யெகோவா—உருக்கமான இரக்கமுள்ள நம் தகப்பன்
“யெகோவா பாசத்தில் உருக்கமுள்ளவரும் இரக்கமுள்ளவருமாக இருக்கிறார்.”—யாக்கோபு 5:11, NW, அடிக்குறிப்பு.
1. தாழ்மையானவர்கள் ஏன் யெகோவா தேவனிடமாகக் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்?
இந்தச் சர்வலோகம் அவ்வளவு மிகப் பெரியதாக இருப்பதால் வான்கணிப்பாளர்கள் அதன் எல்லா நட்சத்திரக்கூட்டங்களையும் எண்ணத் தொடங்கவுங்கூட முடிகிறதில்லை. நம்முடைய நட்சத்திரக்கூட்டமாகிய பால்வீதி மண்டலம், அவ்வளவு மிகப் பரந்ததாக இருப்பதால், மனிதன் அதன் எல்லா நட்சத்திரங்களையும் கணக்கிடத் தொடங்கவும் முடிகிறதில்லை. அன்டாரெஸைப் போன்ற சில நட்சத்திரங்கள் நம்முடைய சூரியனைப் பார்க்கிலும் ஆயிரக்கணக்கான மடங்குகள் பெரிதானவையாயும் பிரகாசமானவையாயும் இருக்கின்றன. சர்வலோகத்திலுமுள்ள எல்லா நட்சத்திரங்களையும் படைத்த மகத்துவமான சிருஷ்டிகர் எவ்வளவு வல்லமையுள்ளவராக இருக்க வேண்டும்! நிச்சயமாக, அவரே “அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவர்.” (ஏசாயா 40:26) எனினும், மதிப்போடுகூடிய பயத்தை எழுப்புகிறவராயிருக்கும் இதே கடவுள் “பாசத்தில் உருக்கமுள்ளவரும் இரக்கமுள்ளவருமாக இருக்கிறார்.” யெகோவாவின் தாழ்மையான ஊழியருக்கு, முக்கியமாய்த் துன்புறுத்தல், நோய், மனச்சோர்வு, அல்லது மற்ற இன்னல்களால் துன்பப்படுவோருக்கு இத்தகைய அறிவு எவ்வளவாய் ஆறுதலளிப்பதாக உள்ளது!
2. உருக்கமான உணர்ச்சிகள் இந்த உலகத்தின் ஜனங்களால் பெரும்பாலும் எவ்வாறு கருதப்படுகின்றன?
2 கிறிஸ்துவின் “உருக்கமான பட்சமும் இரக்கங்களும்” ஆனவற்றைப்போன்ற கனிவான உணர்ச்சிவேகங்களைப் பலவீனங்களாகப் பலர் கருதுகின்றனர். (பிலிப்பியர் 2:1) பரிணாமத் தத்துவஞானத்தால் செல்வாக்குச் செலுத்தப்பட்டு, அவர்கள், மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு வருத்தமுண்டாக்குவதையும் பொருட்படுத்தாமல் தங்களை முதல் வைக்கும்படி ஆட்களை ஊக்கப்படுத்துகின்றனர். பொழுதுபோக்குக் காட்சியிலும் போட்டிகளிலும் பார்த்துப் பின்பற்றுவதற்கான மாதிரியாயிருப்பவர்கள் பலர், கண்ணீர் வடிக்காதவர்களாக அல்லது உருக்கமான பாசம் காட்டாத வலியத் தாக்கும் முரடராக உள்ளனர். அரசியல் ஆட்சியாளர் சிலர் அவ்வகையில் செயல்படுகின்றனர். கொடுங்கோல் பேரரசனான நீரோவுக்குக் கல்வி பயிற்றுவித்த ஸ்டோயிக் தத்துவஞானி செனேக்கா, “மனமிரங்குதல் பலவீனம்” என அறிவுறுத்தினான். மக்ளின்டாக் அண்ட் ஸ்டிராங்ஸ் சைக்ளோப்பீடியா பின்வருமாறு கூறுகிறது: “ஸ்டோயிக் கோட்பாட்டின் செல்வாக்குகள் . . . தற்காலங்களிலும்கூட மனிதரின் மனதில் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்திவருகின்றன.”
3. யெகோவா மோசேயினிடம் தம்மை எவ்வாறு விவரித்தார்?
3 நேர்மாறாக, மனிதகுலத்தின் சிருஷ்டிகரின் பண்பியல் இருதயத்தைக் கனிவிக்கிறது. அவர் தம்மைப்பற்றி மோசேயினிடம் பின்வரும் வார்த்தைகளில் விவரித்தார்: “யெகோவா, யெகோவா என்று சத்தமிட்டுக்கூறி, உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்; . . . அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக ஒருக்காலும் தீர்க்காதவர்.” (யாத்திராகமம் 34:6, 7, தி.மொ.) உண்மையாகவே, யெகோவா தம்மைப்பற்றிய இந்த விவரிப்பைத் தம் நீதியைத் தெளிவுபடுத்திக் காட்டுவதோடு முடித்தார். அறிந்து வேண்டுமென்றே பாவம் செய்வோர் தகுந்த தண்டனைபெறாமல் செல்ல விடமாட்டார். இருப்பினும், முதலாவதாக அவர் தம்மை இரக்கமுள்ள கடவுளாக, சொல்லர்த்தமாய் ‘இரக்கம் நிறைந்தவராக’ விவரிக்கிறார்.
4. “இரக்கம்” என்று அடிக்கடி மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெயச் சொல்லின் இருதயத்தைக் கனிவிக்கும் உட்பொருள் என்ன?
4 சிலசமயங்களில் “இரக்கம்” என்ற சொல் தண்டனையை நிறுத்தி வைக்கும் நீதித்தீர்ப்புக்குரிய உணர்ச்சியற்ற கருத்தில் மாத்திரமே எண்ணப்படுகிறது. எனினும், பைபிள் மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பது, ராக்கம் (ra·chamʹ) என்ற வினைச்சொல்லிலிருந்து வருவிக்கப்பட்ட இந்த எபிரெய பெயரடையின் நிறைவான உட்பொருளைத் தெளிவுபடுத்துகிறது. கல்விமான்கள் சிலரின்படி அதன் அடிப்படையான பொருள் “கனிவாக இருத்தல்” என்பதாகும். “ராக்கம் என்பது உள்ளார்ந்த உருக்கமான இரக்க உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது, நமக்கு அருமையானவர்களில் அல்லது நம்முடைய உதவி தேவைப்படுவோரில் பலவீனத்தை அல்லது துன்பத்தைக் காண்கையில் எழும்புவதைப்போன்றது” என்று பழைய ஏற்பாட்டின் இணைப்பொருள் சொற்கள் (Synonyms of the Old Testament) என்ற புத்தகம் விளக்குகிறது. இந்த விரும்பத்தக்கப் பண்பின், இருதயத்தைக் கனிவிக்கும் வேறு விளக்கங்களை வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures), புத்தகம் 2, பக்கங்கள் 375-9-ல் காணலாம்.
5. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இரக்கம் எவ்வாறு காட்டப்பட்டது?
5 கடவுளுடைய உருக்கமான இரக்கம், இஸ்ரவேல் ஜனத்துக்கு அவர் கொடுத்த நியாயப்பிரமாணத்தில் தெளிவாகக் காணப்படுகிறது. விதவைகள், பெற்றோரிழந்த பிள்ளைகள், ஏழைகள் போன்ற குறைபாடுள்ளோராயிருந்தவர்கள் இரக்கமாய் நடத்தப்பட வேண்டும். (யாத்திராகமம் 22:22-27; லேவியராகமம் 19:9, 10; உபாகமம் 15:7-11) அடிமைகளும் மிருகங்களும் உட்பட, எல்லாரும் இளைப்பாறுதலுக்குரிய வாராந்தர ஓய்வுநாளிலிருந்து பயனடைய வேண்டும். (யாத்திராகமம் 20:10) மேலும், தாழ்நிலைமையிலிருந்தோரைக் கனிவாய் நடத்தின ஆட்களைக் கடவுள் கவனத்தில் வைத்தார். நீதிமொழிகள் 19:17 (தி.மொ.) பின்வருமாறு கூறுகிறது: “ஏழைக்கு இரங்குவோன் யெகோவாவுக்குக் கடன் கொடுப்பவன், அவன் செய்ததற்கு அவர் பிரதிபலன் அளிப்பார்.”
கடவுளுடைய இரக்கத்திற்கு எல்லைகள்
6. யெகோவா ஏன் தம்முடைய ஜனத்தினிடம் தீர்க்கதரிசிகளையும் ஸ்தானாபதிகளையும் அனுப்பினார்?
6 இஸ்ரவேலர் கடவுளுடைய பெயரைத் தாங்கினவர்களாக எருசலேமிலிருந்த ஆலயத்தில் வணங்கினார்கள், அது ‘யெகோவாவின் நாமத்திற்கு ஓர் ஆலயமாக’ இருந்தது. (2 நாளாகமம் 2:4, தி.மொ.; 6:33) எனினும், காலப்போக்கில், அவர்கள் ஒழுக்கக்கேட்டையும், விக்கிரக வணக்கத்தையும், கொலையையும் அனுமதித்து, யெகோவாவின் பெயரின்பேரில் பெரும் நிந்தையைக் கொண்டுவந்தனர். தம்முடைய இரக்கமுள்ள பண்பியலுக்கு ஒத்திசைய, கடவுள், அந்த முழு ஜனத்தின்மீதும் அழிவைக் கொண்டுவராமல், அந்தத் தீய நிலைமையைச் சீர்திருத்துவதற்கு பொறுமையுடன் முயற்சி செய்தார். “தமது ஜனத்தின்மீதும் தமது வாசஸ்தலத்தின்மீதும் இரக்கமுள்ளவராய் அவர்களிடத்துக்குத் தமது ஸ்தானாபதிகளைத் திரும்பத்திரும்ப அனுப்பினார். அவர்களோ கடவுளின் ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி அவருடைய திருவார்த்தைகளை அசட்டைசெய்து அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தார்கள்; இப்படிச்செய்யச் செய்ய யெகோவாவின் கோபம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.”—2 நாளாகமம் 36:15, 16, தி.மொ.
7 யெகோவா இரக்கமுள்ளவராயும் கோபப்படுவதற்குத் தாமதமாயும் இருக்கிறபோதிலும், தேவைப்படுகையில் நீதியுள்ள கோபத்தை அவர் நிச்சயமாகவே வெளிப்படுத்துகிறார். அக்காலத்தில் கடவுளுடைய இரக்கம் அதன் எல்லையை எட்டிவிட்டது. அதன் விளைவுகளைப்பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஆகவே அவர் [யெகோவா] கல்தேயரின் ராஜாவை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்றான்; வாலிபரென்றும் கன்னிகைகளென்றும் முதியோரென்றும் விருத்தாப்பியரென்றும் இரக்கங்காட்டவில்லை, எல்லாரையும் கடவுள் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.” (2 நாளாகமம் 36:17, தி.மொ.) இவ்வாறு எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டது, அந்த ஜனத்தினர் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தம்முடைய பெயரினிமித்தம் இரக்கம்
8, 9. (அ) யெகோவா தம்முடைய பெயரினிமித்தமாக இரக்கம் காட்டுவாரென ஏன் அறிவித்தார்? (ஆ) யெகோவாவின் சத்துருக்கள் எவ்வாறு வாயடைக்கப்பட்டார்கள்?
8 சுற்றிலுமிருந்த தேசங்கள் இந்த அழிவின்பேரில் களிகூர்ந்தனர். ஏளனம் செய்யும் முறையில், அவர்கள்: “இவர்கள் யெகோவாவின் ஜனம், இவர்கள் தங்கள் தேசத்தைவிட்டு வரவேண்டியதாயிற்று” என்று சொன்னார்கள். இந்த நிந்தனையை உணர்ந்து, யெகோவா இவ்வாறு அறிவித்தார்: “என் பரிசுத்த நாமத்தினிமித்தமாகவே பரிதாபங்கொண்டேன். . . . என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம் பண்ணுவேன், . . . நானே யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.”—எசேக்கியேல் 36:20-23, தி.மொ.
9 அந்த ஜனம் 70 ஆண்டுகள் சிறைப்பட்ட நிலையில் இருந்த பின்பு, இரக்கமுள்ள கடவுளாகிய யெகோவா, அவர்களை விடுவித்து, எருசலேமுக்குத் திரும்பிச் சென்று ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி அனுமதித்தார். இது சுற்றிலுமிருந்த புறஜாதியாரின் வாயை அடக்கிற்று, அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். (எசேக்கியேல் 36:35, 36) என்றாலும், வருந்தத்தக்கதாய், இஸ்ரவேல் ஜனத்தினர் மறுபடியுமாகத் தீயச் செயல்களுக்கு உட்பட்டனர். உண்மையுள்ள ஒரு யூதனான நெகேமியா, அந்த நிலைமையைச் சீர்திருத்தம் செய்ய உதவிசெய்தார். அந்த ஜனத்தைக் கடவுள் இரக்கத்தோடு கையாண்ட முறைகளை அவர் ஒரு பொது ஜெபத்தில் திரும்ப நினைவுபடுத்தி, பின்வருமாறு கூறினார்:
10. நெகேமியா எவ்வாறு யெகோவாவின் இரக்கத்தை முக்கியப்படுத்திக் காட்டினார்?
10 “அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர். அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர். . . . நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்”தீர்.—நெகேமியா 9:26-30; அதோடு ஏசாயா 63:9, 10-ஐயும் பாருங்கள்.
11. யெகோவாவுக்கும் மனிதரின் தெய்வங்களுக்குமிடையே என்ன நேர்மாறு உள்ளது?
11 முடிவில், கடவுளுடைய மிக நேசமான குமாரனை ஏற்க மறுத்து கொடூரமாய்த் தள்ளிவிட்ட பின்பு, அந்த யூத ஜனம் அதன் தனிச்சிலாக்கிய நிலையை என்றென்றுமாக இழந்துவிட்டது. அவர்களிடமான கடவுளுடைய உண்மையான பற்றுதல் 1,500 ஆண்டுகளுக்குமேல் நிலைத்திருந்தது. யெகோவா நிச்சயமாகவே இரக்கமுள்ள கடவுள் என்ற உண்மைக்கு அது நித்திய சாட்சியாக உள்ளது. பாவிகளான மனிதர் உண்டாக்கியுள்ள கொடிய தெய்வங்களுக்கும் உணர்ச்சியற்ற தேவர்களுக்கும் எவ்வளவு நேர்மாறாயுள்ளது!—பக்கம் 8-ஐப் பாருங்கள்.
இரக்கத்தின் மிகப் பெரிய வெளிக்காட்டு
12. கடவுளுடைய இரக்கத்தின் மிகப் பெரிய வெளிக்காட்டு என்ன?
12 கடவுள் தம்முடைய மிக நேசமான குமாரனைப் பூமிக்கு அனுப்பினதே அவருடைய இரக்கத்தின் மிகப் பெரிய வெளிக்காட்டாகும். தவறாமல் உத்தமத்தைக் காத்த இயேசுவின் வாழ்க்கை யெகோவாவுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொண்டுவந்து, பிசாசின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு முழுமையான ஒரு பதிலை அவருக்கு அளித்ததென்பது உண்மையே. (நீதிமொழிகள் 27:11) எனினும், அதேசமயத்தில், தம்முடைய மிக நேசமான குமாரன் கொடூரமான மற்றும் இழிவுபடுத்தும் ஒரு மரணத்தை அனுபவிப்பதைக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருப்பது சந்தேகமில்லாமல், எந்த மனிதப் பெற்றோரும் என்றாவது சகித்திருக்க நேரிடாத, மிகுந்த வேதனையை யெகோவாவுக்கு உண்டுபண்ணினது. அது மிக அன்பான பலியாக இருந்தது. மனிதகுலத்தின் மீட்புக்கு ஒரு வழியைத் திறந்து வைத்தது. (யோவான் 3:16) முழுக்காட்டுபவனான யோவானின் தகப்பனாகிய சகரியா முன்னறிவித்ததுபோல், ‘நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தை’ அது மேன்மைப்படுத்தினது.—லூக்கா 1:77, 78.
13. என்ன முக்கியமான முறையில் இயேசு தம்முடைய பிதாவின் பண்பியல்பைப் பிரதிபலித்தார்?
13 கடவுளுடைய குமாரனைப் பூமிக்கு அனுப்பினதானது, யெகோவாவின் பண்பியலைப்பற்றிய தெளிவான காட்சியை மனிதகுலத்துக்குத் தந்தது. எவ்வாறு? இயேசு தம்முடைய பிதாவின் பண்பியலைப் பரிபூரணமாகப் பிரதிபலித்ததிலாகும். முக்கியமாய், தாழ்ந்தோரை அவர் நடத்தின உருக்கமான இரக்கங்கொண்ட முறையில் அவ்வாறு செய்தார்! (யோவான் 1:14; 14:9) இந்தக் காரியத்தில், அந்த மூன்று சுவிசேஷ எழுத்தாளர்களாகிய மத்தேயுவும் மாற்கும் லூக்காவும், கிரேக்க வினைச்சொல்லான ஸ்பிலேக்னீஸோமேய் (splag·khniʹzo·mai) என்பதைப் பயன்படுத்துகின்றனர், இது “குடல்கள்” என்பதற்கான கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. பைபிள் அறிவாளரான உவில்லியம் பார்க்லே பின்வருமாறு விளக்குகிறார்: “அது சாதாரண பரிதாபத்தை அல்லது இரக்கத்தை விவரிக்கிறதில்லை, ஆனால் ஒரு மனிதனை அவனுடைய உள்ளாழங்கள் வரையாகக் கனிவிக்கும் ஓர் உணர்ச்சிவேகத்தை விவரிக்கிறதென அதன் சொல் மூலத்திலிருந்தே காணக்கூடியதாயுள்ளது. இது, கிரேக்கில், இரக்க உணர்ச்சிக்குரிய மிக உரமுள்ள வார்த்தையாகும்.” இது, “மனதுருகி” அல்லது ‘பரிதபித்து’ போன்ற பல்வேறு முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.—மாற்கு 6:34; 8:2.
இயேசு பரிதபித்தபோது
14, 15. கலிலேயாவிலுள்ள ஓர் ஊரில், எவ்வாறு இயேசு மனதுருகினார், இது எதைச் சித்தரித்துக் காட்டுகிறது?
14 இந்தக் காட்சி கலிலேயாவின் ஒரு பட்டணத்திலாகும். “குஷ்டரோகம் நிறைந்த” ஒரு மனிதன், வழக்கமான எச்சரிக்கை கொடாமல் இயேசுவை அணுகுகிறான். (லூக்கா 5:12) கடவுளுடைய நியாயப்பிரமாணம் கட்டளையிட்டபடி, “தீட்டு, தீட்டு” என்று அவன் கத்தாததற்காக இயேசு அவனைக் கடுமையாய்க் கடிந்துகொள்கிறாரா? (லேவியராகமம் 13:45) இல்லை. அதற்குப் பதிலாக, “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்” என்று கூறும் அந்த மனிதனின் மனக்கசப்புற்ற மன்றாட்டுக்கு இயேசு செவிகொடுக்கிறார். இயேசு “மனதுருகி,” கையை நீட்டி அந்தக் குஷ்டரோகியைத் தொட்டு: “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்று சொல்கிறார். அந்த மனிதன் உடனடியாக சுகமடைகிறான். இவ்வாறு இயேசு, கடவுள் கொடுத்த தம்முடைய அற்புத வல்லமைகளை மட்டுமல்லாமல், அத்தகைய வல்லமைகளைப் பயன்படுத்துவதற்குத் தம்மைத் தூண்டியியக்கும் உருக்கமான உணர்ச்சிகளையுங்கூட காட்டுகிறார்.—மாற்கு 1:40-42.
15 இரக்க உணர்ச்சிகளை இயேசு காட்டுவதற்கு முன்பாக அவரை அணுக வேண்டுமா? இல்லை. சிறிது காலத்திற்குப் பின்பு, நாயீன் ஊரிலிருந்து வெளிவரும் சவ அடக்க ஊர்வலம் ஒன்றை எதிர்ப்படுகிறார். சவ அடக்க ஊர்வலங்கள் பலவற்றை அவர் முன்பு கண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது முக்கியமாய்ப் பெரும் துயரத்துக்குரியதாக உள்ளது. மரித்தவன் ஒரு விதவையின் ஒரே மகனாக இருந்தான். “மனதுருகி,” இயேசு அவளருகில் சென்று “அழாதே” என்று சொல்கிறார். பின்பு, அவளுடைய மகனை உயிர்த்தெழுப்பும் முனைப்பான அற்புதத்தை நடப்பிக்கிறார்.—லூக்கா 7:11-15.
16. தம்மைப் பின்பற்றிவரும் அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தாருக்காக இயேசு ஏன் மனதுருகுகிறார்?
16 இயேசு ‘மனதுருகுகையில்’ உதவிசெய்வதற்கு உடன்பாடான எதையாவது செய்கிறார் என்பது மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்களிலிருந்து கற்றறியும் மனதைக் கவரும் பாடமாகும். பிற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், தம்மைத் தொடர்ந்து பின்பற்றிவரும் பெரிய ஜனக்கூட்டத்தாரை இயேசு கவனிக்கிறார். அவர்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகள்போல் ஒடுக்கப்பட்டு அலைக்கழிந்து போயிருந்தமையால் அவர்கள்மேல் மனதுருகி”னார் என்று மத்தேயு அறிவிக்கிறார். (மத்தேயு 9:36, தி.மொ.) சாதாரண மக்களின் ஆவிக்குரிய பசியைத் திருப்திசெய்ய அந்தப் பரிசேயர்கள் ஒன்றும் செய்வதில்லை. அதற்குப் பதிலாக, அவசியமில்லாத பல கட்டளைகளைக் கொண்டு அந்தத் தாழ்ந்தோர்மீது பாரத்தைச் சுமத்துகின்றனர். (மத்தேயு 12:1, 2; 15:1-9; 23:4, 23) இயேசுவுக்குச் செவிகொடுத்தவர்களைக் குறித்து அவர்கள்: “நியாயப்பிரமாணத்தை அறியாதவர்களாகிய இந்தக் கூட்டத்தாரோ சாபத்துக்குள்ளானவர்கள்” என்று சொன்னபோது, பொதுவான மக்களை அவர்கள் கருதின முறை வெளிப்படுத்தப்பட்டது.—யோவான் 7:49, தி.மொ.
17. அந்த ஜனக்கூட்டத்தாருக்காக இயேசு மனதுருகுவது அவரை எவ்வாறு தூண்டுவிக்கிறது, நெடுங்கால பயனுள்ள என்ன வழிநடத்துதலை அவர் அங்கே அளிக்கிறார்?
17 எதிர்மாறாக, இயேசு, அந்த ஜனக்கூட்டத்தாரின் ஆவிக்குரிய மோசமான நிலைமையின்பேரில் ஆழ்ந்து மனதுருகுகிறார். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனி கவனிப்பைக் கொடுக்க முடியாதளவிற்கு அக்கறையுள்ள ஆட்கள் மிகப் பலராக உள்ளனர். ஆகையால் மேலுமதிக வேலையாட்களுக்காக ஜெபிக்கும்படி அவர் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்கிறார். (மத்தேயு 9:35-38) அத்தகைய ஜெபங்களுக்கிசைய, இயேசு: “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற இந்தச் செய்தியுடன் தம்முடைய அப்போஸ்தலர்களை அனுப்புகிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்ட போதனைகள் தற்போதைய நாள் வரையிலும் கிறிஸ்தவர்களுக்கு மதிப்புவாய்ந்த வழிநடத்துதலாகச் சேவித்திருக்கின்றன. சந்தேகமில்லாமல், இயேசுவின் இரக்க உணர்ச்சிகள் மனிதகுலத்தின் ஆவிக்குரிய பசியைத் திருப்திசெய்வதற்கு அவரைத் தூண்டியியக்குகின்றன.—மத்தேயு 10:5-7.
18. ஜனக்கூட்டத்தார் தம்மைத் தனித்திருக்க விடாமல் நெருங்கியபோது இயேசு எவ்வாறு பிரதிபலித்தார், என்ன பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்?
18 மற்றொரு சந்தர்ப்பத்தில், இயேசு மறுபடியுமாக ஜனக்கூட்டத்தாரின் ஆவிக்குரிய தேவைகளுக்காக அக்கறையுணர்வை வெளிப்படுத்துகிறார். இந்தச் சமயத்தில் அவரும் அவருடைய அப்போஸ்தலர்களும் வேலைமிகுந்த பிரசங்க பயணத்திற்குப் பின் களைத்திருப்போராய் இளைப்பாறுவதற்கு ஓர் இடத்தைத் தேடுகின்றனர். ஆனால் ஜனங்கள் அவர்களை விரைவில் கண்டுபிடிக்கின்றனர். தங்களைத் தனித்திருக்கவிடாமல் கூட்டம் நெருங்கியதனால் எரிச்சலடைவதற்குப் பதிலாக, இயேசு அவர்கள்மேல் “மனதுருகி”னார் என்று மாற்கு பதிவுசெய்கிறார். இயேசுவின் இந்த ஆழ்ந்த உணர்ச்சிகளுக்குக் காரணம் என்ன? “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்”தார்கள். மறுபடியுமாக இயேசு தம்முடைய உணர்ச்சிகளின்பேரில் செயல்பட்டு, அந்த ஜனக்கூட்டத்தாருக்கு “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து” போதிக்கத் தொடங்குகிறார். ஆம், அவர்களுடைய ஆவிக்குரிய பசியால் அவர் அவ்வளவு ஆழ்ந்த முறையில் தூண்டப்பட்டதால் அவர்களுக்குப் போதிப்பதற்காக தமக்குத் தேவைப்பட்ட இளைப்பாறுதலைத் தியாகம் செய்தார்.—மாற்கு 6:34; லூக்கா 9:11.
19. அந்தக் கூட்டத்தாருக்காக இயேசுவுக்கிருந்த அக்கறை எவ்வாறு அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளையும் மிஞ்சி சென்றது?
19 இயேசு, ஜனங்களின் ஆவிக்குரிய தேவைகளைப்பற்றி முதலாவதாக அக்கறைகொண்டிருந்தபோதும், அவர்களுடைய சரீரப்பிரகாரமான அடிப்படை தேவைகளைக் கவனியாமல் ஒருபோதும் விடவில்லை. அதே சந்தர்ப்பத்தில், “சுகம் வேண்டியவர்களைச் சுகமாக்கினார்.” (லூக்கா 9:11, தி.மொ.) பிற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், ஜனக்கூட்டத்தார் அவருடன் வெகுநேரம் இருந்துவிட்டனர், அவர்கள் வெகுதூரத்திலிருந்து வந்திருந்தனர். அவர்களுடைய சரீரப்பிரகாரமான தேவையை உணர்ந்து, இயேசு தம்முடைய சீஷர்களிடம்: “ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே” என்று சொன்னார். (மத்தேயு 15:32) ஏற்படக்கூடிய துன்பத்தைத் தவிர்ப்பதற்கு இயேசு இப்பொழுது ஒன்று செய்கிறார். ஏழு அப்பங்களையும் ஒருசில சிறு மீன்களையும் கொண்டு அந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அற்புதமாய் உணவு உண்டாகச்செய்து அளிக்கிறார்.
20. இயேசு மனதுருகினதைப்பற்றி பதிவுசெய்யப்பட்ட கடைசி சந்தர்ப்பத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
20 இயேசு மனதுருகினதைப்பற்றி பதிவுசெய்யப்பட்ட கடைசி சந்தர்ப்பம் எருசலேமுக்குச் செல்லும் அவருடைய கடைசி பயணத்தின்போதாகும். பஸ்காவை ஆசரிப்பதற்காகப் பெரும் கூட்டத்தார் அவரோடுகூட பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எரிகோவுக்கு அருகிலுள்ள பாதையில், பிச்சைக்காரரான இரண்டு குருடர்கள், “ஆண்டவரே . . . எங்களுக்கு இரங்கும்” என்று விடாது கத்திக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தார் அவர்களைப் பேசாமலிருக்கும்படி செய்ய முயற்சி செய்கின்றனர், ஆனால் இயேசு அவர்களை அழைத்து தாம் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமெனக் கேட்கிறார். “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும்” என்று கெஞ்சுகிறார்கள். “மனதுருகி,” அவர் அவர்களுடைய கண்களைத் தொடுகிறார், அவர்கள் பார்வையடைகிறார்கள். (மத்தேயு 20:29-34) இதிலிருந்து என்னே ஓர் முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்! இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் கடைசி வாரத்தில் பிரவேசிக்க இருக்கிறார். சாத்தானுடைய பிரதிநிதிகளின் கைகளில் கொடூர மரணத்தை அனுபவிப்பதற்கு முன்பாகச் செய்துமுடிக்க அவருக்கு மிகுதியான வேலை உள்ளது. எனினும், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தின் நெருக்கடி தம்முடைய உருக்கமான இரக்க உணர்ச்சிகளை அதிக முக்கியத்துவமல்லாத மனிதத் தேவைகளுக்குக் காட்டுவதைத் தடுத்து வைப்பதற்கு அவர் அனுமதிக்கிறதில்லை.
இரக்கத்தை சிறப்பித்துக் காட்டும் உவமானங்கள்
21. எஜமானர் தன்னுடைய அடிமையின் பெரும் கடனை மன்னித்துவிடுவதால் எது சித்தரித்துக் காட்டப்படுகிறது?
21 இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய இந்தப் பதிவுகளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வினைச்சொல்லாகிய ஸ்பிலேக்னீஸோமேய், இயேசுவின் மூன்று உவமைகளிலுங்கூட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கதையில் ஓர் அடிமை ஒரு பெரும் தொகையான கடனைச் செலுத்துவதற்கு காலம் அனுமதிக்கும்படி கெஞ்சுகிறான். அவனுடைய எஜமானர், “மனதுருகி” அந்தக் கடனை மன்னித்துவிடுகிறார். இது, இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசத்தைக் காட்டும் ஒவ்வொரு தனி கிறிஸ்தவனின் பெரும் கடனை மன்னிப்பதில் யெகோவா தேவன் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறாரென சித்தரித்துக் காட்டுகிறது.—மத்தேயு 18:27; 20:28.
22. கெட்ட குமாரனின் உவமை எதைச் சித்தரித்துக் காட்டுகிறது?
22 பின்னும் கெட்ட குமாரனின் கதை உள்ளது. தாறுமாறாக நடந்த அந்தக் குமாரன் வீட்டுக்குத் திரும்பி வருகையில் நடப்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.” (லூக்கா 15:20) தாறுமாறாக நடக்க முற்பட்ட ஒரு கிறிஸ்தவன் உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுகையில், யெகோவா மனதுருகி உருக்கமாய் அவனைத் திரும்ப ஏற்பார் என்று இது காட்டுகிறது. இவ்வாறு, நம்முடைய தகப்பனாகிய “யெகோவா பாசத்தில் உருக்கமுள்ளவரும் இரக்கமுள்ளவருமாக இருக்கிறார்” என்று இயேசு இந்த இரண்டு உவமானங்களின் மூலம் காட்டுகிறார்.—யாக்கோபு 5:11, NW, அடிக்குறிப்பு.
23. பிறனுக்கு நட்புணர்ச்சி காட்டின சமாரியனைப்பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
23 ஸ்பிலேக்னீஸோமேய் மூன்றாவது தடவை உவமானமாகப் பயன்படுத்தப்படுவது, வழிப்பறிசெய்து பெரும்பாலும் செத்தவனாக விடப்பட்டிருந்த யூதனின் நெருக்கடிநிலையில் ‘மனதுருகின’ இரக்கமுள்ள சமாரியனைக் குறித்ததிலாகும். (லூக்கா 10:33) இந்த உணர்ச்சிகளின்பேரில் செயல்பட்டு, அந்த அந்நியனுக்கு உதவி செய்யும்படி தன் சக்தியில் கூடியதையெல்லாம் அந்தச் சமாரியன் செய்தான். இது, உண்மையான கிறிஸ்தவர்கள் உருக்கத்தையும் இரக்கத்தையும் காட்டுவதில், தங்கள் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டுமென்று யெகோவாவும் இயேசுவும் எதிர்பார்க்கிறார்களென்று காட்டுகிறது. இதை நாம் செய்யக்கூடிய சில வழிகள் அடுத்தக் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
மறுபார்வையிடுவதில் கேள்விகள்
◻ இரக்கமுள்ளவராயிருப்பது பொருள்படுவதென்ன?
◻ யெகோவா எவ்வாறு தம்முடைய பெயரினிமித்தம் இரக்கத்தைக் காட்டினார்?
◻ இரக்கத்தின் மிகப் பெரிய வெளிக்காட்டாக இருப்பது என்ன?
◻ என்ன முக்கியமான முறையில் இயேசு தம்முடைய பிதாவின் பண்பியல்பைப் பிரதிபலிக்கிறார்?
◻ இயேசுவின் இரக்கமுள்ள செயல்களிலிருந்தும் உவமைகளிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7. யெகோவாவின் இரக்கம் அதன் எல்லையை எட்டிவிட்டபோது, யூதாவின் ராஜ்யத்துக்கு என்ன சம்பவித்தது?
[பக்கம் 12, 13-ன் பெட்டி]
“உருக்கமான அன்புள்ள கவனிப்பு” என்ற சொற்றொடருக்கு விளக்கம்
“என் குடல்கள், என் குடல்களே”! என்று தீர்க்கதரிசியாகிய எரேமியா கத்தினார். அவர் தான் சாப்பிட்டுவிட்ட ஏதோ கெட்ட உணவின் காரணமாக உண்டான ஒரு வயிற்று வலியைக் குறித்து வருத்தமறிவித்தாரா? இல்லை. யூதா ராஜ்யத்தின்மீது வரவிருந்த பேரழிவின்பேரில் தன் உள்ளாழத்தின் கவலையை விவரிப்பதற்கு எபிரெய உருவகம் ஒன்றைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.—எரேமியா 4:19.
யெகோவா தேவன் ஆழ்ந்த உணர்ச்சிகளை உடையவராதலால், “குடல்கள்” (மீயிம், [me·ʽimʹ]) இந்த உருக்கமான உணர்ச்சிவேகங்களை விவரிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, எரேமியாவின் நாட்களுக்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்னால், இஸ்ரவேலின் பத்துக்கோத்திர ராஜ்யம் அசீரியாவின் அரசனால் சிறைப்படுத்திக் கொண்டுசெல்லப்பட்டது. அவர்கள் உண்மையற்றவர்களானதற்குத் தண்டனையாக யெகோவா இதை அனுமதித்தார். ஆனால் அவர்கள் நாடுகடத்தப்பட்டிருந்தபோது யெகோவா அவர்களை மறந்துவிட்டாரா? இல்லை. தம்முடைய உடன்படிக்கைக்குரிய ஜனத்தின் பாகமாக அவர்களிடம் அவர் இன்னும் ஆழ்ந்த பற்றுதலுடையவராக இருந்தார். முதன்மைவாய்ந்த எப்பிராயீம் கோத்திரத்தின் பெயரால் அவர்களைக் குறிப்பிட்டு, யெகோவா இவ்வாறு கேட்டார்: “எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினதுமுதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் [குடல்கள், NW] அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன்.”—எரேமியா 31:20.
‘என் குடல்கள் அவனுக்காகக் கொதிக்கிறது’ என்று சொல்வதால் யெகோவா, நாடுகடத்தப்பட்டிருந்த தம்முடைய ஜனத்தினிடமாகத் தம்முடைய ஆழ்ந்த பாச உணர்ச்சியை விவரிப்பதற்கு ஒரு சொல்லணியைப் பயன்படுத்தினார். 19-வது நூற்றாண்டு பைபிள் அறிவாளர் E. ஹென்டர்சன் இந்த வசனத்தின்பேரில் சொல்லும் தன் விளக்கவுரையில் பின்வருமாறு எழுதினார்: “யெகோவா இங்கே காட்டுகிற, திரும்பிவரும் கெட்ட குமாரனிடமாக பெற்றோருக்குரிய உருக்கமான உணர்ச்சியின் இந்த உள்ளத்தைத் தொடும் வெளிக்காட்டை எதுவும் மேம்பட முடியாது. . . . [விக்கிரக வணக்கத்திலீடுபட்ட அந்த எப்பிராயீமியருக்கு] விரோதமாக அவர் இவ்வாறு பேசி அவர்களைத் தண்டித்திருந்தபோதிலும் . . . அவர் அவர்களை ஒருபோதும் மறந்துவிடவில்லை, ஆனால், அதற்கு மாறாக, அவர்கள் கடைசியாக மீட்கப்படுவதன் எதிர்பார்ப்பில் மகிழ்ந்தார்.”
“குடல்கள்” என்பதற்கான கிரேக்கச் சொல், கிறிஸ்தவ கிரேக்க வேதவாக்கியங்களில் இதைப்போன்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் 1:18-ல் இருப்பதுபோல், சொல்லர்த்தமாய்ப் பயன்படுத்தப்படாதபோது, அது பாசத்தின் அல்லது இரக்கத்தின் உருக்கமான உள்ளுணர்ச்சிகளைக் குறிப்பிடுகிறது. (பிலேமோன் 12) இந்தச் சொல் சில சமயங்களில் “நல்லது” அல்லது “நலம்” என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லுடன் இணைக்கப்படுகிறது. ‘உருக்கமான இரக்கத்துடன்’ சொல்லர்த்தமாய் ‘இரக்கத்துக்கு மனம்சாய்பவராக’ இருக்கும்படி கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகையில், அப்போஸ்தலர் பவுலும் பேதுருவும் இந்த ஒன்றிணைந்த சொல்லமைப்பைப் பயன்படுத்துகின்றனர். (எபேசியர் 4:32; 1 பேதுரு 3:8) “குடல்கள்” என்பதற்கான கிரேக்கச் சொல் போலை (pol·yʹ) என்ற கிரேக்கச் சொல்லுடனும் இணைக்கப்படலாம். இந்த ஒன்றிணைவு “அதிகக் குடலைக் கொண்டிருப்பது” என சொல்லர்த்தமாய்ப் பொருள்படுகிறது. இந்த மிக அரிதான கிரேக்கச் சொற்றொடர் பைபிளில் ஒரே ஒரு தடவையே பயன்படுத்தப்பட்டுள்ளது, அங்கே அது யெகோவா தேவனைக் குறிக்கிறது. புதிய உலக மொழிபெயர்ப்பு: “யெகோவா பாசத்தில் வெகு உருக்கமிக்கவராக இருக்கிறார்” என்று மொழிபெயர்க்கிறது.—யாக்கோபு 5:11.
சர்வலோகத்திலும் மகா வல்லமையுள்ளவராகிய யெகோவா தேவன், இரக்கமற்ற மனிதரால் கற்பனையாக உருவாக்கப்பட்ட கொடூர தெய்வங்களுக்கு அவ்வளவு மாறாக இருப்பதால் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! உண்மையான கிறிஸ்தவர்கள், “உருக்கமான இரக்கமுள்ள” தங்கள் கடவுளின் மாதிரியைப் பின்பற்றி, ஒருவருக்கொருவருள்ள தங்கள் தொடர்புகளில் அவ்வாறு செயல்படும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.—எபேசியர் 5:1.
[பக்கம் 10-ன் படம்]
கடவுளுடைய இரக்கம் அதன் எல்லையை எட்டிவிட்டபோது, தாறுமாறாக நடந்த தம்முடைய ஜனத்தை பாபிலோனியர் கைப்பற்றும்படி யெகோவா அனுமதித்தார்
[பக்கம் 11-ன் படம்]
தம்முடைய மிக நேசமான குமாரன் மரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தது, எவராவது என்றாவது அனுபவித்த எதைப் பார்க்கிலும் மிக அதிகமான வேதனையை யெகோவா தேவனுக்கு உண்டுபண்ணியிருக்க வேண்டும்
[பக்கம் 15-ன் படம்]
இயேசு தம்முடைய பிதாவின் இரக்கமுள்ள பண்பியல்பைப் பரிபூரணமாகப் பிரதிபலித்தார்