படிப்புக் கட்டுரை 31
யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்கிறீர்களா?
“நான் . . பொறுமையோடு காத்திருப்பேன்.”—மீ. 7:7.
பாட்டு 128 முடிவுவரை சகித்திருப்பாயே!
இந்தக் கட்டுரையில்...a
1-2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?
உங்கள் கைக்கு வந்துசேர வேண்டிய ஒரு பொருள் நீங்கள் எதிர்பார்க்கிற நேரத்தில் வந்துசேரவில்லை என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏமாற்றமாகத்தான் இருக்கும். பைபிளும் அதைத்தான் சொல்கிறது. “எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும்” என்று நீதிமொழிகள் 13:12 சொல்கிறது. ஆனால், அந்தப் பொருள் நம்மிடம் வந்துசேராததற்கு ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியவந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்காகப் பொறுமையோடு காத்திருப்பீர்கள்.
2 ‘பொறுமையோடு காத்திருப்பதற்கு’ நமக்கு உதவும் சில பைபிள் நியமங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். (மீ. 7:7) முக்கியமாக, எந்த இரண்டு விஷயங்களில் நாம் பொறுமையோடு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பார்ப்போம். அதோடு, பொறுமையாக காத்திருப்பதால் நமக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் பார்ப்போம்.
பொறுமையாக இருப்பதன் அவசியத்தைப் புரிய வைக்கும் நியமங்கள்
3. எந்த விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கு நீதிமொழிகள் 13:11 உதவுகிறது?
3 “திடீர்ப் பணக்காரனின் சொத்துகள் கரைந்துபோகும். ஆனால், சிறுகச் சிறுகச் சேர்க்கிறவனின் சொத்துகள் பெருகும்” என்று நீதிமொழிகள் 13:11 சொல்கிறது. பொறுமையாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த வசனம் புரிய வைக்கிறது. இந்த வசனம் சொல்கிறபடி, ஞானமாக நடந்துகொள்கிற ஒருவர், எந்த விஷயத்தையுமே கவனமாகவும் பொறுமையாகவும் செய்வார்.
4. நீதிமொழிகள் 4:18-ல் இருக்கிற நியமத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
4 “நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற விடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது” என்று நீதிமொழிகள் 4:18 சொல்கிறது. யெகோவா அவருடைய விருப்பத்தை நமக்குப் படிப்படியாக வெளிப்படுத்துவதைப் பற்றி இந்த வசனம் சொல்கிறது. ஆனால், இன்னொரு விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்த வசனம் உதவுகிறது. அதாவது, ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்து யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதையும் காட்டுகிறது. பைபிளையும் அமைப்பு கொடுக்கிற பிரசுரங்களையும் ஆழமாகப் படிக்கும்போதும், அதன்படி நடந்துகொள்ளும்போதும், கிறிஸ்து காட்டிய அதே குணங்களைக் காட்டுவதற்கு படிப்படியாகக் கற்றுக்கொள்ள முடியும். அதோடு, யெகோவாவைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்த விஷயத்தை இயேசு எப்படிப் புரிய வைத்தார் என்று இப்போது பார்க்கலாம்.
5. இயேசு சொன்ன உதாரணத்தை விளக்குங்கள்.
5 ஒருவருடைய இதயத்தில் விழுந்த சத்திய விதை எப்படிப் படிப்படியாக வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இயேசு ஓர் உதாரணத்தைச் சொன்னார். “[விதைக்கிறவனுக்கே] தெரியாமல் அந்த விதை முளைத்துப் பெரிதாக வளருகிறது. அந்த நிலம் தானாகவே படிப்படியாகப் பலன் தருகிறது; முதலில் தண்டையும், பின்பு இளங்கதிரையும், கடைசியில் முற்றிய கதிரையும் தருகிறது” என்று அவர் சொன்னார். (மாற். 4:27, 28) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? ஒரு செடி எப்படிப் படிப்படியாக வளர்கிறதோ அதுபோலவே பைபிள் மாணவர்களும் படிப்படியாக மாற்றங்களைச் செய்கிறார்கள். அவர்கள் யெகோவாவிடம் நெருங்கி வர வர அவர்கள் செய்யும் மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது. (எபே. 4:22-24) ஆனால், அவர்களுடைய இதயத்தில் விழுந்த சத்திய விதையை யெகோவாதான் வளர வைக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.—1 கொ. 3:7.
6-7. பூமியை யெகோவா படைத்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 யெகோவா எதைச் செய்தாலும் பொறுமையாகச் செய்கிறார், போதுமான நேரத்தையும் எடுத்துக்கொள்கிறார். தன்னுடைய பெயருக்கு மகிமைகொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படிச் செய்கிறார். உதாரணத்துக்கு, மனிதர்களுக்காக அவர் எப்படிப் பூமியைப் படிப்படியாகத் தயார்படுத்தினார் என்பதை இப்போது பார்க்கலாம்.
7 பூமியை யெகோவா படைக்கும்போது, அவர் அதற்கு ‘அளவுகள் குறித்ததாகவும்’ ‘அஸ்திவாரம் போட்டதாகவும்’ ‘மூலைக்கல் வைத்ததாகவும்’ பைபிள் சொல்கிறது. (யோபு 38:5, 6) தான் படைத்ததெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அவர் நேரமும் எடுத்துக்கொண்டார். (ஆதி. 1:10, 12) எல்லாப் படைப்புகளையும் அவர் படிப்படியாகப் படைத்ததை பார்த்தபோது தேவதூதர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அவர்கள் பயங்கரமாக சந்தோஷப்பட்டிருப்பார்கள், இல்லையா? ஒரு கட்டத்தில், அவர்கள் ‘சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள்.’ (யோபு 38:7) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? எல்லாவற்றையும் படைப்பதற்கு யெகோவாவுக்கு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆனது. ஆனாலும், அது எல்லாமே ரொம்ப அருமையாக இருந்தது. அதனால், அவர் ரொம்ப யோசித்து படைத்த எல்லாவற்றையும் பார்த்து, “மிகவும் நன்றாக இருந்தன” என்று சொன்னார்.—ஆதி. 1:31.
8. இப்போது எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
8 பொறுமையாக இருப்பது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இதுவரைக்கும் சில நியமங்களைப் பார்த்தோம். இன்னும் நிறைய நியமங்கள் பைபிளில் இருக்கின்றன. இப்போது, எந்த இரண்டு விஷயங்களில் நாம் யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
எப்போது யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டும்?
9. எந்தச் சமயத்தில் நாம் யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டும்?
9 நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கிடைப்பதற்காக நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஒருவேளை, நாம் ஏதாவது கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். இல்லையென்றால், யெகோவாவுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செய்யாமல் இருப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கலாம். அதற்கு உதவச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்திருக்கலாம். ஆனால், நம் ஜெபத்துக்குப் பதில் கிடைப்பதற்கு ரொம்ப நாள் ஆவதாக நமக்குத் தோன்றலாம். அப்படியென்றால், எல்லா ஜெபத்துக்கும் யெகோவா ஏன் உடனடியாகப் பதில் கொடுப்பதில்லை?
10. நாம் ஜெபம் செய்துவிட்டு ஏன் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்?
10 யெகோவா நம்முடைய ஜெபத்தைக் கவனமாகக் கேட்கிறார். (சங். 65:2) நமக்கு விசுவாசம் இருப்பதால்தான் நாம் ஜெபம் செய்கிறோம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். (எபி. 11:6) அதோடு, நாம் எதற்காக ஜெபம் செய்கிறோமோ அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்வதில் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதையும், அவருடைய விருப்பத்தை எந்தளவுக்கு செய்கிறோம் என்பதையும் பார்க்க ஆசைப்படுகிறார். (1 யோ. 3:22) அதனால், ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும்போது நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் செய்த ஜெபத்துக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில், நாம் செய்கிற எல்லா ஜெபத்துக்கும் உடனடியாக பதில் கிடைக்காது என்று இயேசு சொன்னார். அதனால்தான், “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும்” என்று அவர் சொன்னார். (மத். 7:7, 8) அவர் சொன்ன அறிவுரையைக் கேட்டு நாம் ‘விடாமல் ஜெபம் செய்தால்’ நம்முடைய அப்பா கண்டிப்பாக நம் ஜெபத்தைக் கேட்பார் என்று நம்பலாம்.—கொலோ. 4:2.
11. நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கிடைப்பதற்கு ரொம்ப நாள் ஆவதாகத் தோன்றும்போது எபிரெயர் 4:16 நமக்கு எப்படி உதவும்?
11 நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கிடைப்பதற்கு ரொம்ப நாள் ஆவதாக நமக்குத் தோன்றலாம். ஆனால், “சரியான சமயத்தில்” பதில் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (எபிரெயர் 4:16-ஐ வாசியுங்கள்.) அதனால், நாம் நினைத்த நேரத்தில் நமக்குப் பதில் கிடைக்காவிட்டால் யெகோவாவை நாம் குறை சொல்லக் கூடாது. உதாரணத்துக்கு, கடவுளுடைய அரசாங்கம் வந்து இந்த உலகத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நிறைய பேர் ரொம்ப வருஷங்களாக ஜெபம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அரசாங்கத்துக்காக ஜெபம் செய்யும்படி இயேசுவும் சொன்னார். (மத். 6:10) ஆனால், மனிதர்கள் நினைத்த நேரத்தில் கடவுளுடைய அரசாங்கம் வரவில்லை என்பதற்காக விசுவாசத்தை விட்டுவிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! (ஆப. 2:3; மத். 24:44) அதனால், யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருப்பதும் விசுவாசத்தோடு அவரிடம் விடாமல் ஜெபம் செய்வதும்தான் ஞானமானதாக இருக்கும். சரியான சமயத்தில் முடிவு நிச்சயம் வரும். ஏனென்றால், யெகோவா ஏற்கெனவே ‘நாளையும் நேரத்தையும்’ குறித்துவிட்டார். அவர் குறித்திருக்கிற அந்தச் சமயம்தான் சரியான சமயமாக இருக்கும்.—மத். 24:36; 2 பே. 3:15.
12. எப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம்?
12 நியாயம் கிடைப்பதற்காக நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டியிருக்கலாம். சில இடங்களில், பெண்களைத் தவறாக நடத்துகிறார்கள். சில இடங்களில், ஆண்களைத் தவறாக நடத்துகிறார்கள். இன்னும் சில இடங்களில், வேறு இனத்தை... கலாச்சாரத்தை... நாட்டை... சேர்ந்தவர்களைத் தவறாக நடத்துகிறார்கள். சில சமயங்களில், உடல் குறைபாடோ மனக் குறைபாடோ இருப்பவர்களை மற்றவர்கள் அநியாயமாக நடத்துகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் இருக்கும் விஷயங்களை நம்புவதால் நிறைய பேர் அவர்களுக்கு அநியாயம் செய்கிறார்கள். ஒருவேளை, இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நமக்கு நடந்தால், இயேசு சொன்னதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். “முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்” என்று அவர் சொன்னார். (மத். 24:13) இப்போது, சபையில் நடக்கும் விஷயத்துக்கு வரலாம். ஒருவேளை, உங்கள் சபையில் இருக்கும் ஒருவர் மோசமான பாவத்தில் ஈடுபட்டதாகத் தெரியவந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த விஷயத்தை மூப்பர்களிடம் தெரியப்படுத்திவிட்டு, யெகோவாவின் வழியில் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருங்கள். சபையில் இப்படி ஏதாவது நடக்கும்போது மூப்பர்கள் என்ன செய்வார்கள்?
13. சபையில் யாராவது மோசமான பாவத்தில் ஈடுபட்டால் மூப்பர்கள் என்ன செய்வார்கள்?
13 சபையில் இருக்கும் ஒருவர் மோசமான பாவம் செய்த விஷயம் மூப்பர்கள் காதுக்கு வந்தால், இந்த விஷயத்தை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்று தெரிந்துகொள்வதற்காக, ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ கேட்டு ஜெபம் செய்வார்கள். (யாக். 3:17) அவர்களுடைய குறிக்கோள், பாவம் செய்தவர்கள் ‘தவறான வழியிலிருந்து . . திரும்பிவருவதற்கு’ உதவுவதுதான். (யாக். 5:19, 20) அதோடு, சபையை எப்படிப் பாதுகாக்கலாம் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ஆறுதல் தரலாம் என்றும் அவர்கள் யோசிப்பார்கள். (2 கொ. 1:3, 4) ஒருவர் மோசமான பாவம் செய்திருந்தால், எல்லா உண்மைகளையும் சேகரிப்பதற்கு மூப்பர்களுக்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். எல்லாவற்றையும் சேகரித்த பின்பு, அவர்கள் ஊக்கமாக ஜெபம் செய்வார்கள். தப்பு செய்தவர்களுக்கு பைபிளிலிருந்து கவனமாக ஆலோசனை கொடுப்பார்கள். அவர்களைச் ‘சரியான அளவுக்குக் கண்டித்துத் திருத்துவார்கள்.’ (எரே. 30:11) இப்படிப்பட்ட விஷயங்களை மூப்பர்கள் ஆறப்போட மாட்டார்கள். அதே சமயத்தில், அவசரப்படவும் மாட்டார்கள். எல்லாவற்றையும் சரியாகச் செய்யும்போது சபைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். அவர்கள் இவ்வளவு கவனமாகச் செய்தும், பாதிக்கப்பட்டவர்களின் மனம் ஆறாமல் இருக்கலாம். உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்திருக்கிறதா? அப்படியென்றால், உங்கள் மனதில் இருக்கிற வலியைக் குறைப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
14. ஒரு சகோதரனோ சகோதரியோ உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டால் யாருடைய உதாரணத்தை யோசித்துப்பார்ப்பது உங்களுக்கு உதவும்?
14 ஒருவேளை, ஒரு சகோதரனோ சகோதரியோ உங்களுக்கு விரோதமாக பாவம் செய்திருக்கலாம். அதை நினைத்து நீங்கள் ரொம்ப நொந்துபோயிருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் பைபிளில் இருக்கும் சில பதிவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். உதாரணத்துக்கு, சொந்த சகோதரர்களே யோசேப்புக்கு அநியாயம் செய்தார்கள். ஆனால், யோசேப்பு அதை மனதில் வைத்துக்கொண்டே இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவுக்குச் சேவை செய்வதிலேயே குறியாக இருந்தார். அவருடைய பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் யெகோவா அற்புதமான பலன்களைக் கொடுத்தார். (ஆதி. 39:21) கொஞ்ச காலத்துக்குப் பின்பு, தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை யோசிக்காமல் யெகோவா தன்னை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை யோசேப்பால் யோசித்துப்பார்க்க முடிந்தது. (ஆதி. 45:5) யோசேப்பைப் போலவே யெகோவாவிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொண்டு அவர் நியாயம் செய்வார் என்று நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயம் நமக்கு ஆறுதல் கிடைக்கும்.—சங். 7:17; 73:28.
15. அநியாயத்தைப் பொறுத்துக்கொள்ள ஒரு சகோதரிக்கு எது உதவியது?
15 நமக்கு நடக்கிற எல்லா அநியாயங்களும் யோசேப்புக்கு நடந்த மாதிரி அவ்வளவு மோசமாக இருக்காது. ஆனாலும், யாராவது நமக்கு எதிராக ஏதாவது செய்துவிட்டால் நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அப்படிச் செய்தவர் சத்தியத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் பைபிள் நியமங்களின்படி நடக்க வேண்டும். அப்போது, நமக்கு உண்மையிலேயே பிரயோஜனமாக இருக்கும். (பிலி. 2:3, 4) இப்போது ஓர் அனுபவத்தைப் பார்க்கலாம். ஒரு சகோதரியுடன் வேலை செய்யும் ஒருவர் அவரைப் பற்றித் தப்பு தப்பாக மற்றவர்களிடம் சொல்லிவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் அந்தச் சகோதரி உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் இயேசுவைப் பற்றி நினைத்துப்பார்த்தார். அவரை மற்றவர்கள் அவமானப்படுத்தியபோது, பதிலுக்கு அவர் அவமானப்படுத்தவில்லை. (1 பே. 2:21, 23) இதை மனதில் வைத்து, இந்த விஷயத்தைப் பெரிதுபண்ண வேண்டாம் என்று சகோதரி விட்டுவிட்டார். அதற்குப் பின்புதான், அவரைப் பற்றித் தப்பாகப் பேசியவருக்கு உடம்பு சரியில்லை என்றும் அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டார். அதனால், வேண்டுமென்றே அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்பதைப் புரிந்துகொண்டார். தான் பொறுமையாக இருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். அதனால், மன அமைதியோடு அவரால் இருக்க முடிந்தது.
16. உங்களுக்கு ஏதாவது அநியாயம் நடக்கும்போது நீங்கள் எதை ஞாபகம் வைக்க வேண்டும்? (1 பேதுரு 3:12)
16 உங்களுக்கு யாராவது அநியாயம் செய்ததாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ நீங்கள் மனமுடைந்து போயிருக்கிறீர்களா? அப்படியென்றால், “உள்ளம் உடைந்துபோனவர்களின்” பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (சங். 34:18) நீங்கள் பொறுமையாக இருப்பதாலும்... உங்கள் பாரத்தையெல்லாம் அவர்மேல் போடுவதாலும்... யெகோவா உங்களை நேசிக்கிறார். (சங். 55:22) இந்த முழு உலகத்துக்கே அவர்தான் நீதிபதி. அதனால், எதுவுமே அவருடைய கண்ணிலிருந்து தப்பாது. (1 பேதுரு 3:12-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, உங்களால் சரிசெய்ய முடியாத ஒரு பிரச்சினையை நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கலாம். இதுபோன்ற சமயத்தில் யெகோவாவுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பீர்களா?
பொறுமையாக இருப்பவர்களுக்கு பொன்னான ஆசீர்வாதங்கள்
17. ஏசாயா 30:18-ல் யெகோவா என்ன உறுதி கொடுக்கிறார்?
17 தன்னுடைய அரசாங்கத்தைக் கொண்டுவந்து நம் எல்லாருக்கும் அற்புதமான ஆசீர்வாதங்களை யெகோவா கொடுக்கப்போகிறார். “உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார். உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக எழுந்திருப்பார். ஏனென்றால், யெகோவா நியாயம் வழங்குகிற கடவுள். அவருக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று ஏசாயா 30:18 சொல்கிறது. யெகோவாவுக்காக நாம் ஆவலோடு காத்திருந்தால் இன்றைக்கும் சரி, புதிய உலகத்திலும் சரி, ஆசீர்வாதங்களுக்கு அளவே இருக்காது.
18. என்ன ஆசீர்வாதங்கள் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன?
18 கடவுளுடைய மக்கள் இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிற எந்தக் கஷ்டமும் புதிய உலகத்தில் இருக்காது. அங்கே அநியாயத்துக்கு இடமே இல்லை. எந்த வலியையும் அனுபவிக்க வேண்டியிருக்காது. (வெளி. 21:4) எதற்காகவும் கவலையோடு காத்திருக்க வேண்டாம். ஏனென்றால், எல்லாமே ஏராளமாக இருக்கும். (சங். 72:16; ஏசா. 54:13) அந்த வாழ்க்கை எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!
19. இன்றைக்கு யெகோவா நம்மை எதற்காகத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்?
19 இன்றைக்கு, கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவதற்கும் யெகோவாவிடம் இருக்கிற அதே குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் அவர் நமக்கு உதவுகிறார். இப்படி, அவருடைய அரசாங்கத்தில் வாழ்வதற்காக நம்மைத் தயார்படுத்துகிறார். அதனால், நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற கஷ்டங்களை நினைத்து மனமுடைந்து போய்விடாதீர்கள், சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடாதீர்கள். உண்மையான வாழ்க்கை இனிமேல்தான் வரப்போகிறது. ஒளிமயமான ஓர் எதிர்காலம் நிச்சயம் வரும்! யெகோவா அதைக் கொண்டுவரும்வரை அவருக்காக நாம் பொறுமையோடு காத்திருக்கலாம்.
பாட்டு 118 “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”
a யெகோவாவுக்கு ரொம்ப நாளாகச் சேவை செய்துகொண்டிருக்கிற யாராவது ஒருவர், ‘இவ்வளவு வருஷம் இந்த உலகம் இருக்கும்னு நான் நினச்சுகூட பாக்கல’ என்று சொன்னதைக் கேட்டிருக்கிறீர்களா? யெகோவா இந்த உலகத்துக்கு முடிவு கொண்டுவர வேண்டும் என்று நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். அதுவும் இந்தக் கஷ்டமான காலத்தில், முடிவு சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறோம். ஆனால், பொறுமையாக இருப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பொறுமையாக இருப்பதற்கு உதவும் பைபிள் நியமங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முக்கியமாக, எந்த இரண்டு விஷயங்களில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். அதோடு, பொறுமையாக இருப்பதால் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
b படவிளக்கம்: சின்னக் குழந்தையிலிருந்தே ஒரு சகோதரி யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறார். சின்ன வயதில் எப்படி ஜெபம் செய்வது என்று அவருடைய அப்பா அம்மா சொல்லிக்கொடுக்கிறார்கள். டீனேஜ் பருவத்தில் பயனியர் செய்ய ஆரம்பிக்கிறார். ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கு உதவிகேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார். சில வருஷங்களுக்குப் பின்பு, அவருடைய கணவருக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது. அந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உதவச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கிறார். இன்றைக்கு அவருடைய கணவர் உயிரோடு இல்லை. ஆனாலும், வாழ்க்கை முழுவதும் எப்படி அவர் தொடர்ந்து ஜெபம் செய்தாரோ, அதே மாதிரி இன்றைக்கும் செய்கிறார். அந்த ஜெபத்தை யெகோவா கேட்பார் என்று உறுதியாக நம்புகிறார்.