோஷம் கிடைக்கும், இன்னும் அதிக நம்பிக்கை வரும், தனிமை உணர்வும் எதிர்மறையான எண்ணங்களும் குறையும். அதனால், கரிசனை காட்டுவது உண்மையிலேயே உங்களுக்கு நன்மை தரும். (எபே. 4:31, 32) அன்பினால் நாம் மற்றவர்களுக்கு உதவும்போது, நமக்கு நல்ல மனசாட்சி இருக்கும்; ஏனென்றால், நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறாரோ அதைத்தான் செய்கிறோம் என்று நமக்குத் தெரியும். கரிசனை காட்டும்போது, நாம் நல்ல அப்பாவாக, அம்மாவாக, மணத்துணையாக, நண்பராக ஆவோம். அதோடு, நாம் மற்றவர்கள்மேல் கரிசனை காட்டும்போது, தேவையான சமயத்தில் நமக்கு மற்றவர்களுடைய உதவி கிடைக்கும்.—மத்தேயு 5:7-ஐயும், லூக்கா 6:38-ஐயும் வாசியுங்கள்.
17. கரிசனை காட்ட நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?
17 கரிசனை காட்டுவதால் நாம் நன்மை அடைகிறோம் என்பது உண்மைதான். ஆனால், நாம் கரிசனை காட்டுவதற்கான முக்கியக் காரணம் அது கிடையாது. யெகோவாவைப் பின்பற்றவும் அவருக்கு மகிமையைக் கொண்டுவரவும் விரும்புவதால்தான் நாம் கரிசனை காட்டுகிறோம். அன்பு மற்றும் கரிசனையின் பிறப்பிடமே அவர்தான். (நீதி. 14:31) அவர்தான் நமக்குப் பரிபூரண முன்மாதிரி. அதனால், கரிசனை காட்டுவதன் மூலம் கடவுளைப் பின்பற்ற நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும். அப்போது, நம்முடைய சகோதர சகோதரிகளிடம் இன்னும் நெருங்கிப் போகவும், நம்மைச் சுற்றியிருக்கும் மக்களோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் நம்மால் முடியும்.—கலா. 6:10; 1 யோ. 4:16.