அதிகாரம் 39
திருந்தாத தலைமுறைக்குக் கேடு
மத்தேயு 11:16-30 லூக்கா 7:31-35
இயேசு சில நகரங்களைக் கண்டிக்கிறார்
நிம்மதியும் புத்துணர்ச்சியும் தருகிறார்
யோவான் ஸ்நானகர்மேல் இயேசு ரொம்ப மரியாதை வைத்திருக்கிறார். ஆனால், பெரும்பாலான மக்கள் யோவானைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதிலை இயேசு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். “இந்தத் தலைமுறையை . . . சந்தையில் உட்கார்ந்திருக்கிற பிள்ளைகளுக்கு ஒப்பிடுவேன்; அவர்கள் தங்களோடு விளையாடுகிற பிள்ளைகளைப் பார்த்து, ‘உங்களுக்காகக் குழல் ஊதினோம், ஆனால் நீங்கள் நடனம் ஆடவில்லை; புலம்பி அழுதோம், ஆனால் நீங்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழவில்லை’ என்று சொல்கிறார்கள்” என்கிறார்.—மத்தேயு 11:16, 17.
இதற்கு என்ன அர்த்தம்? “யோவான் சாப்பிடவும் இல்லை, குடிக்கவும் இல்லை; ஆனாலும், அவருக்கு ‘பேய் பிடித்திருக்கிறது’ என்று மக்கள் சொல்கிறார்கள்; மனிதகுமாரனோ சாப்பிடுகிறார், குடிக்கிறார்; இருந்தாலும் மக்கள் அவரை, ‘பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறார்கள்” என இயேசு விளக்குகிறார். (மத்தேயு 11:18, 19) யோவான் ஒரு நசரேயராக, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் திராட்சமதுகூட குடிக்கவில்லை. ஆனால், அவருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். (எண்ணாகமம் 6:2, 3; லூக்கா 1:15) இயேசு எல்லாரையும்போல் வாழ்கிறார். அளவாகச் சாப்பிடுகிறார், குடிக்கிறார். ஆனால், அவர் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதாகவும் குடிப்பதாகவும் மக்கள் குறை சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, மக்களைத் திருப்திப்படுத்தவே முடியாது என்றுதான் தோன்றுகிறது.
இந்தத் தலைமுறையைச் சந்தையில் உட்கார்ந்திருக்கிற பிள்ளைகளுக்கு இயேசு ஒப்பிடுகிறார். மற்ற பிள்ளைகள் குழல் ஊதும்போது அவர்கள் நடனம் ஆட மறுக்கிறார்கள், மற்றவர்கள் புலம்பி அழும்போது அவர்கள் அழ மறுக்கிறார்கள். “ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 11:16, 19) தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை இயேசுவும் யோவானும் தங்களுடைய “செயல்கள்” மூலமாக நிரூபித்தார்கள்.
மனம் திருந்தாத இந்தத் தலைமுறையைக் கண்டித்த பிறகு, கோராசின், பெத்சாயிதா, கப்பர்நகூம் ஆகிய நகரங்களை இயேசு கண்டிக்கிறார். இந்த நகரங்களில் அவர் அற்புதங்களைச் செய்திருந்தார். இவற்றையெல்லாம் தீரு, சீதோன் போன்ற பெனிக்கேய நகரங்களில் அவர் செய்திருந்தால் அங்கிருக்கிற மக்கள் திருந்தியிருப்பார்கள் என்று சொல்கிறார். கப்பர்நகூம்தான் இயேசுவின் ஊழியத்துக்கு மைய இடமாக இருக்கிறது. ஆனாலும், அங்கே இருக்கிற நிறைய பேர் அவர் சொன்னதைக் கேட்கவில்லை. “நியாயத்தீர்ப்பு நாளில், சோதோம் நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும்” என்று கப்பர்நகூமைப் பற்றி இயேசு சொல்கிறார்.—மத்தேயு 11:24.
பிறகு, அருமையான ஆன்மீக சத்தியங்களை “ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து” சிறுபிள்ளைகளைப் போல இருக்கிற சாதாரண மக்களுக்கு வெளிப்படுத்தியதற்காகத் தன்னுடைய தகப்பனை இயேசு புகழ்கிறார். (மத்தேயு 11:25) அப்படிப்பட்ட சாதாரண மக்களுக்கு அவர் ஒரு அன்பான அழைப்பைக் கொடுக்கிறார். “உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று சொல்கிறார்.—மத்தேயு 11:28-30.
இயேசு எப்படிப் புத்துணர்ச்சி தருகிறார்? கெடுபிடியான ஓய்வுநாள் சட்டங்களையும் மற்ற பாரம்பரியங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லி மதத் தலைவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் மக்களுக்குப் பாரமான சுமைகளைப் போல இருக்கின்றன. ஆனால் இயேசு, கடவுளைப் பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொடுத்து மக்களுக்குப் புத்துணர்ச்சி தருகிறார். அவருடைய போதனைகளில் மனித பாரம்பரியங்கள் துளிகூட இல்லை. அரசியல் அதிகாரிகளின் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் திணறுகிறவர்களுக்கும் பாவத்தின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும் விடுதலை எப்படிக் கிடைக்கும் என்று இயேசு காட்டுகிறார். பாவ மன்னிப்பு பெற்று, கடவுளோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்கான வழியையும் அவர் காட்டுகிறார்.
இயேசுவின் மென்மையான நுகத்தடியை ஏற்றுக்கொள்கிற எல்லாரும் கரிசனையும், கருணையும் உள்ள கடவுளுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவருக்குச் சேவை செய்யலாம். அது பெரிய சுமையாக இருக்காது. ஏனென்றால், கடவுளுடைய கட்டளைகள் பாரமானவை கிடையாது.—1 யோவான் 5:3.