எல்லா உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா?
“ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம். அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.”—நீதி. 18:13.
1, 2. (அ) நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு திறமை என்ன, அதை வளர்த்துக்கொள்வது ஏன் அவசியம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?
நாம் எல்லாரும் முக்கியமான ஒரு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, நமக்குக் கிடைக்கும் தகவல்கள் சரியா தவறா என்று எடைபோட்டுப் பார்க்கவும், அதை வைத்து சரியான முடிவுக்கு வரவும் கற்றுக்கொள்ள வேண்டும்! (நீதி. 3:21-23; 8:4, 5) இல்லையென்றால், இந்த உலகம் நம்மைத் தவறாக யோசிக்க வைத்துவிடும்; சாத்தானும் நம் சிந்தனைகளைக் கெடுத்துவிடுவான். (எபே. 5:6; கொலோ. 2:8) நாம் சரியான முடிவுக்கு வர வேண்டுமென்றால், எல்லா உண்மைகளும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீதிமொழிகள் 18:13 இப்படிச் சொல்கிறது: “ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம். அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.”
2 எல்லா உண்மைகளையும் தெரிந்துகொள்வதும், சரியான முடிவுக்கு வருவதும், ஏன் கஷ்டம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, நமக்குக் கிடைக்கும் தகவல்கள் சரியா தவறா என்று எடைபோட்டுப் பார்ப்பதற்கு உதவுகிற பைபிள் நியமங்களையும் சில உதாரணங்களையும் பார்க்கலாம்.
“யார் எதைச் சொன்னாலும்” நம்பிவிடாதீர்கள்!
3. நீதிமொழிகள் 14:15-ல் இருக்கிற நியமத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? (ஆரம்பப் படம்)
3 இன்று, நாலாபக்கத்திலிருந்தும் தகவல்கள் வந்து குவிகின்றன. இன்டர்நெட், டிவி, மற்ற ஊடகங்கள் மூலம் அவை வருகின்றன. அதோடு, இ-மெயில்கள்... மெசேஜ்கள்... நண்பர்களிடமிருந்து வரும் சுவாரஸ்யமான தகவல்கள்... ஆகியவற்றுக்கும் பஞ்சமே இல்லை. சிலசமயங்களில், இவற்றுக்கெல்லாம் முடிவே இல்லாதது போல் தெரியலாம். அதனால், நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! நம் நண்பர்கள் நல்ல எண்ணத்தோடு தகவல்களை அனுப்பலாம்; ஆனால், மற்றவர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பலாம் அல்லது உண்மைகளைத் திரித்துச் சொல்லலாம். அப்படியென்றால், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் சரியா தவறா என்று எடைபோட்டுப் பார்க்க எந்த பைபிள் நியமம் நமக்கு உதவும்? நீதிமொழிகள் 14:15 இப்படிச் சொல்கிறது: “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”
4. எதைப் படிப்பது என்று தீர்மானிப்பதற்கு, பிலிப்பியர் 4:8, 9 எப்படி உதவும், சரியான தகவல்களைத் தெரிந்துகொள்வது ஏன் மிக முக்கியம்? (“உண்மையான தகவல்களைத் தெரிந்துகொள்ள சில ஏற்பாடுகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
4 சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றால், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் நம்பகமானவையாக இருக்க வேண்டும். அதனால், ஏதாவதொரு தகவலைப் படிப்பதற்கு முன்பு, ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். (பிலிப்பியர் 4:8, 9-ஐ வாசியுங்கள்.) நம்பகமற்ற செய்திகளைப் பரப்புகிற சில இன்டர்நெட் சைட்டுகளை அலசுவதிலோ வதந்திகளைப் பரப்புகிற இ-மெயில்களைப் படிப்பதிலோ நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அதிலும், விசுவாச துரோகிகளுடைய வெப்சைட்டுகளைப் பார்க்கவே கூடாது! ஏனென்றால், அவற்றில் அவர்களுடைய சொந்தக் கருத்துகள்தான் இருக்கின்றன. நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்துவதும் உண்மைகளைத் திரித்துச் சொல்வதும்தான் அவர்களுடைய நோக்கம். நம்பகமற்ற தகவல்களை வைத்து தவறான தீர்மானங்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்! தவறான தகவல்கள் உங்கள் மனதைப் பாதிக்காது என்றும் நினைத்துவிடாதீர்கள்!—1 தீ. 6:20, 21.
5. என்ன கட்டுக்கதையை இஸ்ரவேலர்கள் நம்பினார்கள், அதன் விளைவு என்ன?
5 கட்டுக்கதைகளால் விபரீதமான விளைவுகள் ஏற்படலாம். மோசேயின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தை உளவு பார்க்க 12 பேர் போனார்கள். திரும்பி வந்தவர்களில் 10 பேர், தவறான தகவலைச் சொன்னார்கள். (எண். 13:25-33) சொல்லப்போனால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைப் பற்றிய தகவலை அவர்கள் மிகைப்படுத்திச் சொன்னார்கள். அதனால், யெகோவாவின் மக்கள் பயந்துபோய் உற்சாகம் இழந்தார்கள். (எண். 14:1-4) மக்கள் அப்படிப் பிரதிபலித்ததற்கு என்ன காரணம்? உளவு பார்க்கப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே கருத்தைச் சொன்னதால், அவர்கள் சொன்ன கட்டுக்கதையை உண்மை என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அதனால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைப் பற்றி மற்ற இரண்டு பேர் சொன்ன நல்ல விஷயங்களை அவர்கள் காதில்கூட வாங்கவில்லை. (எண். 14:6-10) உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக... யெகோவாவை நம்புவதற்குப் பதிலாக... மக்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டார்கள்; அந்தக் கட்டுக்கதையை நம்பினார்கள்.
6. யெகோவாவின் மக்களைப் பற்றி வித்தியாசமான தகவல்களைக் கேள்விப்படும்போது, நாம் ஏன் அதிர்ச்சியடைய வேண்டியதில்லை?
6 முக்கியமாக, யெகோவாவின் மக்களைப் பற்றிய கருத்துகளைக் கேட்கும்போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், நம்முடைய எதிரியாகிய சாத்தான், ‘நம்முடைய சகோதரர்கள்மீது குற்றம்சாட்ட’ குறியாக இருக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 12:10) அதோடு, நம்முடைய எதிரிகள், நம்மைப் பற்றி ‘இல்லாததையும் பொல்லாததையும் சொல்வார்கள்’ என்று இயேசு எச்சரித்தார். (மத். 5:11) இந்த எச்சரிக்கையை நாம் மனதில் வைத்துக்கொண்டால், யெகோவாவின் மக்களைப் பற்றி வித்தியாசமான தகவல்களைக் கேள்விப்படும்போது, நாம் அதிர்ச்சியடைய மாட்டோம்.
7. உங்கள் நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்புவதற்கு அல்லது மெசேஜ் அனுப்புவதற்கு முன்பு, நீங்கள் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
7 உங்கள் நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்புவதும் மெசேஜ் அனுப்புவதும் உங்களுக்குப் பிடிக்குமா? செய்திகளில் ஏதாவது ஆர்வமூட்டும் தகவல்களைப் பார்க்கும்போது அல்லது வித்தியாசமான அனுபவங்களைக் கேட்கும்போது, அதை உடனடியாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று துடிக்கிற ஒரு பத்திரிகை நிருபரைப் போல் நீங்கள் உணர்கிறீர்களா? அப்படியென்றால், மற்றவர்களுக்கு எதையாவது அனுப்புவதற்கு முன்பு, ‘இந்த தகவல் உண்மைதானா? இத பத்தின முழு விவரமும் எனக்குத் தெரியுமா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உறுதியாகத் தெரியாத ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு அனுப்புவது, பொய்களைப் பரப்புவதற்குச் சமம். அதனால், ஒரு விஷயம் உண்மைதானா என்று உறுதியாகத் தெரியவில்லை என்றால், அதை மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள்; அந்தத் தகவலை அழித்துவிடுங்கள்.
8. சில நாடுகளில் இருக்கும் நம் எதிரிகள் என்ன செய்திருக்கிறார்கள், நாம் எப்படித் தெரியாத்தனமாக அவர்களுடைய செயல்களை ஆதரித்துவிடலாம்?
8 இ-மெயில்களையும் மெசேஜ்களையும் யோசிக்காமல் மற்றவர்களுக்கு அனுப்புவது ஆபத்தில்தான் போய் முடியும் என்று சொல்வதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. சில நாடுகளில், நம் வேலைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கலாம் அல்லது நம் வேலை தடைகூட செய்யப்பட்டிருக்கலாம். இதுபோன்ற நாடுகளில் இருக்கிற நம் எதிரிகள், நம் சகோதரர்களைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக அல்லது ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதற்காக சில கட்டுக்கதைகளைப் பரப்பலாம். முன்னால் சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். முக்கியப் பொறுப்புகளிலிருந்த சில சகோதரர்கள் மற்ற சகோதரர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள் என்ற வதந்தியை, ரகசிய போலீசார் (கேஜிபி) பரப்பினார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) வருத்தமான விஷயம் என்னவென்றால், நிறைய சகோதரர்கள் அந்தக் கட்டுக்கதையை நம்பி, அமைப்பைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அதில் பலர், பிற்பாடு திரும்பிவந்தார்கள். ஆனால், சிலர் வரவே இல்லை. அந்தக் கட்டுக்கதை தங்களுடைய விசுவாசக் கப்பலை மூழ்கடிக்கும்படி அவர்கள் விட்டுவிட்டார்கள். (1 தீ. 1:19) இதுபோன்ற ஆபத்தை நாம் எப்படித் தவிர்க்கலாம்? தவறான அல்லது நம்பகமற்ற தகவல்களைப் பரப்பக் கூடாது. காதில் விழுவதையெல்லாம் நம்பக் கூடாது. அதற்குப் பதிலாக, அவை உண்மைதானா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பாதி உண்மைகள்
9. சரியான முடிவுக்கு வருவது கஷ்டமாக இருப்பதற்கு இன்னொரு காரணம் என்ன?
9 சிலசமயங்களில், நாம் கேள்விப்படுகிற தகவல்களில், பாதி உண்மைகள் மட்டுமே இருக்கலாம். இதுபோன்ற தகவல்களை நாம் நம்பவும் முடியாது, இவற்றை வைத்து சரியான முடிவுக்கு வரவும் முடியாது. அப்படியென்றால், இவற்றை நம்பி நாம் ஏமாந்துவிடாமல் இருக்க என்ன செய்யலாம்?—எபே. 4:14.
10. இஸ்ரவேலர்களில் சிலர், தங்கள் சொந்த சகோதரர்களுக்கு எதிராகப் போருக்குத் தயாரானதற்கு என்ன காரணம், போர் செய்யாமல் இருக்க எது அவர்களுக்கு உதவியது?
10 யோசுவாவின் நாட்களில் யோர்தான் ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுடைய விஷயத்துக்கு இப்போது வரலாம். (யோசு. 22:9-34) யோர்தான் ஆற்றுக்குக் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள், அந்த ஆற்றுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டிய தகவலை இவர்கள் கேள்விப்பட்டார்கள். இவர்கள் கேள்விப்பட்ட தகவலில் பாதி உண்மைதான் இருந்தது. ஆனால் அதை வைத்து, கிழக்குப் பகுதியில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறார்கள் என்று முடிவுக்கு இவர்கள் வந்துவிட்டார்கள். அதனால், இவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து, கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களோடு போர் செய்வதென்று முடிவெடுத்தார்கள். (யோசுவா 22:9-12-ஐ வாசியுங்கள்.) ஆனால், போருக்குப் போவதற்கு முன்பு, உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்வதற்காக சில ஆட்களைக் கிழக்குப் பகுதிக்கு அனுப்பினார்கள். பொய்க் கடவுள்களுக்குப் பலிகளைச் செலுத்துவதற்காக அங்கிருந்தவர்கள் பலிபீடத்தைக் கட்டவில்லை என்ற விஷயம் அப்போதுதான் இவர்களுக்குத் தெரியவந்தது. கிழக்குப் பகுதியில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள், தாங்கள் யெகோவாவை வணங்குவது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, ஒரு நினைவுச் சின்னமாக அந்தப் பலிபீடத்தைக் கட்டியிருந்தார்கள். மேற்குப் பகுதியில் வாழ்ந்த இஸ்ரவேலர்கள், தங்கள் சொந்த சகோதரர்களுக்கு எதிராக உடனடியாகப் போருக்குப் போவதற்குப் பதிலாக, உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்காக நேரம் எடுத்துக்கொண்டதை நினைத்து எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!
11. (அ) மேவிபோசேத் எப்படி அநியாயமாக நடத்தப்பட்டார்? (ஆ) அந்த அநீதியை தாவீது எப்படித் தவிர்த்திருக்கலாம்?
11 மற்றவர்கள் நம்மைப் பற்றிய அரைகுறையான விஷயங்களை மட்டுமே பரப்பியதால், நாம் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேவிபோசேத்துக்கு அதுதான் நடந்தது! அவருடைய தாத்தா சவுலின் சொத்துகள் எல்லாவற்றையும் தாவீது ராஜா மேவிபோசேத்துக்குத் தாராளமாகக் கொடுத்தார். (2 சா. 9:6, 7) ஆனால் பிற்பாடு, அவரைப் பற்றிய தவறான தகவலை தாவீது ராஜா கேள்விப்பட்டார். அந்தத் தகவல் சரியா தவறா என்று பார்க்காமல், அவருக்குக் கொடுத்த சொத்துகளை தாவீது இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டார். (2 சா. 16:1-4) ஆனால், மேவிபோசேத்திடம் பேசிய பிறகுதான், தான் செய்தது தவறு என்பது தாவீதுக்குப் புரிந்தது. பிறகு, சொத்துகள் சிலவற்றைத் திரும்பவும் அவருக்குக் கொடுத்தார். (2 சா. 19:24-29) தாவீது, தனக்குக் கிடைத்த பாதித் தகவலை வைத்து உடனடியாக ஒரு முடிவுக்கு வந்ததற்குப் பதிலாக, நேரம் எடுத்து உண்மைகளை அலசி ஆராய்ந்திருந்தால், மேவிபோசேத்துக்கு இப்படியொரு அநீதி நடந்திருக்குமா?
12, 13. (அ) தன்னைப் பற்றிப் பொய்யான தகவலை மக்கள் பரப்பியபோது, இயேசு என்ன செய்தார்? (ஆ) நம்மைப் பற்றி யாராவது பொய்த் தகவல்களைப் பரப்பினால், நாம் என்ன செய்யலாம்?
12 யாராவது உங்களைப் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்பினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இயேசுவுக்கும், யோவான் ஸ்நானகருக்கும்கூட இப்படித்தான் நடந்தது! (மத்தேயு 11:18, 19-ஐ வாசியுங்கள்.) அப்போது இயேசு என்ன செய்தார்? அந்தத் தகவல்கள் தவறு என்று நிரூபிப்பதற்காகத் தன்னுடைய நேரம், சக்தி என எல்லாவற்றையும் செலவழித்தாரா? இல்லை! உண்மைகளை அலசி ஆராயும்படி மக்களை அவர் உற்சாகப்படுத்தினார். தான் சொன்னதையும் செய்ததையும் மக்கள் யோசித்துப்பார்க்க வேண்டுமென்று அவர் விரும்பினார். “ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என்று அவர் சொன்னார்.
13 இயேசுவிடமிருந்து ஓர் அருமையான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். சிலசமயங்களில், மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பலாம். அப்போது, நம்முடைய பெயர் கெட்டுவிடுமோ என்று நினைத்து நாம் கவலைப்படலாம். ஆனால், நாம் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பதை வாழும் விதத்தின் மூலம் காட்டலாம். இயேசுவுடைய உதாரணத்திலிருந்து கற்றுக்கொண்டபடி, நம்மைப் பற்றிச் சொல்லப்பட்ட தகவல்களில் பாதி உண்மைதான் இருக்கிறது என்பதையும், நம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதையும், நம்முடைய நடத்தையின் மூலம் நாம் நிரூபிக்கலாம்.
சொந்த புத்தியை நம்பாதீர்கள்!
14, 15. சொந்த புத்தியை நாம் ஏன் நம்பக் கூடாது?
14 முழு உண்மைகளைத் தெரிந்துகொள்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை இவ்வளவு நேரம் கவனித்தோம். இன்னொரு பிரச்சினையும் நம்மிடம் இருக்கிறது. அதுதான், நம்முடைய பாவ இயல்பு! நாம் யெகோவாவுக்கு ரொம்ப வருஷங்களாகச் சேவை செய்து வரலாம்; யோசிக்கும் திறனையும் பகுத்தறிவையும் வளர்த்திருக்கலாம். ‘தெளிவாக யோசிப்பவர்’ என்ற பெயரை நாம் எடுத்திருக்கலாம்; மற்றவர்கள் நம்மை மதிக்கலாம். இருந்தாலும், இதுவே நமக்கு ஒரு பிரச்சினையாகிவிட வாய்ப்பு இருக்கிறதா?
15 இருக்கிறது! நம் சொந்த புத்தியை நாம் நம்ப ஆரம்பித்துவிடலாம். உணர்ச்சிகளின் அடிப்படையிலும் சொந்தக் கருத்துகளின் அடிப்படையிலும் நாம் யோசிக்க ஆரம்பித்துவிடலாம். ஒரு விஷயத்தைப் பற்றிய முழு விவரங்களும் தெரியாமலேயே, அந்த விஷயத்தைப் புரிந்துகொண்டதாக நாம் நினைக்கலாம். இது நம்மை ஆபத்தில் சிக்கவைத்துவிடும்! நம்முடைய சொந்த புத்தியை நம்பக் கூடாதென்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது—நீதி. 3:5, 6; 28:26.
16. ஹோட்டலில் என்ன நடக்கிறது, டாம் எப்படி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்?
16 இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். டாம் என்ற அனுபவமுள்ள ஒரு மூப்பர் ஹோட்டலுக்குப் போவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அங்கே, ஜான் என்ற ஒரு மூப்பர் இன்னொரு பெண்ணோடு உட்கார்ந்துகொண்டிருப்பதை டாம் பார்க்கிறார். ஜானும் அந்தப் பெண்ணும் ஜாலியாக இருப்பதுபோல் தெரிகிறது. அவர்கள் இரண்டு பேரும் சிரித்துப் பேசிக்கொள்கிறார்கள்; அன்பாகக் கட்டியணைத்துக்கொள்கிறார்கள். இப்போது, டாமுக்கு ரொம்பக் கவலையாகிவிடுகிறது. ‘ஜான் அவரோட மனைவிய விவாகரத்து செஞ்சிடுவாரோ? பிள்ளைகளோட கதி என்ன ஆகுறது?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஏனென்றால், சிலருடைய வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்ததை அவர் பார்த்திருக்கிறார்! டாமுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
17. இந்த உதாரணத்தில், பிற்பாடு டாமுக்கு எந்த விஷயம் தெரியவருகிறது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
17 ஜான் தன் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டதாக டாம் நினைக்கிறார். ஆனால், அவருக்கு எல்லா விவரங்களும் தெரியுமா? அன்று சாயங்காலமே, ஜானுடன் டாம் பேசுகிறார். அப்போதுதான் அவருக்கு உண்மை தெரியவருகிறது. ஹோட்டலில் ஜானுடன் பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண், ஜானுடைய தங்கை! அவர் ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறார். அவரும் ஜானும் பார்த்து ரொம்ப நாட்களாகிவிட்டன. ஜானுடைய தங்கைக்குக் கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தது. அதனால், சாப்பிடுவதற்காக அவர்கள் இரண்டு பேரும் ஹோட்டலுக்கு வந்திருந்தார்கள். ஆனால், ஜானுடைய மனைவியால் வர முடியவில்லை. தான் தவறாக நினைத்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்ததை நினைத்து டாம் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் எவ்வளவு வருஷங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தாலும், சரியான முடிவுக்கு வர வேண்டுமென்றால், எல்லா உண்மைகளையும் அலசி ஆராய வேண்டும்.
18. நம் சகோதரர் அல்லது சகோதரியைப் பற்றிய தவறான தகவல்களை நாம் எப்படி நம்ப ஆரம்பித்துவிடலாம்?
18 ஒரு சகோதரரோடு அல்லது ஒரு சகோதரியோடு நமக்குக் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அந்தச் சூழ்நிலையில், அவரைப் பற்றி சரியான ஒரு முடிவுக்கு வருவது ரொம்பவே கஷ்டம்! நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையே மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தால், நாம் அவரைச் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துவிடலாம். அப்போது, அவரைப் பற்றி ஏதாவது தவறான தகவல்களை நாம் கேள்விப்பட்டால், அதற்கான ஆதாரம் இல்லையென்றால்கூட, அதை நாம் நம்பிவிடலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? சகோதர சகோதரிகளைப் பற்றிய தவறான எண்ணங்களை வளர்த்துக்கொண்டால், எந்த ஆதாரமும் இல்லாமலேயே அவர்களைப் பற்றித் தவறான முடிவுக்கு வந்துவிடுவோம். (1 தீ. 6:4, 5) அதனால், சகோதர சகோதரிகள்மீது ஒருபோதும் நாம் பொறாமைப்படக் கூடாது; அவர்களுக்கு எதிரான எந்தத் தவறான எண்ணங்களையும் வளர்த்துக்கொள்ளக் கூடாது. நம் சகோதர சகோதரிகளை நேசிக்க வேண்டுமென்றும், மனதார மன்னிக்க வேண்டுமென்றும் யெகோவா விரும்புகிறார் என்பதை நாம் மறக்கவே கூடாது.—கொலோசெயர் 3:12-14-ஐ வாசியுங்கள்.
பைபிள் நியமங்கள் நம்மைப் பாதுகாக்கும்
19, 20. (அ) நம்பகமான தகவல்களைப் பெறுவதற்கும், சரியான முடிவுக்கு வருவதற்கும், எந்த பைபிள் நியமங்கள் உதவும்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
19 நம்பகமான தகவல்களைப் பெறுவதும், சரியான முடிவுக்கு வருவதும் இன்று ரொம்பவே கஷ்டம்! ஏன்? ஒன்று, நமக்குக் கிடைக்கும் நிறைய தகவல்களில் பாதி உண்மைகள்தான் இருக்கின்றன. இரண்டு, நாம் பாவ இயல்புள்ளவர்கள். அப்படியென்றால், நமக்கு ஏதாவது உதவி இருக்கிறதா? பைபிள் நியமங்கள் நமக்கு உதவும்! உதாரணத்துக்கு, ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம் என்று ஒரு நியமம் சொல்கிறது. (நீதி. 18:13) நன்றாக அலசி ஆராயாமலேயே காதில் விழுவதையெல்லாம் உண்மை என்று நம்பக் கூடாதென்று இன்னொரு நியமம் சொல்கிறது. (நீதி. 14:15) நாம் எவ்வளவு வருஷங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தாலும், நம் சொந்த புத்தியை நம்பக் கூடாதென்று மற்றொரு நியமம் சொல்கிறது. (நீதி. 3:5, 6) பைபிள் நியமங்கள் சொல்கிறபடி, நம்பகமான தகவல்களின் அடிப்படையில் நாம் சரியான முடிவுக்கு வந்தால்... ஞானமான தீர்மானங்களை எடுத்தால்... பாதுகாப்பாக இருப்போம்.
20 நமக்கு இன்னொரு சவாலும் இருக்கிறது. நாம் சாதாரண மனிதர்களாக இருப்பதால், வெளித்தோற்றத்தை வைத்து உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். எந்தெந்த அம்சங்களில் இந்தத் தவறை செய்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், அதை எப்படித் தவிர்க்கலாம் என்றும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
a யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2004-ல் பக்கங்கள் 111-112-ஐயும், இயர்புக் 2008-ல் பக்கங்கள் 133-135-ஐயும் பாருங்கள்.