“நற்செய்தியைக் குறித்து வெட்கப்படேன்”
“நற்செய்தியைக் குறித்து நான் வெட்கப்படேன்; விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது.”—ரோமர் 1:16.
1. பொதுவாக நற்செய்தி எவ்வாறு வரவேற்கப்படுகிறது, ஆனால் விசுவாசமற்ற உலக ஆட்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை எவ்வாறு கருதுவார்கள்?
ஒரு நபருக்கு நற்செய்தியாக தென்படுவது மற்றொருவருக்கு நற்செய்தியாக இல்லாமல் இருக்கலாம். பொதுவாக, நற்செய்தியை எடுத்துச் செல்பவர் இருதயப்பூர்வமாக வரவேற்கப்படுகிறார், செய்தியை கேட்பதற்கு ஆவலுள்ள காது அவரிடமாக திருப்பப்படும். என்றபோதிலும், உலகத்திலுள்ள விசுவாசமற்ற ஆட்கள், கடவுளுடைய ராஜ்யத்தையும் அதன் இரட்சிப்பிற்கான செய்தியையும் மகிழ்ச்சிக்குரியதாக கருத மாட்டார்கள் என்று பைபிள் முன்னறிவித்தது.—2 கொரிந்தியர் 2:15, 16 ஒப்பிடுக.
2. தான் அறிவித்த நற்செய்தியை பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் என்ன சொன்னார்? அவர் அறிவித்த செய்தி ஏன் இன்றும் நற்செய்தியாக இருக்கிறது?
2 அப்போஸ்தலனாகிய பவுல் பொது மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்லும்படி அனுப்பப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறித்து அவர் எவ்வாறு உணர்ந்தார்? அவர் சொன்னார்: “ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்.” (ரோமர் 1:15, 16) அப்போஸ்தலனாகிய பவுல் ரோமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதி சுமார் 2,000 வருடங்களுக்குப் பின்னால் இன்றுவரை ஒரு செய்தி நல்லதாக இருக்க வேண்டுமென்றால் அது உண்மையிலேயே நீடித்து நிலைத்து நிற்கும் நற்செய்தியாக இருக்க வேண்டும். அது உண்மையில், “நித்திய நற்செய்தி.”—வெளிப்படுத்துதல் 14:6.
3, 4. நற்செய்தியைக் குறித்து தான் வெட்கப்படவில்லை என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஏன் சொன்னார்?
3 நற்செய்தியைக் குறித்து தான் வெட்கப்படவில்லை என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஏன் சொன்னார்? அதைக் குறித்து அவர் ஏன் வெட்கப்பட்டிருக்கலாம்? ஏனென்றால் அது ஒரு பிரபலமான செய்தியாக இல்லை, பழிதூற்றப்பட்ட குற்றவாளியைப் போல் கழுமரத்தில் அறையப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி, எல்லா வெளித்தோற்றங்களுக்கும் கெட்டவராக காண்பிக்கப்பட்ட ஒருவரை உட்படுத்திய செய்தி அது. இந்த மனிதன் நற்செய்தியோடு பலஸ்தீனாவில் மேலும் கீழுமாக மூன்றரை வருடங்கள் சென்று, யூதர்களிடமிருந்து, விசேஷமாக மதத்தலைவர்களிடமிருந்து கடினமான எதிர்ப்பை எதிர்ப்பட்டார். இப்பொழுது பவுல் ஏளனம் செய்யப்பட்ட அந்த மனிதனின் பெயரைத் தரித்துக் கொண்டு, அதே போன்ற எதிர்ப்பை எதிர்ப்பட்டார்.—மத்தேயு 9:35; யோவான் 11:46-48, 53; அப்போஸ்தலர் 9:15, 20, 23.
4 அப்பேர்ப்பட்ட எதிர்ப்பின் காரணமாக பவுலும் மற்றும் அவருடைய உடன் கிறிஸ்தவ சீஷர்களும் வெட்கத்திற்குரிய ஏதோ ஒன்றை உடையவர்களாக கருதப்பட்டிருக்கலாம். உண்மையில், பவுல் இப்பொழுது பின்பற்றும் காரியத்தை அவரே முன்பு வெட்கப்படுவதற்குரியதாக கருதினார். இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்கள் மீது தனிப்பட்ட விதமாக அவர் தாமே நிந்தையைக் குவிப்பதில் பங்குகொண்டார். (அப்போஸ்தலர் 26:9-11) ஆனால் அந்தச் செயலை அவர் நிறுத்திவிட்டார். அதன் விளைவாக, அவரும் அவரோடு சேர்ந்து கிறிஸ்தவர்கள் ஆனவர்களும் வன்முறையாக துன்புறுத்தப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 11:26.
5. நற்செய்தியைக் குறித்து வெட்கப்படேன் என்ற தன் கூற்றை பவுல் எப்படி விளக்கினார்?
5 இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவராக இருப்பதைக் குறித்து வெட்கப்பட ஓர் ஆள் அனுமதிப்பாரேயானால், அவர் காரியங்களை மனித நோக்குநிலையிலிருந்து காண்பவராக இருப்பார். அப்போஸ்தலனாகிய பவுல் அவ்விதமாக இல்லை. மாறாக, அவர் பிரசங்கித்த நற்செய்தியைக் குறித்து அவர் வெட்கப்படவில்லை என்பதை விளக்குபவராய் அவர் சொன்னார்: “விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது.” (ரோமர் 1:16) இயேசு கிறிஸ்து தாமே வணங்கி, துதித்தவரான மகிமையான கடவுளின் புகழத்தக்க நோக்கத்தை நிறைவேற்ற இயேசுவின் சீஷரில் கிரியை செய்யும் கடவுளுடைய வல்லமை வெட்கப்படுவதற்குரிய காரணம் அல்ல.—1 கொரிந்தியர் 1:18; 9:22, 23 ஒப்பிடுக.
நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படுகிறது
6, 7. (எ) நற்செய்தியைக் குறித்ததில் என்ன உத்தரவாதத்தோடு யெகோவாவின் சாட்சிகள் வாழ முயற்சி செய்கின்றனர், என்ன விளைவுகளுடன்? (பி) சாட்சி கொடுப்பதிலிருந்து பின்வாங்கி செல்வதற்கு பயம் நம்மை தடைசெய்யாதபடி இருக்க விரும்பினாலும், எது சில வேளைகளில் அவசியமாக இருக்கலாம்? (அடிக்குறிப்பு பாருங்கள்.)
6 பவுலைப் போலவே யெகோவாவின் சாட்சிகள் இன்று மகிமைப்படுத்தப்பட்ட குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கிறார்கள். தன்னுடைய சாட்சிகளாகிய இவர்களிடம் யெகோவா இந்தப் பொக்கிஷமாகிய “மகிமையான சுவிசேஷத்தை” ஒப்படைத்திருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11) இந்தக் கனத்த உத்தரவாதத்திற்கு இணங்க வாழ்வதில் யெகோவாவின் சாட்சிகள் தவறவில்லை, மேலும் அவர்கள் அதைக் குறித்து வெட்கப்படாமல் இருக்கும்படி உந்தப்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 1:8) சாட்சி கொடுப்பதிலும், யெகோவாவின் சாட்சிகளாக நம்மை அடையாளங் காட்டிக் கொள்வதிலும் இருந்து பயமோ அல்லது கோழைத்தனமோ நம்மைப் பின்வாங்கிச் செல்ல ஒருபோதும் அனுமதியாதபடி இருப்பது முக்கியம்.a
7 இப்படிப்பட்ட தைரியமான, பயமற்ற சாட்சி கொடுப்பதானது, உன்னதமான கடவுளுடைய நாமம் பூமி முழுவதிலும் அறிவிக்கப்படுவதிலும், உலகளாவிய விதத்தில் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதிலும் விளைவடைந்திருக்கிறது. கடவுளுடைய குமாரன் சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்.” அவருடைய முன்னறிவிப்பு தவறாக போகும்படி ஒருபோதும் அனுமதிக்கப்பட முடியாது. (மத்தேயு 24:14) இந்த நற்செய்தி 210 தேசங்களுக்கு மேலாக இப்போது பிரசங்கிக்கப்பட்டு வருகிறது, மேலும் இந்தப் பிரசங்க வேலையின் முடிவு இன்னும் எட்டப்படவில்லை. நற்செய்தியைக் குறித்து வெட்கப்படாமல் எதிர்காலத்தை தைரியத்துடன் எதிர்நோக்கி, இயேசு கிறிஸ்துவின் பூர்வ சீஷர்கள் ஜெபித்தபடி, “இப்பொழுதும் யெகோவாவே, (NW) . . . உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ் செய்தருளும்” என்று நாமும் ஜெபிப்போமாக.—அப்போஸ்தலர் 4:29, 30.
8. பூமியின் எல்லாத் தேசங்களிலிருக்கும் எதிர்ப்பைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் ஏன் சோர்வடைந்து விடக்கூடாது?
8 பூமியின் எல்லாத் தேசங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் பகைக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் இருப்பது உண்மையாக இருந்தாலும், ஒரே ஜீவனுள்ள, உண்மையான கடவுளின் உண்மை வணக்கத்தாரின் அடையாளக் குறியாக இது இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டதன் நிறைவேற்றமாக இருக்கிறது. (யோவான் 15:20, 21; 2 தீமோத்தேயு 3:12) ஆகையால், இதன் காரணமாக சோர்வடைந்து, மனம் தளராமல் நற்செய்தியை அறிவிப்பவர்கள், அவர்களுக்குத் தெய்வீக அங்கீகாரம் இருக்கிறதென்றும், சர்வலோக பேரரசராகிய யெகோவாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் மறு உறுதியளிக்கப்பட்டிருக்கின்றனர்.
9. இந்த முழு உலகமும் நமக்கு எதிராக இருப்பது ஏன் ஒரு பொருட்டல்ல?
9 எப்போதும் மறக்க வேண்டாம்: சர்வலோகத்தின் உன்னதமான கடவுளின் ஆதரவு நமக்கு இருக்கிறது. ஆகையால் உலகமும் அதன் எல்லா மத பிரிவுகளும் மற்றும் அரசியல் கட்சிகளும் நமக்கு எதிர்ப்பாக இருந்தால் அதனால் என்ன? கடவுளுடைய ஒரே பேறான குமாரனுக்கு இந்த முழு உலகமும் எதிராக இருந்தது, அதே சூழ்நிலையில் காணப்படுவதைக் குறித்து நாம் வெட்கப்படவில்லை. அவர் தன் அப்போஸ்தலர்களிடம் சொன்னபடி: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும். நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.”—யோவான் 15:18, 19.
10. எந்த ஊற்றுமூலத்திலிருந்து அதிகமான துன்புறுத்தல் சாட்சிகளுக்கு வந்திருக்கிறது? அதைக் குறித்து அவர்கள் ஏன் வெட்கப்படுவதில்லை?
10 இவ்வாறாக, யெகோவாவின் சாட்சிகள் உலக முழுவதிலும் துன்புறுத்தலை சகித்திருக்கிறார்கள், ஆனால் அதிமுக்கியமாக கிறிஸ்தவ மண்டலம் என்றழைக்கப்படும் தொகுதியில் அடங்கிய தேசங்களில் அவ்வாறு அனுபவித்திருக்கிறார்கள். கிறிஸ்தவ மண்டலத்தால் செய்யப்படும் அப்பேர்ப்பட்ட துன்புறுத்தல் சாட்சிகள் கிறிஸ்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிப்பதில்லை. மாறாக, அது அவர்கள் உண்மை கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமாகிய யெகோவாவின் சாட்சிகள் என்ற அவர்களுடைய கூற்றை ஆதரித்திருக்கிறது. கடவுளுடைய சாட்சிகளாக இருப்பதன் காரணமாக, மத அடிப்படையில் துன்புறுத்தலை அனுபவிக்கும்போது அவர்கள் வெட்கமடைவதில்லை. ஆகையால், வெட்கப்பட வேண்டாம் என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறிய புத்திமதி இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்குச் சரியாக பொருந்துகிறது.—பிலிப்பியர் 1:27-29 பார்க்கவும்.
அறிவிக்க மிகச் சிறந்த செய்தி
11. யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்பதன்மூலம், இயேசு கிறிஸ்துவை பின்பற்றாதவர்களாய் நாம் ஏன் ஆகிவிடுவதில்லை?
11 ஏசாயா 43:10-ல் தன் உடன்படிக்கை ஜனங்களுக்கு யெகோவா தந்த வாக்கின் நிறைவேற்றமாக, யெகோவாவின் சாட்சிகள் தைரியமாக அவர்களுடைய பெயரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்றபோதிலும், இது அவர்கள் இயேசு கிறிஸ்துவை இனிமேலும் பின்பற்றப் போவதில்லை என்பதை அர்த்தப்படுத்தாது. இயேசு அவர்கள் தலைவர், அவருடைய முன்மாதிரியை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் தானே யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் இருக்கிறார். உண்மையில், அவர் யெகோவாவின் பிரதான சாட்சி.—1 தீமோத்தேயு 6:13; வெளிப்படுத்துதல் 1:5.
12. என்ன வகையான நற்செய்தியை யெகோவாவின் சாட்சிகள் பூமி முழுவதிலும் பிரசங்கிக்கின்றனர்? ஏன்?
12 உலக முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கும் இந்தச் செய்தி இதுவரை அறிவித்திராத மிகச் சிறந்த செய்தி. மனிதவர்க்க உலகத்தின் மேல் ஆட்சி செய்வதற்காக யெகோவா ஸ்தாபித்திருக்கும் மேசியானிய ராஜ்யத்தைவிட மனிதவர்க்கத்திற்கு வேறு எந்த அரசாங்கமும் மேலானதாக இருக்கமுடியாது. மனிதவர்க்கத்தை மீட்பதற்காக அவர் தன்னுடைய ஒரே பேறாக குமாரனை அனுப்பினார். (ஏசாயா 9:6, 7) பூமியில் குடியிருப்போருக்கு ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளவும், பரதீஸிய பூமியில் மானிட பரிபூரணத்தில் நித்திய ஜீவனாகிய பரிசைப் பெற தங்களைத் தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
13 தன்னுடைய குடிமக்களாக ஆகப்போகிறவர்களை மீட்பதற்கு ஒரு கொடூரமான மரணத்தை அனுபவிக்க இயேசு முன்வந்ததினால், நிச்சயமாக அவர் அவர்களுக்கு மிகச் சிறந்த அரசாங்கத்தை தவிர வேறு எதையும் தரமாட்டார். பூமியில் உள்ள ஒவ்வொரு மானிட சிருஷ்டிக்கும் நாங்கள் சிபாரிசு செய்கிறோம்: அந்த அரசாங்கத்தின் ஓர் உண்மையுள்ள, கீழ்ப்படிதலுள்ள பிரஜையாக ஆகுங்கள். எல்லா மனிதவர்க்கத்திற்கும் நாங்கள் உண்மையுடன் சிபாரிசு செய்யும் அரசாங்கத்தைக் குறித்து நாங்கள் வெட்கப்படவில்லை. அந்த ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பது எங்களுக்கு துன்புறுத்தலைக் கொண்டுவந்த போதிலும் நாங்கள் பின்வாங்கிப் போவதில்லை. அப்போஸ்தலனாகிய பவுலைப் போல நாங்கள் ஒவ்வொருவரும் சொல்லுகிறோம்: “நற்செய்தியைக் குறித்து நான் வெட்கப்படேன்.”
14. இயேசு சொன்னபடி, நம் நாளில் ராஜ்ய பிரசங்கிப்பு எவ்வளவு விரிவாக இருக்கும்?
14 ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுவது உலகளாவிய விதத்தில் இருக்கும் என்று இயேசு முன்னறிவித்தார், மேலும் இந்த விரிவான தீர்க்கதரிசனம் அப்பேர்ப்பட்ட செய்திக்குப் பொருத்தமானதாய் இருந்தது. (மாற்கு 13:10) யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய பிரசங்கிப்பு மிகப் பரந்த அளவுக்கு—ஆம், பூமியின் கடைமுனை மட்டும் என்பதை முன்னறிவிக்க அவர் தயங்கவில்லை. (அப்போஸ்தலர் 1:8) ஜனங்கள் எங்கிருந்தாலும் ராஜ்யத்தின் நற்செய்தியுடன் அவர்களை எட்ட தம்மை விசுவாசத்துடன் பின்பற்றுபவர்கள் உண்மையாய் முயற்சி செய்வர் என்று இயேசு அறிந்திருந்தார்.
15, 16. (எ) நற்செய்தியினால் சென்றெட்டப்பட யார் தகுதியுள்ளவர்கள்? (பி) சாத்தானின் அமைப்பினால் துன்புறுத்துதல் இருந்தபோதிலும், பிரசங்க வேலை ஏன் நிறைவேற்றப்படும்?
15 பூமியில் குடியிருப்போரின் எண்ணிக்கை இன்று பல நூறு கோடிகளில் இருக்கிறது, மேலும் அது எல்லாக் கண்டங்களிலும், கடல்களின் பெரிய தீவுகளிலும் பரவியிருக்கிறது. என்றபோதிலும், குடியிருக்கப்பட்ட பூமியின் எந்தப் பாகமும் யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியுடன் முயற்சி செய்து சென்றெட்ட முடியாத அளவிற்கு தூரமானதாக இல்லை. குடியிருக்கப்பட்ட பூமி அனைத்தும் யெகோவா தேவனின் அடையாளப்பூர்வமான பாதபடியாயிருக்கிறது. (ஏசாயா 66:1) அவருடைய பாதபடியின் எந்தப் பாகத்தில் மானிட சிருஷ்டிகள் இருந்தாலும் அவர்கள் இந்த இரட்சிப்பின் செய்தியை அடைய தகுதியுடையவர்களாய் இருக்கின்றனர்.
16 இந்த நற்செய்தி இன்று மேசியாவின் கைகளில் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட ஒரு ராஜரீக அரசாங்கத்தின் சந்தோஷமான செய்தி. சாத்தானின் அமைப்பின் பாகத்தில் கடுமையான துன்புறுத்தல் இருந்தபோதிலும், கடவுளுடைய ஆவி மேசியாவை உண்மையாய் பின்பற்றுபவர்களை, ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி”யை “குடியிருக்கப்பட்ட பூமியனைத்திலும் பிரசங்கிப்பதில்” உச்ச வரம்பை எட்டும்படி உந்துவிக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார்.—மத்தேயு 24:14.
இயேசு கிறிஸ்துவையும் யெகோவாவையும் குறித்து வெட்கப்படாமலிருத்தல்
17. (எ) எதைப்பற்றி உண்மை வணக்கத்தார் வெட்கப்படுவதில்லை? (பி) மாற்கு 8:38-ல் இயேசு என்ன சட்டத்தை வைத்தார், அதனுடைய முக்கியத்துவம் என்ன?
17 உன்னதமான கடவுள் தனக்கு யெகோவா என்ற ஒரு பெயரைக் கொடுக்க தயங்கவில்லை; அவருடைய உண்மை வணக்கத்தாரும் அந்தப் பெயரைக் குறித்து வெட்கப்படக்கூடாது. முழுமையான வணக்கத்தையும், கீழ்ப்படிதலையும் அவருக்குக் கொடுப்பவர்களாக அறியப்படவும், அங்கீகரிக்கப்படவும் உண்மை வணக்கத்தார் சந்தோஷம் உள்ளவர்களாக இருக்கின்றனர். தன்னைக் குறித்து இயேசு இந்தச் சட்டத்தை அல்லது நியமத்தை மாற்கு 8:38-ல் வைத்தார்: “ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுவனோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடும்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.” அதேபோன்று, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவரைக் குறித்து எவராவது வெட்கம் அடைவாரேயானால் யெகோவா அப்பேர்ப்பட்டவர் மீது சரியாகவே வெட்கமடைவார். அதன் விசுவாசமற்ற செயலுக்காக யெகோவா வெட்கப்படும் எந்த ஒரு சிருஷ்டியும் கடவுளின் ஆட்சிக்குட்பட்ட எந்த ஒரு பகுதியிலும், பரலோகத்திலோ அல்லது பூமியிலோ வாழ்க்கையை அனுபவிக்க தகுதியுடையவர்களாய் இல்லை.—லூக்கா 9:26.
18. (எ) மத்தேயு 10:32, 33-ல் இருக்கும் இயேசுவின் வார்த்தைகள் நம் மனங்களிலும் இருதயங்களிலும் ஏன் ஆழப் பதிய வேண்டும்? (பி) மனிதர்களுக்குப் பயப்படுவதன் காரணமாக இயேசுவையும் யெகோவாவையும் மறுதலிக்கிறவர்களுக்கு என்ன ஏற்படுகிறது? (அடிக்குறிப்பை சார்ந்த உதாரணங்களை கொடுங்கள்.)
18 இயேசு கிறிஸ்துவின் பின்வரும் வார்த்தைகள் நம்முடைய இருதயங்களிலும் மனங்களிலும் ஆழமாக பதிவதாக: “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” (மத்தேயு 10:32, 33; லூக்கா 12:8, 9) அதே அடிப்படையில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளையும் தகப்பனையும் மறுதலிக்கிறவன் எவனோ அவனை அவரும் மறுதலிப்பார். பிரதான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வீட்டாரின் அங்கத்தினனாக இருக்க அவன் தகுதியுள்ளவனாக எண்ணப்பட மாட்டான். ஆகையால் அவன் கடவுளுடைய குறித்த காலத்தில் அழிக்கப்படுவான்.b
19, 20. (எ) யெகோவாவின் நாமம் பரிசுத்தப்படுவதாக என்று ஜெபித்திருப்பவர்கள் வெட்கப்படுவதற்கு ஏன் ஒன்றும் இல்லை?
19 இயேசு தன் சீஷர்களுக்கு, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று கற்பித்த மாதிரி ஜெபத்திற்குப் பதிலளிக்கப்படும். (மத்தேயு 6:9, 10) அது நடைபெறும்போது இயேசுவின் அன்பான சீஷர்கள் வெட்கப்படுவதற்கு எதுவும் இருக்காது. மரிக்கவே தேவையில்லாத இப்பொழுது வாழும் இலட்சக்கணக்கான ஆட்களால் மட்டுமல்லாமல், அவருடைய ஆயிர வருட ராஜ்ய அரசாட்சியின்போது கல்லறைகளிலிருந்து அவர் அழைக்கப்போகும் இலட்சக்கணக்கானவர்களாலும் யெகோவாவின் நாமம் உயர்வாக மதிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்படும். பரதீஸிய பூமியில் என்றும் வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கும்.
20 ராஜ்யத்தின் நற்செய்தியை வெட்கமின்றி பயமில்லாமல் அறிவிப்பவர்கள் உலகளாவிய எதிர்ப்பின் மத்தியிலும் ஒரு பூகோள சாட்சி கொடுத்தலை சாதித்திருக்கிறார்கள். ஏனென்றால் மானிட சக்திக்கும் மேலான சக்தி அவர்களுக்குப் பின் இருக்கிறது—பரலோக தூதர்களின் ஆதரவு. ஆகையால், யெகோவாவின் சாட்சிகள் ‘தேவனுக்கு பயந்து அவருக்கு மகிமையை கொடுக்கிறார்கள்.’—வெளிப்படுத்துதல் 14:6, 7.
தேவனுக்குப் பயந்து அவருக்கு மகிமை கொடுப்பதைக் குறித்து வெட்கப்படாமலிருத்தல்
21. எதைச் செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் வெட்கப்படாமல் இருக்கின்றனர்? என்ன விளைவுடன்?
21 கடவுளுக்குப் பயந்து அவருக்கு மகிமை கொடுப்பதற்கு அவருடைய தனிப்பட்ட பெயராகிய யெகோவா என்பதை உபயோகிப்பதிலும்கூட வெட்கப்படுவதில்லை என்பதை யெகோவாவின் சாட்சிகள் நிரூபித்திருக்கின்றனர். இது அவர்களுக்குச் சொல்லொண்ணா ஆசீர்வாதங்களை விளைவித்திருக்கிறது. மகா உன்னத கடவுளின் வாக்குகளின் உண்மையான நிறைவேற்றமாக இந்த ஆசீர்வாதங்கள் வந்திருக்கின்றன. ஒரே ஜீவனுள்ள மெய்க் கடவுளாக, சர்வலோகத்தின் பேரரசராக அவரை இது எப்படி மகிமைப்படுத்தியிருக்கிறது!
22. யெகோவாவின் சாட்சிகள் ஏன் கடுமையான துன்புறுத்தலை எதிர்ப்படுவார்கள், ஆனால் அவர்களுடைய சந்தோஷம் என்னவாக இருக்கும்?
22 வரப்போகும் எதிர்காலத்தில் உலக அரசாங்கங்கள் மத அரசாட்சிகளுக்கு விரோதமாக திரும்பி அவைகள் எல்லாவற்றையும் அழிக்கும்—கிறிஸ்தவ மண்டலம் உட்பட இல்லாமல் போகும். (வெளிப்படுத்துதல் 17:16, 17) அதன் விளைவாக யெகோவாவின் சாட்சிகள் உலகத்தாரிடமிருந்து கடுமையான துன்புறுத்தல் நிறைந்த காலப்பகுதியை எதிர்ப்படுவார்கள். நித்திய கடவுள் அவர்களுடன் இல்லாவிடில் அதை அவர்கள் சகித்து தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அவர் அவர்களோடிருக்கிறார், ஆகையால் கிறிஸ்துவுக்கு எதிரான, யெகோவாவுக்கு எதிரான சத்துருக்களை தாங்கள் மாறாமல் வணங்கும் கடவுள் அழிப்பதைக் காணும் சந்தோஷம் அவர்களுக்கு இருக்கும். உண்மையான தேவ ராஜ்யத்தின் சத்துருக்களாக வெளிக்காட்டப்பட்டு அழிக்கப்படும் வெட்கத்தை அவர்கள் சகிக்க வேண்டியதில்லை, ஆனால் “நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” என்று யெகோவாவுக்குப் பாடும் சொல்லொண்ணா சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.—சங்கீதம் 90:2.
23. யெகோவாவின் சாட்சிகள் வெட்கப்படுவதற்கு ஏன் ஒன்றுமில்லை? என்ன விளைவு ஏற்படும்?
23 அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தகப்பனாகிய தேவனில் மகிமைப்படுவார்கள், அவர் மூலமாய் மானிட குடும்பம் மீட்கப்பட்டு பரதீஸிய பூமியில் மானிட பரிபூரணத்திலும் சந்தோஷத்திலும் நித்திய ஜீவனை அனுபவிப்பார்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா தேவன் தன்னை எவ்வளவு வல்லமை உள்ளவராக காட்டியிருக்கிறார்! எவ்வளவு அழகாக யெகோவா, தம் சர்வ வல்லமையை ஞானமாகவும் அன்பாகவும் உபயோகிக்கிறவர் என்றும், துர்ப்பிரயோகம் செய்பவர் அல்லர் என்றும் தம்மை வெளிக்காட்டியிருக்கிறார்! அதன்படி, அவர் தொடர்பாகவும் அல்லது அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் தொடர்பாகவும் வெட்கப்படுவதற்குரிய காரியம் நமக்கு ஒன்றுமில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலமாக சகலத்தையும் வெல்லும் யெகோவாவின் வல்லமையை எடுத்துரைக்கும் மகிமையான நற்செய்தியை அறிவிப்பவர்களாக இருப்பதைக் குறித்து நாமும் வெட்கப்படுவதில்லை. பூமிக்குரிய வாழ்வை முடிக்கும் மணிநேரங்களில் அவர் சொன்னார்: “தைரியம் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்.” (யோவான் 16:33, NW) இவ்வழியை மேற்கொள்வதன் மூலம், நற்செய்தியைக் குறித்து ஒருபோதும் வெட்கப்படாத அப்போஸ்தலனாகிய பவுலின் முன்மாதிரியை நாம் எப்பொழுதும் பின்பற்றுவோமாக. நாம் அதைச் செய்வோமேயானால் சர்வவல்லமையுள்ள கடவுள் நம்மைக் குறித்து வெட்கமடையமாட்டார். (w90 1/1)
[அடிக்குறிப்புகள்]
a நாம் சாட்சிகள் என்ற உண்மையை எதிர்ப்படுவதற்கு வெட்கப்படுவதில்லையென்றாலும் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாக” இருக்க வேண்டிய சமயங்களும் இருக்கின்றன. (மத்தேயு 10:16) நாசி ஜெர்மனியில் இருந்த சாட்சிகள் தங்களை அடையாளங் காட்டிக்கொள்ள ஒரு சமயமும், அடையாளங் காட்டாமல் இருக்க ஒரு சமயமும் இருந்ததை அறிந்திருந்தார்கள்.—அப்போஸ்தலர் 9:23-25 ஒப்பிடுக.
b மனிதர்களுக்குப் பயப்படுவதன் காரணமாக இயேசுவையும் யெகோவாவையும் மறுதலிக்கிறவர்கள் உலகத்திலிருந்து எந்த ஓர் ஆதரவும் பெறுவதில்லை என்பது அநேக சந்தர்ப்பங்களில் உண்மையாக இருந்திருக்கிறது. உதாரணமாக, ஆங்கில காவற்கோபுரம் மே 1, 1989, பக்கம் 12; 1982 வருடாந்தர புத்தகம், பக்கம் 168; 1977 வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 174-6; 1974 வருடாந்தர புத்தகம், பக்கங்கள் 149-50, 177-8. அதற்கு மாறாக, நற்செய்தியை உறுதியாக எதிர்ப்பவர்களும்கூட சாட்சிகள் இயேசுவையும் யெகோவாவையும் மறுதலிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். (1989 வருடாந்தர புத்தகம் பக்கங்கள் 116-18) மத்தேயு 10:39, லூக்கா 12:4-யும் பார்க்கவும்.
13. மேசியானிய ராஜ்ய அரசாங்கம் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்? மேலும் சாட்சிகள் வெட்கப்படாமல் எதைச் சிபாரிசு செய்கின்றனர்?
(பி) பயமற்ற ராஜ்ய அறிவிப்பாளர்கள் என்ன சாதித்திருக்கின்றனர்? என்ன ஆதரவோடு?
சுருக்கத்தில் கேள்விகள்
◻ அப்போஸ்தலனாகிய பவுலைப் போல், நற்செய்தியை அறிவிப்பதைக் குறித்ததில் என்ன மனநிலை நமக்கிருக்க வேண்டும்? ஏன்?
◻ யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கும் செய்தி ஏன் எக்காலத்திற்கும் மிகச் சிறந்த செய்தியாக இருக்கிறது?
◻ இயேசு ராஜ்ய வல்லமையில் வரும்போது அவரைக் குறித்து வெட்கம் அடைபவனைக் குறித்து என்ன எச்சரிப்பு கொடுத்தார்?
◻ இயேசுவையும் யெகோவாவையும் மறுதலிக்கிறவர்களுக்கு என்ன ஏற்படுகிறது?
◻ நற்செய்தியை அறிவிப்பவர்கள் வெட்கமின்றி என்ன சாதிக்க முடிந்திருக்கிறது? ஏன்?