யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
மத்தேயு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய விறுவிறுப்பூட்டும் பதிவை எழுதிய முதல் நபர் மத்தேயு. இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய கூட்டாளியான அவர் ஒருசமயம் வரி வசூலிப்பவராய் இருந்தார். மத்தேயு இந்தச் சுவிசேஷத்தை முதலில் எபிரெயுவில்தான் எழுதினார், பின்னர் அதைக் கிரேக்கில் மொழிபெயர்த்தார். இப்புத்தகம் சுமார் பொ.ச. 41-ல் எழுதி முடிக்கப்பட்டது. இது எபிரெய வேதாகமத்தையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும் இணைக்கும் பாலமாக அமைகிறது.
இந்தச் சுவிசேஷம் முக்கியமாய் யூதர்களுக்காக எழுதப்பட்டதாய்த் தெரிகிறது; மனதைத் தொடுவதாயும் அர்த்தம் பொதிந்ததாயும் உள்ள இச்சுவிசேஷம், இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாகவும் தேவனுடைய குமாரனாகவும் சித்தரிக்கிறது. இதிலுள்ள செய்திக்குக் கூர்ந்த கவனம் செலுத்துவது, உண்மைக் கடவுள்மீதும் அவருடைய குமாரன்மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதுமுள்ள நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது.—எபி. 4:12.
“பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது”
பைபிளின் முக்கியப் பொருளான ராஜ்யத்தைப் பற்றியும் இயேசுவின் போதனைகளைப் பற்றியும் மத்தேயு சிறப்பித்துக் காட்டுகிறார்; ஆனால் அந்த விஷயங்களை காலவரிசைக் கிரமத்தில் அவர் எழுதவில்லை. உதாரணமாக, இயேசு தம் ஊழியத்தை ஆரம்பித்து ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தார்; ஆனால், அப்பதிவை இப்புத்தகத்தின் ஆரம்பத்திலேயே மத்தேயு குறிப்பிட்டிருக்கிறார்.
கலிலேயா பகுதியில் ஊழியம் செய்கையில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்கிறார், 12 அப்போஸ்தலருக்கும் ஊழியம் சம்பந்தமான அறிவுரைகளைக் கொடுக்கிறார், பரிசேயர்களைக் கண்டிக்கிறார், ராஜ்யத்தின் பல்வேறு அம்சங்களை வலியுறுத்துகிற உவமைகளைச் சொல்கிறார். பிறகு, கலிலேயாவை விட்டு ‘யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளுக்கு’ வருகிறார். (மத். 19:1) வரும் வழியில், சீஷர்களிடம் இவ்வாறு கூறுகிறார்: ‘இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்.’—மத். 20:18, 19.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
3:16—இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது எவ்வாறு ‘வானம் திறக்கப்பட்டது’? இது, பூமியில் மனிதனாக பிறப்பதற்குமுன் பரலோகத்தில் வாழ்ந்த காலம் அவருடைய நினைவுக்கு வந்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.
5:21, 22—மனதில் வன்மம் வைத்திருப்பதைவிட கோபத்தைக் காட்டுவது மிக மோசமானதா? தன் சகோதரன்மீது ஒருவர் மனதுக்குள் கடும் வெறுப்பை வளர்த்தால் அது ஒரு மோசமான பாவம் என இயேசு எச்சரித்தார். என்றாலும், தரக்குறைவான வார்த்தையைப் பயன்படுத்துவதன்மூலம் கோபத்தைக் கொப்பளிப்பது அதைவிட மோசமான பாவமாகும்; அப்படிச் செய்பவர் உள்ளூர் நீதிமன்றத்திடம் அல்ல, உச்ச நீதிமன்றத்திடம், அதாவது ஆலோசனை சங்கத்திடம் கணக்குக்கொடுக்க வேண்டியவராகிறார்.
5:48—‘நம் பிதா பூரணராய் இருப்பதுபோல நாமும் பூரணராய்’ இருக்க முடியுமா? ஆம், ஓரளவுக்குப் பூரணராய் இருக்க முடியும். இயேசு இங்கு அன்பைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்; ஆகவே, கடவுளைப் பின்பற்றி தங்களுடைய அன்பைப் பூரணமாக, அதாவது முழுமையாகக் காட்டும்படி தம் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தோரிடம் அவர் கூறினார். (மத். 5:43-47) எப்படி? தங்களுடைய விரோதிகளிடமும் அன்பைக் காட்டுவதன்மூலம்.
7:16—எத்தகைய ‘கனிகள்’ உண்மை மதத்தை அடையாளம் காட்டுகின்றன? இந்தக் கனிகள் நம்முடைய நடத்தையை மட்டுமே உட்படுத்துவதில்லை. அவை நம்முடைய நம்பிக்கைகளையும், அதாவது நாம் பின்பற்றுகிற போதனைகளையும் உட்படுத்துகின்றன.
10:34-38—குடும்பத்தில் ஏற்படுகிற பிரிவினைகளுக்கு பைபிளின் செய்தியைக் குறைசொல்ல முடியுமா? முடியவே முடியாது. மாறாக, விசுவாசத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களின் நிலையே பிரிவினைகளுக்குக் காரணம். அவர்கள் ஒருவேளை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், அல்லது எதிர்க்கலாம். இதனால் குடும்பத்தில் பிரிவினைகள் ஏற்படுகின்றன.—லூக். 12:51-53.
11:2-6—இயேசுவை அங்கீகரித்திருப்பதாகச் சொன்ன கடவுளின் குரலை யோவான் கேட்டிருந்ததால் இயேசுதான் மேசியா என்பதை அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார், அப்படியிருந்தும் “வருகிறவர் நீர்தானா” என்று இயேசுவிடம் ஏன் கேட்டார்? இயேசுவே மேசியா என்பதை அவரிடமிருந்தே நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக யோவான் அவ்வாறு கேட்டிருக்கலாம். அதைவிட முக்கியமாக, அரசதிகாரத்தை உடைய “வேறொருவர்” வந்து யூதர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுவாரோ என்பதை அறிந்துகொள்ள அவர் விரும்பினார். தமக்குப் பிறகு வேறொருவர் வரப்போவதில்லை என்பதை இயேசு கொடுத்த பதில் தெளிவாகக் காட்டியது.
19:28—நியாயந்தீர்க்கப்படவிருக்கிற ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்’ யாரைக் குறிக்கின்றன? இவை ஆன்மீக இஸ்ரவேலின் 12 கோத்திரங்களை அர்த்தப்படுத்துவதில்லை. (கலா. 6:16; வெளி. 7:4-8) இயேசு இவ்விஷயத்தை தம் அப்போஸ்தலர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்; அவர்கள் ஆன்மீக இஸ்ரவேலின் அங்கத்தினர்களை நியாயம் விசாரிப்பவர்களாக அல்ல, ஆனால் அதன் பாகமாக ஆகவிருந்தார்கள். இயேசு ‘அவர்களோடு ராஜ்ய உடன்படிக்கை’ செய்தார்; ஆகவே, அவர்கள் ‘தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக’ ஆகவிருந்தார்கள். (லூக். 22:28-30, NW; வெளி. 5:10) ஆன்மீக இஸ்ரவேலர் ‘உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள்.’ (1 கொ. 6:2) எனவே, ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்’ என்பது அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் இல்லாத மனிதகுலத்தையே குறிக்க வேண்டும். இவர்களையே ஆன்மீக இஸ்ரவேலர் பரலோக சிங்காசனங்களில் அமர்ந்து நியாயந்தீர்ப்பார்கள். அப்படியானால், பாவநிவாரண நாளில் கூடிவந்த ஆசாரியரல்லாத 12 கோத்திரத்தார் மனிதகுலத்துக்குப் படமாக இருக்கிறார்கள்.—லேவி., அதி. 16.
நமக்குப் பாடம்:
4:1-10. சாத்தான் நிஜமான ஓர் ஆள் என்றும் மனதிலுள்ள வெறும் ஒரு தீய குணம் அல்ல என்றும் இப்பதிவு நமக்குக் கற்பிக்கிறது. அவன் ‘மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும்’ பயன்படுத்தி நம்மைச் சோதிக்கிறான். இருந்தாலும், பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க நமக்கு உதவும்.—1 யோவா. 2:16.
5:1–7:29. கடவுளோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதன் அவசியத்தைக் குறித்து எப்போதும் உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும். சமாதானமாய் இருக்க வேண்டும். ஒழுக்கக்கேடான சிந்தையை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். ஜெபிக்கையில், பொருளாதார காரியங்களைவிட கடவுளுடைய நோக்கம் சம்பந்தமான காரியங்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும். கடவுளிடத்தில் ஐசுவரியவான்களாக இருக்க வேண்டும். முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும். குறை காண்பவர்களாய் இருக்கக்கூடாது. கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும். மலை பிரசங்கத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் நடைமுறைப் பாடங்கள் எத்தனை, எத்தனை!
9:37, 38. ‘தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி’ எஜமானரிடம் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்; அதற்கிசைய நாம் சீஷராக்கும் வேலையில் முழு ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும்.—மத். 28:19, 20.
10:32, 33. நம் விசுவாசத்தைக் குறித்து பேச நாம் ஒருபோதும் பயப்படக் கூடாது.
13:51, 52. ராஜ்யத்தைப் பற்றிய சத்தியங்களின் கருத்தை நாம் அறிந்துகொள்ளும்போது, அவற்றைப் பிறருக்குக் கற்றுக்கொடுத்து, இத்தகைய முக்கியமான சத்தியங்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும் பொறுப்பு நமக்கு உள்ளது.
14:12, 13, 23. பயன்தரும் விதத்தில் தியானித்துப் பார்ப்பதற்கு தனிமையான நேரங்கள் அவசியம்.—மாற். 6:46; லூக். 6:12.
17:20. கடவுளோடு உள்ள நம் பந்தத்திற்கு இடையூறாக இருக்கிற மலைபோன்ற தடைகளைக் கடப்பதற்கும் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கும் விசுவாசம் அவசியம். யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் உள்ள நம் விசுவாசத்தை வளர்ப்பதிலும் அதைப் பலப்படுத்துவதிலும் நாம் ஏனோதானோவென்று இருக்கக் கூடாது.—மாற். 11:23; லூக். 17:6
18:1-4; 20:20-28. மற்றவர்களைவிட தாங்கள் பெரியவர்களாக இருக்க வேண்டுமென இயேசுவின் சீஷர்கள் அதிகமாய் ஆசைப்பட்டார்கள்; இதற்கு மனித அபூரணமும் அந்தஸ்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மதப் பின்னணியுமே காரணமாய் இருந்தன. நாமும் பாவ மனச்சாய்வுகளுக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ள விரும்புகிறோம்; சபையில் பெறுகிற விசேஷித்த பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் குறித்து சரியான மனநிலையை வளர்க்க விரும்புகிறோம்; எனவே நாம் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது அவசியம்.
‘மனுஷகுமாரன் ஒப்புக்கொடுக்கப்படுவார்’
நிசான் 9, பொ.ச. 33 அன்று இயேசு, ‘கழுதையின்மேல் ஏறிக்கொண்டு’ எருசலேமுக்கு வருகிறார். (மத். 21:5) மறுநாள், அவர் ஆலயத்திற்கு வந்து அதைச் சுத்தப்படுத்துகிறார். நிசான் 11 அன்று அவர் ஆலயத்தில் போதிக்கிறார்; சதுசேயரையும் பரிசேயரையும் கண்டித்துப் பேசுகிறார். அதன் பிறகு, ‘அவருடைய வருகைக்கும் [“பிரசன்னத்திற்கும்,” NW] உலகத்தின் முடிவுக்குமுரிய அடையாளத்தை’ சீஷர்களுக்குச் சொல்கிறார். (மத். 24:3) அடுத்த நாள் அவர்களிடம் இவ்வாறு கூறுகிறார்: “இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்.”—மத். 26:1, 2.
இப்போது நிசான் 14. நெருங்கிக் கொண்டிருந்த தம்முடைய மரணத்தின் நினைவுநாள் ஆசரிப்பைத் துவக்கிவைத்த பிறகு, இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிறார், கைது செய்யப்படுகிறார், விசாரணை செய்யப்படுகிறார், கழுமரத்தில் அறையப்படுகிறார். மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுப்பப்படுகிறார். பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு, உயிர்த்தெழுந்த இயேசு தம் சீஷர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறார்: ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் [அதாவது, தேசத்தாரையும்] சீஷராக்குங்கள்.’—மத். 28:19.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
22:3, 4, 9—கலியாண விருந்திற்கான மூன்று அழைப்புகளும் எப்போது கொடுக்கப்படுகின்றன? மணவாட்டி வகுப்பாரைக் கூட்டிச்சேர்ப்பதற்கான முதல் அழைப்பு இயேசுவும் அவருடைய சீஷர்களும் பொ.ச. 29-ல் பிரசங்க வேலையைத் துவங்கியபோது கொடுக்கப்பட்டது; அது பொ.ச. 33 வரை தொடர்ந்தது. இரண்டாம் அழைப்பு, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது முதற்கொண்டு பொ.ச. 36 வரை கொடுக்கப்பட்டது. இந்த இரு அழைப்புகளும் யூதர்கள், யூத மதத்திற்கு மாறியவர்கள் மற்றும் சமாரியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன. மூன்றாம் அழைப்போ, வழிச்சந்திகளில் காணப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது; அதாவது விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதிகளுக்கு பொ.ச. 36 முதற்கொண்டு கொடுக்கப்பட்டது. அந்த வருடத்தில்தான் ரோமப் படைத்தலைவரான கொர்நேலியு கிறிஸ்தவராக மாறினார். அப்போதுமுதல் இன்றுவரை இந்த அழைப்பு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
23:15—பரிசேயராக மாறியவர்கள் ஏன் மற்ற பரிசேயரைக் காட்டிலும் ‘இரட்டிப்பாய் நரகத்தின் [அதாவது, கெஹென்னாவின்] மகனாக ஆனார்கள்’? சிலர் பரிசேயராக மாறுவதற்கு முன்பு பெரும் பாவிகளாக இருந்தார்கள். என்றாலும், பரிசேயர்களின் தீவிரவாத போக்கிற்கு அவர்கள் மாறியபோது இன்னும் மோசமானவர்களாகவே ஆனார்கள்; ஒருவேளை, தங்களுக்குப் போதித்தவர்களைவிட படு மோசமானவர்களாக அவர்கள் ஆகியிருக்கலாம். ஆகவே, அவர்கள் யூத பரிசேயர்களைக் காட்டிலும் இரட்டிப்பாய் ‘கெஹென்னாவின் மகன்களாய்’ இருப்பதற்கு தகுதியுள்ளவர்களாய் இருந்தார்கள்.
27:3-5—யூதாஸ் எதைக் குறித்து மனஸ்தாபப்பட்டான்? உண்மையான மனந்திரும்புதலுக்கு அடையாளமாக யூதாஸ் மனஸ்தாபப்பட்டான் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கடவுளிடம் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, தான் செய்த தவறைக் குறித்து பிரதான ஆசாரியர்களிடமும் மூப்பர்களிடமுமே அவன் அறிக்கை செய்தான். அவன், ‘மரணத்துக்கு ஏதுவான பாவம்’ செய்ததால், குற்றவுணர்வும் விரக்தியும் அவனை ஆட்டிப்படைத்தன. (1 யோவா. 5:16) நம்பிக்கை இழந்ததால் ஏற்பட்ட தவிப்பே அவனுடைய மனஸ்தாபத்திற்குக் காரணம்.
நமக்குப் பாடம்:
21:28-31. நாம் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதையே அவர் முக்கியமானதாய்க் கருதுகிறார். உதாரணமாக, ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதிலும் சீஷராக்குவதிலும் நாம் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.—மத். 24:14; 28:19, 20.
22:37-39. தம்மை வழிபடுவோரிடமிருந்து கடவுள் எதை எதிர்பார்க்கிறார் என்பது இரண்டு பிரதான கட்டளைகளில் எவ்வளவு கச்சிதமாக விவரிக்கப்பட்டுள்ளது!
[பக்கம் 31-ன் படம்]
அறுவடை வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுகிறீர்களா?
[படத்திற்கான நன்றி]
© 2003 BiblePlaces.com
[பக்கம் 31-ன் படம்]
ராஜ்யம் என்ற முக்கிய பொருளை மத்தேயு சிறப்பித்துக் காட்டுகிறார்