அதிகாரம் 52
ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறார்
மத்தேயு 14:13-21 மாற்கு 6:30-44 லூக்கா 9:10-17 யோவான் 6:1-13
5,000 ஆண்களுக்கு இயேசு உணவளிக்கிறார்
பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கலிலேயா முழுவதும் சந்தோஷமாகப் பிரசங்கித்து முடித்த பிறகு, “தாங்கள் செய்த எல்லாவற்றையும், கற்பித்த எல்லாவற்றையும்” பற்றி இயேசுவிடம் சொல்கிறார்கள். இப்போது, அவர்கள் எல்லாரும் களைப்பாக இருக்கிறார்கள். நிறைய பேர் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதால் சாப்பிடுவதற்குக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை. அதனால் இயேசு, “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மாற்கு 6:30, 31.
அவர்கள் ஒரு படகில் ஏறி, யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே, பெத்சாயிதாவுக்கு அப்பால் இருக்கிற ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்குப் போகிறார்கள். அநேகமாக, அவர்கள் புறப்பட்ட இடம் கப்பர்நகூமுக்குப் பக்கத்தில் இருந்திருக்கலாம். அவர்கள் புறப்படுவதை நிறைய பேர் பார்த்துவிடுகிறார்கள்; மற்றவர்கள் கேள்விப்படுகிறார்கள். இவர்கள் எல்லாரும் கரையோரமாக ஓடி, இயேசுவுக்கு முன்னாலேயே அந்த இடத்துக்குப் போய்விடுகிறார்கள்.
படகிலிருந்து இறங்கும்போது, அங்கே திரண்டு வந்திருக்கிற மக்களை இயேசு பார்க்கிறார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருப்பதைப் பார்த்து அவருடைய மனம் உருகுகிறது. அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி “நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க” ஆரம்பிக்கிறார். (மாற்கு 6:34) அதோடு, ‘நோயாளிகளையும் குணமாக்குகிறார்.’ (லூக்கா 9:11) சாயங்காலத்தில் சீஷர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான இடம், ரொம்ப நேரமும் ஆகிவிட்டது. அதனால் இந்த மக்களை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் இவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்” என்று சொல்கிறார்கள்.—மத்தேயு 14:15.
அதற்கு இயேசு, “இவர்கள் போக வேண்டியதில்லை; நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்று சொல்கிறார். (மத்தேயு 14:16) தான் செய்யப்போகும் அற்புதத்தைப் பற்றி இயேசுவுக்குத் தெரியும். இருந்தாலும் பிலிப்புவைச் சோதிப்பதற்காக, “இந்த ஜனங்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகளை எங்கே வாங்கலாம்?” என்று கேட்கிறார். பக்கத்தில் இருக்கிற பெத்சாயிதாதான் பிலிப்புவின் சொந்த ஊர். அதனால்தான், பிலிப்புவிடம் இந்தக் கேள்வியை இயேசு கேட்கிறார். இயேசுவிடம் வந்திருக்கிற இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 5,000 ஆண்கள் இருக்கிறார்கள். இதுபோக, பெண்களையும் பிள்ளைகளையும் சேர்த்து மொத்தம் 10,000 பேர் இருந்திருக்கலாம். இத்தனை பேருக்கு எப்படி ரொட்டி வாங்க முடியும்? அதனால் பிலிப்பு, “ஆளுக்குக் கொஞ்சம் கொடுக்க வேண்டுமென்றாலும், 200 தினாரியுவுக்கு [ஒரு தினாரியு என்பது ஒரு நாள் கூலி] ரொட்டிகளை வாங்கினால்கூட போதாதே” என்று சொல்கிறார்.—யோவான் 6:5-7.
அப்போது அந்திரேயா, “இதோ, இங்கிருக்கிற ஒரு சிறுவனிடம் ஐந்து பார்லி ரொட்டிகளும் இரண்டு சிறிய மீன்களும் இருக்கின்றன. ஆனால், இத்தனை பேருக்கு அது எப்படிப் போதும்?” என்று கேட்கிறார். ஒருவேளை, இத்தனை பேருக்கு உணவு கொடுப்பதெல்லாம் நடக்காத காரியம் என்பதைக் காட்டுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம்.—யோவான் 6:9.
இது மார்ச் அல்லது ஏப்ரல் மாதமாக இருக்கலாம். கி.பி. 32-ஆம் வருஷத்தின் பஸ்கா பண்டிகை சீக்கிரத்தில் ஆரம்பமாகப்போகிறது. இந்தச் சமயத்தில், மலைப்பகுதி முழுவதையும் பசும்புல் போர்த்தியிருக்கிறது. மக்களை ஐம்பது ஐம்பது பேராகவும், நூறு நூறு பேராகவும் புற்களின் மேல் உட்கார வைக்கும்படி இயேசு தன் சீஷர்களிடம் சொல்கிறார். பிறகு, ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்கிறார். பிறகு ரொட்டிகளைப் பிட்டுக் கொடுக்கிறார், மீன்களையும் பங்கிட்டுக் கொடுக்கிறார். சீஷர்கள் இதை வாங்கி மக்களுக்குப் பரிமாறுகிறார்கள். அற்புதமாக, எல்லாரும் வயிறார சாப்பிடுகிறார்கள்!
பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “எதுவும் வீணாகாதபடி, மீதியான ரொட்டித் துண்டுகளைச் சேகரியுங்கள்” என்று சொல்கிறார். (யோவான் 6:12) அவர்கள் மீதியான துண்டுகளை 12 கூடைகள் நிறைய சேகரிக்கிறார்கள்!